ஷாஸ்தம் – 3

wp4594078

அது ஒரு மலையடிவாரம். பசும் புற்றரையில் ஆங்காங்கே மஞ்சள் பூக்கள் மடிந்து விழுந்தும் உயிர்ப்போடிருந்தன. நீளமான கல் பென்ஞ்சொன்று’ ட’ வடிவில் மலையைப்பார்த்தபடி மரத்தின் கீழ் போடப்பட்டிருக்க ஐந்து வயது கூட மதிக்க முடியாத சிறுவர் சிறுமிகள் நான்கு பேர் அந்த பெஞ்சில் வட்டமாக சுற்றி குழுமியிருந்தனர். அவர்களின் குற்றஞ்சாட்டும் முகபாவனைகள் பெஞ்சில் அமர்ந்திருந்த உருவத்தின் மேல் படித்திருந்தன.

கலங்கிப்போன கண்களுடன் அப்போது தான் எதையோ ஜீரணிக்க முயல்பவள் போல கண்கள் கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள் அந்த சிறுமி.  மாசுமறுவற்ற பளிங்கு முகத்தில் அவளுடைய சாம்பல் நிறக்கண்கள் கண்ணீரை தேக்கிக்கொண்டிருந்தன. தோள்களை தாண்டி பரந்திருந்த சாக்லேட் வண்ண முடி வார்னிஷின் பளபளப்போடு வளைந்து விழுந்து கொண்டிருக்க அந்த குட்டி உருவம் தன்னை சுற்றி நின்றவர்களையே ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தது.

“நீ வரமுடியாது சுதி. இனிமேல் நாங்கள் உன்னை சேர்க்க மாட்டோம்” ஒரு சிறுவன் அவளை நோக்கி விரல் நீட்டி சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஏன்?” அவளின் துக்கம் சுமந்த குட்டி முகம் கேள்வி கேட்டது

“உனக்கு எங்களை போல அப்பா அம்மா கிடையாதாம்”

“ஆமா. நீ ரொம்பக் கெட்ட பொண்ணாம். அதனால தான் உன் அப்பா அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்களாம். மீனு சொல்றா” பல குரல்கள் ஒருங்கே பதிலளிக்க

படக்கென எழுந்து விட்டாள் அந்த குட்டிப்பெண்

“அவ பொய் சொல்றா!!! எனக்கு அவங்க தான் ஏஞ்சல்கள் என்று பாட்டி சொல்லிருக்காங்க” அவளின் குரல் தீனமாய் ஆனால் உறுதியாய் மறுத்தது.

“உன் பாட்டி தான் பொய் சொல்றாங்க..”

“ஆமா…ஏஞ்சல்னா இப்போ கூப்பிட்டு காமிக்கிறியா?” முதலாவது பையன் மீண்டும் சவாலாய் கேட்க எல்லோரும் எங்கே கூப்பிடு என்பது போல அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவளுக்கு எப்படி கூப்பிடுவதென்று தெரியவில்லை.

“ம்மா…ப்பா…” அழுகை விக்கி விக்கி வெளிவர கைபிசைந்து கொண்டு நின்றாள் அவள்

சற்றுநேரம் அவளையே பார்த்துக்கொண்டு நின்றவர்கள் பிறகு “பொய் சொல்றா பொய் சொல்றா” என்றபடி  ஓடி மறைந்து விட அவள் மட்டும் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் மழையின் மெல்லிய  தூறல் மரத்தின் குடையை தாண்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மேல் விழுந்து தன்னை நனைப்பதை அந்தக்குழந்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விரித்த கைகளின் அசைவு கூட மாறாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.. கண்ணீர் மழையோடு சேர்ந்து வழிந்து கொண்டே இருந்தது.

யுகங்களாய் கடந்த சில நிமிடங்களின் பின் இப்போது அவளது விம்மல் நின்று விட்டிருக்க செப்பு உதடுகள் கோடாக இறுகின. கண்களில் அப்படியொரு கோபம்! கைகளை விரித்து தன் நண்பர்கள் போன திசையில் காற்றில் ஓங்கி குத்தினாள் அவள்.. அடுத்த கணம் அவள் நின்ற இடத்தில் இருந்து தீ கோர நாக்குகளுடன் பரவ ஆரம்பித்தது. மெல்ல மெல்ல தூறிக்கொண்டிருந்த மழைத்துளிகள் அத்தீயின் பயணத்தை கொஞ்சமும் பாதிக்கவில்லை

தீயை கண்டதும் அதிர்ந்து முகம் வெளிறி அவள் இமைகள் சொருக மயக்கமாக “ஸ்வஸ்தீதீதீதீ” என்ற சங்கமித்தாவின் அதிர்ச்சிக்குரல் எங்கோ தூரமாய் அவளுக்கு கேட்பது போலிருந்தது. அத்தோடு எல்லாமே இருளாகிப்போனது அவளுக்கு

திடுக்கென எழுந்து அமர்ந்தாள் ஸ்வஸ்தி. மதிய நேரத்தை நெருங்கி விட்டிருக்கும் போலிருக்கிறது. வெளிச்சம் அப்படியே கண்களில் அறைந்தது. சில கணங்கள் கண்களை கசக்கியபடி இமைதட்டி விழித்தவளுக்கு சில கணங்களுக்கு முன்னர் அவள் கண்ட கனவு மீண்டும் நினைவு வந்தது. கூடவே அது தட்டி எழுப்பிய உணர்வுகளும் புகை மூட்டமாய் கவிந்தன.

அவன் பார்த்திருக்கிறான்!

நடந்தது புரிந்ததில் ஆத்திரம், இயலாமை, சோகம், வன்மம் எல்லாம் அவளுக்குள்ளே ஒன்றாக எழுவது போலிருந்தது. என் எண்ணங்களுக்குள்ளே நான் உணராமலே அவனால் போய் பார்க்க முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால் என்றோ கல்லைக்கட்டி அமிழ்த்தி விட்ட நினைவுப்பாசி இப்படி மேலே வந்து மிதந்திருக்க முடியாது.

யாருக்கும் நான் காண்பித்திராத என் மூடப்பட்ட பக்கமொன்றை ஒரு அந்நியனால் உள்ளே நுழைந்து பார்க்க முடிந்திருக்கிறது

கோபமும் எதிலோ தோற்கடிக்கப்பட்ட உணர்வுமாய் ஆரம்பித்த அவளது எண்ணங்கள் இப்போது அந்த அவனை தாண்டி, அன்றோடு தனக்கு மறுக்கப்பட்ட மனிதர்களோடான வாழ்க்கை, குழப்பமான அவளின் சுயம் என்று மாறி மாறி தடை தாண்டி பயணிக்க எதிர்கொள்ளும் எல்லைக்கோடாய் அவளது மொபைல் அழைக்க ஆரம்பித்தது.

“சுசீ அழைக்கிறான்”

அந்த பாழாய்ப்போன ஏழடி ராட்சசனை தேடிக்கொண்டு அலைந்ததில் ஒன்றும் சிக்காமல் வந்து கட்டிலில் விழுந்தது தான் அவளுக்கு தெரியும். அன்றைக்கு ஒரு மணிக்கு சுசீயோடு பாக்ஸிங் தேசிய போட்டித்தொடர் பார்க்க வருகிறேன் என்று வாக்களித்திருந்ததை கூட மறந்து அவ்வளவு நேரம் தூங்கிப்போயிருக்கிறாள்.

“ஹே ஸ்வஸ்தி”

“சொல்டா”

“நான் இன்னும் அரைமணியில் புறப்பட்டு விடுவேன். சரியாகி ஒன்றரைக்கெல்லாம் உன் வீட்டில் இருப்பேன்! நீ …நீ நிஜமாகவே வருகிறாய் தானே”

“ஒரு தடவை சொன்னால் புரியாதா உனக்கு!!! வரேன் லூசே” அவன் பதிலை கூட கேட்காமல் போனை கட் செய்தவள் அவசரமாய் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

‘பாவம்!’

பத்து நிமிடத்திலேயே குளித்து முடித்து வெளியே வந்தவள் உடைமாற்றிக்கொண்டு தலையை கை விரல் கொண்டே சீர்படுத்திக்கொண்டவளின் ஓரக்கண்ணில்  பக்கவாட்டில் இருந்த நிலைக்கண்ணாடியில் விழுந்து கொண்டிருந்த அவளது விம்பம் தெரிந்தது. மெல்ல அதை நோக்கி திரும்பினாள் ஸ்வஸ்தி.

கருநீலத்தில் இடுப்பில் இறங்கி இருந்த டைட் பான்ட், அதே கருநீலத்தில் உடலோடு கச்சிதமாய் பொருந்தும் நைக்கி டீஷர்ட். நல்ல உயரம்,  அதே சாம்பல் விழிகள் , தலைமுடியின் சாக்லேட் நிறம் இப்போது கடும் தேன்பழுப்பு நிறத்துக்கு வந்திருந்தது. உடல் தான் வளர்ந்திருந்தது, ஆனால் விழிகள் வழியே தெரிந்த பாவம் பதினைந்து ஆண்டுகள் கடந்தும் அந்தப்புள்ளியில் இருந்து அவள் கடந்து செல்லவேயில்லை என்று அதிர்ச்சியோடு அவளுக்கு உணர்த்தியது போலிருந்தது.

அது இத்தனை நாட்கள் அவளுக்குகூட தெரியாது. அதெல்லாம் நான் கடந்து போய் விட்டேன், என்னை அவை பாதிப்பதே இல்லை என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க  அவன் என் எண்ணங்களுக்குள் அத்துமீறி உண்மையை கண்டு கொண்டிருக்கிறான்.

“யாரவன்?”

“அவன் நல்லவனா? கெட்டவனா?”

“எதற்காக வந்திருக்கிறான்?”

எதுவுமே புரியவில்லை அவளுக்கு.

எப்படியும் அவனை வெகு விரைவில் மீண்டும் நீ சந்திக்கத்தான் போகிறாய் அப்போது பார்த்துக்கொள்ளலாம். உள்ளுணர்வு சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பி நடந்தவள் வாசலில் சட்டென்று மின்னிய வெளிச்ச்சத்தில் “என்ன?” என்று அதிர்ச்சியுடன் அதை நோக்கி ஓடினாள்

அன்று இரவு பாட்டிக்கு அவள் அனுப்பிய செய்தி அவளுக்கே திரும்பி வந்திருக்கிறது. அவள் காற்றில் அனுப்பிய பொன்னிற எழுத்துக்கள் அவளின் கண்முன்னே ஒன்றொன்றாய் அணைந்து துகள்களாய் விழுவதை பார்த்துக்கொண்டே நின்றவளின் உதடுகள் பாட்டி என்று முணுமுணுக்க தவறவில்லை.

“பாட்டிக்கு செய்தி சென்று சேராமல் போனதேயில்லையே..”

“அப்படினால் பாட்டி சாசனத்தில் இல்லையா? அவ்வளவு தூரமாக ஏன் போனார்?”

“இல்லையேல் எதற்காகவேனும் அடையாளத்தை மறைத்துக்கொண்டிருக்கிறாரா?”

“பாட்டி எங்கே போயிருக்கிறார் என்று கூட அவளுக்கு தெரியாதே..”

பாட்டிக்கு ஏதேனும் நேர்ந்திருக்கும் என்று கூட அவளால் நம்ப முடியவில்லை. சங்கமித்தாவுக்கு தீங்கு விளைவிக்க யாராலும் முடியாது. அவரே சொல்வது போல “என்னால் புக முடியாத துளை என்ற ஒன்றே கிடையாது ஸ்வஸ்தி”

“ஸ்வஸ்தீ…” சுசியின் குரல் வாசலில் இருந்து அவளின் யோசனைக்கு தடா போட்டது.

ஒரு நிமிஷம் உக்காரு வந்து விடுகிறேன்… என்று எட்டிக்குரல் கொடுத்தவள் பிறகு ஒரு தீர்மானத்தோடு பாட்டியினுடைய அறைக்குள் நுழைந்து அவருடைய தலைவாரும் மரசீப்பினை எடுத்து வந்தாள். தன்னுடைய அறையின் இடப்பக்க சுவரை முற்றாக அடைத்திருந்த திறந்த அலுமாரியை பக்கவாட்டில் தள்ளினாள். இப்போது அலுமாரி விலகிக்கொள்ள சுவரில் தோன்றிய திறந்த ஷோகேசில் பலவித சின்ன சின்ன குவளைகள் கச்சிதமாய் அடுக்கப்பட்டிருந்தன.

கண்ணை ஒரு கணம் இறுக மூடித்திறந்தவள் இரண்டு சின்னக்குவளைகளில் இருந்த திரவங்களை வெகு கவனத்துடன் மாறி மாறி ஊற்றிக்கலந்து பிறகு அதை அப்படியே பாட்டியின் சீப்பின் மீது ஊற்றினாள்.

அடுத்த சில கணங்களில் சீப்பின் மீது நுரைத்துக்கொண்டிருந்த திரவத்தை தாண்டி பாட்டியின் வெகு பரீட்சயமான ஊதா வண்ண புகை வடிவம் மெல்ல மெல்ல சீப்பில் இருந்து மேலெழுந்தது. பிறகு அவளது கையைத்தாண்டி திறந்து கிடந்த யன்னல் வழியே மெல்ல வெளியேறி காற்றில் கலந்து தூரமாக ஆரம்பித்தது.

colour-smoke-bomb-clipart-5

அது கண்ணை விட்டு மறையும் வரை யன்னலின் கம்பிகளில் முகத்தை புதைத்து பார்த்துக்கொண்டே நின்றவள் பிறகு முகபாவத்தை சீர் செய்து புன்னகையை வரவழைத்தபடி ஹாலுக்குள் நுழைந்தாள்.

ஹாலில் இருந்த மரத்தட்டுக்களில் ஏகப்பட்ட கண்ணாடிக்குவளைகள் வண்ண வண்ண வர்ணத்திரவியங்களோடு இருக்க அவற்றின் அருகில் போய் பார்த்துக்கொண்டு நின்றான் சுசீ.

“கவனம். ஒன்று உடைந்தாலும் பாட்டியம்மா ரசிக்க மாட்டார்கள். இதெல்லாம் அவங்க வருஷக்கணக்காக அலைந்து திரிந்து மூலிகைகளில் எடுத்து செஞ்சது தெரியுமா?”

“நான் கிட்டவே போகலை.. உங்க பாட்டி பெரிய டாக்டர் போலிருக்கு” அப்பாவியாய் சொன்னான் சுசீ

“ஆமாம். அவங்களால தீர்க்க முடியாத எந்த வியாதியும் இல்லைன்னு மக்கள் சொல்வாங்க“கள்ளப்புன்னகை இப்போது ஸ்வஸ்தியின் உதடுகளின் வழிந்தது.

“வா போலாம்” என்று அவனைத்தள்ளிக்கொண்டு வெளியே வந்தவள் வெளிக்கதவை பூட்டிக்கொண்டு நடந்தாள்.

“நீயும் இதெல்லாம் கத்துக்கணும் ஸ்வஸ்தி” திடும்மென அவன் சொல்ல

“என்னது?” அவளுக்கு விக்கிவிட்டது.

“இந்த ஆயுர்வேத மருத்துவம் எல்லாம் அழிஞ்சே போயிட்டிருக்கு. இந்த தலைமுறை இதை மதிப்பதே இல்லை. பாட்டியோட இந்த அறிவு போயிரக்கூடாது. நீ பாட்டிம்மாக்கிட்ட இருந்து கத்துக்கணும்”

அவனது வெள்ளந்தியான நீண்ட விரிவுரையில் புன்னகை தோன்ற “பாட்டி நிறைய தடவை கேட்டிருக்காங்க, எனக்குத்தான் ஆர்வமே வந்ததில்லை” என்று சொல்லி வைத்தாள் அவள்.

“இப்போ தானே இருபது ஆகுது உனக்கு.  இன்னும் நிறைய டைம் இருக்கு இதெல்லாம் கத்துக்க”

“ஹ்ம்ம்..”

அக்கறையாய் பேசிக்கொண்டு தனக்கு முன்னே நடப்பவனை வாஞ்சையாய் விழிகளால் வருடிய வண்ணம் சுசீயை தொடர்ந்தாள் அவள்.

ஐந்து வயதில் அந்த சம்பவத்தோடு மனிதர்களோடான அவளது தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. வீட்டிலேயே தான் அதுவும் மாய மந்திரவாதிகள் மூலமாக தான் அவள் கல்வியை முடித்தாள். சங்கமித்தா கவுன்சிலில் இருந்தும விலகி தூரமாய் வந்ததில் அந்த மனிதர்களும் அவளுக்கு நெருக்கமில்லை. ஆனால் பல விஷயங்களை புரிந்து கொள்ளும் சக்தியின்றி கடவுள் என்றோ சாத்தான் என்றோ அமானுஷ்யங்களுக்குப்  பெயரிட்டு தங்கள் மனதை அமைதி செய்து கொள்ளும் அப்பாவி மனிதர்களை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்களோடு பழகுவதும்  அவர்களுடைய பாதுகாப்பை தன்னுடையதாக்கியதும் என அவளுக்கு எப்போதுமே மனிதர்கள் தொடர்பில் ஈரம் உண்டு. அது அவளுடைய அப்பா மாறனின் இயல்பு என்று பாட்டி திட்டுவது போல சொல்வதுண்டு தான்.

சுசீ அவளுக்கு விசேடமான நண்பன். அவள் பாட்டியிடம் அடம்பிடித்து பொதுவிடத்தில் மந்திரவித்தைகளை பயன்படுத்த மாட்டேன் என்று வாக்களித்துவிட்டு  போய் முதல்வனில் சேர்ந்து கொண்ட போது அவளுக்கு முன்னே வந்து நண்பனாகி அவளது இதயத்தில் ஒரு இடத்தையும் பிடித்துக்கொண்டிருக்கும் முதலாமவன் இவனே.

ஒரு பெரிய கரடி பொம்மை போல அவளுக்கு அன்பையும் நட்பையும் தட்டில் வைத்து முகம்மாறாமல் எப்போதும் நீட்டும் அவனின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க தன்னுடைய வித்தைகளில் ஒன்றிரண்டை செலவு செய்ய அவள் யோசிப்பதே கிடையாது. நேரத்தையும்!

அவன் தேசிய பாக்ஸிங் போட்டித்தொடரில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் அவனால் முதற்கட்ட போட்டிகளில் தெரிவாக முடியவில்லை என்றும் சோகமாக சொல்லியிருந்தான். அவ்வளவு தூரம் தெரியாத ஒருவனை குத்துவதற்கு இவன் ஏன் ஆசைப்படுகிறான் என்னிடம் சொன்னால் குத்துக்களோடு சில பல அதிக பிட்டுக்களையும் போட்டுக்கொடுப்பேனே என்று மனதுக்குள் கிண்டலாக  நினைத்துக்கொள்வாள் அவள், இந்த மொக்கை பாக்சிங் எப்படி ஒருவனுக்கு உயிராக முடியும். இதெல்லாம் கரடிகளுக்கு மட்டும் தான் புரியும் போலிருக்கிறது!

ஹா ஹா

பெரும்பாலும் தேசிய மட்டப்போட்டிகள் சாசனத்தில் நடாத்தப்படுவதே கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு நடாத்தப்படும் இப்போட்டித்தொடருக்கு அவ்வளவு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தனர்.  வாசலில் இருந்து அடிக்கொரு இடைவெளியில் போலீசார் வேறு கடமையில் இருக்க, அனைவரையும் தாண்டிக்கொண்டு தங்கள் இருக்கையை தேடிக்கொண்டு நடந்த சுசியின் பின்னால் நடந்தாள் அவள்..

“புல்லரிக்குதுடி..”

“ஸ்ஸ்ஸ்.. கரடிக்கே கண்ணு வேர்க்குதா..” அவள் விழிகளை உருட்டினாள்

“மேலே உன் திருவாயை திறந்து ஒண்ணும் சொல்லிடாதே..” அவன் அவளிடம் முறைத்துக்கொண்டு நடக்க நிகழ்வில் ஆங்காங்கே நின்று கூட்டத்தை கவனமாக பிறர் கவனம் படாமல் அலசிக்கொண்டிருந்த  கவுன்சில் உறுப்பினர்களை அடையாளம் காண முடிந்தது அவளுக்கு.

“அப்போ கண்டிப்பா என்னமோ பெருசா போயிட்டிருக்கு.”  மனதில் பாட்டியின் நினைவும் அந்த ஊதா வண்ணப்புகையும் நினைவில் நிழலாடாமல் இல்லை. சீக்கிரமே பதில் கிடைச்சாகணும்!

கவுன்சில் உறுப்பினர்களின் பார்வை தன்மேல் கூர்மையாக படிவதை உணராதவள் போல சுசியே கவனமாக சென்று அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் ஸ்வஸ்தி. பாப்கார்ன்பெட்டிகளோடு நடந்து கொண்டிருந்தவர்களிடம் காரமல் பாப்கார்ன் வாங்கிக்கொண்டுமாயிற்று.

மேடையை, அங்கே நடந்த தயார்ப்படுத்தல்களை ஒரு ஏக்கப்பாவனையோடு பார்த்துக்கொண்டிருந்தவனை அவள் ஓரக்கண்ணால் கவனிக்கவே செய்தாள்.

இவ்வளவு தூரம் வருத்தப்படுவான் என்று தெரிந்திருந்தால் நாம் ஏதும் செய்திருக்கலாம் ப்ச் என்று எண்ணிக்கொண்டவள் பாப்கார்னை அவனை நோக்கி நீட்டினாள்

ப்ச் வேண்டாம் என்பதை போல தலையசைத்தவனின் பார்வை மேடையிலேயே இருந்தது. “தீனிப்பண்டாரம் “அவன் முணுமுணுத்தது கேட்கவே செய்தாலும் அவள் ஏதும் பதில் சொல்லவில்லை. கவுன்சில் உறுப்பினர்களின் நடமாட்டத்தையே விழிகளால் தொடர்ந்து கொண்டிருந்தாள் ஸ்வஸ்தி

ஒரு வழியாக போட்டி ஆரம்பித்தது. மேடைக்கு வந்த இருவரில் போட்டியாளர்களை பார்த்ததும் சுசி கண்களை கைகளால் மூடி தலையை பிடித்துக்கொண்டு விட்டான்.

“என்னாச்சு” ரகசியக்குரலில் கேட்டாள் அவன்

“கடைசி மாட்ச்ல இந்தக்காண்டி என்னோடு தான் விளையாடினான். எங்களுடைய சேப்பியன்ஸ் கிளப் தான் அவனும்” என்றபடி சிவப்பு ஆடை அணிந்திருந்த போட்டியாளனை காண்பித்தான் அவன்.

“ம்ம்…”

“நான் தான் ஜெயிச்சேன்”

“ஓ..”

“அப்படியானால் இவன் எப்படி இந்த  சீரீசில் வெளையாட முடியும்?”

“ஒரு வேளை உனக்கு பிறகு வேற மாட்சுகள் ஜெயிச்சிருக்கலாமில்லையா?”

“இல்ல ஸ்வஸ்தி..என்னோடு விளையாடிய மாட்ச் வென்றாலும் தோற்றாலும் இவன் சீரீசுக்கு தேர்வு செய்யப்பட மாட்டான் என்ற நிலைமை தான். ஏனெலில் நான் தான் கடைசியாக இவனோடு விளையாடியது!”

“ஒ..அப்படின்னா இவன் தெரிஞ்சவங்க மூலமா வந்திருக்கான்னு சொல்றியா?”

ஆம் என்று தலையசைத்தவன் இப்போது அவனாகவே பாப்கார்னை கையில் வாங்கிக்கொண்டான்

“என்னை மாதிரி பின்புலம் இல்லாதவங்க இப்படித்தான் பவிலியனில் உக்காந்திருக்கணும் போலிருக்கு”

அவனின் குரலும் தோற்றுப்போன முகபாவமும் அவளுக்குள்ளும் சோகத்தை ஏற்படுத்தியது

“அட அழாதே கரடி.. அவன் இன்னிக்கு செமையா குத்து வாங்கி தோத்து தான் போவான்”

பச்”

“சியர் அப் கரடி” அவள் அவனின் தோளில் இரண்டு தடவை தட்டி விட்டு யோசனையோடு மேடையை பார்த்தாள்.

இரண்டு போட்டியாளர்களும் ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராக ஆரம்பித்திருந்தனர். நடுவர் விசில் ஊதி ஒற்றைக்கையை அவர்கள் நடுவில் காண்பித்து விட்டு விலக தன்னுடைய கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டாள் ஸ்வஸ்தி. கண்கள் அந்த அவனிலேயே படிந்திருந்தது.

சில நிமிடங்கள் சென்றிருக்கும். பார்வையாளர்களிடம் இருந்து சின்னதாய் சலசலப்பு, அவளின் அருகே குனிந்தான் சுசீ

“இவன் அடிக்கவே மாட்டேன்றான்டி. தற்காப்பு மட்டும் தான் பண்ணிட்டிருக்கான். முதல் ரவுண்டிலேயே எதுக்கு இப்படி பண்றான்?”

“தகுதி இல்லாவன் போட்டிக்குள் வந்தால் இப்படித்தான் ஆகும். நான் சொன்னேன்ல இன்னிக்கு அடிவாங்கி சாகப்போறான்னு!” அவள் கண்கள் ரகசியப்பளபளப்பை பூட்டிக்கொண்டிருந்தன.

“லூசா நீ? நான் சேப்பியன்ஸ்!!  நான் விளையாடாவிட்டாலும் எங்கள் சேப்பியன்ஸ் டீம் அடுத்த ரவுண்டுக்கு போக வேண்டும்! கமான் காண்டி!!!!” அவன் அந்தக்காண்டியை உற்சாகப்படுத்த

அடக்கரடியே…அவனை விழிவிரித்து வெறித்தாள் ஸ்வஸ்தி. இந்த மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவனுக்கு அநியாயம் நடந்திருக்கிறது. இவனுடைய இடத்துக்கு அவன் வந்திருக்கிறான். ஆனால் ஒரே க்ளப் என்ற காரணத்துக்காக அவன் வெல்ல வேண்டும் என்று இந்தகரடி நினைக்கிறான்!!! எப்பேர்ப்பட்ட அசட்டு நியாயவான் இவன்!!!

இப்போது மேடையில் நிற்பவன் தன்னால் ஏன் தற்காப்புக்கு தவிர பிற சமயங்களில் கைகளை அசைக்க முடியவில்லை என்று குழம்பி பதட்டமடைந்து கை கால்களை தாறுமாறாக உதற ஆரம்பிக்க பார்த்துக்கொண்டிருந்தவர்கள் குழம்பிப்போய் அவனை கேலி செய்யும் வசைகளை எழுப்ப ஆரம்பித்திருந்தார்கள்.

இன்னும் அவனை மன்னிக்க ஸ்வஸ்தி தயாராகவில்லை. பிடிவாதமாய் பார்வையை அவனிடத்திலேயே வைத்திருந்தாள் அவன்.

“அடேய் காண்டி…”சுசீ சலிப்பாய் தலையில் கைவைத்துக்கொள்ள

“அடுத்த ரவுண்டில் விட்டதை பிடிப்பான் சுசீ..” என்றாள் அவள் விட்டேற்றியாக

“முதல் ரவுண்டில் இப்படி கோட்டை விட்டால் ரொம்ப கஷ்டமாகும் வெற்றி பெறுவது!” அவனின் முகமே விழுந்து விட்டது

“கமான் சூசி. அவன் வெற்றிக்கு தகுதியானவன் கிடையாது. ஏமாற்றுக்காரன்!”

“அவனை பற்றி எனக்கு அக்கறையில்லை. எங்கள் க்ளப் வெற்றிக்கு தகுதியானது. சேப்பியன்ஸ் டிசெர்வ் டு வின்!!!!”

“ஏன் அந்த மற்றக் க்ளப் மட்டும் தோற்க வேண்டுமா?” அவளுக்கு கடுப்பாகி விட்டது

“அது எனக்குத் தெரியாது. என் க்ளப் ஜெயிக்க வேண்டும்.”

“ஷ் இந்த மனிதர்களை புரிந்து கொள்ள முடியவில்லையே..”

அவளை பார்த்து விழிகளை உருட்டியவன் “நரிக்கூட்ட தலைவி” என்று முணுமுணுத்தான்!

சிரிப்போடு மறுபக்கம்  திரும்பிக்கொண்டாள் அவள். “எப்படியோ போய் தொலையட்டும். இனிமேல் இந்த விளையாட்டில் அவள் தலையிடுவதாக இல்லை”

கைகளை விலக்கிக்கொள்ள நினைத்து அசைத்தவள் அடுத்த கணம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானாள். அவளது கைகள் கட்டப்பட்டிருந்தன. அதுவும் அவளால் அது என்ன வித்தை என்றே புரிந்து கொள்ள முடியாமல்!!! அவசரமாய் மேடையை பார்த்தால் அங்கே அந்த காண்டி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தான்!!!!

அவளது வித்தையை உடைத்து யாரோ அவளை கட்டிப்போட்டிருக்கிறார்கள், அந்த குறிப்பிட்ட யாரோ யார் என்று அவளுக்கு உடனேயே புரிந்து போனது!

நிமிர்ந்து அமர்ந்து கொண்டு திரும்பி கூட்டம் முழுவதையும் கண்களால் அலசினாள் அவள். அந்த ஏழடி ராட்சசன் இங்கே எங்கோ தான் நின்று கொண்டிருக்கிறான். அவளது உள்ளுணர்வு சொன்னது.

“இப்ப என் கட்டை எடுக்கலைன்னா நான் நீ எங்கே போனாலும் தேடி வந்து உன்னை கொல்வேன்” அவள் பல்லைக்கடித்தபடி முணுமுணுத்தாள். கையை கட்டியிருக்கும் மாயம் அவளிடத்தில் இருக்கும் வரை அதற்கு காரணமானவனால் அவளின் குரலை கேட்க முடியும்!

அடுத்த சில செக்கன்களில் அவளின் காதருகே நீர்க்குழிழி போல ஒன்று வந்து உடைந்தது.

“பொது இடத்தில் மந்திரங்களை தேவையின்றி உபயோகித்ததற்கு உனக்கு தண்டனை வேண்டாமா சுந்தரி?” பிசிறே இல்லாமல் அந்த அவனின் குரல் சோம்பலாய் அவளின் இடது காதில் ஒலித்தது

“நீ என்ன கவுன்சில் தலைவனா? முதலில் என் பெயர் சுந்தரி இல்லை!!!!”

“கவுன்சில் ஹா ஹா ஹா ஹா” இப்போது  இன்னொரு நீர்க்குமிழ் அவளருகில் உடைந்தது.

அவசரமாய் திரும்பி பார்த்தவளின் கண்ணில் அவளுக்கு பின் வரிசையில் இருந்த ரெண்டே வயது மதிக்கத்தக்க அழகுச்சிறுவன்  நீர்க்குமிழ்களை ஊதும் அந்த நீளமான பிளாஸ்டிக் விளையாட்டுப்பொருளை உதட்டருகே வைத்து ஊதிக்கொண்டிருந்தான். அவன் ஊத ஊத சோப்பு நுரையில் இருந்து பெரிய பெரிய குமிழிகள் புறப்பட்டு நாலாபுறமும் மெல்ல மெல்ல மிதந்து கொண்டிருந்தன. அவள் பார்ப்பதை கவனித்து அவளை பார்த்து கன்னங்குழிய சிரித்தான் அந்த சிறுவன்.

பாப்கார்ன் “ என்று சுசி அவளின் தோளைத்தட்ட வெடுக்கென்று திரும்பியவள் வேண்டாம் வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தாள்

அவளையும் அவளது இடையில் கட்டியிருந்த கரங்களையும் விநோதமாய் பார்த்தவன் “ஏன் டென்ஷனா இருக்கே” என்று கேட்டான்.

“சே…சேப்பியன்ஸ் ஜெயிக்கணுமே..பதட்டமா இருக்கு”

“பார்த்தியா? பாக்ஸிங் என்றால் என்னவென்று தெரியாதவர்களையும் தன்னுடைய ரசிகர்களாக்கி விடும் எங்கள் க்ளப்” அவன் வாயெல்லாம் பல்லாக

‘கிழிக்கும்!!!!’ வாய்க்குள் பல்லை நெருமியவள் வெறுமனே தலையாட்டி வைத்தாள்

“சுந்தரி… நீ எனக்கு வேண்டுமே.. ஒரு தேவைக்காய் நீ எனக்கு தேவை. வருகிறேன் என்று சொல் விட்டு விடுகிறேன்” அடுத்த நீர்க்குமிழி அவள் காதருகில் வந்து முடியிழைகளில் பட்டு உடைய சோம்பலாய் அவன் குரல் அவள் காதோரம் குறுகுறுக்க வைத்தது

ஆஹா.. கோழி முட்டையை பொரிக்க வைத்துவிட்டு டைனோசர் குஞ்சை கேட்ட கதையாயில்ல இருக்கு! இவனுக்கு நான் தேவையாமா?

“முதலில் என் கையை அவிழ்த்து விடு!”

“அப்போ நீ வருவாய்….”

“நீ யார் எவன் என்று தெரியாமல் நான் எப்படி உனக்கு உதவ முடியும்?”

“என்னால் சாசனத்துக்கோ அதன் உயிர்களுக்கோ எந்த கேடும் வராது. போதுமா?” அவன் குரல் அமைதியாய் வந்தது

“உன்னை எப்படி நம்புவது?”

“நீ என்னை சத்தியத்தின் மூலம் தாராளமாய் கட்டிப்போடலாம்”

“அவ்வளவு தூரம் உனக்கு நான் ஏன் தேவை காரணம் சொல்”

“அது உனக்கு தேவையில்லாதது”

“அப்போ நானும் உனக்கு தேவையில்லை”

“ஹா ஹா எனக்கு மறுக்கிறாயா நீ? உன் அருகில் அமர்ந்திருக்கிறானே உன் பிரிய மானுடன். அவனில் ஏதேனும் வேடிக்கை விளையாட்டு காட்டவா?” அவனில் குரல் சொல்வதை செய்வேன் என்றது

அவள் மறுக்க முன்னர் “ஆஆ..” என்று மெல்லிய குரல் சுசீயிடம் இருந்து வர பதறிப்போய் திரும்பினாள் அவள்

என்ன சுசீ?

“கைல சுருக்கென்று வலிச்ச போல இருந்தது. இப்போ இல்லை!” அவன் கைகளை தடவி விட்டு மீண்டும் போட்டியில் கவனமானான்

“சுசீ மேல் ஒரு தூறல் பட்டாலும் உன்னை கண்டதுண்டமாக்கி விடுவேன்” அவள்  சீட்டில் குனிந்து அமர்ந்தபடி பல்லைக்கடித்தாள் அந்த அவனிடம்

“அப்போ எனக்கு சத்தியம் செய்து கொடு”

“முதலில் நீ என் கையை விடு. பண்ணித்தருகிறேன்”

உடனடியாக அவளுடைய கை விடுதலையானது. அவனது குரலை சுமந்து கொண்டு மீண்டும் காதருகே வந்த நீர்க்குமிழியொன்றை தன் முடியிழைகளில் பட்டு உடைய முன்னர் விரல் நுனிகளால் பவித்ரமாய் தொட்டு விரலில் அமரவைத்தாள். பிறகு  ஒரு தீர்மானத்தோடு வலப்புறமாய் விரலை சுற்ற ஆரம்பித்தாள்.  இப்போது அவளின் விரல் நுனியில் கணக்கில்லாத வேகத்துடன் சுற்றிக்கொண்டிருந்த குமிழியை பிறர் கவனத்தில் படாமல் தன் உதடுகளுக்கு  அருகில் கொண்டு வந்தாள்.

“என் பெயர் சுந்தரி கிடையாது மரமண்டை!!!! “ என்று  முணுமுணுத்து விட்டு மெல்ல குமிழியை ஊதி விட்டாள். அது மெல்ல மெல்ல அந்த குட்டிப்பையனை கடந்து மேலே மிதந்தது.

அவ்வளவு தான் அதன் பிறகு அந்தக் குரல் அவளுக்கு கேட்கவே இல்லை. ஸ்வஸ்தியின் உதட்டில் இப்போது அவளது பைசாசிக புன்னகை நன்றாகவே பூத்திருந்தது.

என்னடி சிரிக்கிற?

“பாப்கார்னை கொடுடா கரடி. காசு கொடுத்து வாங்கினது நான் தனியா நீ மட்டும் வச்சு காலி பண்ணுவியா?” என்ற படி பார்ப்கார்ன் பெட்டியை பறித்துக்கொண்டவளை கோபமாக பார்த்தான் சுசீ

“பைத்தியம்!!!”

 

 

 

ஷாஸ்தம் – 2

இத்தனை காலமும் அவள் இருக்குமிடம் தேடி வந்து அவளை இப்படியாரும் தாக்கியதில்லை. அதுவும் அந்த வெளிச்சம் இன்னும் மிச்சமிருந்த நேரத்தில், சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு தங்களுடைய இருப்பு வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம் கிஞ்சித்துமில்லாமல் அப்பயங்கர சாபத்தை தன் மேல் ஏவிய எதிரி எவனாக இருக்க முடியும்?

அந்த கேள்விக்கு பதில் அவளை வித்தகனின் வீட்டுக்கு நடுவில் கொண்டு வந்து விட்டிருந்தது. என்ன தைரியம் இருந்தால் என்னை பொதுவெளியில் வைத்து தாக்க முயல்வார்கள்? ஸ்வஸ்தியிடம் இருந்து கோப அலைகள் ஆவேசமாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அவனது பரம்பரை இல்லம் ஒரு கறுப்பு வித்தை மாய மந்திரவாதியின் இல்லத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் எல்லா விதத்திலும் எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தது. பயங்கர முகங்களைக்கொண்ட கடவுளர்களின் ஓவியங்கள் முதற்கொண்டு மண்டையோட்டு அலங்காரங்கள் வரை முழு வீடும் கறுப்பு நிற ஒழுங்கமைப்பில்… ஸ்வஸ்தியின் உதடுகள் லேசாய் அருவருப்பில் சுழித்துக்கொண்டன. சுவரில் மாட்டப்பட்டிருந்த பழைய புகைப்படங்கள் அவர்கள் கறுப்பு வித்தைக்காரர்கள் என்று வெளிப்படையாகவே அறைகூவிக்கொண்டிருக்க எதிலும் தொட்டு விடாமல் ஹாலின் நடுவில் நின்று வீட்டு மனிதர்களின் சத்தத்தை கிரகிக்க முயன்றாள் அவள். அப்பாவி மனிதர்களை தீய வழியில் உபயோகிக்கும் மந்திரவித்தைகளுக்கு அவர்களது கவுன்சில் ஆதரவளிப்பதில்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக அவர்களை சிறியளவில் மறைமுகமாக அனுமதிக்கவே செய்வார்கள்.

பாட்டி சங்கமித்தா மற்றும் அவளது குடும்பம் கவுன்சிலை விட்டு தனியாக இயங்கும் சுயாதீன மாயமந்திரவாதிகள். பாட்டியிடம் அரசியல் காரணங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. ஆகவே பாட்டியின் ஆதிக்கம் இருக்கும் இடங்களில் கறுப்பு வித்தைக்காரர்கள் வருவதற்கு ரொம்பவே யோசிப்பார்கள். அப்படியிருக்க பொதுவெளியில் அதுவும் அவள் மீதே அப்படியொரு தாக்குதலை நடாத்த எப்படித் துணிவு வந்தது?

“விராஜ், அப்பா பேசவேண்டுமாம்! ” தடிமனான ஒரு மனிதன் திடும்மென ஹாலுக்குள் வந்து, அவள் எதிரில் நின்று கொண்டிருப்பதையே உணராமல் மேலே நோக்கி குரல் கொடுக்க குரல் கொடுக்க, ஆஜானுபாகுவாய் அவனது முகச்சாயலில் இருந்த இன்னொருவன் மாடியில் இருந்து இறங்கி அவளை தாண்டிக்கொண்டு நடந்தான். மறுகணம் எதிரே இருந்த சுவர் விலகிக்கொள்ள விடுவிடுவென அவன் சுவரின் பின்னே இருந்த இருளான பகுதிக்குள் உள்ளே நுழைந்தான். சுதாகரித்து தானும் அவன் பின்னே நுழைந்தவள் அவர்கள் இருவருக்கும் மேலே காற்றில் மிதந்தபடி பின் தொடர்ந்தாள்.

விராஜ், வினோத் எனப்படும் வித்தகனின் இரண்டு மகன்கள் இவர்களாக தான் இருக்க வேண்டும். தங்களின் பின்னே மிதந்து வரும் ஒரு ஜீவன் குறித்த சந்தேகமே இல்லாமல் முன்னே நடந்துகொண்டிருந்த அவர்களின் தலையில் பின்னாலிருந்து ஓங்கி ஒரு கொட்டுவைக்க துடித்த மனதை மிகக்கஷ்டப்பட்டு அடக்கவேண்டியிருந்தது அவளுக்கு. மாய மந்திரவாதிகளில் சக்தி மிகக்குறைவான பிரிவினரே கறுப்பு வித்தைகளை பயன்படுத்துவார்கள். இல்லாத சக்தியை இவ்வழியிலேனும் சமப்படுத்த முயல்வது அவர்களின் வழக்கம்.

அந்த நிலவறையும் வீட்டின் பிற பகுதிகளைப்போலவே கறுப்பு ஒழுங்கமைப்பில் தான் இருந்தது. வித்தகன் தன்னுடைய வழக்கமான முகச்சுளிப்புடன் நடுவே அமர்ந்திருக்க அவன் அருகில் அவன் வயதையொத்த இன்னொருவன் இருந்தான். அவர்களைக் கண்டதுமே ஸ்வஸ்திக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. தன்னை தாக்கியது இவன் தான் என்று நிரூபணமானதும் எப்படியெல்லாம் அவனை தண்டிக்க முடியும் என்று இப்போதே அவளுக்குள் எண்ணங்கள் உலாப்போயின.

அந்த விராஜை அருகில் வந்து அமரும் படி சைகை காண்பித்த வித்தகன் அவன் வந்து அமர்ந்துகொள்ள கைகளை எதிரே இருந்த குடுவைக்குள் விட்டான். அடுத்தகணம் அவன் என்ன செய்யப்போகிறான் என்று நொடியில் உத்தேசித்து அப்படியே உயர்ந்து கூரையோடு போய் ஒட்டிக்கொண்டாள் ஸ்வஸ்தி.

வித்தகன் குவளையில் இருந்து ஏதோ வகை பொடியொன்றை உள்ளங்கை நிறைய எடுத்து பொடிகளை ஊதி விட்டு மந்திரிக்க அவர்கள் இருந்த இடத்தை சுற்றி வட்ட வடிவில் வெள்ளொளி பளபளத்தது. ஒரு வேளை கூரையை நோக்கி அப்பொடிகளை தூவியிருந்தால் அவர்கள் ஸ்வஸ்தியை இலகுவாக கண்டுகொண்டிருக்க கூடும். ஆனால் அந்தளவுக்கு தங்களின் நிலவறைக்குள் யாரேனும் நுழைவார்கள் என்று அவர்களுக்கு சந்தேகம் இல்லை போலும். ஆசுவாசமாய் அவர்களின் பேச்சில் கவனம் செலுத்தினாள் அவள்.

“நடப்பதை பார்த்தால் என் வீட்டிலேயே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதுதான் ஒரு முறை தெளிவு படுத்திக்கொண்டேன். இப்போது சொல் விராஜ், பூஜைக்கு என்ன தடங்கல்?” வித்தகன் மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“பூசாரி வர மறுக்கிறான்” விராஜின் உடல்மொழி இறுகி இருந்தது

“என்னது? பூசாரியா?” வித்தகனுக்கு அவ்வளவு குழப்பம்.

“ஆமாம்” என்பது போல தலையசைத்தான் விராஜ். “அவன் இப்போது அவனாக இல்லை அப்பா . காட்சிகள் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறான் போலிருக்கிறது. என்னை கண்டதுமே என்னை விட்டுவிடுங்கள் என கதற ஆரம்பித்துவிட்டான். பிறர் கவனத்தை ஈர்க்காமல் நான் தான் விலகி வர வேண்டியிருந்தது.”

கண்களை ஒருமுறை மூடித்திறந்த வித்தகன் “யார்?” என்று மட்டும் கேட்டான்.

“தடயங்கள் சங்கமித்தா வீட்டை காண்பிக்கிறது”

‘இதையே நீ இப்போது தான் கண்டுபிடிக்கிறாயா? உன்னை கொல்ல திட்டமிட்டு தேவையில்லாமல் என் சக்தியை வீணடித்துக் கொண்டேனே..’ என்று விழிகளை உருட்டியவளுக்குள் இப்போது புதிய குழப்பம். அப்படியானால் மாலையில் வந்தவன் யார்?” அவர்களின் பேச்சு தொடர சிந்தனையை இடைவெட்டி பேச்சில் கவனம் செலுத்தினாள் ஸ்வஸ்தி.

“இது சங்கமித்தாவின் வேலையில்லை. இப்படி குறுக்கு வழியில் தடை செய்ததுஅந்த குட்டிப்பிசாசின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்”

தன்னை மீறி வெளிப்படத்துடித்த சாபமொன்றை பல்லைக்கடித்து அடக்கிக்கொண்டாள் ஸ்வஸ்தி. உனக்கு எதிரி வேறொருவன் இருக்கிறான். இது கோபத்தில் நேரத்தை வீணாக்கும் நேரமல்ல என்று மனம் இடித்துரைத்தது.

“பச். அவர்கள் இருவரையும் கவுன்சிலில் இணைக்குமாறு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கவுன்சிலால் முடிவதில்லை. அவர்கள் சுயாதீனமாக இருக்கும் வரை நமக்கு பிரச்சனை தான்.” இவ்வளவு நேரமும் மௌனமாக இருந்த மற்ற மனிதன் திறந்திருந்தான்.

ஓஹோ..இப்படியெல்லாம் இடையில் ரகசிய டீலிங் நடக்கிறதா? சுவாரஸ்யமாக கவனித்துக்கொண்டிருந்தாள் ஸ்வஸ்தி

“இந்த ஏரியாவில் சங்கமித்தா குடும்பம் இருக்கும் வரை எங்களால் எதுவும் செய்யமுடியாது அப்பா. ஒரே ஒருதடவை பயம் காட்டிவிட்டால் போதும். அதுவும் அந்த குட்டிப்பிசாசுக்கு மரண பயம் காண்பிக்க வேண்டும்”

விராஜ் கோபமாய் குரலுயர்த்த மேலே ஸ்வஸ்தியின் உதடுகளில் கோபப்புன்னகை வந்து குடியேறியது.

‘உன் தலைக்கு மேல் வந்து நின்று கொண்டிருப்பவளையே கண்டுகொள்ளத்தெரியவில்லை. நீயெல்லாம் எனக்கு மரணபயத்தை காண்பிக்க போகிறாயா? ஹ!’

அதற்குள் அவசரமாய் இடையிட்டான் வித்தகன் “சங்கமித்தா சாதாரண மாய மந்திரவாதி இல்லை மகனே. கவுன்சிலுக்கே அவளை எதிர்க்க அவ்வளவு பயம். அவள் மீது கைவைத்து நம்முடைய ஒட்டுமொத்த வேலைகளுக்கும் ஆப்பை நாமே வரவழைப்பது போலத்தான். தவறியும் அவளதோ அல்லது அந்த குட்டிப்பிசாசினதோ வழியில் குறுக்கிட்டு விடாதே. அவர்களை அவர்களுடையவர்கள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும்”

“அப்போ இப்போது என்ன தான் செய்வது? ” விரக்தியாய் கேட்டான் மற்ற மகன்

“வேறு இடம் பார்க்கவேண்டியது மட்டுமே இப்போதைக்கு செய்யவேண்டியது.

ஜாக்கிரதை மகனே..சமீப காலமாய் எல்லாம் மர்மமாகவே இருக்கிறது. ஒவ்வொரு அடியிலும் அவதானம் தேவை”

அப்படியானால் இவர்களும் சமீபத்திய மர்மங்களை உணர்ந்து தான் இருக்கிறார்கள்! நான் தனியாள் இல்லை ….என்னை தாக்கியது இவர்கள் இல்லை என்றால் வேறு யார்? எந்த பிரச்சனையை விட்ட குறை தொடட குறையாய் விட்டு வந்தோம்? யோசனையோடு அந்த அறையில் இருந்து மறைந்து போனவளின் உதட்டில் இப்போது அவளது பேர் போன பைசாசிக புன்னகை வந்து குடியேறியிருந்தது.

உள்ளே நிலவறையிலோ விராஜின் சட்டையில் திடும்மென தீ கொழுந்து விட்டு எரிய பதறி பதில் மந்திரங்கள் மூலமாக அவசர அவசரமாய் அதை அணைத்தவர்களின் முகங்கள் அவ்வளவு நேரமும் அந்த அறைக்குள் பிரசன்னமாயிருந்தவளை புரிந்து கொண்ட அதிர்வில் இறுகிப்போயிருந்தன.

அன்றிரவின் எஞ்சியிருந்த மணித்துளிகள் அவளிடம் இலகுவில் தூக்கத்தை நெருங்க விடவில்லை. பாட்டி வேறு ஊரில் இல்லை, அவர் வழக்கமாகவே தன்னுடைய மாணிக்கக்கல் வியாபாரம் காரணமாக பாதி நாட்கள் வீட்டில் இருப்பதுமில்லை. ஆகவே மாலை சம்பவம் தொடர்பில் பாட்டியை தொல்லை செய்ய மனதில்லாமல் யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள் அதிகாலையே மீண்டும் விழித்துக்கொண்டு விட்டாள். எதுவோ அவளை பிடித்து உலுப்பியது போல, ஒரு பலமான விசை அவளை தூக்கியது போன்ற பிரமை!

“என்னடா இது.. பிரமையா நிஜமா? அத்தோடு தூக்கம் தொலைந்து போக தன் அறையில் இருந்து தன் வீட்டை சுற்றி வெள்ளொளி கொண்டு அந்நிய நடமாட்டத்தை தேடியவள் எதுவுமே கிடைக்காமல் அதற்கு பிறகு தூக்கம் பிடிக்காமல் நகருக்கு மேலே மிதந்த படி எங்கேனும் எதாவது மாறுதல் தெரிகிறதா என்று தேட ஆரம்பித்தாள் ஸ்வஸ்தி.

பாட்டி இருந்திருந்தால் இதெல்லாம் அவர் தான் செய்வார், அவளுக்கு செய்திகளாக மட்டும் தான் இவையெல்லாம் தெரியவரும். தானும் சுதந்திரமாக நகரில் சுற்றித்திரிய தேட, அவள் மனம் விழையும். இருபது வந்ததுமே உள்ளூர் வானொலியில் செய்தி சேகரிப்பாளினியாக அவள் இணைந்து கொண்டதன் காரணமே அது தான்.

கண்கள் அவளின் எதிரே கடற்கரையில் சிறிதாய் குழும்பியிருந்த கூட்டத்தை கண்டு லேசாய் சுருங்க அவள் வேகமாய் அவர்களை நெருங்கினாள்

“இந்த விடிகாலை நேரம் இங்கே என்ன நடக்கிறது?” தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அப்படியே அவர்களின் மேல் மிதந்தபடி கவனிக்க ஆரம்பித்தாள் ஸ்வஸ்தி.

மூன்று மீனவர்கள் நடுவில் நின்று கைகளை ஆட்டி ஆட்டி கதை சொல்லிக்கொண்டிருக்க சுற்றியிருந்த வாய் பிளந்து கேட்டுக்கொண்டும் கேள்வி கேட்டுக்கொண்டும் இருந்தனர் பிறர்.

“சத்தியமா பார்த்தோம்ங்க. வெளியே கடல் அப்படி கொந்தளிச்சிட்டு இருந்தது. பயங்கர அதிர்வு சத்தங்களுக்கிடையில் எங்களுக்கு நாங்கள் எங்கே போகிறோம் அந்த திசையில் இருக்கோம்னே புரியல. நாங்கள் பயந்தே போனோம். என்ன நடந்தது என்று தெரியும் முன்னரே இன்னொரு அதிர்வு, விழித்துப் பார்த்தால் நாங்கள் இந்த கரைக்கு அருகில் இருந்தோம். எங்களுக்கு வேறேதும் ஞாபகமே இல்லை.”

ஒரு மீனவன் மூச்சிரைக்க சொல்லி முடிக்க சுற்றியிருந்த மக்கள் மத்தியில் ஒருமிக்க பேச்சுக்குரல் எழுந்தது.

என்ன நடக்கிறது?

அன்றைக்கு கடலில் எந்த புயலும் வந்திருக்கவில்லையே…

யோசனையோடு கைகளை நீட்டி ஒட்டு மொத்த கடற்கரைக்கும் அவள் முணுமுணுப்பாய் மந்திரிக்க சில கணங்களிலேயே அந்த மீனவர்களை சுற்றி நின்றுகொண்டிருந்த மனிதர்கள் ஏன் அங்கே வந்தோம் என்ற குழப்பத்தோடு கலைந்து போக ஆரம்பித்தனர். அவர்கள் விலகி மறைவதை திருப்தியுடன் பார்த்தபடி தூரத்தே இருந்த தாளை மரக்கூடல்களின் மறைவில் பிரசன்னமானாள் ஸ்வஸ்தி. களைத்து போய் பயம் அப்பிய முகத்தோடு இருந்த மீனவர்கள் திடும்மென தங்களை சுற்றியிருந்த மனிதர்கள் கலைந்து செல்வதை சற்றே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்க மெல்ல தீர்மானமான காலடிகளோடு அவர்களை நெருங்கினாள் அவள் .

அவளுக்கு அவர்கள் பேசுவதில் இருந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

“என்ன ஆச்சு?” அவளது பார்வை அவர்களது கண்கள் வழியாக உண்மையை தேடுவது போல கண்களுக்குள்ளே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் .

அந்த குரலிலும் பார்வையிலும் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல அவர்கள் நடந்ததை மீண்டும் அப்படியே ஒப்புவிக்க அவளுக்குள் சின்னதாய் ஒரு அதிர்வு உருவானது. இது நடந்த சம்பவம் அல்ல. அவர்களின் ஞாபகங்கள் அழிக்கப்பட்டிருந்தன. என்ன முயன்றும் அதை செய்தவர்களையே அந்த ஞாபகங்களின் தடத்தையோ அவளால் கண்டுகொள்ள முடியவே இல்லை.

அவளுக்கு இதுவரை இப்படி நேர்ந்ததில்லை. மீண்டும் மீண்டும் முயன்றதில் தலைவலியே வந்து விடும் போலிருக்க அவர்களிடம் விடைபெற்று திரும்பி நடந்தவளின் முகத்தில் முழுக்க முழுக்க குழப்பமே நிறைந்திருந்தது.

திரும்பி வரும் வழியில் காற்றில் சங்கமித்தாவுக்காய் நடந்த செய்தியை எழுதி அது நெருப்பு வர்ண எழுத்துக்களாய் காற்றில் நகர்ந்து மறைய ஆரம்பிக்க வீட்டை நோக்கி நகர ஆரம்பித்தாள் ஸ்வஸ்தி.

உண்மையில் சாசனத்தில் என்ன நடக்கிறது?

அன்றைய இரவின் மர்மங்களுக்கு உச்சம் வைத்தாற் போல அவள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது அவர்களின் வீட்டு உட்படியில் விழுந்து கிடந்தான் ஒரு மர்ம மனிதன்.

தீர்க்கமான முகம் மயங்கிக்கிடக்கும் போதும் இறுக்கம் தளரா அழுத்தம், அவன் சாதாரணன் இல்லை என்று ஒற்றைப்பார்வையிலேயே சொல்லும் உடலமைப்பு. அவசரமாய் அவனருகில் மண்டியிட்டவள் அனிச்சையாய் அவனின் தடயங்களை சுற்று வட்டாரத்தில் இருந்து அழித்தாள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பச்சை வெளிச்சம் ஒளிர்ந்து அணைந்து அவனின் தடயங்கள் அழிந்ததை சொல்ல அப்படியே அவனை ஏந்திக்கொண்டு நேராக தன்னுடைய அறைக்குள்ளேயே நுழைந்து கட்டிலில் படுக்க வைத்தாள். தண்ணீரை கையில் அள்ளி அவன் முகத்தில் அடித்தவள் அவனுக்கு எதிரே அமர்ந்தாள். அவன் கண்ணிமைகளை அசைக்க ஆரம்பித்திருக்க அவளுடைய மந்திர சக்தி புகை போல அவனது நினைவுகளின் எல்லை சுவரை தொட்டு அந்த சுவரின் சக்தியை அவளுக்கு புரியவைக்க அவனின் எண்ணங்களுக்குள் நுழைய ஒரு இடைவெளி கிடைக்காதா என்று பல்லை கடித்த படி தேடிக்கொண்டிருந்தாள் அவள்.

“வீண்வேலை! நான் மனது வைக்காமல் உன்னால் ஒரு துளியை கூட என்னிடம் இருந்து பெயர்க்க முடியாது.”

ஆழ்ந்து ஒலித்த குரலின் அதிர்வில் வாரிச்சுருட்டிக்கொண்டு நிமிர்ந்தவள் அவனை நோக்கி புருவங்களை நெரித்தாள். அவன் இப்போது கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அவள் புறமாக சரிந்து படுத்துக்கொண்டிருந்தான்.

“ஓடு. போய் கொஞ்சம் பால் எடுத்துக்கொண்டு வா”

“என்னது?” அதிகாரமாய் வந்த ஆணையை எதிர்பார்க்காதவளிடம் இப்போது கோபச்சிவப்பு ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

அவனோ பொறுமை இழந்து கொண்டிருக்கிறான் என்று நெரித்து கொண்டிருந்த நெற்றியின் வரிகள் அப்படியே சொல்லின

“சொல்வது புரியவில்லையா? போ போய் பால் எடுத்துக்கொண்டுவா ”

சடடென எழுந்து விட்டாள் அவள்

“இதோ பார். உன்னை பாவம் பார்த்து வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறேன் என்றா நினைத்தாய்? பால்வேறு கொடுக்க வேண்டுமா? நீ வெளியூரை சேர்ந்தவன் என்று எனக்கு தெரியும். மரியாதையாய் நீ யார் என்று சொல்லும் வரை உன்னால் இங்கிருந்து வெளியேற முடியாது.”

வாய் விட்டு சிரித்தான் அவன். “சரி பயந்து விட்டேன். ஓடிப்போ போய் எடுத்துக்கொண்டு வா.”

கோபம் உச்சத்தில் எற அடிபட்ட பறவையாய் அவனை நோக்கி தன்னுடைய கைகளை குவித்து சக்தியை திரட்ட ஆரம்பித்தவளின் கைகள் அப்படியே நின்று போயின.அடுத்த கணம் அவளை கேட்காமல் அவளது உடல் எழுந்து கொண்டது.

அவளை இதுவரை இப்படி எவருமே கட்டுப்படுத்தியது கிடையாது.அவளுக்கு இதயம் வேக வேகமாக அடிக்க கோபம் கணக்கில்லாத வண்ணம் ஏறியது

“உன்னை இப்படியே நடத்தி எனக்கு வேண்டியவற்றை செய்து முடிக்க முடியும். நீயாக எடுத்து வந்தால் உனக்கு நல்லது. சங்கமித்தாவின் பேத்திக்கு ஆபத்து விளைவிக்கும் எண்ணம் எனக்கில்லை. என் பொறுமையை சோதிக்காதே.” அவனும் பல்லை கடித்தான்.

இவனுக்கு பைத்தியமா என்ன? யாரோ தெரியாத ஒரு பெண்ணிடம் இப்படி அடிமைக்கு வேலை சொல்வது போல சொல்லிவிட்டு நான் செய்யாத போது இவ்வளவு கோபம் வேறு .வருகிறதே. உடல் வேறு ஒரு மில்லிமீட்டர் கூட அசைய மறுத்தது.

“என்னை விடு. எடுத்து வருகிறேன்” வேறு வழியில்லாமல் பல்லை கடித்தபடி வேண்டினாள் அவள் அடுத்த கணம் அவள் அங்கங்கள் விடுதலை பெற வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள் அவள்

“மிளகு, கற்பூரம் சேர்த்துக்கொண்டு வா” அவனின் குரல் பின்னாலேயே வந்தது

அதைக் காதில் வாங்காதவள் போல வேகமாய் நடந்தாள் அவள்

“வந்திருப்பவன் பாட்டியை தேடித்தான் வந்திருக்கிறான். ஏதோ ஒரு சாபத்தை உடைக்கத்தான் பால் கேட்கிறான்” அவளுக்கு புரியாமல் இல்லை ஆனாலும் அவளை அசிங்கப்படுத்த எவனுக்கும் உரிமை கிடையாது! அவளை சீண்டியவர்களை அவள் சும்மா விட்டதும் கிடையாது.

பாலை கிண்ணத்தில் ஊற்றி மிளகும், கற்பூரமும் சேர்த்துவிட்டு மேலதிகமாக ஹாலுக்குள் வரிசையாய் ஒழுங்கு மாறாமல் அடுக்கி வைத்திருந்த ஒரே அளவில் இருந்த குடுவைகளில் ஒன்றை எடுத்து வந்து திறந்து பாலுக்கு மேலே கவிழ்த்தாள். நீல நிறத்தில் புகைவடிவில் பாலுக்குள் கலந்த ஆத்திரவம் பாலின் நிறத்தை மாற்றாமல் சேர்ந்துகொள்ள கூடவே இன்னொரு தட்டில் இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவில் சீஸ் வைத்து இரண்டையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு போனாள் அவள்.

“பாட்டியை தெரிந்திருக்கிறது என்பதால் உனக்கு கூடுதலாக உணவும் தருகிறேன். ஆனால் மக்களை பாதிக்கும் எதையும் என்னால் அனுமதிக்க முடியாது. நீ யார்? எதற்காக வந்திருக்கிறாய் என்று சொல்லியே ஆகவேண்டும்” என்று பற்களை கடித்தபடி தட்டுக்களை அவன் முன்னிலையில் டொப்பென வைத்தாள் அவள்.

லேசான புன்னகையோடு அவன் பால்கோப்பையை கையில் எடுக்க ‘பாலைக்குடி. நீ என்னை கட்டிப்போட்டாய் அல்லவா? உன் நாவை கட்டிப்போட்டு வேண்டியவற்றை எல்லாம் தெரிந்து கொள்கிறேன்.’ என்று மனதுக்குள் கறுவிய வண்ணம் அவனுக்கு சந்தேகம் வராதிருக்க ‘தண்ணீர் எடுத்து வருகிறேன்’ என்ற படி ஹாலுக்குள் நழுவினாள் ஸ்வஸ்தி. முகத்தில் அவளது பைசாசிக புன்னகை இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மலர ஆரம்பித்திருக்க ஏதோ ஒரு பாடலை ஹம் செய்ய ஆரம்பித்தவள் அடுத்த கணம் அப்படியே உறைந்தாள். அவளுக்கு பின்னிருந்து நீல நிறப்புகை அவளைத்தாண்டிக்கொண்டு ஹாலுக்குள்சென்று உரிய கண்ணாடிக்குடுவையை திறந்துகொண்டு குடுவைக்குள் நுழைந்து மூடியையும் பூட்டிக்கொண்டது.

இப்படி ஒரு சம்பவத்தை அவள் கண்டதும் இல்லை.கேட்டதும் இல்லை. சங்கமித்தாவின் ஆகப்பலம் வாய்ந்த உண்மை வாங்கியை இதுவரை யாரும் கண்டுகொண்டதும் கிடையாது, இப்படி முறியடித்ததும் கிடையாது. மின்னல் வேகத்தில் அறைக்குள் மீண்டும் பிரசன்னமானவளை இப்போது வெற்றுக்கட்டில் தான் வரவேற்றது. கூடவே காலியான பாலும் ரொட்டித்தட்டும், திறந்து கிடந்த அவளது பர்ஸும்!

எதை எதை எடுத்துப்போனான்? பர்சில் எதுவுமே குறையவில்லை. காலையின் வெளிச்சம் உடலில் சுடும் வரை கோபாவேசமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலைந்து திரிந்து அவனை தேடிக்களைத்தவளுக்கு அன்றைக்கு தோல்விதான் மிஞ்சியது.

ஷாஸ்தம் – 1

WhatsApp Image 2020-02-12 at 15.06.47

சாசனம் நாட்டின் வடகரையோரமாய் இருக்கும் குட்டித்தீவு. கேள்விப்பட்டதில்லையா? அப்படி பலர் அறியாமலிருப்பதே அந்த தீவின் ஒரு சிறப்பியல்பு என்பேன். மலைகளும் எங்குபார்த்தாலும் பசுமையும் விரவிக் கிடக்கும் அசாத்தியமான இயற்கை செல்வத்தை தன்மீது போர்த்திக்கொண்டிருக்கும் அத்தீவில் வெளியார் வந்து சாதாரணமாக கால் பதித்து விடமுடியாது.

செயற்கை கோள்கள் கூட படம்பிடிக்க முயலாத சாசனத்தின் பரிபாலனம் நூற்பிடித்து வைத்தது போல என்றுமே விலகியதில்லை.அங்கே மட்டும் எப்படி எல்லாமே ஒழுங்காக நடக்கிறது என்று கேட்பீர்களானால் அந்த தீவின் மக்களுக்கே அதற்கான காரணம் தெரியாது! நாளாந்த வாழ்வின் ஒவ்வொரு படிகளிலும் பலவகை மர்மங்களை மறைத்துக்கொண்டு அழகை பூசிக்கொண்டிருக்கும் அத்தீவில் நீங்கள் கண்ணால் காண்பவை, காதால் கேட்பவை மட்டுமே செய்திகளாகும். இதுவரை தீரவிசாரித்தவரென்று எவரும் இருந்தாரிலர்.

அன்றைக்கும் அப்படித்தான், முப்பதண்டுகளாய் அந்த தீவின் ஒரே முதன்மை வானொலியாய் இயங்கிக்கொண்டிருக்கும் ‘முதல்வன்’ பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. செய்திக்கலையகத்துக்குள்ளே செய்திகளை முன்னறிவிக்கும் இசைக்கோர்வையை ஒலிக்கவிட்டு விட்டு பத்தாவது தடவையாக சற்றே பதட்டத்துடன் வாசலை திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் அந்த ஒலியமைப்பு இயந்திரத்தின் முன் குனிந்து கொண்டான் ராகேஷ். இன்னும் செய்தி வாசிப்பாளினி கலையகத்துக்குள் வந்து சேர்ந்திருக்கவில்லை என்பதே அவன் பதட்டத்துக்கு காரணம்!

சரியாக அந்த இசைக்கோர்வை நிறைவுற “ஹப்பா தப்பிச்சேன். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு!” என்று தனக்குப்பின்னே கேட்ட குரலில் லேசாய் திடுக்கிட்டு அவன் திரும்ப செல்ல நாய்க்குட்டி ஒன்றின் குற்றவுணர்வை கண்ணில் பூட்டிக்கொண்டு பெரிய புன்னகையோடு அவனுக்கு பின்னே நின்று கொண்டிருந்தாள் ஸ்வஸ்தி.

குறைந்தது  பத்து சென்டிமீட்டராவது தடிப்பில் இருந்த அந்தக்கலையகத்தின் இரும்புக்கதவை எப்படி அவளால் மட்டுமே சத்தமே இல்லாமல் திறக்க முடிகிறது என்ற சிந்தனையில் ஆள்வதற்கு அவனுக்கு அப்போது நேரம் இருக்கவில்லை.”மகராசி வந்துட்டியா? நீ செய்தி வாசிக்கப்போகிறாய் என்றால் அன்றைக்கு  என் இரத்த அழுத்தம் எகிறிப்போகிறது” என்று ஆரம்பித்தவன் அப்போது தான் அவள் வெறுங்கையை கவனித்து “ஸ்க்ரிப்ட் எங்கே?”என்று ஏறக்குறைய அலறினான்.

சிரிப்பு முகம் மாறாமலே நின்றவள் “ஆங்! இதோ..டட்டட்ட டட்டட்டடடைங்! ” என்றபடி வேகமாய் கதவை நோக்கி சறுக்கிக்கொண்டே செல்ல விழிகளை உருட்டினான் ராகேஷ்.

“ஸ்க்ரிப்ட் இல்லாம இங்கே எதுக்கு வந்தாய்? கடவுளே!”

அவனின் கோபக்குரல் அவளை எட்ட முன்னரே கதவைத்திறந்து கொண்டு வெளியேறியிருந்தாள் ஸ்வஸ்தி. அது தானே!!! என்று விழிகளை உருட்டிய ராகேஷின் முகத்தில் பிறகு சின்ன சிரிப்பொன்று உதயமானது. என்னதான் ஒழுங்கீனங்களின் உச்சமாக அவள் இருந்தாலும் அவளை கோபித்துக்கொள்ள அவர்கள் யாராலுமே முடிவதில்லை.

செய்திக்கலையகத்துக்கு வெளியே இருந்த அறை வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு பரபரப்பாய் இருந்ததை கவனித்துக்கொண்டே சட்டென கதவை விரியத்திறந்து வெளியே நடப்பதை கிரகிக்க முயன்றாள் ஸ்வஸ்தி

அவளைப்பற்றிய குற்றச்சாட்டுத்தான்! சந்தேகமின்றி புரிந்தது அவளுக்கு. என்றைக்குமே அவள் என்றால் வேப்பங்காயாய் கசக்கும் அவர்களுடைய தலைமை அதிகாரி செய்திப்பிரிவு உதவி முகாமையாளரிடம் கைகளை ஆட்டி ஆட்டி கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

‘அவள் தாமதமாக செய்தி வாசிக்க வந்ததை பற்றித்தான் இருக்க வேண்டும்’

குரூரப்புன்னகையொன்று உதட்டில் ஜனித்ததை அவசரமாய் மறைத்து முகபாவனையை பவ்யமாக்கினாள் ஸ்வஸ்தி.

திடும்மென கலையகக்கதவு திறக்கவும் அவர்கள் இருவரதும் பார்வைகள் கதவில் பதிந்து அவள் எதிர்பார்த்ததைப் போலவே அதிர்வில் விரிந்தன.

“ஸ்…ஸ்வஸ்தி!” தலைமை அதிகாரியின் முகம் அஷ்டகோணலானது

“மணி சார். ஐந்தே நிமிஷம் தான் இருக்கு செய்திகள் ஆரம்பிக்க. ஸ்கிரிப்ட்டை  கொடுத்தீர்களானால்?” அவளின் கேள்வியில் முகம் வெளிறி கெஞ்சல் பாவனையோடு அந்த அதிகாரியின் பக்கம் திரும்பினார் மணி. “சார் நான்…நான்”

அவரை முறைத்து விட்டு தானே மணியின் கையிலிருந்த ஸ்க்ரிட்டை பிடுங்கி ஸ்வஸ்தியிடம் கொடுத்தவர் “இன்னொரு தடவை தேவையில்லாத புகார்களுக்கு என் நேரத்தை வீணடித்தால் என்ன ஆகுமென்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!” என்று இறுக்கமான குரலில் மணியை கண்டித்து விட்டு விடு விடுவென வெளியேறி சென்றார்.

“ஜஸ்டு மிஸ்ஸு!” கள்ளப்புன்னகையோடு நின்றவளை மணியின் பார்வை எரிக்க கோபமாய் அவளை நெருங்கினார் அவர்.

“எப்படி உள்ளே வந்தாய்? ஆறு மணியில் இருந்து காத்துக்கொண்டிருக்கிறேன். நீ இங்கில்லை. இப்போது எப்படி உள்ளே வந்தாய்?” அவர் குரல் ஏறக்குறைய கிறீச்சிட்டது.

என்ன சார் பேசுறீங்க? உங்களை தாண்டித்தான் உள்ளே போனேன். நீங்கள் தான் கவனிக்கவில்லை!” அவள் தோள்களை குலுக்கினாள்

“பொய் சொல்லாதே. இன்றைக்கு தப்பித்து விட்டாலும் ஒரு நளைக்கு நீ மாட்டத்தான் போகிறாய்! உன் ஆட்டம் ரொம்ப நாள் நிலைக்காது” அவர் கறுவ ஸ்வஸ்தி ஒருமுறை அவரை ஏறெடுத்து பார்த்தாள். உதடுகளில் இப்போது சின்னதாய் ஒரு சவால் புன்னகை நுழைந்திருந்தது.

“மணி சார்..”அளவுக்கதிகமான அழுத்தத்துடன் ஆரம்பித்தவள் “ராகேஷை தேடி வந்த  அக்கவுண்டன்ட் மீராவை வழி மறித்து கண்ணும் கண்ணும் கலந்து நீங்கள் பாசமாய் கடலை போட்ட நேரத்தில் கூட நான் கடந்து போயிருப்பேன். ” என்று இழுத்தபடி என்று சவாலாய் அவரது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏய்!”

அவருக்கு கோபத்தில் பேச்சே வர வில்லை. பெரிய பெரிய மூச்சுக்களை விட்டுக்கொண்டிருக்க செய்தி வாசிப்பாளர் கலையகத்தில் இருந்தாகவேண்டிய இறுதி எச்சரிக்கை இசை ஒலிக்க ஆரம்பித்தது.

“தண்ணி குடிங்க மணி சார்” என்றபடி கள்ளபுன்னகையும் தனக்கே உரிய லாவகமுமாய் திரும்பியவள் கலையகத்துக்குள் நுழைந்து செய்தி வாசிப்பதற்கான மேஜையின் முன் அமர்ந்து கடைசிக்கட்ட குரல் தயார் படுத்தல்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தபடி ஸ்க்ரிப்டில் அவசரமாக விழிகளை ஓட்டினாள் ஸ்வஸ்தி.

வெளியே மணியை அபாய மணியாக மாற்றியவள் இவள் தான் என்று சத்தியம் செய்தாலும் இப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு போதிதர்மரின் புன்னகை தானாகவே இப்போது அவளது உதட்டில் பூத்திருந்தது.

“வணக்கம்.. இன்றைய செய்திகளை உங்களுக்குத் தருவது ஸ்வஸ்தி நிரஞ்சனன்.”

தடதடக்கும் ரயிலொன்றின் வேகத்துடன் அவளது ஐஸ்க்ரீம் குரல் வானலையில் மெல்ல நழுவ ஆரம்பித்தது.

பத்து நிமிட செய்திகள் ஒரு வழியாக நிறைவுற மெல்ல எழுந்து தன்னுடைய பொருட்களை சேகரித்தபடி வெளியேற தயாரானாள் ஸ்வஸ்தி

“ஸ்வஸ்தி, வெளிய மணிசார் கூட ஏதும் வம்புக்கு போனியா என்ன?” ராகேஷ் செய்யும் வேலையை விட்டு நிமிர்ந்து பார்க்கவில்லை.

“அவர் தான் என் வழில வந்தார்” தோள்களை குலுக்கினாள் அவள்

“ரொம்ப அந்த மனுஷனை சீண்டாதே. அவ்வளவு தான் சொல்வேன்” அத்தோடு முடிந்தது என்பது போல அவன் திரும்பிக்கொள்ள “இனிமே பேசலை போதுமா?” என்றபடி கதவை திறந்து கொண்டு வெளியேறினாள் ஸ்வஸ்தி.

வெளியே இன்னும் கொஞ்சம் கூட குறையாத கோபத்துடன் அமர்ந்திருந்த மணியை கண்டு மீண்டும் கள்ளச்சிரிப்பு அவளது உதடுகளில் ஏறி அமர்ந்து கொண்டது.

அவரை கவனித்தது போலவே காண்பிக்காமல் லேசாய் ஹம் செய்தபடியே அவரை கடந்தவள் அவரின் முகத்தில் ஏறிய கோபச்சிவப்பை கவனிக்காமல் இல்லை. மாறாக இன்னும் குரலில் சுதி ஏறத்தான் செய்தது.

செய்திப் பிரிவுக்கு வெளியே பகல் ஷிப்டில் இருந்தவர்கள் வீட்டுக்கு போயிருக்க அலுவலகம் ஏறக்குறைய வெறிச்சோடிப்போய் கிடந்தது, அவளுக்கு அங்கே காலை மற்றும் மாலை செய்திகளை வாசிக்கும் செய்திப்பிரிவில் தான் பகுதிநேரப்பணி. பிற நேரங்களில் அவள் செய்தி சேகரிப்பதற்காய் ஊரை சுற்றிக்கொண்டிருப்பாள். அவளோடே பகுதிநேரப்பணியில் இணைந்த, பெரும்பாலும் பகலோடேயே வேலைகளை முடித்து விடும் RJ சுசி அன்றைக்கு கணனிக்குள் புகுந்து கொண்டிருந்ததை கவனித்து விட்டு அவனின் அருகில் போய் ஒரே மேசையில் ஒரு தட்டு தட்டினாள் ஸ்வஸ்தி

ஏய்!!!! என்று கோபமாய் நிமிர்ந்தவன்  இவளை கண்டதும் பெரிய புன்னகையை பூட்டிக்கொண்டு “உன் வேலை முடிஞ்சதுல்ல கிளம்பு கிளம்பு” என்றான் கடுப்பு குரலில்

” என்ன ஆறுமணி நிகழ்ச்சியா?”

“இல்லடி! இன்னிக்கு இரவு நிகழ்ச்சி நான் தான் செய்தாக வேண்டும். பத்து டு பன்னிரண்டு மணி.” குரலே அழுது வடிந்தது

“ஹா ஹா என்ஜாய்” அவளுக்கு சிரிப்புத்தாங்கவில்லை

பத்து முதல் பன்னிரண்டு மணிவரை பழைய எம்ஜியார் காலத்து பாடல்களுக்கு நேயர்களின் கவிதைகளை? பொருத்தி வாசிக்க வேண்டிய வேலை!

நமுட்டு சிரிப்போடு திரும்பியவள் “ஏய் நாளைக்கு ஸ்டேடியத்துக்கு போகிறாயா என்ன?” என்று கேட்டாள்

“என்னால விளையாடத்தான் முடியலை. அதுக்காக பார்க்காமல் இருப்பேனா? கண்டிப்பாம போவேன்”

பாவம் இந்த பாக்சிங் போட்டித்தொடரில் விளையாட ரொம்பவே ஆர்வமாக இருந்தான் சுசீ.

“நானும் வர்றேன் எனக்கு ஒரு கால் பண்ணு!” என்றபடி திரும்பி லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஸ்வஸ்தி

“ஏய்…..நிஜமாவே”

‘இவன் விட்டால் இன்று முழுக்க பேசிக்கொண்டே இருப்பான்.இவனுக்காக நாம் நாளை அந்த விளங்காத பாக்ஸிங் போட்டிக்கு கூடப்போவதே பெரிது! ‘  அவன் கூப்பிட்டது  காதில் விழாதவள் போல கண்சிமிட்டி சிரித்து விட்டு லிப்ட் வாய் திறக்கவும் ஒரு பாலே நடனப்பெண்ணின் லாவகத்துடன் உள்ளே நுழைந்தவளின் கையில் சுசியின் மேசையில் இருந்த பெரிய பார் சாக்கலேட் இருந்தது.

லிப்டின் ஒரு பக்கத்தில் இருந்த கண்ணாடியில் தன் விம்பத்தை பார்த்தபடியே லேபிளை உரித்து உருகும் சாக்லேட்டின் சுவையை அனுபவித்தபடியே நின்றவளுக்கு அன்றைய மாலை திடும்மென ஞாபகம் வந்து விட்டது.

“பாட்டிம்மாவுக்குத் தெரிந்தால் நாம் செத்தோம்”

மறுகணம் “தெரிந்தால் மட்டும் என்ன ஆகிவிடும்?” என்று தன் பிம்பத்துக்கு தானே நாக்கை துருத்தி காண்பித்தவள் சிரிப்புடன் தரைத்தளத்தில் லிப்டை விட்டு வெளியேற அப்போதுதான் தன் வண்டியை வீட்டில் விட்டுவிட்டு வந்த ஞாபகமே அவளுக்கு வந்தது. தன்னைத்தானே சபித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தால் லிப்ட் அதற்குள் மேலே போயிருந்தது. அது திரும்பும் வரை  காக்க மனதின்றி  பார்க்கிங்கின் ஓரமாய் பிரதான வீதிக்கு ஏறும் வழியில் நடக்க ஆரம்பித்தாள் ஸ்வஸ்தி

“வர வர பாட்டிம்மாவுக்கு வயசாகுதோ இல்லையோ நமக்கு வயதாகிட்டே போகுது. காலைல உன் காரை எடுத்துட்டு வராததை கூடவா மறப்ப ஸ்வஸ்தி?” அவளையே மனம் கடிந்து கொண்டு ” நாளைக்கு காலை முதல் வேலையாக காரை சர்வீஸ் சென்டரில் இருந்து எடுத்தாக வேண்டும்” செய்ய வேண்டிய வேலைக்கு நேரமும் குறித்தது.

“ஹேய் ஸ்வஸ்தி!! ஹாவ் எ நைஸ் வீக் எண்ட்!” என்றபடி ஒரு காரும் குரலும் அவளைக்கடக்க நான் கேட்டேனா என்று மனதுக்குள் விழிகளை உருட்டினாலும் வெளிக்கு சிரித்தபடி “பை விதூ… யூ டூ” என்று பதிலுக்கு குரல் கொடுத்தபடியே அவளும் ஒரு வழியாய் தெருவுக்கு இறங்கினாள்.

ஏழுமணியை நெருங்கிக்கொண்டிருந்த நேரம். இன்னும் முழுதாக இருள் நகரை சூழ்ந்துகொள்ளவில்லை. அவசர அவசரமாக வீடு புகும் பறவைகளை போல எங்கும் எங்கும் மனிதர் கூட்டம் மட்டுமே..

அவள் கண்கள் பஸ் அல்லது டாக்சிக்காய் தெருவை துழாவ ஆரம்பித்திருக்க ஏனோ ஒரு எச்சரிக்கை உணர்வு அவளை சுற்றி வியாபித்து பரவியது. என்னவென்று அவள் புரிந்து கொள்ள முன்னரே “எக்ஸ்கியூஸ்மீ மாம்” என்றபடி  தலையில் இருந்து முகத்தை பாதி மறைத்திருந்த ஹூடியுடன் அவளுக்கு நேராக ஒருவன் வந்து நின்றான்.

அவள் “எஸ்” என்று சொல்லி முடிக்குமுன்னரே.. அவன் வாய் மிதமாய் அசைவதையும் தோளை மூடியிருந்த ஹூடியை போலவே இருத்த கம்பளி நடுவில் திறந்து கொள்ள ஏகப்பட்ட பயங்கரமான தோற்றமுள்ள கறுப்புப் பறவைகள் அவளை நோக்கி வர ஆரம்பிப்பதையும் கண்டு அவள் விழிகள் முழு விட்டத்துக்கும் விரிந்து விட்டன

“இன்றைய மாலையின் மிச்சமா?”

கண்ணிமைக்கும் நேரத்தில் வாய்க்குள் எதையோ முணுமுணுத்த படி அவனை நோக்கி கைகாட்ட ஹக் என்ற அலறலோடு முன்னால் நின்றவன் புகையாய் மறைய ஆரம்பித்தான்.

ஆங்காங்கே நின்ற மனிதர்கள் இதை கவனித்து குழம்ப ஆரம்பிக்கும் முன்னரே வேகவேகமாய் தெருவை கடந்து மறுபக்கம் போக முயன்றவளின் பின்னாலேயே ஏதோ ஒரு அடிப்பட்ட பறவையின் கோபக்கீரீச்சிடல் பன்மடங்குகளாக ஒலிக்க ஆரம்பித்தது.

208772-skull-art-fantasy-head-logo-bird-black-hd-wallpaper-748x421

“திரும்பி பார்க்கக்கூடாது. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் இவைகள் நம் பலவீனத்தை கண்டுகொண்டு திருப்பி தாக்கவே முடியாமல் உடலின் உயிர்ப்பை மொத்தமாய் உறிஞ்சுக்கொள்ளும் “

எதிரே போய்க்கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் அவளுக்கு பின்னே அதிர்ந்த விழிகளுடன் நிற்பதை அவளின் கண்கள் கவனிக்க மறுக்கவில்லை. ஆதாரங்கள் மனிதக்கண்களுக்கும் காமராக்களுக்கும்  எட்டு முன் இதை கையாண்டாக வேண்டுமே

திடும்மென பயங்கரமான அமுக்கமொன்று அவள் தோளில் மோத மின்னல் வேகத்தில் திரும்பியவள் பறவைக்கூட்டத்தில் தனியாக தலைவனைப்போல கண் சிமிட்டும் நேரத்தில் மோதிவிடும் தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒரு கொலைகாரப்பறவையை கண்டு உதடுகளில் எதையோ முணுமுணுத்தபடி கைகளை வெடுக்கென்று அதை நோக்கி நீட்டினாள் ஸ்வஸ்தி

கணநேரம் தான்.. ஹக் என்ற கிரீச்சிடலுடன் புழுதி துகள்கள் போல அப்பறவை பிரிந்து பிரிந்து மறைந்து போக நிம்மதி பெருமூச்சு பின்னால் படையென வந்து கொண்டிருந்த பறவைகளை கண்டதும் மறுபடி தொலைந்தது.

இந்தப்பறவைகள் மூலம் அவள் இதுவரை தாக்கப்பட்டதே இல்லை. பரிச்சயமும் இல்லை. இத்தனை ஒவ்வொன்றாக தாக்கி அழிக்க முடியாது. அவளது மனம் அவசரமாய் கணக்கிட்டது.

பெரும்பாலும் ஒரு இயற்கை ஊடகத்திலிருந்து உருவாகும் சாபங்கள் அதற்கு எதிர் ஊடகத்தினால் அழித்து விடக்கூடியவையே.

அதற்குள் வீதியின் எதிர்க்கரையை அடைந்து விட்டவள் ஒரு முடிவுடன் அவற்றை எதிர்கொண்டு திரும்பினாள். உதடுகள் அசைவது தெரியாதது போல அவள் மந்திரமொன்றை  தேர்ந்து முணுமுணுக்க ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது, சோவென கடும் மழை கொட்ட ஆரம்பித்தது. மழைத்துளிகள் வேகமாய் அந்த பறவைகளில் பட்ட கணமே அப்படியே கரியாய் அவை கரைந்து மறைவதை நிம்மதியும் வெற்றி சிரிப்புடனும் ஒரு கணம் உள்வாங்கிக்கொண்டவள் மீண்டும் வாய்க்குள் ஒரு மந்திரத்தை சொல்லியபடி இரண்டு கைகளை விரித்து உயர்த்தி ஒருமுறை சுழற்றினாள். அதிர்ந்து போய் நடந்ததை பார்த்துக்கொண்டிருந்த  மனிதர்கள் ஒரு கணம் அசைவற்று தாங்கள் இதுவரை  கண்ட காணக்கூடாத காட்சிகளை  மறந்து மீண்டும் உணர்வுக்கு வந்து மழையில் இருந்து தப்பிக்க ஒதுக்குப்புறங்களை தேடி ஓடினர்.

அதற்கு மேல் அங்கு தாமதிக்காமல் வேக வேகமாய் அங்கிருந்து அகன்றாள் ஸ்வஸ்தி.

அன்றிரவு, எதிர்பாராமல் பெய்த பெருமழையில் வார இறுதி விடுமுறைக்காக வீடு செல்லும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டி வெகுநேரம் காத்திருக்க வேண்டி நேர்ந்ததை வானொலியில் 10 மணி செய்திகளாக வாசித்துக்கொண்டிருந்தான் சுசீ.

To be continued….

காதல் என்னை காதலிக்கவில்லை!

woman-3379654_960_720

என் ஆன்மா, என்னுள்ளே எங்கிருந்தோ தூரமாய்க் கேட்கும் அந்த மெல்லிசையை துரத்திக்கொண்டு என் சிந்தனைகள் சிறகு வளர்த்தக் காலம் தொட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. சமயங்களில், தாளகதி என் இதயத்துடிப்போடு ஒத்திசையும்; இதோ தொட்டு விடுவேன் தொட்டு விடுவேன் என்று விழி மூடி கை நீளும்; அப்படியே எல்லாமே நிசப்தமாகிவிடும்.

நீண்ட கை மீண்டும் திசையறியாமல் தட்டுத்தடவி திரும்பி வரும். வலி! ஏமாற்றம்! ஏக்கம்!

காதல் என்னை காதலிக்கவில்லை! என் காதல் மெல்லிசை! என் உயிரின் நீட்டிப்பு விசை! உயிரோடு உறவாக எனக்கே தெரியாமல் என்னை பின் தொடர வைக்கும் மாயவிசை!

அது என் கை சேராமல் இருக்கும் வரை தான் என் உயிரின் ஓட்டம் இருக்கும் போலிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மழைக்கேங்கும் சாதகப்பட்சியாய் என்னிசை வரும் திசை தேடி ஓடிக்கொண்டிருப்பவளுக்குத் தவிப்பும் கண்ணீரும், தனிமையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இசையைத்தேடி ஓடும் என் ஆன்மாவுக்கு அது கை சேர்வதை விட அந்த ஓட்டத்தைத் தான் பிடித்திருக்கிறது போலும். அது ஏனோ எந்தப் புலம்பல் பத்திரங்களும் வாசிப்பதே இல்லை. வலிகளும் வேதனைகளும் இன்று போய் நாளை வருவது போல என் நாட்களில் சாதாரணங்களாய் கடந்து போக, என் ஓட்டத்தில் பின்னே ஓடும் மரங்களாய் பிறரின் மகிழ்வும், காதலும் என் கண்ணிலேயே பதிந்திருக்கின்றன.

அட நான் வருந்தவில்லை, வருந்தியதே இல்லை!

காதல் எல்லோரையும் காதலித்து விடுவதில்லை. என் கண்ணில் புகைப்படலக்காட்சிகளாய் கடக்கும் கனவுகளை கலைத்து முத்தமிடும் மேலிமைகளை கீழிமைகள் மிரட்டிப்பிரிப்பதில் இருந்தே என் பிரிவுகள் ஆரம்பித்து விடுகின்றன.

காதலை தழுவிக்கொள்ளத் துடிக்கும் நீராய் முனையும் என்னை, அது, துவாலை கொண்டு ஒற்றித்துடைக்க, அங்கும் இங்கும் எட்டிப்பார்க்கும் துணி முட்களுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் என் ஆன்மா.

அன்றொருநாள் காலில் மண்ணாய் ஒட்டிக்கொண்ட என்னை வாசலில் கிடக்கும் சாக்கில் அது உதறிச்சென்ற போது, ‘உனக்குக் கோபமே வராதா?’ என்று சாக்கின் இழைகள் என்னைப் பிடித்து உலுப்பின. வராது! தேடலே என் ஆயுளின் நீட்டிப்பு விசை. அது அந்த இழைகளுக்குப் புரியவில்லை.

சரி காதல் உன் கை சேர்ந்தால் உன் தேடல் முடிந்து போய்விடுமல்லவா என்று கேட்கின்றன. ஹா ஹா தேடலே என் காதல் என்று அவைகளுக்கு எப்படிப் புரியவைப்பேன்?

உயிரின் கடைசிச் சொட்டு மிச்சம் இருக்கும் வரை எனக்குத் தேடிச்செல்வதற்கு ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தானே இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன், காதல் எல்லோரையும் காதலிப்பதில்லை. காதலையும் எல்லோரும் காதலிப்பதில்லை. இசையைத் தேடிச்சென்றால் அது இசைப்பவனிலோ கருவியிலோ தான் சென்று முடியும். இசையைக் காதலிப்பவன் வீணையை வாங்கிப் பூட்டிக்கொண்டால் இசை வந்து விடுமா?

தேடல் ஒரு செயல். அதே போல இசைத்தலும் ஓர் செயல். காதலும் ஓர் செயல். காதலைத் தேடிச்சென்று காதலியையோ காதலனையோ கண்டு கொள்ளுதல் இசையை விரும்பி இசைப்பவனை எடுத்துக்கொள்ளுதல் ஆகாதா?

ஹா ஹா சாக்கின் இழைகளுக்கு ஏதும் புரியவில்லை போலும்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அவைகளை யாரோ எடுத்து உதறத் தூரமாய் துள்ளி விழுகிறேன் நான். அதோ, மீண்டும் என் இசை கேட்கின்றது. என் ஆதி அந்தம் எல்லாமே அது வியாபித்து நிறைய, என் சுயம் மறந்து நான் மீண்டும் ஒட ஆரம்பிக்கிறேன்.

அவளாகியவள்

fantasy-art-artwork-girl-light-1080P-wallpaper

ஒளியாகிய பெரியவருக்கு ஒரு மகள் இருந்தாள்.

தாமிரா.

தாமிரா போல ஒருத்தியை நீங்கள் கண்டிருக்க முடியாது. கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும் காற்றின் அசைவுகளில் கூட அவளுக்கு புன்னகைக்க காரணம் இருக்கும். அவளின் முடிவுகள் செயலாவதை எந்த காரணியும் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆண், பெண் வேறுபாடுகளை அவள் மனம் அறியாது. அவளுக்கு தெரிந்ததெல்லாம் செயலாற்றல் ஒன்று தான். பிரபஞ்சத்திலேயே அழகி அவள் தான் என்று அவளுக்கு தெரியும். அல்ல அள்ளக்குறையாத அன்புள்ளவள். பிறரை பற்றிய பிரக்ஞைகள் எல்லாம் அவளுக்கு கிடையாது. சரியானதை செய்ய எனக்கு யாருடைய அனுமதி வேண்டும் என்று திருப்பிக்கேட்பாள் அவள். தானே அந்த உலகில் சிறந்தவள் என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது,

ஒருநாள் ஒளியாகிய பெரியவர் அவளை அழைத்தார்.

நீ இன்னும் முழுமைபெற பிறவிக்கடலில் ஜென்மங்கள் எடுத்தாக வேண்டும் நீ போ என்று ஒரு திரையை கை கைகாண்பித்தார்.

எதற்காக என்றெல்லாம் அவரை கேட்டுவிட தாமிராவால் கூட முடியாது. அதெல்லாம் காலம் காலமாக நடந்து வரும் ஒன்று, அந்த வட்டம் தாமிராவால் உடைந்து விடக்கூடாதாம். அவளைப்பொறுத்தவரை இதற்கு மேல் என்ன முழுமை தேவை என்று புரியவில்லை. ஒருவேளை முழுமையாக இருந்தாலுமே கூட அவர் தாமிராவும் பிறரை போலவே அந்த வட்டத்தின் வழி வந்தாக வேண்டும் என்று நினைக்கிறாரோ? அவருக்கு தாமிராவும் பிற ஒளிப்புள்ளிகளை போலவே வெறும் ஒளிப்புள்ளி மட்டுமே. அன்பு பாசம் என்பவற்றை வளர்த்துக்கொண்டால் நியாயம் அவை வளருமளவாய் குறைந்து போகும் என்பது அவரது கொள்கை.

அவளது சோகம் புரிந்தோ என்னமோ அவர் லேசாய் கண்சிமிட்டினார்.

“நான் உன்னை வெறுமனே அனுப்பி வைக்கவில்லை. ஒரு சவாலோடு தான் அனுப்பி வைக்கிறேன். அதை உன்னால் நிறைவேற்ற முடிந்தால் நீ அடுத்த பிறவிக்கு செல்ல வேண்டியதில்லை”

“என்னால் முடியாது என்று என்ன இருக்கிறது?” அவள் ஆர்வமாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இதோ நிரந்தர அமரத்துவத்தை இந்த பிறவியிலேயே அவள் வென்றெடுக்கப்போகிறாள். அவளுக்குள் அதற்குள் கனவுகள்!

“உன் உடலும் நீயும் ஒன்றாக வேண்டும்”

“இது என்ன சவாலா? நான் தான் உயிர் என்னும் போது அந்த உடல் என் சொல்லைக்கேட்காதா என்ன?”

“என்னையே குறைவாக எடை போடுகிறாய் தாமிரா. நான் படைத்த சதையானது மிக மிக சிக்கலானது. அவற்றுக்கு புறவுலகில் ஏராளம் சவால்களும் கவனக்கலைப்பான்களும் உண்டு. ஒருநாள் ஒரு நொடிகூட தங்கள் உடலோடு தொடர்பு கொள்ள முடியாத ஆன்மாக்கள் உனக்கு முன்னே ஓராயிரம் பேர் என் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்”

“என்னால் முடியும்” தாமிரா அவசரமாய் இடையிட பெரியவர் சிரித்தார். பிறகு கைகளால் என்னவோ வட்டங்கள் செய்து அவளை மறைய வைத்தார். அவள் மறைந்தே போனாள் பூமியை நோக்கி..

பத்து வருடங்கள் குழந்தை இல்லாத வினிக்குள் இருந்து அவளது ஒளியை குட்டியாய் ஒரு சதைத்துண்டு உள்ளிளுத்துக்கொண்டது.

“நான் பேசுவது கேட்கிறதா?” என்று முதல் கேள்வி கேட்டாள் அவள்

மென் குரலில் ஆம் என்றது அது. தாமிராவுக்கு வெகு திருப்தி

ஒன்பது மாதங்கள் அந்த சதைத்துண்டு வளர வளர தான் யார்? அந்த சதைத்துண்டு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மென்குரலில் சொல்லிக்கொண்டே இருப்பாள். அந்த சதைத்துண்டுக்கும் இப்போதெல்லாம் புரியும் போலிருக்கிறது. உற்சாகமாய் கைகாலசைக்கும் என்னவோ அவளது வார்த்தைகளில் உத்வேகம் கொண்டதை  போல. பிறகு அவள் சிரி என்றால் அது சிரித்தது. அவள் கையசை என்றால் அசைத்தது. வெளியே என்னாகும் என்ற பயம் கொஞ்சம் கொஞ்சமாய் தாமிராவுக்குள் மறைந்து நம்பிக்கை பிறந்தது.

நீண்ட நெடிய ஒன்பது மாதங்களின் பின் அவள் கண்ணைத்திறந்த போது வினியை சுற்றி இரண்டு வைத்தியர்களோடு அவள் கணவனாய் இருக்கவேண்டும், கண்பனிக்க நின்றிருந்தான்.

பிடிமானமற்ற கயிறு போல அந்தக்குழந்தை புது உலகில் திமிறி துடித்தது.

அதற்கு பசித்தது

வினியின் தொடுகையில் பேராறுதல் கண்டது.

அந்த மனிதரை பார்த்து சிரித்தது.

முடியாது. ஒளியாக பெரியவரை தவிர வேறு யாரும் உனக்கு தாய் தந்தையாய் ஆக முடியாது. தாமிரா அலறினாள்.

இப்போது தாமிராவின் குரல் வெகு தூரமாய் போய் விட்டதோ என்னமோ, அதற்கு கேட்பதாக இல்லை

எல்லோரும் அதை ஆதிரா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்

குழந்தை வளர ஆரம்பித்தது. அது நிறைவாய் செய்து முடிக்க கூடிய விஷயங்களுக்கெல்லாம் தயங்கித்துயரமடைய தாமிரா உள்ளே சலித்துப்போவாள். திரும்ப திரும்ப உத்வேக மொழிகளை அதன் காதில் சொல்லிக்கொண்டே இருப்பாள். காலம் தவறி அது ஒரு வழியாய் செய்து முடிக்கும்.

அதற்கு வயதாக ஆக தாமிராவின் நிலை போத்தலில் அடைத்த பூதத்தின் நிலையாகிப்போனது. ஒரே ஒரு வித்யாசம் இந்த உடலென்னும் போத்தலுக்கு சிந்திக்க தெரிகிறது தப்பும் தவறுமாக! வெறுத்தே போனாள் அவள். அவளின் குரல் ஆதிராவை எட்டினால் அல்லவா அவளுக்கு புரியும்! இரண்டு சுவர்களின் இருபக்கம் இருந்து கொண்டு பேசும் நிலையை எப்படி மாற்றுவது?

மறுபக்கம் இருப்பவளுக்கு நான் தேவை! அவளும் நானும் உடன்பாட்டில் இருந்தால் மட்டுமல்லவா நான் வந்த காரணத்தை நிறைவேற்ற முடியும்? வெளியில் இருக்கும் என் உடலுடனேயே என்னால் பேச இயலவில்லை. ஒளியாகிய பெரியவரின் சிரிப்பின் காரணம் புரிந்தது. ஆன்மாக்கள் திரும்பத்திரும்ப முடியாத பிறவிக்கடலில் விழும் காரணமும் புரிந்தது. ஆனாலும் தாமிரா முயற்சியை கைவிடவே இல்லை.

விடிகாலை நேரங்களில் விழித்ததும் ஆதிரா புரிந்தும் புரியா நிலையில் இருக்கும் போது அந்த நாளை குறித்து உத்வேகப்படுத்தி தன்னம்பிக்கை ஊட்டுவாள்

கண்ணாடி எனும் ரசாயனத்தை நம்பி அவள் தன்னம்பிக்கை தளரும் போது நீ பிரபஞ்ச பேரழகி என்று தெரியாத அறியாமையில் இருக்கிறாயே பெண்ணே என்று தலையில் அடித்துக்கொள்வாள் அவள். அவளோடு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்? உடலே விரும்பாமல் அவள் மட்டும் விரும்பி எந்த பலனும் இல்லை என்று நன்றாக புரிந்தது. இந்த நாசமாய் போன ஆதிரா என்று திட்டிக்கொண்டே போனவள் சட்டென்று நிறுத்தினாள்.

இந்த உடல் பொல்லாதது. அளவற்ற அன்பை மட்டும் அறிந்த தாமிராவுக்கு சலிப்பும் கோபமும் உண்டாக்க வைக்கிறது தன்னை போலவே.. ஒளியாகிய பெரியவர் சிரிப்பதை போலிருந்தது. தாமிராவை யாராலும் மாற்ற முடியாது. ஆயிரம் தவங்களை தாண்டி புடமிட்ட அவளது ஒளியை இந்த சாதாரண மனித உடல் மாசுபடுத்துமா? ஆனால் கொஞ்சமே கொஞ்சம் தன் ஒளி மங்கலாய் போனதை அவள் அறிந்தே இருந்தாள்.

எப்படி உடலோடு தொடர்பு கொள்வது? ஆதிரா தூங்கும் சமயம் புறஉலகத்தின் கவனக்கலைப்பான்கள் ஏதும் இல்லாத சமயம் ஒளியின் வடிவில் செய்திகளை அவளுக்கு கடத்த முயன்றாள். கண்ணாடி என்னும் ரசாயனத்தை பார்த்து தன்னம்பிக்கை குறைந்திருப்பவளை நீயே பிரபஞ்ச அழகி என்று நிரூபிக்க கனவுகளில் அவளை கதாநாயகி ஆக்கினாள். ஆனால் ஒளியாகிய பெரியவர் அதற்கும் ஒரு பொறி வைத்திருந்தார்.

விழித்ததும் மங்கலாகவே நினைவிருக்கும் கனவுகள் சற்று நேரத்தில் ஆதிராவுக்கு மறந்து போவிட ஆரம்பித்தன, ஆனாலும் கனவுகளின் பாதிப்பு அவளிடம் கொஞ்சம் இருந்தது. கனவுகளின் பொருள் தேட ஆரம்பித்தாள். சிந்திக்க ஆரம்பித்தாள்.    ஆனாலும் தாமிராவின் குரல் அவளுக்கு கேட்கவில்லை.

ஆதிராவின் தோல்விகளை தாமிரா வெறுத்தாள். வெறுப்பு தன் இயல்பல்ல என்று புரிந்து அந்த இயல்பை தனக்கு உண்டாக்கியதற்காகவும் அவள் ஆதிராவை இன்னும் வெறுத்தாள்.

ஒருநாள் ஆதிரா கோவிலுக்கு போயிருந்தாள். அங்கே எதிர்காலத்தை கணிக்கும் ஒரு சுவாமி வந்திருக்கிறாராம். நண்பியின் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவுக்கு அவரின் சொற்கள் மனதுக்குள் பெரும் நம்பிக்கையை விதைப்பதை தாமிரா ஆச்சர்யமாக உணர்ந்தாள். அவரது கண்களையும் சதா சிரித்த முகத்தையும் அவள் யோசனையோடு பார்த்துக்கொண்டே இருக்க சட்டென நிமிர்ந்தார் அவர்.

“உன் அலைபாய்தலை கைவிடு” என்றார்

என்ன? என்னை இந்த சாமியாரால் பார்க்க முடிகிறதா என்ன?

இல்லையே இன்னும் ஆதிரா அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க அவர் என்னமோ ஒரு சுவடியை அவளுக்கு படித்துக்கொண்டிருந்தார்.

பிரமையா என்ன?

சுவடியை பார்த்த நிலையிலேயே அவர் இருக்க கண்கள் மட்டும் அவளை நிமிர்ந்து பார்த்தால் போலிருந்தது.

“பிரமையல்ல பெண்ணே உன்னுடன் தான் பேசுகிறேன்”

“என்னை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” தாமிரா அதிசயத்தோடு அவரையே பார்த்தாள்

“உன்னை அனுப்பியவனுக்கு உன்னை தெரியாதா?”

“ஒளியாகிய பெரியவரா?”

“உங்களை மட்டும் அனுப்பி வைக்கவில்லை பெண்ணே..நானும் இங்கே தான் இருக்கிறேன்”

மடிந்து முதல் தடவையாய் அழுதாள் தாமிரா. “நான் தோற்கபோகிறேன் பெரியவரே”

“தோல்வியை ஒத்துகொள்ளும் மனம் வந்ததே நீ வெற்றியை நெருங்குகிறாய்  என்று தான் அர்த்தம் பெண்ணே”

“என்னால்..என்னால் அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லையே”

“ஆதிரா உன் மனித வடிவம். உன் கைப்பொம்மையல்ல. அவளை வெறுப்பாய் பார்க்காதே”

“வெறுக்காமல் எப்படி இருக்க முடியும்?”

“தேவதை நீதான் தாமிரா. அவள் வெறும் மனுஷி. அவளை வெறுத்தால் நீங்கள் ஒன்றாக ஆக முடியாது”

தாமிராவுக்குள் சிந்தனைகள் தறிகெட்டோடின

“என் சவாலை மீண்டும் எண்ணிப்பார். ஒருவேளை நீ அதை தவறாக அணுகியிருக்கலாம். இன்னும் உனக்கு காலம் இருக்கிறது “ திருத்திக்கொள்ள அவர் குறும்பாக சிரித்தார்.

பெரியவரே..

அவரை காணோம், ஆதிராவோடு பேசிக்கொண்டிருந்தவர் அவளுக்கு விடை கொடுத்துக்கொண்டிருந்தார். அவளும் எழுந்து இப்போது பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தாள்.

யோசி யோசி..என் சவாலை மீண்டும் எண்ணிப்பார் தாமிரா யோசனையில் உடலுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தாள்.

உடலும் நீயும் ஒன்றாக வேண்டும் என்பது தானே..அதாவது தாமிராவும் ஆதிராவும் ஒரே சிந்தனை செயலாக மாற வேண்டும்.

“நீ சவாலை தவறாக அணுகிக்கொண்டிருக்கிறாய்!”

எப்படி எப்படி எப்படி…

எதிரே இரண்டு கடவுள் பொம்மைகள் சுவரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்ன குழந்தை ஒன்று அதை கீழே தட்டி விட்டு மீண்டும் அதன் அம்மா காண முன்னே எடுத்து வைக்க முனைந்தது.

நீலம் இடப்பக்கம், சிவப்பு இடப்பக்கம். தாமிரா அவள் போக்கில் புன்னகையோடு நினைத்துக்கொள்ள குழந்தையோ சிவப்பு பொம்மையை இடப்பக்கம் வைத்து நீலத்தை வலப்பக்கம் வைத்தான்.

ஐயோ மனிதக்குழந்தையே இந்த சின்ன விஷயத்தை உன்னால் ஞாபகம் வைத்திருக்க இயலாதா என்று அங்கலாய்த்தவள் இப்போது அந்த குழந்தை பொம்மைகளின் கைகளை இணைத்து அணைத்தாற்போல வைத்து விட்டு சிரிப்பதை கண்டு சிந்தனை சங்கிலி அறுந்தது.

இந்த அழகு அப்போது இருக்கவில்லை நிச்சயமாக!

தாமிராவாக ஆதிரா ஆக முடியாவிட்டால் என்ன? தாமிரா ஆதிரா அளவுக்கு இறங்கி வர முடியுமே. ஆதிராவாக வாழ்க்கையை எதிர்கொண்டு செல்ல முடியுமே..

ஒளியின் பெரியவர் மனதில் மீண்டும் புன்னகைப்பது போலிருந்தது அவளுக்கு

இப்போது அந்த குழந்தை மீண்டும் பொம்மைகளை இடம் மாற்றியது. தாமிரா பொங்கிச்சிரித்தாள். ஆதிராவை உற்று கவனிக்க ஆரம்பித்தாள்.

இம்முறை எந்த முன் முடிவும், எதிர்பார்ப்பும், அவளது செயல்கள் மீது சலிப்பும் இல்லாமல்!

அந்த குழந்தையை நோக்கி ஆதிரா முஷ்டியை மடக்க அவனும் திரும்ப மடக்கி காண்பித்தான். சிரித்தபடி அவள் அவன் தலை கலைத்தபடி நகர தாமிராவுக்கும் புன்னகை முளைத்தது.

புன்னகையோடு அன்பாய் இப்போது ஆதிராவை பார்க்க முடிந்தது தாமிராவுக்கு. அவளும் காரணம் இன்றியே பூவொன்றை பறித்து கூந்தலில் வைத்துக்கொண்டு புன்னகையோடு நகர்ந்து கொண்டிருந்தாள்.

பூவின் வாசத்தை நுகர முயன்றவள் எதிரே படிகளை கண்டு படி கவனம் என்று எண்ண கவனமாய் படிகளில் கால்வைத்து இறங்க ஆரம்பித்தாள் ஆதிரா.

அவர்கள் இறங்க வேண்டிய படிகள் இன்னும் நிறைய தூரம் நீண்டிருந்தன.

 

 

 

 

உனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle

ஹலோ ஹலோ..

என்னுடைய உனக்கெனவே உயிர் கொண்டேன் புக்கை படிக்காதவங்க கை தூக்குங்க பார்க்கலாம்? :p ஒகே.. உங்களில் யாராவது புக்கை படிக்க விரும்பினால் இந்த ப்ரோமொஷனை பயன்படுத்தி கொள்ளவும்.

நாளை ஞாயிறு இரவு 12 மணியில் இருந்து செவ்வாய் இரவு 12 மணி வரை amazon kindle இல் ப்ரீ ஆக இருக்கும்.

இந்த புக் ஒரு pure fantasy நாவல். முழுக்க கற்பனை தான்..உண்மைச்சம்பவங்களோடு பொருத்தி பார்க்க வேண்டாம்.

புதிதாக யாரேனும் படித்தால் நிச்சயம் எனக்கு அட்லீஸ்ட் ஒரு வரியில் ஆவது உங்கள் கருத்தை சொல்லிப்போகவும் என்று கேட்டு கொள்கிறேன் 😀

 

 

Surprise 2!!!

Guys,

நியதி எழுத முன்னே காப் விட்டதால flow வராம கஷ்டப்பட்ட சமயம் நிறைய கதைகள் ஸ்டார்ட் பண்ணி தொடராம விட்டிருந்தேன். அதுல ஒண்ணு தான் இது..

‘மெர்குரி நிலவுகள்’ என்ற தலைப்பே நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதணும் னு நினைச்சிட்டிருந்த குறுந்தொடர் சீரீஸ் ஒட டைட்டில் தான். அதுல ஒரு கதை வந்தாச்சு..

இது இரண்டாவது.

வெறுமனே 6 எப்பிசோட் தான் மக்களே.. நாலு எப்பிசோட் இப்போ கொடுத்திருக்கேன்..

மீதி 2 நாளைக்கு போட்டு end card போடறேன்.

இதுல அந்த ரசம் இந்த இசம் எதுவுமே இருக்காது. ஏற்கனவே அரைச்ச மாவு தான். புது கருத்து எதுவும் கிடையாது.. என் ஸ்டைல்ல எழுதிருக்கேன் 😉 அவ்வளவுதான்..நிறைய எதிர்பார்ப்பு வச்சிட்டு படிக்காதிங்க..முதல்லையே வார்ன் பண்ணிட்டேன். 😀

மெர்குரி நிலவுகள் – 2 Chapter 1-4

padinga padinga padichittu sollunga

Surprise

images

Guys,

Since I have no patience to re run I decided to give one of my old stories here.

இந்த கதை 2000 to 2010 காலப்பகுதியில் நடக்கும்.

Click the link below to open the surprise 😊

Surprise!!!

Give me your genuine opinion guys. I’ll be waiting.

P.S Please keep in mind that this book is already been published by ‘pustaka’. Therefore I can’t keep the link open for more than 2 days.

So

It’s 11.30pm Wednesday 3 April 2019

You know what it is!! 😀