கொண்டாட்டம்.காம் -16

images

“சாரி மீரா, நீ என்னை வெறுத்துடுவேன்ற பயத்துல தான் நான் உன் கிட்ட  பொய் சொன்னேன். கோபமா?” மனோ மறுமுனையில் கொஞ்சலாக கேட்டுக்கொண்டிருந்தான்.

“ அப்படியெல்லாம் இல்ல. ஆனாலும் நித்து என்கிட்டே இப்படி மறைச்சிருக்க கூடாது. உங்க வீட்டு ஹால்ல போட்டோஸ் பார்த்ததுமே..ஹையையோனு சொல்லிட்டேன். அவமானமா போச்சு! “

ஹா ஹா ஹா தட் அந்த குழந்தையே நான் தான் மொமென்ட் ஹா ஹா

மீராவுக்கும் உதடுகள் மெல்லிய சிரிப்பில் மலர்ந்தன.

ஹேய் வசீகரன் எங்க வீட்டு மாப்பிள்ளைன்னா நீ எனக்கு முறைப்பொண்ணு தெரியுமா?

அப்படியா?

என்ன அப்படியா? உனக்கு இன்னும் கோபம் போகலைல்ல?

அப்படியில்ல …

பார்த்தியா? நான் ஏன் அப்படி சொன்னேன்னு எல்லாமே உன்கிட்ட சொல்லிட்டேன். ஒரு மனுஷன் தப்பு பண்றதும் திருந்தறதும் சகஜம். இதை நீ ஏன் இவ்ளோ பெரிய விஷயமா தூக்கி பிடிச்சிட்டு இருக்க?

நான் எதுக்கு அதை பெரிய விஷயமா எடுத்துக்கணும். அது உங்க பர்சனல் ப்ராப்ளம்! இப்போ அது என் மைண்ட்லையே இல்ல! நம்புங்க

வேணாம்…என்னை டென்ஷன் பண்ணாத!

இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி டெண்ஷனாகிறீங்க!

நீ வழக்கம் போல என் கிட்ட பேசு! எவனோ பீட்சா கொடுக்க வந்தவனுக்கு பதில் சொல்ற போல ஒட்டாமலே பேசிட்டிருக்க..

ஹலோ…உங்க தங்கச்சிக்கு நான் தான் official மாமியார்! என்னை மிரட்டறது நல்லால்ல சொல்லிட்டேன்!

“உனக்கும் அவ தானே மாமியார்! உன் குடுமியும் அவ கைல தானே இருக்கும்? அப்புறம் எனக்கென்ன பயம்?” அவன் மறுமுனையில் உல்லாசமாய் சிரிக்க அந்த சிரிப்பு அவளிடம் ஏற்படுத்திய தாக்கத்தில் மெலிதாக உடல் சிலிர்த்தாள் மீரா.

எல்லாம் முடிவானதைப்போலவே பேசுகிறானே. இதுவரை இருவருமே எதையும் பகிர்ந்து கொள்ளவே இல்லையே.. அவளும் மயக்கத்தில் இருந்தவள் தான் ஆனால் இந்த வாரம் கிடைத்த  கண்திறப்புக்கள் அவளை விழிக்க வைத்திருந்தன.

இந்த கோகா கோலா போல நினைத்த நேரம் எல்லாம் பொங்கும் இவன் இயல்புக்கும் அவளுக்கும் உண்மையில் பொருந்தி வருமா? மனதில் ஆசை வருதல் மட்டும் வாழ்க்கைக்கு போதுமா? குளிர் அலைகள் அவளை ஊடுருவ மௌனம் சாதித்தாள் மீரா.

ஹலோ… ஹலோ..

சொல்லுங்க..

ஏன் பேசாமலே இருக்க..

…….

வேணாம்! போனை வச்சிடு.. நேர்ல பேசிக்கறேன்! குட்நைட்

மனுஷன் ஆசையா பேசவந்தா கடுப்பேத்திட்டு!!! இணைப்பை துண்டிக்கும் சில கணங்களில் அவன் எரிச்சலாய் முணுமுணுத்தது தெளிவாகவே இவள் காதுகளில் விழுந்தது!

தொலைபேசியை வைத்துவிட்டு ஆயாசமாய் சாய்வு நாற்காலியில் விழுந்தாள் மீரா. வாழ்க்கையில் அவள் முக்கியமான முடிவொன்றை செய்யவேண்டிய நேரம் வந்தது விட்டதாக அவள் நினைத்தாள்.

காதலின் துள்ளலோடு பறந்து திரியும் வசீயின் சந்தோஷத்தை  கண்டு ஆனந்தம் அடைந்தாலும் மனதின் ஓரத்தில் இனிமேல் நான் தனி என்ற எண்ணம் அவளுக்குள் வந்து விட்டிருந்தது. அவளுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வசீ திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று விட்டான். ஆகவே கூடிய விரைவிலேயே அவளது வாழ்க்கையிலும் ஒரு கரை வந்துவிடும் என்ற பயம் அவளுக்குள் புகுந்து வாட்டிக்கொண்டிருந்தது. இனிமேல் வாழ்க்கை முன்போல இனிய நதியாய் ஓடுமா?

மனோத்யன் மனதில் என்ன இருக்கிறது என்று புரியவே செய்கிறது. இன்றோ நாளையோ அவன் நேரடியாக கேட்கவும் செய்வான். அவளுக்கும் அவனை பிடிக்கிறது. ஆனால் அவனது இயல்பு?

அவசரகோலத்தில் எதையும் செய்வது பேசுவது என்றிருக்கும் அவனால் அவளோடு பொருந்தி வாழ முடியுமா?

அவள் பார்த்த வரை அவன் உயர்மட்ட குடும்ப இளைஞன் ஒருவனின் ஒட்டுமொத்த வார்ப்புத்தான். உணவகத்தொழில் எல்லாம் கீழ்மட்டத்தோர் செய்வது என்று ஒரு நினைவு இருப்பதாலேயே பெற்றோரை பிரிந்தான். ஆரம்பத்தில் தன் வேலையை அவன் அனுமதித்தாலும் அவனது நண்பர் குழுக்களின் விழாக்களில் விருந்தினராய் இல்லாமல் ஒரு பணியாளராய் அவள்  பணிபுரிவதை அவனால் ஏற்க முடியுமா? அவமானமாய் உணர்ந்தால்?  வேண்டாம் என்று கூறிவிட்டால்?

திருமணத்தின் பின் அவர்களிடையே வரும் பிரச்சனைகள் அவர்களையும் தாண்டி வசீ மற்றும் நித்யாவை நேரடியாக பாதிக்கும். தங்கைக்காக வசீ பேசவே செய்வான்! எவ்வளவு சிக்கல் இதில் ?

அவனை விட்டு விலகி விட்டால் எல்லா சிக்கலும் தீர்ந்து விடும். ஆனால் மணிக்கொரு முறையாவது அவனை நினைத்து விடும் மனதை என்ன செய்ய? அவனை நினைக்காமல் இன்னொருவனை இப்போதே ஏற்றுக்கொண்டு அவளால் வாழ்ந்து விட முடியுமா? என்றெல்லாம் குழம்பித்தவித்தவள் முடிவை ஆறப்போடலாமா என்று சிந்தித்தாள்.

எப்படியாவது அவளுக்காக காத்திராமல் வசீயை நித்யாவை திருமணம் செய்ய வைத்து விட வேண்டும்.

அதன் பின்னர் அவளது வாழ்க்கையை பற்றி நிதானமாக யோசிக்கலாம் ..

அதுதான் சரி..

முடிவெடுத்து விட்ட பின்னும் அந்த இரவு அவளுக்குள் ஏதோ ஒரு அளவில்லாத சோகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மனம் முழுக்க ஏதோ ஆகிவிட்டது போன்ற படபடப்பு.. தூக்கமே இன்றி அன்றிரவு வெகு நேரம் விழித்துக்கிடந்தாள் மீரா.

சனிக்கிழமை காலை அழகாக விடிந்திருந்தது.

முதல் தடவையாக வசீ வடிவமைத்த அலங்காரம் அரங்கேற்றம் பெறப்போகிறது என்பதாலோ என்னவோ அவன் மிக மிக உற்சாகமாக இருந்தான்.

நித்யாவை அந்தப்பக்கமே வரக்கூடாது என்று ப்ராமிஸ் வாங்கிக்கொண்டதால் ஆர்வம் இருந்தாலும் என்ன தான் செய்கிறான் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் வீட்டில் இருந்த வேலைகளை சித்ராவுக்கு உதவியாக செய்து கொண்டிருந்தாள் நித்யா.

மனோ காலையில் ஹாலுக்கு போனவன் தான் அதன் பின் கண்ணிலேயே தென்படவில்லை! அங்கே ஒழுங்கமைப்புக்களில் உதவிக்கொண்டிருக்கக்கூடும்!

பன்னிரண்டரை போல பொறுமை இழந்தவளாய் மீராவுக்கு அழைத்தாள் நித்யா. ஒரு ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டது!

எருமையே என்னடி பண்றீங்க எல்லாரும்?

ஹா ஹா ஹால்ல எல்லா வேலையும் முடிஞ்சது. நாங்க வீட்டுக்கு போய் ரெடியாகிட்டு ஹாலுக்கு வர்றோம்! நீயும் சீக்கிரம் ரெடியாகி வந்தது சேர்!

வர்றேன்..வசீ எங்க?

அவனுக்கு யாரோ கால் பண்ணாங்க நித்து. போயிட்டு சரியான டைம்க்கு ஹாலுக்கே வந்துர்றேன்னு சொல்லிட்டு போனான்.

ஏய் அவனும் மனோவும் மீட்டினாங்களா? மனோ கிட்ட கேட்டா ஒரு மார்க்கமா சிரிக்கிறானே தவிர ஒண்ணும் சொல்ல மாட்றான்!

ஹா ஹா அதையேன் கேக்கற!! நீ தான் கட்டப்பொம்மனா? நீ தான் ஜாக்சன் துரையான்னு ஸ்டார்ட் பண்ணி அப்புறம் பிக்கப் ஆயிட்டாங்க! வசீ தனக்கு சீனியர் உங்கண்ணான்னு சொன்னான்.  எனக்கு கலாய்க்க பார்ட்னர் இல்லையா? களத்துல இறங்கல.. நீ வா நாம கச்சேரியை ஆரம்பிக்கலாம்!

ஹி ஹி அதை விட எனக்கு வேறென்ன வேலை! நீ சீக்ரம் ரெடியாகி வா.

மனோவும் வசீயும் எப்படிப்பெசியிருப்பார்கள் என்ற கற்பனையே சிரிப்பை வரவழைக்க ஏற்கனவே தயாராய் வைத்திருந்த  கொப்பர் கலர் லெஹெங்காவை அணிந்து  வழக்கத்தை விட அதிகமாக பார்த்துப்பார்த்து அலங்காரம் செய்து கொண்டு அவள் ஹாலுக்கு போன போது அங்கே மீரா ஏற்கனவே அங்கே வந்திருந்தாள்.

நித்யா வீட்டு விழா என்பதனால் வழக்கமான நீலத்தை தவிர்த்து சந்தன நிறத்தில் லேஸ் சோளி அணிந்திருந்தாள் அவள். சாக்லேட் குர்தாவோடு அவள் அருகில் ஏதோ பேசிக்கொண்டிருந்த மனோவை கண்டதும் அவளுக்கு குபீர் சிரிப்பு.

இந்த மனோ அண்ணா இப்படியொரு ஜொள் மன்னனாக மாறுவான் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை! ஆனால் மீராவுக்கு அவன் இன்னும் எதையும் வெளிப்படுத்தாத நிலையில் கிண்டல் செய்யக்கூடாது என்று எண்ணிக்கொண்டு அவர்களை குழப்பாமல் மெல்ல ஹாலுக்குள் நுழைந்தாள்.

எதிரே விரிந்த காட்சியில் கண்கள் நாலாபுறமும் சுற்றிச்சுழல அந்தக்கணமே ஓடிச்சென்று வசீயின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல அவளுக்குள் பூதாகரமான ஏக்கம் தோன்றியது!

ஒரு ரோஜாத்தோட்டத்தையே அமைத்து வைத்திருந்தான் அவன்!

மணமக்களுக்கு ஒதுக்கிய இடம் ஏதோ ஒரு ரோஜாப்பந்தலுக்கு கீழே அமைத்தது போல அவ்வளவு தத்ரூபமாக இருக்க  யன்னல்கள் விளக்குகளில் எல்லாம் தொங்கும் தோட்டம் போல கொடி ரோஜா அலங்காரம் இலையும் கொடியுமாய் பூத்திருக்க அந்த ஹாலே ஒரு ரம்யமான வண்ணத்தில் இருந்தது. மிகவும் சிம்பிளான ஆனால் இயற்கையின் வடிவத்திலேயே இப்படி ஒரு அலங்காரத்தை அவள் இன்று தான் பார்க்கிறாள்!

இத்தனையும் அவளுக்காகத்தானே!!

பாரேன் நித்து!! இந்த சுறாவுக்குள்ளேயும் இப்படியொருத்தன் ஒளிஞ்சிட்டு இருந்துருக்கான் பார்!!! நமக்கு தெரியாம போய்டுச்சே!!! த்சோ த்சோ!!! மீராவின் குரல் குறும்பாக காதருகில் ஒலித்தது.

ஏய்!!! கொலப்பண்ணிருவேன் ராஸ்கல்! என் ஆளையே கலாய்க்கிறியா? ஒழுங்கா ஓடிப்போயிரு!!!

அவ்வ்வ்… கட்சி மாறிட்டியா?!!!  எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் உங்களை நாம் கலாய்ச்சிடுவோமே!!!

கன்றாவியா இருக்கு!!! நித்யாவுக்கு ஒரே சிரிப்பு!

ஒகே வேணாம்… இது எப்படியிருக்கு? சுறாவும் சுள்ளானும் சேர்ந்தா மொக்கைடா!!!  அபிநயித்துக்காட்டி விட்டு அவள் ஓடிவிட

செத்தடி நீ!!!!  என்று பல்லைக்கடித்தாள் நித்யா.

“ஹா ஹா ஹா” சிரிக்கும் திருவுருவாக ஓடிப்போனவளின் மேலேயே கண்களை பதித்தபடி அங்கே வந்து நின்ற மனோவின் மேல் அவள் கோபம் பாய்ந்தது!

டேய் அண்ணா! பார்த்து!!!நீ விடற ஜொள் மழைல இந்த ஹாலே மூழ்கிடபோகுது!

ஹ்ம்ம்… உனக்கு புரிஞ்சு என்ன ஆகப்போகுது? புரிஞ்சுக்க மாட்றாளேடி? நீ கொஞ்சம் ஹெல்ப்பேன் ?

நானே வசீ இன்னும் வரலைன்னு டென்ஷனா இருக்கேன்! வேணாம்!!!

அவன் தானே! மூணரைக்கெல்லாம் இங்கே இருப்பான்!

மனோவின் டோனே அவர்களுக்கிடையில் உருவாகியிருந்த நட்புணர்வை சொல்ல சந்தோஷமாய்  அன்றைய நிகழ்வை ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தாள் நித்யா.

விழாவிற்கு வந்த இளவட்டங்களை அப்படியே கவர்ந்திழுத்தது வலப்பக்கமாக குட்டி ஸ்டேஜ் போடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த போட்டோ பூத்! அதில் வைக்கப்பட்டிருந்த கார்டுகளில் வழக்கமான ஆங்கில வாசகங்களுக்கு பதிலாக வைரலான தமிழ் வசனங்கள் எழுதப்பட்டிருக்க குபீர் சிரிப்புடன் இளைஞர் கூட்டம் அந்த கார்டுகளை உயரப்பிடித்தபடி போட்டோ எடுக்க முண்டியடித்தது! இந்த ஐடியாவும் வசீயுடையது தான். ஆனால் வசனங்களை தேடிப்பிடித்தது மொத்த WKC குழுவும் தான்!

“சூப் பாய்! “

“நான் உன்னை விரும்ப‌ல‌… உன் மேல‌ ஆசைப்ப‌ட‌ல‌… நீ அழ‌காய் இருக்கிறாய் என்று நினைக்க‌ல‌… ஆனால் இது எல்லாம் ந‌ட‌ந்துடுமோ என்று ப‌ய‌மா இருக்கு!”

“பெற்றோமக்ஸ்  லைட்டே தான் வேணுமா?”

“ப்ரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு!”

“என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?”

இந்த வசனங்களை ஆளாளுக்கு தமக்கு பொருத்தமாக தூக்கிப்பிடித்திருக்க அங்கே இருந்த காமராமான் கிளிக்கி சுட சுட பிரிண்ட் போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

 

இன்னும் விழா ஆரம்பித்திருக்காத நிலையில் மேடையில் சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு மற்றவர்கள் நிற்க திடீரென அந்தப்பக்கமிருந்து வந்த மனோ நித்யாவையும் மீராவையும் பிடித்து இழுத்துக்கொண்டு மேடையேறி விட்டான்!

நித்யாவை நடுவில் விட்டுவிட்டு அவளுக்கு வலப்புறம் நின்றுகொண்ட மனோ “காதுமா ஆர் யூ ஒகே பேபி?” என்ற போர்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு நித்யாவைத்தாண்டி எக்கச்சக்கம் காதலுடன் மீராவை எட்டிப்பார்க்க அவள் குறும்புச்சிரிப்புடன் “டேய் ரெட் டீஷர்ட்!! உன்னைத்தாண்டா!” என்ற நயன்தாரா டயலாக் எழுதிய போர்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்க இவர்கள் இருவரின் நடுவில் மாட்டிக்கொண்டு முழிப்பவள் போன்ற முகபாவத்துடன் “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?” போர்டை பிடித்துக்கொண்டிருந்தாள் நித்யா! செம குறும்பான புகைப்படமாய் அது சுடச்சுடகையில் வர ரசித்து சிரித்தாலும் இன்னும் வந்து சேராத வசீயிடம் அவளுக்கு மெல்லிய கோபம் வந்தது!

அவன் இருந்திருந்தால் அவனோடு ஒரு புகைப்படம் இப்படி எடுத்திருக்கலாம் இல்லையா? மொபைலையும் ஆன்சர் பண்ணாமல் என்ன செய்கிறான்? என் வீட்டு விழாவுக்கு வராமல் இருந்தால் அப்பா அம்மா அண்ணா எல்லாம் என்ன நினைத்துக்கொள்வார்கள்?

ஆனால் நேரம் செல்ல செல்ல விழாப்ப்பரபரப்பு அவளையும் தொற்றிக்கொண்டு விட்டது.

சக்தியை மேடைக்கு அழைத்து வந்தது, நிச்சயம், பிறகு மாலை மாற்றி , கேக் வெட்டி தம்பதிகள் ரோஜாப்பந்தலின் கீழ நிற்க மக்கள் ஒவ்வொருவராக சென்று அவர்களை வாழ்த்தி விட்டு உணவுக்கான புபேயில் இணைந்து கொள்ள அப்பாவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களை கூடவே இருந்து கவனிக்க வேண்டிய கடமை வீட்டுப்பெண்ணாக அவளுக்கு இருந்ததே. WKC யின் ஒழுங்கமைப்பில் ஒவ்வொன்றும் தவறாமல் புதுமையாய் இனிமையாய் நடைபெற விழா இனிதே நிறைவுறும் தருணத்தை வந்தடைந்தது.  அப்பாவின் நண்பர் குடும்பம் ஒன்றை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பியபோது தான் வசி இன்னும் வந்து சேரவில்லை என்று அவளுக்கு ஞாபகம் வந்தது. கண்ணீர் இதோ வந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. என் வீட்டு விழாவுக்கு முன்னுரிமை கொடுத்து வர வேண்டும் என்று அவனுக்கு தோன்றவே இல்லையா?

அவனோடு இனிமேல் பேசவே போவதில்லை பொங்கி வரும் கண்ணீரை அவள் ஆவேசமாகத்துடைத்தபோது “நித்தும்மா மாப்பிள்ளை எங்கே?” என்று அப்பா அவளருகில் வந்து மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்தக்குரலில் விம்மல் வெளியில் வந்துவிட “அவர் வரவே இல்லப்பா “ என்று அழுகையோடு உரைத்துவிட்டு அவர் பதில் சொல்ல முன்னே வேகமாய் ரெஸ்ட் ரூம் தேடி ஓடினாள் நித்யா.

தூரத்தே அவளைக்கண்டுவிட்டு மணமக்களோடு நின்று கொண்டிருந்த மனோ அவளை நோக்கி வருவது கடைக்கண்ணில் தெரிந்தது. இருந்தும் அவள் நிற்கவில்லை!

நித்து நித்து…

கண்களை துடைத்து தன்னை சமப்படுத்திக்கொண்டு வெளியே வந்தவள் கேள்வியோடு நின்ற மனோவை ஏறிட்டாள்

அழாத லூசு.. அவனுக்கு கண்டிப்பா ஏதும் சீரியசான வேலை வந்து மாட்டிட்டு இருப்பான். அதுக்குப்போய் அழுது ..ச்சீ ச்சீ என்ன இது? சின்னப்பிள்ளையா நீ?

இல்ல மனோண்ணா.. நேத்துல இருந்து என்னை பார்க்கவே விடாம எல்லாம் பண்ணிட்டு இன்னிக்கு பங்ஷனுக்கு வராம இருந்துட்டார். பார்த்தியா?

எங்கே போனான்னு கேட்டியா?

இல்லை.. மீரா மூணரைக்கே வந்துடுவார்னு சொல்லவும் நான் ஒண்ணும் கேக்கல..

சரி மீரா கிட்ட கேக்கறேன். என்ற படி தொலைபேசியை எடுத்து அவளை அழைத்தவனின் நெற்றி சுருங்கியது. அவளும் ஆன்சர் செய்யவில்லை.

எங்கே அவ? யோசனையோடு

எதிரில் கையில் வயரோடு நடந்து போன WKC பையனொருவனை நிறுத்தி மீராவை பார்த்தால் மனோ அழைப்பதாக கூறச்சொன்னான் அவன்.

அண்ணா.. மீரா இல்லையே.. அப்போவே போயிட்டாங்களே!

என்னது? எப்போ?

ஒரு வன் ஹவர் இருக்கும்!

எங்கே போனான்னு தெரியுமா?

இல்லண்ணா. திடீர்னு போன் வந்துது.. பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாங்க.

சரி நீ போ.. என்றவனின் உதடுகள் something wrong என்று முணுமுணுத்தன.

அதிர்ந்து நின்ற நித்யாவை உலுக்கி “வசீ வீட்ல வேற யாரோடவாவது நம்பர் உன்கிட்ட இருக்கா ? இருந்தா சீக்கிரம் எடு” என்று அவசரப்படுத்தினான் மனோ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: