கொண்டாட்டம்.காம் -11

157580_3a00c778-f1ea-11e3-b27e-5a962523fab8

சனிக்கிழமை காலை பத்து மணி.

“மனோ!” குரலில் சின்னதான அழுத்தத்துடன் மனோவின் தோளில் மெல்லிசாய் தட்டினான் ஆதி.

நின்று கொண்டே கனவில் இருந்து விழிப்பவன் போல லேசான திடுக்கிடலுடன் அவனை நோக்கி திரும்பினான் மனோ.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஆண்கள் பிரிவில் அவர்கள் இருவருக்கும் முன்னே அவர்களுடைய முகத்தை ஒட்டவைத்த புன்னகையுடன் பார்த்தபடி பரப்பி வைக்கப்பட்ட உடைகளுக்கு முன்னே ஒரு சேல்ஸ் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

என்ன கேட்டே?

“இந்த சாக்லட் கலர் குர்தா உனக்கு நல்லா சூட்டாகும் வாங்கிக்கலாமான்னு கேட்டுட்டு இருக்கேன்!” ஆதியின் கண்கள் கேள்வியாய் மனோவை  ஊடுருவின.

குர்தாவா? எனக்கா? எங்கேஜ்மென்ட் உனக்குத்தானே? கிண்டலாக கழன்று கொள்ள முயன்றவனை ஆதி முறைத்தான்.

இப்போ எல்லாருமே குர்தா போட்டுக்கறாங்க! நீ ஒருத்தன் தான் இன்னும் புல் ஸ்லீவ் ஷர்ட்டும் டையுமா சுத்திட்டிருக்க! என்னோட எங்கேஜ்மென்ட்டுக்கு நீ தாராளமா குர்தா போட்டுக்கலாம். உனக்கு கலர் பிடிச்சதான்னு மட்டும் பாரு!

இதெல்லாம் எனக்கு செட்டாகாது ஆதி. என்னை விட்டிரு!

டேய்! நான் சொல்றேன். ஒருதடவை போட்டுப்பாரு. உனக்கு பிடிச்சதுன்னா மட்டும் எடுத்துக்கலாம். இல்லன்னா நான் போர்ஸ் பண்ணல. குர்த்தாவை பிரிச்சுக்கூட பார்க்காம வேண்டாம்னு அடம்பிடிக்காதே!

ஏண்ணா இப்படிப்பண்றே? என்று சலித்தபடி அதன் மேல் கண்களை ஓட்டினான் மனோ.

ஆதி தெரிவு செய்த சாக்லேட் பிரவுண் அவன் நிறத்துக்கு இன்னும் எடுப்பாக இருக்கும் தான். ஆனால் அவன் குர்தா அணிவதெல்லாம்…. என்று எண்ணியவன்  கழுத்தில் இருந்து மார்புவரை பட்டனை சுற்றி மட்டுமே செய்யப்பட்டிருந்த மென்பழுப்பு முத்து வேலைப்பாட்டின் எளிமையில் கொஞ்சம் இளகினான்.

சரி! ஆனா நான் பிட் ஆன் பண்ணி பார்த்துட்டு தான் சொல்லுவேன்.

ப்ளீஸ்!! கிண்டல் தொனியில் சொன்னபடி பிட் ஆன் ரூமை நோக்கி கைகளை நீட்டிவனை பார்த்து சிரித்தபடி அதற்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான் மனோ.

மாற்றிய கணத்திலேயே அந்த குர்தா அவன் தோற்றத்துக்கு கொடுத்த மாற்றத்தை அவன் கண்களாலேயே நம்ப முடியவில்லை! அவன் உயரத்தையும்  அமைப்பையும்  மட்டுமல்ல அவன் முகத்தின் அமசங்களையே அது நன்றாக எடுத்துக்காட்டுவது போலதோன்றியது!

ஒரு ராஜாவின் அதிகப்படி அலங்காரம் போல தோன்றுகின்றதா என்று வெகு நேரம் கண்ணாடியில் சுற்றிச்சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவன் அந்த குர்தா எந்த ஆங்கிளிலும் தன தோற்றத்துக்கு கம்பீரத்தை தவிர வேறேதும் தரவில்லை என்று தெளிந்தான்.

ஆதி ஒரு பார்வையில் கட்டை விரலை ரசனையுடன் தூக்கிக்காட்ட என்கேஜ்மெண்டுக்கு வாங்கிய உடைகளுடன் இதையும் சேர்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இருவரும் படிகளில் இறங்கி பில்லிங் கவுண்டருக்கு வந்தனர்.

எத்தனை மணிக்குடா உனக்கு வெட்டிங் ரிசப்ஷனுக்கு போகணும்?

நாலரைக்கு.

சரி. க்றிடியன் வெட்டிங்கா?

ஹ்ம்ம்.. ஜோயலை உனக்கு தெரியாதா?

பேஸ்புக்ல தான் பார்த்துருக்கேன்.

ஆமாம். அவன் ரொம்ப காலமா பாரின்ல இருந்தான். இப்போ கல்யாணத்துக்காகதத்தான் வந்திருக்கான்.

சரி. அதை விடு. எதுக்காக குழம்பி அடிக்கடி ஒரு மாதியா இருக்கேன்னு சொல்லு?

நானா??? இல்லையே? சமாளிக்க முயன்றான் மனோ.

பொய் சொல்லாதடா. ஆதி அவனை நம்பவில்லை.

சிறிது நேரம் மௌனமாக இருந்த மனோ பிறகு “காம்பஸ் பிரச்சனை ஆதி. ஒரு ஸ்டூடன்ட். கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருப்பா. ஆனா ரொம்ப கெட்டிக்காரி. அதுதான் யூத் கண்பாரன்சுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேன். ஆனா அவ அங்கே வந்து எதையும் கவனிக்காம படம் வரைஞ்சு விளையாடிட்டு இருந்தா. கொஞ்சம் ஹார்ஷா திட்டிட்டேன்.

ஓ..

அப்புறம் அன்னிக்கு அவ எழுதின ரிப்போர்ட் ரொம்ப நல்லா இருந்துது.  அவளோட ரிப்போர்ட்டைத்தான் யூத் மினிஸ்ட்ரிக்கு ரிப்போர்ட் பண்ண ஒரு சாம்பிளா அனுப்பினோம்.

உனக்கு கில்ட்டி ஆயிடுச்சு. அப்படித்தானே…

மனோ பதில் சொல்லவில்லை.

அவசரப்பட்டு எதையும் முடிவு பண்றது, பேசிடுறதை நீ எப்போடா மாத்திக்கப்போற?

இப்போ நீ எதுக்கு மறுபடியும் ஆரம்பிக்கிற?

உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப்போகத்தான்!

அப்பா ஒரு வார்த்தை கூப்பிடலையே ஆதி!

நீயாவது வந்து சாரி சொல்லி பேசேண்டா!!! நம்ம அப்பாதானே!

அப்போ அவர் பண்ணது தப்பில்லையா? நான் பேசினது மட்டும் தான் உங்களுக்கெல்லாம் தப்பு!

டேய்! அவர்கிட்ட நீ ரெண்டு நிமிஷம் அமைதியா பேசு! எல்லாம் புரியும். சும்மா மேலே மேலே பிரச்னையை வளர்க்காதேடா.

அவர் பண்ணதும் தப்பு நான் பண்ணதும் தப்பு. ஆனா அதிகம் காயப்பட்டது நான் தான்! சோ அவர் வந்து வான்னு கூப்பிட்டா நான் வருவேன். இல்லைன்னா என்னை விட்ருங்க. நான் இப்படியே இருந்துக்கறேன்.

டேய் முட்டாள்! நீ பண்ணது மட்டும் தாண்டா தப்பு! நீ எப்படி இந்த குர்த்தாவை வாங்கிக்கிட்ட என்றதை வீட்டுக்கு போய் கொஞ்சம் அமைதியாய் திங்க் பண்ணு. நான் இப்போ பண்ணதை தான் அப்பாவும் அன்னிக்கு பண்ணார்! உனக்கெங்கே புரியப்போகுது? போ போய் அட்லீஸ்ட் அந்த ஸ்டூடன்ட் கிட்டயாவது சாரி கேளு!

கார் மனோவின் வீட்டுக்கு முன் கிரீச்சிட்டு நின்றது. ஆதியிடம் தலையசைத்துவிட்டு மனோ இறங்கிக்கொள்ள

“சாரி. நான் உன் மைண்டை இன்னும் அப்செட்டாக்கி விட்டுட்டேன் போல. என்னால முடியலைடா.. வீட்டுல முதல் முறையா பெரிய விசேஷம் நடக்கும் போது நாம இப்படி உடைஞ்சு பொய் நிக்கறத்தை என்னால  தாங்க முடியல! அதுதான்! சாரிடா..” என்றபடி ஆதி புறப்பட்டுச்சென்றான்.

ஆயாசமாய் உள்ளே சென்ற மனோ ஆதி சிந்திக்க  சொன்ன விஷயத்தை மட்டும் யோசிக்காமல் மீராவை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தான்!

அவன் என்ன குற்றஉணர்விலா குழம்பிப்போயிருந்தான்? ஹா ஹா

மீராவை திட்டுவது அவனுக்கு எப்போதுமே வித்யாசமாக தோன்றுவதில்லை.

அவளை வலுக்கட்டாயமாக கான்பாரன்சில் இழுத்துபோட்டபோதே அவள் அங்கே வந்து விளையாடுவாள் என்று நினைத்தே இருந்தான்.

ஆனால் அவன் பேசுவதை கண்டதும் சீரியசாகி கவனிப்பாள் என்று எதிர்பார்த்தான் ஆனால் அவன் பேசியதை கூட கவனிக்காமல் ஒரு வில் யூ மாரி மீ? கார்டில் பெயர் எழுதி விளையாடியது தான் அவனுக்கு கடுப்பு!

சில நிமிடங்கள் பார்த்தாலும் அந்த கார்ட் அவனுக்கு ஆணியடித்தது போல நினைவிருந்தது!

இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து என்ன வெட்டி முறிக்கப்போகிறாள்?

கார்டை யாருக்கு கொடுக்கபோகிறாள்?

ஆண்டாள் பாசுரம் போல ஒன்றை வேறு எழுதி வைத்திருந்தாள். அது கூட அவனுக்கு மிகப்பரிச்சயமாக இருந்தது எப்படி?

அவள் யாரையோ காதலிப்பது தன்னை இவ்வளவு கோபப்படுத்தி நிலைதடுமாற வைக்கிறதென்றால்  அதற்கு ஒரே ஒரு காரணம் தானே என்று எண்ணும் போதே ஒரு இனிய அதிர்வு அவளுக்குள்! ஆனால் அந்த பாவி கையில் கார்டுடன் நின்றாளே இன்றைக்குள் அதை கொடுத்திருந்தாள் எனில் மனோ என்ன ஆவான் ?? அவனுக்கு தெரிந்து கொள்ளவே வேண்டியிருந்தது! சந்திக்கவும்  வழியில்லையே! இனிமேல் அவளை திங்கள் தானே சந்திக்க முடியும்?

இதெல்லாம் தான் அவனுடைய குழப்பங்கள். அது புரியாமல் இவன் வேறு!!!!

மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவன் அவளை facebook இல் பிடித்து சில பல யோசனைகளின் பின் ரிகுவேஸ்ட் அனுப்பினான்.

மூன்று மணிநேரங்கள் கடந்தும் அவள் அக்செப்ட் செய்யாததால் அவமானம் தாக்க இன்றிரவும் அவள் அக்செப்ட் செய்யவில்லையெனில் டிலீட் செய்துவிடலாம் என்ற முடிவுடன் ரிசப்ஷன் போவதற்காய் கோட் டையுடன் தயாராகி ஹோட்டல் ரமாடா நோக்கி காரை விரட்டினான்.

அடடா திருமணத்துக்கு அன்பளிப்பாய் பணம் கொடுக்க என்வலப் வாங்கவில்லையே என அப்போதுதான் நினைவு வர கார்ட் கடையொன்றுக்குள் நுழைந்தவன் திருமண வாழ்த்துக்கள் போட்டிருந்த கார்டை தேட ஆரம்பித்தான். அங்கேயும் வில் யூ மாறி மீ கார்ட்கள் பல வடிவங்களில்  இருந்து அவனுடைய தலை வேதனையை அதிகப்படுத்த அவசர அவசரமாய் தேடி எடுத்து கார்டுக்குள் பணம் வைத்து அதற்கான என்வலோப்பில் அதை வைத்து ஒட்டிக்கொண்டு அவன் ஹோட்டலில் வரவேற்பு நடைபெற்ற ஹாலுக்கான இலக்கத்தை லிப்ட் பட்டன்களில் அழுத்துகையில் நேரம் நான்கு இருபத்தைந்து ஆகியிருந்தது.

பளபளவென்ற உயர்தர ஹோட்டல்களில் ஒன்றான ரமாடாவின் அந்த ஹால் மாலை ஆறுமணியளவில் கவிந்து கொள்ளும் இருளைப்போல செயற்கையாய் இருளாக்கப்பட்டிருந்தது. ஹாலை அடையும் ஹாரிடோரின் வாசலில் இருந்த வளைவு வித்யாசமாக அழகாக உருண்டையான வர்ணப்பேப்பர் விளக்குகளில் மின்குமிழ்கள் எரிக்கப்பட்டு வெவ்வேறு நீளங்களில் தொங்கவிடப்பட்டிருந்தது அவன் கண்களையும் கருத்தையும் ஒரு சேரக்கவர்ந்துகொண்டது. ஒரு திடுக்கிடலுடன்!

என்னடா இது? எங்கெங்கு பார்க்கிலும் அந்த கார்டின் சாயலே தெரிகிறதே என்று அவன் நொந்து போய் விட்டான்.

வழக்கமான பூ அலங்காரம் இன்றி அழகிய வர்ணங்கள் கொண்ட உருண்டைப்பேப்பர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு திருமண மேடை  அந்த கார்டில் இருந்தது அவனுக்கு மனதில் அப்படியே படிந்து போயிருந்தது. இந்த பேப்பர் விளக்குகளும் அதையே நினைவூட்ட  உதட்டைக்கடித்துக்கொண்டு ஹாரிடோரில் நடந்தவன் தன் தலைமேலும் பக்கப்புறங்களிலும் வர்ண ஜாலம் காட்டிய அந்த அலங்காரத்தை ரசிக்கவே செய்தான்.

ஜோயல் வெட்ஸ் ஷலோ என்ற அட்டைவைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டை தாண்டிக்கொண்டு ஹாலில் காலடி எடுத்துவைத்தவன் இனிமையாக அதிர்ந்தான்.  வெளியே விளக்குகள் என்றால் உள்ளே பூக்களும் கலந்திருந்தது.உள்ளங்கையளவில் இருந்து ஒரு கால்பந்து அளவு வரை வேறுபட்டிருந்த பலவர்ண விளக்குகளுக்கிடையில் பூக்கள் சிரித்தன. எங்கேயும் மிகை உணர்வு தெரியாமல் இனிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஹேய் மனோ! என்ற அழைப்பில் திரும்பியவன் தனியாக ஒரு வட்ட மேஜையில் இருந்து கையசைத்த நண்பன் பிரசாத்துடன் போய் அமர்ந்து கொண்டான்.

ரியாஸ் எங்கே டா?

அவன் பெயின்ட் அடிச்சு முடிக்க டைம் எடுக்கும்ல? மெதுவா வருவான்!!! பிரசாத் சொல்லி முடிக்கவும் அதிகப்படி பளபளப்புடன் வந்த ரியாஸ் அதைகேட்டு அவன் முதுகில் ஒன்று வைத்தபடி அருகில் அமரவும் சரியாக இருந்தது.

டெக்கரேஷன் பிரமாதமா இருக்குடா! டேபிள் டெக்கரேஷனுக்கே செமையா மெனக்கெட்டிருக்காங்க!

டேபிளில் ஆரம்பித்து அந்த ஹால் முழுவதும் பார்வையை ஓட்டிய மனோ மணமக்கள்  அமரும் சோபாவையும் அதன் பின்னான  வளைவு அலங்காரத்தையும் கண்டதும் அப்படியே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு தடிப்பான மரத்தின் தண்டில்  கிளைகளை அடியில் இருந்து பத்து செண்டிமேட்டார் மட்டுமே இருக்குமாறு விட்டு முழுவதையும் வெட்டி விட்டு பிரவுன் பெயின்ட் மற்றும் வார்னிஷ் கொண்டு பளபளப்பாக்கி அந்தத்தண்டை வளைத்து நிறுத்தியது போல சோபாவின் பின்னே உயரமாய் மர வளைவு நின்று கொண்டிருந்தது. அதில் அழகாய் பூக்களை படரவிட்டு அலங்கரித்து அதில் வர்ண விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தது.

அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது. இதே மேடையைத்தான் அவன் அந்த கார்டில் பார்த்தது. அதில் மரத்துக்கு பதிலாக வெள்ளை பிளாடிக் சுருள் வைத்திருந்தார்கள். அங்கே பூக்களும் கலந்திருக்கவில்லை.

அப்படியானால் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே முழங்கால்களை தழுவி மறைக்கும் அளவில் டார்க் ப்ளூ ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்த படி ஹீல்ஸ் சத்தமிட கையில் ஒரு சீடியை கொண்டு அவசரமாய் வந்து கொண்டிருந்தாள் மீரா.

அவனை கண்டதும் மலர்ந்த விழிகள் பிறகு படபடப்புடன் அடங்க எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று குழம்புவள் போல ஒரு செக்கன் நின்று விழித்து பிறகு ஒரு சின்னப்புன்னகையை அவனுக்குக் கொடுத்துவிட்டு விலகிப்போனாள்.

அவனுக்கு வில்லனே இல்லாதிருக்க சாத்தியக்கூறுகள் பெருமளவில் உண்டு என்ற எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியை தர நண்பர்களின் பேச்சில் கலந்திருந்தாலும் அவளையே ரகசியமாய் பார்வையால் தொடர்ந்தபடி அமர்ந்திருந்தான் மனோத்யன்.

WKC அவர்களுடைய நிறுவனப்பெயர் போலும். கருநீல உடை அணிந்திருந்தவர்கள் எல்லோருமே பாட்ச்சாக அதை அணிந்திருந்தார்கள்.

மணமக்கள் அறிவிப்புடன் உள்ளே அழைக்கப்பட்டது. கேக் வெட்டுதல், ஷம்பெயின் ஊற்றுதல், அதை தொடர்ந்து அங்கே மணமக்களின் நண்பர்களின் நடனங்கள், மணமக்கள் ரகசியமாய் குடும்பத்தினருக்கு பரிசு வழங்கியமை என்று சகலமுமே அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. சுறுசுறுப்புடன் அதே நேரம் உயர் மட்ட நடை உடை பாவனைகளுக்கு பொருத்தமாக தாங்களும் இயைந்து விழாவை நாடத்திக்கொண்டிருந்த மீராவின் குழுவினர் பால் அவன் கவரப்பட்டான். அளவான சிரிப்புடன் அங்கு பிறர் கவனம் கலைக்காமல் நடமாடிக்கொண்டிருந்த மீராவின் பால் இன்னுமின்னும்!

அதோ மாப்பிள்ளை கிட்ட பேசிட்டிருக்க ப்ளூ ஷர்ட் பையனை பார்த்த ஞாபகம் இல்லையா? ரியாஸ் கேட்டான்.

ஆமாம் டா. நம்ம ஜூனியர் இல்ல?

ஆமாம். அவன் பேர் வசீகரன். எங்க அக்கா பொண்ணோட பர்ஸ்ட் பர்த்டேவை இவங்க தான் பண்ணிக்கொடுத்தாங்க. வசீகரனும் அவன் சிஸ்டரும் தான் எல்லாத்தையும் கோர்டிநேட் பண்ணுறாங்க,

சிஸ்டரா?

“அதோ ஹாரிடோர்ல வரா பாரு.” என்று அவன் மீராவை காண்பிக்க “இந்தப்பெண் என் ஸ்டூடன்ட்!” என்பதோடு அவளை பேச்சில் இருந்து வெட்டிய மனோ அண்ணனின் திருமணம் நெருங்குவதை சாக்காக காண்பித்து WKC பற்றி ரியாசிடம் விசாரித்தான்.

ரொம்ப கெட்டிக்காரங்கடா. பெரியப்பா சித்தப்பா பசங்க தான் ரெண்டு பேரும். ரெண்டு பேரண்ட்சும் ஒரே ஆக்சிடன்ட்ல செத்துப்போயிட்டாங்க. வசதியான வீடுன்றதால ரெண்டு பேரும் படிக்கவோ வேற எதுக்குமோ பிரச்சனை இருக்கலைன்னும் பிசினஸ் ஆசையில் படிக்கும்போதே தான் ஆரம்பிச்ச வேலை இதுன்னு அன்னிக்கு என்கிட்டே வசீகரன் சொன்னான். நீட்டா அதே நேரம் இன்னோவேட்டிவ்வா பண்ணுவாங்க மச்சான். நான் ரெக்கமன்ட் பண்ணுவேன் என்று ரியாஸ் சொல்லிக்கொண்டு போக

இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்த மீராவையே பார்த்துக்கொண்டிருந்த மனோவின் பார்வை மாறிபோயிருந்தது.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து முழுதாய் ஒரு மாதம் ஆகும்முன்னே  வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொண்ட அவன் எங்கே? அவள் எங்கே? அதைவிட அவன் குடும்பத்தை பிரிந்த காரணத்தை எங்கே சொல்லி நோவது?

வைத்த விழி எடுக்க முடியாமல் அவளையே அவன் தொடர்ந்துகொண்டிருக்க கையில் ஒரு பாக்கட்டுடன் ஒவ்வொரு டேபிளாகபோய் எதையோ கொடுத்துக்கொண்டிருந்த  மீரா அவர்களை நோக்கி வந்து பொதுவான புன்னகையுடன் சின்னதாய் ஒரு பிளாஸ்டிக் மாலையை முதலாவதாக அவள்புரம் அமர்ந்திருந்த மனோவிடம் கொடுத்தாள்.

என்னது இது? நெக்லசா?

சின்னச்சின்ன பிங்க் கார்ட்போடில் வெட்டப்பட்ட இதயவடிவங்கள் எட்டு வெள்ளைநிற பிளாஸ்டிக் மாலையில் கோர்க்கப்பட்டிருந்ததை கையில் வைத்து பார்த்தபடி வேண்டுமென்றே அவன் அவளை வம்புக்கு இழுக்க

நண்பர்கள் புரிந்து கொண்டு சிரித்தனர்.

தன்னை அவன் வம்புக்கு இழுப்பது புரிந்தாலும்  கடமை தவறாதவளாய் “இல்லல்ல.  உங்க டேபிள்ள இருக்கற எட்டுப்பேரும் மணமக்களுக்கு உங்களோட வாழ்த்துக்களை குட்டியா ஒவ்வொரு கார்டுலயும் எழுதுங்க. அப்புறமா நாங்கள் கலக்ட் பண்ணிக்கிறோம். என்று விளக்கம் தந்து கையில் பேனாவையும் கொடுத்தாள் மீரா.

என்ன எழுதணும்னு ஒரு சாம்பிள் சொல்லுங்க? பிரசாத் குரல் கொடுக்க

அது உங்க இஷ்டம் சார். என்று புன்னகை மாறாமலே பதிலளித்தவள் வேகமாய் நகர்ந்துவிட்டாள்.

இவர்கள் இருந்த டேபிளில் இருந்து மூன்று டேபிள்கள் தள்ளி அவள் இதயங்களை விநியோகித்த போதுதான் ஜோயலில் சகோதரி மகள் ஒரு பாடலுக்கு ஆட வந்தாள்.

சின்னதாய் ஒரு அறிமுகத்துடன் அவள் ஆடுவதற்காய் WKCயினர் பின்னணியில் ஒலிக்கவிட்ட  இசையை கேட்ட கணம் மனோவின் விழிகள் மீராவிடம் தாவின. அவளும் அவசரமாய் அந்தக்கணம் அவனை நோக்க இருவருக்குமிடையில் காலங்கள் உறைந்தன!

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..

என்று ஆரம்பித்து Ban Ke Titli Dil Uda Uda Uda Hai Kahin Door… என சென்னை எக்ஸ்ப்ரெஸ் பாடல் ஹால் முழுவதும் இனிமையாய் பரவ மனோ மீராவின் விழிகளையே ஊடுருவிக்கொண்டிருந்தான். அவளது விழிகளும் உனக்கு அன்று நான் எழுதிய வரிகள் இவை தான் என்று ஞாபகம் இருக்கிறதா? எதற்காக எழுதினேன் என்று புரிந்து கொண்டாயா என்றெல்லாம் தவிப்புடன் தன்னுடன் கேட்பது போல அவனே மொழிபெயர்த்தும் கொண்டான். அவள் பட்டென்று விழிகளை பிடுங்கிக்கொண்டு யாருடனோ பேசுவது போல வெட்கச்சிவப்புடன் திரும்பிக்கொள்ள மனோவிடமும் உல்லாசப்புன்னகை பிறந்தது! மனோ ஒன்றும் ஹீரோ இல்லைத்தான்! அவசரக்காரன் குழப்பவாதி தான். ஆனால் இவள் அவன் வாழ்வில் வந்தால் அவன் வாழ்வும் இனிமையாய் நேராகி விடாதா?  இனி ஆயுளுக்கும் மனோவுக்கு இந்த மீரா மட்டும் தான்! இவளைப்பெற எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயார் என்ற உத்வேகம் அவனுக்குள் பிறந்த மறுகணம் கீர்த்தி என்ற பெயர் அதிர்வுடன் நினைவு வந்தது! மறுகணமே முதல் வேலையாய் நாளை கீர்த்தியின் தந்தையை நேரிலேயே சந்தித்து தன் மறுப்பினை வெட்டொன்று துண்டு இரண்டாக உடைத்து சொல்லவேண்டும் என்று முடிவெடுத்தவன் ரிலாக்ஸாகி நண்பர்களின் பேச்சோடு தன்னைக்கலந்து கொண்டான்!

 

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுகின்றதா என்ன?

தொடரும்.

5 thoughts on “கொண்டாட்டம்.காம் -11

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: