வித்லவ், மைதிலி-2

 

‘அவனை நான் மூன்று வருடங்களின் முன் இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை தான் முதன் முதலில் சந்தித்தேன்..ஒரு நீதிபதியின் மகள் சந்திக்காத மனித வகையினரா என்ன? என் பத்தொன்பதாவது வயதில், என் உலகமும் மொழியும் புரியாத, ஒரு சின்ன செங்கல் வீட்டுக்குள் வாழும்,  எளிய மனிதனொருவன் முதற் சந்திப்பிலேயே என் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுவான் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை’

2009 January

“ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு விவசாய குடும்பம் ஒதுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு இந்த செயன்முறை பயிற்சிக்கான ஆறுமாத காலத்தையும் இதற்கென பயன்படுத்திக்கொள்ள இயலும். விரிவுரைகள் இல்லாத நேரங்களில் அந்த  குடும்பத்தினரை சந்தியுங்கள். அவர்களின் வாழ்வியலை அவதானியுங்கள். அவர்கள் நிலத்தை பயன்படுத்தும் முறை, விவசாய உத்திகள், அவற்றின் சாதக பாதகங்கள், பெறுமதி சேர்க்கை, சந்தைப்படுத்தல் உத்திகள், சிறுகைத்தொழில் எதிலாவது ஈடுபடுகிறார்களா? ஆண்டு வருமானம், லாபம் நட்டம்  எல்லாவற்றையும் கவனியுங்கள்.   ஆறுமாத இறுதியில் நீங்கள் ஒவ்வொருவரும் அந்த குடும்பத்தை பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.”

“ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள்  கல்வியறிவு பெரிதாக இல்லாதவர்களே தவிர  அனுபவத்தாலும் உடலுழைப்பாலும் சிறந்தவர்கள். அவர்களிடம் கண்ணியமாக பணிவாக அவர்களின் நம்பிக்கையை பெற்று இந்த செயன்முறையை செய்து முடிப்பதையே நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோமே தவிர அவர்களுக்கு தொந்தரவாக இருப்பதை அல்ல. உங்களுக்கான செயன்முறைக்கல்விக்காக பெரிய மனதுடன் தங்கள் வீடுகளில் உங்களை வரவேற்று தங்கள் வாழ்வியல் குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொள்ளப்போகிறார்கள். இது உங்களுக்கு அவர்கள் செய்யப்போகும் ஒரு உதவி மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்”  விரிவுரையாளர் அந்த ப்ராஜக்ட் பற்றி விளக்கினார்.

“தெய்வமே இது என்னடா பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை?” என்று வாய்விட்டு சொல்லியபடி மைத்தியை திரும்பிப்பார்த்தாள் சுமி. மைதிலியின் கண்களும் அதையே தான் பிரதி பலித்துக்கொண்டிருந்தன. அவர்கள் மகா இல்லுப்பள்ளம வந்து சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இது தான் அவர்களுடைய இரண்டாவது விரிவுரை. மொழிதெரியா ஊரில் கஷ்டங்களை சமாளிப்பதற்காய் இயல்பாகவே ஏற்படும் ஒற்றுமை அவர்களுக்குள்ளும் மலர்ந்திருந்தததில் தமிழர் இருபது பேரும் அடுத்தடுத்த வரிசைகளில் ஒன்றாகவே அமர்ந்திருந்தனர்.

அகரவரிசையில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர்.  மைதிலியும் சுதாகரையும் தவிர அவர்களின் குழுவில் மற்றவர்கள் சகோதர இனத்தோரே.  அந்த வார வெள்ளிக்கிழமை முதல்தடவையாக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம் தமிழர்களான தாங்கள் அவர்களின் வீடுகளில் எப்படி வரவேற்கப்படுவோம் என்ற பயம் வேறு!! மைதிலிக்கு அங்கே போகும் வரை ஒரே பயம் தான். மொழியும் சுத்தமாக அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. கையில் ஒரு பரிசுப்பொருளை வாங்கிக்கொண்டு ஐவரும் முதல் தடவையாக சேனபுரவுக்கு பயணப்பட்டபோது சுதாகரின் சைக்கிளின் பின்னேயே நிழலாக சைக்கிள் ஓட்டிப் போய்க்கொண்டிருந்தாள் மைத்தி.

அவர்களிடம் எப்படி இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்று சுதாகர் அவளுக்கு கற்றுக்கொடுத்திருந்ததை திரும்ப திரும்ப மனப்பாடம் செய்துகொண்டிருந்தது வேறு படபடப்பை தந்தது. அவள் பிறந்து வளர்ந்த இடம் யாழ்ப்பாண நகர்ப்புறம் தான். இப்படிப்பட்ட  மணல் பாதைகள், செங்கல் வீடுகள், விவசாயக்குடும்பங்களை அவள் கண்டறியாள். முதன் முதலாய் மஞ்சு ஆன்ட்டி வீட்டுக்குள் நுழைந்தபோது கிடுகு வேயப்பட்ட வேலிகளில் இருந்து செங்கல்லால் கட்டப்பட்ட சின்னதான வீடு வரை சகலமுமே அவளை ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருந்தன.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வாஞ்சையுடன் அவர்களை வரவேற்ற குடும்பத்தினரை மைதிலிக்கு ரொம்பவே பிடித்தது.

பொதுவான அறிமுகத்தின் பின் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சுதாகரின் உதவியில் தான் கற்ற இரண்டு வசனங்களை புன்சிரிப்புடன் ஒப்புவித்தாள் அவள்.

அவளின் அந்த முயற்சியில் நெகிழ்ந்து போன மஞ்சு தன் பெரிய கரங்களுக்குள் அவளை இழுத்து அணைத்துக்கொண்ட போது அவளுக்கு பயம் என்பதே மறந்து போய் நிம்மதி பெருமூச்சு முளைத்தது. தனக்குத்தெரிந்த உடைந்த சிங்களமும் ஆங்கிலமுமாக அவள் மெதுவாக அங்கே பொருந்த ஆரம்பித்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் மஞ்சு தேநீர் தயாரிப்பதற்காக உள்ளே சென்று விட சுவாரஸ்யமாக ஷோ கேசில் இருந்த சாம்பியன் கிண்ணங்களை பார்த்துக்கொண்டிருந்தவள் மற்றவர்கள் சஜியின் அப்பாவுடன் பேசியபடியே வெளியே சுற்றிப்பார்க்க சென்றதை கவனிக்கவில்லை.

எல்லாமே விளையாட்டு சம்பந்தமான கிண்ணங்கள் தான்.  சின்னக்கிண்ணங்களில் இருந்து பெரியவை வரை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தவள் அவற்றுக்கு நடுநாயகமாக நின்றிருந்த  அரை ஆள் உயர கிண்ணத்தை எடுத்துப்பார்த்தாள். அதில் மாவட்ட மட்ட கால்பந்தாட்ட போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.

அதை தலைகீழாக சாய்த்து பிடித்துக்கொண்டு பெயரை படிக்க முயன்றவள் “சிந்தக நிவேதன் ரத்னாயக்க” என்று வாய்விட்டே படித்தாள்.

“யார் நீ?”

காதருகில் கேட்ட அதட்டல் குரலில் பயந்துபோய் கிண்ணத்தை அவள் கீழே விட்டு விட லாவகமாக அதை பற்றியவன் அந்தக்கிண்ணத்தை ஒரு பவித்ரமான பாவனையுடன் நேராக வைத்தான்.

பிறகு அவளை முறைத்து “பிறர் பொருளை கேட்காமல் எடுப்பதே தவறு. அதில் கீழே போட்டு உடைக்க வேறு செய்கிறாயா? யார் நீ? இங்கென்ன செய்கிறாய்?” என்று அவளிடம் சரமாரியாய் கோபக்கணைகளை தொடுத்தான்.

அரண்டு போனாள் மைத்தி. இந்தளவு கபில நிறத்தில் கண்கள் கொண்டவனை அவள் இதுவரை சந்தித்ததே இல்லை! சட்டென்று பார்வையை அது தான் கவ்விக்கொண்டது. நெடு நெடுவென அவனது உயரமுமா? மாநிறத்துக்கும் ஒருமாற்று குறைவான அவனது நிறமா? அவனது திமிர்த்தனமான உடல்மொழியா? எது அவளை மிரட்டியதென்று அவளுக்கு இனம்பிரிக்க தெரியவில்லை. அதெல்லாவற்றியும் விட அவன் ஏதோ அவளை திட்டுகிறான் என்ற அளவுக்குத்தான் அவன் பேசியது அவளுக்கு குத்துமதிப்பாய் புரிந்து தொலைத்திருந்தது.

“நான் நான் கம்பஸ்.. பிரண்ட்ஸ்..அஞ்சு பேர்.. “ இப்படி தனக்குத்தெரிந்த மொழியில் அவள் சொல்ல முயல அவ்வளவு நேரமும் கடுமையை தாங்கி நின்ற அவன் முகத்தில் சட்டென்று அந்த மாற்றம் நிகழ்ந்தது!

பற்களோடு கண்களும் சேர்ந்து பளிச்சிட அவன் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

“நீ தமிழா?” பேச்சு வார்த்தை ஆங்கிலத்துக்கு தாவியது.

“ஆம் ஆம்.”

“எந்த ஊர்?”

“யாழ்ப்பாணம்” இவள் பயந்தபடியே பதில்சொன்னாள். அவனது ஆங்கிலம் ஸ்டைலிஷாக இருக்கவில்லை. ஆனால் தேவைக்கேற்ற அளவு அவனால் பேசமுடியும் என்ற நிமிர்வுடன் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் அதைக்கூட எதிர்பார்க்காததால் அவள் வார்த்தைகளை அளந்து கொண்டிருந்தாள்

ஊரைக்கேட்டதும் ஆச்சர்யமாய் அவனது இமைகள் ஒரு தரம் ஏறி இறங்க “உன் பெயர் என்ன?” என்ற கேள்வி அடுத்து வந்தது.

“மைதிலி..” அவனின் மாறாத குறும்புச்சிரிப்பு அவளைக்குறித்து எதற்கோ சிரித்து மகிழ்கிறான் என்று அறிவிக்க தேவையில்லாத அவஸ்தையும் படபடப்பும் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது.

“நைஸ் நேம்..” என்று ரசித்துச் சொன்னவன் அப்பா என்ன செய்கிறார்? வீட்டில் அவளுக்கு எத்தனை சகோதரர்? என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்

பயத்துடன் பவ்யமாக குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் “நீ அப்பா செல்லமா? அம்மா செல்லமா?” என்ற அவன் கேள்விக்கு தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்

இவன் நம்மை என்ன கிண்டர்கார்டன் குழந்தை என்றா நினைத்துக்கொண்டிருக்கிறான் என்ற அவளது கோபத்திற்கு அவன் முகத்தில் இருந்த சிரிப்பை அடக்கிக்கொண்டிருக்கும் பாவனை இன்னுமே நெய்யூற்றவே செய்தது.

முகம் கோபத்தில் சிவந்து விட “பிரண்ட்சிடம் போகிறேன்” என்று முணுமுணுத்தபடி வீட்டை விட்டு வெளியேறியவள் வெளியே யாரையும் காணாமல் திகைத்து அங்கும் இங்கும் விழிகளை ஒட்டி தேடினாள்.

‘இங்கே தானே இருந்தாய்ங்க! டேய் சுதா நீயுமா என்னை விட்டுட்டு எஸ் ஆயிட்ட? இங்கே ஒருத்தன் துட்டகைமுனு மன்னன்னு தன்னை நினைச்சுக்கிட்டு கண்ணாலேயே கொல்றான்!  வந்து என்னை காப்பாத்துடா டேய்” என்று மனதில் வேண்டிக்கொண்டு அவள் தேடியதற்கு எந்தப்பலனும் இல்லை. அதற்கு பதில் அந்த துட்டகைமுனு ஆகப்பட்டவன் இப்போது சிரிப்பை தொலைத்து விட்டு கைகளைக்கட்டிக்கொண்டு அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்

“அப்பாலே போ சாத்தானே.. கடவுளே சுதா..எங்கடா இருக்க!!!” மனதுக்குள் அரற்றியபடி அவள் அந்த வீட்டின் இருபுறங்களிலும் எட்டிப்பார்த்து சோர்ந்தாள்

அவர்கள் போன சுவடே தெரியவில்லை.

“என்ன மகள்? உன் நண்பர்களையா தேடுகிறாய்? அவர்கள் பின்புறம் தோட்டத்துக்கு போயிருக்கிறார்கள்!” சேர்த்து வைத்திருந்த தேயிலையை வெளியே ரோஜாத்தொட்டிக்குள் போட வந்த மஞ்சு ஆன்ட்டி அவளின் அலைபாய்தலை பார்த்து விட்டு ஆபத்பாந்தவியாய் தகவல் சொன்னார்.

“அந்த இடத்துக்கு எப்படிப்போவது?” என்பதை மஞ்சுவிடம் எப்படி கேட்கவேண்டும் என்று அவள் பதட்டமாய் மனதுக்குள் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்க அவர் சாவகாசமாய் மகனின் பக்கம் திரும்பினார்.

“புத்தா..இவளை கொண்டு போய் அவர்களோடு சேர்த்துவிடு” என்று மகனிடம் அவளை விட்டு விட்டு அவர் உள்ளே செல்ல மைத்தி விழித்தாள்.

அவன் சிரிக்கவில்லை.

அதற்குள் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தவன் சைகையால் மட்டும் வா என்று அழைத்து விட்டு அவன் பாட்டுக்கு  நடக்க, திமிரைப் பாரேன் என்று நொந்தபடி அவன் பின்னே நடக்க ஆரம்பித்தாள் மைத்தி. மனதுக்குள் வேறு பயம் பயமாக வந்தது.

இந்த குடும்பத்தை விரிவுரையாளர்கள் நன்கு விசாரித்து தான் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் கணிப்பு தவறியோ அல்லது தமிழ் என்ற கோபத்திலோ இந்த ஆளில்லா இடத்தில் இவன் அவளை ஏதும் செய்துவிட்டால்?

அந்த குட்டி வீட்டுக்கு பின்னே ஏக்கர் கணக்கில் விரிய ஆரம்பித்த ஆள்நடமாட்டம் இல்லாத நிலப்பகுதியும் இருளான மரக்கூடலும் அவளுக்கு நடுக்கத்தையே கொடுக்க அவனிடம் இருந்து சந்தேகப்படுவது போன்ற அசைவுகள் ஏதும் வருகின்றனவா என்று அலர்ட்டாக கவனித்தபடி மைத்தி அவன் பின்னே நடந்துகொண்டிருந்தாள்.

ஆனால் அவனோ வீட்டின் பின்னே இருந்த ஒற்றையடிப்பாதையில் பயணித்து தென்னந்தோப்புக்குள் நுழைந்து அதன் பின் வயல்பரப்புக்கள் வரும் வரை அவன் அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை! அவள் கூட வருகிறாளா என்று கூட பார்க்காமல் அவன் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க அவன் பின்னே ஏறக்குறைய ஓடிக்கொண்டிருந்தவள் ஈரமும் சகதியுமான வரப்பில் தடக்கி விழாமல் நடக்க பகீரத பிரயத்தனம் செய்தாள். அவன் கைகொடுத்து உதவினால் வேண்டாம் என்று மறுக்க வேண்டும் என்று அவள் மனதுக்குள் உறுதிமொழி எடுக்க அவனோ அவளை கவனித்தும் கவனிக்காதது போன்ற பாவனையிலேயே வந்துகொண்டிருந்தான். மறந்தும் அவளுக்கு உதவ முன்வரவில்லை!

“என்னதான் சொன்னாலும் இவங்களுக்கு துவேஷம் இல்லாமல் போகாது. நீ வந்தாலென்ன விழுந்தாலென்ன என்று போகிறானே.. சரியான துவேஷம் பிடிச்சவன்” என்று ஏமாற்றத்தில் அவனை மனதுக்குள் திட்டித்தீர்த்தாள் மைத்தி.

ஒருவழியாய் அவளோடு வந்த நால்வரும் சிந்தகவின் அப்பா சமந்த மற்றும் தங்கை சஜினியுடன் மரவள்ளி தோட்டத்துக்கு நடுவில் இருந்த ஒரு மேட்டில் ஏறி நின்றுகொண்டிருந்ததை அவள் கண்டபிறகே அவளுக்கு நிம்மதியானது!

ஆனால் அந்த மணல் மேட்டில் கால்வைக்க வைக்க அது புதைய ஆரம்பித்தது!

சிந்தகவோ சர்வசாதாரணமாக அதில் ஏறி அவளுக்கு நேர்மேலே நின்று கொண்டான். மற்றவர்களோ அவளைப்பார்த்து புன்னகைத்து விட்டு சமந்தவின் பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள்!

இதென்னடா சோதனை! கால்வைத்த இடமெல்லாம் புதைகிறதே. அடேய் யாராவது என்னை திரும்பி பாருங்கடா..இவன் வேறு பார்த்துக்கொண்டே நிற்கிறானே..இவனிடம் உதவி கேட்பதா? அதற்கு நீ கீழேயே நின்று விடலாம் மைத்தி!!!

சிந்தக அசையவில்லை. ஒரு அளவிடும் பார்வையோடு அவளுக்கு மேலேயே நின்றுகொண்டிருந்தான். ஒரு பத்து தடவைகள் முயன்று பார்த்தவள் கடைக்கண்ணால் அவனை பார்த்தாள். அவள் வாயைதிறந்து கேட்டால் பெரிய மனதோடு உதவி செய்வார் போலிருக்கிறது.

“நீ துட்டகைமுனு என்றால் நான் எல்லாளன் வம்சம் டா!” அவளுக்குள் இருந்த தமிழுணர்வு பிடரி முடியை சிலிர்த்தது.

சட்டென “சுதா” என்று அழைத்தாள் மைத்தி. கேள்வியாக திரும்பிப்பார்த்ததுமே புரிந்துகொண்டு அருகில் வந்து கையை நீட்டினான் சுதா. அதற்குள் அங்கே நின்றதன் அடையாளமே இல்லாமல் விலகி தந்தையோடு சேர்ந்து கொண்டிருந்தான் சிந்தக!

சுதா நீட்டிய கையை தயக்கத்துடன் பற்றியவள் ஒரு வழியாய் மேலே ஏறினாள்.

“நாங்கள் இந்தப்பக்கமா வரல மைதிலி! அதோ படி போல இருக்குபார் அது வழியா தான் ஏறி வந்தோம்.” மேலே வந்தவள் சுதா  சொன்ன திசையில் பார்த்து கண்கள் சிவந்தாள்! எதிர்ப்புறமிருந்து புதர்களுக்கிடையில் தெளிவாகவே தெரிந்தது மண்ணாலான படிக்கட்டுக்கள்!

அப்போ வேண்டுமென்றே அவளை மணல் பக்கமாக இழுத்து வந்ததும் இல்லாமல் சுதாவின் கையை பிடிக்க வேறு வைத்து விட்டானே..இந்த துட்டகைமுனு  என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறான்? அவன் தன்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பது போல அவமானமும் கோபமும் கலவையாய் அவளுக்குள் பொங்கியது.

நீயும் ஒரு லூசு மைத்தி! விக்ரமாதித்தன் கணக்கில் அதே மணலில் தாவிக்கொண்டிருந்தாயே தவிர சுற்றி வந்து வழி தேடியிருந்தால் இலகுவாக அந்த படிக்கட்டுகளை கண்டிருப்பாயே..மனம் அவளிலும் குற்றம் கண்டது

இவன் தப்பான ரூட்ல கூட்டிட்டு வருவான்னு நான் என்ன கனவா கண்டேன்? என்று மனதுக்குள் முனங்கினாள் அவள்.

வீடுகள் தான் சின்னதாக இருந்தனவே தவிர அதற்கு பின்னே இருந்த விவசாய நிலங்கள் ஒவ்வொருவரிடமும் ஏக்கர் கணக்கில் இருந்தன. அவர்கள் பயிரிடாத வகையே இல்லையெனலாம். வானம் பார்த்த பூமியாய் மழையை மட்டும் நம்பி நெல் விளைவிக்கும் யாழ்ப்பாண பெண்ணான அவளுக்கு நீர் தேக்கி வைத்து பாசனம் செய்யும் இவைகளெல்லாம் ரொம்பவே வித்யாசமாக இருந்தன. அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது மட்டுமே புரிந்த நிலையில் அவள் சுற்றிலும் வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னே ஒவ்வொரு பேச்சுக்கும் சுதாவிடம் மொழிபெயர்ப்பு கேட்க முடியுமா என்ன?

அவர்கள் வீட்டில் அந்த தடியன் பெருமதிப்புக்குரியவன் என்பது அவனது பெற்றோரும் தங்கையும் அவனிடம் பேசிய தொனியிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அங்கே வந்தபிறகு தந்தை பேசுவது குறைய, மெல்லிய சிரிப்பு நிரந்தரமாய் உறைந்திருந்த உதடுகளோடு  அவன் தான் பேச ஆரம்பித்திருந்தான். அவளோட வந்த மற்றப்பெண்ணோடு அவன் எப்படி பேசுகிறான் என்று கவனித்தால்..அவளை நங்கி (தங்கச்சி) என்று நேரடியாகவே அழைத்து மைத்தியை அதிர வைத்தான் அவன்!

தன்னை நங்கி என்று சொன்னானா? அவசரமாய் யோசித்தாள்.

இல்லையே..மைதிலி நைஸ் நேம் என்றான் அதன் பிறகு பேசவே இல்லையே…

மைதிலி நாங்கள் திரும்ப ஹாஸ்டல் போகும் போது உனக்கு நான் இதையெல்லாம் சொல்கிறேன் ஓகேவா? என்று சுதா கேட்க சரியென்று தலையசைத்தாள் அவள்

காதை தீட்டிக்கொண்டு அவர்கள் பேசுவதை பெருமுயற்சி செய்து அவள் புரிந்து கொள்ள முயற்சிப்பதை சிந்தகவினது ஓரப்பார்வைகள் கவனிப்பதை மைத்தியும் உணரவே செய்தாள்.

பழங்களை கொள்வனவு செய்து பெறுமதி சேர்த்து இன்னொரு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தரமான பிளாஸ்டிக் போத்தல்களில் லேபிள்களுடன் இணைத்து சூப்பர்மார்க்கட்டுகளுக்கு சப்ளை செய்யும் தொழிலில் அவன் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போது கொஞ்சமாய் பயம் தொலைந்து அவன் மீது மரியாதை  சேர்ந்தது.

அன்றிரவு சாப்பிட்டு விட்டு செல்லச்சொன்ன மஞ்சுவின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர்கள் அங்கே காத்திருந்தபோது சிந்தக அவளுடைய நண்பர்களுடன் நிறைய பேசிகொண்டிருந்தான்.

அவன் பேசியது புரிந்தும் புரியாமலும் அவனின் குரலின் ஏற்ற இறக்கங்களை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தவளை அவ்வப்போது கவனித்து சுதா மூலமாக அவளையும் பேச்சில் இணைத்துக்கொண்ட அவனது கரிசனை இந்த துட்டகைமுனுவுக்குள்ளும் ஏதோ ஒண்ணு இருக்கு பாரேன் என்று அவளை சந்தோஷிப்பித்தது.

ஆனால் அவனது கடினமான வெளிப்புறத்துக்குள்ளே இருப்பது இனிமையான பலாச்சுளைதான் என்ற நிச்சயத்தை கொடுத்த சம்பவம் சற்று நேரத்தில் நிகழ்ந்தது.

இரவு உணவுக்கு சற்றுமுன் சஜினி தாய்க்கு சமைத்தவற்றை எடுத்து வைக்க உதவப்போய்விட அனைவரும் கைகழுவிக்கொண்டு வந்து வரிசையாக இருந்த மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு வட்டவடிவ தட்டத்தில் ஒரேயொரு தண்ணீர் கிளாசை ஏந்தியபடி சிந்தக வெளியே வந்தான்.

கிட்சன் பக்கமாக முதலாவதாக அமர்ந்திருந்த அவளிடம் அவன் அதை நீட்ட ஏன் எனக்குமட்டும் தண்ணீர் தருகிறான்? என்ற குழப்பத்துடன்  கைநீட்டி அவள் அதை எடுக்க முற்பட சட்டென கண்களால் எடுக்காதே என்று கட்டளையிட்டான் சிந்தக. அவள் பயந்து போய் தன் கைகளை எடுத்துக்கொள்ள அருகில் இருந்த பெண்ணிடம் அதே தட்டையும் கிளாசையும் நீட்டினான். அவள் அந்த கிளாசில் கைவைத்து வணங்குவது போல் செய்ய மைத்திக்கு முகம் ரத்தமாய் சிவந்து போனது.

இதை தொட்டு வணங்க வேண்டும் என்று அவளுக்கெப்படி தெரியும்? நல்லவேளை அதை எடுத்து அவள் குடித்திருந்தால் எல்லாரும் அன்று முழுவதும் அதை சொல்லியே சிரித்திருப்பார்கள்.

ஆனால் எதுவுமே நடக்காததை போல மீண்டும் அவளிடம் சிந்தக  தட்டை நீட்ட நடுங்கும் கரங்களால் அந்தப்பெண்ணைப்போலவே தானும் செய்தாள் மைத்தி. சின்ன வேறுபாட்டை கூட முகத்தில் காண்பிக்காமல்  தட்டை அவன் மற்றவர்களிடம் எடுத்துசெல்ல நன்றிப்பெருக்கோடு தலைகுனிந்துகொண்டாள் அவள்.

அவர்களுடைய பாரம்பரியங்களை தெரியாமல் நம்மவர்கள் ஏதாவது செய்து விடுவதும் அதை அவர்கள் அன்று முழுவதும் ஜோக்காக சொல்லி சிரிப்பதும் அவர்கள் அங்கு வந்ததில் இருந்து ஹாஸ்டலில் நடப்பதுதான். அவளை அந்த கிளாசை எடுக்காதே என்று உரக்க அவன் சொல்லியிருந்தாலே மற்றவர்கள் முதலில் சிரித்து தான் இருப்பார்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று அடுத்தவள் மூலமாக சைகையிலேயே புரியவைத்த அவன் செய்கையும் அதில் இருந்த குட்டிக்கரிசனமும்  அவளுக்குள் அன்றைக்கு ஆழமாய் புகுந்து கொண்டு விட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாகத்தானோ என்னவோ ஹாஸ்டல் செல்வதற்காய் அவர்களிடம் விடை பெற்ற போது அனிச்சையாய் அவள் பார்வை சிந்தகவிடம் பாய்ந்தது. அதற்காகவே காத்திருந்தவன் போல போய்வா எனும் பாவனையில் அவன் மெல்ல தலையசைத்தானோ? உடலும் உள்ளமும் விதிர்விதிர்க்க தலையை அவசரமாய் திருப்பிக்கொண்டவள் நண்பர்களோடு ஹாஸ்டல் நோக்கி சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தாள்

 

 

4 thoughts on “வித்லவ், மைதிலி-2

  1. நீ துட்டகைமுனு என்றால் நான் எல்லாளண்டா!!!!ஹாங் …ஹா,,,,ஹா,,ஹா,,,

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: