அழைக்கிறேன் வா.. -2

black_and_white_eagle_by_silentkillur

மூன்னூறடி உயரம், ரயிலின் அளவே அகலமான இரும்புக்கேடர், அதில் அசைவற்று நின்று போன ரயில்!

ரயிலை விட்டு வெளியே இறங்கி கேடரில் கால்வைக்கவே அசாத்திய தைரியம் தேவைப்படும். ஏனெனில் கீழே இரும்புக்கேடரில் கால்பதித்ததுமே கீழிருந்து மிரட்டும் பாதாளத்தின் பயங்கரம் நிச்சயம் சாமான்யர்களை தலைசுற்ற செய்து விடும். கேடர்களின் இடைவெளிகளுக்குள் தற்செயலாய் கால்வைத்தாலோ கீழே விழுந்து எலும்பு கூட மிஞ்சப்போவதில்லை.

ரயில் நின்று விட்டது என்பதை புரிந்து கொள்ளவே உள்ளிருந்தவர்களுக்கு சிலகணங்கள் பிடித்தது.

சில நிமிடங்களின் பின்னே “என்னாச்சு என்னாச்சு” என்று பல பக்கமும் குரல்கள் வர ஆரம்பித்திருக்க பீதியை பூசிக்கொண்ட முகத்துடன் எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருந்தனர் உள்ளே அமர்ந்திருந்த மக்கள்.

இந்த மாரத்தனுகும் எனக்கும் சரியே வராது போல.. சகுனத்தடைகளாகவே  வருதே..இந்த ரயில் எப்போது சரியாகி எப்போது நான் கிளம்புவது?” கவலை படிந்த முகமாய் கேள்வி கேட்டான் ரிஷி..

“சரியாகத்தெரியாத ஒன்றைப்பற்றி இப்போதே நினைத்து குழம்புவானேன்? நான் போய் என்ன ஆகியிருக்கிறது என்று பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று அவனுக்கு பதில் சொல்லியபடியே எழுந்து நின்றான் அனுதினன். ஏனோ அவன் கண்கள் அந்த சுற்றுப்புறத்தை ஸ்கான் செய்வது போலவே அலசிக்கொண்டிருந்தன.

“யாரும் அவசரப்பட்டு வெளியே இறங்க வேண்டாம். பயப்படவும் வேண்டாம். பதறாமல் அமர்ந்திருங்கள்” என்று அடுத்தபெட்டியில் முகம் கலங்கி அமர்ந்திருந்த பெண்களை பார்த்து சொன்னபடி அவன் நடக்க ஆரம்பித்திருக்க அனுதினன் இருங்க என்றபடி ரிஷியும் பின்னால் எழுந்து கொண்டான்.

“அனு.. “ என்று ரிஷிக்கு தன் பெயரை இலகுவாக்கியபடியே ரயிலின் முன்புறத்தை நோக்கி அவன்  நடக்க ஆரம்பித்திருக்க அவன் பின்னே ரிஷி அதைத்தொடர்ந்து விஷ்வா அப்படியே அங்கிருந்த வெகு சில இளைஞர்களும் ரயிலின் முன்புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

முன்புறத்தில் ரயிலின் இயக்குனர்கள் இருவரும் அவர்களோடு கூட இருந்த இரண்டு பொறியியலாளர்களும் பதற்றம் அப்பிய முகத்துடன் எஞ்சின் அறைக்குள் இயந்திரங்களின் முன் குனிந்திருந்தார்கள்.

“என்னாச்சு சார்?” அனுவின் குரலில் நிமிர்ந்த ஒரு இயக்குனர் அவர்களைப்பார்த்து ஒரு வருத்தப்புன்னகையை உதிர்த்தார்.

“என்னன்னே புரியல தம்பி, ரொம்ப பெருசா ஒரு கழுகு கண்ணாடிக்கு நேரே வந்துகொண்டிருந்தது..இந்த வேகத்தில் போகும்போதும் விலகும் எண்ணமின்றி நேரே வருதே என்று எனக்கு அதிசயமாய் இருந்தது. ஆனால் கண்ணாடிக்கு சில இன்ச் முன் வரை அது விலகாமல் வர ஒரு செக்கன் நான் கண்ணிமைத்தது தான் தெரியும்..ரயில் நின்றுவிட்டது. என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

கழுகா? என்று  சட்டென்று உடல் முழுதும் ஒரு குளிர் பரவ வாய்விட்டுசொன்ன ரிஷி “அது அடிபட்டுச்சா என்ன?”  என்று கேட்டபடி கண்ணாடியில் ஏதேனும் சுவடுகள் தெரிகின்றனவா என்று பார்க்க ஆரம்பித்தான்.

“ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை..அதிர்ச்சியில் அது மயங்கி ரயில் மோதமுன்னே கீழே விழுந்திருக்கலாம். ஆனால் எஞ்சின்கள் ஏன் இயங்காமல் விட்டனவோ தெரியவில்லையே..மேலிடத்துக்கு அறிவித்து விட்டோம். அவர்கள் வான்வழியே உதவி அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள்.” குனிந்து கொண்டிருந்த இன்னொருவர் தகவல் சொன்னார்.

“உதவி என்றால் பயணிகளை ஹெலியில் மீட்டுக்கொண்டு செல்வார்களா?” விஷ்வாவின் கேள்விக்கு

“இல்லையில்லை..உடனே அந்த முடிவு எடுக்க மாட்டார்கள். முதலில் தொழிநுட்பவியலாளர்கள் குழுவை அனுப்பி அவர்களாலும் முடியவில்லை என்றால் மட்டுமே அந்த முடிவு எடுப்பார்கள்.” என்று பதில் வந்தது.

“அப்படியானால் நிச்சயம் நாளை ஆகிவிடும் அனு.. நான் அப்போதே சொல்லவில்லை?” ரிஷி இயலாமையாய் சொல்ல

அவனை ஓரப்பார்வை பார்த்த அனு பேசாமல்  உள்ளே வருமாறு சமிக்கை செய்தான்.

முன்னே சென்ற அனுவை ரிஷி தொடர உள்ளே இருந்து வந்த விசாரிப்புக்களுக்கு “திருத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையான பதிலை சொல்லிவிட்டு மீண்டும் தங்களிடத்துக்கே வந்து சேர்ந்தார்கள் இருவரும். இப்போது புதிதாக சிலர் முன்புறம் நடப்பதை பார்ப்பதற்காக எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தனர்.

அனு ரயிலை விட்டு கீழே கேடரில் கால்வைத்து இறங்கி தூரத்தே பார்வையிட ஆரம்பிக்க அவனைத்தொடர்த்து தானும் இறங்கி ரிஷி  “ரொம்ப வருத்தமா இருக்கு அனு.. இந்த மாரத்தனை ரொம்ப எதிர்ப்பார்த்திருந்தேன். இப்படியாயிடுச்சே” என்று வருந்தினான். என்னமோ அவனிடம் ஆறுதல் தேடலாம் போன்ற ஒரு தலைவனுடைய ஆளுமையை அனு கொண்டிருப்பதாகப்பட்டது அவனுக்கு..

“ஏன் தவறாகவே நினைக்கிறாய்? இன்னும் சில நிமிடங்களில் சரியாகிக்கூட விடலாம். அல்லது அந்த குழு வந்ததும் சரியாகிவிடலாமே,,,”

“எனக்கென்னமோ சரியாகப்படவில்லை அனு.. நான் சொல்வதைக்கேட்டு நீங்கள் சிரிக்கக்கூட செய்வீர்கள்! கொஞ்ச நாட்களாகவே எனக்கு கழுகுகளோடு சம்பந்தப்பட்ட புரியாத கனவுகள் வருகின்றன..என்னை அவை துரத்துவது போல… இன்றைக்கும் நான் வெளியே விழப்பார்த்தேனே..நான் சத்தியமாய் சொல்கிறேன். ஒரு பெரிய கழுகை என் தலைமேல் பார்த்தேன். அதுவே என் பிடித்திருந்த கையை கொத்தியது.. நல்லவேளையாக காப்பாற்றப்பட்டேன். இப்போதும் ரயில் நின்றுவிட்டதற்கு அவர் கழுகை கண்டதாக சொன்னாரே..கவனித்தீர்களா?”

அனு அதை எப்படி எடுத்துக்கொண்டான் என்று ரிஷியால் ஊகிக்கவே முடியவில்லை. நிர்மலமான முகத்துடன் சின்னப்புன்னகை மாறாமல் இருந்தவன் “சித்ராபுரி எல்லையில் ஒரு தீவு இருக்கிறதே..அதற்குப்பெயரே கழுகுத்தீவுதான். ஆகவே இந்தப்பக்கம் சர்வ சாதாரணமாக நிறைய கழுகுகளை காணமுடியும். அதை நினைத்து குழம்ப வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்றான்

அதன்பிறகு மீதி இளைஞர்களும் வந்து சேர்ந்துவிட நடந்ததைப்பற்றி பேசியபடியே அங்கே இரண்டுமணி நேரங்கள் கடந்து போக  இருள் கவிய ஆரம்பித்த தருணத்தில் ஹெலிக்காப்டர் வந்து இன்னும் நான்குபேர் கொண்ட தொழிநுட்ப உதவியாளர்களை இறக்கி விட்டு நிறையவே பதட்டப்பட்டு போயிருந்த ஒரு முதிய தம்பதியை அழைத்துக்கொண்டு சென்றது.

ரயிலில் இருந்த விளக்குகளுக்கு மேலதிகமாக அங்கே மும்முரமாய் பழுதை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இளைஞர்கள் தங்களின் மொபைல் வெளிச்சத்தை அருகில் பிடித்து உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

அனு மட்டும் அவர்களோடு கலந்து கொள்ளாமல் ரயிலுக்கு முன்னே இருந்த கேடரில் நின்று கொண்டு கண்முன்னே நீண்டிருந்த செவ்வனத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

“அனு! இங்கிருந்து சித்ராபுரி எவ்வளவு தூரம்? இந்த பாலத்தை கடந்து செவ்வனத்துக்குள் நுழைந்து விட்டால் காட்டுக்குள் இருந்து குறுக்குப்பாதை ஏதும் இல்லையா?” என்று கேட்டபடியே அவனை நெருங்கினான் ரிஷி

“இந்த இரவில் செவ்வனத்துக்குள் இறங்குவதென்பது முடியாத காரியம். மறந்து விடு” என்றான் மற்றவன் இவன் புறம் திரும்பாமலே.

“இல்ல அனு,, அங்கே ஒருவர் செவ்வனத்துக்கு முன்னே இன்னொரு ஸ்டேஷன் வரும் என்றும் இங்கிருந்து அங்கே போய்விட்டால் இரவு ஸ்டேஷனில் சற்று நேரம் தூங்கி விட்டு அதிகாலை குறுக்குப்பாதை வழியாக சித்ராபுரி போய் விடலாம் என்று சொன்னார்.”

“அவ்வளவு தூரத்துக்கு ரிஸ்க் எடுத்து நீ போய்த்தான் ஆகவேண்டுமா?”

“ஆமாம்” அழுத்தமாக ரிஷி சொல்லவும் அவனை ஒரு வெற்றுப்பார்வை பார்த்த மற்றவனோ “அப்படியானால் நானும் வருகிறேன்..எல்லாரும் தூங்கப்போனதும் நாம் இருளில் மறைந்து போய்விடலாம். அதுவரை தனியாக கிளம்பும் முட்டாளத்தனத்தை செய்ய மாட்டாய் என்று நம்புகிறேன்.” என்று முடித்தான்.

அவன் குரலில் இருந்த கட்டளைத்தொனி ரிஷிக்கு அதை  மீறவே வேண்டும் என்ற உந்துதலை கொடுத்தாலும் நடந்த சம்பவங்களில் ரொம்பவே குழம்பிப்போயிருந்ததில் அனுவின் வழிகாட்டலுக்கு இனங்குவது தனக்கு நல்லது என்று தோன்றியிருந்ததில் சம்மதமாக தலையசைத்தான்.

விஷ்வாவும் கீதுவும் திட்டத்தில் பங்குகொள்ள சம்மதிக்காததால் அனுவும் அவனும் மட்டுமே செல்வது என்று முடிவானது.

அனுவோடு உள்ளே நுழைந்து ரயிலில் பகிரப்பட்ட உணவுகளை ஒன்றாக அமர்ந்து உண்டு விட்டு அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டின் வாயிலில் அனு  மறுபடியும் தன்னுடைய ஸ்கான் பார்வையுடன் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு எதிர்ப்புற வாயிலில் தானும் போய் அமர்ந்து  கொண்டான் ரிஷி.. குளிர்காற்று, இருள், சற்றுமுன்னே உயிருக்கு போராடிய களைப்பு எல்லாம் சேர்ந்துகொள்ள மெல்ல மெல்ல துயில் அவனை தழுவிக்கொள்ள ஆரம்பித்தது.

***

இரவென்றும் இல்லை,,,பகலென்றும் இல்லாத ஒரு சாம்பல் வண்ண சுற்றுப்புறம்..மசமசவென காட்சிகள் கண்முன்னே விரிய ஆரம்பிக்கின்றன.

வலி…உயிர்போகும் வலி.. முரட்டுக்கரமொன்று ஒருவனின் கழுத்தைப்பிடித்து எங்கோ இழுத்துச்செல்கிறது. இல்லை இதே இடம் தான்..இரும்புக்கேடர்களின் மேலே தான் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

‘ஐயோ! அது நான் தான்.. என்னை யார் இழுத்துச்செல்வது?‘ அந்தக்கரம் உண்டாக்கிய வேதனையை முற்றிலும் உணர்ந்தவனாய் தலையை தூக்கிப்பார்த்தான் ரிஷி.

வெண்ணிறமான அழகிய  முழுநீள ஆடையில் கீழ் புறம் கறுப்புநிற பார்டர் போன்ற ஒரு அமைப்பு   பொருத்தப்பட்டிருக்க தலையின் மேலும் கரும் கிரீடமொன்றுடன் கோபமே உருவெடுத்த பெண்ணொருத்தி தான் அவனை இழுத்துச் சென்று கொண்டிருந்தாள்.

அந்தப்பெண்ணின் முகம்….

அந்த மஞ்சள் காட்டு மைனாவா? தூக்கத்திலும் தூக்கிவாரிப்போட்டது ரிஷிக்கு..

“இன்றைக்கு நீ எப்படித்தப்பிக்கிறாய் என்று பார்!!! எத்தனை நாட்களாய் உன்னை கொன்று புதைக்க அலைந்தேன்.” பல்லை கடித்தபடி அவள் அவன் தலையை கேடரோடு மோத முனைய இதோ கூழாக சிதறப்போகிறது என் தலை என்னும் நினைவில் ரிஷி கடுமையான வலியொன்றுக்காக செய்வதறியாது காத்திருக்க பளபளவென்று ஒரு மிக நீண்ட வாள் ஒன்று அந்த அகங்காரியின் கழுத்தில் வந்து இடையிட்டது!

“பிரதிக்ஷா!!! அவனை விட்டு விடு! இல்லையேல்….” சீறலான மூச்சின் இடையே கர்ச்சித்தபடி பளபளக்கும் நீளமான வாளொன்றை நீட்டிகொண்டிருந்தவன் அனுதினன்!

“நீ என்ன செய்யத்துணிந்திருக்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா  அனுதினா!!!!!” அவள் நெருப்புத்துண்டங்கள் போல கோபத்தில் சிவந்திருந்த  விழிகளை அவன் மேல் பதித்து கோபாவேசமாய் கேள்வி கேட்டாள்.

“எனக்குக்கவலையில்லை!” என்றபடி வாளை சரேலென சுழற்றி அதன் அடிப்பகுதியால் வேகமாய் அவளைத்தள்ள தடுமாறி கீழே விழுந்தாள் அவள்.

சரேலென ரிஷியை அவன் புறம் இழுத்துக்கொண்டவன் “போ உன்னை அனுப்பியவனிடம் போய்ச்சொல்! அனுதினன் உயிரோடு இருக்கும் வரை உங்கள் எண்ணங்கள் என்றுமே பலிக்கப்போவதில்லை. என் யாமியை மனத்தால் கூட உங்களை தீண்ட விடமாட்டான் இந்த அனுதினன்” என்று கர்ஜனையாய் சொன்னான்.

அடுத்த கணம் விழுந்து கிடந்தவள் சரேலென எழுந்தாள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளுக்கு பின்னே அவளது உடையை ஒத்த பெரும் வெண்ணிற சிறகுகள் இரண்டு தோன்ற அவள் அவர்களை நெருங்கும் வேகம் கூடியது. ரிஷி அலறி அனுவின் பின் ஒடுங்க கொஞ்சமும் தாமதிக்காமல் வாளை விசிறி அவளை வெட்டினான் அனுதினன். இரண்டு துண்டங்களாய் சிதறி அந்த கேடரின் இரு புறமும் விழுந்தவளை கண்டு ரிஷி மயக்கத்துக்குப்போக அவனை கையில் ஏந்தியபடி வானில் உயர ஆரம்பித்தான் அனுதினன். இப்போது அவன் முதுகிலும் பிரமாண்டமாய் வெண்ணிறத்தில் அடியில் கறுப்பு வர்ணமிட்ட இரண்டு இறக்கைகள் தோன்றியிருந்தன!!!

“ரிஷி…ரிஷி…” மென்குரலில் அழைத்தபடி அனுவின் கரம் உலுப்பியதில் தூக்கம் கலைந்து விழித்தவன் அவ்வளவு கிட்டத்தில் அனுவின்  முகத்தை கண்டதும் தன் கனவின் நினைவில் சின்னதாய் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு..

“போகலாமா? எல்லாரும் தூங்கிவிட்டார்கள் “

சரி சரி என்று ரகசியமாய் சொன்னபடி தன் தோள்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் ரிஷி..போய்த்தான் ஆகவேண்டுமா என்று மனம் இரண்டாவது தடவை கேள்விகேட்டது..

இத்தனை காலம் செய்த பயிற்சிகள் அனைத்தும் வீணாகி போய் விடுவதா என்ற நினைவே கேள்விகளை உதறித்தள்ளிவிட மொபைலில் டிஸ்ப்ளே வெளிச்சத்தில் குறுக்காக கிடந்த கேடர்களில் கால் பதித்து அனுதினனை தொடர்ந்தான் ரிஷி

“அனு… செம காமடி தெரியுமா? இப்போ நீங்க என் கனவுல வந்தீங்க.. என்னை ஒரு பொண்ணு கொல்லப்பார்த்தாள். நீங்க கழுகோட சிறகு போலவே பெரிய சிறகு எல்லாம் வைச்சிட்டு அவளை வெட்டி என்னை காப்பாத்துறது போல கனவு கண்டேன்.. ஹா ஹா கொஞ்ச நேரத்துக்கு முன்னே வந்த சாவு பயம்..நாம பேசின கழுகுகள், நீங்க..நான் சைட் அடிச்ச அந்த பொண்ணு எல்லாத்தையும் என் மனம் எப்படி கோர்த்திருக்கு பார்த்தீங்களா? சிறகெல்லாம் வச்சுட்டு ஆனாலும் நீங்க செம்ம அனு! நனவை விட கனவு செம கூல்!”

“ம்ஹ்ம்…எல்லாம் சரிதான்..ஆனால்  இது தான் கனவு..இது தான் நனவு என்று நீ எப்படி முடிவு செய்கிறாய்?” முன்னே சென்றவனிடம் இருந்து கேள்வி மட்டும் வந்தது. இருளில் முகம் தெரியவில்லை.

அந்தக்கேள்வியின் அர்த்தம் உள்ளிறங்க சில கணங்கள் பிடித்தது! என்னது??? என்று ஒரு கணம் விழித்தவன் “நான் முழிச்சிருக்கேனே,,,அதோட முழிச்சதும் கனவு நமக்கு அவ்வளவா நினைவிருக்கிறதும் இல்லையே.. அப்போ இதுதானே உண்மையாக, நனவாக இருக்க முடியும்?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் ரிஷி.

“ஒகே..முழிச்சதும் கனவு மறந்து போறது போல கனவுலகதுல நீ முழிச்சதும் நீ இப்போ நனவு என்று சொல்வது மறந்து போகுமாயின்….. “ அனுவின் குரலில் லேசான சிரிப்பிருந்தது..

ஆண்டவா…என்று தலையை உலுக்கிக்கொண்டவன் “அனு..என்னை குழப்புறீங்க நீங்க! இப்போ நான் எங்கே இருக்கேன்,,கனவுலயா நனவுலையா? அதை சொல்லுங்க.. பாவம் பாசே கன்பியூஸ் ஆகிட்டார்..”என்று வாய்விட்டு சிரித்தான்.

“நிஜமாகத்தான் சொல்கிறேன். நாம் காணும் கனவுகள் ஆழ்மனத்தோடு சம்பந்தப்பட்டவை. ஆழ்மனதைப்பற்றியோ கனவுகளை பற்றியோ மனிதர்கள் அறிந்ததெல்லாம் வெறுமனே தண்ணீரில் மிதக்கும் பனிமலையின் தலையை பார்த்து பேசுவது போலத்தான். உள்ளே நீ கற்பனை கூட செய்யாத விஷயங்கள் எல்லாம் இருக்கலாம்.”

“சார்.. சுத்திலும் இருட்டு, கீழே தப்பித்தவறி கால்வச்சா மொத்தமா கதை முடிஞ்சிரும்..இப்போ இந்த அமானுஷ்யப்பேச்சு நமக்கு தேவையா? ரிஷி வெளியே பார்க்கத்தான் தைரியசாலி..இதை நாம காலைல பேசலாமே…” என்று அழாக்குறையாக ரிஷி சொல்ல வாய்விட்டு சிரித்தவன் “ஜாக்கிரதையா பார்த்து வா” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

சில அடிகள் எடுத்து வைத்திருப்பார்கள்

“உன்னுடைய சாவை நீயே தேடிப்போவது வேடிக்கையாக இருக்கிறது ரிஷி…”

பின்புறமாக  கேட்ட பெண்குரலில் பயத்தில் மயிர்க்கால்கள் சிலிர்த்துப்போய்  ரிஷி திடுக்கிட்டுத்திரும்ப அவனுக்கு வெகு அருகே அந்த மஞ்சள் அழகி நின்று கொண்டிருந்தாள்.

பிரதிஷா!!! என்று கர்ஜித்தான் அனு..

அவனது குரல் மாறிய வகையில் நடுங்கிப்போன ரிஷியோ  பக்கப்புறக்கேடர் பக்கமாய் அனிச்சையாய் ஒதுங்கினான். சற்றுமுன் கண்ட கனவு அதிர்வுடன் அவனுக்கு நினைவு வந்தது.இப்போது நடப்பது கனவா நனவா என்ற சந்தேகம் கூட அவனுக்குள் முளைத்தது.

“நான் அவனை கொல்லாமல் விடமாட்டேன்…” அவள் வேகமாய் ரிஷியின் பக்கம் முன்னேற

“இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் நான் எச்சரித்தது தான் நடக்கும்” என்றபடி அவர்களை நோக்கி முன்னேறினான் அனு.

அதற்குள் வேகமாய் அந்தப் பிரதிக்ஷா ரிஷியை நெருங்க. பாய்ந்து வந்து அனு தங்களுக்கு நடுவில் நின்றது மட்டும் தான் ரிஷிக்கு தெரிந்திருந்தது. அடுத்த கணம் மனித செவிப்புலனுக்கெட்டாத ஒரு அதிர்வலையில் அலறியபடி பளபளக்கும் வாளொன்றை நெஞ்சில் வாங்கிக்கொண்டு கேடரில் இருந்து கீழே விழ ஆரம்பித்திருந்தாள் அந்தப்பெண்.

அனுவின் கண்களையும், நடந்த நிகழ்வையும் கண்டு சர்வாங்கமும் ஒடுங்கிப்போனவனாய் ரயிலை நோக்கி தப்பியோட ரிஷி நினைத்த வேளையில் மின்னலாய் அவனுடைய நெற்றிப்பொட்டில் ஒரு தட்டுத்தட்டியவன் அவன் நினைவு மங்கி விழ ஆரம்பிக்கவும் அவனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வானில் உயர ஆரம்பித்தான் அனு. ரிஷியின் கனவில் வந்ததைப்போலவே அவனுடைய முதுகில் இரு பெரும் வெண் சிறகுகள் தோன்றியிருந்ததை ரிஷி கவனித்திருக்க ஞாயமில்லை!

வருவான்…

உங்கள் கமன்ட்களுக்கு நன்றி மக்களே.. தொடர்ந்து படிங்க..உங்க கருத்தை சொல்லுங்க..நன்றி! 😀

13 thoughts on “அழைக்கிறேன் வா.. -2

 1. உன் கற்பனைகள் எல்லாமே மிக அழகானவை உஷ்.. நான் பல தடவை கவனிச்சிருக்கேன்.. இந்தக் கதைலயும் அப்படித்தான்.. இதுவரைக்கும் உன் கதைகள் தொடரா படிச்சதில்ல.. முடிஞ்சதும் தான் படிப்பேன்.. இந்த முறை தெரியாத்தனமா படிச்சிட்டன் புள்ள.. மரியாதையா கெதி கெதியா அப்டேட் போட்டுடு… நான் பாவம். மிகவும் அழகாகவும் விறுவிறுப்பாகவும் போகுது..

  முதல் கதையும் படிச்சிட்டன்.. சூப்பர் எப்பவும் போல.. அத படிக்கச் வந்துதான் ஆடு சிக்கினது..

  Liked by 1 person

 2. hey..hey..நான் பறந்து கொண்டே fb இல கமெண்ட்ஸ் சொல்லுறன் …

  இப்போ 12 .30 நான் நனவிலா? கனவிலா? ..

  தெய்வமே ..எப்படிடா இப்படியெல்லாம்

  Like

 3. hi usha,
  oru fantasy storya? summavae neenga ball illama sixer adipeenga ippo ketkava venum? adi dhooll. excellent start but update seekiram seekiram pa. usually i dont go for serial stories. just to read again the OKUK story i landed in this troublesome of reading the serial story. pls update regularly pa. i cant wait tooo long for the suspense.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: