ஆழி- அர்ஜூனா 8

6Rzla13q

மெனக்கெட்டு ஒரு மனுஷி சுண்டல் எடுத்துட்டு வந்துருக்கேன். தலையே நிமிர்ந்து பார்க்காமல் அப்படி என்ன எழுத வேண்டியிருக்கிறது இவருக்கு? அர்ஜூனாவின் அருகே நெருங்கியும் தன்னை நிமிர்ந்து பார்க்காத கடுப்பு ஆர்ணவிக்கு!

கோபத்தில் காலால் மணலை ஒரு எத்து எத்தினாள் அவள்.

கவனம் கடல் மூடிக்கொள்ளப்போகிறது!!!! தலையே நிமிராமல் அர்ஜூனாவிடம் இருந்து குரல் மட்டும் வர இன்னும் கடுகடுவென்றானாள் அவள்.

அப்போ நான் வருவதை பார்த்திருக்கிறார் தானே!

“சார், உங்க ரங்கம்மா என்னிடம் உங்களுக்கு கொடுத்துவிட சொல்லி சுண்டல் கொடுத்து விட்டிருக்கிறார். உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா?”

“பார்த்தேன் பார்த்தேன்!!! அதை இப்படி வை”

‘கர்ர்ர்ரர்ர் நான் அதில் ஒன்றிரண்டை வாயில் போட்டுக்கொண்டதையும் பார்த்திருப்பாரா? ச்சே ச்சே இருக்காது!!!’

பேசாமல் அந்த சுண்டல் பொட்டலத்தை அவரின் அருகில் பட்டென வைத்தவள் “சார், ஒரு மனுஷர் உதவி செய்தால் அதற்கு நன்றி சொல்வது நாகரீகம்!” என்று நக்கலாக சொன்னாள்

நன்றி நன்றி!!!!

“நீங்கள் என்ன எழுதறீங்கன்னு கொஞ்சம் எங்ககூடவும் ஷேர் பண்ணுவீங்களா?” குரலில் தன்மையை வரவழைத்துக்கொண்டு முதன் முதலாக வெள்ளைக்கொடியை அசைத்தாள் அவள்.

பட்டென்று எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்தவர் “இப்போ உன் பிரச்சனை என்ன?” என்று இமைகளை ஏற்றி இறக்கினார்

“போங்க சார், உங்க கூட ஒருத்தர் பேச வந்தா இப்படித்தான் அவமானப்படுத்துவீங்களா? நான் கிளம்பறேன்.” அவள் உண்மையிலேயே திரும்பி விட்டாள்

ஹா ஹா..நான் பேசினாலே உங்களுக்கெல்லாம் பிரச்சனையாயிற்றே பெண்ணே! அவர் நாடகப்பாணியில் இழுத்தார்

“நீங்கள் பிரச்சனையாக பேசுவதில் எங்களுக்கும் பிரச்சனை வந்து விடுகிறது சாரே”  அவளும் அதே தொனியில் இழுக்க அவர் முகத்தில் சிரிப்பு வந்து குடியேறியது.

சாத்தானிச சிரிப்பு இல்லாமல் சாதாரணமாக அவர் புன்னகைத்தது காமடியாக இருப்பதாக அவள் சொல்ல நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை.

“ஹ்ம்ம்… என்ன இன்றைக்கு கடல் பக்கம் வந்திருக்கிறாய்?”

“நான் இங்கே வந்ததுக்கு இந்தப்பக்கமே வரவில்லையே என்று நினைத்துக்கொண்டே இருந்ததில் இன்றைக்கு ஒருவழியாக வந்து விட்டேன். ரொம்ப நல்லாருக்கு சார்.” அவள் தான் திரும்பி போகப்போனாள் என்பதை மறந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு கடலைப்பர்த்தபடி அமர்ந்து விட்டிருந்தாள் ஆர்ணவி.

“என்ன நல்லாயிருக்கு?” அவரும் வாகாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பிளாஸ்டிக் ஸ்பூனால் சுண்டலை அள்ளி வாயில் போட்டபடி கதை கேட்க ஆரம்பித்தார்

“இந்த கடலைத்தான் சொல்றேன். இவ்ளோ நாளும் நான் அவ்வளவா கவனிச்சது இல்லை. எவ்வளவு அழகா மர்மமா இருக்கு.. அலை வந்து வந்து போறது.. மணல்ல சைன் கர்வ் வரைந்ததை போல… செம சார். அவ்வளவா ஆட்களும் இல்லையாதலால் தனித்துவமாக தெரிகிறது! இது வரை நாங்கள் போனதெல்லாம் ஆட்களால் நிரம்பிய கடற்கரைகள் தான். சுத்தமாக ரசித்ததே இல்லை. உங்களுக்கும் கடல் பிடிக்குமா சார்? ஒவ்வொரு நாளும் வருவீங்களாமே..”

“ம்ஹ்ம்.. நான் ஒவ்வொரு நாளும் வருவது சத்தமில்லாத அமைதியான திறந்த இடம்.. நான் எழுத எனக்கு வசதியாக இருக்கும் என்பதால் மட்டுமே! கடல் ஒன்றும் எனக்கு அழகாகப்படுவதில்லை!”

“என்ன சார் சொல்றீங்க? எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பண்ணணும்னே பண்ணாதீங்க!!!” அவள் கிண்டல் செய்ய

“வாதமா? விதண்டாவாதமா என்பதே பார்ப்பவரின் பார்வையில் தானே தங்கியிருக்கிறது!” மனோதத்துவ மொழிகளால் அவர் திருப்பியடித்தார்

“இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அழகுன்னா இது இல்லையா உங்க பார்வையில்? அப்போ உங்களை பொறுத்தவரை அழகுக்கு டெபிநிஷன் என்ன?”

“அது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு விவாதம். இங்கே அழகு சம்பந்தப்படவில்லை!”

“ஷப்பா….க்ரீக்ல பேசாதீங்க சார்.. எனக்கு தமிழே சிலசமயம் புரிவது கஷ்டம்!!!!” அவள் நிஜமாகவே புரியாமல் தலையை பிடித்துக்கொண்டு விட்டாள்

“ஹா ஹா இப்போ ஒரு பைத்தியக்காரப்பெண் கத்திக்கொண்டு நம்முன்னே ஓடுகிறாள். அவள் அப்சரஸ் போல அழகு. அவளை பார்த்ததும் முதலில் உனக்கு என்ன தோன்றும்? ஐயோ பாவம் பைத்தியம் என்று தானே… அவள் அழகாக இருப்பது இரண்டாவதாகத் தான்  மனதில் படும்! அது போலத்தான் இதுவும்!”

அவரை ஏதோ ஒரு ஜந்து போல நோக்கியவள் “நான் பைத்தியமாகிவிடுவேன் போலிருக்கே..அதுக்கும் இதுக்கும் என்ன கனெக்ஷன்? கடல் ஒன்றும் கத்திக்கொண்டு நம்முன்னே ஓடலையே..”.என்று இழுத்தவள் சட்டென பல்ப் எரிந்து “யூ மீன் அலை?” என்று கேள்வி கேட்டாள்

அவளது ரியாக்ஷனில் சிரித்து விட்டவர் “எனக்கு என்னமோ கடலைப்பார்த்தால் பாவம்… குழப்பத்தில் இருக்கும் ஒரு ஆன்மா என்று தான் தோன்றும். அதுவாக பொங்கி ஓடி வரும். பிறகு ஏதோ நினைத்து திரும்பி போய் பாதி தூரம் போனதும் தான் நினைத்ததை மறந்து மீண்டும் வரும். அகப்படுவதை எல்லாம் இழுத்துக்கொண்டு போகும்..பிறகு தானே திரும்ப கொண்டுவரும். எனக்கு கடல் அழகாக தென்பட்டதே இல்லை! அதற்கு முன்னே அதன் குழப்பம் தான் கண்ணை எட்டுகிறது!” என்று வழக்கத்திற்கு மாறாக நீண்ட விளக்கம் கொடுத்தார்,

“எண்ட ஏசப்பா..அது தான் டெய்லி வர்றீங்களே.. கடலுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதுதானே!!!!” என்று கடுப்பாகிவிட்டவள் நம்பமுடியாமல் தலையை இடம் வலமாய் ஆட்டிக்கொண்டாள். ஜென்மத்தில் இப்படி ஒரு விளக்கத்தை அவள் கேட்டதே இல்லை!

“ஒரு பிசிக்ஸ் மாஸ்டர், சயன்டிஸ்ட் என்று பீலா விடுபவருக்கு கடலலை எப்படி வருகிறது என்று தெரியாதா?”

“பூமி உருண்டை என்று படித்திருக்கிறோம். அதற்காக நிலத்தில் உருண்டையின் மீது நடப்பதைப்போல எதையாவது ஊன்றிக்கொண்டா நடக்கிறோம்? பார்க்கும் போது தட்டையாக தெரிவதை ஏற்றுக்கொள்கிறோம் தானே.. சில சமயங்களில் நம்முன்னே தெரியும் மாயையை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் தருகிறது பேபி!”

“சார் போதும் சார்.. என்னால முடியல.. அவ்வ்வ்!!! அதை விடுங்க இப்போ நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க? நான் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பேன். நீங்க ஏன் உங்க வேலையை விட்டுட்டு இங்கே டீச்சர் ஆனீங்க?”

பச். அது எதுக்கு இப்போ?

சொல்லுங்க சார்

என் வேலையில் அந்த community element ஐ நான் தவற விட்டுக்கொண்டிருப்பதாக தோன்றியது. எல்லா கண்டுபிடிப்புக்களும் மக்களுக்காகத்தானே..ஒரு கட்டத்தில் மக்களின் நிலையை மீறி அவர்களுக்கு புரியாத எதைஎதையோ நான் செய்துகொண்டிருப்பதில் எனக்கு உற்சாகம் உண்டாகவில்லை. எனக்கு தெரிந்ததில் சிறு அளவையேனும் மக்களோடு பகிர எனக்கு இந்த வேலை தான் பொருத்தமாக தோன்றியது!

community element? அவளுக்கு அப்படி சட்டென்று எதை மிஸ் செய்தேன் என்று அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியவில்லையே.. அவள் தன்னைக்குறித்த யோசனையோடு மௌனமாகி விட்டாள்.

இன்றைக்கு என்னுடைய ஒரு அத்தியாயம் உன்னால் தாமதமாகிவிட்டது!!!  என்றவர் ஷார்ட்ஸில் இருந்த மணலைத்தட்டிக்கொண்டு எழவும் தான் லேசாக கவியத்தொடங்கி விட்டிருந்த இருளை அவள் உணர்ந்தாள்

இவ்வளவு நேரமும் அவள் அர்ஜூனாவோடு அதுவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை அவளுக்கு!

இருங்க சார், நானும் வரேன் என்றபடி தானும் எழுந்து வேகமாய் அவரைத்தொடர்ந்தாள்

கொஞ்ச நேரம் அவள் கூட வருகிறாளா இல்லையா என்று கூட பார்க்காமல் சம்பந்தமே இல்லாதவர் போல நடந்து கொண்டிருந்தவர் திடீரென “ஆமாம் உனக்கு உன் பெயரின் அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியுமே…. கடல் தானே..”

ஆமாம்..நீயும் கடலைப்போல தான்..எங்கே போகிறாய் என்று உனக்கே தெரியாது!!!

ஒரு கணம் அதிர்ந்து போய் அப்படியே நின்று விட்டாள் அவள். இப்படியா வெளிப்படையாக முகத்தில் எழுதி ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்???

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?

அது தான் உன் நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியுமே..

நினைத்ததை எல்லாம் திடும் திடுமென்று பேசிவிடும் அவருடைய பாணிக்கு இப்போதெல்லாம் அவள் பழக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ அவள் தானும் பதிலுக்கு எகிறாமல் யோசனையாய் அவரை ஏறிட்டாள்.

“இருக்கலாம் சார்.. HSP ல லீகல் ஆபீசரா இருந்தேன். எல்லாமே இருந்தது எனக்கு. திடீரென்று எனக்கு வாழ்க்கை ஒரே போல போவது போலவும் மெஷின் போல அலுவலகம் போய் வருவது, என் வீடு எல்லாமே எரிச்சலை கொடுக்க ஆரம்பித்து விட்டது. அடுத்து என்ன ப்ளான் என்று யோசிக்காமலே ஆறுமாதம் நோ பே லீவ் போட்டு விட்டேன். அப்போதுதான் என் பிரன்ட் இப்படியொரு தொலைவில் இந்த வாய்ப்பை பற்றி சொன்னாள்.இது வரை நான் வாழ்ந்ததற்கு முற்றிலும் வேறான வாழ்க்கை வாழப்போகும் உற்சாகத்தில் நானும் இங்கே வந்து விட்டேன். ஆனால் இந்த வேலை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது சார். இதைத் தான் நான் தேடினேனோ என்னவோ?”

அவள் அவரிடம் சொன்னதைவிட தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் என்பது தான் நிஜம்.

Sorry to burst your bubble, உன்னால் இங்கேயும் ரொம்பநாள் இருக்க முடியாது. கூடிய விரைவிலேயே போகவேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விடுவாய்!

இப்போது உண்மையிலேயே அவளுக்கு கோபம் வந்து விட்டது.அவள் நேசித்து செய்யும் வேலையை பற்றி பேச இவர் யார்?

எதைப்பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் என்னை பற்றி அனுமானிக்க நீங்கள் யார் சார். எனக்கு இங்கே பிடித்திருக்கிறது அவ்வளவு தான். முடிந்தால் நீங்கள் சொன்னதற்கு காரணம் சொல்லுங்கள்!

நான் சொன்னாலும் அதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாய் எனும்போது நான் ஏன் சொல்ல வேண்டும்?

சாக்குப்போக்கு சொல்லாதீர்கள் சார். வேண்டுமென்றே என்னை ஒரு காரணமும் இல்லாமல் மட்டம் தட்டுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நான் விட்டு விட்டு ஓடிவிடுவேன் என்று தான் என்னை 9D கு நீங்கள் அனுப்பியிருக்க வேண்டும். நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றதும் இப்படி பேச ஆரம்பித்து விட்டீர்கள்!!!

அவர் பதில் பேசாமல் சிரித்தபடி தோளைக்குலுக்கி விட்டு நடக்க ஆரம்பித்து விட வேண்டுமென்றே மொபைலில் வைஷ்ணவியோடு பேசிக்கொண்டு தனியாக நடந்தாள் ஆர்ணவி.

அவர் இதற்கு விளக்கம் சொல்லும்வரை முகம் கூட பார்க்கக்கூடாது என்று கறுவிக்கொண்டவள் அந்த வாரம் முழுவதையுமே தான் நினைத்ததை அமுல் படுத்தினாள்

அன்றைக்கு சனிக்கிழமை பெட் கவரை சலவை செய்து மாடியில் உலர்த்தியிருந்தவள் இருட்டும் வரை எடுக்க மறந்து போயிருந்தாள்! சாப்பிடும் போது தான் அது ஞாபகம் வந்து தொலைக்க வேகமாய் கதவைப்பூட்டிக்கொண்டு மாடிக்கு ஏறியவள் படிகளில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.

இந்த நேரத்துக்கு யாரும் அங்கே மொட்டைமாடிக்கு வருவதில்லை. இன்றைக்கு முதலில் அவளின் கண்ணில் பட்டது ஒரு குட்டி மேசை! அதில் ஒரு பத்து மெழுகுவர்த்திகள் எரித்து வைக்கப்பட்டிருக்க ஒரு காலி பீட்சாப்பெட்டியும் இரண்டு கோக் பாட்டில்களும் இருந்தன. லேசாக ஒரு பியானோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இருளில் அந்த மெழுவர்த்திகளும் இசையும்  சட்டென அந்த சூழலுக்கே ஒரு வேறொரு வண்ணம் கொடுத்ததை ஆவலாக பார்த்தவள் யாரோ காதலர்கள் வந்து இருக்கிறார்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்துடன் சத்தமே இல்லாமல் பெட் கவரை எடுத்துக்கொண்டு போய் விட நினைத்தாலும் ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்துவிட்டு அப்படியே உறைந்து நின்றாள். அவளின் கண்ணில் இருந்து அவளை அறியாமலே ஒரு சொட்டு கண்ணீர் உற்பத்தியாகியது.

அங்கே யாழினியும் அவளுடைய அப்பாவும் சாப்பிட்டு முடித்து விட்டு அந்த இசைக்கேற்றபடி கைகோர்த்து சின்னதாய் நடனமாடிக்கொண்டிருந்தனர்! கேள்விப்புலனற்ற தன் மகளுக்காய் அவளின் பாதங்களை தன் கால் மேல் வைத்துக்கொண்டு அவர் ஆடமுயல அது நடனமாகவே இல்லை!! இருவருக்கும் அது புரிந்தே இருந்தது. ஏனெனில் அவர்களும் தங்களை எண்ணி வாய் விட்டு சிரித்தபடி ஆனால் விடாமல் ஆடிக்கொண்டிருந்தனர்! அது அவர்களுக்கு முதல் தடவையல்ல என்பதையும் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

இசை முடிந்ததும் தந்தையின் கழுத்தை இறுகக்கட்டிக்கொண்ட யாழினி வாய்விட்டு எதுவும் சொல்லாவிடினும் அவளது உடல் மொழி நாளையில் இருந்து உங்களை நான் மிக மிக மிஸ் செய்வேன் அப்பா என்று சொல்வதாக தான் ஆர்ணவியால் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் நாளை கிளம்பப்போவது அவளுக்குத்தான் தெரியுமே!

சத்தமில்லாமல் மூன்றாம் மாடிக்கு வந்தவள் பிறகு இரண்டிரண்டு படிகளாய் தாவி அர்ஜூனாவின் தளத்துக்கு வந்து பெல்லை அழுததோ அழுத்து என்று அழுத்தினாள்

கதவி திறந்தவரின் முகத்தில் என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டாயா என்பதற்கு கிட்டிய ஒரு முகபாவனை தன் இருந்தது.

என்ன இந்த நேரம்?

நீங்க யாழினியை அவங்கப்பா அழைச்சிட்டு போறதை தடுக்காதீங்க சார்.

சட்டென அவர் கண்கள் கோபத்தில் இடுங்கியத்தை கண்டு கொஞ்சம் பயந்து தான் போனாள் அவள்

இல்ல சார், அவ அவங்கப்பாவை ரொம்பவே மிஸ் பண்றா!

இதோ பார். எங்கள் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிடுவதை நான் விரும்பமாட்டேன். உன் வேலை எதுவோ அதை மட்டும் பார்ப்பது உனக்கு நல்லது. வார்த்தைகளை கோபமாய் துப்பிவிட்டு அவர் கதவை அடித்துக்கொள்ள

நீங்க பண்றது எல்லாம் சரியென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சார். ஆனைக்கும் அடி சறுக்கும். யாழினி விஷயத்திலும் என் விஷயத்திலும் உங்கள் முடிவுகள் ரொம்பவே தவறு!! கூடிய சீக்கிரத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!!! அவள் பூட்டிய கதவின் முன் நின்று கோபமாய் சவால் விட படிகளில் இறங்கி வந்த மேல் வீட்டு ஆன்ட்டி அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டு இறங்கி சென்றார். சட்டென அவமானத்தில் முகம் சிவந்து போனவள் தன் வீட்டுக்குள் நுழைந்து தானும் கதவை அடித்து சாத்தினாள்

வருவாள்

11 thoughts on “ஆழி- அர்ஜூனா 8

  1. Very nice Ushanthy. Yazhini n her father’s special way of bonding brings a close to heart feeling. Aarnavi seems to getting close to self analysis mode 🙂 Arjuna is a piece definitely! Thnx!

    Like

  2. Ha ha ara kalakurale,kadala pathi ipidi oru definition ketathe ila,scientistnale ethavathu vithyasama than pesanuma enna,kadavule!inthe Arjuna kitte irunthu please ara va kapathunga please.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: