நானும் தமிழும்

பெண்மையின் தமிழ் புத்தாண்டு போட்டிக்காக!….

தமிழ்2

நான் தமிழன்/ தமிழச்சி என்றெண்ணி பெருமை கொள்ளும் தருணங்கள் வீதியில் வரும் திருப்பங்கள் போல! வந்து கொண்டே இருக்கும்!

நான் புரிந்து கொள்ளும் வயதுக்கு வந்தபோது அப்பா தமிழைப்பற்றி தந்த அறிமுகத்தில் ஆரம்பித்தது அது! இத்தனை ஆண்டுகள் பழமையான மொழி, என் அப்பா எனக்கு தந்ததை நான் உனக்கு தருகிறேன் என்று சொன்னபோது நான் என்னப்பா செய்யவேண்டும்? என்று கேட்டேன், எதுவுமே செய்யாமல் ஒப்படைக்க வேண்டியவர்களிடம் அப்படியே கொடுத்தாலே போதும் என்று சொன்னார் அப்பா!

உலகப்பொதுமறையென திருக்குறள் கற்கும் போது, தமிழ்த்தாயின் ஐந்து ஆபரணங்களாம் ஐம்பெரும் காப்பியங்களையும் அறிந்த போது, ஒளவையின் பாடல்களை கற்ற போது பழைய மன்னர்கள் வரலாறுகளை கேட்டபோது விஞ்ஞானம் காலம் கடந்து அறிந்தவைகளை நம் முனிவர்கள், பழந்தமிழ் அறிஞர்களின் பாடல்களில் கண்ட போது, தமிழின் சாதனையாளர்களை பற்றி கேள்விப்படும்பொழுது அந்த தமிழன்னைக்கு நானும் மகளென பிறந்தேன் என்று புல்லரித்து போயிருக்கிறேன். இன்னும் போய்க்கொண்டே இருக்கிறேன்.
சிறுமியென நான் வளரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் கலை கலாச்சார, கட்டுமான சிறப்புக்களை அறியக்கிடைத்தபொழுதுகளை சிறப்பாக சொல்லலாம்.

கொஞ்சம் வளர்ந்ததும் தற்கால இலக்கிய ஆசிரியர்கள் கதாசிரியர்கள் வர்ணனையில் கொஞ்சும் குமரியாக அவளை கண்டு ரசித்து காதலிக்க ஆரம்பித்தேன். சாண்டில்யன் வர்ணனைகளில் தமிழன் வீரத்தோடு இணைந்து, மன்னர்களின் கனவுக்கன்னி போல், கல்கியின் மொழிகளில் சேலை கட்டி என்னை கிறங்கடித்தவள் பின்னாளில் சுஜாதா கைகளில் நாகரிக மங்கையாக என் மனம் மயக்கினாள். பெயர் சொல்ல ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும், அத்தனை ஆசிரியர்கள் அத்தனை வேடங்களை அந்த சிங்காரிக்கு வழங்கி என்னை கனவுலகில் சிதறடிக்க வைத்தனர். ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் என் தமிழ் என்ற அந்த உரிமை உணர்வும் பாரதியின் மொழிகளும் என்றும் என்னிடம் துளிர்க்கும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!

என் பதினான்காவது வயதில் என் மனம் மயக்கிய மங்கைக்கு முதலாவது காதல் கடிதத்தை எழுதினேன்! அதாங்க கவிதை! என் கவிதைக்கு முதல் ரசிகை எப்போதுமே நான் தான். மனதில் படும் எண்ணங்களை வார்த்தைகளை கோர்த்து தட்டி செதுக்கி மாலையாக்கி மீண்டும் சரி பார்க்கும் போது உண்மையை விட பலமடங்கு அழகாய் அந்த மாலை ஜொலிக்குமே! அந்த உணர்வை அனுபவித்து பார்த்திருக்கிறீர்களா? பேரானந்தம் என்பது அதுதாங்க! என் செல்லத்தமிழ் ஒன்றினால் மட்டுமே அது முடியும்! உலகின் எந்த மொழியாலும் இத்தனை சுவையை கொடுக்கவே முடியாது! தமிழச்சிடா! ஹ!! என்ற பெருமித தருணங்கள் அவை!

இன்னும் கொஞ்சம் வளர்ந்த போது உற்ற நண்பன் என்ற நிலைக்கு என் தமிழ் மாறியது! இன்னொரு மொழியோடு விரும்பியோ விரும்பாமலோ போட்டியிட நிர்பந்திக்கப்பட்டோம். ஒற்றை தமிழன் எதிலேனும் ஜெயித்தாலும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டாடும் மனநிலைக்கு மாறினோம். ஒற்றை தமிழனின் வேதனைக்கு மொத்த தமிழர்களும் கண்ணீர் விட்டோம்!

“தமிழனாய் பிறந்தது குற்றமா?” தமிழன் என்ற பெயருக்காக எம் தமிழுக்காக இத்தனை வேதனைகளையும் அனுபவித்தோம் உற்ற நண்பனுக்காய் உயிரை கொடுப்பது போல், தமிழின் மேல் அதிக உரிமை கொண்டது போல், துன்பத்தின் போது விலகி ஓடாத நண்பனின் மேல் நட்பு அதிகமாகும் அல்லவா? தமிழ் இன்னும் என் மனதோடு இறுகிப்போனது! போகட்டும் அதை விடுங்கள்

நண்பன் என்பது துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் துணை அல்லவா? நான் கற்றது இன்னுமொரு மொழி பேசும் பிரதேசத்தில். அவர்களை கோபமூட்டவும் சிரித்துக்கொண்டே அவர்களை திட்டவும் விரிவுரை மண்டபத்தில் துண்டுசீட்டாகவும் வேண்டுமென்றே தவறாக கற்றுக்கொடுக்கவும் நாங்கள் உபயோகிப்பது தமிழே! அங்கெல்லாம் எங்கள் சிரிப்புக்களில் நண்பனாய் கலந்து நின்றிருக்கிறது தமிழ்!

வெறும் காகிதத்திலேயே இவ்வளவு சுவை இருந்தால் இசையோடு சேரும்போது என்ன ஆகும்! ரஹ்மானில் ஆரம்பித்துத்தான் நான் இளையராஜாவுக்கு சென்றேன். இரவுகளில் என்னோடு இருப்பதால் என் மனைவி என்று சொல்லலாமா? முக்கியமான தருணம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். மற்ற மொழி பிரதேசம் ஒன்றில் பஸ் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். கசமுசா என்ற பைலா சத்தங்களுக்கு இடையில் திடீரென்று காதல் ரோஜாவே ஹம்மிங் வந்தது. அவ்வளவு அமைதியாகிவிட்டது பஸ்! இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து வேண்டுமென்றே வரிகளை முணுமுணுத்து தமிழிச்சிடா என்று காட்டிக்கொண்டது பசுமையாய் நினைவிருக்கிறது! ஹா ஹா இசைப்புயல் ஆஸ்கார் மேடையில் “ எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று சொன்னபோது புல்லரிக்காத தமிழன் ஒருவன் இருக்க முடியுமா? தமிழிசை என்ற மனைவியை இறக்கும் போதும் பிரிவேனோ என்னவோ?

வளர்ந்து முடித்து இருபதுகளின் பிற்பகுதியை தொட்டிருக்கிறேன். பேசத்தொடங்கும் குழந்தைகளின் வாயில் தமிழை திருத்திக்களைத்து என் வருங்கால சந்ததியிடம் தமிழை அவர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்காத வகையில் எவ்வாறு வளர்த்தெடுக்க போகிறேன் என்று வருத்தமாய் எண்ணிய இந்த வருடத்தின் ஒரு நாளில்தான் புரிந்து கொண்டேன், அம்மா, காதலி, நண்பி , மனைவியாய் தமிழ் எனக்கு இருந்தது போய் இப்போது நான் தமிழுக்கு அன்னையாகி இருக்கிறேன் என்று! நினைக்கவே இனிக்கிறது! என் மழலை முதல் சொல்லை பேசும் போது ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களிலும் தமிழுக்கு அன்னையாகி பின் கண்டிப்பான பாட்டியாகி அப்படியே ஒருநாளில் இறந்தும் போவேன்.
எப்படி எங்கே பெருமைப்பட்டேன் என்ற வரையறைகள் என்னிடம் இல்லை. என்னோடு உணர்வாய் இருப்பதை சுவாசம் போல இயல்பாய் நடப்பதை என் தமிழைக்குறித்த என் பெருமையை எப்படி சொல்வேன் நான். இப்போதும் கூட எழுதியதை திரும்பத்திரும்ப நானே படித்து தமிழேண்டா சொல்லிக்கொண்டு அடுத்த வேலைக்கு செல்லப்போகிறேன்!

தமிழை தமிழின் கலை கலாச்சாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது?

நாம் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில பயன்பாட்டை நிறுத்துதல் என்பது எங்கள் தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமானது. தமிழ் மொழி மிக இறுக்கமான கட்டமைப்பை கொண்டது. வரும் காலம் கணனி மற்றும் விண்வெளி யுகமாக இருக்கப்போகிறது. விஞ்ஞான சொற்கள் தமிழ் மொழியில் இல்லை. புதிதாக நாம் கண்டு பிடிப்பது கர்ண கொடூரமாக இருக்கிறது, நமக்கே புரிவதில்லை, கணனியின் கட்டளைகளை முற்று முழுதாக தமிழில் மாற்றும் போது நமக்கே ஒன்றும் புரியாமல் சிரித்து மகிழ்கிறோம்! காரணம் எம் தமிழ் கட்டமைப்பில் மிக கடினமானது. அதிகம் வேண்டாம் ஐஸ்கிறீமின் தமிழ்ச்சொல் குளிர் களி! எனக்கு ஒரு கோப்பை குளிர்களி கொடுங்கள் என்று எம்மாலேயே சொல்லிக்கொள்ள முடியாது! இது தமிழுக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. பண்டைய மொழிகள் அனைத்தும் இதே பிரச்னையை எதிர் நோக்குகின்றன. அதற்கு முற்று முழுதாக ஆங்கில மோகம் மட்டுமே காரணம் அல்ல மக்களே! தமிழின் நெகிழ்வுத்தன்மைகுறைவும் காரணம்! எம் சமுதாயத்திடம் தமிழை திணிப்பதற்கு முன் தமிழ் இந்த மாற்றங்களுக்கு உட்பட வேண்டும்! தமிழ் இப்படி ஆங்கில சொற்களை அரவணைக்க முயன்றால் தமிழ் தன் தனித்தன்மையை இழக்கும். நானே அதற்கு ஆதரவளிக்க போவதில்லை. அப்படியானால் தமிழை சாகவிட சொல்கிறாயா என்று கேட்கிறீர்களா?

அப்படியில்லை.

சமூகமே ஆங்கில மயம் ஆகும் போது என் குழந்தையை மட்டும் தமிழில் கல் என்று திணிப்பது அந்த குழந்தையின் வளர்ச்சியில் மனநிலையில் கல்வியில் பலவித தாக்கங்களை. தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். ஆகவே விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை படிகளையும் எவ்வழியிலாவது எம்மொழியிலாவது எம் சமுதாயம் கற்கட்டும்! அத்தனை மொழிகளிலும் விற்பன்னர்கள் ஆகட்டும். நாம் செய்யவேண்டியது இவைதான்.

முதலாவது குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்களை வைப்பதை மறக்கக்கூடாது.எட்டும் திக்குகளில் எல்லாம் நம் குழந்தைகள் எட்டித்தொடட்டும். விட்டு விடுங்கள். நம் தமிழன்னை பெயரால் அவர்களை எப்போதும் தடை செய்யாதீர்கள். உலக அரங்குகளில் அந்த குழந்தையின் தமிழ்ப்பெயர் ஒலிக்கும் போது தலை நிமிரப்போவது அவள் தான் நீங்களல்ல. இல்லையேல் நம் தமிழ் மேடைகளோடு அவர்கள் நின்று போவார்கள்.

தமிழை கல்வியாக கொடுக்காதீர்கள். உணர்வு பூர்வமாக அவர்களது பெருமையான அடையாளமாக சுவாசம் போல நம் குழந்தைகளே உணர்ந்து செயல்படும் வண்ணம் பிறப்புரிமை என கற்றுக்கொடுங்கள். யூதர்கள் எப்படி யூதன் என்ற அடையாளத்தை கடத்துகிறார்களோ அதே போல ஆங்கிலம் பேசுவது இயல்பு ஆனால் தமிழ் தெரியாதிருப்பது அவமானம் என்று வெட்கப்படும் உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்.

வீட்டில் முடிந்தவரை தமிழில் பேசலாம் தமிழனை சந்தித்தால் தமிழில் பேசலாம். காலத்துகேற்றபடி எம் இலக்கியமும் கூடவே வளரவேண்டும். என்னை கேட்டால் அங்கேதான் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. என் கால இலக்கியங்களையும் படைப்புக்களையும் என் சந்ததி ரசித்து ஈடுபட வேண்டும் என்பது அடக்குமுறை. வாசிப்பு பழக்கம் அற்றுப்போய் விட்டது என்று கூச்சல் போடுகிறோம். காதல் கதைகளையும் வாழ்வியல் மற்றும் கிராமிய பெண்ணிய எழுத்துக்களை மட்டுமே கொடுத்த படி! அவைகளும் வேண்டியது தான். ஆனால் வீடியோ விளையாட்டுக்களின் வேகமும் மற்றும் புதிய தொழினுட்பங்களினுடைய அறிவும் கொண்டு மயக்கும் தமிழில் இன்றைய இளைஞர்களை கவர தமிழ் எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா? இப்போது? அப்படியே இருந்தாலும் இன்றைய தேதிக்கு இன்னும் புகழ் பெறவில்லை. காலமாற்றத்தோடு தமிழன் போட்டியிட வேண்டுமே தவிர தமிழ் மாறமுடியாது.
ஆகவே இலக்கியத்தில் இளைய தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் எழுத்துக்களின் பிரயோகம் காலப்போக்கில் மறைந்து விடும்.

ஆடைத்துறை எம் அடையாளத்தை காப்பதில் கொஞ்சம் முன்னே நிற்கிறது என்றே சொல்வேன். எங்கள் பாரம்பரிய உடைகளை இளைய தலைமுறையை கவரும் வகையில் புதிதாக தந்து கொண்டே இருக்கிறார்கள். சேலையை உடுத்திக்கொள்ள இலகுவாக இரண்டாக, ஒரு நிமிட சேலை என்று வித வித வடிவங்களில் அறிமுகப்படுத்தியதில் இப்போது விழாக்களில் பிற இனத்தோரை அவற்றோடு காண முடிகிறது. தமிழன் முன்னேற ஆரம்பித்தால் ஆங்கிலேயனை பின்பற்றுவது அடிபட்டு போய் விடும், உதாரனமாக இந்தியா வல்லரசானால் இந்திய கலாசாரம் உலக அரங்கில் பிரபலமாகும். விழா, வைபவம் எதுவாயினும் எந்த உலக அரங்காயினும் மேடை ஏற்றப்படும்போது கண்டிப்பாக தமிழ் உடை வேண்டும். அதை பெருமையாக அணியும் மனோ பாவம் வேண்டும். அலுவலக(formal) உடை என்றால் ஒரு தமிழனுக்கு வேஷ்டி, சேலை ஆக மட்டுமே இருக்கவேண்டும். சாதாரண உடை(casual) எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டுமே!

இங்கே ஒரு தமிழ் பிரதேசத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பார்த்து வியந்த இன்னொரு விடயம். ஒருதடவை அமெரிக்க பிரதிநிதியை அழைத்துபோன போது கூட்டத்தின் நடுவில் சிற்றுண்டி இடைவேளையில் அவர்கள் பரிமாறியது மோதகம் மற்றும் வடை! அந்த பிரதிநிதி மோதகத்தை ரசித்து உண்டுவிட்டு அதைபற்றிய விளக்கம் என்னிடம் கேட்க விநாயகர் முதற்கொண்டு அளந்து விட்டேன்! 😀 திரும்பி வந்தும் மோத்காம் என்று கேட்டு கொண்டிருந்தார்! விருந்தினர்களுக்கு நம் பாரம்பரிய உணவு மட்டுமே என்று நாமும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்! புதிய வடிவங்களில் பழைய உணவு வகைகளை மாற்ற முடியுமே! தமிழன் கண்டு பிடிக்காத சுவையும் ஒன்று இருக்கிறதா என்ன?

இறுதியாக கலைகள்! தமிழனை அடையாளப்படுத்தும் இவற்றுக்கு சாகாவரம் வழங்கப்படவேண்டும். ஆசிரியர்கள், மற்றும் இசை நடனம் நாடகம் கூத்து, வாத்தியங்கள் போன்ற கலைகளை அருங்காட்சியகத்தை பராமரிப்பது போல அரசாங்கம் தமிழ்த்துறை மூலம் போஷிக்க வேண்டும். வருமானம் பிற துறைகளுக்கு சமமாக வழங்கப்பட வேண்டும். திரைப்படங்கள் மற்றும் வானொலி ஊடகங்கள் தார்மீக பொறுப்புடன் செயல்படவேண்டும். உங்கள் தனித்தன்மையை பிரதிபலியுங்கள். ஹாலிவூட்டில் செய்வதை காரண காரியம் புரியாமல் அப்படியே செய்வதுதான் முன்னேற்றமா?

ஆங்கிலேயர்கள் சகல துறைகளிலும் முன்னேறிய ஒரே காரணம் தான் ஆங்கிலம் இவ்வளவு தூரம் ஊடுருவியமைக்கு காரணம். மக்களின் வாழ்வியலே மொழி. மொழி வாழவேண்டும் எனில் வாழ்வியல் மாற்றங்களை அரவணைக்கும் அதே வேளை தனித்தன்மையை இழக்ககூடாது. அந்த மக்கள் தலை நிமிர்ந்தால் மொழி தானாகவே தளைக்கும். தமிழ் சாகிறது என்றால் தமிழன் சுயமாய் செயல்படும் திறனை இழக்கிறான் என்று அர்த்தம் ஆகிறது. அது கண்டிப்பாக நடக்கபோவதில்லை. இந்த தலைமுறை மிக புத்திக்கூர்மையுடையதாய் இருக்கிறது. தமிழ் அவர்களது உரிமை, அடையாளம் என எம்மைப்போல் தமிழை நேசிக்கவும் காதலிக்கவும் கற்றுக்கொடுங்கள். சகல துறைகளிலும் அவர்கள் வல்லவர்கள் ஆக்குங்கள். தமிழன் என்ற பெயரால் உலக அரங்கில் அவர்கள் அறியப்படட்டும். தமிழ் எங்கள் பெருமை என்ற மனப்பாங்கை வளருங்கள். .
ஆங்கிலத்தை களை எடுப்பதை இப்போதைக்கு நிறுத்தி முட்டாள் துவேசிகளையும் தமிழனை துண்டு போடும் சாதீய சமய புல்லுருவிகளையும் களையெடுப்போம். தமிழ் தானாகவே முடி சூடிக்கொள்ளும்.

ஆற்றோட்டத்தில் ஆலமரங்கள் கூட கவிழ்ந்ததுண்டு நாணல்கள் மடிவதில்லை. அதற்காக அவை மீன்களாக மாறுவதும் இல்லை.

தமிழை நேசிப்போம், காதலிப்போம், கொண்டாடுவோம்.

தமிழ் என்றென்றும் வாழும்.

நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: