கொண்டாட்டம்.காம் -18

Niveda-Thomas-January-2013-stills-(30)8572

ஹைவேயில் நடைபெற்ற கோர விபத்து என்று விடியோ காட்சிகள் செய்திகளில் காண்பிக்கப்பட்டபோது வசீ இந்தளவோடு  தப்பித்தது இறைவன் செயல் என்றே தோன்றியது. வேக எல்லை நூறைத்தாண்டிய நிலையில் கட்டுப்பாடிழந்த லாரி ஒன்று WKC வண்டியை மொத ஹைவேயில் இருந்து பிரிந்து சாதாரண வீதி இறங்கும் இடத்துக்கு மேலிருந்து விழுந்திருக்கிறது வண்டி! நினைத்துப்பார்க்கவே உடல் சிலிரித்தது மீராவுக்கு.

வெறும் காயங்களோடு மட்டும் அவன் தப்பி விட வேண்டும். பின்விளைவுகள் ஏதும் இருந்து விடக்கூடாது என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாகவும் இருந்தது.

நித்யாவை பார்க்க அவளுக்கே பாவமாக இருந்தது. ஆனால் யாரை யார் தேற்றுவது?

விடியும்வரை சாப்பிட்டேன் தூங்கினேன் என்று பேர் பண்ணிக்கொண்டிருந்தவள் அதிகாலை விடிந்ததுமே எழுந்து தயாராகி விட்டாள். யாரை இந்த அதிகாலை அழைத்துச்சென்று விடுமாறு உதவி கேட்பது? மனோவை எழுப்பவும் ஒருமாதிரியாக இருந்தது,பாதி இரவுக்கு மேல் வரை தூங்காததினாலோ என்னவோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நித்யாவை எழுப்பாமல் அவள் வெளியே வர, காபி அருந்தியபடி டைனிங் ஹாலில் அவளுக்காய் காத்திருந்த மனோவை கண்டதும் நன்றி சுரந்தது அவளுக்கு.

“நான் போய்ட்டா ஆண்ட்டியை வீட்டுக்கு அனுப்பிடலாம்.. “ தயங்கிச்சொன்னவளை பார்த்த விழி விலக்காமல் “போகலாம்” என்றபடி இன்னொரு காபிக்கப்பை எடுத்து அவள் கையில் திணித்தான்.

சீக்கிரம் குடிச்சு முடிச்சேன்னா போய்டலாம்.

ஹ்ம்ம்..மறுபேச்சின்றி அவள் குடித்து முடிக்க போட்டிருந்த ஆர்ம் கட் பனியனை மட்டும் மாற்றிக்கொண்டு கார்ச்சாவியோடு வெளியே வந்தான் மனோ.

இப்போ நான் போய் உன்னை அங்கே விட்டுட்டு அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அப்புறம் நித்யாவை கூட்டிட்டு வந்து விடறேன். நீ அதுவரை தனியா இருப்பியா?

ஹ்ம்ம்.. பிரச்சனையில்ல. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கறோம் இல்ல? இப்படியொரு உதவி இல்லாவிட்டால் அவள் என்ன தான் செய்திருப்பாள்! நினைக்கவே மனம் கலங்கியது

காலங்கார்த்தால திட்டக்கூடாதுன்னு பார்க்கிறேன்!!! அவன் கடைக்கண்ணால் அவளை முறைக்க லேசான சிரிப்பு அவள் இதழ்களில் பூத்தது. அது அவனையும் தொற்றிக்கொள்ள உதட்டில் உறைந்த சிரிப்புடனேயே வண்டியோட்டினான் அவன்

“அவனுக்கு உடம்பு முழுக்க பயங்கர பெயின் இருக்கும். கண்முழிச்சு எல்லாம்  சரியானதும் கொஞ்ச நாள் ஆளைக்கட்டி வீட்ல உக்கார வச்சுறலாம். எதை பத்தியும் கவலைப்படாதே..”

ஹ்ம்ம்…

ஆறுமணிக்கெல்லாம் அவர்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தார்கள். வசீ கண்திறக்கவில்லை எனினும் இடையிடையே லேசாய் முனகி பிறகு மீண்டும் மயக்கத்துக்கு போனதாக சித்ரா தெரிவித்தார். ஓடிப்போய் பார்த்தபோது  நேற்று விட்டுப்போன அதே நிலையில் தான் கிடந்தான் அவன்.

கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள வெளியே வந்து நாட்காலியொன்றில் மீரா அமர்ந்து கொள்ள சித்ரா வீட்டுக்கு கிளம்பினார். அந்த நர்ஸ் செல்வமும் குளித்து உணவருந்திவிட்டு வருகிறேன் என்று கிளம்பிப்போனார்.

அந்த நடைபாதையில் போவபர் வருவபர் எந்த பிரக்ஞையும் இல்லாதவளாய் அவளையும் வசீயையும் பற்றிய நினைவுகளோடு தலையை கையில் தாங்கி மீரா அங்கே அமர்ந்திருந்தாள்.

பெற்றோரை பறிகொடுத்த தினம், தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு சிரித்து சிரித்து அவன் அவளைத்தேற்றியது, இருவருமாய் வாழ்க்கையில் போராடிய கணங்கள் எல்லாமே ஞாபகம் வந்தது அவளுக்கு.

இறுதியாய் நித்யாவை காதலிப்பதாய் கண்கள் மின்ன அறிவித்த வசீயும்!

நித்யா என் வீட்டுக்கு வர சம்மதிப்பாளா என்ற டென்ஷனோடு சுத்தியவனை தானும் சேர்ந்து ஆறுதல் படுத்தியது, இறுதியில் நித்யா அவர்களையும் தாண்டி பெற்றோரிடம் சம்மதமே வாங்கிவிட்டாள் என்று தெரிந்ததும் இருவருமாய் கொண்டாடியது என்று கடந்த வாரம் அவர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் தான்! அதுதான் ஆண்டவனுக்கு பொறுக்கவில்லையோ? அவளது சிந்தனைகள் இந்த ரீதியிலேயே ஓடிக்கொண்டிருக்க

இடையில் ஒருதடவை மனோவின் டாக்டர் நண்பன் வந்து ஆறுதலாய் பேசிப்போனான்.

நல்ல வேளை!  அவளும் சுபாப்பாட்டியும் மட்டுமாய் இருந்தால் இந்நேரம் உள்ளே விடவே ஆயிரம் விதிமுறை சொல்வார்களே!

ஏழரை மணிக்கெல்லாம் கையில் உணவோடு நித்யாவும் மனோவும் வந்துவிட்டார்கள். அதற்குள் செல்வமும் வந்திருக்க அவரை வசீயோடு விட்டுவிட்டு காண்டீனை நோக்கி மூவரும் நடந்தார்கள். மனோவும் நித்யாவும் தங்களுடைய உணவையும் கட்டி எடுத்துவந்ததில் மூவருமாக கொஞ்சம் கொஞ்சமாய் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.

கைகழுவிக்கொண்டிருந்த போது தான் செல்வம் மனோவை அழைத்தார்.

அவன் தொடர்ச்சியாக முனகுவதாகவும் கண்திறக்க முயற்சிப்பதாகவும் யாராவது ஒருவரை உள்ளே போய் அமைதியாக அதிகம் பேச்சுக்கொடுக்காமல் அவனை சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுமாறு சொன்னார்.

நித்யா மீராவிடம்” நீ போ “ என்று சொல்ல அடுத்த கணம் சிட்டாய் பறந்தவள் ICU விற்குள் புகுந்தாள்.

இவள் போன போது வசீயின் முனகல் “மீரா மீரா” என்று மாறியிருந்தது. சிரமப்பட்டு கண்களைத்திறக்க முயன்று கொண்டிருந்தான்.

“மீராண்ணா..இங்கே பார்..”என்று பொங்கிவந்த அழுகையை அடக்கியபடி அவள் தீனமாய் அழைக்க இம்முறை அவன் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரியத்திறந்தன. அவளைக்கண்டதும் ரத்தம் கட்டிக்கிடந்த உதட்டோரங்கள் சின்னப்புன்னகை செய்ய முயன்று தோற்றன.. சிரமப்பட்டு உதடு பிரித்து வார்த்தைகளை கோர்த்தான் அவன்

“மீரு..எனக்கு.. ஒண்ணுமில்ல.. நான் செரியாயிடுவேன். நீ ஒண்ணும் கவலை….”

அவ்வளவுதான் அவன் இமைகள் மறுபடியும் மூடிக்கொண்டுவிட்டன. ஏதோ அதை அவளிடம் சொல்வதற்காகவே கண்விழித்தது போல!

அழுகை பொங்கினாலும் அவன் பேசிவிட்டதே ஆனந்தம் தர வெளியே ஓடி காத்து நின்ற நித்யா மனோவுக்கு தகவல் சொன்னாள் அவள்.

அன்று மொத்தம் நான்கு தடவைகள் அவன் கண்விழித்தான். rib bone உடைந்தது பேசுவதையே வேதனையாக்கும் என்று டாக்டர் சொல்லியது போல சிரமப்பட்டே பேசினான்.

அதுவும் கடைசியில் நித்யாவிடம் பேசும்போது I am waiting என்று சிரிக்க முயன்றதாக சொல்லி அவள் கொஞ்ச நேரம் தன்பங்குக்கு அழுது கொண்டிருந்தாள்!

தலையில் மூன்று தையல் போட்டிருந்தார்கள். நெஞ்சை சுற்றி ஒரு பாண்டேஜ் . வலக்கையும் கழுத்தில் மாட்டப்பட்டிருக்க வலது கால் பாண்டேஜினால் சுற்றி ஆதாரம் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய வீக்கங்கள் கொஞ்சம் குறைந்தால் போல இருந்தது.

முதல் நாளுக்குப்பின் மீரா தான் வைத்தியசாலையில் தங்கினாள்.  காலையில் நித்யா வந்துவிட இவள் வீட்டுக்கு போய் குளித்து வருவாள். மூன்று நேரமும் சாப்பாடு நித்யா வீட்டில் இருந்தே ஹாஸ்பிட்டல் வந்து விடும். சுபா பாட்டி, சித்ரா, ராஜு என மாறி மாறி விருந்தினர்கள் சூழவே அவன் இருந்தான். மனோ மூன்றாம் நாள் விரிவுரை செல்ல ஆரம்பித்ததால் மாலை வேளைகளில் வருவான். ஆபீஸ் முடிய ஆதியும் சக்தியோடு வந்தது போவான்.

கொஞ்சம் கொஞ்சமாய் விண் விண்ணென்று தெறிக்கும் உடல் வேதனைகள் வற்றினாலும் அடுத்த இரண்டு நாட்கள் தூங்கிக்கொண்டே இருந்தவன் நாலாவது நாள் கொஞ்சம் பேச ஆரம்பித்தான். மீராவின் உணவை கேட்டு வாங்கி கொஞ்சமாய் ருசி பார்த்தான்.

சாதாரண தனி வார்ட் ஒன்றுக்கு அவனை மாற்றிய பிறகு இவர்களுக்கு இன்னும் இலகுவானது. அறையிலேயே அவனோடு இருக்க முடிந்தது.

வழக்கம் போல கலகலப்பாய் பேச ஆரம்பித்தாலும் அவன் முயற்சி தான் செய்கிறான் என்பதை இரண்டு நாட்களாகவே மீரா பார்த்துக்கொண்டே இருந்தாள்.  என்ன பிரச்சனை அவனை வாட்டுகிறது? தனியாக சிக்கும் போது அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவன் எங்கே தனியாக சிக்குகிறான்! ஆபீஸ் நண்பர்கள், தனிப்பட்ட நண்பர்கள், இல்லாமல் போன உறவினர்கள் என்று கும்பலுக்கு குறைவே இருக்க வில்லை! அவனுக்கென டின் டின்னாக எல்லோரும் ஹார்லிக்ஸ் நெஸ்டமோல்ட் மைலோ ப்ரோடினேக்ஸ் என்று கொண்டு வந்து கணக்கில்லாமல் குவிக்க நித்யாவும் மனோவும் அதை உடைத்து அங்கேயே தின்று  தீர்ப்பதும் அன்றாட வாடிக்கையாகிப்போனது!

அப்படியே நாட்கள் நகர தலையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு நெஞ்சிலும் கை, கால். எலும்பு முறிவையும் தவற வேறேதும் பாதிப்புக்கள் இல்லைஎன்று அனைவரையும் நிம்மதிப்பெருமூச்சு விடவைத்த அறிக்கையுடன் அவன் நாளை வீட்டுக்கு போய் அங்கிருந்து குணமாகலாம். இனி வைத்திய சாலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னபோது முழுதாக இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. அதற்குள் இரண்டு வருடங்கள் கடந்தன போல மீரா மலைத்துப்போயிருந்தாள்!

மறுநாள் பிசியோ தெரபிஸ்ட் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டு அவர் மூலமாக அவன் ஒவ்வொரு நாளும் சிறு சிறு பயிட்சிகள் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஒருவழியாக வசீ வீட்டுக்கு அனுப்பப்பட்டான்!

ராஜவேல் வீட்டு வானின் பின் சீட்களை அகற்றி அவனை படுத்த வாக்கிலேயே ஏற்றி வசீயின் வீட்டுக்கு கொண்டு வந்து கீழ்த்தளத்தில் அட்டாச் பாத்ரூமோடு இருந்த விசாலமான விருந்தினர் அறையில் அவனை படுக்க வைத்தனர். செல்வம் தினமும் மூன்று வேளைகள் வந்து அவனுக்கான பணிவிடைகளை செய்வதென்று முடிவானது. ஹாஸ்பிட்டலில் இருந்தபோதிருந்த  உற்சாகமும் போய் விழுந்து விட்ட முகத்தோடு இருந்தவனை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

இரவு உணவை இங்கேயே சமைத்துக்கொள்கிறோம் என்று மீரா சொன்னதில் மனோ வீட்டினர் கிளம்பிச்சென்று விட வசீயும் தூக்கம் வருகிறதென்று படுத்து விட்டான். இரண்டு வாரமாய் தலைகீழாய்க்கிடந்த வீட்டை ஒழுங்கு படுத்துவதில் சுபாவும் மீராவும் ஈடுபட்டு மாலை நான்கரை மணிக்குள் ஒருவழியாக எல்லாம் செய்து முடித்திருந்தனர்.

அப்போதுதான்.

வசீ வீட்டுக்கு வந்த செய்தி கேட்டு WKC யினர் மொத்தமாய் சேர்ந்து அவனை பார்க்க வந்தனர்.

சித்ரா ஆண்ட்டி எடுத்து வந்த குக்கீசும் காபியும் பரிமாறி இவளும் பேச்சில் கலந்துகொள்ள சிரிப்பும் கலகலப்புமாய் பேசிக்கொண்டே இருந்தவர்கள் திடீரென்று வசீ சொன்ன விஷயத்தை கேட்டு நிசப்தமாகிப்போயினர்.

அத்தனை நாளும் அவன் மண்டையை அரித்த விடயம் என்னவென்று மீராவும் அப்போது தான் உணர்ந்து கொண்டாள்.

“டாக்டர் சொல்றதை பார்த்தா குறைஞ்சது ரெண்டு மாசத்துக்கு என்னால ஆபீசுக்கு வர முடியாதுன்னு தோணுது. எனக்கு உங்க பயம் புரியுது. உங்களுக்கும் குடும்பம் இருக்கு. என் கூடவே நான் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”

“ரெண்டு மாதத்துக்கு எல்லாருக்குமே குறிப்பிட்டளவு பணம் நான் தந்து விடுகிறேன். நீங்கள் நீங்கள்.. வே..வேறு யாருடனானவது தொழில் செய்யலாம்.” கலங்கிய கண்களை ஆவேசமாக தேய்த்து விட்டுக்கொண்டவன் “நான் வந்த பிறகு மறுபடியும் என்னிடமே வந்து விடுவீர்கள் தானே?” என்று ஏக்கமாய் மெல்லக்கேட்டான்.

அவனுடைய கண்களில் கனவுகள் எல்லாம் கண்ணீராய் கரைவதை மீராவால் காணமுடிந்தது!

இல்லை.. அவள் அதற்கு விடமாட்டாள்!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொண்டாட்டம்.காம் -17

ashok-selvan-in-ar-rahman-790x474

நித்து ப்ளீஸ் அழாதம்மா..

காரை புயலென பிரதான வீதியை விட்டு குறுக்குவீதிகளிலெல்லாம் வேகமாக ஓடித்துத்திருப்பிக்கொண்டிருந்த மனோவின் இதயமும் படபடவென அடிக்க முகம் கல்லென இறுகிக்கிடந்தது. அருகே நித்யா விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது வேறு வலிக்க வைத்தது.

“வசீக்கு ஹைவேல ஆக்சிடென்ட் ஆகிடுச்சு!” இதை மட்டும் தான் அந்த முதிய பெண்மணியால் கூற முடிந்தது. பெரிய ஆக்சிடென்ட் கேஸ் என்பதால் அவர்களே நேராக “மருதான” அரசினர் வைத்தயசாலையில் கொண்டு போய் விட்டிருந்தனர். அங்கே இருக்கும் அவனது நண்பர்களிடம் இவனைப்பற்றி கூறி விரைந்து சென்று பார்க்க சொல்லிவிட்டுத்தான் அவன் காரை எடுத்ததே.

மீராவை நினைக்க நினைக்க அவனுக்கு நெஞ்சில் என்னமோ செய்தது. ஆக்சிடென்ட் என்ற சொல் கேட்டாலே மயக்கம் வருவது போல உணர்வேன் என்று சொல்வாள். பழைய சம்பவங்களின் பாதிப்பு! இந்த செய்தியை எப்படித்தாங்கியிருப்பாள்?

அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. அவனுக்கு எப்படிப்பிரார்த்திக்க வேண்டும் என்று கூடத்தெரியவில்லை.

எவ்வளவு ஆனந்தமாக ஆரம்பித்த நாள் இப்படி முடிந்து போய் விட்டதே!

அரச வைத்தியசாலை எனும் போது பார்வை நேரம் என்று ஒரு விதி உள்ளதல்லவா? ஒரு வழியாய் ஹாஸ்பிட்டலின் முன் வண்டியை நிறுத்தியபோது பார்வை நேரத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. செக்கியூரிட்டி அவனுக்கு மசிபவன் போல இல்லாதிருக்க வேறுவழியின்றி நண்பனை அழைத்தான்.

அவசரமாய் வெளியே வந்தவனுடன் வைத்தியர்களின் வழியை உபயோகித்து ஏறக்குறைய ஓடினர் மூவரும்.

என்னடா ரியாஸ் ஆச்சு? அவனுக்கு ஒண்ணும் இல்லல்ல..?

நித்யா முன்னால் ஓடுவதை கவனித்துவிட்டு மனோவிடம் குனிந்தான் ரியாஸ்.

“கொஞ்சம் கிரிட்டிகல் தாண்டா. நெறைய பிராக்ஷர்ஸ், ரைட் சைட்டா தான் கீழே விழுந்து அடிபட்டிருக்கான். அதுனால ரைட் சைட்ல மிடில் rib bone ஒண்ணு வெடிச்சிருக்கு. அப்புறம் ரைட் hand, ரைட் leg ரெண்டுலயும் பிராக்ஷர். உடம்பு பூரா ஸ்க்ராச்சஸ். தலையில மூணு தையல் போட்ருக்கு. நெறைய ப்ளாட் லாஸ் ஆயிருக்கு. அதைதான் இப்போ அட்டென்ட் பண்ணிட்டு இருக்காங்க. “

அவன் அடுக்கிக்கொண்டே போக எச்சில் விழுங்கினான் மனோ. ரொம்ப சீரியசாடா?

இல்லைன்னு தான் நான் நம்பறேன்.. நாளைக்கு தான் சொல்ல முடியும். ஆக்சிடெண்ட்ல தூக்கி வீசிருக்கறதால ஷாக்கே அதிகமா இருக்கும். அவனுக்கு ரொம்ப பெயினாவும் இருக்கும். இன்னும் கண் திறக்கல. நாளைக்கு கண் முழிச்சு பார்த்துடுவான்னு நினைக்கிறேன். நித்யாவை பார்க்கவே கஷ்டமாருக்கு. நீ பார்த்துக்க.

அவனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே ஓடியவன் நித்யாவை அணைத்துக்கொண்டு விம்மிக்கொண்டிருந்த சுபாப்பாட்டியை பிரித்தெடுத்து இருவரையும் முதலில் அமரவைத்தான்.

மீரா எங்கே பாட்டி?

“மீருவுக்கு எதுவும் சொல்லாம தான் இங்கே கூட்டிட்டு வந்தோம். அவனுக்கு ஆக்சிடன்ட்னு இங்கே வந்ததுக்கு அப்புறம் தான் சொன்னோம். ICU வழியா வசீயை பார்த்தவ அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டா. உடனே அவளையும் தூக்கிட்டு போய் குளுக்கோஸ் ஏத்தினாங்க. ஏதோ மருந்து கொடுத்து தூங்க வச்சிருக்காங்க. ஏழு மணி போல எழுந்துருவான்னு சொன்னாங்க.” அவர் அழுது கொண்டே பேசினார்.

அவரை அங்கேயே விட்டு விட்டு அவன் ஓட ரியாசும் தன் வேலைகளை வேறு யாரோ ஒரு டாக்டரிடம் கொடுத்து விட்டு இவனிடம் வந்திருந்தான். இருவருமாய் மீராவைப்போய் பார்த்தனர்.

முகமெல்லாம் வெளுத்து கண்மூடி படுத்திருந்த அவனுடைய மீராவைக்கண்டதும் நெஞ்சுக்குள் ஏதோ பிசைய அவளருகில் அமர்ந்து தலையை வருடித்தந்தான் அவன். ரியாசின் புருவங்கள் லேசாய் உயர்ந்தனவே தவிர எதுவும் சொல்லவில்லை.

மச்சி..அவங்க தூங்கட்டும்டா ..வா

மீண்டும் ICU நோக்கி நடந்தனர். தலையை கைகளில் தாங்கியபடி நித்யா அங்கே அமர்ந்திருக்க தவிப்பாய் ரியாசிடம் திரும்பினான் மனோ.

மச்சான். இந்த ஹாஸ்பிட்டல் ஓகேவா? சரியா பார்த்துப்பாங்களா? நாம வேணும்னா லங்கா ஹாஸ்பிட்டல், ஆசிரி இப்படி வேற எங்கயாவது கூட்டிட்டு போய்டலாம்டா.

“சும்மா இரு. இந்த மாதிரி கேசஸ் இங்கே இருக்கறது தான் பெட்டர். சேப். இந்த ஹாஸ்பிட்டல் ஒண்ணும் மோசமில்லை. அதோட அவனுக்கு பிராக்ஷர் தான் அதிகம். நாம நினைக்கற படியே அவன் பாடி மெடிசின்சை அக்செப்ட் பண்ணி ரீகவர் ஆக ஆரம்பிச்சா ஒரு டூ வீக்ஸ்ல நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம். அப்புறம் ஒரு த்ரீ மந்த்ஸ் ஆவது அவன் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். நான் நிலவன் எல்லாம் இங்கே இருக்கோமே. பார்த்துப்போம்டா”

இல்லடா.. ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்னா நாம கூடவே இருக்கலாமேன்னு தான்.

இங்கேயும் ரெண்டு பேர் இருக்கற போல நான் அர்ரேஞ் பண்றேன். டென்ஷனாகாதே.

பயமில்லையே..

இல்லைடா.. நீ தைரியமா இரு.

ஹ்ம்ம்…

ஆதியை அழைத்தவன் அங்கே நிச்சயதார்த்தம் எல்லாம் சரியாக முடிந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு நித்யாவுக்கு மாற்றுடையும் உணவும்  யாரிடமாவது கொடுத்து விடச்சொன்னான்.

அப்போதுதான் அவனும் குர்தாவிலேயே இருப்பது ஞாபகம் வந்தது. மண்டபத்தில் இருந்து நேரே இங்கல்லவா ஓடி வந்தார்கள்?

தகனக்கும் மாற்றுடைக்கு சொன்னவன் கொஞ்சம் யோசித்து நித்யாவுடைய இன்னொரு செட் உடையையும் எடுத்து வரச்சொன்னான். மீராவும் உடைமாற்றாமலே இருக்கிறாளே.

வசீயை பார்த்துக்கொள்ள ஆண் நர்ஸ் ஒருவர் கண்டிப்பாக தேவையே.. பயிற்சி பெற்ற நடுத்தர வயதிலான ஆண் ஒருவரை  ரியாசின் உதவியுடன் ஒப்பந்தம் செய்தவன் பிறகு தங்கையின் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

அங்கே அமர்ந்திருப்பதை தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?

மீரா விழித்தெழுந்து எப்படி ரியாக்ட் செய்வாள் என்பதிலேயே அவன் மனம் சுழன்று கொண்டிருந்தது.

ஒவ்வொரு செக்கனும் பேரோசையுடன் நகர்வதைப்போல நாழிகைகள் கண்முன்னே விடை பெற்றுப்போய்கொண்டிருந்தன.

மணி ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது.

மனோ… ரியாஸ் மெதுவாக தோளில் தட்டி அழைத்தான்.

என்ன என்பது போல் ஏறிட்டவனை  கண்ணாலேயே அழைத்துப்போனவன் மீராவின் அறைக்குள் கூட்டிப்போனான்.

எதையோ முணுமுணுத்தபடி கண்விழிக்காமலே புரண்டு கொண்டிருந்தாள் மீரா.

ஓடிபோய் அவள் அருகில் அமர்ந்த மனோவுக்கு அப்பாக்கு ஒண்ணுமில்ல, அது அப்பா இல்லை..அம்மா என்று முணுமுணுப்பது கேட்கவும் தவித்துப்போனான். பழைய சம்பவங்களை நினைத்துக்கொண்டிருக்கிறாள்.

பட்டென அவள் தோள்களை பிடித்து மீரா மீரா என்ற படி உலுக்கினான். சட்டென விழித்துக்கொண்டவள்  ஒரு நிமிஷம் குழப்பமாய் இருந்தாலும் மறுநிமிஷமே “வசீக்கு என்னாச்சு? அவனும் என்னை விட்டுட்டு போயிட்டானா?” என்று கேவ ஆரம்பித்தபடி எழுந்து ஓட முயன்றாள்.

வலுக்கட்டாயமாய் அவளைப்பிடித்து இழுத்து  அமர்த்தி மனோ கொஞ்சம் பெரிய சத்தத்தில் மீரா!!!  என்று அவளை அதட்டியதில் கண்ணீருடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

ரியாஸ் மூலமாக வசீயின் நிலையை கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுமாறு சொல்ல வைத்தவன் கொஞ்சம் ஆறுதல் மொழிகள் சொல்லி அவளின் கையை இறுகப்பற்றியபடி  வெளியே அழைத்து வந்தான்.

அவன் வெளியே வந்தபோது ராஜவேல், சித்ரா ஆதி, சக்தி எல்லாரும் அங்கே இருக்க எல்லோர் கண்களும் பற்றியிருந்த அவர்களின் கைகளிலேயே நிலைத்தது அவனுக்குப்புரிந்தது. கூட இருந்தவளுக்கோ அதெல்லாம் புரிந்திருக்க ஞாயமில்லை. சித்ரா மற்றும் நித்யாவை கண்டதும் மீண்டும் கேவியபடி அங்கே ஓடினாள்.

வசீயின் கேசைக்கையாண்ட டாக்டர்களிடம் பெரியவர்கள் பேசிவிட்டு திரும்பி வரும் போது நித்யா மீரா, மனோ மூவரும் உடை மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு ஹாஸ்பிட்டல் காண்டீனுக்கு அவர்களை அழைத்துப்போனார் ராஜவேல்

இரவு ரெண்டு பேர் தான் வசீ கூட தங்க முடியும். நர்ஸ் ஒழுங்கு பண்ணிட்டதால அவர் ஒருத்தர் கூட இருப்பார். மற்றது..

நான் இருக்கிறேன் என்று மனோ சொல்ல

நான் இருப்பேன் என்று மீராவும் நித்யாவும் சொல்ல சித்ரா அனைவரையும் கையர்த்தினார்.

மனோவுக்கும் நித்யாவுக்கும் இதுவரை நைட் ஸ்டே பண்ணின அனுபவமே இல்லை! இன்னும் வசீ கண் திறக்கவே இல்லை. இன்னிக்கு நைட் அனுபவமுள்ள ஒருத்தர் தான் நிக்கணும்.

நான் இருக்கேனே ஆண்ட்டி.. என்னால வீட்ல இருக்க முடியாது.

வேனாம்ம்மா. உனக்கும் செடேட்டிவ் கொடுத்திருக்காங்க. தவிர உனக்கும் அனுபவம் கிடையாது! சுபா பாட்டி மெடிசின்ஸ் எடுத்துக்கறவங்க அவங்களால முடியாது. இன்னிக்கு நைட் நான் வசீ கூட இருக்கேன். என்ன ராஜ்?

அதான் சரி.

ஆண்ட்டி..

சொன்னாக்கேக்கணும்மா.. நாளைக்கு காலைல நீங்க வந்துடுங்க.

ஆண்ட்டி ப்ளீஸ்!

“இன்னிக்கு ஆண்ட்டி வசீ கூட இருக்கட்டும்மா. சொன்னாக்கேளு! “ ராஜவேல் பேசவும் அவள் அடங்கிவிட்டாள்.

நித்யா  வீட்டுக்குப்போய் சித்ராவுக்கு தேவையாவனவற்றை எடுத்து வேலையாவிடம் கொடுத்து விடுவதென்று முடிவானது. வெறித்த பார்வையுடன் கண்கலங்க நின்ற மீராவைப்பார்க்க மனோவுக்கு பாவமாய் இருந்தது. அண்ணன் மேல் இனி நமக்கு உரிமை இல்லை என்று எண்ணுவாளோ?

மனோ…. அப்பாவின் குரலில் சட்டென்று திரும்பினான் அவன்.

நீ மீராவையும் பாட்டியையும் கூட்டிட்டு போய் பாட்டியோட மெடிசின்ஸ் மத்த மீராவோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வா. இன்னிக்கு அவ அங்கே தனியா இருக்க வேண்டாம். நித்யா கூட இருக்கட்டும்.

சரிப்பா..

இல்ல அங்கிள். என்று ஆரம்பித்தவளின் தலையில் கைவைத்து “பெரியவங்க சொன்னால் கேக்கணும்” என்று அவர் மென்மையாய் சொல்ல அடங்கிப்போனவள் “ அதுதான் சரி மீரு. நானும் அண்ணா கூட வர்றேன்,உங்க ரெண்டு பேர்  திங்க்சையும் எடுத்துட்டு எங்க வீட்டுக்கு போலாம்” என்று நித்யா சொல்லவும் தலையசைத்துவிட்டு அவனைத்தொடர்ந்தாள்.

கொண்டாட்டம்.காம் -16

images

“சாரி மீரா, நீ என்னை வெறுத்துடுவேன்ற பயத்துல தான் நான் உன் கிட்ட  பொய் சொன்னேன். கோபமா?” மனோ மறுமுனையில் கொஞ்சலாக கேட்டுக்கொண்டிருந்தான்.

“ அப்படியெல்லாம் இல்ல. ஆனாலும் நித்து என்கிட்டே இப்படி மறைச்சிருக்க கூடாது. உங்க வீட்டு ஹால்ல போட்டோஸ் பார்த்ததுமே..ஹையையோனு சொல்லிட்டேன். அவமானமா போச்சு! “

ஹா ஹா ஹா தட் அந்த குழந்தையே நான் தான் மொமென்ட் ஹா ஹா

மீராவுக்கும் உதடுகள் மெல்லிய சிரிப்பில் மலர்ந்தன.

ஹேய் வசீகரன் எங்க வீட்டு மாப்பிள்ளைன்னா நீ எனக்கு முறைப்பொண்ணு தெரியுமா?

அப்படியா?

என்ன அப்படியா? உனக்கு இன்னும் கோபம் போகலைல்ல?

அப்படியில்ல …

பார்த்தியா? நான் ஏன் அப்படி சொன்னேன்னு எல்லாமே உன்கிட்ட சொல்லிட்டேன். ஒரு மனுஷன் தப்பு பண்றதும் திருந்தறதும் சகஜம். இதை நீ ஏன் இவ்ளோ பெரிய விஷயமா தூக்கி பிடிச்சிட்டு இருக்க?

நான் எதுக்கு அதை பெரிய விஷயமா எடுத்துக்கணும். அது உங்க பர்சனல் ப்ராப்ளம்! இப்போ அது என் மைண்ட்லையே இல்ல! நம்புங்க

வேணாம்…என்னை டென்ஷன் பண்ணாத!

இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி டெண்ஷனாகிறீங்க!

நீ வழக்கம் போல என் கிட்ட பேசு! எவனோ பீட்சா கொடுக்க வந்தவனுக்கு பதில் சொல்ற போல ஒட்டாமலே பேசிட்டிருக்க..

ஹலோ…உங்க தங்கச்சிக்கு நான் தான் official மாமியார்! என்னை மிரட்டறது நல்லால்ல சொல்லிட்டேன்!

“உனக்கும் அவ தானே மாமியார்! உன் குடுமியும் அவ கைல தானே இருக்கும்? அப்புறம் எனக்கென்ன பயம்?” அவன் மறுமுனையில் உல்லாசமாய் சிரிக்க அந்த சிரிப்பு அவளிடம் ஏற்படுத்திய தாக்கத்தில் மெலிதாக உடல் சிலிர்த்தாள் மீரா.

எல்லாம் முடிவானதைப்போலவே பேசுகிறானே. இதுவரை இருவருமே எதையும் பகிர்ந்து கொள்ளவே இல்லையே.. அவளும் மயக்கத்தில் இருந்தவள் தான் ஆனால் இந்த வாரம் கிடைத்த  கண்திறப்புக்கள் அவளை விழிக்க வைத்திருந்தன.

இந்த கோகா கோலா போல நினைத்த நேரம் எல்லாம் பொங்கும் இவன் இயல்புக்கும் அவளுக்கும் உண்மையில் பொருந்தி வருமா? மனதில் ஆசை வருதல் மட்டும் வாழ்க்கைக்கு போதுமா? குளிர் அலைகள் அவளை ஊடுருவ மௌனம் சாதித்தாள் மீரா.

ஹலோ… ஹலோ..

சொல்லுங்க..

ஏன் பேசாமலே இருக்க..

…….

வேணாம்! போனை வச்சிடு.. நேர்ல பேசிக்கறேன்! குட்நைட்

மனுஷன் ஆசையா பேசவந்தா கடுப்பேத்திட்டு!!! இணைப்பை துண்டிக்கும் சில கணங்களில் அவன் எரிச்சலாய் முணுமுணுத்தது தெளிவாகவே இவள் காதுகளில் விழுந்தது!

தொலைபேசியை வைத்துவிட்டு ஆயாசமாய் சாய்வு நாற்காலியில் விழுந்தாள் மீரா. வாழ்க்கையில் அவள் முக்கியமான முடிவொன்றை செய்யவேண்டிய நேரம் வந்தது விட்டதாக அவள் நினைத்தாள்.

காதலின் துள்ளலோடு பறந்து திரியும் வசீயின் சந்தோஷத்தை  கண்டு ஆனந்தம் அடைந்தாலும் மனதின் ஓரத்தில் இனிமேல் நான் தனி என்ற எண்ணம் அவளுக்குள் வந்து விட்டிருந்தது. அவளுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வசீ திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று விட்டான். ஆகவே கூடிய விரைவிலேயே அவளது வாழ்க்கையிலும் ஒரு கரை வந்துவிடும் என்ற பயம் அவளுக்குள் புகுந்து வாட்டிக்கொண்டிருந்தது. இனிமேல் வாழ்க்கை முன்போல இனிய நதியாய் ஓடுமா?

மனோத்யன் மனதில் என்ன இருக்கிறது என்று புரியவே செய்கிறது. இன்றோ நாளையோ அவன் நேரடியாக கேட்கவும் செய்வான். அவளுக்கும் அவனை பிடிக்கிறது. ஆனால் அவனது இயல்பு?

அவசரகோலத்தில் எதையும் செய்வது பேசுவது என்றிருக்கும் அவனால் அவளோடு பொருந்தி வாழ முடியுமா?

அவள் பார்த்த வரை அவன் உயர்மட்ட குடும்ப இளைஞன் ஒருவனின் ஒட்டுமொத்த வார்ப்புத்தான். உணவகத்தொழில் எல்லாம் கீழ்மட்டத்தோர் செய்வது என்று ஒரு நினைவு இருப்பதாலேயே பெற்றோரை பிரிந்தான். ஆரம்பத்தில் தன் வேலையை அவன் அனுமதித்தாலும் அவனது நண்பர் குழுக்களின் விழாக்களில் விருந்தினராய் இல்லாமல் ஒரு பணியாளராய் அவள்  பணிபுரிவதை அவனால் ஏற்க முடியுமா? அவமானமாய் உணர்ந்தால்?  வேண்டாம் என்று கூறிவிட்டால்?

திருமணத்தின் பின் அவர்களிடையே வரும் பிரச்சனைகள் அவர்களையும் தாண்டி வசீ மற்றும் நித்யாவை நேரடியாக பாதிக்கும். தங்கைக்காக வசீ பேசவே செய்வான்! எவ்வளவு சிக்கல் இதில் ?

அவனை விட்டு விலகி விட்டால் எல்லா சிக்கலும் தீர்ந்து விடும். ஆனால் மணிக்கொரு முறையாவது அவனை நினைத்து விடும் மனதை என்ன செய்ய? அவனை நினைக்காமல் இன்னொருவனை இப்போதே ஏற்றுக்கொண்டு அவளால் வாழ்ந்து விட முடியுமா? என்றெல்லாம் குழம்பித்தவித்தவள் முடிவை ஆறப்போடலாமா என்று சிந்தித்தாள்.

எப்படியாவது அவளுக்காக காத்திராமல் வசீயை நித்யாவை திருமணம் செய்ய வைத்து விட வேண்டும்.

அதன் பின்னர் அவளது வாழ்க்கையை பற்றி நிதானமாக யோசிக்கலாம் ..

அதுதான் சரி..

முடிவெடுத்து விட்ட பின்னும் அந்த இரவு அவளுக்குள் ஏதோ ஒரு அளவில்லாத சோகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மனம் முழுக்க ஏதோ ஆகிவிட்டது போன்ற படபடப்பு.. தூக்கமே இன்றி அன்றிரவு வெகு நேரம் விழித்துக்கிடந்தாள் மீரா.

சனிக்கிழமை காலை அழகாக விடிந்திருந்தது.

முதல் தடவையாக வசீ வடிவமைத்த அலங்காரம் அரங்கேற்றம் பெறப்போகிறது என்பதாலோ என்னவோ அவன் மிக மிக உற்சாகமாக இருந்தான்.

நித்யாவை அந்தப்பக்கமே வரக்கூடாது என்று ப்ராமிஸ் வாங்கிக்கொண்டதால் ஆர்வம் இருந்தாலும் என்ன தான் செய்கிறான் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் வீட்டில் இருந்த வேலைகளை சித்ராவுக்கு உதவியாக செய்து கொண்டிருந்தாள் நித்யா.

மனோ காலையில் ஹாலுக்கு போனவன் தான் அதன் பின் கண்ணிலேயே தென்படவில்லை! அங்கே ஒழுங்கமைப்புக்களில் உதவிக்கொண்டிருக்கக்கூடும்!

பன்னிரண்டரை போல பொறுமை இழந்தவளாய் மீராவுக்கு அழைத்தாள் நித்யா. ஒரு ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டது!

எருமையே என்னடி பண்றீங்க எல்லாரும்?

ஹா ஹா ஹால்ல எல்லா வேலையும் முடிஞ்சது. நாங்க வீட்டுக்கு போய் ரெடியாகிட்டு ஹாலுக்கு வர்றோம்! நீயும் சீக்கிரம் ரெடியாகி வந்தது சேர்!

வர்றேன்..வசீ எங்க?

அவனுக்கு யாரோ கால் பண்ணாங்க நித்து. போயிட்டு சரியான டைம்க்கு ஹாலுக்கே வந்துர்றேன்னு சொல்லிட்டு போனான்.

ஏய் அவனும் மனோவும் மீட்டினாங்களா? மனோ கிட்ட கேட்டா ஒரு மார்க்கமா சிரிக்கிறானே தவிர ஒண்ணும் சொல்ல மாட்றான்!

ஹா ஹா அதையேன் கேக்கற!! நீ தான் கட்டப்பொம்மனா? நீ தான் ஜாக்சன் துரையான்னு ஸ்டார்ட் பண்ணி அப்புறம் பிக்கப் ஆயிட்டாங்க! வசீ தனக்கு சீனியர் உங்கண்ணான்னு சொன்னான்.  எனக்கு கலாய்க்க பார்ட்னர் இல்லையா? களத்துல இறங்கல.. நீ வா நாம கச்சேரியை ஆரம்பிக்கலாம்!

ஹி ஹி அதை விட எனக்கு வேறென்ன வேலை! நீ சீக்ரம் ரெடியாகி வா.

மனோவும் வசீயும் எப்படிப்பெசியிருப்பார்கள் என்ற கற்பனையே சிரிப்பை வரவழைக்க ஏற்கனவே தயாராய் வைத்திருந்த  கொப்பர் கலர் லெஹெங்காவை அணிந்து  வழக்கத்தை விட அதிகமாக பார்த்துப்பார்த்து அலங்காரம் செய்து கொண்டு அவள் ஹாலுக்கு போன போது அங்கே மீரா ஏற்கனவே அங்கே வந்திருந்தாள்.

நித்யா வீட்டு விழா என்பதனால் வழக்கமான நீலத்தை தவிர்த்து சந்தன நிறத்தில் லேஸ் சோளி அணிந்திருந்தாள் அவள். சாக்லேட் குர்தாவோடு அவள் அருகில் ஏதோ பேசிக்கொண்டிருந்த மனோவை கண்டதும் அவளுக்கு குபீர் சிரிப்பு.

இந்த மனோ அண்ணா இப்படியொரு ஜொள் மன்னனாக மாறுவான் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை! ஆனால் மீராவுக்கு அவன் இன்னும் எதையும் வெளிப்படுத்தாத நிலையில் கிண்டல் செய்யக்கூடாது என்று எண்ணிக்கொண்டு அவர்களை குழப்பாமல் மெல்ல ஹாலுக்குள் நுழைந்தாள்.

எதிரே விரிந்த காட்சியில் கண்கள் நாலாபுறமும் சுற்றிச்சுழல அந்தக்கணமே ஓடிச்சென்று வசீயின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல அவளுக்குள் பூதாகரமான ஏக்கம் தோன்றியது!

ஒரு ரோஜாத்தோட்டத்தையே அமைத்து வைத்திருந்தான் அவன்!

மணமக்களுக்கு ஒதுக்கிய இடம் ஏதோ ஒரு ரோஜாப்பந்தலுக்கு கீழே அமைத்தது போல அவ்வளவு தத்ரூபமாக இருக்க  யன்னல்கள் விளக்குகளில் எல்லாம் தொங்கும் தோட்டம் போல கொடி ரோஜா அலங்காரம் இலையும் கொடியுமாய் பூத்திருக்க அந்த ஹாலே ஒரு ரம்யமான வண்ணத்தில் இருந்தது. மிகவும் சிம்பிளான ஆனால் இயற்கையின் வடிவத்திலேயே இப்படி ஒரு அலங்காரத்தை அவள் இன்று தான் பார்க்கிறாள்!

இத்தனையும் அவளுக்காகத்தானே!!

பாரேன் நித்து!! இந்த சுறாவுக்குள்ளேயும் இப்படியொருத்தன் ஒளிஞ்சிட்டு இருந்துருக்கான் பார்!!! நமக்கு தெரியாம போய்டுச்சே!!! த்சோ த்சோ!!! மீராவின் குரல் குறும்பாக காதருகில் ஒலித்தது.

ஏய்!!! கொலப்பண்ணிருவேன் ராஸ்கல்! என் ஆளையே கலாய்க்கிறியா? ஒழுங்கா ஓடிப்போயிரு!!!

அவ்வ்வ்… கட்சி மாறிட்டியா?!!!  எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் உங்களை நாம் கலாய்ச்சிடுவோமே!!!

கன்றாவியா இருக்கு!!! நித்யாவுக்கு ஒரே சிரிப்பு!

ஒகே வேணாம்… இது எப்படியிருக்கு? சுறாவும் சுள்ளானும் சேர்ந்தா மொக்கைடா!!!  அபிநயித்துக்காட்டி விட்டு அவள் ஓடிவிட

செத்தடி நீ!!!!  என்று பல்லைக்கடித்தாள் நித்யா.

“ஹா ஹா ஹா” சிரிக்கும் திருவுருவாக ஓடிப்போனவளின் மேலேயே கண்களை பதித்தபடி அங்கே வந்து நின்ற மனோவின் மேல் அவள் கோபம் பாய்ந்தது!

டேய் அண்ணா! பார்த்து!!!நீ விடற ஜொள் மழைல இந்த ஹாலே மூழ்கிடபோகுது!

ஹ்ம்ம்… உனக்கு புரிஞ்சு என்ன ஆகப்போகுது? புரிஞ்சுக்க மாட்றாளேடி? நீ கொஞ்சம் ஹெல்ப்பேன் ?

நானே வசீ இன்னும் வரலைன்னு டென்ஷனா இருக்கேன்! வேணாம்!!!

அவன் தானே! மூணரைக்கெல்லாம் இங்கே இருப்பான்!

மனோவின் டோனே அவர்களுக்கிடையில் உருவாகியிருந்த நட்புணர்வை சொல்ல சந்தோஷமாய்  அன்றைய நிகழ்வை ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தாள் நித்யா.

விழாவிற்கு வந்த இளவட்டங்களை அப்படியே கவர்ந்திழுத்தது வலப்பக்கமாக குட்டி ஸ்டேஜ் போடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த போட்டோ பூத்! அதில் வைக்கப்பட்டிருந்த கார்டுகளில் வழக்கமான ஆங்கில வாசகங்களுக்கு பதிலாக வைரலான தமிழ் வசனங்கள் எழுதப்பட்டிருக்க குபீர் சிரிப்புடன் இளைஞர் கூட்டம் அந்த கார்டுகளை உயரப்பிடித்தபடி போட்டோ எடுக்க முண்டியடித்தது! இந்த ஐடியாவும் வசீயுடையது தான். ஆனால் வசனங்களை தேடிப்பிடித்தது மொத்த WKC குழுவும் தான்!

“சூப் பாய்! “

“நான் உன்னை விரும்ப‌ல‌… உன் மேல‌ ஆசைப்ப‌ட‌ல‌… நீ அழ‌காய் இருக்கிறாய் என்று நினைக்க‌ல‌… ஆனால் இது எல்லாம் ந‌ட‌ந்துடுமோ என்று ப‌ய‌மா இருக்கு!”

“பெற்றோமக்ஸ்  லைட்டே தான் வேணுமா?”

“ப்ரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு!”

“என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?”

இந்த வசனங்களை ஆளாளுக்கு தமக்கு பொருத்தமாக தூக்கிப்பிடித்திருக்க அங்கே இருந்த காமராமான் கிளிக்கி சுட சுட பிரிண்ட் போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

 

இன்னும் விழா ஆரம்பித்திருக்காத நிலையில் மேடையில் சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு மற்றவர்கள் நிற்க திடீரென அந்தப்பக்கமிருந்து வந்த மனோ நித்யாவையும் மீராவையும் பிடித்து இழுத்துக்கொண்டு மேடையேறி விட்டான்!

நித்யாவை நடுவில் விட்டுவிட்டு அவளுக்கு வலப்புறம் நின்றுகொண்ட மனோ “காதுமா ஆர் யூ ஒகே பேபி?” என்ற போர்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு நித்யாவைத்தாண்டி எக்கச்சக்கம் காதலுடன் மீராவை எட்டிப்பார்க்க அவள் குறும்புச்சிரிப்புடன் “டேய் ரெட் டீஷர்ட்!! உன்னைத்தாண்டா!” என்ற நயன்தாரா டயலாக் எழுதிய போர்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்க இவர்கள் இருவரின் நடுவில் மாட்டிக்கொண்டு முழிப்பவள் போன்ற முகபாவத்துடன் “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?” போர்டை பிடித்துக்கொண்டிருந்தாள் நித்யா! செம குறும்பான புகைப்படமாய் அது சுடச்சுடகையில் வர ரசித்து சிரித்தாலும் இன்னும் வந்து சேராத வசீயிடம் அவளுக்கு மெல்லிய கோபம் வந்தது!

அவன் இருந்திருந்தால் அவனோடு ஒரு புகைப்படம் இப்படி எடுத்திருக்கலாம் இல்லையா? மொபைலையும் ஆன்சர் பண்ணாமல் என்ன செய்கிறான்? என் வீட்டு விழாவுக்கு வராமல் இருந்தால் அப்பா அம்மா அண்ணா எல்லாம் என்ன நினைத்துக்கொள்வார்கள்?

ஆனால் நேரம் செல்ல செல்ல விழாப்ப்பரபரப்பு அவளையும் தொற்றிக்கொண்டு விட்டது.

சக்தியை மேடைக்கு அழைத்து வந்தது, நிச்சயம், பிறகு மாலை மாற்றி , கேக் வெட்டி தம்பதிகள் ரோஜாப்பந்தலின் கீழ நிற்க மக்கள் ஒவ்வொருவராக சென்று அவர்களை வாழ்த்தி விட்டு உணவுக்கான புபேயில் இணைந்து கொள்ள அப்பாவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களை கூடவே இருந்து கவனிக்க வேண்டிய கடமை வீட்டுப்பெண்ணாக அவளுக்கு இருந்ததே. WKC யின் ஒழுங்கமைப்பில் ஒவ்வொன்றும் தவறாமல் புதுமையாய் இனிமையாய் நடைபெற விழா இனிதே நிறைவுறும் தருணத்தை வந்தடைந்தது.  அப்பாவின் நண்பர் குடும்பம் ஒன்றை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பியபோது தான் வசி இன்னும் வந்து சேரவில்லை என்று அவளுக்கு ஞாபகம் வந்தது. கண்ணீர் இதோ வந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. என் வீட்டு விழாவுக்கு முன்னுரிமை கொடுத்து வர வேண்டும் என்று அவனுக்கு தோன்றவே இல்லையா?

அவனோடு இனிமேல் பேசவே போவதில்லை பொங்கி வரும் கண்ணீரை அவள் ஆவேசமாகத்துடைத்தபோது “நித்தும்மா மாப்பிள்ளை எங்கே?” என்று அப்பா அவளருகில் வந்து மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்தக்குரலில் விம்மல் வெளியில் வந்துவிட “அவர் வரவே இல்லப்பா “ என்று அழுகையோடு உரைத்துவிட்டு அவர் பதில் சொல்ல முன்னே வேகமாய் ரெஸ்ட் ரூம் தேடி ஓடினாள் நித்யா.

தூரத்தே அவளைக்கண்டுவிட்டு மணமக்களோடு நின்று கொண்டிருந்த மனோ அவளை நோக்கி வருவது கடைக்கண்ணில் தெரிந்தது. இருந்தும் அவள் நிற்கவில்லை!

நித்து நித்து…

கண்களை துடைத்து தன்னை சமப்படுத்திக்கொண்டு வெளியே வந்தவள் கேள்வியோடு நின்ற மனோவை ஏறிட்டாள்

அழாத லூசு.. அவனுக்கு கண்டிப்பா ஏதும் சீரியசான வேலை வந்து மாட்டிட்டு இருப்பான். அதுக்குப்போய் அழுது ..ச்சீ ச்சீ என்ன இது? சின்னப்பிள்ளையா நீ?

இல்ல மனோண்ணா.. நேத்துல இருந்து என்னை பார்க்கவே விடாம எல்லாம் பண்ணிட்டு இன்னிக்கு பங்ஷனுக்கு வராம இருந்துட்டார். பார்த்தியா?

எங்கே போனான்னு கேட்டியா?

இல்லை.. மீரா மூணரைக்கே வந்துடுவார்னு சொல்லவும் நான் ஒண்ணும் கேக்கல..

சரி மீரா கிட்ட கேக்கறேன். என்ற படி தொலைபேசியை எடுத்து அவளை அழைத்தவனின் நெற்றி சுருங்கியது. அவளும் ஆன்சர் செய்யவில்லை.

எங்கே அவ? யோசனையோடு

எதிரில் கையில் வயரோடு நடந்து போன WKC பையனொருவனை நிறுத்தி மீராவை பார்த்தால் மனோ அழைப்பதாக கூறச்சொன்னான் அவன்.

அண்ணா.. மீரா இல்லையே.. அப்போவே போயிட்டாங்களே!

என்னது? எப்போ?

ஒரு வன் ஹவர் இருக்கும்!

எங்கே போனான்னு தெரியுமா?

இல்லண்ணா. திடீர்னு போன் வந்துது.. பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாங்க.

சரி நீ போ.. என்றவனின் உதடுகள் something wrong என்று முணுமுணுத்தன.

அதிர்ந்து நின்ற நித்யாவை உலுக்கி “வசீ வீட்ல வேற யாரோடவாவது நம்பர் உன்கிட்ட இருக்கா ? இருந்தா சீக்கிரம் எடு” என்று அவசரப்படுத்தினான் மனோ.

கொண்டாட்டம் .காம்- 15

5c2d58a51483c27ced134689473c1e73

வெள்ளி மாலை

அழைப்பு மணியை அழுத்திவிட்டு உடலெங்கும் ஓடும் பதட்ட அலைகளை சமன் செய்ய முயன்றபடி காலடியோசைக்கு காதுகளை கொடுத்துக்கொண்டு  உதடு கடித்து நின்றான் மனோ!

மீராவின் பேச்சும், கிட்டத்தட்ட எல்லா உறவினர் வீட்டுக்கும் நேரில் போனதும் அவனுக்கு ஒரு கண்திறப்பாகவே அமைந்திருந்தது. உறவினர் நடுவில் அவனுடைய செயலால் அவன் குடும்பத்துக்கு எவ்வளவு தலையிறக்கம்? முன்பெல்லாம் அப்பா பேசினாலே புன்னகையோடு கேட்டு மறுபேச்சுப்பேசாதவர்கள் “குடும்பத்தில் எல்லாம் சரியாகிவிட்டதா?”  என்று மறைமுகமாய் பரிதாபம் காட்டி பேசும் படி நானே வைத்துவிட்டேனே என்பது அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது.

அவர்களுடைய பக்கத்து உறவினர்கள் பேசாமல் இருந்தாலும் அண்ணியின் உறவினர்களுக்கு அவன் பேசுபொருளாய்த்தானே ஆவான். தேவையே இல்லாமல் அண்ணன் தலைகுனிய வேண்டுமா?

காலம் கடக்க முன்னர் மனோ அதை சரி செய்தே ஆகவேண்டும்! என்று மனம் முரண்ட ஆரம்பித்து விட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியக்காரணம் நாளை வீட்டில் விசேஷம், வீட்டினர் எல்லாம் குதூகலமாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார் என்ற எண்ணமே அவனை கொத்திக்கொண்டிருந்தது. அதற்கு மேல் அவனால் தனியாக அங்கே கிடக்க முடியவில்லை. பிடிவாதமாவது மண்ணாவது. மன்னிக்கமுடியாத தவறு ஒன்றும் உலகத்தில் உள்ளதா? அதுவும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில்! நினைத்த மாத்திரத்தில் கிளம்பி வந்துவிட்டவனுக்கு இப்போதுதான் பக் பக்கென்றது…

அப்பா போ என்று சொல்லிவிடுவாரோ?

சோம்பலாய் கிளிக்கித்திறந்த கதவு அன்னை சித்ரா முகத்தில் பெரும் ஆச்சர்யத்தையும் கண்ணீரையும் காண்பித்தபடி விரியத்திறந்தது!

அன்னையோடு அடிக்கடி பேசுபவனே ஆயினும் அவன் மீண்டும் வீட்டுக்கு வரும் தினம் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்காததினால் சித்ராவின் கண்கள் மழை பொழிய ஆரம்பிக்க ஓரெட்டில் அன்னையை நெருங்கி அணைத்துக்கொண்டு “என்னை உள்ளே கூப்பிட மாட்ட்டீங்களாம்மா?” என்றான் மனோ ஏக்கமாக

“இது உன் வீடு டா! “என்று அதட்டியபடி அவனை விடுவித்தவர் கைகளை மட்டும் விடாமல் உள்ளே அழைத்துச்சென்றார்.

வழக்கம் போல உள்ளே நுழைந்ததுமே ஒருபக்கச்சுவரை கிட்டத்தட்ட அடைத்தபடி அவனை வரவேற்றது அவர்களுடைய பிரமாண்டமான குடும்பப்படம்!

நித்யாவின் பட்டமளிப்பு விழா அன்று மாலை எடுத்தது இந்த புகைப்படம். வெளியே இருந்த புல்லில் பெஞ்ச் போட்டு அப்பா அம்மா அமர்ந்திருக்க ஆதியும் நித்யாவும் பெஞ்சுக்கு பின்னே நின்று சிரிக்க இவன் மட்டும் பெற்றோருக்கு முன்னே புல்லில் படுத்த வாக்கில் ஒருக்களித்திருந்து சிரித்துக்கொண்டிருந்தான்.

ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்து வீடு வந்த உணர்வில் ஹோவென உணர்ச்சிகள் அடைத்துக்கொண்டு வர பிரிவு இடைவெளியே இன்றி சகலத்தையும் அடைத்து நிரப்ப வேண்டும் போல் மனதுக்குள் வேகம் பிறந்தது.

“ஆதி ரொம்ப சந்தோஷப்படுவான் நீ வந்தது தெரிஞ்சா!” பேசியபடியே சித்ரா போனை நோக்கிப்போக..

“சித்து நீ கொடுத்த லிஸ்டில் சந்தனம் மட்டும் உதயாஸ்ல இல்லையாம். நாம வேலையாவை அனுப்பி வசந்தத்துல வாங்கிக்கலாம்” என்றபடி கதவைத்திறந்து கொண்டு  உள்ளே வந்த ராஜவேல் அவனைக்கண்டதும் ஒரு கணம் அப்படியே நின்று விட்டார். பார்வை மட்டும் லேசாய் சுருங்கியிருந்தது.

அப்பா என்று அவன் உதடு பிரித்து அழைக்க ஆரம்பிக்க ராஜவேலோ லேசாக நெற்றியை பிடித்தபடி “ எனக்கு தலை வலிக்கிற போல இருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்” என்றபடி அறையை நோக்கித்திரும்ப மனோத்யன் முகம் விழுந்து விட்டது.

சித்ரா தவிப்புடன் “ராஜு.. மனோங்க.. ஒண்ணுமே சொல்லாம போறீங்களே” என்று கணவரை அழைத்தார்.

நான் என்ன பேச வேண்டும் என்பது போல திரும்பி மனோவையே ஊடுருவிப்பார்த்தவரின் பார்வையை தாங்க இயலாமல் லேசாக கண்களில் நீர் திரையிட்டுக்கொள்ள நிமிர்ந்தவனின் காதில் ஈயம் பாய்ச்சியது போல மாடியில் இருந்து நித்யாவின் குரல் கேட்டது!

“நான் கடுப்பாயிருவேண்டி!!! இப்போ என்ன உன் லெக்சரர் என்னோட அண்ணா..சரி. அதுக்காக நீ எதுக்கு மூஞ்சியை உர்ர்ர்ர் னு தூக்கி வச்சிருக்க? நான் பாட்டுக்கு லூசு போல பேசிட்டிருக்கேன். அவன் என்ன கடிச்சா தின்னுருவான் உன்னை!” என்று மேலே  அவள் படபடக்க இங்கே இவன் இதயம் ஒருகணம் நின்றே போனது

ஒரே நேரத்தில் இருமுனைத்தாக்குதலை எப்படி அவன் சமாளிக்க முடியும்? இந்த திருப்பத்தை எதிர்பார்க்காதவனாய் திகைத்தாலும் முதலில் கண்ணெதிரே நின்ற அப்பாவிடம் கவனத்தை செலுத்தி சாரிப்பா என்று முணுமுணுத்தான்.

அவனை கொஞ்சமும் கவனிக்காதவராய் சித்ராவிடம் திரும்பியவர் “ வான்னு கூப்பிடணும்னு சொல்றியா? இங்கே யாரும் அவனை போகச்சொல்லல. அவனே தான் கிளம்பிப்போனான். இப்போவும் அவனே தான் வந்திருக்கான். அவனுக்கு ஞாபகம் இல்லைன்னாலும் இதுவும் அவன் வீடுதான். அவன் பேசினது எதையுமே என்னால மறக்க முடியும்னு தோணல. நானும் மனுஷன் தானே.. ” அவர் குரல் உடையவும்

அப்பா என்றபடி மனோ ஒரு அடி எடுத்துவைக்க

அதற்குள் அவர் அறையை நோக்கி திரும்பியிருந்தார்.

அடிபட்ட குழந்தையாய் அவர் போன திசையையே பார்த்தபடி நின்றிருந்தவனின் கையை அழுத்திய சித்ரா.. “ அப்பா சரியாயிடுவார்டா. மனசை குழப்பிக்காம  நீ உள்ளே போ..” என்று கலக்கத்தை காண்பிக்காமல் அவனை அழைத்தவர் மாடியை ஒருகணம் பார்த்து பட்டென முகபாவத்தை மாற்றிக்கொண்டு “ மீரும்மா.. அப்படியே ஓடிராதே..நான் குழல் புட்டு எடுத்து வச்சேன் உனக்கு” என்றபடி கிச்சனுக்குள் விரைந்தார்.

முகத்தில் தப்பான தருணத்தில் வந்துவிட்டோம் என்ற சங்கடத்தை முகத்தில் அப்பட்டமாய் காண்பித்தபடி படிகளில் நித்யாவோடு இறங்கி  வந்த மீரா அவர் தலை மறைந்ததுமே அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பதென்று தெரியவில்லை என்பார்களே அது இதுதான். சங்கடமாய் அவள் கண்களை சந்தித்தவன் பின்னாலேயே நித்யா அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தபடி வருவதைக்கண்டதும் அவசரமாய் முகபாவத்தை மாற்றிக்கொண்டு “ஹாய்” என்றான்.

ஆச்சரயப்பார்வையை அவனை நோக்கி வீசினாலும் அவனை பின்பற்றி “ஒரு பட்டுக்கொள்ளாத ஹாய் சார்” உடன் மீராவும் தான் கொண்டுவந்த கைப்பையை எடுக்க அதற்குள் எவர்சில்வர் தூக்குவாளிகளோடு வந்திருந்த சித்ரா வேலுவை அழைத்து அதை காரில் வைக்கும் படி சொன்னாள்.

எதுக்கு ஆண்ட்டி இவ்வளவும்?

நீங்க மூணு பேர் இருக்கீங்களேம்மா.. எல்லார்க்கும் சேர்த்துத்தான் செஞ்சேன்

“ஆஹா.. இன்னிக்கு என் சமையலை சாப்பிடற கொடுமைல இருந்து எல்லாரும் தப்பிச்சிட்டாங்க” என்று மீரா சிரிக்க நித்யா உதட்டைக்கடித்தபடி அவனையும் அன்னையையும் பார்க்க மனோ குழப்பமாக இருவரையும் பார்த்து நின்றான்.

முதல் முறையாக வீட்டுக்கு வந்தவள் போல இல்லையே அம்மா இவளைக்கவனிக்கும் விதம்…மனம் பல யோசனைக்கொடுகளை வரைந்தது.

அடப்போமா ..எங்க வீட்டுல இருக்கறதுக்கு வெறும் பேக்கிங் மட்டும் தான் தெரியும். சமையல் கத்துக்கோடின்னு நான் கத்திட்டே இருக்கேன். அவ எங்கே கேக்கறா! நீ எவ்வளவு நல்ல பொண்ணு!

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சைம்மா.. ரொம்ப அவளுக்கு சப்போர்ட் பண்ணாதே  என்று போலிக்கோபமாய் நித்யா ஆரம்பிக்க வேலு காரை எடுத்து வரும் ஓசை கேட்டது.

அத்தோடு நிறுத்திக்கொண்டு இவளை விட்டுட்டு வரேன் என்று நித்யா கிளம்ப மீரா இவனிடமும் சம்பிரதாயமாய் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

கேள்வியாய்  தாயை ஏறிட்டவனை சங்கடமாய் பார்த்த சித்ரா “நித்து இப்படி மீராவோட அண்ணா, பேரு வசீகரன். எனக்கு புடிச்சிருக்கு போல இருக்கு. இந்த பையன் உங்களுக்கு ஒகேவாப்பான்னு வந்து கேட்டா மனோ..நல்லா விசாரிச்சோம். தங்கமான பையன். என்ன இப்போதான் பிசினஸ் ஆரம்பிக்கிறான்.  நித்யாவோட சொத்தே அவங்களுக்கு போதுமே அப்புறம் எதுக்கு பணத்தை பார்க்கணும்னு நாங்க ஒகே சொல்லிட்டோம்.” என்று தெரிவித்தார்

முகம் இறுகிப்போய் நின்றவன் “ வசீகரன் என் ஜூனியர் தான்” என்று மட்டும் சொன்னான்.

நித்து தான் அவளே உன்கிட்ட சொல்லணும்னு சொல்லிட்டாப்பா. அதனால தான் உனக்கு யாரும் சொல்லலை.

ஹ்ம்ம்… அவள் ஏன் சொல்லவில்லை என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. தலைக்குள் சுள்ளேன்று பரவிய வேதனையை மறைத்தபடி லேசாய் புன்னகைக்க முயன்றான் அவன்.

இந்த பொண்ணு கூட என்னோட ஸ்டூடன்ட் மா.

தெரியும் டா.. இன்னிக்கு வீட்டுக்கு வரும்வரை அவளுக்கு விஷயம் தெரியாது. ஹால்ல உன் போட்டோவை பார்த்து அலறிட்டா! ஹா ஹா ரொம்ப நல்ல பொண்ணு.

நீ ஏன் இப்போ அவளுக்கு தேவையில்லாம சர்டிபிகேட் கொடுக்கற?

தாயில்லா பொண்ணு! இன்னிக்கு வந்ததுமே என்னை தேடிட்டு வந்தது நிஜமாவே அவங்க வீட்டுக்கு நித்துவை கொடுக்க எங்களுக்கு சம்மதமான்னு கேட்டா. மாப்பிள்ளைக்கு வேற யாரும் இல்லாததினால அவதானாம் இதெல்லாம் சரியா தெரிஞ்சுக்கணுமாம்! நீ பண்ணுவியா இப்படி?

சரி சரி அவளை விடு. ஒரு மனுஷன் ஒரு மாசத்துக்கு மேல சாப்பாடுன்றதையே மறந்து போய் காய்ஞ்சு வர்றேன். எனக்கு ஒரு வாய் கொடுக்கணும்னு உனக்கு தோணுதா? ஊருக்கெல்லாம் பார்சல் பண்ணிட்டு இருக்க!

அவன் நினைத்தபடியே..

ஹய்யோ… நீ பாக்கை வச்சிட்டு வா..நான் எடுத்துவைக்கிறேன் என்றபடி அவர் கிட்சனுக்குள்ளே வேகமாய்  மறைந்துவிட “மீரா இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வாள்?” என்று தீவிரமாய் சிந்தித்தபடி மாடிப்படிகளை ஏறிக்கடந்தான் மனோத்யன்.

குளித்து உடைமாற்றி மீண்டும் கீழே வந்து டைனிங் டேபிளில் அன்னையோடு அமர்ந்து சூடான உணவை ஒரு பிடி பிடிக்கையில் நித்யா திரும்பி வந்தாள்.

உலகம் திரும்பி சுத்துதே! அதுக்குள்ளே திருந்திட்டியா நீ? என்று கேட்டபடி அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எனக்குத்தெரியாமல் மாப்பிள்ளை எல்லாம் பார்த்து டிசைட் பண்ணிருக்க. வாழ்த்துக்கள்

ம….மனோ சாரி. நீ வீட்டுக்கு வருவேன்னு எனக்குத்தெரியாது. நாளை பங்ஷன்ல மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சேன்.

அதாவது டிசிஷன் எடுத்தப்புறம் ஜஸ்ட் ஒரு இன்போர்மேஷனா எனக்கு சொல்லனும்னு இருந்த..அப்படித்தானே?

நீ மட்டும் என்கிட்டே கேட்டுட்டா டிசைட் பண்ணினாய்? வேணாம்னு எவ்ளோ தடவை சொன்னேன்! கேட்டியா?

நான் டிசைட் பண்ணிட்டேன்னு உன் கிட்ட எப்பயாவது சொன்னேனா? நீ வந்து நிறுத்துன்னு கத்துன? பிக்ஸ் ஆகாத கல்யாணத்தை நான் எப்படி நிறுத்த?

மனோண்ணா!!!! என்ன சொல்ற நீ?    நிஜமாவா தம்பி? நித்யாவும் சித்ராவும் முகமெல்லாம் சிரிப்புடன் அவனை ஆர்வமாய் கேட்க பட்டென்று சிரித்துவிட்டான் அவன்.

ஹ்ம்ம்.. அவர் என்கிட்டே கேட்டார் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி. உடனே மூஞ்சில அடிச்ச போல இல்லைன்னு சொல்லக்கூடாதுல்ல. அதோட அப்பா கூட கொஞ்சம் கோபம் வேற. அவர் காண்டாகட்டும்னு யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன். அந்த கதை தான் இந்த லட்சணத்துல உங்க காதுக்கு வந்தது. நீங்களும் நம்பிட்டீங்க. அப்பா காண்டாகட்டும்னு நானும் கிளியர் பண்ணாம விட்டேன்!

மனோ… தப்பு..பிடிக்கலன்னா பட்டுன்னு சொல்லிடணும். அந்தப்பொண்ணு வேண்டாத கற்பனையை வளர்த்தா அப்புறம் அது நமக்குத்தான் பாவம்டா!

சொல்லிட்டேன்மா.. அவர் வெளிநாட்டுக்கு போயிட்டு இன்னிக்கு தான் வந்திருந்தார். நேரே போய் பார்த்து சொல்லிட்டே வந்துட்டேன்.

சாரி மனோ… நித்யா அவன் முகத்தையே பார்க்க சிரித்து விட்டவன்

உன் ஆளு என் ஜூனியர் தான். கேள்விப்பட்டவரை நல்ல பையன் தான். எதுக்கும் நாளை பார்த்துட்டு சொல்றேன் என்று சிரித்தபடி அவள் மூக்கைப்பிடித்து திருகினான்.

வலிக்கிது விட்றா!!!!  அவன் சிரித்தபடியே கையை  எடுக்க

தாங்க்ஸ் என்றாள் அவள் முகமெல்லாம் சிரிப்புடன்!

அதெல்லாம் செல்லாது! ஞாபகம் வச்சுக்கோ! உன்கிட்ட நான் ஏதாவது கண்டிப்பா கேட்பேன்! மீராவின் நினைவில் வந்த சிரிப்பில் அவன் கன்னம் குழிந்தது!

ஹேய் ஹேய்!!! எனக்கு புரிஞ்சுடுச்சு!!! Yesssss என்று உற்சாகமாய் கத்திய நித்யா  அவனைப்பார்த்து கண்சிமிட்டினாள்.

எனக்கும் சொல்லேண்டி!!! ஆர்வமாய் பரபரத்த சித்ராவிடம் “ மை டியர் டியூப்லைட் மம்மியே! கொஞ்ச நாள் சஸ்பென்ஸ் ஓடவே சுத்துங்க!”

போடி நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.எனக்கும் புரிஞ்சிடிச்சு!!!  என்றபடிஅவர் இருவரையும் முறைத்தார்

என்ன புரிஞ்சது? கொஞ்சம் சொல்லேன்மா?

அதெல்லாம் நான் உங்க கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல!!

ஓஹோ… மனோவும் நித்யாவும் ஹைபை கொடுத்து சிரிக்கவும் சித்ரா இருவரையும் மாறி மாறிப்பார்த்தவர்  பிறகு நிதானமாய் பாத்திரங்களை எடுக்க ஆரம்பித்தார்.

“கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்துதான் ஆகணும்”

 

 

 

 

கொண்டாட்டம்.காம்- 13

ashok-selvan-bindu-madhavi

பீப் பீப் (இது அந்த பீப் இல்லை காலிங் பெல் பீப்!)

சுற்றிலும் சின்னதாய் பசிய புற்களுடன் நிலப்பரப்பைக்கொண்டு பெருமளவுக்கு வீடொன்று அடைத்து நின்ற பன்னிரண்டாம் இலக்க வீட்டின் முன் காலிங் பெல்லை அழுத்தி விட்டுக்காத்திருந்தான் மனோத்யன். அருகிலேயே அவன் நண்பன் பிரகலாதனும்!

மனோ இன்னும் எவ்வளவு வீடுடா இருக்கு?

பாக்கட்டில் இருந்த லிஸ்டை பிரித்துப்பார்த்துவிட்டு “இன்னும் பன்னிரண்டு வீடு இருக்கு!” என்று அவன் சொல்லவே வாயைப்பிளந்தபடி மயக்கம் வருவதைப்போல நடித்து பிறகு “மச்சி சாப்பிட்டு போலாம்டா” என்றான்  பிரகலாதன்!

அடேய் பதினொன்றரை தான் ஆகுது இன்னும் ரெண்டு வீட்டுக்கு சொல்லிட்டு போலாம்டா!

அதைச்சொல்லலை. எல்லா வீட்லயும் நம்மை உள்ளே கூப்பிட்டு எதையோ சாப்பிட்டு போகச்சொல்றாங்க இல்லை? இந்த வீட்லயாவது மனசு வைடா!

“மானத்தை வாங்காதே எருமை” வீட்டுக்கதவு திறக்கப்படுவதை கவனித்தபடி மற்றவனை முறைத்தான் மனோத்யன்!

விழாவுக்கு அழைக்க வேண்டிய லிஸ்டில் கொஞ்சத்தை என்புறம் தள்ளு. நான் போய் அழைக்கிறேன் என்று மனோ கேட்க சாமர்த்தியமாய் ஆதி சொந்தங்களின் லிஸ்டை அவன் புறம் தள்ளி விட்டிருந்தான்! ஆஹா ஆயிரம் கேள்வி கேட்பாங்களேடா என்று டென்ஷன் ஆனாலும் அவன் பின்வாங்கவில்லை! முற்பாதுகாப்பு நடவடிக்கையுடன் களத்தில் இறங்கிவிட்டான். அதுதான் பிரகலாதன்!

இவனை அழைத்து வந்ததே ஒவ்வொரு வீடுகளிலும் அவனை அமர வைத்து சாப்பிட வைத்து சிலபல விசாரிப்புக்களை செய்யவிழையும் உறவுகளை நண்பனோடு வந்தேன் சிக்கிரம் போகவேண்டும் என்று தவிர்க்க வேண்டித்தானே!

“ஹல்லோ மனோ!!! வா வா!” வந்த நடுத்தர வயது மனிதர் அவனை எதிர்பார்க்கவில்லை என்பது உயர்ந்து ஒலித்த அவரது குரலிலேயே தெரிந்தது.

“உள்ளே வாங்க தம்பி” இது பிரகலாதனுக்கானது!

“லீலா! “யார் வந்திருக்கார் பாரு?” என்று அந்த மனிதர் உள் நோக்கி குரல் கொடுக்க ஒட்டவைத்த புன்னகையுடன் சோபாவில் தொற்றிக்கொண்டிருந்தான் மனோத்யன். அருகிலேயே பிரகலாதனும்.

“மனோவா???? அதிசயமாயிருக்கே!! எங்க வீடெல்லாம் ஞாபகம் இருக்கா என்ன?” உள்ளிருந்து வெளிவந்த ஆண்ட்டி ஆதங்கமாய் கேட்டார்.

“கொஞ்சம் பிசி ஆண்ட்டி. அதனால எங்கேயுமே கிளம்ப முடியறது இல்லை. இப்போ கூட லீவ் போட்டுட்டு தான் வந்திருக்கேன். ஆதிக்கு சனிக்கிழமை நாலரைக்கு எங்கேஜ்மென்ட். நீங்க எல்லாரும் குடும்பத்தோட வரணும். மியாமி ஹால்ல சிம்பிளா நடத்தறோம். அப்புறம் அப்பா போன் பண்ணுவார் உங்களுக்கு!”

அவன் சொல்லி முடிக்க கணவன் மனைவி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஆதியின் விழாவுக்காய் அழைப்பதற்காய் மனோ வருவான் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சண்டை விவகாரம் தான் கண் காது மூக்கு வைத்து உறவினர்களிடையே பரவியிருந்ததே! அந்த  விவகாரத்தை அப்படியே அடங்கிப்போக வைக்கத்தான் மனோவை உறவினர்கள் வீட்டுப்பக்கம் ஆதி அனுப்பி இருக்கவேண்டும்!!!

சந்தோஷம்பா.. நாங்களும் கேள்விப்பட்டோம்! பொண்ணு பேர் என்ன? ஆபீஸ்ல வர்க் பண்ணும்போது லவ்வாமே! பொண்ணு எந்தப்பக்கம்? லீலா அம்மையார் வெகு கவனமாய் விசாரித்தார்.

பல்லைக்கடித்தாலும் “ஆமாம். அண்ணி பேர் ஷக்தி. அவங்க பிறந்து வளர்ந்தது இங்கே தான்” என்று சுருக்கமாய் முடித்தவன் “அப்போ நாங்க கிளம்பறோம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்றபடி எழுந்து கொண்டான்.

“மனோ! இருப்பா! இப்படி சட்டுன்னு புறப்பட்டா எப்படி? ட்ரின்க் எதுனாலும் குடிச்சிட்டு போங்க.”

“இல்லை ஆண்ட்டி இன்னொரு நாள் வரேனே! பன்னிரண்டரைக்கு நாங்க ரெண்டு பேரும் ஒரு செமினார்ல இருக்கணும்!”

அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் அவர்கள் விடைதர மொபைல் மெசஞ்சரை திறந்து செக் செய்தபடியே காரை நோக்கி வந்தவன்  “ஆமாம் இன்றைக்கு கொஞ்சம் பிசி. சனிக்கிழமை பாங்க்ஷனுக்கு எல்லாமே அசெம்பிள் பண்ண வேண்டியிருக்கு” என்று மீராவின் மெசேஜை கண்டதும் மீண்டும் டென்ஷன் முகத்தில் ஒட்டிக்கொள்ள இறுகிப்போய் “ஓகே. ஓகே. நைட் பேசறேன்.” என்று மெசேஜி விட்டு காரில் அமர்ந்தான்.

சனிக்கிழமை நெருங்க நெருங்க பயம் அவனை இறுக்கிக்கொண்டே வந்தது! அதன்பின்னே அவள் அவனிடம் பேசுவாளா?

இருந்திருந்து இவளிடம் போயா நித்து காண்ட்ராக்டை கொடுக்க வேண்டும்! அன்றைக்கு நித்துவை பற்றி மீரா சொன்ன போது அதிர்ந்து போனவன் நித்துவுக்கு போன் போட்டான்.

அவளோ காஷுவலாக “ அவளை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. நீ என் அண்ணன் என்றால் என்னோடு பேசத்தயங்குவாளோ என்றுதான் பேஸ்புக்கை டீஅக்டிவேட் செய்து என் குடும்பம் பற்றிய அடையாளங்களையே எடுத்துவிட்டேன்! அவர்கள் தொழிலில் சூப்பர், ஆகவே புக் செய்தேன். உனக்கென்ன வந்தது?” என்று அவனையே கேள்வி கேட்டாள்!

மனோவின் தலை சுற்றியது. மனோ நித்யாவின் புகைப்படங்களை அவனுடைய முகப்புத்தகத்தில் பகிரவே மாட்டான். ஆகவே அவளுக்கு இதுவரை புரிந்திருக்காது. ஆனால் விழா நெருங்க நெருங்க தெரிந்து விடுமே! அதுவும் இப்படி சண்டை போட்டு விலகிய அண்ணன் என்று தெரிந்தால் அவள் தன்னை வெறுத்துவிடுவாளோ என்று அவள் மேல் நேசம் கொண்ட மனம் அஞ்சியது!

ஆகவே தன்னை புரியவைக்கவேண்டும். தன் பக்க நியாயங்களை சொன்னால் அவள் தன்னை புரிந்து கொள்வாள் என்று அவன் முற்றாக நம்பினான். நண்பன் என்று ஆரம்பித்து அவள் புரிந்து கொண்டு ஆறுதலாய் பேசியதும் அது நான் தான் என்று சொல்லிவிடுவதே அவன் எண்ணம். ஆனால் நடந்ததோ தலைகீழ்!

அவள் அவன் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை! ஒரு பட்டிமன்றப்பேச்சாளி போல நியாங்களை கொட்டித்தள்ளி விட்டாள்! என்ன ஒன்று, திருக்குறளோ இலக்கியங்களோ உதாரணத்துக்கு வரவில்லை அவ்வளவுதான்!

அவளுடையா அண்ணன் காரன் அந்த வசீ என்ன பெரிய மகாத்மாவா,  மூச்சுக்கு மூச்சு உதாரணம் காண்பிக்க!! அது மட்டுமா? இன்னும் அவன் நினைக்கக்கூட விரும்பாத எத்தனையோ!!!

அவள் பேச்சை மறுக்கக்கூட முடியாமல் தன்னையே குற்றவாளியாக்கி அவனுக்குள் உருவான மறுகல் வேறு!

நேற்றிலிருந்து கொதித்துப்போய் இருந்தவனை பிரகலாதனின் சேஷ்டைகள் கூட கவனம் கலைப்பதாயில்லை!

அன்று மதியம் பிரகலாதனோடு பலநாள் போகவேண்டும் என்று நினைத்து விட்டுப்போன மன்ஹட்டன் பிஷ் மார்க்கட்டில் மதிய உணவை உண்டது, அன்று முழுதும் அந்த லிஸ்ட் முழுக்க இன்வைட் பண்ணி முடித்தது அருகில் இருந்த KFC ஒன்றில் ஐஸ்க்ரீம் சண்டே வாங்கித்தந்தது என்று தன் வேலையோடு பிரகலாதனையும் அவன் மறக்காதிருந்தாலும் வழக்கமான உற்சாகமான மனோவை பிரகலாதனுக்கு அவனால் கொடுக்க முடியவில்லை!

தட்ஸ் இட் மச்சான்!!!. ஏண்டா! உர்ர்னு இருக்கே? உன்கூட என்ஜாய் பண்ணலாம்னு தானேடா லீவ் போட்டேன். நீ என்னடான்னா இன்னைக்கு பூராவும் முட்டை போடப்போற டைனோசர் போலவே ரெட்லெஸ்ஸா இருக்க!! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்!

அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்ல.

உக்கும்!!!! நீயே சொல்லிட்டு இரு!

கார் மௌனமாய் நகர்ந்தது.

டேய் டேய் மனோ!!! அங்கே பாரேன்

அவன் கைகாட்டிய புறம் தியேட்டர் ஒன்றின் பானரில் ஜாக்கிசானின் புதிய திரைப்படம் ஒன்றுக்கான கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. மனோவின் முகம் ஒரு ரத்தச்சிவப்புக்கு மாறியது!

நைட் ஆறுமணி ஷோவுக்கு போலாமாடா?

வேணாம்.

ஏண்டா ஏன்? நீ உன் ப்ளாட்ல படுத்து தூங்கப்போற! நான் என் வீட்ல!!! நாளைக்கும் நீ லீவ்! அப்புறம் ஏன் வர மாட்டேங்குற?

சொன்னா புரிஞ்சுக்கடா ..புடிக்கல.. வேற ஏதும் படம் போகலாம்

உக்கும் பத்து எண்றதுக்குள்ள தான் ஓடிட்டிருக்கு! அதுக்கு நான் குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப்படுத்துடுவேன்!

யாரு நீ? தனியா? போ….ட்…டா…

விட்றா மச்சான், ப்ளோல வந்துடிச்சு! ஜாக்கி படம் பார்க்க உனக்கு என்ன பிரச்சனை? இப்படி திங்க் பண்ணிப்பாரு!

ஒண்ணும் வேணாம்

டேய் கேளேண்டா..

சொல்லித்தொலை!

உன் ரீமேக் நாயகன்! அதுதான் ஹாசன்… கமல் ஹாசன் அடுத்த வருஷம் இதை ரீமேக் பண்ணாலும் பண்ணுவார்டா! சோ நீ பார்த்து தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுங்க்றேன்!

பிரகலாதன் முகத்தில் சிரிப்பு இருந்தது. மனோவை எப்படி உசுப்பேற்றும் இந்த கமன்ட் என்பது அவனுக்கு தெரியாதா என்ன?

கார் கிரீச்சிட்டு நின்றதும் அவன் சிரிப்பு மறைந்தது!

ஆறரைக்கு தாண்டா ஷோ! இப்போ அஞ்சுமணி! இப்போவே போக முடியாது. அவன் எதையோ பேசி வைத்தான். மனோ எதற்கு கொலைவெறியாய் முறைக்கிறான் என்று அவனுக்கு புரியவே இல்லை!. அவன் கமலை கலாய்ப்பது புதிதா என்ன?

இறங்குடா.

ஏய் ஏய் மனோ!!!!

இறங்குடான்னா…

அடப்பாவி! டேய் என்னடா ஆச்சு உனக்கு? மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசோர்டர் எதுவுமா? அவன் முகத்தின் குழப்பம் பொய்யில்லை.

உதட்டோரம் கருக்கொண்ட சிரிப்பில் மனோ முகத்தின் இறுக்கம் தளர்ந்தது.

சரக்கடிக்கலாமா? என் ப்ளாட்டுகே போலாம்!

சூப்பர் மச்சி! எவ்ளோ நாளாச்சுடா! அவனுங்களையும் கூப்பிடலாம்!

வேணாம்! நீ நான் மட்டும் போதும்

“அப்படிங்கிற? ஒகே!” என்று தோளைக்குலுக்கி விட்டு அம்மாவை அழைத்து இன்றிரவு மனோவோடு தங்குவதாக அறிவித்தது விட்டு பிரகலாதன் உற்சாகமாய் நிமிர்ந்து அமர்ந்தான்!

அதன்பிறகு

வரைட்டியான சிப்ஸ், பிரைட் சிக்கனுடன் ஆளுக்கொரு பீர் டின்னுடன் மனோவின் பிளாட்டில் இருவரும் சோபாக்களில் விழுந்திருக்க பிரகலாதன் என்றோ ஒருநாள் தோற்றுப்போன தன் காதல் கதையை தூசு தட்டிக்கொண்டிருந்தான்!

நீ சொல்லு மச்சி!! லவ் ஏண்டா எனக்கு செட் ஆவல? நானும் லெக்சர் பண்றேன். சம்பாதிக்கிறேன். கொஞ்சம் நல்லவனா கூட இருக்கேன். அப்புறம் ஏண்டா என்னை விட்டுட்டுப்போனா? சொல்லேண்டா…..

லூசு..அவ உன்னை விட்டுப்போகும் போது நீ ஸ்கூல் படிச்சுட்டிருந்தடா! ஹ ஹா

பாயிண்ட்றா!

கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்தனர்.

பிறகு இம்முறை மனோவே ஆரம்பித்தான்.

என் கூட பேசவேணாம்னு சொல்லிட்டாடா!!!

என்னது? உன்கூட யார் பேசக்கூடாது? யார் அப்படிச்சொன்னா?

நானே என் கூட பேசக்கூடாதாம்டா!!!

ஹி ஹி உனக்கு ஓவராயிடுச்சு மனோ!!! இன்னும் ஒரு டின் கூட காலியாகலையே! அதுக்குள்ளயா?

எருமை கேளேண்டா. என்று லேசான குழறலுடன் ஆரம்பித்தவன் தன் காதல் கதையை ஆதியும் அந்தமுமாய் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தான்!

ஜாக்கி சான்லாம் அவன் பையனுக்கு சொத்தெழுதி வைக்கலையாம்! கோட் வேற பண்றாடா? கடுப்பாகாதா?

த்சோ த்சோ! போட்டோ காமி

அவன் மொபைல் காலரியில் செமினாரின் போது எடுத்த போட்டோவை காண்பித்தான்.

அன்னிக்கு நாம பார்த்த பொண்ணா? அன்னிக்கே நிஜாம் சொன்னாண்டா! நான் தான் நம்பல!

அதை விடு! இப்போ என்ன பண்றது நான்?

பிரச்சனை தான்..ஆனா நீ அவ கால்லயே விழுந்துரு மச்சான். அவளுக்கா தெரியவர முன்னே நீ சொல்லிடறது பெட்டர்!

அது முடியாதுடா. நான் அவளை லவ் பண்றேன். ஆனா அவளுக்கு இன்னும் அது கன்பார்ம் ஆகல. அப்படியிருக்கும்போது சொன்னா போடான்னு போயிருவா! இன்னும் கொஞ்சம் வர்க் பண்ணனும். அப்புறம் தான் சொல்லணும்!

எப்படிடா இப்படி?????? கலக்குறடா.. என்று குழறலாய் சிரித்தவன் பிறகு ஏதோ நினைவு வந்தவனாய் மனோவின் கையை பிடித்து உலுக்கினான்.

அடேய்!!! அப்போ அந்தப்பொண்ணு? அவளை என்னடா பண்ணின?

கீர்த்தியா? அதுவேற ஒரு சிக்கல்

மச்சான்..முடில..

டேய்!!! நான் அவ்ளோ கேவலமானவனாடா? அந்த ரிசப்ஷன்ல என் மனசு புரிஞ்சதுமே அவங்கப்பாவை தேடித்தான் போனேன். அவன் பாரின் போய்ட்டான்! நேத்துக்கூட போய் பார்த்தேன். அவன் இன்னும் திரும்பி வரல! வந்ததும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லிருவேன்! நான் நல்லா யோசிச்சேன். இது சரி வராதுன்னு!

ஹ்ம்ம்.,,,

சிக்கன் ஆறிப்போச்சு! மைக்ரோ வேவ்ல வைப்போமா?

 

மனோவின் சிக்கல்கள் தொடரும்.

 

கொண்டாட்டம்.காம் 12

 

20 Nivetha Thomas

“மீரு மீரு இன்னிக்கு கிளாஸ் இல்லையா?” சுபா பாட்டியின் மெல்லிய குரலில் திடுக்கிட்டெழுந்தாள் மீரா. சூரிய வெளிச்சம் நன்றாக பரவி காலை ஏழு மணியாவது இருக்கும் என்று அடித்து சொன்னது.

எத்தனை மணி சூப்ஸ்? எழுப்பாம விட்டுட்டீங்களே? ஹையோ சமையல் பண்ணலையே என்று அலறியடித்துக்கொண்டு எழுந்த மீராவை பார்த்து சூப்ஸ் சிரித்தார்.

ஏழுமணிதான்! அதெல்லாம் நானே சமையல் பண்ணிட்டேன். தினமும் நீ தானே பண்ணறே? இன்னிக்கு ஒருநாள் நான் பண்ணினா என்ன?

சாரி சூப்ஸ்.உங்களுக்கு .ஒரு ஹெல்பும் பண்ணலை… அந்த முதிய பெண்மணியை வருத்தி விட்டோமே என்று அவளுக்கு கவலையாக இருந்தது. முடிந்தவரை வீட்டின் முழு வேலைகளையும் அவளே பார்த்துவிடுவது தான் அங்கே வழக்கம்.

இட்லி பண்றது பெரிய வேலையா என்ன? அதை விடு.. கிளாஸ் இருக்கா?

ஆமாம் சூப்ஸ்..போணும். வசீ எங்கே? ஜங்கிள் புக் சத்தத்தை காணோம்? கிண்டலாய் கேட்டவாறே எழுந்து செருப்பை மாட்டிக்கொண்டாள் மீரா.

ஹா ஹா அவன் சாப்பிட்டு கிளம்பிப்போயாச்சு. இந்த சனிக்கிழமையும் உங்களுக்கு பங்ஷனாமே..

ஆமாம் சூப்ஸ்! என் பிரண்டோட அண்ணாக்கு என்கேஜ்மென்ட். நான் குளிச்சிட்டு வந்துடறேன். நேரமாச்சு” என்று சொன்னபடி குளிப்பதற்கான உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமை நோக்கி அவள் நடக்க சுபா தலையசைத்தபடியே ஹாலுக்குள் நுழைந்தார்.

ஷவரின் கீழ நின்றவளுக்கோ முதல் நாளைய ஞாபகங்கள்!!!!!

என்ன காரியம் செய்து விட்டாள்!

அவள் என்ன செய்தாள்? எல்லாமே அவன் செய்த வேலை அல்லவா?

நேற்று மாலை ரிசப்ஷனில் இனம்புரியாத படபடப்புடன் அவள் சுற்றியதும் கொஞ்சம் அதிகப்படி புன்னகையும் பார்வையுமாக அவன் அவளையே தொடர்ந்ததும் இருவருமாகவே எல்லைக்கோட்டை தாண்டி ஒரு அடி எடுத்து வைத்து விட்டதை அவளுக்கு உணர்த்தியிருந்தன.

நிறுத்து நிறுத்து என்றால் மனம் எங்கே சொன்ன பேச்சை கேட்கிறது? இனிமேல் இவன் பக்கமே திரும்புவதில்லை என்ற சபதத்துடன் வீடு வந்து படுக்கையில் விழுந்தால் பேஸ் புக்கில் அவன் நட்புக்கரம் நீட்டிக்கொண்டிருந்தான்!

இவனோடு பிரன்ட் ஆனால் மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று அவள் தயங்கியதெல்லாம் ஒரு சில கணங்கள் தான்! அக்செப்ட் செய்து விட்டாள்!

அந்த நேரத்தில் அவனும் ஆன்லைன் வந்திருக்க வேண்டும். ஹாய் ரிப்போர்ட் ரொம்ப நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிகப்படியாய் திட்டி விட்டேன் மன்னித்துக்கொள் என்று உடனடியாகவே மெசேஜ் வந்தது.

அதிலேயே உருகிப்போனவள் சாரி சார். இன்றைய விழா டென்ஷனில் தான் கார்டை அங்கே கொண்டு வந்து வைத்து டிசைன் செய்தேன் என்று இவளும் அது காதலனுக்கு வாங்கியது இல்லை என்று கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே மறைமுகமாக தெளிவு படுத்தினாள்!

பிறகு

அன்றைய டெகரேஷன் நன்றாக இருந்தது.

எப்படி பிசினஸ் ஆரம்பித்தீர்கள்? எப்படி அதில் ஆர்வம் வந்தது?

வசீ என் ஜூனியர்!

அவனுக்கு அடிக்கடி மூக்குக்கு மேல் கோவம் வந்தாலும் நல்லவன் இப்படிஎல்லாம் அவன் எடுத்து விட

அப்பா அம்மா இறந்தது வசீயும் அவளும் சூப்ஸ் துணையோடு வாழ்வது வரை தன் வாழ்க்கை வரலாறையே அவள் அவனுக்கு சொல்லிவிட்டாள். இவள் குட்நைட் சொன்னாலும் அவன் ஏதாவது அவசரமாக கேட்டு மீண்டும் சிலபல ரவுண்டு சாட்டை நடாத்தி

நாளை உனக்கு கிளாஸ் இருக்குல்ல. என் கிளாஸ் இல்லைல? L என்று சோக ஸ்மைலியுடன் பெரிய மனது செய்து ஒருமணியளவில் முடித்து வைத்தான்.

சாட் பண்ணும்போது எடுத்த முடிவுகளோ அவன் அவளுடைய விரிவுரையாளன் போன்ற எந்த உண்மைகளும் அவள் மனதில் இருக்கவில்லை. அப்படியே தூங்கியும் போய் விட்டாள். இப்போதோ அவன் பேசிய வரிகளுக்கு எல்லாம் புதுப்புது அர்த்தம் கண்டுபிடித்து அவள் உள்ளம் மெலிதாய் நடுங்கியது.

கூடவே தான் அனுப்பிய செய்திகளையும் மனதில் ஓட்டிப்பார்த்து இதை அவன் எப்படி எடுத்துக்கொண்டிருப்பானோ என்றும் மனம் குழம்பினாள் மீரா.

அன்றைக்கு ஒரே ஒரு விரிவுரைதான். விசேட வகுப்பாக காலையில் போடப்படிருந்தது. அவசர அவசரமாக தயாராகி அரைகுறையாய் இட்லியை விழுங்கிவிட்டு பஸ்ஸில் போக நேரமின்றி மீட்டர் டாக்சி ஒன்றில் ஏறிக்கொண்டு பறந்தாள் மீரா.

மானேஜ்மென்ட் அக்கவுண்டிங் சும்மாவே போரடிக்கும். இதில் இன்று இவள் கவனிப்பதாவது? நிலா இன்று வரமுடியாது. நீ எனக்கும் அட்டெண்டன்ஸ் ஷீட்டில் சைன் போடு. என்று ஆணை பிறப்பித்திருந்தாள். இந்த மனுஷன் வேறு கடைசியில் தான் ஷீட்டையே தருவார், வேறு வழியே இல்லை. உட்கார்ந்திருந்து தான் ஆகவேண்டும்.

கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டவள் விரிவுரையை நிஜமாகவே கிரகிக்க முயன்றாள்,

ஆனால் கண்களும் மனதும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து பேஸ் புக் மெசெஞ்சரை பார் என்றது. முடியவே முடியாது. குறைந்த பட்சம் இரவு வரையாவது மொபைலை பார்க்க கூடாது. அவன் மெசேஜே போட்டிருந்தாலும் அவள் பார்க்கவில்லை என்றால் அக்கறையில்லாதவள் என்று எண்ணி விலகிவிட சந்தர்ப்பம் உண்டு! மீண்டும் ஒரு தீர்மானத்துக்கு மனம் வர மொபைலை ஹான்ட் பாக்கில் போட்டாள் அவள்.

ஒரு அரைமணி போயிருக்கும். தண்ணீர்த்தாகம் எடுப்பது போல் மீண்டும் மனதுக்குள் போராட்டம்!

எடுத்து டேட்டாவை ஆன் செய்ய மறுகணமே சாட் விண்டோவில் அவன் முகம் வந்து விழுந்தது!

“குட்மோர்னிங் மீரா” என்ற படி!

படபடப்புடன் மீண்டும் ஆப் செய்து மடியில் வைத்துக்கொண்டவளுக்கு அய்யயோ சீன் என்று அவனுக்கு போயிருக்குமே என்று அப்போதுதான் உறைத்தது. மறுபடி ஆன் செய்து குட்மார்னிங் அனுப்பி விட்டு மீண்டும் ஆப் செய்ய முன்

“ஹேய் lectures ல இருந்து விளையாடறியா?” என்று மின்னல் வேகத்தில் பதில் வந்தது!

சிரிப்பு ஸ்மைலியுடன் நிறுத்திக்கொண்டாள் அவள். அப்போதைக்குத்தான்!

 

பிறகு

அன்றைய நாள் விரிவுரை முடிந்த பின்னும் லைவ் அப்டேட்ஸ் போல மாறி மாறி மெசேஜ்கள் போய் கொண்டே இருந்தன.

மீராவின் பக்கம் தான் தயக்கம் இருந்தது.

அவனோ புதுப்புது டெக்னிக்குகளை கையாண்டு கொண்டிருந்தான்!

அவள் அலுவலகத்தில் இருந்த போது ஒரு புத்தகத்தின் சாப்ட் காப்பியை ஆன்லைனில் தேடி கொடுக்க சொன்னான். மறுக்கவே முடியாமல் அவளும் அதை செய்யவேண்டியிருந்தது!

வசீ கூட கேட்டுவிட்டான்! “என்ன மீரா போனையே பார்த்துட்டு இருக்கே” என்று!

எல்லாம் அவன் செய்யும் லீலை தானே. இது எங்கே கொண்டு போய் விடும் என்று அவனுக்கு புரியாதா? மனோத்யனை மனதில் திட்டித்தீர்த்தாலும் நீ மொபைல் டேட்டாவை ஆப் செய்து வைத்தாலே ப்ராப்ளம் சால்வ்ட்! நீ முதலில் அதை செய்யேன் என்று மறுமனம் கிண்டல் செய்தது.

வீராப்புடன் போனையே ஆப் செய்து வைத்தவள்

வீட்டுக்கு வந்து வழக்கம் போல சூப்சுடன் இணைந்து சமையல் செய்து வசீயோடு சண்டை போட்டபடி சாப்பிட்டு மறுபடி அறையை பூட்டிக்கொண்டு தூங்க வந்தால் ….

உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றபடி அவன் மெசஞ்சரில் காத்திருந்தான்!

அத்தனை வீரசபதங்களும் பறந்து போக சொல்லுங்க என்று பதில் அனுப்பினாள் மீரா.

சாப்டாச்சா?

ஆமாம். நீங்க?

ஹ்ம்ம்…

என்ன பேசணும்?

இல்ல… என் பிரண்ட் ஒருத்தனுக்கு சின்ன பிரச்சனை! நான் அவனை சப்போர்ட் பண்றதா வேணாமான்னு குழம்பிப்போய் இருக்கேன். வீட்ல டிஸ்கஸ் பண்ண முடியாது. அம்மா அப்பா டென்ஷன் ஆயிடுவாங்க. நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.

அவளோடு தன் குழப்பத்தை பகிர நினைக்கிறான் என்னும் போதே அவள் முழுதும் உருகி விட்டாள்.

ஹ்ம்ம்..சொல்லுங்க. அவருக்கு என்ன பிரச்சனை?

அவனை அவன் வீட்ல யாருமே புரிஞ்சுக்கல அவன் மனசு உடைஞ்சு போய் இருக்கான்.

முதல்ல அவருக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க சார்.

நீ சார்னு சொல்லாதே. பேர் சொல்ல முடிலைன்னாலும் பரவால்ல..சார் வேணாம்!

ஹ்ம்ம்…

அவனோட அப்பா ரொம்ப பெரிய பணக்காரர். அவர்கிட்ட ஒரு பெரிய பிசினஸ், ரெண்டு ஒம்பது மாடி அப்பார்ட்மென்ட்ஸ், அப்புறம் ஒரு பெரிய வீடு, யாழ்ப்பாணத்துல ரெண்டு வீடு அப்புறம் கொழும்புல ஒரு சின்ன ரெஸ்டாரண்டும் இருக்கு.

ஹ்ம்ம்..

அந்த ரெஸ்ட்டோரன்ட் வாங்கும் போதே என் பிரண்டுக்கு இஷ்டம் இல்லை. இந்த லெவலுக்கு இறங்கி போணுமா? யார் இதை நடத்துவாங்க? நல்ல பேருள்ள ரெஸ்டாரன்ட் என்றாலும் பரவாயில்லைன்னு சொல்லிப்பார்த்தான். ஆனா அவருக்கு அது ஒரு ஹாபின்னு அவங்கப்பா சொல்லவும் சும்மா இருந்துட்டான்.

ஹ்ம்ம்.. அவளுக்கு கோபம் வந்தாலும் பொறுமை காத்தாள் மீரா.

இப்போ இவங்க எல்லாரும் வளர்ந்து படிச்சு முடிச்சதும் இவனோட அண்ணன் அப்பா கூட பிசினஸ் பார்த்துக்க போய்ட்டான். இவனுக்கு ஏற்கனவே அங்கே ரெண்டு பேரும் இருக்காங்களே ஒரு முப்பத்தைஞ்சு வயசுக்கு பின்னாடி நானும் போய் சேர்ந்துக்கலாம்னு சொல்லிட்டு அவன் ஒரு சாப்ட் வேர் கம்பனில இருந்தான்.

ஹ்ம்ம்..

இந்த வருஷம் அவங்க அப்பா அவர் ரிட்டையர் ஆகணும்னு சொல்லிட்டு சொத்து எல்லாத்தையும் பிரிச்சு எழுதிட்டார்.

ஓ..சொத்துப்பிரச்சனையா?

உஷ்!!!!!!!!!! முழுசா கேளு முதல்ல

ஓகே சொல்லுங்க

அண்ணனுக்கு பிசினசை முழுசா கொடுத்துட்டார். அவ்ளோ பெரிய பிசினஸ்ல இவனுக்கு சின்னப்பங்கு கூட இல்லை! இவனுக்கு ஒரு அப்பார்ட்மென்ட்டையும் அந்த ரெஸ்டாரண்டையும் எழுதி வச்சிட்டார்!

என்ன ஓ.. அவனுக்கு தாங்க முடியல செம்ம கோபம்!

எதுக்கு?

எதுக்கா? உனக்கு என்ன பிடிக்கும்னு ஒரு வார்த்தை அவனை கேட்காம நீ இந்த ஓடாத ஹோட்டலைத்தான் பார்த்துக்கணும்னு தன் விருப்பத்தை அவன் மேல திணிக்கிறது சரியா?

அவர் படிச்சு முடிச்சு ஏன் தங்களோட கம்பனிக்கு போகல?

லைப்ல பின்னாடி அதை தானே பண்ணப்போறேன். கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணப்போறேன்னு சொன்னான்.

அவங்கப்பாக்கு இது தெரியுமா?

இல்லை. ஆனால் கேட்கணுமா இல்லையா? அவன் அவர்கிட்ட கோபமா இதை கேட்க அவர் என் சொத்து என் இஷ்டம், உனக்கு இஷ்டமிருந்தா வாங்கிக்க இல்லன்னா நீயே சம்பாதிச்சுக்கன்னு எடுத்தெறிஞ்சு பேசவும் அவன் வீட்டை விட்டு வெளியே போய்ட்டான்!

God!

இப்ப சொல்லு. என் பிரன்ட் பண்ணது தப்பா?

பின்னே? உங்க பிரன்ட் ஆபீசுக்கு போனது இல்ல. வேற கம்பனில பிசினசுக்கு சம்பந்தம் இல்லாத வேலை பார்க்கறார்! பிறகு எதுக்கு அவருக்கு பிசினசை கொடுக்கணும்? அதான் ஒம்போது மாடி அப்பார்ட்மென்ட் இருக்குல்ல? போதாதா? ஒண்ணுல நாலு வீடு இருந்தாலும் முப்பத்தாறு வீடு!! ஹப்பா!!! சரியான பேராசைக்காரன் உங்க பிரண்டு!

அவனுக்கு அது கோபம் இல்ல! அது வருத்தம் தான் இருந்தாலும் அண்ணனுக்கு தானே கொடுத்தாங்கன்னு அவன் சொல்றான். ஆனா அந்த ரெஸ்டாரண்டை கொடுத்தது அவனுக்கு ரொம்ப கோவம். அவனுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அப்பா வேணும்னே அவனை அவமானப்படுத்தினதா அவன் நினைக்கிறான்.

எந்த ரெஸ்டாரன்ட்?

பம்பலப்பிட்டில இருக்கே? ஸ்டார் ரெஸ்டாரன்ட்?

அங்கே யாரும் போறது இல்லை தான் இருந்தாலும் ரெஸ்டாரன்ட் என்றால் கேவலமா? அப்போ எங்களோட பிசினசும் கிட்டத்தட்ட அப்படித்தானே! எங்களையும் அப்படித்தான் நீங்கள் எல்லாம் சொல்வீங்களா? அவள் சூடாகி விட்டாள்.

அப்படியில்ல….

பின்னே? நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க? நான் ஒண்ணு சொல்லவா? உங்களோட அந்த பிரண்டு சரியில்லை. அவன் கூட சப்போர்ட்டுக்கு போகாதீங்க!

கொஞ்ச நேரம் பதில் இல்லை…

பிறகு ஏன் என்ற கேள்வி வந்தது

எனக்கு சொத்து பணம்னு சண்டை போடறவங்களை கண்டாலே பிடிக்காது. நான் இருக்கும் இடம் அப்படி. உங்களுக்கு தெரியுமா? வசீயை பெரியம்மாவோட கானடா அக்கா கூட்டிட்டு போகவே வந்தாங்க. அந்த வயசுல அவன் எனக்காக போக மாட்டேன்னு சொல்லிட்டான். எங்க கிட்டஅப்போ இருந்தது வெறும் நாப்பது லட்சம் தான். ரெண்டு அப்பா அம்மாவோடையும் பணம்! எங்க ரெண்டு பேர் படிப்பு , மற்ற செலவுகளுக்கே கிட்டத்தட்ட இருபது செலவாயிடிச்சு. மீதி இருபதுல அவன் ஒரு சதம் கூட எடுத்துக்கல! என் கல்யாணத்துக்காகன்னு வச்சிருக்கான். ஜீரோல இருந்து தான் பிசினஸ் ஆரம்பிச்சது! இத்தனைக்கும் அவன் என் சொந்த அண்ணன் கிடையாது!

உங்க பிரண்ட்டுல்லாம் என்ன மனுஷன் சார்? சரி இவருக்கு பிசினஸ் பண்ண ஆசை இருந்தது. அவரை ஒருவார்த்தை கேட்காம அவங்கப்பா அவங்கன்ணனுக்கு முழுசா கொடுத்திட்டார். வருத்தம் இருக்கும் தான். ஆனா ஆனால் அவரையும் அவங்கப்பா சும்மா விடலையே! பொறுமையா அப்பாகிட்ட பேசி பிரச்சனயை தீர்த்திருக்கலாம். அந்த அண்ணனுக்கு எப்படி இருக்கும் யோசிச்சுப்பாருங்க? இப்படி சொத்துக்காக பெத்தவங்க கூடயே பிரச்சனை பண்றவர் உங்க கிட்டயும் நேர்மையா இருக்க மாட்டார். நீங்க அவரை நம்பாதீங்க! அவர் கூட சேராதிங்க!

மறுமுனையில் வெகுநேரம் மௌனம் நிலவியது

அப்படியா சொல்ற?

இன்னொண்ணு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க!

பரவால்ல சொல்லு

உங்க பிரண்டுக்கு அவர் சொல்ற போல பிசினஸ்ல பாஷன்லாம் ஒண்ணும் கிடையாது. அவரோட பிரச்சனை அவருக்கு பிடிக்காத ரெஸ்டாரண்டை கொடுத்து தன்னை அவமானப்படுத்திட்டார் அவங்க அப்பா என்றதுதான்!

எப்படி சொல்ற?

வசீ பிசினஸ் ஆரம்பிக்கும் போது நான் படிச்சிட்டு இருந்தேன். அவங்க பண்றதை பார்க்க ஆசையா இருக்கும். நானும் போய் பொய் சேர்ந்துக்குவேன். அவன் திட்டுவான். டிகிரி கைல வாங்கிட்டு நீ உள்ளே வா. இப்போ வேணாம்னு! என்னால அப்படி காத்துட்டிருக்க முடியல! கடைசில WKC ல சேர்ந்து வேலைபார்த்துட்டே தான் படிச்சேன். உங்க பிரண்டுக்கு பிசினஸ்ல பாஷன் இருந்திருந்தா அவரால முப்பத்தைஞ்சு வயசு ஆகினதுக்கப்புறம் வரலாம்னு இருந்திருக்க முடியாது. அது அவங்கப்பாக்கும் நல்லாவே புரிஞ்சிருக்கும்! நான் அவரை தப்பு சொல்லமாட்டேன்/

ஹ்ம்ம்..

படிக்கலையா? ! என் பையனுக்கு உரியதை அவனே சம்பாதிப்பான்னு சொல்லிட்டு! ஜாக்கிசான் தன்னோட முழு சொத்தையும் சாரிட்டிக்கு எழுதி வச்சிருக்கார்! ஒரு மனுஷன்னா உழைச்சு வாழணும். மத்தவங்க சொத்தை எப்போ தருவாங்கன்னு காத்துட்டிருக்கிறது கேவலம்! முடிஞ்சா நீங்க அவருக்கு அட்வைஸ் பண்ணுங்க. இல்லைன்னா அவரை மெல்ல கழட்டி விட்டுருங்க! ஆவேசமாய் டைப் செய்து அனுப்பினாள் மீரா.

தொடரும்…

 

கொண்டாட்டம்.காம் -11

157580_3a00c778-f1ea-11e3-b27e-5a962523fab8

சனிக்கிழமை காலை பத்து மணி.

“மனோ!” குரலில் சின்னதான அழுத்தத்துடன் மனோவின் தோளில் மெல்லிசாய் தட்டினான் ஆதி.

நின்று கொண்டே கனவில் இருந்து விழிப்பவன் போல லேசான திடுக்கிடலுடன் அவனை நோக்கி திரும்பினான் மனோ.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஆண்கள் பிரிவில் அவர்கள் இருவருக்கும் முன்னே அவர்களுடைய முகத்தை ஒட்டவைத்த புன்னகையுடன் பார்த்தபடி பரப்பி வைக்கப்பட்ட உடைகளுக்கு முன்னே ஒரு சேல்ஸ் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

என்ன கேட்டே?

“இந்த சாக்லட் கலர் குர்தா உனக்கு நல்லா சூட்டாகும் வாங்கிக்கலாமான்னு கேட்டுட்டு இருக்கேன்!” ஆதியின் கண்கள் கேள்வியாய் மனோவை  ஊடுருவின.

குர்தாவா? எனக்கா? எங்கேஜ்மென்ட் உனக்குத்தானே? கிண்டலாக கழன்று கொள்ள முயன்றவனை ஆதி முறைத்தான்.

இப்போ எல்லாருமே குர்தா போட்டுக்கறாங்க! நீ ஒருத்தன் தான் இன்னும் புல் ஸ்லீவ் ஷர்ட்டும் டையுமா சுத்திட்டிருக்க! என்னோட எங்கேஜ்மென்ட்டுக்கு நீ தாராளமா குர்தா போட்டுக்கலாம். உனக்கு கலர் பிடிச்சதான்னு மட்டும் பாரு!

இதெல்லாம் எனக்கு செட்டாகாது ஆதி. என்னை விட்டிரு!

டேய்! நான் சொல்றேன். ஒருதடவை போட்டுப்பாரு. உனக்கு பிடிச்சதுன்னா மட்டும் எடுத்துக்கலாம். இல்லன்னா நான் போர்ஸ் பண்ணல. குர்த்தாவை பிரிச்சுக்கூட பார்க்காம வேண்டாம்னு அடம்பிடிக்காதே!

ஏண்ணா இப்படிப்பண்றே? என்று சலித்தபடி அதன் மேல் கண்களை ஓட்டினான் மனோ.

ஆதி தெரிவு செய்த சாக்லேட் பிரவுண் அவன் நிறத்துக்கு இன்னும் எடுப்பாக இருக்கும் தான். ஆனால் அவன் குர்தா அணிவதெல்லாம்…. என்று எண்ணியவன்  கழுத்தில் இருந்து மார்புவரை பட்டனை சுற்றி மட்டுமே செய்யப்பட்டிருந்த மென்பழுப்பு முத்து வேலைப்பாட்டின் எளிமையில் கொஞ்சம் இளகினான்.

சரி! ஆனா நான் பிட் ஆன் பண்ணி பார்த்துட்டு தான் சொல்லுவேன்.

ப்ளீஸ்!! கிண்டல் தொனியில் சொன்னபடி பிட் ஆன் ரூமை நோக்கி கைகளை நீட்டிவனை பார்த்து சிரித்தபடி அதற்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான் மனோ.

மாற்றிய கணத்திலேயே அந்த குர்தா அவன் தோற்றத்துக்கு கொடுத்த மாற்றத்தை அவன் கண்களாலேயே நம்ப முடியவில்லை! அவன் உயரத்தையும்  அமைப்பையும்  மட்டுமல்ல அவன் முகத்தின் அமசங்களையே அது நன்றாக எடுத்துக்காட்டுவது போலதோன்றியது!

ஒரு ராஜாவின் அதிகப்படி அலங்காரம் போல தோன்றுகின்றதா என்று வெகு நேரம் கண்ணாடியில் சுற்றிச்சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவன் அந்த குர்தா எந்த ஆங்கிளிலும் தன தோற்றத்துக்கு கம்பீரத்தை தவிர வேறேதும் தரவில்லை என்று தெளிந்தான்.

ஆதி ஒரு பார்வையில் கட்டை விரலை ரசனையுடன் தூக்கிக்காட்ட என்கேஜ்மெண்டுக்கு வாங்கிய உடைகளுடன் இதையும் சேர்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இருவரும் படிகளில் இறங்கி பில்லிங் கவுண்டருக்கு வந்தனர்.

எத்தனை மணிக்குடா உனக்கு வெட்டிங் ரிசப்ஷனுக்கு போகணும்?

நாலரைக்கு.

சரி. க்றிடியன் வெட்டிங்கா?

ஹ்ம்ம்.. ஜோயலை உனக்கு தெரியாதா?

பேஸ்புக்ல தான் பார்த்துருக்கேன்.

ஆமாம். அவன் ரொம்ப காலமா பாரின்ல இருந்தான். இப்போ கல்யாணத்துக்காகதத்தான் வந்திருக்கான்.

சரி. அதை விடு. எதுக்காக குழம்பி அடிக்கடி ஒரு மாதியா இருக்கேன்னு சொல்லு?

நானா??? இல்லையே? சமாளிக்க முயன்றான் மனோ.

பொய் சொல்லாதடா. ஆதி அவனை நம்பவில்லை.

சிறிது நேரம் மௌனமாக இருந்த மனோ பிறகு “காம்பஸ் பிரச்சனை ஆதி. ஒரு ஸ்டூடன்ட். கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருப்பா. ஆனா ரொம்ப கெட்டிக்காரி. அதுதான் யூத் கண்பாரன்சுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேன். ஆனா அவ அங்கே வந்து எதையும் கவனிக்காம படம் வரைஞ்சு விளையாடிட்டு இருந்தா. கொஞ்சம் ஹார்ஷா திட்டிட்டேன்.

ஓ..

அப்புறம் அன்னிக்கு அவ எழுதின ரிப்போர்ட் ரொம்ப நல்லா இருந்துது.  அவளோட ரிப்போர்ட்டைத்தான் யூத் மினிஸ்ட்ரிக்கு ரிப்போர்ட் பண்ண ஒரு சாம்பிளா அனுப்பினோம்.

உனக்கு கில்ட்டி ஆயிடுச்சு. அப்படித்தானே…

மனோ பதில் சொல்லவில்லை.

அவசரப்பட்டு எதையும் முடிவு பண்றது, பேசிடுறதை நீ எப்போடா மாத்திக்கப்போற?

இப்போ நீ எதுக்கு மறுபடியும் ஆரம்பிக்கிற?

உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப்போகத்தான்!

அப்பா ஒரு வார்த்தை கூப்பிடலையே ஆதி!

நீயாவது வந்து சாரி சொல்லி பேசேண்டா!!! நம்ம அப்பாதானே!

அப்போ அவர் பண்ணது தப்பில்லையா? நான் பேசினது மட்டும் தான் உங்களுக்கெல்லாம் தப்பு!

டேய்! அவர்கிட்ட நீ ரெண்டு நிமிஷம் அமைதியா பேசு! எல்லாம் புரியும். சும்மா மேலே மேலே பிரச்னையை வளர்க்காதேடா.

அவர் பண்ணதும் தப்பு நான் பண்ணதும் தப்பு. ஆனா அதிகம் காயப்பட்டது நான் தான்! சோ அவர் வந்து வான்னு கூப்பிட்டா நான் வருவேன். இல்லைன்னா என்னை விட்ருங்க. நான் இப்படியே இருந்துக்கறேன்.

டேய் முட்டாள்! நீ பண்ணது மட்டும் தாண்டா தப்பு! நீ எப்படி இந்த குர்த்தாவை வாங்கிக்கிட்ட என்றதை வீட்டுக்கு போய் கொஞ்சம் அமைதியாய் திங்க் பண்ணு. நான் இப்போ பண்ணதை தான் அப்பாவும் அன்னிக்கு பண்ணார்! உனக்கெங்கே புரியப்போகுது? போ போய் அட்லீஸ்ட் அந்த ஸ்டூடன்ட் கிட்டயாவது சாரி கேளு!

கார் மனோவின் வீட்டுக்கு முன் கிரீச்சிட்டு நின்றது. ஆதியிடம் தலையசைத்துவிட்டு மனோ இறங்கிக்கொள்ள

“சாரி. நான் உன் மைண்டை இன்னும் அப்செட்டாக்கி விட்டுட்டேன் போல. என்னால முடியலைடா.. வீட்டுல முதல் முறையா பெரிய விசேஷம் நடக்கும் போது நாம இப்படி உடைஞ்சு பொய் நிக்கறத்தை என்னால  தாங்க முடியல! அதுதான்! சாரிடா..” என்றபடி ஆதி புறப்பட்டுச்சென்றான்.

ஆயாசமாய் உள்ளே சென்ற மனோ ஆதி சிந்திக்க  சொன்ன விஷயத்தை மட்டும் யோசிக்காமல் மீராவை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தான்!

அவன் என்ன குற்றஉணர்விலா குழம்பிப்போயிருந்தான்? ஹா ஹா

மீராவை திட்டுவது அவனுக்கு எப்போதுமே வித்யாசமாக தோன்றுவதில்லை.

அவளை வலுக்கட்டாயமாக கான்பாரன்சில் இழுத்துபோட்டபோதே அவள் அங்கே வந்து விளையாடுவாள் என்று நினைத்தே இருந்தான்.

ஆனால் அவன் பேசுவதை கண்டதும் சீரியசாகி கவனிப்பாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவன் பேசியதை கூட கவனிக்காமல் ஒரு வில் யூ மாரி மீ? கார்டில் பெயர் எழுதி விளையாடியது தான் அவனுக்கு கடுப்பு!

சில நிமிடங்கள் பார்த்தாலும் அந்த கார்ட் அவனுக்கு ஆணியடித்தது போல நினைவிருந்தது!

இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து என்ன வெட்டி முறிக்கப்போகிறாள்?

கார்டை யாருக்கு கொடுக்கபோகிறாள்?

ஆண்டாள் பாசுரம் போல ஒன்றை வேறு எழுதி வைத்திருந்தாள். அது கூட அவனுக்கு மிகப்பரிச்சயமாக இருந்தது எப்படி?

அவள் யாரையோ காதலிப்பது தன்னை இவ்வளவு கோபப்படுத்தி நிலைதடுமாற வைக்கிறதென்றால்  அதற்கு ஒரே ஒரு காரணம் தானே என்று எண்ணும் போதே ஒரு இனிய அதிர்வு அவளுக்குள்! ஆனால் அந்த பாவி கையில் கார்டுடன் நின்றாளே இன்றைக்குள் அதை கொடுத்திருந்தாள் எனில் மனோ என்ன ஆவான் ?? அவனுக்கு தெரிந்து கொள்ளவே வேண்டியிருந்தது! சந்திக்கவும்  வழியில்லையே! இனிமேல் அவளை திங்கள் தானே சந்திக்க முடியும்?

இதெல்லாம் தான் அவனுடைய குழப்பங்கள். அது புரியாமல் இவன் வேறு!!!!

மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவன் அவளை facebook இல் பிடித்து சில பல யோசனைகளின் பின் ரிகுவேஸ்ட் அனுப்பினான்.

மூன்று மணிநேரங்கள் கடந்தும் அவள் அக்செப்ட் செய்யாததால் அவமானம் தாக்க இன்றிரவும் அவள் அக்செப்ட் செய்யவில்லையெனில் டிலீட் செய்துவிடலாம் என்ற முடிவுடன் ரிசப்ஷன் போவதற்காய் கோட் டையுடன் தயாராகி ஹோட்டல் ரமாடா நோக்கி காரை விரட்டினான்.

அடடா திருமணத்துக்கு அன்பளிப்பாய் பணம் கொடுக்க என்வலப் வாங்கவில்லையே என அப்போதுதான் நினைவு வர கார்ட் கடையொன்றுக்குள் நுழைந்தவன் திருமண வாழ்த்துக்கள் போட்டிருந்த கார்டை தேட ஆரம்பித்தான். அங்கேயும் வில் யூ மாறி மீ கார்ட்கள் பல வடிவங்களில்  இருந்து அவனுடைய தலை வேதனையை அதிகப்படுத்த அவசர அவசரமாய் தேடி எடுத்து கார்டுக்குள் பணம் வைத்து அதற்கான என்வலோப்பில் அதை வைத்து ஒட்டிக்கொண்டு அவன் ஹோட்டலில் வரவேற்பு நடைபெற்ற ஹாலுக்கான இலக்கத்தை லிப்ட் பட்டன்களில் அழுத்துகையில் நேரம் நான்கு இருபத்தைந்து ஆகியிருந்தது.

பளபளவென்ற உயர்தர ஹோட்டல்களில் ஒன்றான ரமாடாவின் அந்த ஹால் மாலை ஆறுமணியளவில் கவிந்து கொள்ளும் இருளைப்போல செயற்கையாய் இருளாக்கப்பட்டிருந்தது. ஹாலை அடையும் ஹாரிடோரின் வாசலில் இருந்த வளைவு வித்யாசமாக அழகாக உருண்டையான வர்ணப்பேப்பர் விளக்குகளில் மின்குமிழ்கள் எரிக்கப்பட்டு வெவ்வேறு நீளங்களில் தொங்கவிடப்பட்டிருந்தது அவன் கண்களையும் கருத்தையும் ஒரு சேரக்கவர்ந்துகொண்டது. ஒரு திடுக்கிடலுடன்!

என்னடா இது? எங்கெங்கு பார்க்கிலும் அந்த கார்டின் சாயலே தெரிகிறதே என்று அவன் நொந்து போய் விட்டான்.

வழக்கமான பூ அலங்காரம் இன்றி அழகிய வர்ணங்கள் கொண்ட உருண்டைப்பேப்பர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு திருமண மேடை  அந்த கார்டில் இருந்தது அவனுக்கு மனதில் அப்படியே படிந்து போயிருந்தது. இந்த பேப்பர் விளக்குகளும் அதையே நினைவூட்ட  உதட்டைக்கடித்துக்கொண்டு ஹாரிடோரில் நடந்தவன் தன் தலைமேலும் பக்கப்புறங்களிலும் வர்ண ஜாலம் காட்டிய அந்த அலங்காரத்தை ரசிக்கவே செய்தான்.

ஜோயல் வெட்ஸ் ஷலோ என்ற அட்டைவைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டை தாண்டிக்கொண்டு ஹாலில் காலடி எடுத்துவைத்தவன் இனிமையாக அதிர்ந்தான்.  வெளியே விளக்குகள் என்றால் உள்ளே பூக்களும் கலந்திருந்தது.உள்ளங்கையளவில் இருந்து ஒரு கால்பந்து அளவு வரை வேறுபட்டிருந்த பலவர்ண விளக்குகளுக்கிடையில் பூக்கள் சிரித்தன. எங்கேயும் மிகை உணர்வு தெரியாமல் இனிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஹேய் மனோ! என்ற அழைப்பில் திரும்பியவன் தனியாக ஒரு வட்ட மேஜையில் இருந்து கையசைத்த நண்பன் பிரசாத்துடன் போய் அமர்ந்து கொண்டான்.

ரியாஸ் எங்கே டா?

அவன் பெயின்ட் அடிச்சு முடிக்க டைம் எடுக்கும்ல? மெதுவா வருவான்!!! பிரசாத் சொல்லி முடிக்கவும் அதிகப்படி பளபளப்புடன் வந்த ரியாஸ் அதைகேட்டு அவன் முதுகில் ஒன்று வைத்தபடி அருகில் அமரவும் சரியாக இருந்தது.

டெக்கரேஷன் பிரமாதமா இருக்குடா! டேபிள் டெக்கரேஷனுக்கே செமையா மெனக்கெட்டிருக்காங்க!

டேபிளில் ஆரம்பித்து அந்த ஹால் முழுவதும் பார்வையை ஓட்டிய மனோ மணமக்கள்  அமரும் சோபாவையும் அதன் பின்னான  வளைவு அலங்காரத்தையும் கண்டதும் அப்படியே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு தடிப்பான மரத்தின் தண்டில்  கிளைகளை அடியில் இருந்து பத்து செண்டிமேட்டார் மட்டுமே இருக்குமாறு விட்டு முழுவதையும் வெட்டி விட்டு பிரவுன் பெயின்ட் மற்றும் வார்னிஷ் கொண்டு பளபளப்பாக்கி அந்தத்தண்டை வளைத்து நிறுத்தியது போல சோபாவின் பின்னே உயரமாய் மர வளைவு நின்று கொண்டிருந்தது. அதில் அழகாய் பூக்களை படரவிட்டு அலங்கரித்து அதில் வர்ண விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தது.

அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது. இதே மேடையைத்தான் அவன் அந்த கார்டில் பார்த்தது. அதில் மரத்துக்கு பதிலாக வெள்ளை பிளாடிக் சுருள் வைத்திருந்தார்கள். அங்கே பூக்களும் கலந்திருக்கவில்லை.

அப்படியானால் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே முழங்கால்களை தழுவி மறைக்கும் அளவில் டார்க் ப்ளூ ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்த படி ஹீல்ஸ் சத்தமிட கையில் ஒரு சீடியை கொண்டு அவசரமாய் வந்து கொண்டிருந்தாள் மீரா.

அவனை கண்டதும் மலர்ந்த விழிகள் பிறகு படபடப்புடன் அடங்க எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று குழம்புவள் போல ஒரு செக்கன் நின்று விழித்து பிறகு ஒரு சின்னப்புன்னகையை அவனுக்குக் கொடுத்துவிட்டு விலகிப்போனாள்.

அவனுக்கு வில்லனே இல்லாதிருக்க சாத்தியக்கூறுகள் பெருமளவில் உண்டு என்ற எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியை தர நண்பர்களின் பேச்சில் கலந்திருந்தாலும் அவளையே ரகசியமாய் பார்வையால் தொடர்ந்தபடி அமர்ந்திருந்தான் மனோத்யன்.

WKC அவர்களுடைய நிறுவனப்பெயர் போலும். கருநீல உடை அணிந்திருந்தவர்கள் எல்லோருமே பாட்ச்சாக அதை அணிந்திருந்தார்கள்.

மணமக்கள் அறிவிப்புடன் உள்ளே அழைக்கப்பட்டது. கேக் வெட்டுதல், ஷம்பெயின் ஊற்றுதல், அதை தொடர்ந்து அங்கே மணமக்களின் நண்பர்களின் நடனங்கள், மணமக்கள் ரகசியமாய் குடும்பத்தினருக்கு பரிசு வழங்கியமை என்று சகலமுமே அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. சுறுசுறுப்புடன் அதே நேரம் உயர் மட்ட நடை உடை பாவனைகளுக்கு பொருத்தமாக தாங்களும் இயைந்து விழாவை நாடத்திக்கொண்டிருந்த மீராவின் குழுவினர் பால் அவன் கவரப்பட்டான். அளவான சிரிப்புடன் அங்கு பிறர் கவனம் கலைக்காமல் நடமாடிக்கொண்டிருந்த மீராவின் பால் இன்னுமின்னும்!

அதோ மாப்பிள்ளை கிட்ட பேசிட்டிருக்க ப்ளூ ஷர்ட் பையனை பார்த்த ஞாபகம் இல்லையா? ரியாஸ் கேட்டான்.

ஆமாம் டா. நம்ம ஜூனியர் இல்ல?

ஆமாம். அவன் பேர் வசீகரன். எங்க அக்கா பொண்ணோட பர்ஸ்ட் பர்த்டேவை இவங்க தான் பண்ணிக்கொடுத்தாங்க. வசீகரனும் அவன் சிஸ்டரும் தான் எல்லாத்தையும் கோர்டிநேட் பண்ணுறாங்க,

சிஸ்டரா?

“அதோ ஹாரிடோர்ல வரா பாரு.” என்று அவன் மீராவை காண்பிக்க “இந்தப்பெண் என் ஸ்டூடன்ட்!” என்பதோடு அவளை பேச்சில் இருந்து வெட்டிய மனோ அண்ணனின் திருமணம் நெருங்குவதை சாக்காக காண்பித்து WKC பற்றி ரியாசிடம் விசாரித்தான்.

ரொம்ப கெட்டிக்காரங்கடா. பெரியப்பா சித்தப்பா பசங்க தான் ரெண்டு பேரும். ரெண்டு பேரண்ட்சும் ஒரே ஆக்சிடன்ட்ல செத்துப்போயிட்டாங்க. வசதியான வீடுன்றதால ரெண்டு பேரும் படிக்கவோ வேற எதுக்குமோ பிரச்சனை இருக்கலைன்னும் பிசினஸ் ஆசையில் படிக்கும்போதே தான் ஆரம்பிச்ச வேலை இதுன்னு அன்னிக்கு என்கிட்டே வசீகரன் சொன்னான். நீட்டா அதே நேரம் இன்னோவேட்டிவ்வா பண்ணுவாங்க மச்சான். நான் ரெக்கமன்ட் பண்ணுவேன் என்று ரியாஸ் சொல்லிக்கொண்டு போக

இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்த மீராவையே பார்த்துக்கொண்டிருந்த மனோவின் பார்வை மாறிபோயிருந்தது.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து முழுதாய் ஒரு மாதம் ஆகும்முன்னே  வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொண்ட அவன் எங்கே? அவள் எங்கே? அதைவிட அவன் குடும்பத்தை பிரிந்த காரணத்தை எங்கே சொல்லி நோவது?

வைத்த விழி எடுக்க முடியாமல் அவளையே அவன் தொடர்ந்துகொண்டிருக்க கையில் ஒரு பாக்கட்டுடன் ஒவ்வொரு டேபிளாகபோய் எதையோ கொடுத்துக்கொண்டிருந்த  மீரா அவர்களை நோக்கி வந்து பொதுவான புன்னகையுடன் சின்னதாய் ஒரு பிளாஸ்டிக் மாலையை முதலாவதாக அவள்புரம் அமர்ந்திருந்த மனோவிடம் கொடுத்தாள்.

என்னது இது? நெக்லசா?

சின்னச்சின்ன பிங்க் கார்ட்போடில் வெட்டப்பட்ட இதயவடிவங்கள் எட்டு வெள்ளைநிற பிளாஸ்டிக் மாலையில் கோர்க்கப்பட்டிருந்ததை கையில் வைத்து பார்த்தபடி வேண்டுமென்றே அவன் அவளை வம்புக்கு இழுக்க

நண்பர்கள் புரிந்து கொண்டு சிரித்தனர்.

தன்னை அவன் வம்புக்கு இழுப்பது புரிந்தாலும்  கடமை தவறாதவளாய் “இல்லல்ல.  உங்க டேபிள்ள இருக்கற எட்டுப்பேரும் மணமக்களுக்கு உங்களோட வாழ்த்துக்களை குட்டியா ஒவ்வொரு கார்டுலயும் எழுதுங்க. அப்புறமா நாங்கள் கலக்ட் பண்ணிக்கிறோம். என்று விளக்கம் தந்து கையில் பேனாவையும் கொடுத்தாள் மீரா.

என்ன எழுதணும்னு ஒரு சாம்பிள் சொல்லுங்க? பிரசாத் குரல் கொடுக்க

அது உங்க இஷ்டம் சார். என்று புன்னகை மாறாமலே பதிலளித்தவள் வேகமாய் நகர்ந்துவிட்டாள்.

இவர்கள் இருந்த டேபிளில் இருந்து மூன்று டேபிள்கள் தள்ளி அவள் இதயங்களை விநியோகித்த போதுதான் ஜோயலில் சகோதரி மகள் ஒரு பாடலுக்கு ஆட வந்தாள்.

சின்னதாய் ஒரு அறிமுகத்துடன் அவள் ஆடுவதற்காய் WKCயினர் பின்னணியில் ஒலிக்கவிட்ட  இசையை கேட்ட கணம் மனோவின் விழிகள் மீராவிடம் தாவின. அவளும் அவசரமாய் அந்தக்கணம் அவனை நோக்க இருவருக்குமிடையில் காலங்கள் உறைந்தன!

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..

என்று ஆரம்பித்து Ban Ke Titli Dil Uda Uda Uda Hai Kahin Door… என சென்னை எக்ஸ்ப்ரெஸ் பாடல் ஹால் முழுவதும் இனிமையாய் பரவ மனோ மீராவின் விழிகளையே ஊடுருவிக்கொண்டிருந்தான். அவளது விழிகளும் உனக்கு அன்று நான் எழுதிய வரிகள் இவை தான் என்று ஞாபகம் இருக்கிறதா? எதற்காக எழுதினேன் என்று புரிந்து கொண்டாயா என்றெல்லாம் தவிப்புடன் தன்னுடன் கேட்பது போல அவனே மொழிபெயர்த்தும் கொண்டான். அவள் பட்டென்று விழிகளை பிடுங்கிக்கொண்டு யாருடனோ பேசுவது போல வெட்கச்சிவப்புடன் திரும்பிக்கொள்ள மனோவிடமும் உல்லாசப்புன்னகை பிறந்தது! மனோ ஒன்றும் ஹீரோ இல்லைத்தான்! அவசரக்காரன் குழப்பவாதி தான். ஆனால் இவள் அவன் வாழ்வில் வந்தால் அவன் வாழ்வும் இனிமையாய் நேராகி விடாதா?  இனி ஆயுளுக்கும் மனோவுக்கு இந்த மீரா மட்டும் தான்! இவளைப்பெற எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயார் என்ற உத்வேகம் அவனுக்குள் பிறந்த மறுகணம் கீர்த்தி என்ற பெயர் அதிர்வுடன் நினைவு வந்தது! மறுகணமே முதல் வேலையாய் நாளை கீர்த்தியின் தந்தையை நேரிலேயே சந்தித்து தன் மறுப்பினை வெட்டொன்று துண்டு இரண்டாக உடைத்து சொல்லவேண்டும் என்று முடிவெடுத்தவன் ரிலாக்ஸாகி நண்பர்களின் பேச்சோடு தன்னைக்கலந்து கொண்டான்!

 

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுகின்றதா என்ன?

தொடரும்.