தீண்டும் இன்பம்_ சுஜாதா


ஒரு இதயம் உடையாமல் நிறுத்த முயன்றால் 
நான் வாழ்வது வீணல்ல 
ஒரு உயிரின் தவிப்பையோ
ஒரு வலியையோ குறைக்க முடிந்தால் 
ஏன் சோர்ந்து விழும் ராபின் பறவையை 
கூட்டுக்கு மீட்க உதவினாலே 
நான் வாழ்வது வீணல்ல 

எமிலி டிக்கின்சனின் கவிதையோடு ஆரம்பிக்கிறது கதை. பிரிந்து தனித்தனியாக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெற்றோரின் பதினேழு வயதுபெண் அஹல்யா. சகலகலாவல்லவி ஆனால் சற்றே முதிர்ச்சியற்ற மாணவி. அவளுக்கு பாடசாலையில் ஒரு நண்பன் உண்டு பிரமோத். அவனுக்கும் இவளுக்குமான இழை காதலா நட்பா என்று அங்கு மிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்தது. சக மாணவன் ரகுவுக்கும் அஹல்யா மேல் ஒரு கண் உண்டு, ஆனால் அவன் பிரமோத் போலல்ல, மனம் போன போக்கில் வாழ்பவன். நதிரா, பிரமோத்தின் இன்னொரு நண்பி, பார்வைக்கு அதிநாகரிகவாதியாகவும் ஆண்களோடு தொற்றிகொள்பவள் போல இருந்தாலும் தன் எல்லையை அறிந்தவள், தீர்மானமுள்ளவள்.

ஒரு போட்டியின் வெற்றியை கொண்டாட பிரமோத்துடன் அவனது வீட்டுக்கு செல்லும் அஹல்யா அங்கே பிரமோத் குடித்து விட்டு சற்றே எல்லை மீற முயல அங்கிருந்த இன்னொரு பள்ளி மாணவனுடன் ஹாஸ்டல் திரும்புகிறாள். காவலாளி இல்லாததால் அவளுக்கு அந்த மாணவனுடன தங்க நேரிடுகிறது. பிரமோத் நதிராவுடன் இருக்கிறான் என்ற எண்ணத்திலேயே ஒரு வகை குழப்பமாய் இருந்தவள் அந்த மாணவனான ஸ்ரீதரிடம் தன்னை இழந்து விடுகிறாள். சிறிது நாட்களில் அவள் கர்ப்பம் என தெரிய வருகிறது. ஸ்ரீதர் அதை அறிந்து தன் அமெரிக்க பாஸ்போர்ட்டை கிழித்து அவளோடு உடனிருப்பேன் என சபதம் செய்கிறான். தங்கள் நண்பியை இந்நிலைக்கு ஆளாக்கியவன் என்ற கோபத்தில் ரகுவும் பிரமோத்தும் அடித்ததில் எதிர்பாராமல் அந்த ஸ்ரீதர் இறந்து விடுகிறான். அஹல்யா திகைக்கிறாள்.

அஹல்யா அந்த குழந்தையை பெற்றெடுத்தாளா?

ரகுவுக்கு என்ன ஆனது?

இதையெல்லாம் கதையில் ஆசிரியர் சுவையாக சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீதருக்கும் அஹல்யாவுக்கும் காதலே இல்லை. ஆனால் குழந்தை இருக்கிறது. பிரமோத் அஹல்யா, ரகு அஹல்யா, இப்படி விசித்திர உறவுகளும் தாறுமாறான இழைகளுமாய் கதை நகர்கிறது. இந்த கதையில் எல்லோரும் நல்லவர்கள். காலம் தான் வில்லன் வேடமிட்டு சந்தர்ப்பங்கள் மூலம் காய் நகர்த்துகிறது.

இளவயது கர்ப்பங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும், அபார்ஷன் சரியா தவறா என்ற விவாதங்கள், அப்படியே குழந்தையை பெற்றாலும் அந்த இளம் தாயால் குழந்தையை வளர்க்க முடியுமா? தத்தெடுத்தல் எப்படிப்பட்டது? அப்போது தாயின் மனநிலை எப்படியிருக்கும்? இவை பற்றியெல்லாம் ஆணித்தரமான கருத்துக்களை ஆசிரியர் விதைத்திருக்கிறார்.

தலைப்பு என்னவோ தீண்டும் இன்பம் தான் ஆனால் காதலில்லாத தீண்டலினால் அஹல்யா, ஸ்ரீதர், ரகு அனுபவிக்கும் துனபங்கள் தான் நம் கண்ணில் விரிகின்றன. 

தன் தலை முடியை வெட்டி அசிந்தியா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு மேடையேறி எமிலி டிக்கின்சனின் அதே வரிகளை பாடும் அஹல்யாவுடன் கதை முடிவடைகிறது. கவலையின்றி படித்துக்கொண்டிருந்த மென்மையான குழந்தைப்பெண்ணை வலுக்கட்டாயமாய் முதிர்ச்சி அடையச்செய்து இறுகச்செய்த காலத்தின் கோலத்தை எண்ணி நமக்கும் பெருமூச்சு வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: