ஆழி-அர்ஜூனா 11

aliabhatt2

ஒரு மேசையும் அதன் இருபுறமும் நாற்காலிகளும் தவிர அந்த அறை வெறுமையாக இருந்தது. எங்கோ ஓடிவிடப்போவபன் போல சுவரோடு இருந்த நாற்காலியில் ஒட்டிக்கொண்டு வெளுத்த முகத்துடன் இருந்த சுபாங்கனை கண்டதுமே மழுக்கென கண்ணில் நீர் தளும்பிற்று அவளுக்கு!

இவனுக்கு என்ன குறை? படிக்க கஷ்டப்படுவானே தவிர புத்திசாலித்தனத்துக்கு குறைவில்லாதவன். நானே நல்ல வழிகாட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்க இப்படி வந்து சிக்கிக்கொண்டிருக்கிறானே

அவளை அங்கே காண்போம் என்று  கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டான் போலும். அனு மிஸ் என்று கதறியபடி எழுந்து ஓடி வந்தது ஆருவுக்கு நெஞ்சை பிசைந்தது.

அவளின் அருகே ஓடி வந்து தலைகுனிந்து நின்றபடி விக்கி விக்கி அழுதவனை கண்டதும் அவன் பதினான்கு வயது நிறைந்தவன் என்பது மறக்க உதவி தேடும் குழந்தை ஒன்று தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவனை இந்நிலைக்கு ஆளாக்கிய இந்த உலகத்தையே கொன்றொழிக்கவேண்டும் போன்ற கோபமும் இயலாமையும் சேர்ந்தே பொங்கி வர அவன் தலையை தடவிக்கொடுத்தவள் அவனை ஏறக்குறைய இழுத்துச்சென்று அமரவைத்து வலுக்கட்டாயமாய் தண்ணீர் அருந்த வைத்தாள் அவள்

அவள் எப்படி பேச முயற்சித்தாலும் “எனக்கு பயமாருக்கு மிஸ்..என்னை கூட்டிட்டு போய்டுங்க..திரும்பத்திரும்ப அவன் வாயில் இருந்து இந்த வார்த்தைகளே வந்து கொண்டிருந்தன

இனிமேலும் உணர்ச்சிகளுக்கு ஆளாதல் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்தவள் தானும் கொஞ்சம் தண்ணீர் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்

பிறகு அவனின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச்செய்தாள்

சுபா..நான் உனக்கு எது செய்தாலும் நல்லதுக்குத்தானே செய்வேன்?

ஆமாம் என்று அவன் தலை அசைந்தது

அப்போ நான் சொல்றதை கவனமா கேளு

நீ போதை மருந்து கொண்டு வந்து சுதனன் உட்பட மற்றவர்களுக்கு கொடுத்ததாக ஒப்புக்கொண்டாயா?

தலை குனிந்தபடி அவன் “ஆமாம்” என்று முணுமுணுக்க இங்கே அவளது நம்பிக்கைக் கோட்டை தகர்ந்தது.

சுபா.. இது எவ்வளவு சீரியசான குற்றம் தெரியுமா? போதை மருந்தை கடத்துபவர்கள், விநியோகிப்பவர்களை மரணதண்டனை வரை கூட கொண்டு போகலாம். அவ்வளவு பாரதூரமான விஷயம். நீ சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியிலும், ஜெயிலும் மீதி நாட்கள் கழிக்க போகிறாயா?

அவளது அமைதியான குரல் அவனுக்குள் நன்றாக இறங்கியிருக்க பயந்த விழிகள் அவள் மேலேயே நிலைத்திருந்தன. மெல்ல மெல்ல கண்ணீர் வெளிவர ஆரம்பித்தது.

“என்னை கொண்டு போய்டுவாங்களா மிஸ்? இனிமேல் நான் வெளியில் வரவே முடியாதா?” ஏக்கமாய் வந்தது கேள்வி.

“முடியும்டா. அதற்கு நீ உனக்கு தெரிந்ததை எல்லாம் சொன்னால் நான் என்னால் முடிந்த எல்லாம் செய்வேன். நான் மட்டுமில்லை உன் அர்ஜூனா சார் கூட இங்கே தான் இருக்கிறார். நாங்கள் உன்னோடு தான் இருக்கிறோம். நீ தான் உனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லவேண்டும். நீ வாயை மூடிட்டு இருந்தாய் என்றால் மற்றவர்கள் எல்லாத்தவறுகளுக்கும் உன்னை கைகாட்டி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

“எனக்கு இவ்ளோ பெரிய தப்புன்னு தெரியாது மிஸ்..” அவன் விம்மினான்.

எல்லாரும் சொல்லும் வார்த்தைகள்!

“அதை விடு. உனக்கு எங்கிருந்து ட்ரக் கிடைத்தது?”

மென்று விழுங்கிக்கொண்டிருந்தவன் “ஆனா எங்க அப்பாவ போலீஸ் பிடிக்கிறதில்லையே மிஸ்?” என்று கேட்க அதிர்ந்து போனாள் அவள்

“என்னடா சொல்ற?”

“ஆமாம். அப்பா ரகசியமா ஒரு பெட்டி கொண்டு வந்து அடிக்கடி வீட்ல வைப்பாங்க.. அதுக்குள்ளே இதுதான் இருக்குன்னு முதல்ல எனக்கு தெரியாது.”

சரி..”

பிரகாஷண்ணா, சுதா அண்ணா கூட நான் விளையாடப்போனால் அவங்க தான் உங்கப்பா என்னடா பண்றார்னு கேட்டுட்டே இருப்பாங்க.

ஹ்ம்ம்..

அங்கே எனக்கு பிரகாஷண்ணா மொபைல்ல கேம்ஸ் விளையாடத்தருவாங்க. அவங்க மொபைல்ல நெட் கனக்ஷன்லாம் இருக்கும். அந்த கேம் நெட் இல்லன்னா விளையாட முடியாது.

ஏதோ புரிய ஆரம்பிக்க அவளது மூளை பல்வேறு கணித்தல்களை போட ஆரம்பித்தது

நீ அதனால தான் அவங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சியா?

ஹ்ம்ம் என்று தலையசைத்தான் அவன்

ஒகே..அப்புறம் எப்படி ட்ரக் கொண்டு போய் கொடுத்தாய்.

ஒருநாள் நான் மொபைல் கேட்க நெட் காசு சும்மாவா வருதுன்னு என்னை திட்டிட்டாங்க.

அப்போ தான் அவர்களோடு இருக்கும் சிவா இப்படி உங்க அப்பா கொண்டு வர்ற பெட்டில இருந்து ஒரே ஒரு பாக்கட் கொண்டு வா. என் மொபைலை தருகிறேன் என்று சொன்னார். அவருடையது இன்னும் சூப்பராக இருக்கும்!

ஹ்ம்ம்..

எங்கப்பா பெட்டியை திறந்து பார்த்தேன் எல்லாமே ரொம்ப ரொம்ப குட்டி பக்கத்து 10கிராம் கூட இருக்காது மிஸ். இவ்ளோ தானேன்னு அதை எங்கப்பாக்கு தெரியாம எடுத்துட்டு போய் கொடுத்தேன்

அப்புறம் டெய்லி அதுவே பழக்கமாயிடுச்சு அப்படித்தானே.

ஹ்ம்ம்..என்று தலையசைத்தவன் அவள் விடாமல் உற்றுப்பார்த்துக்கொண்டே இருக்க அவளது கோபப்பார்வைக்கு தலை குனிந்தபடி அன்னிக்கு அப்படி என்னண்ணே இந்த பௌடர்ல இருக்குன்னு கேட்டேன். சாப்பிட்டு பார்னு ஒரு துளி கொடுத்தாங்க.

அப்படியே நீங்க பழகிட்டீங்க

சாரி மிஸ்.

என்கிட்டே இப்போ சாரி சொல்லி என்னடா பிரயோஜனம்? என்று கடுகடுத்தவள் எவ்ளோ நாளா எடுத்துக்குற? என்று கோபமாய் கேட்டாள்.

ஒரு மூணு நாள் தான் மிஸ்

பச்…

என்னை உள்ளேயே அடைத்து விடுவார்களா? நான் வெளியில் வர முடியாதா? எங்கப்பா தெரிஞ்சே பண்றாரே? அவரை ஏன் போலீஸ் பிடிக்கல?

உனக்கு உங்கப்பாவ பிடிக்காதா?

வீட்டுக்கு வர்ற நேரமெல்லாம் எங்களையும் அம்மாவையும் அடிச்சா பிடிக்குமா?

சரி சரி அதை விடு.. நான் போய் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். பர்ஸ்ட் பயப்படாதே..யாரும் உன்னை எதுவும் செய்ய மாட்டார்கள். யார் கேட்டாலும் அப்படியே என்னிடம் சொன்னதை சொல். புரிந்ததா

அவன் உறுதி கொடுத்ததும் அவனுடைய தலையை தடவிக்கொடுத்துவிட்டு எழுந்தவள் வெளியே போக திரும்பினாள்

இணையத்தில் கேம் விளையாடும் ஆசை எப்படியான நிலையில் இவனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது!

“மிஸ். நைட்டுக்கு முன்னே என்னை கூட்டிட்டு போய்டுங்க மிஸ். எனக்கு இங்கே இருக்க பயமாயிருக்கு.” அவன் கெஞ்சலாய் அவள் முகம் பார்த்தான்

“பார்க்கிறேன்பா..”

அவள் கலங்கிய கண்களோடு வெளியே வர வாசலில் அர்ஜூனா ஒருபக்கமும் திலீபன் ஒருபக்கமும் நின்று கொண்டிருந்தனர்.

பேசினானா? இருவரிடமும் இருந்து கேள்வி ஒருமிக்க வந்தது.

ஆமாம் சார். என்று சொல்லி அவன் சொன்னதை முழுக்க ஒப்புவித்தாள் அவள்

நாம் நம்பியதுபோலவே பயல் தெரியாமல் தான் போய் சிக்கிக்கொண்டிருக்கிறான்

தொடர்ந்து மூன்று நாள் ட்ரக் பாவனையும் அதில் தான் அடங்குமா? என்று சார்காஸ்டிக்காக குறுக்கிட்ட திலீபன் நீங்கள் இருவரும் வெளியே இருங்கள் நான் இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்ல இருவருமாய் வெளியில் இருந்த பெஞ்சில் மௌனமாய் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கு எப்படி சார் தெரிந்தது? அவள் அர்ஜூனாவிடம் சந்தேகம் கேட்டாள்

நீ போன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணிய மறு நொடியே எனக்கு தகவல் வந்துவிட்டது என்றார் அவர் அவளை ஏற இறங்க பார்த்துக்கொண்டு

அதெப்படி???

தயவு செய்து கொஞ்சநேரம் வாயை மூடிக்கொண்டிரு!

மனிதர் வெளியே தான் இறுக்கமாக மாறுபாடில்லாமல் இருக்கிறாரே தவிர குரலில் கூட பதட்டம் தெரியத்தான் செய்கிறது. அர்ஜூனாவுக்கு கூட மென்மையான பக்கம் ஒன்று இருக்கிறதா என்ன? லேசான புன்னகை அவளில் உதித்தது. ஆனால் அவருக்கு எதிர்மாறாய் அவள் கொஞ்சம் ஆறுதலடைந்திருந்தாள். சுபா பேசியதன் படி பார்த்தால் குறைந்த பட்ச சேதாரங்களுடன் வெளியே வந்து விடலாம் என்று அவளுக்கு நம்பிக்கை வந்திருந்தது

திலீபன் திரும்பி வந்ததும் இருவரையும் அறைக்குள் அழைத்தான்.

எல்லா பசங்களோடும் இவனையும் இன்றிரவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்து விட்டு நாளை கோர்ட்சில் ப்ரடியூஸ் பண்ணபோகிறோம். இன்றிரவு விசாரணையில் ஆர்ணவிக்கு சொன்னது போலவே அவன் சொன்னால் சுபாங்கனுக்கு அவ்வளவு பாதிப்பில்லை என்று பொதுவாக சொன்னான் அவன்

அவ்வளவின் அளவென்ன? வெடுக்கென்று கேட்டார் அர்ஜூனா

“கோர்ட் தான் டிசைட் செய்ய வேண்டும். ஒரு வருடத்துக்கும் குறைவு என்று தான் நான் சொல்வேன். ஆனால் கோர்ட் போகாமல் இன்னொரு வழி இருக்கிறது ஆனால் அதை எங்கள் மேலதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு அதைக்குறித்து நான் பேச முடியாது. நாளை தான் முடிவு செய்யமுடியும்.” திலீபன் நம்பிக்கையாக பதிலளித்தது இருவருக்கும் நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது

அப்படியானால் சுபா இன்றிரவு இங்கே இருந்தாக வேண்டும் இல்லையா சார்? மெல்ல கேட்டுப்பார்த்தாள் அவள்

ஆமாம். அவனை விசாரிக்க வேண்டும். உங்களிடம் பேசிவிட்டதால் எங்களிடமும் இனிமேல் பேசுவான் என்று நினைக்கிறேன்

டாம்மிட், அவனுக்கு பதினான்கு வயது. அவனை எப்படி கஸ்டடியில் இரவு முழுவதும் வைத்துக்கொள்வீர்கள்? அர்ஜூனா கோபமாய் கேட்க நீயே அவருக்கு பதில் சொல் என்பதாய் ஆர்னவியை கைகாட்டினான் திலீபன்

“மைனர் என்றாலும் சட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பிரிவு பொலீசாரினால் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யப்பட முடியும் குற்றம் மிக பெரியதாக இருப்பின்”

உள்ளுக்குள் புகைந்தபடி விளக்கினாள் அவள். அவளையே சட்டத்தில் இடமுண்டு என்று சொல்ல வைத்தபின் எப்படி வெளியே விட சொல்லி கேட்க முடியும்?

சாரி அர்ஜூன், இது ரகசியமானது. அத்தோடு வெளியில் உள்ளவர்களை அரஸ்ட் செய்யும் வரை இவர்களை வெளியில் விடுவது இவர்களுக்குத்தான் ஆபத்து. இருவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அது உண்மையும் கூடத்தானே.. வெளியே வந்து அங்கேயே ஓரமாக இருந்து கொள்வதாக பிடிவாதம் செய்த சுபாவின் அன்னைக்கு கொஞ்சம் சாப்பாடு வாங்கித்தந்து விட்டு இருவருமாய் வீட்டுக்கு வந்தபோது நேரம் பத்து மணி ஆகியிருந்தது.

தன்போக்கில் குட்நைட் சார் என்றுவிட்டு கதவைத்திறக்க பேபி என்று அழைத்தார் அவர்

“ஆர்ணவி!!!” அந்த அயர்விலும் அழுத்தமாய் அவரது பேபிக்கு ஆட்சேபம் தெரிவித்தாள் அவள்.

சரி ஆர்ணவி. குட் ஜாப் கேர்ள்! சுபாவை கண்டவுடன் நீயாக அவனுடன் பேசிக் கண்டுபிடிக்கிறேன் என்று எதிலேயாவது சிக்கிக்கொள்ளாமல்  உன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் கமிஷனரிடம் போனதற்கு!

வாவ்!! அர்ஜூனா பாராட்டுகிறாரா என்ன? தன்யனானேன் நான்!!! மனதுக்குள் பொங்கிச்சிரித்தாலும் வெளியே காண்பிக்கவில்லை.

“என்னை அவ்வளவு முட்டாளாக இருப்பேன் என்றா நினைத்தீர்கள்? கிரிமினல் லாவில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கிறேனாக்கும்!!!

ஹா ஹா

சார். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இவனுக்கு போன் ஆசை காட்டி சுபாவை மிஸ் யூஸ் செய்து இதில் ஈடுபடுத்தியிருப்பதால் சப்ளை என்ற குற்றம் அடிபட்டுப்போகும். மூன்றே நாள் தான் ட்ராக் யூஸ் பண்ணியிருக்கிறான். ஆகவே இவன் அட்டிக்ட் இல்லை என்று ஒருநாள் பூரண பரிசோதனை செய்து உறுதி செய்வதோடு ஜட்ஜ் விட்டு விடுவார் என்று நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

கோர்ட்டுக்கே போகவேண்டாம் என்று தோன்றுகிறது!

எப்படி சார்…

இப்படியே இரவு முழுவதும் கதவை நீயும் திறக்காமல் என்னையும் திறக்க விடாமல் ஹாரிடோரிலேயே நிற்கப்போகிறோமா?

krrrrrrr Goodnight sir!

ஆழி – அர்ஜூனா 10

aliabhatt-1

என்ன செய்வது? என்ன செய்வது? என்று மூளையை குடைந்தபடி தன்னுடைய வீட்டு ஹாலுக்குள் குறுக்கும் மறுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ஆர்ணவி. அன்றைக்கு சனிக்கிழமை. அன்றிலிருந்து அடுத்த திங்கள் வரை நடுவில் திருவிழா ஒன்றினை முன்னிட்டு ஒருவாரம் பள்ளி விடுமுறை. எதை செய்தாலும் அந்த ஒரு வாரத்துக்குள் செய்து முடிக்காவிட்டால் தன் கைகளை கட்டிவிடுவார்கள் என்று மனசுக்குள் ஒரு பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது.

எந்நேரமும் அவளுக்கு வால் பிடிக்காத குறையாக செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்கும் சுபாங்கனை அப்படிப்பார்த்த அதிர்வு வேறு என்ன செய்தும் போகவே மாட்டேன் என்றது. 

சர்வநிச்சயமாக அவன் மீதிப்பெரியவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான் என்றும் இந்தப்பழக்கம் வெகு சமீபமாகத் தொற்றிக்கொண்டதாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் சுபாவின் பெயரை முடிந்தளவு சேர்க்காதிருக்க பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவள் மனதில் முடிவாகியிருந்தது.

மற்ற இருவரும் பதினேழு வயது மாணவர்கள் தாங்கள் செய்யும் காரியத்தின் பாரதூரம் புரிந்தவர்கள் ஆகவே அவர்கள் வெளியுலகுக்கு வெளிப்படுத்தப்படுவதிலும் இந்த நச்சின் வேரைக்கண்டு பிடிக்கவும் பயன்படுத்தப்படுவதில்  எந்தத் தவறும் இல்லையே

ஒருபக்கச்சார்பான தீர்மானம் தான். ஆனாலும் தன் குட்டிகளை பாதுகாக்கும் சிங்கம் போலத்தான் அவள் அப்போது இருந்தாள்

அடுத்ததாக எந்த விதத்திலும் இதில் சஞ்சனாவின் பெயரோ ராகவியின் பெயரோ  இழுக்கப்படுவதையும் அவள் விரும்பவில்லை.

இது நிச்சயம் ஒரு ஒற்றை சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை. மாணவர்களின் கையில் போதைமருந்து புழங்கும் அளவுக்கு வருகிறதென்றால் எங்கிருந்தோ இலகுவாக பெறமுடிகிறது என்று தானே அர்த்தம்? ஏற்கனவே இதை ஒழிக்க  வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களை அவளது முயற்சி கலைத்துவிடவும் கூடாது.

அதே நேரம் அப்பிரதேச போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தன்னை நேரடியாக வெளிப்படுத்துவதும் புத்திசாலித்தனமான விஷயமாக படவில்லை. ஒருவேளை அவர்களுடைய வலையமைப்பில் உள்ளூர் போலீசும் இருந்தால்?

இமைகள் முடிச்சிட சிந்தித்தபடி நடந்து கொண்டிருந்தவள் ஒரு முடிவுடன் தன்னுடைய அறைக்குள் போய் புதையல் பெட்டி போல மரத்தால் செய்யப்பட்டிருந்த வேலைப்பாடு மிக்க குட்டிப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அதற்குள் தான் அவள் தான் சந்திப்பவர்களின் கார்டுகளை சேமித்து வைப்பது வழக்கம்.

அனிச்சையாய் கூடை நாற்காலிக்குள் சுருண்டு கொண்டவள் மடியில் எல்லாவற்றையும் கவிழ்த்துக்கொட்டி விட்டு ஆராய்ந்தாள்.

தேடிய கார்ட் ஒரு வழியாக கையில் கிடைத்தது.

அந்த மாவட்ட கமிஷனர் ரத்னவேல் சின்னதொரு கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் இறுக்கமாய் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.

கார்டை கண்டதும் மகிழ்வாய் ஒரு தடவை காலில் தட்டிக்கொண்டவள் உடனேயே மொபைலை எடுத்து கார்டில் இருந்த தொடர்பிலக்கத்தை அழைத்து விட்டு இணைப்பில் காத்திருந்தாள்.

ஹலோ..

ஹலோ குட்மார்னிங் சார்

சொல்லுங்க..

நான் HSP பூட் அண்ட் பெவரேஜஸ் லீகல் ஆபீசர் ஆர்ணவி ஆரமுதன் பேசுகிறேன். நாங்கள் ஒரு முறை சந்தித்திருக்கிறோம் சார். எங்கள் கம்பனி ஊழியர் ஒருவரின் விவகாரத்தில்…

எஸ் எஸ். ஞாபகம் இருக்கிறது. சொல்லும்மா..என்ன ப்ராப்ளம்?

படபடவென்று நடந்ததை முழுக்க விபரித்தாள் அவள்

கவனமாக கேட்டுக்கொண்டவர் “நீ இவ்வளவு தூரம் சொல்வதால் அந்த சின்னப்பையன் விஷயத்தை வெளியில் விடாமல் பார்த்துக்கொள்ள சொல்கிறேன். ஆனால் பிரச்சனை பெரிதென்றால் என்னாலும் எதுவும் செய்ய முடியாது.” என்று அழுத்தமாக சொன்னார்

பிறகு

“தாங்க்ஸ்மா. அந்த இடத்தில் இரண்டு வருடங்களாக இந்த போதை மருந்து பிரச்சனை பெரும் தலைவலியாக இருக்கிறது. ஒரு பக்கம் கடல் கொண்ட இடமாததால் படகுகளில் இலகுவாக கடத்திக்கொண்டு வந்துவிடுகிறார்கள். பெரிய நெட்வர்க் ஒன்று இதன் பின்னாலிருப்பதாக தெரியவந்தது எங்களுக்கு. இப்போது கூட அந்த பிரதேசத்தில் இதே பணிக்காக எங்களின் சிறப்பு போலீசார் கடமையில் இருக்கிறார்கள். நீ சொன்ன தகவல் அவர்களுக்கு பெரும் உதவியாகக்கூட இருக்கலாம்.”

இன்னொன்று ஆர்ணவி.. இதை பற்றி வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம். அந்த மாணவர்கள் மறைந்து கொள்ள முயலலாம்..

ஒகே சார்..எனக்கும் இன்னொரு சின்ன வேண்டுகோள். தயவு செய்து உடனடியாக சிஷ்யா பள்ளி நிர்வாகத்துக்கு அறிவிக்க வேண்டாமே” மெல்ல தன் அடுத்த வேண்டுகோளை முன்வைத்தாள் அவள்.

எப்போதுமே பள்ளியின் நற்பெயரை மட்டுமே யோசிக்கும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பிரச்சனையை தீர்க்கவே முடியாததாக்கி விடுவார்கள் என்பது தான் அவளுடைய பயம்.

“அதெல்லாம் கேஸ் பைல் செய்து மாணவர்களை கஸ்டடியில் எடுத்த பிறகு தான் சொல்வோம்…நிறைய டைம் இருக்கிறது”

சரி சார்.

“இப்போது இணைப்பை இன்ஸ்பெக்டருக்கு மாற்றுகிறேன். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர் விவரங்களை கொடுங்கள். மீதியை நான் பேசிக்கொள்கிறேன். நன்றிம்மா”

அவர் இணைப்பை துண்டிக்க ஓரு இன்ஸ்பெக்டர் இணைப்பில் வந்தார்.

அவரிடம் சுதனன் பற்றிய தகவல்களை கொடுத்து விட்டு இணைப்பை துண்டித்தாள் அவள்

இனிமேல் விஷயத்தை கமிஷனர் ரத்னவேல் பார்த்துக்கொள்ளட்டும்.

சுபாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவள் நினைப்பது போல அவன் பங்கு பெரிதாக இல்லாவிடின் அந்த பெரியவர்கள் குழுவுடனேயே வழக்கு முடிந்து விடும். .இல்லையெனில் அவளும் உதவிக்கு செல்வதாக இல்லை.

ஆனால் அப்படி நேராது என்று அவள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டாள்

‘சுபாவின் பெயர் வெளிவராமலே இந்த கேஸ் முடிந்தால்  ஒரு வாரம் கழித்து சுபாவின் பெற்றோருடன் ரகசியமாக பேசி விட்டு யாருக்கும் தெரியாமல் போதைமருந்து ரீஹபிலிட்டேஷன் சென்டருக்கு அழைத்து செல்ல வேண்டும்.’

தனக்குள்ளாகவே முடிவுகளை எடுத்தபடி அன்றைய நாளில் தன் கவனத்தை வேறு விஷயங்களில் திருப்ப முயன்றாள் அவள். ஆனால் முடியவில்லை.

மைனர் சிறுவர்கள் போதை மருந்து பாவனையிலீடுபட்டது ஆதாரத்தோடு உறுதி செய்யப்பட்டால் என்ன ஆகும்? என்பது போன்ற அதோடு சம்பந்தப்பட்ட சட்டநுணுக்கங்களை தேடி தேடி படிக்கத்தான் மனம் சொல்லிக்கொண்டிருந்தது,

அன்று முழுக்க அதையே தேடிக்கொண்டும் அவளுடைய நெருங்கிய நண்பனான சுராஜோடு அதைப்பற்றியே போனில் விவாதித்தபடியும் இருந்தவள் மாலை கவியத்தொடங்கியதும் தலை சூடானதை போலிருக்க எழுந்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

முன் வீடு பூட்டி இருந்தது. யாழினி சற்றுத்தள்ளி இருக்கும் பெரியம்மா வீட்டில் இருந்து ஆறுமணியான பின்னே திரும்புவது வழக்கம். அர்ஜூனா உள்ளே தான் இருப்பாரா? அவரிடம் நடந்ததை பகிர்ந்து கொள்ளலாமா? என்று ஒருகணம் தோன்றியதை அவசரமாக அழித்தாள் அவள்.

நான் இதில் தலையிட்ட விடயம் அவருக்கு கூட தெரிய வேண்டாம்!

படிகளில் இறங்கி தெருவுக்கு வந்தாள் அவள்.

காற்றாட நடப்பதை விட தன்னுடைய முறைப்பாட்டின் பின் என்ன நடைபெற்றதோ என்பதையறியும் ஆவலில் அவளுக்கு இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் பொருந்தும்!

பஸ்ஸில் ஏறி வழக்கமான ஸ்கூல் நிறுத்தத்தில் இறங்கியவள் மெல்ல  ராகவி வீட்டுப்பக்கமாக நடந்தாள்.

இந்தப்பக்கம் எங்கேயோ தானே சுபாங்கன் வீடு இருக்கிறது….

யோசித்துக்கொண்டே விழிகளால் துளாவியவள் அனுமிஸ் என்ற குரலில் சட்டென்று திரும்பினாள்

குரல் வந்த திசையில் மீண்டும் “அனு மிஸ்” என்று ஏறக்குறைய அலறியபடி அவளை நோக்கி மூச்சிரைக்க நிரோஜன் ஓடிவந்து கொண்டிருந்தான்

“என்ன ? என்னாச்சுடா?” அவனை விட அவளுக்கு பதற்றம் கூடி விட்டது.

மிஸ் மிஸ்.. சுபாவ…”

அவளுக்கு தன்னுடைய இதயத்துடிப்பை தானே கேட்கமுடிந்தது!

சுபாவுக்கு என்ன?

தெரியல மிஸ்.. போலீஸ் வந்து அவங்க வண்டில கூப்டுட்டு போறாங்க.

பிரச்சனை பெரிதென்றால் எங்களாலும் எதுவும் செய்து விட முடியாது. கமிஷனரின் குரல் மீண்டும் ஞாபகத்தில் வந்தது அவளுக்கு..அப்படியானால் பிரச்சனை பெரிது தானா?

ஏன் என்ன பிரச்சனை என்று தெரியுமா? தன் பதட்டத்தை வெளிப்படுத்தாமல் ஓரளவு அமைதியாகவே கேட்டாள் அவள்

யாருக்கும் எதுவும் தெரியல மிஸ்.. இந்த சிறுவனும் பதட்டமும் படபடப்புமாகவே இருந்தான்.

அவள் யோசிக்க நிரோஜன் மீண்டும் அவளை அழைத்தான்

மிஸ்…

ம்ஹ்ம்..

“சுபா கொஞ்சநாளாவே பெரிய வகுப்பு பசங்களோட தான் சேருறான் மிஸ்.. எங்க யாருக்குமே என்னன்னு தெரியல..அவனை பொலிஸ் ஸ்டேஷன்ல அடிப்பாங்களா மிஸ்? விசாரணை படம் போல!! அவன்  கொஞ்சம் குறும்பு பண்ணுவான் தான்..ஆனா நல்ல பையன்.. “ இவனே அழுதுவிடுவான் போலிருந்தது.

“இருடா…என்னாச்சுன்னு இன்னும் தெரியலையே..சின்ன விஷயமா கூட இருக்கலாம். எந்த ஸ்டேஷன் என்று தெரியுமா? நான் போய் விசாரிக்கிறேன்..” தனக்கும் சேர்த்துத்தான் ஆறுதலாக சொல்லிக்கொண்டாள் ஆர்ணவி.

அவன் ஸ்டேஷன் பெயரை சொன்னதும் அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு பஸ்ஸில் போக பொறுமையின்றி டாக்சி பிடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடியவள் தன்னுடைய ஐடி கார்டை எடுத்துக்கொண்டு அதே டாக்சியில் அந்த ஸ்டேஷனை நோக்கி பயணப்பட்டாள் ஆர்ணவி.

Attorney at law என்று சொல்லி HSP ஐடியை காண்பித்ததுடன் சின்னவனுடைய ஆசிரியை என்று சொன்னதுமே அவளை அவர்கள் பொறுப்பான அதிகாரியிடம் பேச அனுமதித்தார்கள். உள்ளே மாணவர்கள் யாருமே கண்ணில் படவில்லை.

வாசலில் இருந்து அவளைக்கண்டதும் அடையாளம் கண்டுகொண்டு அழ ஆரம்பித்த சுபாங்கனின் அம்மாவுக்கு ஒரு வழியாய் சமாதானம் சொல்லிவிட்டு உள்ளே நுழைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

அதிகாரி அவளை அழைத்ததுமே வேகமாக உள்ளே நுழைந்தாள் அவள்.

உள்ளே பின்னிருபதுகளில் மதிக்கத்தக்க செம ஹாண்ட்சம் இளைஞர் ஒருவர் தன்னை திலீபன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். போதை மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரியாம்.

தன் பெயரைச் சொன்னதும் கொஞ்சம் வேகமாகவே “சார், சுபாவினுடைய டீச்சர் நான். எதற்காக அவனை கஸ்டடியில் எடுத்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம். இன்று நாங்கள் அரஸ்ட் செய்த குழுவுக்கு இவன் தான் போதை மருந்து சப்ளை செய்திருக்கிறான்.” அவன் இவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டு பதில் சொன்னான்

“என்னது????” அவள் எழுந்தே விட்டாள்

“சாரி மிஸ் ஆர்ணவி. அந்த பையனே அதை ஒத்துக்கொண்டிருக்கிறான்.”

“இல்லை இல்லை.. மற்றவர்கள் சின்னவன் என்று அவனை மாட்டி வைத்திருக்கிறார்கள்” அவள் வேக வேகமாய் மறுத்தாள். சுபா அப்படிப்பட்டவனில்லையே!!!

“சாரி டு சே திஸ்.. உறுதியான ஆதாரங்கள் கையில் சிக்கியிருக்கிறது. இவன் புரியாமல் செய்திருக்கிறான் என்று நிரூபித்தால் தவிர தப்பிப்பது கடினம். இந்த சின்னப்பையன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவர் இரத்தப்பரிசோதனைகளும் இவர்கள் பாவனையாளர்களும் கூட என்று உறுதி செய்திருக்கின்றன.” அவர் சொல்லவும்

நோ நோ நோ.. என்றபடி தலையை கையில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் அவள்

திலீபன் கிளாஸ் நிறைய தண்ணீரை அவள் பக்கம் நகர்த்தி வைத்து விட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த தண்ணீரை அவசரமாய் குடித்து தீர்க்க “நீங்கள் தானே என்னுடன் போனில் பேசியவர்?” என்று அவளை விக்க வைத்தான் அவன்

மெல்ல தலையசைத்தாள் அவள்.

ஹ்ம்ம்.. என்றதற்கு மேல் அதைப்பற்றிப்பேசாமல் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது என்று இழுத்தான் அவன்

என்ன என்பது போல் அவள் பார்க்க..

“இந்தப்பையன் ஸ்டேஷனுக்கு வந்ததுல இருந்து ரொம்ப பயந்துட்டான். ட்ரக்கை இந்த பசங்களுக்கு நான் தான் கொடுத்தேன்னு ஒத்துக்கறான். ஆனா வேற எதையுமே வாய் திறக்காம அழுதுட்டே இருக்கான். ஒருவேளை அவன் பக்கம் வாதாட விஷயம் இருந்தா ரீஹபிலிட்டேஷன் செண்டரோடு விஷயம் முடிந்துவிடும். இல்லன்னா ட்ரக் சப்ளை பண்ணதும் சேர்ந்து அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் வருடக்கணக்கில் இருக்க வேண்டி நேரிடலாம்.”

விஷயம் உறைக்க கலங்கிய விழிகளோடு நிமிர்ந்தாள் ஆர்ணவி.

இந்த திலீபன் சொல்வது சரிதான். போதை மருந்து கடத்தலோ விநியோகமோ மரண தண்டனை கூட வழங்கப்படக்கூடிய பெருங்குற்றமாயிற்றே..நிரூபணமானால் இவன் மைனர் என்பதால் பத்தாண்டுகள்  வரை கூட இவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படலாம்!

இந்த வெகுளிச்சிறுவர்களில் நான் ஏன் இவ்வளவு பாசம் வைத்தேன் என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்!!!! எது சரி எது தவறென்று புரிந்து  கொள்ள தெரியாமல் இவர்கள்..ச்சே…

“சார்.. நீங்க மட்டும் என்னை சுபாங்கனை பார்க்க அனுமதிச்சீங்கன்னா” மெல்ல திலீபனை கேட்டாள்

நோ நோ அது முடியாது..

ப்ளீஸ் சார். என்னிடம் அவன் பேசுவான் என்று நினைக்கிறேன். ஒரே ஒரு தடவை மட்டும் அலோவ் பண்ணுங்க சார்..ஏறக்குறைய கெஞ்சினாள் அவள்

அர்ஜூன் கூட ட்ரை பண்ணினார். ஆனால் அவன் பேசவில்லை ஆர்ணவி

அர்ஜூனா சாரா?

ஆமாம். இதிலென்ன உனக்கு ஆச்சர்யம் என்பது போன்ற தொனியில் அவன் பேசியதாகப்பட்டது அவளுக்கு ஆனால் அதற்கு மேல் அதை ஆராய நேரம் இருக்கவில்லை

.ஒரே ஒரு தடவை என்னையும் அலோ பண்ணுங்க சார். என்று மட்டும் கேட்டாள் அவள்.

சரி ஒரு பதினைஞ்சு நிமிஷம் கொடுக்கிறேன் சீக்கிரம் பேசிட்டு வாங்க..

அவளுக்கு சைகை செய்துவிட்டு அறையை விட்டு அவன் எழுந்து வெளியேற மௌனமாய் அவனை பின் தொடர்ந்தாள் அவள்

மீண்டும் விசிட்டர்ஸ் ஹாலை தாண்டி இடப்பக்கம் போக வேண்டும் போலும். அவன் முன்னே வேகமாய் எட்டு வைத்து நடந்து செல்ல இவள் அவனை தொடர்ந்து நடந்தாள்.

“கொஞ்சநாள் தான் டீச்சரா இருக்கேன்னு சொல்றீங்க..ஆனா இவ்ளோ அட்டாச்ட்டா இருக்கீங்களே..எப்படி?” அவன் குரலில் மென்மையான நட்புத்தொனி இருந்தது.

“நான் தான் இவனுக்கு கிளாஸ் டீச்சர்.. ரெண்டு சப்ஜெக்ட் சொல்லித்தருகிறேன். ஆகவே ஒருநாளில் என் பாதி நேரம் இவர்களோடு தான் கழியும். அதுதான் இப்படி!!! நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை சார்.” அவள் தனக்குத்தானே பேசினாள்

“சரி..உண்மையிலேயே அவன் குற்றவாளி என்றால்….”

“அதன் பிறகு எனக்கு வேலை இல்லை சார். குற்றம் செய்தால் தண்டனை கிடைக்க வேண்டியது தானே.. எனக்கு தெரிந்தவரை அவன் குறும்பு பையன் ஆனால் கெட்டவன் அல்ல..சப்ளை செய்யும் அளவுக்கு விபரமானவனும் இல்லை. இன்னொரு கோணம் இருக்கும் என்று நான் நம்புகிறேன் அவ்வளவு தான்..”

“பார்க்கலாம்..உங்களுக்கு எப்படி வெற்றி கிடைக்கிறதென்று! இங்கேயே இருங்கள் வந்து விடுகிறேன்” என்று விட்டு அவன் விட்டு செல்ல நகம் கடித்தபடி காத்திருந்த அவள் அங்கே ஹாலில் காத்திருந்த அர்ஜூனாவை கண்டாள்

இவளை கண்டதும் அதிசயமாக எழுந்து வந்தார் அவர்!

கைகளால் இயலாமை போல செய்து காண்பித்து விட்டு “எப்படியாவது அவனை பேச வை. அவன் ரொம்பவே பயந்து போயிருக்கிறான். உன்னிடம் பேசுவான் என்று நினைக்கிறேன் “ என்று சொல்லி விட்டு மீண்டும் திரும்பிப்போய் காத்திருப்போர் இடத்தில் அமர்ந்து கொண்டார். முகத்தில்  சுத்தமாக உணர்வுகள் துடைத்து விடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கூட இந்த மனிதரால் எப்படி  உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடிகிறது?  என்று அவள் எரிச்சல் பட்ட நொடியில்  திலீபன் புன்னகையோடு திரும்பி வந்துகொண்டிருந்தான்.

ஆழி- அர்ஜூனா 9

57665428

அன்றைக்கு ஞாயிற்றுகிழமை

“ஹலோ I am Aaramudhan, Arnavi’s father.”  என்றபடி மலர்ந்த புன்னகையோடு பிளாட்டை லாக் செய்து விட்டு திரும்பிய அர்ஜூனாவின் முன்னே கை நீட்டினார் ஆரமுதன். வைஷ்ணவி அப்போது தான் படிகளில் ஏறி அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தார்.

உணர்ச்சிகளை காட்டாத முக பாவத்துடன் கை கொடுத்த மற்றவர் “அர்ஜூனா” என்று மட்டும் சொல்லி கீற்றாய் புன்னகைத்தார்.

உங்களை பத்தி என் டாட்டர் நிறைய சொல்லிருக்கா மிஸ்டர் அர்ஜூனா. நீங்க ரைட்டராமே..  என்ன மாதிரி நாவல்கள் எழுதுவீங்க?

“சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை சார்” என்று பட்டுக்கத்தரித்தார் அவர். ஆனால் நட்பே உருவான வெள்ளைமனிதரான ஆரமுதனுக்கு அது புரிந்தால் தானே.. கொஞ்சம் இன்டலெக்ஷுவல் ஆக தென்பட்ட எதிராளியிடம் மகளைப்பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.

“ஆரு கூட திடீரென HSM வேலையை விடுகிறேன் என்ற போது எனக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது. ஆனால் அவள் டீச்சிங்கை தேடி வந்தது அதை விட அதிர்ச்சி எனக்கு! அவளுக்கும் டீச்சிங்கும் என்ன சம்பந்தம்? திடீர் திடீர் என்று ட்விஸ்ட் வைக்க இது என்ன கதையா? வாழ்க்கை இல்லையா? நீங்கள் கூட சயன்டிஸ்டாமே..”

“அப்பாபாபாபாபாபாபா!!!!!”

பிளாட்டுக்கு வந்துவிட்டோம் என்று மெசேஜ் செய்தவர்களை இன்னும்  காணோமே என்று எண்ணியபடியே வெளியே வந்த ஆர்ணவி இந்தப்புள்ளியில் தான் அதிர்ச்சியுடன் இடையிட்டாள்!

அவளைக்கண்டதும் அவளிடம் ஒரு நக்கல் பார்வையுடன் அர்ஜூனா விலகி நடக்க முகம் சிவந்து போனவள் “சரியான ப்ரௌட்டா இருப்பார் போலிருக்கே..” என்று  அவர் போன திசையை பார்த்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்த தந்தையின் கையை பற்றி இழுத்துக்கொண்டு ஹாலுக்குள் வந்தாள்

உங்களுக்கு பேச வேற ஆளே கிடைக்கலையாப்பா?

நல்ல மனுஷனா தெரிஞ்சார் கண்ணம்மா

கிழிச்சார்!!! சரியான மண்டைக்கனம் பிடிச்ச ஆளுப்பா அவரு. நீங்க இனிமே அவர்கூட நின்று பேசிக்கொண்டிருக்க வேண்டாம்!!!

அதற்குள் வைஷணவி கழுகுக்கண்களுடன் வீட்டை சுற்றி பார்வையிட ஆரம்பித்து விட்டிருக்க அன்னையின் பின்னே ஓடினாள் ஆர்ணவி.

“என்னங்க!!! இவள் தனியா வந்ததும் ஒரு விதத்தில் நல்லதுக்குத்தான்!!! என்ன அழகா வீட்டை வச்சிருக்கா பாருங்க! என்னால நம்பவே முடியல..” அன்றைக்கு முழுக்க வைஷ்ணவி அதையே சொல்லிக்கொண்டிருந்ததை மீண்டும் ஒருமுறை சொன்னார் வைஷ்ணவி

போதும்மா..எப்போவுமே குழந்தையாவே இருக்க முடியுமா என்ன? ஆரா அன்னையை தடுக்க முயல

இதை கன்பார்ம் பண்ணிக்க நாம ஒருமுறை சொல்லாமல் சர்ப்ரைசாக வரணும் வைஷு! என்று ஆரமுதன் சிரித்தார்.

அப்பா!!!!

ஜஸ்ட் கிட்டிங் கண்ணம்மா!

அன்றைய நாள் மாலை வரை மதியம் சமைத்து சாப்பிட்டு பீச்சுக்கு போய் என்று அவளுடைய நாள் பெற்றோருடனே கழிந்தது. பாட்டரி டவுன் ஆன மொபைல் போல தானும் சார்ஜ் ஏறியதாய் உணர்ந்தாள் ஆர்ணவி.

அன்றைக்கு மாலை பீட்சா பேக் செய்திருந்த வைஷ்ணவிடம் யாழினி சாப்பிடும் அளவை மட்டும் கேட்டு வாங்கி பாக் செய்தாள் ஆரா.

“இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஒருவருக்கு மட்டும் கொடுப்பதா? நன்றாக இருக்காது. நமக்குத்தானே போதுமான அளவு இருக்கிறது. இன்னும் இரண்டு வைத்துக்கொண்டு போ” என்று வைஷ்ணவி கத்தியதை அவள் காதில் வாங்கினால் தானே..

ஓடிப்போய் காலிங் பெல்லை அடித்தபோது அர்ஜூனா தான் கதவைத்திறந்தார். அவரை சைகையில் விலகச்சொல்லிவிட்டு நேரே யாழினி அமர்ந்திருந்த இடத்துக்கு போய் அவளின் கையில் கொடுத்து விட்டு வந்தாள் அவள்

சின்ன பிள்ளைத்தனம் தான். ஆனால் அவர் மட்டும் என் அப்பாவிடம் மரியாதைக்காவது போகிறேன் என்று சொல்லிக்கொண்டு போயிருக்கலாம் தானே?

ஆனால் அவள் திரும்பி வந்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் வீட்டு டோர் பெல் அடித்தது

அம்மா கதவைத்திறம்மா. நான் பேஸ் வாஷ் பண்றேன் என்று பாத்ரூமில் இருந்து குரல் கொடுத்தாள் அவள்.

அடுத்த சில நிமிடங்கின் பின்  யாழினியின் குரல் கேட்பது போலிருக்க வெளியே வந்தவள் காண்பது கனவா நனவா என்று தன்னையே கிள்ளிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள்

அவளது குட்டி ஹாலில் அர்ஜூனா அவளது தந்தையின் அருகில் அமர்ந்திருக்க யாழினி வைஷ்ணவியிடம் இன்னும் ஒரு பீஸ் வாங்கி மென்று கொண்டிருந்தாள்

“ஒரு பிரன்ட் கீழே வெயிட் பண்ணிட்டு இருந்ததால அவசரமா போக வேண்டியதாயிடுச்சு. புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்று அர்ஜூனா சொல்லிக்கொண்டிருந்தார்

“பொய் பச்சை பொய்!! இந்தாள் முகத்திலேயே தெரியுதே.. வேணும்னே போயிட்டு இப்போ வந்து சாக்கு சொல்றியா?” அவள் மனதுக்குள் அர்ச்சனை செய்த வண்ணம் வெறுமனே வேடிக்கை பார்த்தாள்

செம டேஸ்ட் ஆன்ட்டி உங்க பீட்சா! இது யாழினி

“ஆமாம் சாப்பிட்டு பார்த்ததுமே உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று என்னையும் இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள் என்று சொல்லியபடியே  அர்ஜூனா யாழினியை பார்த்து  புன்னகைத்தார்

அதுதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவள் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்க வைஷ்ணவியோ பாவம் சங்கடப்பட ஆரம்பித்துவிட்டார்

இல்ல தம்பி. இவ தான் பாப்பா மட்டும் தான் உங்க வீட்ல பீட்சா சாப்பிடுவான்னு அவசரமா எடுத்துட்டு வந்துட்டா. நிறையவே இருக்கு. நீங்களும் சாப்பிடலாமே..

இல்ல இல்ல பரவால்லங்க. நான் சீஸ் எல்லாம் விட்டு ரொம்ப காலம் ஆகிறது என்று புன்னகைத்தபடி எழுந்தவர் யாழினி போலாமா என்றபடி அவளை அழைத்துக்கொண்டு வெளியேற மரியாதைக்காய் கதவை சாத்திவிட்டு வந்தார் ஆரமுதன்

பிறகு

இப்போ பார்க்க டீசன்டான ஆளாத்தான் இருக்கார்மா என்று தந்தையும்

உனக்கு பக்கத்துல உதவிக்கு  இருக்கற ஒரே ஒரு  மனுஷன் அவர் தான். ஆளைப் பார்த்தாலும் ஒரு வம்புக்கும் போகாதவராகத் தான் தெரிகிறார். தனியா இருக்கற பொண்ணு நீ! தேவையில்லாமல் பிரச்சனை வளர்க்காமல் கொஞ்சம் மாச்சூர்ட்டா நடந்துக்கோ என்று இலவச அறிவுரையுடன் அம்மாவும் ஒரு முடிவுக்கு வந்தனர்

 உதவிக்கு இருக்கும் மனுஷனா? அவரா? என்று விழிகளை உருட்டினாலும்  அவர்களுக்கு எதிர்ப்பேச்சு பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆர்ணவி.

இரவு எட்டரை மணி போல அவர்களை அனுப்பி வைப்பதற்காக அப்பாவின் கார்வரை அவள் கூடப்போன போது

வைஷ்ணவி காருக்குள் ஏறும் வரை காத்திருந்த ஆரமுதன் மகளின் தோளை தட்டினார்

காலம் போய்க்கொண்டே இருக்கிறது கண்ணம்மா. இப்போதைக்கு நீ கல்யாணம் செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வாழ்க்கையில் மிக முக்கியமான காலம் இது. வீண் குழப்பங்களில் நாட்களை வீணாக்காமல் திரும்பி வருவதை பற்றி யோசி” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தார்.

யோசனையோடு தலையசைத்தாள் அவளும்.

அதைத்தானே அவளது நண்பர்களும் போன் போட்டு புலம்புகிறார்கள்!

“எங்களுக்கும் இப்படி டிப்ரஷன் வருவது தான் ஆரு! கார்ப்பரேட் உலகில் இதெல்லாம் சகஜம் தானே..அதற்காக வேலையை விட்டு போய்விடுவாயா? கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் விடுமுறை எடுத்து சார்ஜ் ஏற்றியதாய் நினைத்துக்கொண்டு வேலைக்கு திரும்பி வா” நேற்றுக்கூட  அவளது நண்பன் கிட்டத்தட்ட மிரட்டியிருந்தான்.

ஆனால் அவளுக்கு வெறும் டிப்ரஷனா வந்தது? முதலில் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தாள். ஆனால் போகப்போக அவளுக்குள் உணர்வுகளே மரித்துப் போவது போலவும் அப்பா அல்லது அம்மா கனிவாய் பேசினால் கூட எரிந்து விழச்சொல்லும் அளவுக்கு மனது மாறி வருவதை உணர்ந்த போது தானே எங்கேயோ தப்பு நடக்கிறது என்று எண்ணினாள்

ஒரு வேளை அதையே சகித்து மனதை அடக்கியிருக்க வேண்டுமோ?

யோசனையோடேயே  தூங்கிப்போனவள் காலை அவசர அவசரமாக எழுந்து அம்மா செய்து வைத்துவிட்டு போயிருந்த உணவுகளை சூடாக்கி சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்கு விரைந்தாள். அங்கே படபடப்புடன் இவளுக்காக காத்திருந்தாள் ராகவி.

முதலில் அவள் அதை கவனிக்கவில்லை.இன்னும் முதல் பாடம் ஆரம்பிக்காததால் அநேகமான ஆசிரியர்கள் ஸ்டாப் ரூமில் இருந்தனர். ராகவிக்கு கையசைத்து விட்டு தன்னுடைய கப்போர்ட்டை திறந்து லஞ்ச் பாக்சை வைத்துவிட்டு முதல் பாடத்துக்கு தேவையாவனவற்றை எடுத்துக்கொண்டு இருந்த போது ராகவி அவள் பின்னோடேயே வந்து விட்டாள்

ஏய் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்டி.” ராகவி சொல்லியபோது தான் அவள் பதட்டமாக இருந்ததை கவனித்தாள் ஆர்ணவி

என்னாச்சு? சஞ்சுக்கு ஏதாவது ப்ராப்ளமா? அவளும் டென்ஷன் ஆகிவிட்டாள்

எங்களுக்கு ஒண்ணுமில்லடி.

அப்போ

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஒரு முக்கியாமான ஒரு விஷயம் பார்த்தோம்டி. நடுங்கி போயிட்டேன்.

என்ன சொல்ற ராக்ஸ்? விளக்கமா சொன்னாத்தானே புரியும்?

எங்களோட வீட்டுக்கு பின்னால் ஒரு பாலம் இருக்கிறது தானே

ஆமாம். அன்றைக்கு கூட போய் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தோமே..

ஆமாம்டி. சனி இரவு தூக்கம் வராததால் கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு நானும் சஞ்சுவும் சும்மா கொஞ்சம் தூரம் நடந்தோம்.

ஓகே…

பாலத்துக்கு கீழே கொஞ்சம் ரகசிய சத்தங்கள் கேட்க தொடங்கின.

நாங்கள் யாரோ லவர்ஸ் என்று தான் முதலில் நினைத்தோம். இந்த சஞ்சு எட்டிப்பார்த்தபோது தான் விஷயமே புரிந்தது. கொஞ்சம் இளைஞர்கள். ஒரு பத்துப்பேர் இருப்பார்கள். அதுல இரண்டு பேர் நம்ம ஸ்கூல்ல ட்வெல்த் படிக்கிறவங்க. நான் அடிச்சு சொல்வேன்.

அவங்க என்ன பண்ணாங்க?

ட்ரக் எடுத்துட்டிருந்தாங்க

என்னடி சொல்ற?

கத்தாதேடி. நாங்கள் பார்த்தோம். தொடர்ந்து ரெண்டு நாளும் அதுவே தொடர்ந்து நடந்தது. அதே செட் பசங்க தான் இருந்தாங்க.

ட்ரக்னு உனக்கு நிச்சயமாக தெரியுமா?

நாங்கள் குழந்தைகள் இல்லைடி. சர்வ நிச்சயமாக தெரியும்.

சரி. அந்த ட்வெல்த் பசங்களை உனக்கு அடையாளம் காட்ட முடியுமா?

இல்லட. அவங்க என்கிட்டே டான்ஸ் படிச்சிருந்தா உடனே பிடிச்சிருப்பேன். இவுங்களை பார்த்திருக்கேன்னு மட்டும்   ஷூரா சொல்வேன். நீ ட்வல்த்துக்கு கிளாஸ் எடுக்கிறியா?

எடுத்தேன். இப்போ இல்லடி. 9D கு மாத்ஸ் எடுக்கணும்னு அவங்களை கட் பண்ணிட்டேன். இதை எப்படி ஹாண்டில் பண்றது?அவள் உரக்கவே யோசித்தாள்

ப்ரின்சி கிட்ட சொல்வோமா? ராகவி கேட்டாள்

நாட் அ குட் ஐடியா.. யார்னு அடையாளம் காண்பிக்க சொல்லிவிட்டு அவர்களுக்கு டீசி கொடுத்து விடுவார்கள். அதற்கு மேல் ஒரு hair உம் எங்களை பிடுங்கவும் விட மாட்டார்கள்.

“shhhh  filthy mouth! கொஞ்சம் தள்ளி நின்றுபேசலாமே ..” அர்ஜூனாவின் குரல் காதருகே கேட்க சட்டென்று துள்ளி விலகினாள் ஆர்ணவி.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு “ரகசியம் கொஞ்சம் பலம் தான் போலிருக்கிறது” என்றார் அவர் நமுட்டு சிரிப்புடன்.

“சார். உண்மைல ஒரு பிரச்சனை சார். உங்க கிட்ட பேசலாமா?” என்றாள் ராகவி அவளை முந்திக்கொண்டு!

மென்டலா இவள்? யாரிடம் எதை சொல்வது என்று தெரியாமல்? என்று கொதித்தபடி ராகவிக்கு பேச்சை நிறுத்தும்படி ஆர்ணவி சிக்னல் கொடுக்க முனைந்தாள் அவளோ அர்ஜூனா மேலேயே கவனமாக இருந்தாள்

“இங்கே வேண்டாம். வெளியே இருங்கள். நடந்த படியே பேசலாம்” என்று விட்டு தன்னுடைய கப் போர்ட் பக்கம் அவர் திரும்பி விட

ராகவியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தவள் “அறிவிருக்காடி உனக்கு. அவர்கிட்ட ஏன் சொன்ன?” என்று கடிந்து கொண்டாள்.

“அவர் ட்வெல்த்துக்கு கிளாஸ் எடுக்கிறவர்டி. மத்த டீச்சர்ஸ் கொஞ்சம் பயப்படுவாங்க. இவர் தான் பயப்படாமல் ஏதாவது செய்வார். நீ சும்மா இரு!”

அதற்குள் அவரும் வந்துவிட நடந்தபடியே அவருக்கு நடந்ததை எடுத்துச்சொன்னாள் ராகவி.

கேள்விகள் கேட்ட படியே விஷயத்தை முழுதாக தெரிந்து கொண்டவர் அவர்களிடம் திரும்பினார்

“விஷயம் கொஞ்சம் சென்சிட்டிவ் ஆனது. நீங்கள் உளவு பார்க்கிறேன் என்று கிளம்பி உங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டாம்.”  என்று சீரியசான குரலில் சொல்லிவிட்டு அவர் விலகி நடக்கத்தொடங்க ராகவிக்குத்தான் ஏமாற்றமாகிப்போனது.

“என்னடி பட்டுன்னு போய்ட்டார். நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி ஏதாவது செய்வார்னு நினைச்சேன்” ராகவி வெளிப்படையாக வருந்தினாள்

“நான் தான் அப்போவே சொன்னேன்ல நீ கேட்டியா? இவரெல்லாம் அந்த பேரன்ட்ஸ் மீட்டிங் போல செத்த பாம்பை அடிக்கத்தான் சரி”

சொல்லப்போனால் உண்மையில் அவளுக்கும் பெருத்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. அப்படி சொல்லிவிட்டுப்போனாரே தவிர அவர் ஏதும் செய்வார் என்று அந்த வாரம் முழுக்க உள்ளூர அவள் எதிர்பார்க்கத்தான் செய்தாள்.

அவர் எதுவும் செய்யவில்லை. நிகழ்வு தொடர்ந்து நடக்கிறது என்று தோழிகள் மூலம் தெரிந்து கொண்டதும் இனிமேல் நாங்களே தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்த வாரம் ஸ்கூல் ஒரு வார விடுமுறைக்காக மூடப்படுமல்லவா? அதற்காக அந்த வெள்ளிக்கிழமையே சஞ்சனா ராகவியோடு சேர்ந்து தங்கினாள் அவள்.

வெள்ளியிரவு ஊர் அடங்கியதும் மூவருமாக அந்த பாலத்தடிக்கு சத்தமே இல்லாமல் சென்று பக்கத்துக்கு மரங்களுக்குள் பதுங்கியிருந்தனர்.

கிட்டத்தட்ட பத்துப்பேர் அவர்களுக்கு இருபத்தைந்து தான் ஆகக்கூடிய வயதாக இருக்கும். பாலத்துக்கடியில் இருந்ததால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஒவ்வொருவராக பார்வையை செலுத்தியவளுக்கு அந்த இரண்டு மாணவர்களையும் நன்றாகவே அடையாளம் தெரிந்தது.

12 B வகுப்பை சேர்ந்தவர்கள்!

எனக்கு ரெண்டு பேரையும் தெரியும்டி. வெள்ளையா இருக்கறவன் பேர் சுதனன். மத்தவன் பேர் மறந்து போச்சு. ரகசியமாய் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டாள் அவள்  

இப்போ சுதனன்னு சத்தம் போட்டு கூப்பிட்டா என்ன பண்ணுவான்? சஞ்சு சொல்ல வாயை மூடு என்று அவளை தள்ளி விட்டாள் ராகவி

சஞ்சனா தடுமாற அவளது காலடியில் இருந்த பெரிய பாறையொன்று பெயர்ந்து ஆற்றுக்குள் விழுந்தது,

யாரோ வர்றாங்கடா என்று ஒருவன் குரல்கொடுத்தபடி எழுந்து ஓட அனைவரும் எழுந்து வேகமாய் அவனைத்தொடர்ந்தனர்.

இறுதியாக பாலத்துக்கடியில் இருந்து வெளிவந்தவனை கண்டதும் கண்கள் இருட்டியது ஆர்ணவிக்கு. அவன் அவளுடைய 9D சுபாங்கன்!

 “சுபா” என்று அதிர்ச்சியும் வருத்தமுமாய் ஒரு முறை உச்சரித்து அடங்கின அவளது உதடுகள்

ஆழி- அர்ஜூனா 8

6Rzla13q

மெனக்கெட்டு ஒரு மனுஷி சுண்டல் எடுத்துட்டு வந்துருக்கேன். தலையே நிமிர்ந்து பார்க்காமல் அப்படி என்ன எழுத வேண்டியிருக்கிறது இவருக்கு? அர்ஜூனாவின் அருகே நெருங்கியும் தன்னை நிமிர்ந்து பார்க்காத கடுப்பு ஆர்ணவிக்கு!

கோபத்தில் காலால் மணலை ஒரு எத்து எத்தினாள் அவள்.

கவனம் கடல் மூடிக்கொள்ளப்போகிறது!!!! தலையே நிமிராமல் அர்ஜூனாவிடம் இருந்து குரல் மட்டும் வர இன்னும் கடுகடுவென்றானாள் அவள்.

அப்போ நான் வருவதை பார்த்திருக்கிறார் தானே!

“சார், உங்க ரங்கம்மா என்னிடம் உங்களுக்கு கொடுத்துவிட சொல்லி சுண்டல் கொடுத்து விட்டிருக்கிறார். உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா?”

“பார்த்தேன் பார்த்தேன்!!! அதை இப்படி வை”

‘கர்ர்ர்ரர்ர் நான் அதில் ஒன்றிரண்டை வாயில் போட்டுக்கொண்டதையும் பார்த்திருப்பாரா? ச்சே ச்சே இருக்காது!!!’

பேசாமல் அந்த சுண்டல் பொட்டலத்தை அவரின் அருகில் பட்டென வைத்தவள் “சார், ஒரு மனுஷர் உதவி செய்தால் அதற்கு நன்றி சொல்வது நாகரீகம்!” என்று நக்கலாக சொன்னாள்

நன்றி நன்றி!!!!

“நீங்கள் என்ன எழுதறீங்கன்னு கொஞ்சம் எங்ககூடவும் ஷேர் பண்ணுவீங்களா?” குரலில் தன்மையை வரவழைத்துக்கொண்டு முதன் முதலாக வெள்ளைக்கொடியை அசைத்தாள் அவள்.

பட்டென்று எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்தவர் “இப்போ உன் பிரச்சனை என்ன?” என்று இமைகளை ஏற்றி இறக்கினார்

“போங்க சார், உங்க கூட ஒருத்தர் பேச வந்தா இப்படித்தான் அவமானப்படுத்துவீங்களா? நான் கிளம்பறேன்.” அவள் உண்மையிலேயே திரும்பி விட்டாள்

ஹா ஹா..நான் பேசினாலே உங்களுக்கெல்லாம் பிரச்சனையாயிற்றே பெண்ணே! அவர் நாடகப்பாணியில் இழுத்தார்

“நீங்கள் பிரச்சனையாக பேசுவதில் எங்களுக்கும் பிரச்சனை வந்து விடுகிறது சாரே”  அவளும் அதே தொனியில் இழுக்க அவர் முகத்தில் சிரிப்பு வந்து குடியேறியது.

சாத்தானிச சிரிப்பு இல்லாமல் சாதாரணமாக அவர் புன்னகைத்தது காமடியாக இருப்பதாக அவள் சொல்ல நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை.

“ஹ்ம்ம்… என்ன இன்றைக்கு கடல் பக்கம் வந்திருக்கிறாய்?”

“நான் இங்கே வந்ததுக்கு இந்தப்பக்கமே வரவில்லையே என்று நினைத்துக்கொண்டே இருந்ததில் இன்றைக்கு ஒருவழியாக வந்து விட்டேன். ரொம்ப நல்லாருக்கு சார்.” அவள் தான் திரும்பி போகப்போனாள் என்பதை மறந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு கடலைப்பர்த்தபடி அமர்ந்து விட்டிருந்தாள் ஆர்ணவி.

“என்ன நல்லாயிருக்கு?” அவரும் வாகாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பிளாஸ்டிக் ஸ்பூனால் சுண்டலை அள்ளி வாயில் போட்டபடி கதை கேட்க ஆரம்பித்தார்

“இந்த கடலைத்தான் சொல்றேன். இவ்ளோ நாளும் நான் அவ்வளவா கவனிச்சது இல்லை. எவ்வளவு அழகா மர்மமா இருக்கு.. அலை வந்து வந்து போறது.. மணல்ல சைன் கர்வ் வரைந்ததை போல… செம சார். அவ்வளவா ஆட்களும் இல்லையாதலால் தனித்துவமாக தெரிகிறது! இது வரை நாங்கள் போனதெல்லாம் ஆட்களால் நிரம்பிய கடற்கரைகள் தான். சுத்தமாக ரசித்ததே இல்லை. உங்களுக்கும் கடல் பிடிக்குமா சார்? ஒவ்வொரு நாளும் வருவீங்களாமே..”

“ம்ஹ்ம்.. நான் ஒவ்வொரு நாளும் வருவது சத்தமில்லாத அமைதியான திறந்த இடம்.. நான் எழுத எனக்கு வசதியாக இருக்கும் என்பதால் மட்டுமே! கடல் ஒன்றும் எனக்கு அழகாகப்படுவதில்லை!”

“என்ன சார் சொல்றீங்க? எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பண்ணணும்னே பண்ணாதீங்க!!!” அவள் கிண்டல் செய்ய

“வாதமா? விதண்டாவாதமா என்பதே பார்ப்பவரின் பார்வையில் தானே தங்கியிருக்கிறது!” மனோதத்துவ மொழிகளால் அவர் திருப்பியடித்தார்

“இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அழகுன்னா இது இல்லையா உங்க பார்வையில்? அப்போ உங்களை பொறுத்தவரை அழகுக்கு டெபிநிஷன் என்ன?”

“அது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு விவாதம். இங்கே அழகு சம்பந்தப்படவில்லை!”

“ஷப்பா….க்ரீக்ல பேசாதீங்க சார்.. எனக்கு தமிழே சிலசமயம் புரிவது கஷ்டம்!!!!” அவள் நிஜமாகவே புரியாமல் தலையை பிடித்துக்கொண்டு விட்டாள்

“ஹா ஹா இப்போ ஒரு பைத்தியக்காரப்பெண் கத்திக்கொண்டு நம்முன்னே ஓடுகிறாள். அவள் அப்சரஸ் போல அழகு. அவளை பார்த்ததும் முதலில் உனக்கு என்ன தோன்றும்? ஐயோ பாவம் பைத்தியம் என்று தானே… அவள் அழகாக இருப்பது இரண்டாவதாகத் தான்  மனதில் படும்! அது போலத்தான் இதுவும்!”

அவரை ஏதோ ஒரு ஜந்து போல நோக்கியவள் “நான் பைத்தியமாகிவிடுவேன் போலிருக்கே..அதுக்கும் இதுக்கும் என்ன கனெக்ஷன்? கடல் ஒன்றும் கத்திக்கொண்டு நம்முன்னே ஓடலையே..”.என்று இழுத்தவள் சட்டென பல்ப் எரிந்து “யூ மீன் அலை?” என்று கேள்வி கேட்டாள்

அவளது ரியாக்ஷனில் சிரித்து விட்டவர் “எனக்கு என்னமோ கடலைப்பார்த்தால் பாவம்… குழப்பத்தில் இருக்கும் ஒரு ஆன்மா என்று தான் தோன்றும். அதுவாக பொங்கி ஓடி வரும். பிறகு ஏதோ நினைத்து திரும்பி போய் பாதி தூரம் போனதும் தான் நினைத்ததை மறந்து மீண்டும் வரும். அகப்படுவதை எல்லாம் இழுத்துக்கொண்டு போகும்..பிறகு தானே திரும்ப கொண்டுவரும். எனக்கு கடல் அழகாக தென்பட்டதே இல்லை! அதற்கு முன்னே அதன் குழப்பம் தான் கண்ணை எட்டுகிறது!” என்று வழக்கத்திற்கு மாறாக நீண்ட விளக்கம் கொடுத்தார்,

“எண்ட ஏசப்பா..அது தான் டெய்லி வர்றீங்களே.. கடலுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதுதானே!!!!” என்று கடுப்பாகிவிட்டவள் நம்பமுடியாமல் தலையை இடம் வலமாய் ஆட்டிக்கொண்டாள். ஜென்மத்தில் இப்படி ஒரு விளக்கத்தை அவள் கேட்டதே இல்லை!

“ஒரு பிசிக்ஸ் மாஸ்டர், சயன்டிஸ்ட் என்று பீலா விடுபவருக்கு கடலலை எப்படி வருகிறது என்று தெரியாதா?”

“பூமி உருண்டை என்று படித்திருக்கிறோம். அதற்காக நிலத்தில் உருண்டையின் மீது நடப்பதைப்போல எதையாவது ஊன்றிக்கொண்டா நடக்கிறோம்? பார்க்கும் போது தட்டையாக தெரிவதை ஏற்றுக்கொள்கிறோம் தானே.. சில சமயங்களில் நம்முன்னே தெரியும் மாயையை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் தருகிறது பேபி!”

“சார் போதும் சார்.. என்னால முடியல.. அவ்வ்வ்!!! அதை விடுங்க இப்போ நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க? நான் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பேன். நீங்க ஏன் உங்க வேலையை விட்டுட்டு இங்கே டீச்சர் ஆனீங்க?”

பச். அது எதுக்கு இப்போ?

சொல்லுங்க சார்

என் வேலையில் அந்த community element ஐ நான் தவற விட்டுக்கொண்டிருப்பதாக தோன்றியது. எல்லா கண்டுபிடிப்புக்களும் மக்களுக்காகத்தானே..ஒரு கட்டத்தில் மக்களின் நிலையை மீறி அவர்களுக்கு புரியாத எதைஎதையோ நான் செய்துகொண்டிருப்பதில் எனக்கு உற்சாகம் உண்டாகவில்லை. எனக்கு தெரிந்ததில் சிறு அளவையேனும் மக்களோடு பகிர எனக்கு இந்த வேலை தான் பொருத்தமாக தோன்றியது!

community element? அவளுக்கு அப்படி சட்டென்று எதை மிஸ் செய்தேன் என்று அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியவில்லையே.. அவள் தன்னைக்குறித்த யோசனையோடு மௌனமாகி விட்டாள்.

இன்றைக்கு என்னுடைய ஒரு அத்தியாயம் உன்னால் தாமதமாகிவிட்டது!!!  என்றவர் ஷார்ட்ஸில் இருந்த மணலைத்தட்டிக்கொண்டு எழவும் தான் லேசாக கவியத்தொடங்கி விட்டிருந்த இருளை அவள் உணர்ந்தாள்

இவ்வளவு நேரமும் அவள் அர்ஜூனாவோடு அதுவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை அவளுக்கு!

இருங்க சார், நானும் வரேன் என்றபடி தானும் எழுந்து வேகமாய் அவரைத்தொடர்ந்தாள்

கொஞ்ச நேரம் அவள் கூட வருகிறாளா இல்லையா என்று கூட பார்க்காமல் சம்பந்தமே இல்லாதவர் போல நடந்து கொண்டிருந்தவர் திடீரென “ஆமாம் உனக்கு உன் பெயரின் அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியுமே…. கடல் தானே..”

ஆமாம்..நீயும் கடலைப்போல தான்..எங்கே போகிறாய் என்று உனக்கே தெரியாது!!!

ஒரு கணம் அதிர்ந்து போய் அப்படியே நின்று விட்டாள் அவள். இப்படியா வெளிப்படையாக முகத்தில் எழுதி ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்???

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?

அது தான் உன் நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியுமே..

நினைத்ததை எல்லாம் திடும் திடுமென்று பேசிவிடும் அவருடைய பாணிக்கு இப்போதெல்லாம் அவள் பழக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ அவள் தானும் பதிலுக்கு எகிறாமல் யோசனையாய் அவரை ஏறிட்டாள்.

“இருக்கலாம் சார்.. HSP ல லீகல் ஆபீசரா இருந்தேன். எல்லாமே இருந்தது எனக்கு. திடீரென்று எனக்கு வாழ்க்கை ஒரே போல போவது போலவும் மெஷின் போல அலுவலகம் போய் வருவது, என் வீடு எல்லாமே எரிச்சலை கொடுக்க ஆரம்பித்து விட்டது. அடுத்து என்ன ப்ளான் என்று யோசிக்காமலே ஆறுமாதம் நோ பே லீவ் போட்டு விட்டேன். அப்போதுதான் என் பிரன்ட் இப்படியொரு தொலைவில் இந்த வாய்ப்பை பற்றி சொன்னாள்.இது வரை நான் வாழ்ந்ததற்கு முற்றிலும் வேறான வாழ்க்கை வாழப்போகும் உற்சாகத்தில் நானும் இங்கே வந்து விட்டேன். ஆனால் இந்த வேலை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது சார். இதைத் தான் நான் தேடினேனோ என்னவோ?”

அவள் அவரிடம் சொன்னதைவிட தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் என்பது தான் நிஜம்.

Sorry to burst your bubble, உன்னால் இங்கேயும் ரொம்பநாள் இருக்க முடியாது. கூடிய விரைவிலேயே போகவேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விடுவாய்!

இப்போது உண்மையிலேயே அவளுக்கு கோபம் வந்து விட்டது.அவள் நேசித்து செய்யும் வேலையை பற்றி பேச இவர் யார்?

எதைப்பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் என்னை பற்றி அனுமானிக்க நீங்கள் யார் சார். எனக்கு இங்கே பிடித்திருக்கிறது அவ்வளவு தான். முடிந்தால் நீங்கள் சொன்னதற்கு காரணம் சொல்லுங்கள்!

நான் சொன்னாலும் அதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாய் எனும்போது நான் ஏன் சொல்ல வேண்டும்?

சாக்குப்போக்கு சொல்லாதீர்கள் சார். வேண்டுமென்றே என்னை ஒரு காரணமும் இல்லாமல் மட்டம் தட்டுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நான் விட்டு விட்டு ஓடிவிடுவேன் என்று தான் என்னை 9D கு நீங்கள் அனுப்பியிருக்க வேண்டும். நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றதும் இப்படி பேச ஆரம்பித்து விட்டீர்கள்!!!

அவர் பதில் பேசாமல் சிரித்தபடி தோளைக்குலுக்கி விட்டு நடக்க ஆரம்பித்து விட வேண்டுமென்றே மொபைலில் வைஷ்ணவியோடு பேசிக்கொண்டு தனியாக நடந்தாள் ஆர்ணவி.

அவர் இதற்கு விளக்கம் சொல்லும்வரை முகம் கூட பார்க்கக்கூடாது என்று கறுவிக்கொண்டவள் அந்த வாரம் முழுவதையுமே தான் நினைத்ததை அமுல் படுத்தினாள்

அன்றைக்கு சனிக்கிழமை பெட் கவரை சலவை செய்து மாடியில் உலர்த்தியிருந்தவள் இருட்டும் வரை எடுக்க மறந்து போயிருந்தாள்! சாப்பிடும் போது தான் அது ஞாபகம் வந்து தொலைக்க வேகமாய் கதவைப்பூட்டிக்கொண்டு மாடிக்கு ஏறியவள் படிகளில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.

இந்த நேரத்துக்கு யாரும் அங்கே மொட்டைமாடிக்கு வருவதில்லை. இன்றைக்கு முதலில் அவளின் கண்ணில் பட்டது ஒரு குட்டி மேசை! அதில் ஒரு பத்து மெழுகுவர்த்திகள் எரித்து வைக்கப்பட்டிருக்க ஒரு காலி பீட்சாப்பெட்டியும் இரண்டு கோக் பாட்டில்களும் இருந்தன. லேசாக ஒரு பியானோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இருளில் அந்த மெழுவர்த்திகளும் இசையும்  சட்டென அந்த சூழலுக்கே ஒரு வேறொரு வண்ணம் கொடுத்ததை ஆவலாக பார்த்தவள் யாரோ காதலர்கள் வந்து இருக்கிறார்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்துடன் சத்தமே இல்லாமல் பெட் கவரை எடுத்துக்கொண்டு போய் விட நினைத்தாலும் ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்துவிட்டு அப்படியே உறைந்து நின்றாள். அவளின் கண்ணில் இருந்து அவளை அறியாமலே ஒரு சொட்டு கண்ணீர் உற்பத்தியாகியது.

அங்கே யாழினியும் அவளுடைய அப்பாவும் சாப்பிட்டு முடித்து விட்டு அந்த இசைக்கேற்றபடி கைகோர்த்து சின்னதாய் நடனமாடிக்கொண்டிருந்தனர்! கேள்விப்புலனற்ற தன் மகளுக்காய் அவளின் பாதங்களை தன் கால் மேல் வைத்துக்கொண்டு அவர் ஆடமுயல அது நடனமாகவே இல்லை!! இருவருக்கும் அது புரிந்தே இருந்தது. ஏனெனில் அவர்களும் தங்களை எண்ணி வாய் விட்டு சிரித்தபடி ஆனால் விடாமல் ஆடிக்கொண்டிருந்தனர்! அது அவர்களுக்கு முதல் தடவையல்ல என்பதையும் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

இசை முடிந்ததும் தந்தையின் கழுத்தை இறுகக்கட்டிக்கொண்ட யாழினி வாய்விட்டு எதுவும் சொல்லாவிடினும் அவளது உடல் மொழி நாளையில் இருந்து உங்களை நான் மிக மிக மிஸ் செய்வேன் அப்பா என்று சொல்வதாக தான் ஆர்ணவியால் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் நாளை கிளம்பப்போவது அவளுக்குத்தான் தெரியுமே!

சத்தமில்லாமல் மூன்றாம் மாடிக்கு வந்தவள் பிறகு இரண்டிரண்டு படிகளாய் தாவி அர்ஜூனாவின் தளத்துக்கு வந்து பெல்லை அழுததோ அழுத்து என்று அழுத்தினாள்

கதவி திறந்தவரின் முகத்தில் என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டாயா என்பதற்கு கிட்டிய ஒரு முகபாவனை தன் இருந்தது.

என்ன இந்த நேரம்?

நீங்க யாழினியை அவங்கப்பா அழைச்சிட்டு போறதை தடுக்காதீங்க சார்.

சட்டென அவர் கண்கள் கோபத்தில் இடுங்கியத்தை கண்டு கொஞ்சம் பயந்து தான் போனாள் அவள்

இல்ல சார், அவ அவங்கப்பாவை ரொம்பவே மிஸ் பண்றா!

இதோ பார். எங்கள் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிடுவதை நான் விரும்பமாட்டேன். உன் வேலை எதுவோ அதை மட்டும் பார்ப்பது உனக்கு நல்லது. வார்த்தைகளை கோபமாய் துப்பிவிட்டு அவர் கதவை அடித்துக்கொள்ள

நீங்க பண்றது எல்லாம் சரியென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சார். ஆனைக்கும் அடி சறுக்கும். யாழினி விஷயத்திலும் என் விஷயத்திலும் உங்கள் முடிவுகள் ரொம்பவே தவறு!! கூடிய சீக்கிரத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!!! அவள் பூட்டிய கதவின் முன் நின்று கோபமாய் சவால் விட படிகளில் இறங்கி வந்த மேல் வீட்டு ஆன்ட்டி அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டு இறங்கி சென்றார். சட்டென அவமானத்தில் முகம் சிவந்து போனவள் தன் வீட்டுக்குள் நுழைந்து தானும் கதவை அடித்து சாத்தினாள்

வருவாள்

ஆழி-அர்ஜூனா 7

7f814609d6b20d8dc8d3dc73bca9ca22

மூன்று துருவங்கள் ஒன்றாக இணைந்திருந்த அபூர்வ நாள் அது. ஆம் பத்தாம் வகுப்பு இடைநிலைப்பரீட்சை முடிவுகளை பெற்றோரோடு கலந்துரையாடும் வகுப்பு நிகழ்வொன்றில் நடன ஆசிரியை ராகவி, ஆங்கில ஆசிரியை ஆர்ணவி , கணித ஆசிரியர் அர்ஜூனா மூவரும் மீதிப்பாட ஆசிரியர்களோடு பெற்றோர் நடுவில் நின்று கொண்டிருந்தனர். ராகவியும் ஆர்ணவியும் அர்ஜூனாவை காணவே காணாதவர்கள் போல பெற்றோர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென கொஞ்சம் தடித்த குரல் ஒன்றின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் உயர ஆரம்பிக்க அனைத்து தலைகளும் மெல்ல அந்தப்பக்கம் திரும்ப ஆரம்பித்தன.

பல்க்காக பார்ப்பதற்கு கொஞ்சம் ரவுடித்தனமாக இருந்த அப்பா ஒருவர் அங்கிருந்த ஆசிரியர்களிலேயே மென்மையாய் தென்பட்ட சபீனாவிடம் எகிறிக்கொண்டிருந்தார். இந்த பாடசாலையில் இப்படியான நிகழ்வுகள் கொஞ்சம் அபூர்வம் தான். ஆகவே எல்லோர் கவனமும் அங்கேயே குவிய ஆரம்பித்தது.

“என்ன மேடம்.. நீங்கள் ஒழுங்காக கற்பித்தால் என் பையன் படித்து விட்டு போகிறான். ஒரு நாளில் எவ்வளவு நேரம் பாடசாலையில் இருக்கிறார்கள்? நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டு எங்களை குற்றம் சொன்னால்?” அவர் அடிப்பது போல கேட்க..

அவமானத்தில் சிவந்தாலும் குரல் உயர்த்தாமல் “கொஞ்சம் பார்த்து பேசுங்கள் சார். மற்ற மாணவர்களும் என்னிடம் தான் படிக்கிறார்கள். அவர்கள் மார்க் வாங்கவில்லையா?” என்று கேட்டாள் சபீனா

“பசங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க! எந்த பையனுக்கு எப்படி சொல்லிக்கொடுக்கணும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்! நீங்கல்லாம் இப்ப ஸ்கூலுக்கு வர்றதே சம்பளம் வாங்கிட்டு தூங்கிட்டு போறதுக்குத்தானே..”

எல்லா ஆசிரியர்களும் நடப்பதை ஜீரணிக்க முடியாமல் விக்கித்துப்போய் நின்றுகொண்டிருந்தனர்.

கோபம் பொங்கிக்கொண்டு வந்தது ஆருவுக்கு. இவனெல்லாம் ஒரு மனிதனா? பாவம் சபீ! மூச்சு விட்டால் கூட ஸ்டூடண்ட்ஸ் ஸ்டூடண்ட்ஸ் என்று சொல்லிக்கொண்டு தான் விடுவாள்! அவளைப்போய் என்னவெல்லாம் சொல்கிறான். இவனை நாக்கை பிடுங்குவது போல நாலு கேள்வி கேட்டு வெளியே அனுப்புகிறேன் பார் என்று அவள் முன்னேற அவளது எண்ணத்தை ஊகித்தவள் போல பட்டென்று அவளது கையை பிடித்து வலுக்கட்டாயமாய் நிறுத்தினாள் ராகவி.

ஆர்ணவி தன்னை விடுவித்துக்கொள்ள போராடிய போது தான் “மிஸ் நீங்க கொஞ்சம் தள்ளி போக முடியுமா?” என்று அர்ஜூனாவின் குரல் அழுத்தத்துடன் கேட்டது. அப்படியே சுழன்று திரும்பினாள் ஆர்ணவி!

சபீனா தப்பித்தேன் பிழைத்தேன் என்பது போல கலங்கிய கண்களோடு அகல அவளது கையை பிடித்திழுத்து தங்களோடு சேர்த்துக்கொண்டாள் ஆரா. கண்களோ அந்த இடத்தை விட்டு அசைய மறுத்தது.

“ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கொஞ்சநேரம் ரிசப்ஷன்ல போய் இருங்க.. “அர்ஜூனாவின் கட்டளைக்குரலுக்கு கட்டுப்பட்டு மாணவர்கள் நிமிடத்தில் மாயமாய்ப்போக

யாருய்யா நீ? நீ என்ன பெரிய இவனா? என்று அர்ஜூனாவை நோக்கி எகிறினார் அந்த மனிதர்.

நட வெளியே! சப்பித்துப்பப்பட்ட வார்த்தைகளில் இருந்த இன்ட்டன்சிட்டியில் ஒரு கணம் அதிர்ந்து தான் போனாள் ஆரா.

ஏய் என்ன? என்று கொஞ்சம் குழப்பமாய் சுருதி இறங்கிய குரலில் அந்த மனிதர் கேட்க கையை வைத்து ஒரே தள்ளாக தள்ளி விட்டார் அர்ஜூனா. அவர் வகுப்பறைக்கு வெளியே தடுமாறிபோய் நின்றார்.

பிறகு இருவருக்குமிடையில் நடந்தவைகள் எவையும் இவர்களுக்கு கேட்கவில்லை. சட்டென நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட வகுப்பாசிரியர் நாங்கள் கலந்துரையாடலை தொடரலாம் என்று சொல்லிவிட ஆராவுக்கு போய் பார்க்க வழி தெரியவில்லை. மாணவர்களும் அழைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் போனவர்கள் இருவரும் வந்த பாடில்லை. முகத்தில் ஆர்வத்தை மறைக்க முடியாமல் பல்லைக்கடித்தபடி பெற்றோர்களிடம் அவள் பேசிக்கொண்டிருக்க சற்றைக்கெல்லாம் எதுவுமே நடக்காதவரை போன்ற முகபாவத்துடன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு அர்ஜூனா போய் இணைந்து கொண்டார். பின்னாலேயே  தலையை தொங்கப்போட்டுக்கொண்டு முகம் கருக்க உள்ளே நுழைந்தார் அந்த மனிதர்!

பையனையும் அழைத்துக்கொண்டு நேராக சபீனாவிடம் போனவர் இன்னும் உதடு வெளுக்க அழுகையை அடக்கியபடி நின்றுகொண்டிருந்த அவளிடம் சாரி மேடம். தெரியாம பேசிட்டேன் என்று பொருள் பட எதையோ முணுமுணுத்தவர் வேறெதையும் பார்க்காமல் வேகவேகமாய் வெளியேறி மறைந்தார்.

அன்றைய கலந்துரையாடல் முடிந்ததும் சம்பந்தப்பட்ட பையனுடன் ஏதோ பேசிவிட்டு வந்த அர்ஜூனாவிடம் போய் “தாங்க்ஸ் சார்” என்று குரலே வெளிவராமல் சபீனா சொல்ல “இருக்கட்டும் என்பதாக கையமர்த்தியர் “உயிரைக்கொடுத்து வேலை செய்தால் மட்டும் போதாது. உங்களுக்காக உறுதியாய் நிற்கவும் கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சமயமும் யாராவது உதவிக்கு வரமாட்டார்கள்” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தார்

அவர் பேசியதை கேட்டபடி வெளியே செருப்பை மாட்டிக்கொண்டிருந்த ஆர்ணவி தன் பக்கத்தில் இருந்த ராகவியை காணாமல் திகைக்க அவளோ சார் என்றபடி அர்ஜூனாவின் பின்னே போய்க்கொண்டிருந்தாள்!

வேக வேகமாய் அவளின் பின்னே ஓடினாள் இவள்.

சார்.

ஹ்ம்ம்? என்ன என்பதாய் திரும்பிப்பார்த்தவர் ராகவியையும் அவளின் பின்னே ஓடி வந்து சேர்ந்துகொண்ட ஆர்ணவியையும் கண்டு நெற்றி சுருக்கினார்.

சாரி சார். அன்னிக்கும் சொன்னேன் தான். ஆனா முழு மனசா சொல்லல. நாங்கள் நடந்து கொண்ட முறை ரொம்பவே தப்பானது. சாரி சார்

ராகவி தடுமாறியபடி சொல்ல அவளையே ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்ணவி. அடிப்பாவி!! இப்படி தடால் பல்டி அடித்து அவளுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறாளே..

ஹ்ம்ம்… நான் அதை என்றோ மறந்துவிட்டேன் என்றவர் மன்னிப்பை ஏற்கிறேன் என்றோ இல்லையென்றோ சொல்லாமல் அத்தோடு பேச்சு முடிந்து விட்ட பாவனையில் திரும்பி நடக்க ஆரம்பிக்க “ நீயும் கேளுடி” என்று ஆர்ணவியின் காதைக்கடித்தாள் ராகவி.

மெல்லியதாய் சின்னச்சிரிப்பொன்று அவள் முகத்திலே முளைக்க “ ம்ஹ்ம்..நான் இன்னும் இம்ப்ரெஸ் ஆகல.. அப்படி ஆகும் போது நான் சாரி சொல்றேன்” என்று கொஞ்சம் பெரிய குரலில் சொல்லியபடி ஓரக்கண்ணால் அவரைபார்த்தாள் ஆர்ணவி. உதட்டில் குறும்பு சிரிப்பு நெளிந்து கொண்டிருந்தது.

எனக்கு கேட்டுவிட்டது என்ற பாவனையில் சட்டென்று திரும்பி அவளைப்பார்த்து விட்டு நடந்தவரின் முகத்திலும் சிரிப்புத்தான் பூத்திருந்தது.

அது உன்னைப்போல் எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்று சொல்வதாக பட்டது இவளுக்கு!

ஆர்ணவி எப்போதுமே கடலை அவ்வளவாக ஆராதிப்பவள் அல்ல.., அதை ஆர்வத்தோடு நின்று ரசித்ததும் கிடையாது. கடலை மட்டுமல்ல இயற்கையை அவள் எடுத்துக்கொள்ளும் விதமே அப்படித்தான். மலையா? சரி.. ஏறிப்போவோம்..ஆறா? குளித்து விட்டு வருவோம்.. இது தான் அவள்! ஆனால் இன்றைக்கு ஏனோ இவ்வளவு நாளும் பீச்சை போய் பார்க்கவில்லையே. இன்றைக்கு போனால் என்ன என்று தோன்றி விட்டது. அதை அதிகம் ஆராயாமல் அன்றைக்கு முழுக்க அதே தியானமாக கற்பித்துக்கொண்டிருந்தவள் ஸ்கூல் பஸ் கொண்டு வந்து இறக்கியதும்  வேக வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.

கீழ்த்தளத்தில் பார்க்கிங் பக்கமாக தன்னுடைய மோனா டீஷர்ட்டில் நின்று கொண்டு யாழினி கையசைக்க உற்சாகமாய் தானும் கையசைத்தாள் ஆர்ணவி

அவள் நெருங்கியதுமே  யாழினி ஓடி கையை பிடித்துக்கொள்ள அவளது முகத்தை நிமிர்த்தியவள் “ குக்கீ ஐஸ்க்ரீம் உனக்காக வாங்கி வச்சிருக்கேன். மறந்துடாதே ஓகேவா? நேத்தே வாங்கினேன் பேபி..உன்னைத்தான் காணோம் என்றாள் புன்னகையுடன்

பட்டென்று தலையில் கைவைத்துக்கொண்டவள் “அப்பா வந்துட்டாங்க” என்றாள் சிரித்தபடியே..

அவர்களின் பின்னே இருந்து அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த யாழினியின் தந்தையோ “ நீங்கதானா அந்த ஐஸ்க்ரீம் பிரன்ட்?” என்று புன்னகையோடு கேட்டார்

அசட்டு சிரிப்புடன் தலையசைத்து விட்டு “ஒரு வாரத்துல ஒருதடவைதான்” என்று சமாளிப்பாய் இழுத்தாள் அவள்

“அதெல்லாம் அவ அளவாத்தான் சாப்பிடுவா” என்று அவளது விளக்கத்தை டிஸ்மிஸ் செய்தவரின் சகலத்திலுமே மகளைக்குறித்த பெருமுதம் தான் நிரம்பிக்கிடந்தது.

தாங்க் யூ சிஸ்டர். இவ தனியா இருப்பாளேன்னு பயப்பட்டுட்டே இருப்பேன். சட்டுன்னு எல்லார்கூடவும் சேரவும் மாட்டா. உங்களை அவளுக்கு பிடிச்சிருக்கு. என்று தங்கள் இருவரின் உதட்டசைவையுமே மாறி மாறி ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த மகளின் தலையை வருடியபடியே சொன்னார் அவர்.

ரொம்பவே புத்திசாலிக்குழந்தை சார் அவ. நீங்க ரொம்ப லக்கி என்றவள் “ அப்போ இந்த தடவை போகும் போது யாழினியை கூட்டிட்டு போய்டுவீங்களா என்று கேட்டுவிட்டாள். அதன்  பிறகு தான் உரைத்தது. அவர்களின் சொந்த விவகாரத்தை கேட்க அவள் யார்? என்பது!

அவர் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. “இல்லைம்மா. அர்ஜூன் என்னால இப்போதைக்கு இவளை சரியா பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறான். கொஞ்சம் அங்கே தொழில் ஒரு கட்டுக்கு வந்ததும் அழைத்துக்கொண்டு போவது தான் சரி என்கிறான். எனக்கும் குழந்தையை விட்டு விட்டு போவது வருத்தம் தான் என்றாலும் அழைத்துச்சென்று இவளை சரியாக பார்த்துக்கொள்ள முடியாவிடின் என்ற பயம் தடுக்கிறது. “என்று யோசனையாக சொல்லிவிட்டு “அப்புறம் பார்ப்போம்மா” என்றபடி யாழினியை தூக்கிக்கொண்டு நடந்தார் அவர்,

அவரின் தோள் வழியாக எட்டி புன்னகையுடன் கையசைத்த யாழினிக்கு பதிலுக்கு கையசைத்தாள் ஆர்ணவி.

யாழினியை இவர்கள் பார்த்துக்கொள்வதா? அவள் இவர்களை போல பத்துப்பேரை பார்த்துக்கொள்வாளே!!! ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று எண்ணினாலும் மனதில் இவருக்கும் அர்ஜூனாவுக்கும் இடையில் இருந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கண்ணில் அறைந்தது.. இவர் ஒரு பயந்த மனிதர். அவரோ பயமே அறியாதவர்.. இருவருக்குமிடையில் இவ்வளவு இறுக்கமான நட்பு எப்படி முளைக்க முடியும்?

மீண்டும் அவர் அந்த ரவுடியை நெஞ்சில் கைவைத்து தள்ளிய காட்சி ஞாபகம் வர தலையை உலுக்கிக்கொண்டாள் அவள்.

அவசர அவசரமாய் குளித்து கையில் அகப்பட்ட ஒரு ஷார்ட்ஸ், டீஷர்ட் சகிதம் பிளாட்டை விட்டு இறங்கி கூகிள் காட்டிய திசையில் கடலைநோக்கி நடந்தாள் ஆர்ணவி.

அமைதியான கடல் தான். ஆங்காங்கே தென்னை மரங்களுடன் மனிதர்கள் ஜோடிகளாய் ஒட்டிக்கொண்டிருக்க கடற்கரையில் திடீர் உணவகங்கள் பல முளைத்திருந்தன. அது நகர்ப்புறம் இல்லை ஆதலால் மனிதர்களின் நெருக்கடி அவ்வளவாக இல்லாமல் இயற்கையே ஆட்சி செய்து கொண்டிருந்தது.

ப்ரீயாக இருந்த தென்னை மரமொன்றின் வேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள் கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அதுவோ இவளை கண்டுகொள்ளாமல் வெள்ளை நுரைகளை அள்ளிவந்து கரையில் கொட்டுவதும் மீண்டும் ஓடி மறைவதும் ஊடல்கொள்வதுமாக இருந்தது. இன்றைக்குத்தான் அவள் கடலை இவ்வளவு ஊன்றி கவனிக்கிறாள்! தான் கண்டது அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எண்ணற்ற அர்த்தங்களை வைத்துக்கொண்டு கடல் அவளை வாவென்று அழைப்பது போலிருந்தது.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி….

எங்கிருந்தோ வந்து மாயமாய் காதுவழியே நுழைந்து அந்த இசை அந்த பிரதேசத்தையே ஆக்கிரமிக்க  நூற்றி எண்பது

பாகைக்கு பார்வையை சுழற்றித் தேடியவளின் கண்களில் அந்தபெண் அப்போதுதான் விழுந்தாள். இதயம் படபடவென துடிக்க அந்தப்பெண்ணையே கவனிக்க ஆரம்பித்தாள் ஆர்ணவி.

மடிப்புக்கலையாத சுடிதார் அணிந்து நேர்த்தியாக வாரப்பட்டிருந்த முடியுடன் பரபரவென சுழன்று கொண்டிருந்தாள் அந்தப்பெண். சின்னதொரு தகரக்கொட்டகை தான் அவளது சொர்க்கபுரி ஆனால் ராஜமாளிகையில் இருப்பவள் போல எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் அடுக்கி வைத்து கடையையும் ரம்மியமாய் அலங்கரித்து வைத்திருந்தாள். அவளுக்கு முன்னே எந்நேரமும் சீறத்தயாராக இருக்கும் டிராகன் போல ஒரு காஸ் அடுப்பு. பெரிய வாணலி. முன் புறம் அழகாக அடுக்கப்பட்ட பெரிய போத்தல்களில் பலவகை மசாலாப்பொடிகள்!

அவளுக்கு முன்னே இரண்டு பேர் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க அந்த இசைக்கேற்ப அவளது வாணலியை அசைத்து வறுத்து பிறகு ஒரே தடவையில் கரண்டியில் எடுத்து  அவர்களுடைய பையை ஒவ்வொருவராக நிரப்பி விட்டு கீழே குனிந்தாள் அந்தப்பெண். அவளின் காலடியில் இரண்டு சிறுவர்கள் பாய் போட்டு அமர்ந்திருந்து புத்தகங்களை பரப்பி வைத்துக்கொண்டிருந்தனர். அதற்குமேல் தாங்காதவளாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்தாள் ஆரணவி.

அந்தப்பெண்ணின் பிள்ளைகள் ஆகிருக்க வேண்டும். அவர்களுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தபடி இந்தப்பக்கம் வியாபாரமும் செய்துகொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் நடுவில் பாடல் வேறு மென்மையாய் கடற்கரையையே தாலாட்டிக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் கூட அலுப்போ சலிப்போ இல்லாத அந்தப்பெண்ணின் முகத்தை பார்க்க கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது அவளுக்கு.

ரங்கம்மா… நிறுத்தி நிதானமாய் உச்சரித்து புன்னகைத்தாள் ஆர்ணவி

அடடா..என் பேர் கூட தெரியுமா உங்களுக்கு? உங்களை நான் பார்த்ததே இல்லையே. என்ன சாப்பிடறீங்க? கனிவாக உபசரித்தாள் அந்த ரங்கம்மா

மசாலா சுண்டல் என்று எழுதி வைத்திருந்ததை படித்து விட்டு தனக்கொரு மசாலா சுண்டல் என்று ஆர்டர் செய்தாள் அவள்

அவளது கண்ணெதிரே வாணலியில் பச்சை வெங்காயம் மசாலாப்பொடிகள் மாங்காய், சில காரட் துண்டுகளை சேர்த்து அதில் ஒரு கப் அவித்த சுண்டலைக்கொட்டி ஒரு கிளறு கிளறி விட்டு அப்படியே கூடைப்பந்தொன்றை ஷூட் செய்யும் லாவகத்துடன் ஒரே தடவையில் கரண்டியில் அள்ளியெடுத்து அவளது பேப்பர் பையில் நிரப்பினாள் ரங்கம்மா.

ஒன்றை வாயிலெடுத்து போட்டு அதன் சுவையை அனுபவித்தபடியே தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு ரங்கம்மாவின் பிள்ளைகள் பாடம் பற்றியெல்லாம் அவள் பேச சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர்கள் சகஜமாகிவிட்டார்கள்.

எங்கள் அர்ஜூனா சார் தான், ரங்கம்மா செய்யும் சுண்டலை சாப்பிட்டு பார்க்காமல் சுண்டலைபற்றியே பேசக்கூடாது என்று உங்களைப்பற்றி எல்லோருக்கும் சொன்னவ்ர் என்று மெல்ல தூண்டில் போட்டாள் அவள்

அந்த சாரா, தினமும் வருவார், அதோ அங்கே இரட்டை தென்னைமரம் இருக்குது பாருங்க, அங்கே இருந்து தான் என்னமோ எழுதிட்டே இருப்பாரு.. அதோ தலை தெரியுதுல்ல? வறுவல் சுண்டல் மட்டும் கொடுத்தா போதும், உலகமே தெரியாம உக்காந்து எழுதுவார்! பாவம் தானும் தன்பாடும், அவ்வப்போது என் பிள்ளைகள் பற்றிக்கூட அன்பாய் விசாரிப்பார். இந்நேரத்துக்கு வந்து சுண்டல் வாங்கிட்டு போயிருப்பார்..இன்னிக்கு என்னமோ வேலை போல..கோபிக்காமல் கொஞ்சம் கொண்டு போய் கொடுத்து விடுகிறாயா? உங்களுக்கு ரொம்ப தெரிந்தவர் என்பதால் தான் கேட்கிறேன்.

அதற்கென்ன? கொடுக்கிறேன்!!! அது என்ன வறுவல் சுண்டல்? எங்களுக்கெல்லாம் இல்லையா?

அட..ஒரு நாள் அந்த சாரே தான் மசாலா சுண்டலில் மீன் வறுவலை நொறுக்கி போட்டா நல்லாருக்கும்னு சொன்னார். எனக்கு முதல்ல என்னடான்னு தான் இருந்திச்சு. ஆனா செஞ்சு பார்த்தேன். நல்லாவே இருந்துது. ஆனா இப்போதைக்கு மீனு வாங்கி அந்த வியாபாரம் பண்ண நேரமும் இல்ல, வசதியும் இல்ல. அதனால அந்த சார் தினமும் வருவாரா, அவருக்கு மட்டும் எடுத்து வந்து கொடுப்பேன்.

இந்த ரங்கம்மா அர்ஜூனாவில் காட்டும் அக்கறையை அவற்றின் சமூகத்தில் உள்ளவர்கள் அவள் உட்பட ஒருசதவீதமாகவாவது காட்டுவார்களா?

அதற்குள் ரங்கம்மா சின்னதொரு வாணலியை அடுப்புக்கு மாற்றி வறுவல் சுண்டலை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

கஷ்டமா இல்லையா ரங்கம்மா? இப்படி தினமும் நெருப்பு முன்னே நிக்கறது?

இல்லைங்க. எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். கடலை அதை விட ரொம்ப பிடிக்கும். சுண்டல் வியாபரத்துல எனக்கு வர்ற லாபம் தாராளமா போதுமா இருக்கு. தினம் தினம் என் கடையையே தேடி வர்றாங்களே, டேஸ்ட் பிடிச்சதால தானே.. இதெல்லாம் ரொம்ப சந்தோஷங்க எனக்கு. அடுப்புல வேலை செஞ்சிட்டே பிள்ளைகளையும் ஹோம் work செய்ய வச்சிருவேன். எனக்கு வேறே ஏதும் கவலைகள் இல்லையே…

இந்த நிறைவு அவளுக்கு ஏன் வைக்காமல் போனது? அவளுக்கு உண்மையில் என்ன பிடித்திருக்கிறது? சர்வசாதாரணமாக ஒரு கடலை விற்கும் பெண்மணிக்கு கிட்டிய ஆத்மதிருப்தி, அவளுக்கு மட்டும் ஏன் இன்னும் வசப்படாமல் அலைபாய்கிறது?

வறுவல் சுண்டலை கையில் வாங்கிக்கொண்டு அர்ஜூனா இருந்த இடத்தை நோக்கி மணலில் கால்புதைத்து நடந்தாள் ஆர்ணவி. அலைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மெல்லிய இரைச்சலுடன் வந்து வந்து திரும்பிக்கொண்டே இருந்தன.

 

 

ஆழி-அர்ஜூனா 6

aaliaa-1478678800

சுனந்தா ப்ளாக்கின் இரண்டாவது தளம். ஹாரிடோர் முடியும் இடத்தில் நாவல் மரக்கிளை ஏறக்குறைய உள்ளே நுழைந்திருந்தது. அந்த எல்லையில் தான் அமைந்திருந்தது ஒன்பதாம் வகுப்பு D! கதவுக்கு வெளியே இருந்த நேர சூசியின் காகித முள் ஆங்கிலத்துக்கு நேராக திருப்பிவிடப்பட்டிருந்தது.

C வகுப்பைத்தாண்டிக்கொண்டு நேராக D வரை சென்ற அர்ஜூனா சுவாரஸ்யமாக அந்த வகுப்பை பார்த்துக்கொண்டே அந்த தளத்தின் முடிவுவரை சென்று திரும்பி வர அவரை காணவே காணதவள் போல வகுப்பறையின் முன்னே நின்ற இரண்டு மாணவர்களையும் பிடிவாதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்ணவி. ஆனால் எப்படியோ அவரது முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாத்தானிச சிரிப்பு அவள் மனக்கண்ணில் தெரிந்து அவளுக்கு ஏகக்கடுப்பை உண்டு பண்ணியது.

மீண்டும் முன்னே நின்றவர்களில் கண் பதிந்தது

நிரோஜனும் சுபாங்கனும் அங்கே ஆங்கில உரையாடல் ஒன்றை முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

“I go shop and buy milk to you!”

“I am not  like milk, I like ice cream!!!”

“வேண்டாம்னா போயிபை I give only milk”

“ஐ கொன்னுபை யூ டா”

“ஆங்!!! மை ஹான்ட் நாட் பூப்பரிச்சுபை!!!” சண்டையிட்டபடியே கிட்டத்தட்ட ஒருவரையொருவர் நோக்கி முன்னேறி விட்டிருந்தனர் அக்குறும்பர்கள்.

“பூப்பறிச்சுபையா? ஹையோ இவங்களோட!!!!!!!!” தன் பொறுமையை தொலைத்தவளாக டஸ்டரை தூக்கி அவர்கள் மேல் வீசினாள் ஆர்ணவி.

“நீ திட்டினாலாவது அவர்கள் பயப்படுவார்கள், மொத்த வகுப்போடு சேர்ந்து நீயும்  சிரித்தால்?” மனச்சாட்சி அங்கலாய்த்தது

“மனுஷனாக பிறந்தவன் எவனாவது இதற்கு சிரிக்காமல் இருப்பானா?” மனச்சாட்சியை திருப்பிக்கேள்வி கேட்டாள் ஆரா.

இத்தனைக்கும் அவள்  கேட்டதெல்லாம் ஒரு வீட்டுக்கு விருந்தாளி வந்தால் அந்த வீட்டுக்காரனும் விருந்தாளியும் பரஸ்பரம் எப்படி உரையாடி விருந்துபசாரம் செய்வார்கள் என்று நான்கு லைன் பேசும் படி தான். ஆனால் நடந்த கூத்தில் மொத்த வகுப்பறையே ஈஈஈ மோடில் தான் அமர்ந்திருந்தது!

“டேய் நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? என் கிளாஸ்ல தங்க்லீஷ் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?”

“வாயைத்திறந்ததும்  வர்ட்ஸ் எல்லாம் மறந்து போச்சு மிஸ்..” சுபாங்கன் பவ்யம் போல விளக்கமளித்தான்

“பேசாதே நீ!!! உன் வீட்டுக்கு வர்றவனுக்கு வீட்ல ஒரு டீ போட்டு கொடுக்கமாட்டியா? தேவையில்லாம ஏன்டா கடைக்கு போய் மில்க் வாங்குற?” அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

“எங்க வீட்ல பிரிட்ஜ் இல்ல மிஸ்! தேவைப்படும் போது உடனே உடனே தான் வாங்குவோம்!!!” அவன் தன் வீட்டு நிலையை எடுத்து சொல்லி விளக்கினான்!

“என்னால முடியலடா. சும்மா கற்பனை தானே பண்ண சொன்னேன். மாங்கு மாங்குன்னு polite conversation எப்படி பண்றதுன்னு கற்றுக்கொடுத்தேன் நேற்று! இன்னிக்கு இப்படி சொதப்பறீங்க!”

“சாரி மிஸ். அவன் தான் என்னை உசுப்பேத்தினான்” நிரோஜன் விளக்கம் சொல்ல முயல அவனைக்கையமர்த்தி நிறுத்தினாள் ஆரா.

“எதுவுமே பேசத்தேவையில்லை. ரெண்டு பேரும் போய் கிளாசுக்கு பின்னால் நின்றபடி நீங்கள் பேசிய விஷயங்களையே சரியாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுவந்து அடுத்த பெல் அடிக்கும் முன் என்னிடம் காண்பிக்க வேண்டும்!!!” என்று கொஞ்சம் கடுமையாக சொன்னவள் “மற்றவர்களின் பக்கம் திரும்பினாள்

“என்னடா பண்ணபோறீங்க? தமிழ் தமிழ்னு நாம நல்லா தேனொழுக  பேசலாம் ஆனா உண்மையில் இங்க்லீஷ் தெரியாது என்றால் இந்தக்காலத்தில் ஒரு லெவலுக்கு மேலே முன்னேற முடியாது“ என்று ஆயாசமாய் சொன்னாள் அவள்

மற்றவர்களை தாண்டிக்கொண்டு பின்னே சென்றுகொண்டிருந்த இருவரில் சுபாங்கன் நின்று திரும்பினான்.

மிஸ்

“என்ன சுபா! டவுட் ஏதுமென்றால் வெயிட் பண்ணுங்க. இவங்களுக்கு ஒரு வேலை கொடுத்துட்டு உங்ககிட்ட வரேன்”

அதில்ல மிஸ்!!!

அதானே பார்த்தேன்!! சரி சார் என்ன சொல்ல வந்தீங்க?

இல்ல மிஸ்..அர்ஜூனா சார் எங்களுக்கு ஒருதடவை ஒண்ணு சொன்னார்.

என்னது?? அவளுக்குள் சட்டென்று படபடவென்றது. இந்தத்தடவை எதை சொல்லி வைத்திருக்கிறாரோ அந்த மனிதர் தெரியவில்லையே..

“ஆங்கிலம் ஒரு மொழி மட்டும் தான் அது ஒரு கல்வித்தகுதி இல்லைன்னு சொன்னார்!!!” சுபாங்கனின் முகத்தில் கள்ளப்புன்னகை!

கர்ர்ரர்ர்ர் பல்லைக்கடித்தாள் அவள்.

அவள் அதை தவறென்று சொல்ல முடியுமா? ஆனால் அவர் சொன்னதை கோட் பண்ணிக்கொண்டு ஆங்கிலமே வேண்டாம் என்று இந்த வால்கள் அடம்பிடித்தால் என்ன செய்வது என்று கொஞ்சம் அவர் யோசித்திருக்கலாம்!!!

“அது சரிதான். இங்க்லீஷ் தெரிய வில்லை என்ற ஒரே காரணத்துக்காக தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்காக அவர் அப்படி சொல்லியிருப்பார்! இப்போ நான் ஒரு உதாரணம் சொல்றேன். உனக்கு லண்டன் போற சான்ஸ் கிடைக்குது. அங்கே போக இங்க்லீஷ் எக்ஸாம் பாஸ் பண்ணணும். அந்த இடத்துல இந்த டயலாக்கை உன்னால சொல்ல முடியுமா?”

“இங்க்லீஷ் இல்லாம இருந்திடலாம் பசங்களா. ஆனால் நாம லைப்ல இப்போ இருக்கறதை விட மேல போகணும், வளரணும் என்றால் இங்க்லீஷ் தேவை! .உலகமே டிஜிட்டலைஸ் ஆகிட்டிருக்கு..இப்போ போய் இப்படி பேசிட்டு இருக்க கூடாது! இங்க்லீஷ் மட்டுமல்ல இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். புரிஞ்சதா?”

ஷப்பா மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள் ஆர்ணவி.

இன்றோடு அவள் இந்த வகுப்புக்கு பொறுப்பாசிரியராகி மூன்று வாரங்கள் முடிந்திருந்தது. முதன்முதலாக இந்த வகுப்பில் காலடி வைத்தபோது தன் வகுப்பை சாதிக்க வைத்துக் காட்டுவதாக வீர சபதம் எல்லாம் எடுத்துக்கொண்டு தான் உள்ளே நுழைந்தாள். ஆனால் அடுத்த வாரமே தெளிவாக புரிந்து போனது. இவர்களில் எண்ணி ஒரு பத்துப்பேரை தவிர மற்றவர்கள் பாஸ் செய்வதே பெரிய விடயம் என்று!

வாழ்க்கைக்கான கல்வியையும் சரியான வழிகாட்டலையும் கொடுத்து தாழ்வு மனப்பான்மையற்றவர்களாய், எதையும் முயற்சித்து பார்க்கக்கூடியவர்களாய் வெளியே அனுப்புவது தான் தான் அதிகப்பட்சம் செய்யக்கூடியது என்று அவளும் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தாள்

என்னதான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது தலையால் தண்ணீர் குடிப்பது போலிருந்தாலும் அவர்கள் மீது இந்த மூன்று வாரங்களுக்குள் அவளுக்குள் பெரும் நேசம் முளைவிட்டிருந்தது,

இத்தனை வகுப்புக்களுக்கு அவள் கற்பிக்க ஆரம்பித்திருக்கிறாள். இவர்களை போல வேறு யாரும் அனு மிஸ் என்று அவளை அழைத்ததில்லை!

அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டதில்லை

அவளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதில்லை

அவளை சிரிக்க வைத்ததில்லை

எல்லாவற்றுக்கும் மேலாக வெகுளித்தனமான நேசத்தை காண்பித்ததில்லை

பின் பதிலுக்கு அவர்கள் மேல் அவளுக்கு நேசம் முளைக்காமல் எப்படி இருக்கும்?

நிரோஜன், சுபாங்கன் இவருடைய வேலைகளையும் திருத்தியவள் அடுத்த நாளுக்கான பாடத்தை சொல்லி தயாராக வரும்படி எச்சரித்துவிட்டு தன்னுடைய பாடவேளை முடிய இன்னும் பத்தே நிமிடமே இருந்ததால் அந்த வகுப்பின் ரெக்கார்ட் புக்கை எடுத்து புரட்டினாள் ஆரா

“என்னடா உங்க மாத்ஸ் சேர் ஒண்ணுமே எழுதல. ரெண்டு மாசத்துக்கு முன்னே தான் கடைசியா எழுதியிருக்கிறார்!!! கரக்டா எல்லா டீச்சர்சிடமும்  கொடுத்து  எழுதி வாங்கி வைக்கும் படி அன்றைக்கே சொன்னேனே”

“மிஸ்.எங்களோட மாத்ஸ் மித்திரன் சேர் போனவாரம் முழுக்க கிளாசுக்கு வரல.”

அவருக்கு பதிலா யார் வந்தது?

யாருமே வரல மிஸ்!

என்னது??? ஏன் என்கிட்டே இவ்வளவு நாளும் சொல்லலை. அந்த பாடநேரம் என்ன செய்தீங்க? டென்ஷனாகி விட்டாள் ஆர்ணவி

நாங்கள் க்ரவுண்ட் போய்ட்டோம் மிஸ்

உங்க வேலையை மட்டும் கரக்டா பண்ணுங்கடா!!! ப்ரின்சி உங்களை பிடிச்சு விசாரிச்சிருந்தா கிளாஸ் டீச்சர் என் தலை உருண்டிருக்கும்! இனிமே யார் வரலைன்னாலும் எனக்கு இன்போர்ம் பண்ணணும். புரிஞ்சதா?

ஓகே மிஸ்!

அவள் யோசனையாக ரெக்கார்ட் புக்கை மூடி வைக்க “அனு மிஸ்” என்ற ரமணனின் குரல் மெல்லியதாக கேட்டது.

என்னடா

இல்ல மிஸ்..நீங்களே எங்களுக்கு மாத்ஸ் கிளாஸ் எடுங்களேன்

அவள் இதை எதிர்பார்க்கவில்லை..

நான் எப்படி பசங்களா? அதுவும் நான் english க்குத்தான் அப்ளை பண்ணி இங்கே வந்தேன்!

“ப்ளீஸ் மிஸ். எங்களுக்கு அர்ஜூனா சார் நல்லா மாத்ஸ் எடுத்தார். அப்புறம் வேற யாருமே ஒழுங்கா சொல்லித்தர்றதும் இல்ல..வர்றதும் இல்ல. மாத்ஸ் பாஸ் பண்ணலைன்னா பத்தாம் வகுப்பு போக முடியாதாம்.” அவனின் குரலில் வெளிப்படையான கலக்கம்.

அட இவ்வளவு தூரம் யோசிக்கிறார்களே என்று அவள் ஆச்சர்யமும் சின்ன பரிதாபமுமாக பார்க்க

மிஸ்..நீங்க கூட மாத்ஸ் தானே டிகிரி முடிச்சீங்க..நீங்க சொன்னா கேப்பாங்க..ப்ளீஸ் மிஸ் என்றது மீண்டும் சுபாங்கனின் கரகர குரல்..

ஆமாம்.நீ english க்கு என்னை ஏமாத்தற போல மாத்ஸ் கிளாசுக்கும் ஏமாத்த பார்க்கிறியா? நீ மட்டும் பேசக்கூடாது!

ஹி ஹி

“நீங்க சொன்னாங்க கேப்பாங்க மிஸ்” மீண்டும் இன்னொருவன் ஆரம்பித்தான்..

அனு மிஸ் …. அனுமிஸ்

தொடர்ந்து கோரஸ்கள் வரத்தொடங்க வாய்விட்டு சிரித்தவள் “நிறுத்துங்கடா.நான் மாத்ஸ் நல்லா சொல்லி தருவேன் என்று உங்களுக்கு எப்படி தோணுது?” என்று கேட்டாள்

மொக்கை இங்க்லிஷையே சூப்பரா சொல்லித்தர்ரீங்களே மிஸ்..சுபாங்கனின் குரல் திரும்பவும் கேட்க பொய்க்கோபமாய் அவனை முறைத்தாள் அவள்

என் சப்ஜெக்ட் மொக்கையா உனக்கு? போய் கிளாசுக்கு பின்னாடி நில்லு. பாடநேரம் முடியற வரை உக்காரக்கூடாது! அவள் மிரட்ட முகம் எல்லாம் சிரிப்பை பூசிக்கொண்டு எழுந்து போனான் அந்த சுபாங்கன்

சரி..நான் பேசிப்பார்க்கிறேன். நான் ரிலாக்சா டீச்சிங்கை என்ஜாய் பண்ணனும்னு தான் இங்க்லீஷை எடுத்தேன். இப்போ உங்களுக்கு மட்டும் மாத்ஸ் எடுக்கறேன்னு ப்ரின்சி கிட்ட கேட்டுப்பார்க்கிறேன். அவங்க வேணாம்னு சொன்னா என்னால ஒண்ணும் பண்ண முடியாது சரியா?

பரவால்ல மிஸ். நீங்க பேசுங்க!

பெல் சத்தமாக ஒலிக்க வேக வேகமாய் அவளின் அருகில் ஓடி வந்த இருவரை பார்த்து ஆரா உண்மையிலேயே தலையில் கை வைத்துக்கொண்டாள்

நீங்க பேசறது பண்றதெல்லாம் பார்த்தா 9th படிக்கற பசங்க போலவா இருக்கு. A கிளாஸ் பசங்க எல்லாம் என்ன ஸ்மார்ட்டா இருக்காங்க. நீங்க ஏண்டா இப்படி குழந்தை தனமா இருக்கீங்க?

அவர்களிடம் இருந்து பதில் இல்லை. வழக்கமான வெகுளிச்சிரிப்புடன் அவள் கொண்டுவந்த புத்தகக்கட்டை ஒருவன் தூக்கிக்கொள்ள ரெகார்ட் புக்கை இன்னொருவன் எடுத்துக்கொண்டான்

இது அவள் வந்த நாளில் இருந்து நடப்பதுதான். தினம் ஒருவராய் அடம்பிடித்து அவளின் புத்தகங்களை சுமந்து கொண்டு ஸ்டாப் ரூமுக்கு வந்து விட்டுவிட்டு போவார்கள். அவளுக்கு மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்ற பயத்தில் தயக்கமாக இருந்தாலும் அவர்கள் கேட்கவே மாட்டார்கள்.

அன்றைக்கும் அருகே நடந்து வந்தவர்களிடம் பேசியபடி அவர்கள் ஸ்டாப் ரூமுக்கு வர அவளுடைய போதாத காலம் அங்கே அர்ஜூனா அமர்ந்து கொண்டிருந்தார்

இன்றைக்கு கிளாசில் வேறு வந்து உளவு பார்த்துவிட்டு போனாரே இந்த மனிதர்! இன்றைக்கு அவளுக்கு என்ன இருக்கிறதோ தெரியவில்லையே..

ஆராவுடைய போதாத காலம் அவளுடைய கப்போர்ட் அர்ஜுனாவுடையதற்கு பக்கத்தில் தான் இருக்கும். ஆகவே இருவரும் அநேகமாக கப்போர்டுக்கு  அருகில் இருக்கும் சேரிலேயே அமர்ந்து கொள்வதால் அநேகமான தருணங்களில் ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்கும் இடைவெளியிலேயே அமர்ந்திருப்பார்கள்.

அவளுடைய மாணவர்கள்  புத்தகங்களை அவளுடைய இடத்தில் அழகாக வைக்க கண்ணில் சிரிப்புடன் அவர்களையே சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அவர்!

இந்த மனிதரில் இது ஒன்று இருக்கிறது! யாரையாவது வேடிக்கை பார்ப்பதாயின் அவர்களுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. நேரடியாக அப்படியே பார்த்துக்கொண்டிருப்பார்! பெண்கள் இவரை பார்த்ததுமே பயப்படுவதற்கும் இந்த பார்வை பெரிய காரணம்!

அவள் நிமிர்ந்தே பாராமல் “உங்களுக்கு அடுத்த பாடம் என்ன? சீக்கிரம் கிளம்புங்கள்” என்று கூட வந்தவர்களை விரட்ட முயன்றாள். ஆனால் அவர்கள் அவளை விட்டு விட்டு அவரை பார்த்து புன்னகைக்க ஆரம்பித்து விட்டிருந்தனர்

“என்னடா சேவகமெல்லாம் பலமா இருக்கு! நானும் தானே மாய்ந்து மாய்ந்து உங்களுக்கு கற்பித்தேன். எனக்கு ஒருநாளாவது இப்படி செய்திருப்பீர்களா?” அவர் விளையாட்டாக முறுக்கிக்கொள்ள இங்கே ஆராவுக்கு முகம் சிவந்து விட்டது.

ஹி ஹி என்று சிரித்தபடி அவர்கள் சிட்டாக பறந்து விட எழுந்து தன்னுடைய கப்போர்டை நோக்கி நடந்தவள் மெல்ல அவரருகில் குனிந்து “எல்லாத்துக்கும் ஒரு முக ராசி வேணும் சார்” என்று சிரிப்புடன் சீண்டி விட்டு கடந்தாள்

அர்ஜூனா என்றதுமே சிங்கம் புலியென பொங்கிக்கொண்டிருந்தவள் கொஞ்சம் நிதானப்பட்டது இந்த 9D வகுப்பிற்கு கற்பிக்க போனபிறகு தான்.

முதலில் அவள் அர்ஜூனா வேண்டுமென்றே இந்த வகுப்பை பொறுப்பெடுக்க பிடிக்காமல் தன் தலையில் கட்டிவிட்டதாக தான் நினைத்தாள். அவரது பௌதிகவியல் தியரங்களை புரிந்து கொள்ளும் மாணவர்களல்லவே இவர்கள்! ஆகவே இவர்களோடு அவரால் ஓட்ட முடியாது போவது சகஜம் என்றே அவள் மனம் முடிவு செய்தது. ஆனால் மற்றைய மாணவர்களை விட god father ஆக இவர்கள் அவரை கொண்டாடுவது தெரிந்ததும் அவளாலும் அவரை வெறுக்க முடியவில்லை.

ஒரே பிரச்சனை என்னவென்றால் வகுப்பாசிரியராக அவர் இவர்களோடு அதிக நேரம் செலவழித்தனால் அவருடைய சர்ச்சைக்குரிய சித்தாத்தங்களை மாணவர்களும் மனதில் பதித்து வைத்திருந்து தவறான சந்தர்ப்பங்களில் அவரை கோட் செய்து மறுக்கவும் முடியாமல் அவற்றை ஏற்கவும் முடியாமல் அவளை அடிக்கடி திணற வைத்தது தான்.

அவர்களை சமாளிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாய் யோசித்து யோசித்து அவள் மனதும் அவரை ஒரு போட்டியாளராக நினைத்துக்கொண்டு விட்டது போலும். இருவரில் ஒருவர் மற்றவரை வம்புக்கிழுக்காமல் நாட்கள் கழிவதாயில்லை.

ஒருநாளைக்கு இந்த மனுஷனால பெரிய பிரச்சனையை வாங்காம நீ போகப்போறதில்ல ஆரா! மனப்பட்சி சொல்வதை அவளது தைரியம் காது கொடுத்துக்கேட்பதில்லை!

கப்போர்டில் புத்தகங்களை வைத்து விட்டு அடுத்த பாடவேளைக்கான பைலுடன் அவள் திரும்பி வரும் போது அவளுக்கான பதில் தயாராய் இருந்தது!

“இந்த முகராசியைத்தான்  கண்ணுக்கு விருந்து என்று நானும் சொன்ன ஞாபகம்! அன்றைக்கு பேயாட்டம் ஆடினாயே! இப்போது நீயே அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்!!!”

வலுக்கட்டாயமாக போய் மொக்கை வாங்கி விட்டோமா? அவள் பதில் பேசாமல் சிரித்து வைத்தாள்

“சும்மா பெண் என்று யாராவது சொல்லிவிட்டாலே வாலண்டியராக போய் ஒரு பொங்கலை வைத்து விட்டு வந்து விடுவது! இதோ பார் பேபி ஆண்களுக்கு எப்போதுமே மலர் டீச்சர்களை தான் பிடிக்கும் இதெல்லாம் படைத்தவன் செய்த உயிரியல் விளையாட்டு..உங்கள் பொங்கல்கள் எதையும் மாற்றி விடாது!!”

அவளது முகத்தை பார்த்தே அதற்கு கட்சி கட்டிக்கொண்டு வாதம் செய்ய அவள் தயாராகிறாள் என்று புரிந்ததும் சட்டென்று கையை தூக்கி “ஹேய் மை டியர் நியூசன்ஸ். எனக்கு நிறைய  வேலை இருக்கிறது. உன்னோடு பட்டிமன்றம் வைக்க நேரமில்லை என்னை விட்டுவிடு என்று விட்டு பேனாவை மீண்டும் பேப்பரில் ஓடவிட ஆரம்பித்துவிட்டார்.

கோபத்தில் சிவந்து போய் சட்டென எழுந்து அடுத்த பாடப்புத்தகங்களை வாரிக்கொண்டு லைப்ரறியை நோக்கி நடந்தவள் பிரச்னையை அப்படியே விட்டு விட்டு போக மனதில்லாமல் கதவருகில் நின்று திரும்பி வேண்டுமென்றே “அர்ஜூனா சார்” என்று அழைத்தாள்

இன்னும் என்ன என்ற எரிச்சல் முகத்தோடு அவளை ஏறிட்டவரை அவரின் பாணியிலேயே கண்ணை நோக்கினாள் அவள்

சார் சும்மா சும்மா பொண்ணுன்னு சொன்னதுமே  கழுவி கழுவி ஊத்தரீங்களே, யாழ் பேபி, உங்க பாமிலி தவிர வேறு ஒரு பொண்ணையாவது மரியாதையா மனசுல நினைப்பீங்களா?

இது என்ன வீண்வம்பு? என்ற ரீதியில் அவர் முறைக்க

“ஜஸ்ட் ஒரு கியூரியோசிட்டி சார். வேறேதுமில்லை” என்று அவரின் சிரிப்பை இமிடேட் செய்தாள் அவள். அப்படி யாருமே இருக்க முடியாது என்ற சவால் தான் அவள் தொனியில் இருந்தது.

இப்போது அவரின் அதே சாத்தானிச சிரிப்பு உதட்டில் தஞ்சம் பெற அவளை ஒருகணம் ஊன்றிப்பார்த்தவர் “பீச்சில் சுண்டல் விற்கும் ரங்கம்மா என் மரியாதைக்குரிய பெண்மணி போதுமா?” என்றுவிட்டு மறுபடி  பேப்பருக்குள் புகுந்து விட்டார்.

ச்சா இவர் ஜெனுவினாக பதில் சொல்வார் என்று கேள்வி கேட்டோம் பார். நம்மை சொல்ல வேண்டும்.

தன்னையே திட்டிக்கொண்டு லைபிரரியை நோக்கி நடந்தாள் அவள்.

ஆழி-அர்ஜூனா 5

f42cc29119d311a167324f82b8fc09d6

பவித்ரன் கட்டிலில் அலுங்காமல் நலுங்காமல் செத்துப்போயிருந்தான். அவனது நெஞ்சில் சமீபத்தில் குழந்தையோடு இறந்து போயிருந்த அவன் மனைவி ரியா போட்டிருந்த பான்சி நகைகள், ஸ்டிக்கர் பொட்டுப்பாக்கட், ‘மாட்டே’ லிப்ஸ்டிக் இத்யாதிகளை கொண்ட பெட்டியை அணைத்தால் போல பிடித்துக்கொண்டிருந்தான். பெட்டி திறந்திருந்தது. அதில் ஒரே ஒரு ஜிமிக்கி மட்டும் விலகி அவன் கையில் கிடந்தது.

ரொமான்டிக்காக ஒரு கொலை!!!

ஜிமிக்கி!!!

ஆம் அந்த ஜிமிக்கியில் இருந்த ஹைட்ரஜன் சயனைட்  பவித்ரனின் கையை சேர்ந்து தோல் வழியாக அவனது உயிரைக்குடித்திருந்தது.

நல்ல கற்பனைதான் ! ஆனால் அந்தப்பெட்டியில் மற்றைய பொருட்களின் மீது சேர்க்கப்படாத சயனைட் அந்த ஜிமிக்கியில் மட்டும் ஏன் விசேடமாக பூசப்பட்டிருந்தது? பவித்ரன் அதைத்தான் எடுப்பான் என்று கொலையாளி எப்படி ஊகித்தான்?

அர்ஜூனா தானே எழுத்தாளனாகவும் தானே வாசகராகவும் நின்று மனதில் கதையை விவாதித்தபடி வேகமாய் விரல்களால் கீபோர்டில் தாளமிட்டுக்கொண்டிருந்தார். இருள் விலகி விடியலாக பூமியின் மீது படரத்தொடங்கி ஒரு நாளிகை கடந்திருந்தது. அரைமணிநேரமாக அவ்வப்போது உறுமி உறுமி ஓய்ந்து கொண்டிருந்த வாகனச்சத்தம் அவர் காதுகளில் விழாமலில்லை. அது என்னவாக இருக்கும் என்பது தான் தெரிந்த விடயம் ஆயிற்றே!

செய்யும் செயலால் வரப்போகும் விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாதவர்களெல்லாம் வீர சாகசம் புரிய ஏன் புறப்பட வேண்டும்?

செய்வதை எல்லாம் செய்து  விட்டு புகைப்படங்கள் வெளியானதும்  அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சராசரி பெண்வர்க்கத்தின் மீது அவர் என்றுமே இரக்கம் கொண்டதில்லை.

புறச்சமூக பார்வை மீது இத்தனை அச்சம் கொண்டவர்கள் எதற்காக அச்செயலை ஆரம்பிக்க வேண்டும்? அப்படியே ஆரம்பித்தாலும் மாட்டிக்கொள்ளாமல் காரியமாற்ற வேண்டாமா?

யோசிக்காமல் செயற்படுவதெல்லாம் எதிராளி இரக்கம் காட்டுவான் என்ற நம்பிக்கையில்  தானே?

அவர்களுக்காக தன்னுடைய பொன்னான மணித்துளிகளின் ஒற்றை நொடியைக்கூட அவர் வீணாக்க விரும்பவில்லை

கர் கர் கர் ஹாலில் இருந்த மணிக்கூட்டுக்குள் இருந்த புலி ஆறுமுறை உறுமி ஓய்ந்தது. செய்து கொண்டிருந்ததை அப்படியே நிறுத்தி விட்டு அவர் எழ அதற்குள் இடப்புற அறையில் இருந்து “அஜூ” என்றபடி வெளியில் வந்தாள் யாழினி. அதற்குள் பல்துலக்கி முகம் கழுவியிருந்தாள் என்பதற்கு ஆதாரமாக அவளது ப்ரூஸ்லீ நைட் ஷர்ட் மேற்புறமாய் நனைந்து போயிருந்தது.

“குட் மோர்னிங் யாழ்! நீ எழும்ப முன் காபி போட்டு விடலாம் என்று நினைத்தேன். இன்றைக்கும் நீ என்னை முந்தி விட்டாய்!!”! அவரின் முகத்தில் குறும்புச்சிரிப்பு பூத்தது.

“நீங்கள் தானே ஜெயிக்க பிறந்தவள் என்று என்னை சொல்வீங்க அஜூ!” அவரின் பின்னே கிச்சனை நோக்கி யாழும் கூட நடந்தாள்

“உங்களோட பவித்ரனுக்கு என்ன ஆச்சு?”

செத்து போய்ட்டான்

ஐயோ ஏன்?

அதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீ இன்னும் வளரல..

“அப்போ எனக்கு எதுக்கு கதை சொன்னீங்க?  பினிஷிங் கேக்கறதுக்கு மட்டும் நான் வளரணுமா?” நடந்து கொண்டிருந்தவரின் உதட்டை பார்ப்பதற்காக அவருக்கு முன்னே வந்து பின்புறம் திரும்பி ரிவர்சில் நடந்த படி அவள் வாக்குவாதம் செய்த அழகை ரசித்தபடி வந்தவர் சட்டென குனிந்து அவளைத்தூக்கி சமையலறை மேடையில் அமர வைத்து விட்டு காபிக்கான பாலை பானில் விட்டுக்காய்ச்ச ஆரம்பித்தார்

“கதைல வந்த அந்த யாழ்ப்பாப்பாக்கு என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லுங்க!!!” அவள் விடுவதாக இல்லை!

‘உதடுகளைப்பார்த்து பேச்சை கிட்டத்தட்ட புரிந்து கொள்ளப்பழகி விட்டாலும் தானாக தன் குரலைக்கேட்டு சத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையில்லாததால் மற்றவர்களை விட கொஞ்சம் உரத்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறாள்.’ அவள் பேசிய விடயத்தை மறந்து அவரின் மனம் வேறு ஆராய்ச்சியில் இறங்கி விட்டிருந்தது.

அஜூ!!!!

என்ன கேட்டே!!! யாழின் கோப்பையில் மட்டும் சர்க்கரை சேர்த்து நுரைக்க ஆற்றியவர் அவளிடம் நீட்டினர்.

அந்த யாழ்ப்பாப்பாக்கு என்னாச்சு?

அது அவங்கப்பா கூட போய்டுச்சு!!! சுவாதீனமாக சொல்லியபடி திரும்பி தன்னுடைய கப்பை எடுத்தவருக்கு யாழினியிடம் இருந்து பதில் வராததில் கேள்வியாய் திரும்பினார்.

அவள் கவனம் யன்னலுக்கு வெளியே இருந்தது!

அஜூ!!! அவங்க ரெண்டு பேரும் கிளம்பறாங்க!!!! அங்கே பாருங்களேன்.. பாக் எல்லாம் எடுத்துட்டு போறாங்க!!!  யாழினி யன்னல் வழியே பார்த்து கூவினாள்

அவள் தன்புறம் திரும்பும் வரை பேசாமல்  காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தவர் அவள் திரும்பி அவருடைய முகத்தை பார்த்ததும் “பார்த்தேன்” என்று சொல்லி விட்டு தன் வேலையை தொடர்ந்தார்

ஏன் போறாங்க?

அவங்களுக்கு நம்மையெல்லாம் பேஸ் பண்ண முடியலையாம்

“ஏன்?” என்று தனக்குத்தானே கேட்டபடி சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவள் பிறகு சொன்னாள்.

ஸ்டூடண்ட்ஸ் தப்பு பண்ணா எல்லார் முன்னாடியும் தானே டீச்சர் பனிஷ்மென்ட் கொடுக்கறாங்க? அதுக்காக ஸ்டூடண்ட்ஸ் ஸ்கூலை விட்டா போறாங்க?

என்னமாய் யோசிக்கிறாள் இவள்! என்று ஒருகணம் மலைத்தாலும் அந்தப்பேச்சில் நேரத்தை வேஸ்ட் செய்ய பொறுமை இல்லாததால் “பிறர் முன்னே நல்லவர்களாக நடிக்கத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்” என்று தோளைக்குலுக்கியபடி அவளை இறக்கி கீழே விட்டு ஸ்கூலுக்கு தயாராகும் படி சொல்லி விட்டு தானும் தயாராக சென்றார் அவர்.

அரைமணி நேரத்தின் பின், அவசரமாய் குளித்து விட்டு வந்து யாழினிக்கும் தனக்கும் பான் கேக் தயாரித்து மேஜையில் எடுத்து வைத்து விட்டு அவளுக்காய் காத்திருந்தார் அர்ஜூனா

பரத் யாழினியை அர்ஜூனாவிடம் விட்டு சென்று இத்தோடு இரண்டு முழு நாட்களாகிறது. தன் ப்ரைவசி கெட்டுவிடுமோ என்று உள்ளூரப்பயந்தவருக்கு அவளின் அருகாமை ஒரு நிறைவைக்கொடுத்தது அவரே எதிர்பாராதது. அவளுக்கு வேளாவேளைக்கு காபி, சாப்பாடு, ஹோம் வர்க் என்று இந்த புதிய பொறுப்பினை அவர் மனம் உற்சாகமாய் ஏற்றுக்கொண்டது. அத்தோடு யாழினியும் அவரது நேரசூசிக்கேட்ப தன்னுடையதை சரியாக பொருத்திக்கொண்டதும் பேருதவியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

யாழினி வந்ததும் சாப்பிட்டு முடித்து இருவருமாய் படிகளில் இறங்கி ஸ்கூலுக்கு போவதற்காக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். யாழினியின் பஸ் அங்கே ஒரு கால்மணிநேரமாவது நின்று கொண்டிருக்கும். ஆகவே அவசரப்பட வேண்டியதில்லை

அவர்களுக்கு முன்னே சற்று தூரத்தில் நடந்து கொண்டிருந்தவள் பார்வையில் பட்டதும்  அவரின் உதட்டில் சிரிப்பு கோடாய் நெளிந்தது.

ஆர்ணவி!

இவளைப்பார்க்கும் போதெல்லாம் ஏனோ பறவைக்கூட்டத்தில் இருந்து தொலைந்து தனியாகிவிட்ட பறவையொன்று ஆக்ரோஷமாய் அங்குமிங்கும் பரபரத்து தேடுமே அந்த ஞாபகம் தான் வரும் அவருக்கு~

அதற்குள் யாழினி ஆரா என்று உரக்க அழைத்து கையாட்டி அவளை நிறுத்தி விட்டிருந்தாள். அவளுக்கு மட்டும் கையசைத்து விட்டு கவனமாய் தன்னை தவிர்த்தபடி அவர்கள் நெருங்குவதற்காக காத்திருந்தவளை வேண்டுமென்றே ஏறிட்டுபார்த்தார் அவர்!

என்ன உன் தோழிகள் எல்லாம் போய்விட்டார்கள் போலிருக்கிறதே!

சட்டென்று ஒரு கோபம் முகத்தில் ஒட்டிக்கொள்ள அவரை அவள் முறைத்தது சிரிப்பை வரவழைத்தாலும் அவர் காண்பித்துக்கொள்ளவில்லை!

சரி சார். உங்கள் வாதத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப்படி வீட்டை காலி பண்ணி போகும் அளவுக்கு அவர்கள் மனம் வருந்திப்போகிறார்கள் என்று உங்களுக்கு கொஞ்சம் கூட பீல் ஆகவில்லையா சார்? அவள் குரலில் ஆயாசம்

இல்லையே!!!

என்ன மனுஷன் சார் நீங்க!!! என்று கோபமாக சொல்லிவிட்டு பாதையை அவர்களோடு சேர்ந்து கடந்தாள் ஆர்ணவி.

யாழினி வழக்கம் போல முன்னே செல்ல அவரருகில் வந்த ஆர்ணவியின் பக்கம் லேசாய் குனிந்தார் அர்ஜூனா.

“It is better to live your own destiny imperfectly than to live an imitation of somebody else’s life with perfection! “

“என்ன பார்க்கற? நீ காப்பி ரைட்ஸ் பத்தி நீட்டி முழக்க முன்னே நானே சொல்லிடறேன். இதை நான் சொல்லல.. பகவத் கீதைல பரமாத்மா சொல்லிருக்கார். முடிஞ்சா யோசிச்சுப்பாரு.. அப்படியும் உனக்கு புரியறது சந்தேகம்தான்” என்று சிரித்தவர் யாழினியின் பஸ்ஸில் அவள் தொற்றிக்கொண்டு கையசைக்க பதிலுக்கு கையசைத்து விட்டு பின்னால் வந்த பஸ்ஸில் தொற்றிக்கொண்டார்.

பின்னாலேயே ஆர்ணவியும் தொடர்ந்து வந்ததை காதருகில் கேட்ட அவளின் குரல் தான் உணர்த்தியது.

“சார்.. நீங்க சொன்னதை போல எனக்கு பகவத் கீதை மட்டுமில்ல. எனக்கு வேறெந்த புத்தகத்தில் வாழ்க்கையை பற்றி சொன்னாலும் புரியாது..படிக்கவும் பிடிக்காது. எனக்கு உணர்வுகள் மட்டும் தான் புரியும் சார். அவை எப்போதுமே தியரிகளில் அடக்கி விட முடியாதவை!”

ஓஹோ..

“சயன்டிஸ்ட் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. சமூக விஞஞான கொள்கைகளை பரிசோதிக்கும் பரிசோதனைகளில் எலிகளைப்போல மனிதனைபயன்படுத்தி  எப்போதுமே சோதிப்பதில்லை சார். ஏனெனில் மனிதன் தனிப்பட சுயமாக சிந்திப்பவன்! எல்லா மனிதனும் ஒரு தியரிக்குள் அடங்கிப்போகவும் மாட்டான் .ஆகே உங்கள் வறட்டு கொள்கைகளையும் புத்தகங்களையும் விட்டு விட்டு கொஞ்சம் வெளியே வந்து பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!”

அவளுடைய முகத்தின் கோபச்சிவப்பை பார்க்க வேடிக்கையாக இருந்தது அவருக்கு

உன் அறிவுரைக்கு நன்றி.. இப்போது வழியை விட்டாயானால் நான் அந்த சீட்டில் உட்கார்ந்து விடுவேன். ஹீரோ ஹீரோயினை வளைத்து பிடித்திருப்பது போலவே என்னை பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறாய்! அவர் சிரித்தபடி சொல்ல பட்டென கைகளை எடுத்துக்கொண்டு முகம் கன்ற முன்னே நகர்ந்தாள் அவள்.

“நாப்பது வயசாச்சு அவரின் நினைப்பைப்பார்.” அடிக்குரலில் அவள் வேண்டுமென்றே முணுமுணுத்தது அவரின் காதில் நன்றாகவே விழுந்தது

புன்னகையுடன் அவளை ஏறிட்டவர் நாற்பது இல்லை குழந்தாய்! நாற்பத்து இரண்டு!!!  என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

ச்சே….இவ்வளவு நேரம்  ரியாவின் ஜிமிக்கிக்கும் பவித்ரன் கொலைக்கும் அற்புதமாக போட்டிருக்க வேண்டிய ஸ்கெட்ச் இந்த பெண்ணோடு வீண் வம்பு வளர்த்ததில் வீணாகப்போயிற்று!!! அவருக்குள் தன் மேலேயே எரிச்சல் மண்டியது

“ஐடியா  ப்ளோவில் வர வேண்டும். இன்னும் ஐந்து நிமிடத்தில் இறங்கும் இடம் வந்துவிடும் ஆகவே சீக்கிரம் வா என்றால் ஐடியா வந்து விடுமா? ச்சே!!!” அன்று இறங்கும் வரை அவருக்கு எந்த ஐடியாவுமே கிடைக்கவில்லை. எரிச்சலுடனே இறங்கிப்போனார் அவர்.

அன்றைய நாள் இடைவேளை வரை மூச்சு விட நேரமின்றி அவரது நேரசூசி நிரம்பியிருந்தது. இடைவேளையில் காண்டீன் சான் விச்சை மென்றபடி பவித்ரன் கொலைக்கான ஸ்கெட்சில் பாதித்தூரம் முன்னேறியிருந்தவர் “சார்” என்ற மெல்லிய குரலில் கவனம் கலைந்தார்,

“பிரதாப் என்ன விஷயம்”

“சார்.. ஜனா டீச்சர் இன்னும் ஸ்கூலுக்கு வர ஆரம்பிக்கவில்லை சார். நாளை இன்ஸ்பெக்ஷன் வருகிறார்களாம். இதை செக் பண்ணி ஒரு சைன் போட்டுத்தருகிறீர்களா?” என்று கோரிக்கை வைத்தபடி ஒரு ரெஜிஸ்டரை நீட்டினான் அவன்

கொடு என்றபடி அதை வாங்கி கண்களால் மேய்ந்து திருப்திப்பட்டதும் கையொப்பமிட்டு அவனை அனுப்பி வைத்தார் அவர்,

இந்தப்பாடசாலையில் அவருக்கு பிடிக்காத விடயமே மாணவர்களின் ராங்கின் படி அடுத்த வருடம் வகுப்பை பிரித்து விடுவது தான். ஏ வகுப்பு எப்போதுமே முதல் தரமாக இருக்கும். டி வகுப்பை சொல்லி வேலையிருக்காது! பல சமயங்களில் அம்மாதிரி வகுப்புக்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் ஏனோ தானோ என்று தான் நடந்து கொள்வார்கள்.

இந்த முறையை மாற்ற வேண்டும் என்று அவரும் தான் வந்த நாளில் இருந்து போராடுகிறார். ஸ்டாப் மீட்டிங்கில் இந்த பேச்சு எழுந்ததுமே அர்ஜூனா சண்டை போட்டு வெளிநடப்பு செய்து விடுவது தொடர்கதையானதே தவிர உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களே இதுதான் தங்களுக்கு கற்பிக்க வசதியாக இருக்கிறதென்று அவர் சொல்வதை எதிர்ப்பது அர்ஜூனாவுக்கு  கோபத்தை வரவழைக்கும்.

உங்கள் வசதி முக்கியமா? மாணவர்களின் கல்வியும் ஆரோக்கியமான படிக்கும் சூழலும் முக்கியமா?

அந்த கேள்விக்கான பதிலைத்தேட அங்கே எவருக்குமே நேரமில்லை!

அந்த பாடசாலையில் அவருக்கு கிடைத்த பெரிய வகுப்புக்களோடு தனியே ஒட்டிக்கொண்ட பொறுப்பு இந்த ஒன்பதாம் வகுப்பு டி கிளாஸ் பொறுப்பாசிரியர் பதவி. அவர்களுடனான நேரம் அர்ஜூனாவுக்கு தனிபட்ட ரீதியில் பிடித்தமானதொன்று, ஆனால் இப்போது பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சையை முன்னிட்டு அவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால் இந்த வகுப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவருக்குப்பின் ஏனோ தானோவென்று நீண்ட நால் லீவில் நின்று கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரை பெயருக்கு பொறுப்பாசிரியராக போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாணவர்களோ வகுப்பாசிரியர் இல்லாமல் எல்லாவற்றுக்கும் முன்னாள் வகுப்பாசிரியரான அர்ஜூனாவின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

“வரும்  ஸ்டாப் மீட்டிங்கில் இதற்கு ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது! என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் எல்லோரும்” அவரின் மனம் கறுவிக்கொண்டது.

ஆனால் அன்று ப்ரீயான இறுதிப்பாடவேளைக்கு ஸ்டாப் ரூமை நோக்கி வந்தவர் தற்செயலாக கேட்க நேர்ந்த வாதமொன்று அந்த பிரச்சனைக்கு  வெகு இலகுவாகவே தீர்வு ஒன்றை அவருக்கு காட்டி விட்டிருந்தது

நான் ஒரு பௌதிகவியல் விஞ்ஞானி பெண்ணே.. பரிசோதனைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!

 

Announcement :D

மக்களே இன்று அப்டேட் உண்டு. ஆனால் லேட் ஆகும். நீங்கள் காத்திருக்காமல் நாளை வந்து படிக்கலாம். போன வாரம் போல இன்றிலிருந்து சனிக்கிழமை வரை அப்டேட் இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்

ஆழி- அர்ஜுனா

AA cover

இது தான் என்னுடைய அடுத்த கதை.. இன்றைக்கு எழுத  ஆரம்பித்து விட்டேன் மக்களே.. இது உங்களுக்கு எவ்வளவு தூரம் பிடிக்கும் என்றொரு பயம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது.awww

இப்போதைக்கு அழைக்கிறேன் வா எழுத நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.. ஆகவே இன்னொரு லைட்டான கதையை கையில் எடுத்திருக்கிறேன்.

இதுவும் முழுக்க முழுக்க காதலை அடிநாதமாக கொண்ட ஜாலி ஆன கதைதான். ஆனால் யாருக்கும் யாருக்கும் இடையில் காதல் வருகிறது என்பது தான் surprise 😀  நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்தது எனக்கு ஆன்லைனில் ஒவ்வொரு அத்தியாயமாக போட ஆசைதான். ஆனால் இப்போதைக்கு என்னால் ஒழுங்கான இடைவெளிகளில் கதை போஸ்ட் செய்ய முடியுமா என்று சந்தேகமாக இருப்பதால் உங்களை frustrate ஆக வைக்க வேண்டாம் என்று நானே எழுதி முடித்து விட்டு கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

நன்றி வணக்கம் 😀

My new release

17499178_603676299831087_2215954298717463660_n

மக்களே.. போன வாரம் என்னுடைய “இதோ இதோ என் பல்லவி மூவர் நிலையம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. வழக்கம் போலவே உங்கள் ஆதரவை இதற்கும் தர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 😀

இந்த புத்தகம் ஒரு கடல் என்னோடு காதல் என்ற தலைப்பில் நான் எழுதிய நாவலே ஆகும். யாரும் கன்பியூஸ் ஆகவேண்டாம்.. 😀 லவ் யூ மக்களே!