நேற்று நான் இருந்தேன்..

மழைத்துளிகள் நிலம் தொட்டுப்புதையுமுன்

தெறித்துத் தப்பிக்கும் சில துளிகளைப்போல

உன் நினைவுகளை நெஞ்சக்குளத்தில் அமிழ்த்துமுன்

இறுதியாய் ஒருதடவை மீட்டுப்பார்க்கிறேன்

குளத்தில் விழுந்த கல்லென

உன்ஞாபகங்கள் என் இருப்பினை அலைக்கழிக்க

நீரில் ஆடும் அந்த வான் நிலவின் நிழலாய்

ஒருமுறை ஆடி அடங்குகிறது

என் உயிரும் உயிர் கொண்ட காதலும்…

ஐ ஹேட் யூ….

Picture1


இற்றைக்கு இரண்டு வருடங்களின் முன் உனக்கான என் முதல் காதல் கடிதத்தை இதே காதலர் தினப்போட்டியில் தான் எழுதியிருந்தேன். அதை உன்னைத்தவிர உலகமே படித்திருந்தது. அப்படியே இந்தக்கடிதத்தையும் நீ படிக்க மாட்டாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்!

போன காதலர் தினம் உனக்கு நினைவிருக்கிறதா?

கும்மிருட்டு, நமக்கே நமக்கான தனிமை, ஒற்றை மெழுகுதிரியில் கீற்றாய் வெளிச்சத்தை ஏற்றி வைத்துகொண்டு சண்டையிட்டு, கண்களை வீங்க வைத்த ஜோடி நாமாய்த்தான் இருக்கமுடியும்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுமாமே.. சத்தியமாய் சொல்கிறேன். நம்மிருவர் திருமணத்தையும் நிச்சயித்த போது சொர்க்கத்தில் மின்சாரத்தடை அமுலில் இருந்திருக்க வேண்டும்!

இரண்டே வருடத்தில் இப்படி வாழ்க்கை வெறுத்து விட்டதா? என்று முகத்தை சுருக்காதே! உனக்கும் அப்படித்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

திருமணத்துக்கு முன்னான நீ, நானுக்கும், திருமணத்துக்குப்பின்னான நீ, நானுக்கும் உள்ள முரண்களின் பட்டியல் வளர வளர, எவ்வழியும் போகவியலா முட்டுச்சந்தொன்றில் போய் முட்டிக்கொண்டு மறுகுகிறது மனது.

மாயா மாயா மாயா எல்லாம் மாயா என்று ஒரு மாயானந்தா சுவாமிகளாக காதலை மறுக்கும் பப்பாசி மரமெனும் ஞான நிலையில் ஏறி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது என் அறிவு!

நேற்றும் கூட ஹேய் காதலர் தினத்துக்கு இம்முறை ஏதேனும் கைவினை செய்யவில்லையா என்று கேட்ட நண்பிக்கு காதல் என்பதே ஒரு வினை என்று இடக்காய் பதில் சொல்லிப்போனவள் இன்று சுவற்றில் அடித்த பந்தாய் அதே திரிக்கு திரும்பி வந்திருக்கிறேன். காதல் ஒரு பொல்லா வினை!!!

இரவுகளில் உன்னோடு படம் பார்க்கப்போவது ரொம்பவும் பிடிக்கும் எனக்கு. வேண்டுமென்றே கொஞ்சம் தூரமான திரையரங்கில் இருந்து இரவு பத்தரை மணிக்கு நடந்தே நாம் வருவோம். ஆனால் நிலவின் ஒளியில் நாம் நடக்கும் போது “இனிமேல் உன்னை நான் படம் பார்க்க அழைத்து வரவே மாட்டேன்” என்று நீயும் “இனி உன்னோடு வந்தால் என்பேரை மாற்றிக்கொள்கிறேன்” என்று நானும் வீர சபதங்களை செய்தபடி பரஸ்பரம் குரல்வளையைக்கடிக்காத குறையாக திரும்பிவருவோம். மாதம் ஒருமுறை படங்கள் மாறினாலும் எம் சபதங்கள் மட்டும் வரி கூடப்பிசகாமல் அப்படியே தொடர்கிறது. காரணம் மட்டும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்று! அப்படிச் சண்டையிட்டு வீடு வந்தாலும் மறுநாள் “ ஏய் புதுப்படம் வருகுதாமே?” என்ற வசனம் மட்டும் இருவருக்கும் பொதுவானது. அதிலும் ஒருவர் சொல்லும் போது மற்றவர் முதல் நாள் நடந்ததை எப்படி மறந்து போகிறோம் என்ற கேள்விக்கு என்ன யோசித்தாலும் இந்த வினையைத்தவிர வேறேதும் பதில் தெரியவில்லை.

நான் தல ரசிகையாய் இருப்பதாலேயே நீ தளபதியை வெறித்தனமாக ரசிக்க ஆரம்பித்தாய், நீ தளபதி ரசிகன் என்பதாலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே பார்த்தாலும் தலக்கு வெறித்தனமான ரசிகையாக நான் மாறிப்போனேன். அவர்களை வைத்து உன்னை சீண்டுவதில் எனக்கும், என்னை சீண்டுவதில் உனக்கும் அலாதிப்பிரியம். அப்போதெல்லாம் உன் முடியைப்பிடித்து நாலு வைக்க வேண்டும் என்று கடுப்பானாலும் நீ இல்லாத வாரத்தில் என்னை நினைத்து நினைத்து சிரிக்க வைத்து உயிர்ப்போடு வைப்பவை உன் அந்த மொழிகளே! உனக்கும் அப்படித்தானா எனக்குத்தெரியவில்லை. அப்படியிருந்தாலும் அதை நீ சொல்லவே போவதில்லை என்றும் எனக்கு நிச்சயமே.

நாம் பேசிச்சிரித்த நாட்களை விட சண்டையிட்டுக்கொண்ட நாட்கள் தான் அதிகம். ஆனால் ஒரு சண்டையின் பிறகான மாலையில் நீ திரும்பி வரும் போது இருவருக்கும் பரஸ்பரம் பீரிட்டு வரும் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து விட்டு சமாதானம் ஆகிக்கொள்ளும் அழகுக்காகவே நாம் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

ஒத்த ரசனைகள் இருந்தால் காதல் வரும் என்பார்கள். நம்மிடையே கீழ்வீட்டு நாய்க்குட்டியைத்தவிர வேறேதும் பொருந்துவதில்லை. இருந்தும் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உன் குரல் கேட்காவிட்டால் சார்ஜ் இழக்கும் மொபைலாக என் உற்சாகம் வடிந்து போவதும் , ஹை டெசிபலில் சண்டையிட்டுக்கொண்டாலும் மௌனத்தை சகிக்க முடியாமல் உன்னை திட்டியபடியே பேசிக்கொண்டிருப்பதும் எனக்குள் இருக்கும் உன் மீதான வினை தான்.

எனக்குள் வளர்ந்துகொண்டிருக்கும் மாயானந்தா சுவாமிகள் இப்போதெல்லாம் நிறையப்போதிக்கிறார். எப்படி நீ எதிர்பார்ப்பதைப்போல நான் இருக்க முடியாதோ நான் நினைப்பதைப்போல உன்னையும் மாற்ற நினைக்ககூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொள்கிறேன். நீ உன் தனித்தன்மையோடு இரு. நான் என் தனித்தன்மையோடு இருக்கிறேன். அதற்காக உன்னை, நீ செய்வதெல்லாவற்றையும் நான் சகித்தே போவேனென்று அர்த்தமில்லை. நிச்சயம் சண்டை போடவே செய்வேன். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது

நீயும் அப்படியொரு முடிவுக்குத்தான் வந்திருக்க வேண்டும். உன் செயல்பாடுகளிலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தடவை காதலர் தினத்தன்று நாம் சண்டை போட ஒரு டாப்பிக் எடுத்துவை. நான் மெழுகுவர்த்தி வாங்கி வருகிறேன் என்று சிரித்த படி சொன்னாய், நீ அன்றைக்கு வீட்டுக்கு வரப்போகிறாய் என்று சிரிப்பும் அழுகையுமாய் ஈஈஈஈஈஈ என்று உட்கார்ந்திருக்கிறேன் நான். நீ சொல்லமாட்டாய் என்று தெரியும் இருந்தாலும் சொல்கிறேன், தயவு செய்து ஐ லவ் யூவெல்லாம் சொல்லிவிடாதே. எங்கள் வீட்டுச்சுவரே நம்மைக் கல்லெடுத்து அடிக்கக்கூடும்!

அது சரி.. உனக்கு எப்படி இந்த ஞானம் பிறந்தது? உன் மண்டைக்குள்ளெல்லாம் மாயானந்தாக்கள் நுழைய முடியாதே. நித்யானந்தாக்கள் வசிக்கும் தவபூமியல்லவா அது? விட்டுத்தள்ளலாம்…ரெசிப்பி என்னவாக இருந்தாலும் பிரியாணி வந்தால் போதாதா?

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மாயானந்தா சுவாமிகள் மண்டைக்குள் ஒரு விஷயத்தைக்கேட்டார். எனக்கும் சரி, உனக்கும் சரி ஒத்த ரசனை உள்ள துணை கிடைத்து நாம் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்! ஒருவர் வைத்தியசாலைக்கும் ஒருவர் ஜெயிலுக்கும் போயிருப்போம், நிச்சயமாக! நல்லவேளை எனக்கு நீ கிடைத்து விட்டாய்! எப்போதாவது நீ இப்படி எண்ணியிருப்பாயா? நீ எங்கே இதையெல்லாம் எண்ணப்போகிறாய்?

போனால் போகிறது காதலர் தின வாழ்த்துக்கள் உனக்கு உரித்தாகட்டும்

இப்போது இவ்வளவு எழுதுகிறாயே நீ மட்டும் இதையெல்லாம் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கிறாயா? என்று கேட்கிறாயா? அட நான் உன்னைப்பற்றி எழுதியிருப்பதாகவா நினைத்துக்கொண்டாய்? அஸ்கு புஸ்கு! நினைப்புத்தான் பிழைப்பைக்கெடுக்குமாம்! நானே ஒரு எழுத்தாணியாக்கும்..கற்பனை சும்மா பறந்து பறந்து வரும். நான் தங்களைப்பற்றி எழுதுவதாக யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். நான் போட்டிக்காக மட்டுமே,,,, மட்டுமே,,,, மட்டுமே எழுதியிருக்கிறேன்.

வெவ்வெவ்வே

நன்றாகக் கேட்டுக்கொள் ஐ ஹேட் யூ….

இப்படிக்கு
உன் எதிரி
டிஷ்யூம்!

Read more: http://www.penmai.com/forums/special-contest/108095-creative-writing-contest-valentines-day-penmais-valentines-day-special-contest.html#ixzz40p7CskC2