கொண்டாட்டம் .காம்- 15

5c2d58a51483c27ced134689473c1e73

வெள்ளி மாலை

அழைப்பு மணியை அழுத்திவிட்டு உடலெங்கும் ஓடும் பதட்ட அலைகளை சமன் செய்ய முயன்றபடி காலடியோசைக்கு காதுகளை கொடுத்துக்கொண்டு  உதடு கடித்து நின்றான் மனோ!

மீராவின் பேச்சும், கிட்டத்தட்ட எல்லா உறவினர் வீட்டுக்கும் நேரில் போனதும் அவனுக்கு ஒரு கண்திறப்பாகவே அமைந்திருந்தது. உறவினர் நடுவில் அவனுடைய செயலால் அவன் குடும்பத்துக்கு எவ்வளவு தலையிறக்கம்? முன்பெல்லாம் அப்பா பேசினாலே புன்னகையோடு கேட்டு மறுபேச்சுப்பேசாதவர்கள் “குடும்பத்தில் எல்லாம் சரியாகிவிட்டதா?”  என்று மறைமுகமாய் பரிதாபம் காட்டி பேசும் படி நானே வைத்துவிட்டேனே என்பது அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது.

அவர்களுடைய பக்கத்து உறவினர்கள் பேசாமல் இருந்தாலும் அண்ணியின் உறவினர்களுக்கு அவன் பேசுபொருளாய்த்தானே ஆவான். தேவையே இல்லாமல் அண்ணன் தலைகுனிய வேண்டுமா?

காலம் கடக்க முன்னர் மனோ அதை சரி செய்தே ஆகவேண்டும்! என்று மனம் முரண்ட ஆரம்பித்து விட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியக்காரணம் நாளை வீட்டில் விசேஷம், வீட்டினர் எல்லாம் குதூகலமாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார் என்ற எண்ணமே அவனை கொத்திக்கொண்டிருந்தது. அதற்கு மேல் அவனால் தனியாக அங்கே கிடக்க முடியவில்லை. பிடிவாதமாவது மண்ணாவது. மன்னிக்கமுடியாத தவறு ஒன்றும் உலகத்தில் உள்ளதா? அதுவும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில்! நினைத்த மாத்திரத்தில் கிளம்பி வந்துவிட்டவனுக்கு இப்போதுதான் பக் பக்கென்றது…

அப்பா போ என்று சொல்லிவிடுவாரோ?

சோம்பலாய் கிளிக்கித்திறந்த கதவு அன்னை சித்ரா முகத்தில் பெரும் ஆச்சர்யத்தையும் கண்ணீரையும் காண்பித்தபடி விரியத்திறந்தது!

அன்னையோடு அடிக்கடி பேசுபவனே ஆயினும் அவன் மீண்டும் வீட்டுக்கு வரும் தினம் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்காததினால் சித்ராவின் கண்கள் மழை பொழிய ஆரம்பிக்க ஓரெட்டில் அன்னையை நெருங்கி அணைத்துக்கொண்டு “என்னை உள்ளே கூப்பிட மாட்ட்டீங்களாம்மா?” என்றான் மனோ ஏக்கமாக

“இது உன் வீடு டா! “என்று அதட்டியபடி அவனை விடுவித்தவர் கைகளை மட்டும் விடாமல் உள்ளே அழைத்துச்சென்றார்.

வழக்கம் போல உள்ளே நுழைந்ததுமே ஒருபக்கச்சுவரை கிட்டத்தட்ட அடைத்தபடி அவனை வரவேற்றது அவர்களுடைய பிரமாண்டமான குடும்பப்படம்!

நித்யாவின் பட்டமளிப்பு விழா அன்று மாலை எடுத்தது இந்த புகைப்படம். வெளியே இருந்த புல்லில் பெஞ்ச் போட்டு அப்பா அம்மா அமர்ந்திருக்க ஆதியும் நித்யாவும் பெஞ்சுக்கு பின்னே நின்று சிரிக்க இவன் மட்டும் பெற்றோருக்கு முன்னே புல்லில் படுத்த வாக்கில் ஒருக்களித்திருந்து சிரித்துக்கொண்டிருந்தான்.

ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்து வீடு வந்த உணர்வில் ஹோவென உணர்ச்சிகள் அடைத்துக்கொண்டு வர பிரிவு இடைவெளியே இன்றி சகலத்தையும் அடைத்து நிரப்ப வேண்டும் போல் மனதுக்குள் வேகம் பிறந்தது.

“ஆதி ரொம்ப சந்தோஷப்படுவான் நீ வந்தது தெரிஞ்சா!” பேசியபடியே சித்ரா போனை நோக்கிப்போக..

“சித்து நீ கொடுத்த லிஸ்டில் சந்தனம் மட்டும் உதயாஸ்ல இல்லையாம். நாம வேலையாவை அனுப்பி வசந்தத்துல வாங்கிக்கலாம்” என்றபடி கதவைத்திறந்து கொண்டு  உள்ளே வந்த ராஜவேல் அவனைக்கண்டதும் ஒரு கணம் அப்படியே நின்று விட்டார். பார்வை மட்டும் லேசாய் சுருங்கியிருந்தது.

அப்பா என்று அவன் உதடு பிரித்து அழைக்க ஆரம்பிக்க ராஜவேலோ லேசாக நெற்றியை பிடித்தபடி “ எனக்கு தலை வலிக்கிற போல இருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்” என்றபடி அறையை நோக்கித்திரும்ப மனோத்யன் முகம் விழுந்து விட்டது.

சித்ரா தவிப்புடன் “ராஜு.. மனோங்க.. ஒண்ணுமே சொல்லாம போறீங்களே” என்று கணவரை அழைத்தார்.

நான் என்ன பேச வேண்டும் என்பது போல திரும்பி மனோவையே ஊடுருவிப்பார்த்தவரின் பார்வையை தாங்க இயலாமல் லேசாக கண்களில் நீர் திரையிட்டுக்கொள்ள நிமிர்ந்தவனின் காதில் ஈயம் பாய்ச்சியது போல மாடியில் இருந்து நித்யாவின் குரல் கேட்டது!

“நான் கடுப்பாயிருவேண்டி!!! இப்போ என்ன உன் லெக்சரர் என்னோட அண்ணா..சரி. அதுக்காக நீ எதுக்கு மூஞ்சியை உர்ர்ர்ர் னு தூக்கி வச்சிருக்க? நான் பாட்டுக்கு லூசு போல பேசிட்டிருக்கேன். அவன் என்ன கடிச்சா தின்னுருவான் உன்னை!” என்று மேலே  அவள் படபடக்க இங்கே இவன் இதயம் ஒருகணம் நின்றே போனது

ஒரே நேரத்தில் இருமுனைத்தாக்குதலை எப்படி அவன் சமாளிக்க முடியும்? இந்த திருப்பத்தை எதிர்பார்க்காதவனாய் திகைத்தாலும் முதலில் கண்ணெதிரே நின்ற அப்பாவிடம் கவனத்தை செலுத்தி சாரிப்பா என்று முணுமுணுத்தான்.

அவனை கொஞ்சமும் கவனிக்காதவராய் சித்ராவிடம் திரும்பியவர் “ வான்னு கூப்பிடணும்னு சொல்றியா? இங்கே யாரும் அவனை போகச்சொல்லல. அவனே தான் கிளம்பிப்போனான். இப்போவும் அவனே தான் வந்திருக்கான். அவனுக்கு ஞாபகம் இல்லைன்னாலும் இதுவும் அவன் வீடுதான். அவன் பேசினது எதையுமே என்னால மறக்க முடியும்னு தோணல. நானும் மனுஷன் தானே.. ” அவர் குரல் உடையவும்

அப்பா என்றபடி மனோ ஒரு அடி எடுத்துவைக்க

அதற்குள் அவர் அறையை நோக்கி திரும்பியிருந்தார்.

அடிபட்ட குழந்தையாய் அவர் போன திசையையே பார்த்தபடி நின்றிருந்தவனின் கையை அழுத்திய சித்ரா.. “ அப்பா சரியாயிடுவார்டா. மனசை குழப்பிக்காம  நீ உள்ளே போ..” என்று கலக்கத்தை காண்பிக்காமல் அவனை அழைத்தவர் மாடியை ஒருகணம் பார்த்து பட்டென முகபாவத்தை மாற்றிக்கொண்டு “ மீரும்மா.. அப்படியே ஓடிராதே..நான் குழல் புட்டு எடுத்து வச்சேன் உனக்கு” என்றபடி கிச்சனுக்குள் விரைந்தார்.

முகத்தில் தப்பான தருணத்தில் வந்துவிட்டோம் என்ற சங்கடத்தை முகத்தில் அப்பட்டமாய் காண்பித்தபடி படிகளில் நித்யாவோடு இறங்கி  வந்த மீரா அவர் தலை மறைந்ததுமே அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பதென்று தெரியவில்லை என்பார்களே அது இதுதான். சங்கடமாய் அவள் கண்களை சந்தித்தவன் பின்னாலேயே நித்யா அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்தபடி வருவதைக்கண்டதும் அவசரமாய் முகபாவத்தை மாற்றிக்கொண்டு “ஹாய்” என்றான்.

ஆச்சரயப்பார்வையை அவனை நோக்கி வீசினாலும் அவனை பின்பற்றி “ஒரு பட்டுக்கொள்ளாத ஹாய் சார்” உடன் மீராவும் தான் கொண்டுவந்த கைப்பையை எடுக்க அதற்குள் எவர்சில்வர் தூக்குவாளிகளோடு வந்திருந்த சித்ரா வேலுவை அழைத்து அதை காரில் வைக்கும் படி சொன்னாள்.

எதுக்கு ஆண்ட்டி இவ்வளவும்?

நீங்க மூணு பேர் இருக்கீங்களேம்மா.. எல்லார்க்கும் சேர்த்துத்தான் செஞ்சேன்

“ஆஹா.. இன்னிக்கு என் சமையலை சாப்பிடற கொடுமைல இருந்து எல்லாரும் தப்பிச்சிட்டாங்க” என்று மீரா சிரிக்க நித்யா உதட்டைக்கடித்தபடி அவனையும் அன்னையையும் பார்க்க மனோ குழப்பமாக இருவரையும் பார்த்து நின்றான்.

முதல் முறையாக வீட்டுக்கு வந்தவள் போல இல்லையே அம்மா இவளைக்கவனிக்கும் விதம்…மனம் பல யோசனைக்கொடுகளை வரைந்தது.

அடப்போமா ..எங்க வீட்டுல இருக்கறதுக்கு வெறும் பேக்கிங் மட்டும் தான் தெரியும். சமையல் கத்துக்கோடின்னு நான் கத்திட்டே இருக்கேன். அவ எங்கே கேக்கறா! நீ எவ்வளவு நல்ல பொண்ணு!

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சைம்மா.. ரொம்ப அவளுக்கு சப்போர்ட் பண்ணாதே  என்று போலிக்கோபமாய் நித்யா ஆரம்பிக்க வேலு காரை எடுத்து வரும் ஓசை கேட்டது.

அத்தோடு நிறுத்திக்கொண்டு இவளை விட்டுட்டு வரேன் என்று நித்யா கிளம்ப மீரா இவனிடமும் சம்பிரதாயமாய் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

கேள்வியாய்  தாயை ஏறிட்டவனை சங்கடமாய் பார்த்த சித்ரா “நித்து இப்படி மீராவோட அண்ணா, பேரு வசீகரன். எனக்கு புடிச்சிருக்கு போல இருக்கு. இந்த பையன் உங்களுக்கு ஒகேவாப்பான்னு வந்து கேட்டா மனோ..நல்லா விசாரிச்சோம். தங்கமான பையன். என்ன இப்போதான் பிசினஸ் ஆரம்பிக்கிறான்.  நித்யாவோட சொத்தே அவங்களுக்கு போதுமே அப்புறம் எதுக்கு பணத்தை பார்க்கணும்னு நாங்க ஒகே சொல்லிட்டோம்.” என்று தெரிவித்தார்

முகம் இறுகிப்போய் நின்றவன் “ வசீகரன் என் ஜூனியர் தான்” என்று மட்டும் சொன்னான்.

நித்து தான் அவளே உன்கிட்ட சொல்லணும்னு சொல்லிட்டாப்பா. அதனால தான் உனக்கு யாரும் சொல்லலை.

ஹ்ம்ம்… அவள் ஏன் சொல்லவில்லை என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. தலைக்குள் சுள்ளேன்று பரவிய வேதனையை மறைத்தபடி லேசாய் புன்னகைக்க முயன்றான் அவன்.

இந்த பொண்ணு கூட என்னோட ஸ்டூடன்ட் மா.

தெரியும் டா.. இன்னிக்கு வீட்டுக்கு வரும்வரை அவளுக்கு விஷயம் தெரியாது. ஹால்ல உன் போட்டோவை பார்த்து அலறிட்டா! ஹா ஹா ரொம்ப நல்ல பொண்ணு.

நீ ஏன் இப்போ அவளுக்கு தேவையில்லாம சர்டிபிகேட் கொடுக்கற?

தாயில்லா பொண்ணு! இன்னிக்கு வந்ததுமே என்னை தேடிட்டு வந்தது நிஜமாவே அவங்க வீட்டுக்கு நித்துவை கொடுக்க எங்களுக்கு சம்மதமான்னு கேட்டா. மாப்பிள்ளைக்கு வேற யாரும் இல்லாததினால அவதானாம் இதெல்லாம் சரியா தெரிஞ்சுக்கணுமாம்! நீ பண்ணுவியா இப்படி?

சரி சரி அவளை விடு. ஒரு மனுஷன் ஒரு மாசத்துக்கு மேல சாப்பாடுன்றதையே மறந்து போய் காய்ஞ்சு வர்றேன். எனக்கு ஒரு வாய் கொடுக்கணும்னு உனக்கு தோணுதா? ஊருக்கெல்லாம் பார்சல் பண்ணிட்டு இருக்க!

அவன் நினைத்தபடியே..

ஹய்யோ… நீ பாக்கை வச்சிட்டு வா..நான் எடுத்துவைக்கிறேன் என்றபடி அவர் கிட்சனுக்குள்ளே வேகமாய்  மறைந்துவிட “மீரா இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வாள்?” என்று தீவிரமாய் சிந்தித்தபடி மாடிப்படிகளை ஏறிக்கடந்தான் மனோத்யன்.

குளித்து உடைமாற்றி மீண்டும் கீழே வந்து டைனிங் டேபிளில் அன்னையோடு அமர்ந்து சூடான உணவை ஒரு பிடி பிடிக்கையில் நித்யா திரும்பி வந்தாள்.

உலகம் திரும்பி சுத்துதே! அதுக்குள்ளே திருந்திட்டியா நீ? என்று கேட்டபடி அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எனக்குத்தெரியாமல் மாப்பிள்ளை எல்லாம் பார்த்து டிசைட் பண்ணிருக்க. வாழ்த்துக்கள்

ம….மனோ சாரி. நீ வீட்டுக்கு வருவேன்னு எனக்குத்தெரியாது. நாளை பங்ஷன்ல மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சேன்.

அதாவது டிசிஷன் எடுத்தப்புறம் ஜஸ்ட் ஒரு இன்போர்மேஷனா எனக்கு சொல்லனும்னு இருந்த..அப்படித்தானே?

நீ மட்டும் என்கிட்டே கேட்டுட்டா டிசைட் பண்ணினாய்? வேணாம்னு எவ்ளோ தடவை சொன்னேன்! கேட்டியா?

நான் டிசைட் பண்ணிட்டேன்னு உன் கிட்ட எப்பயாவது சொன்னேனா? நீ வந்து நிறுத்துன்னு கத்துன? பிக்ஸ் ஆகாத கல்யாணத்தை நான் எப்படி நிறுத்த?

மனோண்ணா!!!! என்ன சொல்ற நீ?    நிஜமாவா தம்பி? நித்யாவும் சித்ராவும் முகமெல்லாம் சிரிப்புடன் அவனை ஆர்வமாய் கேட்க பட்டென்று சிரித்துவிட்டான் அவன்.

ஹ்ம்ம்.. அவர் என்கிட்டே கேட்டார் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி. உடனே மூஞ்சில அடிச்ச போல இல்லைன்னு சொல்லக்கூடாதுல்ல. அதோட அப்பா கூட கொஞ்சம் கோபம் வேற. அவர் காண்டாகட்டும்னு யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன். அந்த கதை தான் இந்த லட்சணத்துல உங்க காதுக்கு வந்தது. நீங்களும் நம்பிட்டீங்க. அப்பா காண்டாகட்டும்னு நானும் கிளியர் பண்ணாம விட்டேன்!

மனோ… தப்பு..பிடிக்கலன்னா பட்டுன்னு சொல்லிடணும். அந்தப்பொண்ணு வேண்டாத கற்பனையை வளர்த்தா அப்புறம் அது நமக்குத்தான் பாவம்டா!

சொல்லிட்டேன்மா.. அவர் வெளிநாட்டுக்கு போயிட்டு இன்னிக்கு தான் வந்திருந்தார். நேரே போய் பார்த்து சொல்லிட்டே வந்துட்டேன்.

சாரி மனோ… நித்யா அவன் முகத்தையே பார்க்க சிரித்து விட்டவன்

உன் ஆளு என் ஜூனியர் தான். கேள்விப்பட்டவரை நல்ல பையன் தான். எதுக்கும் நாளை பார்த்துட்டு சொல்றேன் என்று சிரித்தபடி அவள் மூக்கைப்பிடித்து திருகினான்.

வலிக்கிது விட்றா!!!!  அவன் சிரித்தபடியே கையை  எடுக்க

தாங்க்ஸ் என்றாள் அவள் முகமெல்லாம் சிரிப்புடன்!

அதெல்லாம் செல்லாது! ஞாபகம் வச்சுக்கோ! உன்கிட்ட நான் ஏதாவது கண்டிப்பா கேட்பேன்! மீராவின் நினைவில் வந்த சிரிப்பில் அவன் கன்னம் குழிந்தது!

ஹேய் ஹேய்!!! எனக்கு புரிஞ்சுடுச்சு!!! Yesssss என்று உற்சாகமாய் கத்திய நித்யா  அவனைப்பார்த்து கண்சிமிட்டினாள்.

எனக்கும் சொல்லேண்டி!!! ஆர்வமாய் பரபரத்த சித்ராவிடம் “ மை டியர் டியூப்லைட் மம்மியே! கொஞ்ச நாள் சஸ்பென்ஸ் ஓடவே சுத்துங்க!”

போடி நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.எனக்கும் புரிஞ்சிடிச்சு!!!  என்றபடிஅவர் இருவரையும் முறைத்தார்

என்ன புரிஞ்சது? கொஞ்சம் சொல்லேன்மா?

அதெல்லாம் நான் உங்க கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல!!

ஓஹோ… மனோவும் நித்யாவும் ஹைபை கொடுத்து சிரிக்கவும் சித்ரா இருவரையும் மாறி மாறிப்பார்த்தவர்  பிறகு நிதானமாய் பாத்திரங்களை எடுக்க ஆரம்பித்தார்.

“கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்துதான் ஆகணும்”

 

 

 

 

One thought on “கொண்டாட்டம் .காம்- 15

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: