ஆழி-அர்ஜூனா 6

aaliaa-1478678800

சுனந்தா ப்ளாக்கின் இரண்டாவது தளம். ஹாரிடோர் முடியும் இடத்தில் நாவல் மரக்கிளை ஏறக்குறைய உள்ளே நுழைந்திருந்தது. அந்த எல்லையில் தான் அமைந்திருந்தது ஒன்பதாம் வகுப்பு D! கதவுக்கு வெளியே இருந்த நேர சூசியின் காகித முள் ஆங்கிலத்துக்கு நேராக திருப்பிவிடப்பட்டிருந்தது.

C வகுப்பைத்தாண்டிக்கொண்டு நேராக D வரை சென்ற அர்ஜூனா சுவாரஸ்யமாக அந்த வகுப்பை பார்த்துக்கொண்டே அந்த தளத்தின் முடிவுவரை சென்று திரும்பி வர அவரை காணவே காணதவள் போல வகுப்பறையின் முன்னே நின்ற இரண்டு மாணவர்களையும் பிடிவாதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்ணவி. ஆனால் எப்படியோ அவரது முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாத்தானிச சிரிப்பு அவள் மனக்கண்ணில் தெரிந்து அவளுக்கு ஏகக்கடுப்பை உண்டு பண்ணியது.

மீண்டும் முன்னே நின்றவர்களில் கண் பதிந்தது

நிரோஜனும் சுபாங்கனும் அங்கே ஆங்கில உரையாடல் ஒன்றை முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

“I go shop and buy milk to you!”

“I am not  like milk, I like ice cream!!!”

“வேண்டாம்னா போயிபை I give only milk”

“ஐ கொன்னுபை யூ டா”

“ஆங்!!! மை ஹான்ட் நாட் பூப்பரிச்சுபை!!!” சண்டையிட்டபடியே கிட்டத்தட்ட ஒருவரையொருவர் நோக்கி முன்னேறி விட்டிருந்தனர் அக்குறும்பர்கள்.

“பூப்பறிச்சுபையா? ஹையோ இவங்களோட!!!!!!!!” தன் பொறுமையை தொலைத்தவளாக டஸ்டரை தூக்கி அவர்கள் மேல் வீசினாள் ஆர்ணவி.

“நீ திட்டினாலாவது அவர்கள் பயப்படுவார்கள், மொத்த வகுப்போடு சேர்ந்து நீயும்  சிரித்தால்?” மனச்சாட்சி அங்கலாய்த்தது

“மனுஷனாக பிறந்தவன் எவனாவது இதற்கு சிரிக்காமல் இருப்பானா?” மனச்சாட்சியை திருப்பிக்கேள்வி கேட்டாள் ஆரா.

இத்தனைக்கும் அவள்  கேட்டதெல்லாம் ஒரு வீட்டுக்கு விருந்தாளி வந்தால் அந்த வீட்டுக்காரனும் விருந்தாளியும் பரஸ்பரம் எப்படி உரையாடி விருந்துபசாரம் செய்வார்கள் என்று நான்கு லைன் பேசும் படி தான். ஆனால் நடந்த கூத்தில் மொத்த வகுப்பறையே ஈஈஈ மோடில் தான் அமர்ந்திருந்தது!

“டேய் நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? என் கிளாஸ்ல தங்க்லீஷ் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?”

“வாயைத்திறந்ததும்  வர்ட்ஸ் எல்லாம் மறந்து போச்சு மிஸ்..” சுபாங்கன் பவ்யம் போல விளக்கமளித்தான்

“பேசாதே நீ!!! உன் வீட்டுக்கு வர்றவனுக்கு வீட்ல ஒரு டீ போட்டு கொடுக்கமாட்டியா? தேவையில்லாம ஏன்டா கடைக்கு போய் மில்க் வாங்குற?” அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

“எங்க வீட்ல பிரிட்ஜ் இல்ல மிஸ்! தேவைப்படும் போது உடனே உடனே தான் வாங்குவோம்!!!” அவன் தன் வீட்டு நிலையை எடுத்து சொல்லி விளக்கினான்!

“என்னால முடியலடா. சும்மா கற்பனை தானே பண்ண சொன்னேன். மாங்கு மாங்குன்னு polite conversation எப்படி பண்றதுன்னு கற்றுக்கொடுத்தேன் நேற்று! இன்னிக்கு இப்படி சொதப்பறீங்க!”

“சாரி மிஸ். அவன் தான் என்னை உசுப்பேத்தினான்” நிரோஜன் விளக்கம் சொல்ல முயல அவனைக்கையமர்த்தி நிறுத்தினாள் ஆரா.

“எதுவுமே பேசத்தேவையில்லை. ரெண்டு பேரும் போய் கிளாசுக்கு பின்னால் நின்றபடி நீங்கள் பேசிய விஷயங்களையே சரியாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுவந்து அடுத்த பெல் அடிக்கும் முன் என்னிடம் காண்பிக்க வேண்டும்!!!” என்று கொஞ்சம் கடுமையாக சொன்னவள் “மற்றவர்களின் பக்கம் திரும்பினாள்

“என்னடா பண்ணபோறீங்க? தமிழ் தமிழ்னு நாம நல்லா தேனொழுக  பேசலாம் ஆனா உண்மையில் இங்க்லீஷ் தெரியாது என்றால் இந்தக்காலத்தில் ஒரு லெவலுக்கு மேலே முன்னேற முடியாது“ என்று ஆயாசமாய் சொன்னாள் அவள்

மற்றவர்களை தாண்டிக்கொண்டு பின்னே சென்றுகொண்டிருந்த இருவரில் சுபாங்கன் நின்று திரும்பினான்.

மிஸ்

“என்ன சுபா! டவுட் ஏதுமென்றால் வெயிட் பண்ணுங்க. இவங்களுக்கு ஒரு வேலை கொடுத்துட்டு உங்ககிட்ட வரேன்”

அதில்ல மிஸ்!!!

அதானே பார்த்தேன்!! சரி சார் என்ன சொல்ல வந்தீங்க?

இல்ல மிஸ்..அர்ஜூனா சார் எங்களுக்கு ஒருதடவை ஒண்ணு சொன்னார்.

என்னது?? அவளுக்குள் சட்டென்று படபடவென்றது. இந்தத்தடவை எதை சொல்லி வைத்திருக்கிறாரோ அந்த மனிதர் தெரியவில்லையே..

“ஆங்கிலம் ஒரு மொழி மட்டும் தான் அது ஒரு கல்வித்தகுதி இல்லைன்னு சொன்னார்!!!” சுபாங்கனின் முகத்தில் கள்ளப்புன்னகை!

கர்ர்ரர்ர்ர் பல்லைக்கடித்தாள் அவள்.

அவள் அதை தவறென்று சொல்ல முடியுமா? ஆனால் அவர் சொன்னதை கோட் பண்ணிக்கொண்டு ஆங்கிலமே வேண்டாம் என்று இந்த வால்கள் அடம்பிடித்தால் என்ன செய்வது என்று கொஞ்சம் அவர் யோசித்திருக்கலாம்!!!

“அது சரிதான். இங்க்லீஷ் தெரிய வில்லை என்ற ஒரே காரணத்துக்காக தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்காக அவர் அப்படி சொல்லியிருப்பார்! இப்போ நான் ஒரு உதாரணம் சொல்றேன். உனக்கு லண்டன் போற சான்ஸ் கிடைக்குது. அங்கே போக இங்க்லீஷ் எக்ஸாம் பாஸ் பண்ணணும். அந்த இடத்துல இந்த டயலாக்கை உன்னால சொல்ல முடியுமா?”

“இங்க்லீஷ் இல்லாம இருந்திடலாம் பசங்களா. ஆனால் நாம லைப்ல இப்போ இருக்கறதை விட மேல போகணும், வளரணும் என்றால் இங்க்லீஷ் தேவை! .உலகமே டிஜிட்டலைஸ் ஆகிட்டிருக்கு..இப்போ போய் இப்படி பேசிட்டு இருக்க கூடாது! இங்க்லீஷ் மட்டுமல்ல இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். புரிஞ்சதா?”

ஷப்பா மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள் ஆர்ணவி.

இன்றோடு அவள் இந்த வகுப்புக்கு பொறுப்பாசிரியராகி மூன்று வாரங்கள் முடிந்திருந்தது. முதன்முதலாக இந்த வகுப்பில் காலடி வைத்தபோது தன் வகுப்பை சாதிக்க வைத்துக் காட்டுவதாக வீர சபதம் எல்லாம் எடுத்துக்கொண்டு தான் உள்ளே நுழைந்தாள். ஆனால் அடுத்த வாரமே தெளிவாக புரிந்து போனது. இவர்களில் எண்ணி ஒரு பத்துப்பேரை தவிர மற்றவர்கள் பாஸ் செய்வதே பெரிய விடயம் என்று!

வாழ்க்கைக்கான கல்வியையும் சரியான வழிகாட்டலையும் கொடுத்து தாழ்வு மனப்பான்மையற்றவர்களாய், எதையும் முயற்சித்து பார்க்கக்கூடியவர்களாய் வெளியே அனுப்புவது தான் தான் அதிகப்பட்சம் செய்யக்கூடியது என்று அவளும் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தாள்

என்னதான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது தலையால் தண்ணீர் குடிப்பது போலிருந்தாலும் அவர்கள் மீது இந்த மூன்று வாரங்களுக்குள் அவளுக்குள் பெரும் நேசம் முளைவிட்டிருந்தது,

இத்தனை வகுப்புக்களுக்கு அவள் கற்பிக்க ஆரம்பித்திருக்கிறாள். இவர்களை போல வேறு யாரும் அனு மிஸ் என்று அவளை அழைத்ததில்லை!

அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டதில்லை

அவளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதில்லை

அவளை சிரிக்க வைத்ததில்லை

எல்லாவற்றுக்கும் மேலாக வெகுளித்தனமான நேசத்தை காண்பித்ததில்லை

பின் பதிலுக்கு அவர்கள் மேல் அவளுக்கு நேசம் முளைக்காமல் எப்படி இருக்கும்?

நிரோஜன், சுபாங்கன் இவருடைய வேலைகளையும் திருத்தியவள் அடுத்த நாளுக்கான பாடத்தை சொல்லி தயாராக வரும்படி எச்சரித்துவிட்டு தன்னுடைய பாடவேளை முடிய இன்னும் பத்தே நிமிடமே இருந்ததால் அந்த வகுப்பின் ரெக்கார்ட் புக்கை எடுத்து புரட்டினாள் ஆரா

“என்னடா உங்க மாத்ஸ் சேர் ஒண்ணுமே எழுதல. ரெண்டு மாசத்துக்கு முன்னே தான் கடைசியா எழுதியிருக்கிறார்!!! கரக்டா எல்லா டீச்சர்சிடமும்  கொடுத்து  எழுதி வாங்கி வைக்கும் படி அன்றைக்கே சொன்னேனே”

“மிஸ்.எங்களோட மாத்ஸ் மித்திரன் சேர் போனவாரம் முழுக்க கிளாசுக்கு வரல.”

அவருக்கு பதிலா யார் வந்தது?

யாருமே வரல மிஸ்!

என்னது??? ஏன் என்கிட்டே இவ்வளவு நாளும் சொல்லலை. அந்த பாடநேரம் என்ன செய்தீங்க? டென்ஷனாகி விட்டாள் ஆர்ணவி

நாங்கள் க்ரவுண்ட் போய்ட்டோம் மிஸ்

உங்க வேலையை மட்டும் கரக்டா பண்ணுங்கடா!!! ப்ரின்சி உங்களை பிடிச்சு விசாரிச்சிருந்தா கிளாஸ் டீச்சர் என் தலை உருண்டிருக்கும்! இனிமே யார் வரலைன்னாலும் எனக்கு இன்போர்ம் பண்ணணும். புரிஞ்சதா?

ஓகே மிஸ்!

அவள் யோசனையாக ரெக்கார்ட் புக்கை மூடி வைக்க “அனு மிஸ்” என்ற ரமணனின் குரல் மெல்லியதாக கேட்டது.

என்னடா

இல்ல மிஸ்..நீங்களே எங்களுக்கு மாத்ஸ் கிளாஸ் எடுங்களேன்

அவள் இதை எதிர்பார்க்கவில்லை..

நான் எப்படி பசங்களா? அதுவும் நான் english க்குத்தான் அப்ளை பண்ணி இங்கே வந்தேன்!

“ப்ளீஸ் மிஸ். எங்களுக்கு அர்ஜூனா சார் நல்லா மாத்ஸ் எடுத்தார். அப்புறம் வேற யாருமே ஒழுங்கா சொல்லித்தர்றதும் இல்ல..வர்றதும் இல்ல. மாத்ஸ் பாஸ் பண்ணலைன்னா பத்தாம் வகுப்பு போக முடியாதாம்.” அவனின் குரலில் வெளிப்படையான கலக்கம்.

அட இவ்வளவு தூரம் யோசிக்கிறார்களே என்று அவள் ஆச்சர்யமும் சின்ன பரிதாபமுமாக பார்க்க

மிஸ்..நீங்க கூட மாத்ஸ் தானே டிகிரி முடிச்சீங்க..நீங்க சொன்னா கேப்பாங்க..ப்ளீஸ் மிஸ் என்றது மீண்டும் சுபாங்கனின் கரகர குரல்..

ஆமாம்.நீ english க்கு என்னை ஏமாத்தற போல மாத்ஸ் கிளாசுக்கும் ஏமாத்த பார்க்கிறியா? நீ மட்டும் பேசக்கூடாது!

ஹி ஹி

“நீங்க சொன்னாங்க கேப்பாங்க மிஸ்” மீண்டும் இன்னொருவன் ஆரம்பித்தான்..

அனு மிஸ் …. அனுமிஸ்

தொடர்ந்து கோரஸ்கள் வரத்தொடங்க வாய்விட்டு சிரித்தவள் “நிறுத்துங்கடா.நான் மாத்ஸ் நல்லா சொல்லி தருவேன் என்று உங்களுக்கு எப்படி தோணுது?” என்று கேட்டாள்

மொக்கை இங்க்லிஷையே சூப்பரா சொல்லித்தர்ரீங்களே மிஸ்..சுபாங்கனின் குரல் திரும்பவும் கேட்க பொய்க்கோபமாய் அவனை முறைத்தாள் அவள்

என் சப்ஜெக்ட் மொக்கையா உனக்கு? போய் கிளாசுக்கு பின்னாடி நில்லு. பாடநேரம் முடியற வரை உக்காரக்கூடாது! அவள் மிரட்ட முகம் எல்லாம் சிரிப்பை பூசிக்கொண்டு எழுந்து போனான் அந்த சுபாங்கன்

சரி..நான் பேசிப்பார்க்கிறேன். நான் ரிலாக்சா டீச்சிங்கை என்ஜாய் பண்ணனும்னு தான் இங்க்லீஷை எடுத்தேன். இப்போ உங்களுக்கு மட்டும் மாத்ஸ் எடுக்கறேன்னு ப்ரின்சி கிட்ட கேட்டுப்பார்க்கிறேன். அவங்க வேணாம்னு சொன்னா என்னால ஒண்ணும் பண்ண முடியாது சரியா?

பரவால்ல மிஸ். நீங்க பேசுங்க!

பெல் சத்தமாக ஒலிக்க வேக வேகமாய் அவளின் அருகில் ஓடி வந்த இருவரை பார்த்து ஆரா உண்மையிலேயே தலையில் கை வைத்துக்கொண்டாள்

நீங்க பேசறது பண்றதெல்லாம் பார்த்தா 9th படிக்கற பசங்க போலவா இருக்கு. A கிளாஸ் பசங்க எல்லாம் என்ன ஸ்மார்ட்டா இருக்காங்க. நீங்க ஏண்டா இப்படி குழந்தை தனமா இருக்கீங்க?

அவர்களிடம் இருந்து பதில் இல்லை. வழக்கமான வெகுளிச்சிரிப்புடன் அவள் கொண்டுவந்த புத்தகக்கட்டை ஒருவன் தூக்கிக்கொள்ள ரெகார்ட் புக்கை இன்னொருவன் எடுத்துக்கொண்டான்

இது அவள் வந்த நாளில் இருந்து நடப்பதுதான். தினம் ஒருவராய் அடம்பிடித்து அவளின் புத்தகங்களை சுமந்து கொண்டு ஸ்டாப் ரூமுக்கு வந்து விட்டுவிட்டு போவார்கள். அவளுக்கு மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்ற பயத்தில் தயக்கமாக இருந்தாலும் அவர்கள் கேட்கவே மாட்டார்கள்.

அன்றைக்கும் அருகே நடந்து வந்தவர்களிடம் பேசியபடி அவர்கள் ஸ்டாப் ரூமுக்கு வர அவளுடைய போதாத காலம் அங்கே அர்ஜூனா அமர்ந்து கொண்டிருந்தார்

இன்றைக்கு கிளாசில் வேறு வந்து உளவு பார்த்துவிட்டு போனாரே இந்த மனிதர்! இன்றைக்கு அவளுக்கு என்ன இருக்கிறதோ தெரியவில்லையே..

ஆராவுடைய போதாத காலம் அவளுடைய கப்போர்ட் அர்ஜுனாவுடையதற்கு பக்கத்தில் தான் இருக்கும். ஆகவே இருவரும் அநேகமாக கப்போர்டுக்கு  அருகில் இருக்கும் சேரிலேயே அமர்ந்து கொள்வதால் அநேகமான தருணங்களில் ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்கும் இடைவெளியிலேயே அமர்ந்திருப்பார்கள்.

அவளுடைய மாணவர்கள்  புத்தகங்களை அவளுடைய இடத்தில் அழகாக வைக்க கண்ணில் சிரிப்புடன் அவர்களையே சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அவர்!

இந்த மனிதரில் இது ஒன்று இருக்கிறது! யாரையாவது வேடிக்கை பார்ப்பதாயின் அவர்களுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. நேரடியாக அப்படியே பார்த்துக்கொண்டிருப்பார்! பெண்கள் இவரை பார்த்ததுமே பயப்படுவதற்கும் இந்த பார்வை பெரிய காரணம்!

அவள் நிமிர்ந்தே பாராமல் “உங்களுக்கு அடுத்த பாடம் என்ன? சீக்கிரம் கிளம்புங்கள்” என்று கூட வந்தவர்களை விரட்ட முயன்றாள். ஆனால் அவர்கள் அவளை விட்டு விட்டு அவரை பார்த்து புன்னகைக்க ஆரம்பித்து விட்டிருந்தனர்

“என்னடா சேவகமெல்லாம் பலமா இருக்கு! நானும் தானே மாய்ந்து மாய்ந்து உங்களுக்கு கற்பித்தேன். எனக்கு ஒருநாளாவது இப்படி செய்திருப்பீர்களா?” அவர் விளையாட்டாக முறுக்கிக்கொள்ள இங்கே ஆராவுக்கு முகம் சிவந்து விட்டது.

ஹி ஹி என்று சிரித்தபடி அவர்கள் சிட்டாக பறந்து விட எழுந்து தன்னுடைய கப்போர்டை நோக்கி நடந்தவள் மெல்ல அவரருகில் குனிந்து “எல்லாத்துக்கும் ஒரு முக ராசி வேணும் சார்” என்று சிரிப்புடன் சீண்டி விட்டு கடந்தாள்

அர்ஜூனா என்றதுமே சிங்கம் புலியென பொங்கிக்கொண்டிருந்தவள் கொஞ்சம் நிதானப்பட்டது இந்த 9D வகுப்பிற்கு கற்பிக்க போனபிறகு தான்.

முதலில் அவள் அர்ஜூனா வேண்டுமென்றே இந்த வகுப்பை பொறுப்பெடுக்க பிடிக்காமல் தன் தலையில் கட்டிவிட்டதாக தான் நினைத்தாள். அவரது பௌதிகவியல் தியரங்களை புரிந்து கொள்ளும் மாணவர்களல்லவே இவர்கள்! ஆகவே இவர்களோடு அவரால் ஓட்ட முடியாது போவது சகஜம் என்றே அவள் மனம் முடிவு செய்தது. ஆனால் மற்றைய மாணவர்களை விட god father ஆக இவர்கள் அவரை கொண்டாடுவது தெரிந்ததும் அவளாலும் அவரை வெறுக்க முடியவில்லை.

ஒரே பிரச்சனை என்னவென்றால் வகுப்பாசிரியராக அவர் இவர்களோடு அதிக நேரம் செலவழித்தனால் அவருடைய சர்ச்சைக்குரிய சித்தாத்தங்களை மாணவர்களும் மனதில் பதித்து வைத்திருந்து தவறான சந்தர்ப்பங்களில் அவரை கோட் செய்து மறுக்கவும் முடியாமல் அவற்றை ஏற்கவும் முடியாமல் அவளை அடிக்கடி திணற வைத்தது தான்.

அவர்களை சமாளிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாய் யோசித்து யோசித்து அவள் மனதும் அவரை ஒரு போட்டியாளராக நினைத்துக்கொண்டு விட்டது போலும். இருவரில் ஒருவர் மற்றவரை வம்புக்கிழுக்காமல் நாட்கள் கழிவதாயில்லை.

ஒருநாளைக்கு இந்த மனுஷனால பெரிய பிரச்சனையை வாங்காம நீ போகப்போறதில்ல ஆரா! மனப்பட்சி சொல்வதை அவளது தைரியம் காது கொடுத்துக்கேட்பதில்லை!

கப்போர்டில் புத்தகங்களை வைத்து விட்டு அடுத்த பாடவேளைக்கான பைலுடன் அவள் திரும்பி வரும் போது அவளுக்கான பதில் தயாராய் இருந்தது!

“இந்த முகராசியைத்தான்  கண்ணுக்கு விருந்து என்று நானும் சொன்ன ஞாபகம்! அன்றைக்கு பேயாட்டம் ஆடினாயே! இப்போது நீயே அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்!!!”

வலுக்கட்டாயமாக போய் மொக்கை வாங்கி விட்டோமா? அவள் பதில் பேசாமல் சிரித்து வைத்தாள்

“சும்மா பெண் என்று யாராவது சொல்லிவிட்டாலே வாலண்டியராக போய் ஒரு பொங்கலை வைத்து விட்டு வந்து விடுவது! இதோ பார் பேபி ஆண்களுக்கு எப்போதுமே மலர் டீச்சர்களை தான் பிடிக்கும் இதெல்லாம் படைத்தவன் செய்த உயிரியல் விளையாட்டு..உங்கள் பொங்கல்கள் எதையும் மாற்றி விடாது!!”

அவளது முகத்தை பார்த்தே அதற்கு கட்சி கட்டிக்கொண்டு வாதம் செய்ய அவள் தயாராகிறாள் என்று புரிந்ததும் சட்டென்று கையை தூக்கி “ஹேய் மை டியர் நியூசன்ஸ். எனக்கு நிறைய  வேலை இருக்கிறது. உன்னோடு பட்டிமன்றம் வைக்க நேரமில்லை என்னை விட்டுவிடு என்று விட்டு பேனாவை மீண்டும் பேப்பரில் ஓடவிட ஆரம்பித்துவிட்டார்.

கோபத்தில் சிவந்து போய் சட்டென எழுந்து அடுத்த பாடப்புத்தகங்களை வாரிக்கொண்டு லைப்ரறியை நோக்கி நடந்தவள் பிரச்னையை அப்படியே விட்டு விட்டு போக மனதில்லாமல் கதவருகில் நின்று திரும்பி வேண்டுமென்றே “அர்ஜூனா சார்” என்று அழைத்தாள்

இன்னும் என்ன என்ற எரிச்சல் முகத்தோடு அவளை ஏறிட்டவரை அவரின் பாணியிலேயே கண்ணை நோக்கினாள் அவள்

சார் சும்மா சும்மா பொண்ணுன்னு சொன்னதுமே  கழுவி கழுவி ஊத்தரீங்களே, யாழ் பேபி, உங்க பாமிலி தவிர வேறு ஒரு பொண்ணையாவது மரியாதையா மனசுல நினைப்பீங்களா?

இது என்ன வீண்வம்பு? என்ற ரீதியில் அவர் முறைக்க

“ஜஸ்ட் ஒரு கியூரியோசிட்டி சார். வேறேதுமில்லை” என்று அவரின் சிரிப்பை இமிடேட் செய்தாள் அவள். அப்படி யாருமே இருக்க முடியாது என்ற சவால் தான் அவள் தொனியில் இருந்தது.

இப்போது அவரின் அதே சாத்தானிச சிரிப்பு உதட்டில் தஞ்சம் பெற அவளை ஒருகணம் ஊன்றிப்பார்த்தவர் “பீச்சில் சுண்டல் விற்கும் ரங்கம்மா என் மரியாதைக்குரிய பெண்மணி போதுமா?” என்றுவிட்டு மறுபடி  பேப்பருக்குள் புகுந்து விட்டார்.

ச்சா இவர் ஜெனுவினாக பதில் சொல்வார் என்று கேள்வி கேட்டோம் பார். நம்மை சொல்ல வேண்டும்.

தன்னையே திட்டிக்கொண்டு லைபிரரியை நோக்கி நடந்தாள் அவள்.

11 thoughts on “ஆழி-அர்ஜூனா 6

  1. Hi usha me very happy appa oru valiya unoda stories a follow pana vali kandu pudichen.arjuna sir nijamalume kadupatrar my lord,enakume Ara mathiri ponguthu,epo mathu vanga poraro,parthuko.
    Hi hi thanks chellam with love mythili story a open panni kuduthathuku,chinthaka va thirumba vum read pana asaya irunthuchu,penmai la try panninen mudiyala,thanks a lot sight adika help panninathuku,hi hi.

    Like

  2. Me remba kovama iruke avlo asaya aha full link iruke,super nu partha not opening only only mythi and chinthakka first meeting scene matum iruku,.hmm kadasila varuthapadatha valibar sangam listla join panni ,katadhoraiku kattam sari ilana soli unna thititu virunthu sapadu ethirparthava kadasila mini meals kooda ila maggi noodles mathiri chinthakka voda entry scene avathu irunthathe nu polambite paduka poren,uuuuuuuuuuuuu………….

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: