கிட்டா, ஜோமோ, அரிஸ், மாமா நால்வரும் ஒரே பிளாட்டில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள். ஒரே சமயத்தில் அவர்கள் வாழ்வில் பெண்களால் ஏற்படும் குழப்பங்களை வயிற்றைபிடித்துக்கொண்டு சிரிக்கும் படி தன் புத்திசாலித்தனமான கதை நகர்த்தலின் மூலம் தள்ளிச்செல்கிறார் ஆசிரியர்.
அபிலாஷாவை பார்த்து மனதில் ஜொள் விடும் ஜோமோ தடாலடியாக வரும் திருமணவாய்ப்பில் தன்னிலை மறந்து சம்மதம் சொல்கிறான். தான் சம்மதம் சொன்னது அவன் முரட்டு வேலைக்காரி என்று நினைத்த அபிலாஷாவின் அக்கா என்பது அவனுக்கு வெகுதாமதமாக தெரியவர விழிக்கிறான்.
அதே நேரம் கிட்டாவுக்கு போலீஸ் காரியும் கலப்படத்தமிழ் பேசும் கஸ்தூரியிடம் காதல் ஏற்படும் விதமும் கஸ்தூரி இவர்களோடு வசிக்க வருவதும் அதற்கு மற்றவர்களின் பேச்சும் குபீர் சிரிப்பு ரகம்! வெளிப்படையாக அத்தனையையும் பேசிவிடும் prof ஆரிஸ் வீட்டு ஓனரம்மா பேச்சை தட்ட முடியாமல் அவரின் பதினேழு வயதுப்பெண்ணான லின்னிக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் மாட்டிக்கொள்வதும் அவன் கணக்கை தவிர வெள்ளந்தியாக சகலதையும் கற்றுக்கொடுப்பதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்! அரிஸ் பேசும் பேச்சுக்கள் சான்சே இல்லை.
ஊருக்கு போயிருக்கும் மாமா மனைவி நீலா வரும் சமயத்தில் இந்த கஸ்தூரி வந்து தங்கியிருக்கிறாளே என்று அவதிப்படுவதும் சரியாக நீலா வரும் சமயம் கஸ்தூரியுடன் மாட்டிக்கொள்வதும் இப்போது நினைக்கும் போதும் சிரிப்பை வரவழைக்கிறது. தமிழாசிரியை நீலாவுக்கும் சரியான தமிழ் பேசாத கஸ்தூரிக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்! ஹா ஹா ஹா
அக்கா கல்யாணம் நிற்க வேண்டுமானால் அவளுக்கு இன்னொரு மாப்பிள்ளை தேடுங்கள் என்று அபிலாஷா சொல்லி விடுகிறாள். நண்பர்கள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். கடைசியில் மாட்ரிமோனியல் விளம்பரத்தில் பார்த்து ஒருவரனை தேடிப்போகிறார்கள். அவன் ஜோமொவிடம் ஒரு சீட்டை கொடுத்து ஏர்போர்ட் போக சொல்கிறான். அங்கே பிடித்துக்கொள்கிறது சனியன்!
கொஞ்சம் ஊகிக்கக்கூடிய கதை தான் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடிக்கக்கூடிய ஆசிரியரின் நடையும் கதை சொல்லலும் பரபர அனுபவத்தை தருகிறது.
அரிஸ் லின்னியின் காதலில் இருந்து எப்படி தப்பித்தான்?
ஜோமோ அந்த திருமணத்தில் இருந்து எப்படி தப்பித்தான்?
மாமா நீலாவுடன் சேர்ந்தானா?
கிட்டாவும் கஸ்தூரியும் என்னவானார்கள் அத்தனைக்கும் விடை சொல்லிப்போகிறது நாவல். சுஜாதாவின் நாவலை எப்போது எடுத்தாலும் இந்த மனுஷனுக்கு இருக்கற குசும்பு இருக்கே என்ற செல்லச்சலிப்பு இங்கேயும் ஏற்பட்டது நிஜம்!