ஆழி-அர்ஜூனா 7

7f814609d6b20d8dc8d3dc73bca9ca22

மூன்று துருவங்கள் ஒன்றாக இணைந்திருந்த அபூர்வ நாள் அது. ஆம் பத்தாம் வகுப்பு இடைநிலைப்பரீட்சை முடிவுகளை பெற்றோரோடு கலந்துரையாடும் வகுப்பு நிகழ்வொன்றில் நடன ஆசிரியை ராகவி, ஆங்கில ஆசிரியை ஆர்ணவி , கணித ஆசிரியர் அர்ஜூனா மூவரும் மீதிப்பாட ஆசிரியர்களோடு பெற்றோர் நடுவில் நின்று கொண்டிருந்தனர். ராகவியும் ஆர்ணவியும் அர்ஜூனாவை காணவே காணாதவர்கள் போல பெற்றோர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென கொஞ்சம் தடித்த குரல் ஒன்றின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் உயர ஆரம்பிக்க அனைத்து தலைகளும் மெல்ல அந்தப்பக்கம் திரும்ப ஆரம்பித்தன.

பல்க்காக பார்ப்பதற்கு கொஞ்சம் ரவுடித்தனமாக இருந்த அப்பா ஒருவர் அங்கிருந்த ஆசிரியர்களிலேயே மென்மையாய் தென்பட்ட சபீனாவிடம் எகிறிக்கொண்டிருந்தார். இந்த பாடசாலையில் இப்படியான நிகழ்வுகள் கொஞ்சம் அபூர்வம் தான். ஆகவே எல்லோர் கவனமும் அங்கேயே குவிய ஆரம்பித்தது.

“என்ன மேடம்.. நீங்கள் ஒழுங்காக கற்பித்தால் என் பையன் படித்து விட்டு போகிறான். ஒரு நாளில் எவ்வளவு நேரம் பாடசாலையில் இருக்கிறார்கள்? நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டு எங்களை குற்றம் சொன்னால்?” அவர் அடிப்பது போல கேட்க..

அவமானத்தில் சிவந்தாலும் குரல் உயர்த்தாமல் “கொஞ்சம் பார்த்து பேசுங்கள் சார். மற்ற மாணவர்களும் என்னிடம் தான் படிக்கிறார்கள். அவர்கள் மார்க் வாங்கவில்லையா?” என்று கேட்டாள் சபீனா

“பசங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க! எந்த பையனுக்கு எப்படி சொல்லிக்கொடுக்கணும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்! நீங்கல்லாம் இப்ப ஸ்கூலுக்கு வர்றதே சம்பளம் வாங்கிட்டு தூங்கிட்டு போறதுக்குத்தானே..”

எல்லா ஆசிரியர்களும் நடப்பதை ஜீரணிக்க முடியாமல் விக்கித்துப்போய் நின்றுகொண்டிருந்தனர்.

கோபம் பொங்கிக்கொண்டு வந்தது ஆருவுக்கு. இவனெல்லாம் ஒரு மனிதனா? பாவம் சபீ! மூச்சு விட்டால் கூட ஸ்டூடண்ட்ஸ் ஸ்டூடண்ட்ஸ் என்று சொல்லிக்கொண்டு தான் விடுவாள்! அவளைப்போய் என்னவெல்லாம் சொல்கிறான். இவனை நாக்கை பிடுங்குவது போல நாலு கேள்வி கேட்டு வெளியே அனுப்புகிறேன் பார் என்று அவள் முன்னேற அவளது எண்ணத்தை ஊகித்தவள் போல பட்டென்று அவளது கையை பிடித்து வலுக்கட்டாயமாய் நிறுத்தினாள் ராகவி.

ஆர்ணவி தன்னை விடுவித்துக்கொள்ள போராடிய போது தான் “மிஸ் நீங்க கொஞ்சம் தள்ளி போக முடியுமா?” என்று அர்ஜூனாவின் குரல் அழுத்தத்துடன் கேட்டது. அப்படியே சுழன்று திரும்பினாள் ஆர்ணவி!

சபீனா தப்பித்தேன் பிழைத்தேன் என்பது போல கலங்கிய கண்களோடு அகல அவளது கையை பிடித்திழுத்து தங்களோடு சேர்த்துக்கொண்டாள் ஆரா. கண்களோ அந்த இடத்தை விட்டு அசைய மறுத்தது.

“ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கொஞ்சநேரம் ரிசப்ஷன்ல போய் இருங்க.. “அர்ஜூனாவின் கட்டளைக்குரலுக்கு கட்டுப்பட்டு மாணவர்கள் நிமிடத்தில் மாயமாய்ப்போக

யாருய்யா நீ? நீ என்ன பெரிய இவனா? என்று அர்ஜூனாவை நோக்கி எகிறினார் அந்த மனிதர்.

நட வெளியே! சப்பித்துப்பப்பட்ட வார்த்தைகளில் இருந்த இன்ட்டன்சிட்டியில் ஒரு கணம் அதிர்ந்து தான் போனாள் ஆரா.

ஏய் என்ன? என்று கொஞ்சம் குழப்பமாய் சுருதி இறங்கிய குரலில் அந்த மனிதர் கேட்க கையை வைத்து ஒரே தள்ளாக தள்ளி விட்டார் அர்ஜூனா. அவர் வகுப்பறைக்கு வெளியே தடுமாறிபோய் நின்றார்.

பிறகு இருவருக்குமிடையில் நடந்தவைகள் எவையும் இவர்களுக்கு கேட்கவில்லை. சட்டென நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட வகுப்பாசிரியர் நாங்கள் கலந்துரையாடலை தொடரலாம் என்று சொல்லிவிட ஆராவுக்கு போய் பார்க்க வழி தெரியவில்லை. மாணவர்களும் அழைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் போனவர்கள் இருவரும் வந்த பாடில்லை. முகத்தில் ஆர்வத்தை மறைக்க முடியாமல் பல்லைக்கடித்தபடி பெற்றோர்களிடம் அவள் பேசிக்கொண்டிருக்க சற்றைக்கெல்லாம் எதுவுமே நடக்காதவரை போன்ற முகபாவத்துடன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு அர்ஜூனா போய் இணைந்து கொண்டார். பின்னாலேயே  தலையை தொங்கப்போட்டுக்கொண்டு முகம் கருக்க உள்ளே நுழைந்தார் அந்த மனிதர்!

பையனையும் அழைத்துக்கொண்டு நேராக சபீனாவிடம் போனவர் இன்னும் உதடு வெளுக்க அழுகையை அடக்கியபடி நின்றுகொண்டிருந்த அவளிடம் சாரி மேடம். தெரியாம பேசிட்டேன் என்று பொருள் பட எதையோ முணுமுணுத்தவர் வேறெதையும் பார்க்காமல் வேகவேகமாய் வெளியேறி மறைந்தார்.

அன்றைய கலந்துரையாடல் முடிந்ததும் சம்பந்தப்பட்ட பையனுடன் ஏதோ பேசிவிட்டு வந்த அர்ஜூனாவிடம் போய் “தாங்க்ஸ் சார்” என்று குரலே வெளிவராமல் சபீனா சொல்ல “இருக்கட்டும் என்பதாக கையமர்த்தியர் “உயிரைக்கொடுத்து வேலை செய்தால் மட்டும் போதாது. உங்களுக்காக உறுதியாய் நிற்கவும் கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சமயமும் யாராவது உதவிக்கு வரமாட்டார்கள்” என்று சொல்லிவிட்டு விலகி நடந்தார்

அவர் பேசியதை கேட்டபடி வெளியே செருப்பை மாட்டிக்கொண்டிருந்த ஆர்ணவி தன் பக்கத்தில் இருந்த ராகவியை காணாமல் திகைக்க அவளோ சார் என்றபடி அர்ஜூனாவின் பின்னே போய்க்கொண்டிருந்தாள்!

வேக வேகமாய் அவளின் பின்னே ஓடினாள் இவள்.

சார்.

ஹ்ம்ம்? என்ன என்பதாய் திரும்பிப்பார்த்தவர் ராகவியையும் அவளின் பின்னே ஓடி வந்து சேர்ந்துகொண்ட ஆர்ணவியையும் கண்டு நெற்றி சுருக்கினார்.

சாரி சார். அன்னிக்கும் சொன்னேன் தான். ஆனா முழு மனசா சொல்லல. நாங்கள் நடந்து கொண்ட முறை ரொம்பவே தப்பானது. சாரி சார்

ராகவி தடுமாறியபடி சொல்ல அவளையே ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்ணவி. அடிப்பாவி!! இப்படி தடால் பல்டி அடித்து அவளுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறாளே..

ஹ்ம்ம்… நான் அதை என்றோ மறந்துவிட்டேன் என்றவர் மன்னிப்பை ஏற்கிறேன் என்றோ இல்லையென்றோ சொல்லாமல் அத்தோடு பேச்சு முடிந்து விட்ட பாவனையில் திரும்பி நடக்க ஆரம்பிக்க “ நீயும் கேளுடி” என்று ஆர்ணவியின் காதைக்கடித்தாள் ராகவி.

மெல்லியதாய் சின்னச்சிரிப்பொன்று அவள் முகத்திலே முளைக்க “ ம்ஹ்ம்..நான் இன்னும் இம்ப்ரெஸ் ஆகல.. அப்படி ஆகும் போது நான் சாரி சொல்றேன்” என்று கொஞ்சம் பெரிய குரலில் சொல்லியபடி ஓரக்கண்ணால் அவரைபார்த்தாள் ஆர்ணவி. உதட்டில் குறும்பு சிரிப்பு நெளிந்து கொண்டிருந்தது.

எனக்கு கேட்டுவிட்டது என்ற பாவனையில் சட்டென்று திரும்பி அவளைப்பார்த்து விட்டு நடந்தவரின் முகத்திலும் சிரிப்புத்தான் பூத்திருந்தது.

அது உன்னைப்போல் எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்று சொல்வதாக பட்டது இவளுக்கு!

ஆர்ணவி எப்போதுமே கடலை அவ்வளவாக ஆராதிப்பவள் அல்ல.., அதை ஆர்வத்தோடு நின்று ரசித்ததும் கிடையாது. கடலை மட்டுமல்ல இயற்கையை அவள் எடுத்துக்கொள்ளும் விதமே அப்படித்தான். மலையா? சரி.. ஏறிப்போவோம்..ஆறா? குளித்து விட்டு வருவோம்.. இது தான் அவள்! ஆனால் இன்றைக்கு ஏனோ இவ்வளவு நாளும் பீச்சை போய் பார்க்கவில்லையே. இன்றைக்கு போனால் என்ன என்று தோன்றி விட்டது. அதை அதிகம் ஆராயாமல் அன்றைக்கு முழுக்க அதே தியானமாக கற்பித்துக்கொண்டிருந்தவள் ஸ்கூல் பஸ் கொண்டு வந்து இறக்கியதும்  வேக வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.

கீழ்த்தளத்தில் பார்க்கிங் பக்கமாக தன்னுடைய மோனா டீஷர்ட்டில் நின்று கொண்டு யாழினி கையசைக்க உற்சாகமாய் தானும் கையசைத்தாள் ஆர்ணவி

அவள் நெருங்கியதுமே  யாழினி ஓடி கையை பிடித்துக்கொள்ள அவளது முகத்தை நிமிர்த்தியவள் “ குக்கீ ஐஸ்க்ரீம் உனக்காக வாங்கி வச்சிருக்கேன். மறந்துடாதே ஓகேவா? நேத்தே வாங்கினேன் பேபி..உன்னைத்தான் காணோம் என்றாள் புன்னகையுடன்

பட்டென்று தலையில் கைவைத்துக்கொண்டவள் “அப்பா வந்துட்டாங்க” என்றாள் சிரித்தபடியே..

அவர்களின் பின்னே இருந்து அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த யாழினியின் தந்தையோ “ நீங்கதானா அந்த ஐஸ்க்ரீம் பிரன்ட்?” என்று புன்னகையோடு கேட்டார்

அசட்டு சிரிப்புடன் தலையசைத்து விட்டு “ஒரு வாரத்துல ஒருதடவைதான்” என்று சமாளிப்பாய் இழுத்தாள் அவள்

“அதெல்லாம் அவ அளவாத்தான் சாப்பிடுவா” என்று அவளது விளக்கத்தை டிஸ்மிஸ் செய்தவரின் சகலத்திலுமே மகளைக்குறித்த பெருமுதம் தான் நிரம்பிக்கிடந்தது.

தாங்க் யூ சிஸ்டர். இவ தனியா இருப்பாளேன்னு பயப்பட்டுட்டே இருப்பேன். சட்டுன்னு எல்லார்கூடவும் சேரவும் மாட்டா. உங்களை அவளுக்கு பிடிச்சிருக்கு. என்று தங்கள் இருவரின் உதட்டசைவையுமே மாறி மாறி ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த மகளின் தலையை வருடியபடியே சொன்னார் அவர்.

ரொம்பவே புத்திசாலிக்குழந்தை சார் அவ. நீங்க ரொம்ப லக்கி என்றவள் “ அப்போ இந்த தடவை போகும் போது யாழினியை கூட்டிட்டு போய்டுவீங்களா என்று கேட்டுவிட்டாள். அதன்  பிறகு தான் உரைத்தது. அவர்களின் சொந்த விவகாரத்தை கேட்க அவள் யார்? என்பது!

அவர் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. “இல்லைம்மா. அர்ஜூன் என்னால இப்போதைக்கு இவளை சரியா பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறான். கொஞ்சம் அங்கே தொழில் ஒரு கட்டுக்கு வந்ததும் அழைத்துக்கொண்டு போவது தான் சரி என்கிறான். எனக்கும் குழந்தையை விட்டு விட்டு போவது வருத்தம் தான் என்றாலும் அழைத்துச்சென்று இவளை சரியாக பார்த்துக்கொள்ள முடியாவிடின் என்ற பயம் தடுக்கிறது. “என்று யோசனையாக சொல்லிவிட்டு “அப்புறம் பார்ப்போம்மா” என்றபடி யாழினியை தூக்கிக்கொண்டு நடந்தார் அவர்,

அவரின் தோள் வழியாக எட்டி புன்னகையுடன் கையசைத்த யாழினிக்கு பதிலுக்கு கையசைத்தாள் ஆர்ணவி.

யாழினியை இவர்கள் பார்த்துக்கொள்வதா? அவள் இவர்களை போல பத்துப்பேரை பார்த்துக்கொள்வாளே!!! ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று எண்ணினாலும் மனதில் இவருக்கும் அர்ஜூனாவுக்கும் இடையில் இருந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கண்ணில் அறைந்தது.. இவர் ஒரு பயந்த மனிதர். அவரோ பயமே அறியாதவர்.. இருவருக்குமிடையில் இவ்வளவு இறுக்கமான நட்பு எப்படி முளைக்க முடியும்?

மீண்டும் அவர் அந்த ரவுடியை நெஞ்சில் கைவைத்து தள்ளிய காட்சி ஞாபகம் வர தலையை உலுக்கிக்கொண்டாள் அவள்.

அவசர அவசரமாய் குளித்து கையில் அகப்பட்ட ஒரு ஷார்ட்ஸ், டீஷர்ட் சகிதம் பிளாட்டை விட்டு இறங்கி கூகிள் காட்டிய திசையில் கடலைநோக்கி நடந்தாள் ஆர்ணவி.

அமைதியான கடல் தான். ஆங்காங்கே தென்னை மரங்களுடன் மனிதர்கள் ஜோடிகளாய் ஒட்டிக்கொண்டிருக்க கடற்கரையில் திடீர் உணவகங்கள் பல முளைத்திருந்தன. அது நகர்ப்புறம் இல்லை ஆதலால் மனிதர்களின் நெருக்கடி அவ்வளவாக இல்லாமல் இயற்கையே ஆட்சி செய்து கொண்டிருந்தது.

ப்ரீயாக இருந்த தென்னை மரமொன்றின் வேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள் கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அதுவோ இவளை கண்டுகொள்ளாமல் வெள்ளை நுரைகளை அள்ளிவந்து கரையில் கொட்டுவதும் மீண்டும் ஓடி மறைவதும் ஊடல்கொள்வதுமாக இருந்தது. இன்றைக்குத்தான் அவள் கடலை இவ்வளவு ஊன்றி கவனிக்கிறாள்! தான் கண்டது அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எண்ணற்ற அர்த்தங்களை வைத்துக்கொண்டு கடல் அவளை வாவென்று அழைப்பது போலிருந்தது.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி….

எங்கிருந்தோ வந்து மாயமாய் காதுவழியே நுழைந்து அந்த இசை அந்த பிரதேசத்தையே ஆக்கிரமிக்க  நூற்றி எண்பது

பாகைக்கு பார்வையை சுழற்றித் தேடியவளின் கண்களில் அந்தபெண் அப்போதுதான் விழுந்தாள். இதயம் படபடவென துடிக்க அந்தப்பெண்ணையே கவனிக்க ஆரம்பித்தாள் ஆர்ணவி.

மடிப்புக்கலையாத சுடிதார் அணிந்து நேர்த்தியாக வாரப்பட்டிருந்த முடியுடன் பரபரவென சுழன்று கொண்டிருந்தாள் அந்தப்பெண். சின்னதொரு தகரக்கொட்டகை தான் அவளது சொர்க்கபுரி ஆனால் ராஜமாளிகையில் இருப்பவள் போல எல்லாவற்றையும் மிக நேர்த்தியாய் அடுக்கி வைத்து கடையையும் ரம்மியமாய் அலங்கரித்து வைத்திருந்தாள். அவளுக்கு முன்னே எந்நேரமும் சீறத்தயாராக இருக்கும் டிராகன் போல ஒரு காஸ் அடுப்பு. பெரிய வாணலி. முன் புறம் அழகாக அடுக்கப்பட்ட பெரிய போத்தல்களில் பலவகை மசாலாப்பொடிகள்!

அவளுக்கு முன்னே இரண்டு பேர் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க அந்த இசைக்கேற்ப அவளது வாணலியை அசைத்து வறுத்து பிறகு ஒரே தடவையில் கரண்டியில் எடுத்து  அவர்களுடைய பையை ஒவ்வொருவராக நிரப்பி விட்டு கீழே குனிந்தாள் அந்தப்பெண். அவளின் காலடியில் இரண்டு சிறுவர்கள் பாய் போட்டு அமர்ந்திருந்து புத்தகங்களை பரப்பி வைத்துக்கொண்டிருந்தனர். அதற்குமேல் தாங்காதவளாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்தாள் ஆரணவி.

அந்தப்பெண்ணின் பிள்ளைகள் ஆகிருக்க வேண்டும். அவர்களுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தபடி இந்தப்பக்கம் வியாபாரமும் செய்துகொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் நடுவில் பாடல் வேறு மென்மையாய் கடற்கரையையே தாலாட்டிக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் கூட அலுப்போ சலிப்போ இல்லாத அந்தப்பெண்ணின் முகத்தை பார்க்க கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது அவளுக்கு.

ரங்கம்மா… நிறுத்தி நிதானமாய் உச்சரித்து புன்னகைத்தாள் ஆர்ணவி

அடடா..என் பேர் கூட தெரியுமா உங்களுக்கு? உங்களை நான் பார்த்ததே இல்லையே. என்ன சாப்பிடறீங்க? கனிவாக உபசரித்தாள் அந்த ரங்கம்மா

மசாலா சுண்டல் என்று எழுதி வைத்திருந்ததை படித்து விட்டு தனக்கொரு மசாலா சுண்டல் என்று ஆர்டர் செய்தாள் அவள்

அவளது கண்ணெதிரே வாணலியில் பச்சை வெங்காயம் மசாலாப்பொடிகள் மாங்காய், சில காரட் துண்டுகளை சேர்த்து அதில் ஒரு கப் அவித்த சுண்டலைக்கொட்டி ஒரு கிளறு கிளறி விட்டு அப்படியே கூடைப்பந்தொன்றை ஷூட் செய்யும் லாவகத்துடன் ஒரே தடவையில் கரண்டியில் அள்ளியெடுத்து அவளது பேப்பர் பையில் நிரப்பினாள் ரங்கம்மா.

ஒன்றை வாயிலெடுத்து போட்டு அதன் சுவையை அனுபவித்தபடியே தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு ரங்கம்மாவின் பிள்ளைகள் பாடம் பற்றியெல்லாம் அவள் பேச சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர்கள் சகஜமாகிவிட்டார்கள்.

எங்கள் அர்ஜூனா சார் தான், ரங்கம்மா செய்யும் சுண்டலை சாப்பிட்டு பார்க்காமல் சுண்டலைபற்றியே பேசக்கூடாது என்று உங்களைப்பற்றி எல்லோருக்கும் சொன்னவ்ர் என்று மெல்ல தூண்டில் போட்டாள் அவள்

அந்த சாரா, தினமும் வருவார், அதோ அங்கே இரட்டை தென்னைமரம் இருக்குது பாருங்க, அங்கே இருந்து தான் என்னமோ எழுதிட்டே இருப்பாரு.. அதோ தலை தெரியுதுல்ல? வறுவல் சுண்டல் மட்டும் கொடுத்தா போதும், உலகமே தெரியாம உக்காந்து எழுதுவார்! பாவம் தானும் தன்பாடும், அவ்வப்போது என் பிள்ளைகள் பற்றிக்கூட அன்பாய் விசாரிப்பார். இந்நேரத்துக்கு வந்து சுண்டல் வாங்கிட்டு போயிருப்பார்..இன்னிக்கு என்னமோ வேலை போல..கோபிக்காமல் கொஞ்சம் கொண்டு போய் கொடுத்து விடுகிறாயா? உங்களுக்கு ரொம்ப தெரிந்தவர் என்பதால் தான் கேட்கிறேன்.

அதற்கென்ன? கொடுக்கிறேன்!!! அது என்ன வறுவல் சுண்டல்? எங்களுக்கெல்லாம் இல்லையா?

அட..ஒரு நாள் அந்த சாரே தான் மசாலா சுண்டலில் மீன் வறுவலை நொறுக்கி போட்டா நல்லாருக்கும்னு சொன்னார். எனக்கு முதல்ல என்னடான்னு தான் இருந்திச்சு. ஆனா செஞ்சு பார்த்தேன். நல்லாவே இருந்துது. ஆனா இப்போதைக்கு மீனு வாங்கி அந்த வியாபாரம் பண்ண நேரமும் இல்ல, வசதியும் இல்ல. அதனால அந்த சார் தினமும் வருவாரா, அவருக்கு மட்டும் எடுத்து வந்து கொடுப்பேன்.

இந்த ரங்கம்மா அர்ஜூனாவில் காட்டும் அக்கறையை அவற்றின் சமூகத்தில் உள்ளவர்கள் அவள் உட்பட ஒருசதவீதமாகவாவது காட்டுவார்களா?

அதற்குள் ரங்கம்மா சின்னதொரு வாணலியை அடுப்புக்கு மாற்றி வறுவல் சுண்டலை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

கஷ்டமா இல்லையா ரங்கம்மா? இப்படி தினமும் நெருப்பு முன்னே நிக்கறது?

இல்லைங்க. எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். கடலை அதை விட ரொம்ப பிடிக்கும். சுண்டல் வியாபரத்துல எனக்கு வர்ற லாபம் தாராளமா போதுமா இருக்கு. தினம் தினம் என் கடையையே தேடி வர்றாங்களே, டேஸ்ட் பிடிச்சதால தானே.. இதெல்லாம் ரொம்ப சந்தோஷங்க எனக்கு. அடுப்புல வேலை செஞ்சிட்டே பிள்ளைகளையும் ஹோம் work செய்ய வச்சிருவேன். எனக்கு வேறே ஏதும் கவலைகள் இல்லையே…

இந்த நிறைவு அவளுக்கு ஏன் வைக்காமல் போனது? அவளுக்கு உண்மையில் என்ன பிடித்திருக்கிறது? சர்வசாதாரணமாக ஒரு கடலை விற்கும் பெண்மணிக்கு கிட்டிய ஆத்மதிருப்தி, அவளுக்கு மட்டும் ஏன் இன்னும் வசப்படாமல் அலைபாய்கிறது?

வறுவல் சுண்டலை கையில் வாங்கிக்கொண்டு அர்ஜூனா இருந்த இடத்தை நோக்கி மணலில் கால்புதைத்து நடந்தாள் ஆர்ணவி. அலைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மெல்லிய இரைச்சலுடன் வந்து வந்து திரும்பிக்கொண்டே இருந்தன.

 

 

14 thoughts on “ஆழி-அர்ஜூனா 7

  1. Super Ud ushu rangamma super character .sariyana nethiyadi avanga dialogues,athusari inthe Arjuna nalavara ketavara?ila nannum aravum adi veluthuruvomnu pammurara?hi hi summa oru pothu arivuku than.appuram ushu samayal expert a? Varuval sundal recipe ellam pramathama iruku!

    Liked by 1 person

  2. ஹாய் உஷா நன்றாக இருந்தது பதிவு ….அர்ஜுனா அவரின் மேல் ஆர்ணவி இம்ப்ரெஸ் ஆகவில்லை என்று சொல்லும் இடம் …கடற்கரையில் அர்ஜுனா பேச்சு வாக்கில் சொன்னதை வைத்து ரங்கம்மாவை கண்டுகொள்வது ……எந்த அளவுக்கு அவரின் செயல்களில் இவள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் ….ஆனால் இம்ப்ரெஸ் ஆகவில்லையாம் ……அவருக்கு சிரிப்பு வந்ததோ இல்லையோ படிப்பவருக்கு நிச்சயம் சிரிப்பு வரும் …..ரங்கம்மா கதாபாத்திரம் அவரின் குணம் அவரோடு ஆர்ணவி தன்னை ஒப்பிடுவது ……எல்லாமே நன்றாக இருந்தது ….நன்றி பதிவிற்கு .

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: