ThalaivARR :)

06-1420547594-best-of-ar-rahman

ஒருநாள் மாலை லேசான இருட்டு, தனியாக  மொட்டைமாடியிலோ இல்லை  பால்கனியிலேயோ  நின்று தூரத்தையே வெறித்துக்கொண்டிருக்கிறீர்கள். மனதில்  காதலோ, வேலையோ, படிப்போ, நட்போ எதுவோ ஒன்று அடுத்த  கட்டத்துக்கு  நகராத தவிப்பு இருக்கிறது.  மேகங்கள் கலைவதையோ எதிரே சூரிய அஸ்தமனத்தில் வர்ணங்கள் உருமாறுவதையோ விச்ராந்தியாய் கவனமே இல்லாமல் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதையெல்லாம்  கண்டுகொள்ளாமல் இந்தப்பொல்லாத  காற்று வந்து உங்கள்  முகத்தில்  மோதி தலை கலைத்து  விளையாட வாவென்று  கூப்பிடுகிறது. அப்போ என் நிலை புரியாம அடப்போடான்னு மானசீகமாக  காற்றிடம்  பேசுவீர்கள் இல்லையா? தொண்டைக்குழியில் தேன் நழுவுவது போன்ற சுஜாதாவின் நளினமான  குரலில் நாலே நாலு வரிகள் தான், ஆனால் உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடும். ஹெட் போனில் போட்டு வலுக்கட்டாயமாய் காதுக்குள் ஊற்ற வேண்டாம். காற்றை அதுவாகவே எடுத்து வந்து காதுக்கு தர விடுங்கள்..அவ்வளவுதான். மென்மையாக..இனிமையாக..ஏக்கமாக ஏன் தாபமாகக்கூட…

 

காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன்

அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே

ஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலே

வேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ

 காற்றுக்குதிரையிலே

அடுத்த பாடலும்  தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவியின் துயர் பாடும் பாடலே. ஆனால் கேட்கும் நேரம் தான் கொஞ்சம் நடுநிசிக்கு போகவேண்டும். ஒற்றை மெழுகுவர்த்தி கூட இல்லாமல் முற்றிலும் உங்களை சூழ்ந்திருக்கிறது இருள், கட்டிலில் படுத்துக்கொண்டு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறீர்கள். எங்கேயோ தூரமாய் ஒரு நாய் ஊளையிட்டு தன் இருப்பை காட்டிக்கொள்ள ரேடியோ வழி உங்களை வந்தடைகிறது ஸ்வர்ணலதாவின் வசியக்குரல். இருளில் ஒரு வீணையாய் அவர் உருக உருக உங்கள் உயிரைரையும் உருக்கி உருக்கி அது உணரவைக்கும் உணர்வுக்கு என்ன பெயரென்று இதுகாறும் நான் அறியவில்லை. அந்தி மந்தாரை திரைப்படத்துக்காய் வைரமுத்துவின் வரிகளில்

 

ஒரு நா ஒரு பொழுதுஒன் மூஞ்ச காணாம என் உசுரு அல்லாடுதே
மறு நா வரும் வரைக்கும்பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே

காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்
கொள்ளிடம் வந்து ஒண்னாகச் சேரும்
காலத்தின்
கணக்கு யார் காணக் கூடும்

 ஒரு நாள் ஒரு பொழுது

தொண்ணூறுகளில்  ஆரம்பித்து இரண்டாயிரங்களில் பதின் வயதுகளில் இருந்த எங்களுக்கெல்லாம்  ரஹ்மானின் இசையும் வாழ்வோடு கலந்து நின்றிருக்கும். அவரோடு ஆடியிருப்போம், அவரோடு காதலித்திருப்போம், காதலனோடான தனிமையான ரகசியத்தருணங்களில் கூட இசையாய் ஊடுருவி நிற்க அவரை மட்டுமே நாம் அனுமதித்திருப்போம். நீங்கள் உணர்ந்த இசைப்புயலை நான் உணர்ந்திருக்க மாட்டேன், நான் உணர்ந்தவரை நீங்கள் உணர்ந்திருக்க முடியாது. வாழ்க்கை தனி , வாழ்பவர்களும் தனி, உணர்வுகள் தனி ஆனால் அதையெல்லாம் இணைக்கும் பாலமாய்  அவர் மட்டும்…