அழைக்கிறேன் வா…

1

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடந்த பசும் மலைகளில் இரும்புக்கேடர்களை தொடுத்துக்கொண்டு தடதடத்துக்கொண்டிருந்தது சித்ரபுரி எக்ஸ்ப்ரஸ். ஊசித்துண்டுகளாய் கொட்டிய மழை அதனை நனைத்து அதன் கருமையை இன்னும் பளபளப்பாய் செய்ய பசும்மலைகளுக்குள் சீறும் வயதான அனகோண்டாவென விரைந்து கொண்டிருந்தது அந்த ரயில்.

கிட்டத்தட்ட பூமியில் இருந்து 300 மீட்டர் உயரம் இருக்கும் அந்த இரும்புக்கேடரிலான தண்டவாளம். ரயிலின் புட்போட்டில் நின்று கீழே பார்த்தால் காலின் கீழே பூமி விரிவது கண்கூடாய் தெரியும்.

சகல தரிப்பிடங்களையும் தாண்டி செவ்வனத்தை கடந்ததும் சித்ராபுரி வந்துவிடும் என்ற நிலையில் ரயிலில்  மொத்தமுமே ஒரு பத்துப்பயணிகளே எஞ்சியிருந்தார்கள்.

ரயிலில்..

இரண்டாம் வகுப்புப்பெட்டியின் வலப்பக்கம்…  

“தம்பி உள்ளே வந்து பேசுப்பா!” முதியவர் ஒருவர் புட்போடில் தொங்கியபடி காதில் ஹெட்போனோடு மழைக்கு தலை கொடுக்க முயன்ற இளைஞனை தட்டி கரிசனமாய் சொன்னார்.

அவருக்கு தலையசைத்து உதடுகளை புன்னகைத்தது போல வைத்துக்கொண்ட அந்த இளைஞன் அவர் தலை மறைந்ததும் அவருக்கு நாக்கை துருத்தி விட்டு மீண்டும் பழைய பொசிஷனுக்கே வந்தான். தூரமாய் கரும்  பச்சைப்போர்வையுடன் தென்பட்ட செவ்வனமும் காலின் கீழே பனிப்புகை மண்டிக்கிடந்த பூமியும் பார்க்கப்பார்க்க உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு இதமாய் ஓடியது! கம்பிகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு ரயிலின் வெளிப்புறமாக வெளியே சாய்ந்து ரயிலின் வேகத்துக்கு தன்மேல் வந்து மோதிய காற்றையும் மாத்துகள்கள் போன்ற மழையையும் தலையை உதறி ரசித்தான் அவன்.

கண்ணில் வந்த நீர்த்துளியை உதறிவிட்டு மீண்டும் முக்கால்வாசி உடலை வெளியே மிதக்க மிட ஆரம்பித்த ரிஷியின் கண்ணில் அவன் நின்ற இடத்தில் இருந்து இரண்டாவது பெட்டியின் யன்னலோரத்தில் அப்போதுதான் அவள் லட்டாய் விழுந்தாள்!  லேசாக விசிலடித்தான் அவன்.

மஞ்சள் நிற துப்பட்டாவை தலையில் சுற்றிக்கொண்டிருந்த அந்த மஞ்சளழகி இவன் மழையில் செய்த சேட்டைகளை இமைக்காமல் பார்த்திருந்து விட்டு  அவன் விழிகளில் சிக்கியதுமே சட்டென மறுபக்கமாய் முகத்தை திருப்பிகொண்டிருந்தாள்.

“பார்றா! உன்னை சைட் அடிக்கிறாளா இவ?”

‘மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா’ தப்பும் தவறுமாய்  விசிலடித்தபடி மீண்டும் ஒற்றைக்கையால் கம்பியை பற்றித்தொங்கிக்கொண்டே அந்த மைனாவை பார்க்க முயன்றான் ரிஷி…

விஷ்க்………………. என்ன நிகழ்ந்தது ஒன்றும் புரியவில்லை.

அடுத்த செக்கன் தவறுதலாக  புட்போர்ட்டோடு இருந்த கால் விலகி விட ஒற்றைக்கை மட்டும் கம்பியை பற்றியிருக்க அப்படியே ரெயிலின் வேகத்துக்கு அந்தரத்தில் அலறலாய் மிதக்க ஆரம்பித்தவனை கண்டு அடுத்திருந்த ரயில் பெட்டியே அலறியது. உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து அவனை நோக்கி ஓடி வந்தனர்.

எந்தக்கணமும் கையை விட்டு பக்கப்புறமிருந்த கேடரோடு மோதி ரத்தக்கூழமாகும் அபாயத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு வலிக்கும் கையையும் பொருட்படுத்தாமல் அடுத்த கைக்கொரு பிடிப்பை தேடியவனின் முயற்சிக்கு ரயிலின் வேகம் உதவுவதாயில்லை. அவனை ஒரு பறவையாய் மாற்றிக்கொண்டிருந்தது காற்று. கீழே முன்னூரடி ஆழத்துக்கு பூமி வாய்பிளந்து காத்திருக்க தன் உடல் நடுங்குவதை அந்த நிலையிலும் ரிஷிக்கு உணர முடிந்தது.. 

“ப்ரோ! பயப்படாதீங்க நாங்க உங்களை பிடிச்சிடுவோம் . கொஞ்சம் குவாபரேட் பண்ணுங்க.!!!!!!”  உள்ளிருந்த நான்கு இளைஞர்கள் உள்ளே கம்பியை பற்றிக்கொண்டிருந்த ஒருவனை ஆரம்பமாய் கொண்டு தங்களை மனித சங்கிலியாய் தங்களை மாற்றிக்கொண்டிருக்க முதலாவதாக படிக்கட்டில் நின்ற இளைஞன் கத்திக்கொண்டே ரிஷியின் உடலின்  எந்தப்பாகத்தையாவது பிடிக்க முயன்று கொண்டிருந்தான்.

எக்கி அவனுக்கு கையை கொடுக்க முயன்றான் ரிஷி. முடியவில்லை.

இருக்கும் ஒரே பிடியையும் விட்டு விட ரிஷியும் தயாராகவில்லை.. மற்றவர்கள் தன்னை பிடித்துக்கொள்வார்கள் என்ன  நம்பிக்கையில் அந்தரத்தில் பாய்ந்து அவனைப்பிடித்துக்கொள்ள அந்த இளைஞனும் தயாராகவில்லை. மனிதர்கள் அல்லவா..

மாறி மாறி கூச்சல்களோடு அங்கே காப்பாற்றும் படலம் ஒரு ஐந்து நிமிடங்கள் எந்தப்பயனுமே இல்லாமல் நீடித்துக்கொண்டிருந்தது. ரிஷியின் கண்களில் கண்ணீர் படலமிட்டது. ‘அவன் விளையாட்டுக்காரன் தான். ஆனால் இப்படி ஒரு கோரச்சாவு அவனுக்கு நேரவேண்டுமா?’

பிய்த்துக்கொண்டு போவது போல வலித்தது கை. அவ்வளவு தான் கதை நம்  முடிந்தது இனி ஒரு நிமிஷம் பற்றினாலும் கை தனியாக பிய்த்துக்கொண்டு போய் விடும் என்று அறிவுக்கு புரிந்தது. வேதனையில் தலையை அண்ணாந்து நோக்கியவனின் தலைக்கு மேலே ராட்சத ராஜாளி ஒன்று இறக்கை விரித்திருந்தது.

விஷ்க்….

கண்ணுக்கு கிட்டே கொத்துவது போல வந்து போன பறவையை நோக்கி அனிச்சை செயலாய் கையை ஓங்கியவன் கம்பியில் இருந்து கையை எடுத்திருந்தான்!

அம்மா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ப்ரோ!!!!!!!!!!!!!!!

இந்தக்கணம் அவனை காப்பாற்றாவிட்டால் அவன் இறந்து விடுவான். இந்தக்கணம் அவனை காப்பாற்றினால் அவன் வாழவும் செய்வான்! என்ன மாதிரியான கணம் இது?

அவன் அந்தரத்தில் விலகத்தொடங்கியதும் அனிச்சை செயலாய் மனித மனத்தின் பயத்தை ஒருகணம் மறந்த அந்த மற்ற இளைஞனும் அந்தரத்தில் பாய்ந்திருந்தான்.

ரிஷியின் கை அவன் கையில் சிக்கியதும் ரிஷி ஒருதடவை ரயிலின் பக்கப்புறத்தில் மோத அந்த இளைஞனின் கையை பிடித்திருந்த மனிதச்சங்கிலி இளைஞர்கள் அவர்களை உள் நோக்கி இழுக்க ஒருவழியாய் உள்ளே வந்து விழுந்தார்கள் இருவரும்!

அடுத்த கணமே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக்கொண்டு உடல்நடுங்க ஆரம்பிக்க அவர்களுக்கு ஈடாய் நடுங்கியபடியே அவர்களை அணைத்துக்கொண்டான் அம்மனிதச்சங்கிலியில் முதலாவதாக கம்பியை பற்றிக்கொண்டிருந்தவன்!

காப்பற்றப்பட்டதனால் பதட்டம் குறைந்து போய் அவர்களை சுற்றி நின்று சரமாரியாய் திட்ட ஆரம்பித்தவர்களை கலைந்துபோகுமாறு அடிக்காத குறையாய் அடித்து விரட்டியது ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஒன்று.

ஐந்து நிமிடங்களின் பின்..

“நான் பிழைச்சிட்டேன்” என்றான் ரிஷி தலையை கோதியபடி நம்பவே இயலாமல்!

“ஆமாம் ப்ரோ” என்றான் காப்பாற்றியவன் அவனுக்கு குறையாத ஆச்சர்யத்துடன்

“பயந்தே போயிட்டேன் ப்ரோ” என்றான் அந்த முதலாமவன்

“நானும் தான்” என்றாள் இப்போது அவர்களை நன்றாக நெருங்கியிருந்த ஜீன்ஸ் கிளி

மூவரும் ஆறுதலாய் சிறிய பெரிய மூச்சுக்களை வெளியேற்ற தன் தெத்திப்பல்லை காட்டி சிரித்தபடி   அவளிடம் கை நீட்டினான் ரிஷி

“ஹாய் ஐ ஆம் ரிஷி!” என்றபடி

“ஹாய் ஐ ஆம் கீது!” அவளும் சிரித்தபடி கைகொடுக்க கை சுள்ளென்று வலித்ததை மறைத்தபடி சிரித்தான் ரிஷி

“உயிரைக்கொடுத்து காப்பாற்றியிருக்கிறேன் ப்ரோ..என் பெயர் என்னவென்று கேட்கத்தோன்றியதா உனக்கு?!” அவனை காப்பாற்றியவன் உண்மையிலேயே கடுப்பானான்

“சாரி. உன் பேர் என்ன ப்ரோ?”

“விஷ்வா!”

“நீங்க ப்ரோ?”

“ஜோயல்”

“இனியாவது கொஞ்சம் அடங்கி சீட்ல இருங்க ரிஷி..கொஞ்சநேரம் எங்க உயிரே எங்ககிட்ட இல்லை!” சீண்டலும் புன்னகையும் குரலில் இருந்தாலும் உணர்ந்தே அவ்வார்த்தைகளைச்சொன்ன கீது விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய இடத்தை நோக்கிப்போனாள்.

அப்போதுதான் அவனுக்கு தன் மஞ்சள் காட்டு மைனா ஞாபகத்துக்கு வந்தது..தடுமாற்றமாய் எழுந்தவன் மெல்ல இடது பக்கத்துக்கு மாறி இரண்டாவது பெட்டியை எட்டிப்பார்த்தான்.

அவளை காணவில்லை..

செத்து பிழைச்சிருக்கேன்.. என்னன்னே கேக்காம கிளம்பி போய்டுவியா? என்று செல்லமாய் அவளை மனதில் கடிந்த படி கேள்வியாய் பார்த்த விஷ்வா, ஜோயலிடம் “கை பயங்கரமா வலிக்குது” என்று சொல்லி கவனத்தை மாற்றிவிட்டு அவர்கள் அருகிலே வந்து அமர்ந்தான் ரிஷி.

மீண்டும் அந்த ராஜாளி ஒரு வட்டமடித்துப்போனது யன்னல் வழி தெரிந்தது.

கொலைகாரப்பறவை! ஒரு செக்கனில் எப்படி மரண பயத்தை காண்பித்து விட்டது!

“நான் போய் மெடிக்கல் கிட் இருக்குமா என்று கேட்டுட்டு வர்றேன். “ ஜோயல் எழுந்து கொள்ள கையில் வெள்ளை நிற பர்ஸ்ட் எயிட் பாக்ஸுடன் அவர்களை நெருங்கினான் ஒரு நெடியவன்.  

சுவாதீனமாக அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டவன் கையை நீட்டுங்க என்றபடி ரிஷியின் கையை எடுத்து பரிசோதிக்க ஆரம்பிக்க..

நீங்க டாக்டரா ப்ரோ? என்று சந்தேகம் கேட்டான் ரிஷி


“இல்லை.. ஆனால் எனக்கு இவைகளில் நிறைய பரிச்சயமுண்டு..நடந்ததை பார்த்தேன். அதுதான் உங்களுக்கு தேவைப்படுமென்று டி டி ஆரிடம் வாங்கி வந்தேன்” அழுத்தமாய் அளவாய் பேசினான் அவன்.

ஆமாம். என்ன விஷயமா சித்ராபுரி போறீங்க.. நான் ஊர்க்காரன்.உங்களை பார்த்ததே இல்லையே? ரிஷியிடம் விபரம் கேட்கவும் அவன் தயங்கவில்லை.

உங்களுக்கு தெரியாதா?நாளை தான் மாரத்தான் ஆரம்பிக்குதே. நோர்த் எண்ட்ல இருந்து சவுத் எண்டு வரை.. சித்ராபுரி  தான் ஸ்டார்ட்..அதுக்காகத்தான் போறேன். ஆனா அதுக்குள்ளே என் கை அவ்வவ்வ்வ்வ்” என்றான் ரிஷி சோகமாக

அதுதான் ப்ராக்ஷர் இல்லையே..சரியா போய்டும்.

உங்க வாக்குப்பலிக்கட்டும்.  ஆமாம். உங்க பேரை சொல்லவே இல்லையே..என் பேர் ரிஷி என்று பளிச்சென்று புன்னகைத்தபடியே பாதிப்பில்லாத கையை அவனிடம் நீட்டினான் ரிஷி

“ஹா ஹா அதுக்கென்ன..என் பேர் அனுதினன்.”

சரியாக அவன் சொல்லி முடிக்க, தடால் என்ற பெரும் சத்தத்தில் ரயில் அதிர்ந்து பிறகு தட தடவென வேகம் குறைந்து மொத்தமாய் அசைவற்றுப்போனது.

தொடரும்..

மக்களே.. படிப்பவர்கள் ஒரு வரியிலாவது உங்கள் கருத்தினை சொல்லிவிட்டுப்போனால் மகிழ்வேன் 🙂 🙂

26 thoughts on “அழைக்கிறேன் வா…

  1. ஹா ஹா அட…உங்களுக்கு என்ன டவுட் இதுல? அதான் டைட்டிலே அவன் பேர்ல தானே இருக்கு!!! 😀

   Like

 1. OMG….ushaaaaaaaaaaaaaa…

  கதை எப்போதும் போல ஹ்ம்ம் அதைவிடவும் அருமையாக அமைய வாழ்த்துக்கள் .

  எபி வாசிக்க இல்ல வாசித்துவிட்டு வாரேன்மா …

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: