ஆழி- அர்ஜூனா 13

images

சில்லென்ற குளிர் காற்று பூட்டிய யன்னல்களைத்தாண்டியும் வீசுவது போலிருந்தது. மழை வரப்போகிறது. இங்கே வந்ததன் பிறகு அவள் காணப்போகும் முதல் மழையல்லவா? ஓடிப்போய் யன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்தவள் குளிர்காற்று நேராக மேனியில் படுவதை உணர்ந்து அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

சில கணங்கள் தான்… எங்கிருந்தோ சுழன்று கொண்டு வருவதைப்போல மழை நாற்பத்தைந்து பாகையில் சீறியடிக்க தொடங்கியது. இனியும் திறந்து வைத்திருந்தால் வீட்டுக்குள் சாரலடித்து திரைச்சீலைகள் நாசமாகும் அபாயத்தை உணர்ந்தவள் மீண்டும் அவசரமாக  யன்னல்களை சாத்த ஆரம்பித்தாள்

காலையில் ஸ்கூலில் இருந்து மீட்டிங்குக்கு அழைப்பு வந்த நேரத்தில் இருந்து ஒரே பதற்றமாகவும் யோசனையாகவுமே சுற்றிக்கொண்டிருந்தாள் அவள்.

என்ன ஆகப்போகிறதோ? அவனை நீக்கிவிடுவார்களா?

எப்பாடு பட்டேனும் புது ஸ்கூலில் இடம் வாங்கிக்கொடுப்பாள் தான்..ஆனால் மொத்தமாக ஒடுங்கிப்போய் விடுவானே.. பட்ட பாடுகள் அனைத்தும் வீணாகி விடுமே

ராகவி வேறு கூட்டத்துக்கு வரமாட்டாள். ஆகவே தனியாக அன்றைக்கு அவள் தான் சமாளிக்க வேண்டும். யோசனை மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்க கடைசி யன்னலை சாத்த மனமற்று யன்னல் கம்பிகளில் முகம் வைத்து வெளியே பார்த்துக்கொண்டு நின்றாள் ஆர்ணவி.

ரங்கம்மாவின் ஸ்கூட்டி அப்பார்ட்மென்ட் வளாகத்துக்குள் புகுவதையும் முழுக்க தன்னை மழைக்கோட்டினால் மூடிக்கொண்டு ஒரு பளபளக்கும் சில்வர் பெட்டியோன்றுடன் அவள் படியேறுவதையும் கவனித்தாள் ஆர்ணவி.

ஷா..மழை நாள் என்றாலும் ஏதாவது ஒரு வகையில் துடிப்பாக தன்னுடைய வேலையை முடித்து லாபம் பார்த்துவிடும் அந்தப்பெண்மணிக்கு மனதாலேயே ஒரு சலூட் வைத்தவள் யன்னல் வழி அவளையே பார்த்து நின்றாள் அவளது வீட்டைத்தாண்டியே படியேறப்போகும் ரங்கம்மாவுக்கு ஒரு ஹாய் சொல்வதற்காக!

“அட..ஸ்கூல் லீவ் விட்டதும் ஜாலியா இருக்கீங்கல்ல?” என்று கேட்டபடி அவளை நெருங்கினாள் ரங்கம்மா

இன்றைக்குத்தான் கடைசிநாள் என்று நானே வருத்தத்தில் இருக்கிறேன் என்று சிரித்தவள் உள்ளே வாங்களேன் என்று அழைத்தாள்

இருங்க.. இதை கொடுத்துட்டு வந்துடறேன் என்றவள் பதிலுக்கு காத்திராமல் மேலே ஏறிச்சென்று விட்டு சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள். கதவை திறந்து வைத்து விட்டு டீக்காக கெட்டிலில் நீரை கொதிக்க வைத்து விட்டு  காத்திருந்தாள் ஆர்ணவி.

உள்ளே வாங்க ரங்கம். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு போகலாம். காலடிச்சத்ததை கணக்கிட்டபடியே கிச்சனில் இருந்து ஆர்ணவி அழைக்க தயக்கமே இல்லாமல் உள்ளே வந்தாள் ரங்கம்மா

சீராக திருத்தப்பட்ட தோற்றம். அதே நேரம் தாமரையிலைத்தண்ணீராக மட்டுமே பழகும் நிமிர்வு. இந்தப்பெண்மணியிடம் எல்லாமே அவளை ஈர்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் ஆர்ணவி.

அவள் நீட்டிய டீ கோப்பையை எடுத்துக்கொண்டவள் ”மேல் வீட்டம்மா. இரவுச்சாப்பாடு நான்கு பேருக்கு கேட்டிருந்தார்கள் அதைத்தான் கொடுத்து விட்டு வந்தேன். என்று புன்னகைத்தாள்

சாப்பாடு டெலிவரியும் பண்ணுவீர்களா/

எல்லாருக்கும் இல்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் செய்வதுண்டு என்றவள் “இப்போ எல்லா பிரச்சனையும் சரியாகிவிட்டதா? என்று பரிவாக விசாரித்தாள்

செய்திகளை ரகசியமாக வைக்க முடியுமா என்ன? ஊரே இதைப்பற்றித்தானே பேசுகிறது!,,

“சின்னப்பையனை காப்பாற்றமுடிந்தது. பெரியவர்களை மீட்பு நிலையத்துக்கு அனுப்பிவிட்டார்கள்” என்று சுருக்கமாக பதில் சொன்னாள் ஆர்ணவி.

பச்… சிலர் வாழ்க்கையில் கடவுள் அப்படி எழுதி வைத்து விடுகிறான். இனியாவது அந்தப்பையனுக்கு வாழ்க்கை நல்லா இருக்கவேணும். ஆனால் அது சுலபமில்லைம்மா. நம்ம ஊரை பற்றி தெரியாதா என்ன? அதை விடுங்க. நான் இப்போ வந்ததே உங்களுக்கு சொல்லணும்னு தான். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் கொஞ்சநாள். எந்தபுற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ? நீங்கள் தான் உதவி செய்ததாக எல்லோரும்  உங்களின் அடையாளம் சொல்லி பேசிக்கொள்கிறார்கள்.

ஹ்ம்ம் என்று யோசனையாக தலையசைத்தவள் “நீங்கள் சொன்னது பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்கூலுக்கு விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்வோம் என்று தான் நினைத்தோம் ஆனால் இன்றைக்கு மாலை அவசர பெற்றோர் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். என்ன ஆகப்போகிறதோ என்று அதுவேறு பதட்டமாக இருக்கிறது” என்று சொன்னாள்

“இது கொடுமைங்க. அவனாக திருந்தி வந்தாலும் அவன் மேல் முத்திரை குத்தி தள்ளிவைத்து விட்டால் எதிர்காலம் இல்லாதவன் திரும்ப எங்கே போவான்?”

ஹ்ம்ம்..என்னால் முடிந்தளவு  அப்படியேதும் ஆகாமல் பார்ப்பேன். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்று தான் யோசனையாக இருக்கிறது.

தள்ளிவைத்தால் வைத்து விட்டு போகட்டும்ங்க..என்னை பாருங்கள் என்ன கெட்டுப்போய்விட்டேன். என் கணவர் இறந்து போனதும் நான் வெளியில் கடைபோட போனதில் இருந்து எத்தனை ஏச்சையும் பேச்சையும் தாங்கியிருப்பேன். கண்டுகொள்ளாமல் கடந்து போக கற்றுக்கொண்ட பிறகு இது எதுவும் என்னை பாதிப்பதில்லை. அந்த பையனும் சமாளித்துக்கொள்வான். நீங்க கவலைப்படாதீங்க. நான் கிளம்பறேன்..

ரங்கம்மா சொல்லிக்கொண்டு கிளம்பிப்போக ஆயிரம் யானை பலம் கிடைத்தவள் போல உணர்ந்தாள் ஆர்ணவி,

அதுதானே. இன்னும் மீட்டிங்கில் என்ன செய்யபோகிறார்கள் என்று தெரியாது! அப்படியிருக்க அதையே நினைத்துக்கொண்டிருப்பானேன். அப்படித்தான் அவனுக்கு டீசி கொடுத்தாலும் இந்த ஸ்கூலை நம்பித்தான் அவன் படைக்கப்பட்டானா என்ன?

முடிந்தவரை போராடுவோம். இல்லையோ ப்ரீயா விடு ஆரா.

தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் தன்னுடைய கூடை நாற்காலியை கழற்றிகொண்டு பல்கனிக்குப்போய் மழை படாத மூலையில் கொழுவி வைத்தவள் காதில் ஹெட் செட்டுடன் அதற்குள் சுருண்டு கொண்டாள்.

இளைய ராஜாவும் மழையுமாய் அவள் நேரம் பறக்க ஆரம்பிக்க இடையில் குறுக்கிட்ட குத்துப்பாடலால் ப்ளே லிஸ்டை அட்ஜஸ்ட் செய்ய முனைந்தவள் யாழினியின் சிரிப்பு சத்தத்தில் கவனம் கலைந்து எதிரே பார்த்தாள். மூலையில் இருந்ததால் இவளை அவர்கள் கண்டிருக்க முடியாது. ஆனால் இவளுக்கு நன்றாகவே அந்தப்பக்கத்தை பார்க்க முடிந்தது.

அவளைப்போலவே மழையைக்கண்டதும் வட்ட மேசை ஒன்றை இழுத்து வெளியில் போட்டிருக்க வேண்டும். மேசைக்குமேலே முழங்காலை மடக்கிக்கொண்டு யாழினி அமர்ந்திருக்க அவளுக்கு எதிரே விட்டேற்றியாய் சேரில் சாய்ந்திருந்தார் அர்ஜூனா. யாழினியுடன் என்னமோ பேசிக்கொண்டிருந்தார். என்னமோ நீண்ட காலத்தோழர்கள் கதை பேசுவதைப்போலத்தான் அவர்களுடைய தோற்றம் இருந்தது.

வெகு அரிதாக யாழினி காண்பிக்கும் குழந்தை முகத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியபடி அன்றொருநாள் தந்தை வெளியூர் புறப்பட்ட அன்று மொட்டைமாடியில் அவற்றின் கழுத்தைக்கட்டிக்கொண்டிருந்த யாழினி ஆர்ணவியின் நினைவில் வந்துபோனாள்.

இதில் எந்த யாழினி நிஜமானவள்?

அவளை சிந்திக்க விடாமல் எதிரே காட்சி மாறியது. அவர் என்னமோ சொல்லி கண்சிமிட்டியதும் இருவரும் ஹை பை கொடுத்துக்கொண்ட அந்தக்காட்சி ஒரு புகையோவியம் போல தன் மனதில் படிவதை உணர்ந்தாள் ஆர்ணவி.

சத்தமில்லாமல் எழுந்து உள்ளே சென்றவள் மதியத்துக்கு சிம்பிளாக ஒரு சிக்கன் சாலட் செய்து  வேகமாக உண்டு விட்டு பாடசாலைக்கு தயாராக ஆரம்பித்தாள். இரண்டு மணிக்கெல்லாம் ஸ்கூலில் இருந்தாக வேண்டுமே.

இவள் பஸ் ஸ்டாண்டுக்கு போன போது அங்கே அர்ஜூனாவும் தயாராகி காத்துக்கொண்டிருந்தார். இன்றைக்கு அதிசயமாய் பான்ட் ஷர்ட் அணிந்து பார்மலில் இருந்தவரை ஆச்சரியமாய் பார்த்தாலும் புன்னகைக்கவில்லை அவள். அவரை பார்க்காத பாவனையில் மறுபக்கமாக நின்றுகொண்டாள்

அவரும் அப்படியே அவளை தெரியாதவர் போலத்தான் நின்றுகொண்டிருந்தார். ஸ்கூல் வந்து சேரும் வரை! பிறகும் தனித்தனியாகத்தான் மீட்டிங் நடந்த ஹாலுக்கு சென்று சேர்ந்தனர் இருவரும். அவள் உள்ளே நுழைந்ததுமே பரிமாறப்பட்ட பார்வைகளை பார்த்ததுமே இது நிச்சயம் அவர்களுக்கு சோதனையாகவே அமையப்போகிறதென புரிந்து போனது ஆர்ணவிக்கு!

நேராகச்சென்று தனியாக இருந்த சேர் ஓன்றில் அமர்ந்து கொண்டவள் எத்தையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.

டென்ஷன் வேண்டாம் ஆரா…

மீட்டிங் தொடங்கியது.

முதலாவது வாக்கியமே ஐம்பது வருடங்களாக பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் கட்டிக்காத்த பள்ளி இது. இந்தப்பள்ளியில் இன்றைக்கு கறுப்பு சம்பவம் நடைபெற்று விட்டது என்பது தான்.

ஞானி போல அமர்ந்துகொண்டிருந்தாள் ஆர்ணவி

நடந்ததை சுருக்கமாக சொல்லிவிட்டு பெயர் குறிப்பிட முடியாத பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் மேலிடத்தை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நடந்துகொண்டதற்கு கடும் மனவருத்தத்தை  தெரிவித்தார் அதிபர்.

மாணவர்கள் தவறு செய்தால் தண்டனை ஒன்று தான் என்றும் தேவையில்லாமல் சிஹ்யா பாடசாலை ஆசிரியர்கள் என்ற பெயருடன் பிரச்சனையில் மூக்கை நுழைத்து பாடசாலைப்பெயர் கெடுவதற்கு காரணமாக இருந்தார்கள் என்று தான் பேசியவர்கள் அனைவரும் சாராமல் பெயரை குறிப்பிடாமல் ஆர்னவியையும் அர்ஜூனாவையும் குரிப்பிட்டுப்பேச இத்தனை நேரமும் கட்டிக்காப்பாற்றிய பொறுமையும் நம்பிக்கையும் பறந்து அவளுக்கு லேசாய் உதடு துடிக்க ஆரம்பித்தது.

மெல்ல எழுந்து நின்றாள் அவள். ஒட்டுமொத்த ஹாலும் ஊசி போட்டால் கேட்குமளவுக்கு நிசப்தமாகி விழிகளை அவள் மேல் பதித்தது.

நான் தான் ஆர்ணவி. நீங்கள் பெயர் குறிப்பிடாமல் பேசிய ஆசிரியர்களில் ஒருத்தி. என்று மென்மையாக ஆனால் அழுத்தமாக சொன்னவள் “நான் இதில் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்? என்று அழுத்தந்திருந்தமாக கேட்டாள்

இது என்ன கேள்வி? நீங்கள் விஹயம் தெரிந்ததும் மானேஜ்மேன்ட்டிடம் விஷயத்தை சொல்லிவிட்டு பேசாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியே போலீசுக்கு போகவேண்டுமானாலும் சிஷ்யா மாணவர்கள் எல்லோர் பெயரையும் தவிர்த்திருக்க வேணும்!!! பொறுப்பில்லாமல் செய்து விட்டு கேள்வி வேறு கேட்கிறீர்களா? என்று வெகு சூடாக கேட்டார் ஒரு பழைய மாணவர் சங்க உறுப்பினர்

ஓஹோ.. நான் மானேஜ்மேன்ட்டிடம் சொல்லியிருந்தால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருப்பீர்கள். அவள் திருப்பிக்கேட்டாள்

TC தான்!!! எங்கள் பாடசாலையில் ஒழுக்கக்கேட்டுக்கு இடமே கிடையாது. பெருமையாய் சொன்னார் அந்த மனிதர்

ஓஹோ.. சாரி சார் நான் உங்களைப்போல கௌரவத்தை கட்டிக்காக்கும் பெரிய ஆசிரியை கிடையாது. நாட்டின் பொறுப்புள்ள ஒரு சாதாரண குடிமகள். உங்களைப்போன்று இந்த பெரிய சொற்களுக்கு அர்த்தம் தெரியாது எனக்கு. ஒரு ஆசிரியையாய் மாணவர்களுக்கு சரி தவறு என்று எது எனக்குத்தோன்றியதோ அதை நான் செய்தேன். என்று நக்கல் தெறிக்க சொன்னவள் சரி. எல்லாம் முடிந்தது. இப்போது எதற்காக இங்கே பிரேத பரிசோதனை நடக்கிறது என்று கேட்டாள்.

மிஸ் ஆர்ணவி. கொஞ்சம் பொறுப்பான ஆசிரியையாக பேசுங்கள். ஒருவர் எகிற

பொறுப்பை பற்றி நீங்கள் பேசாதீர்கள் சார். கடமைகளின்று கைகழுவிக்கொள்ளும் நீங்களெல்லாம் மாணவர்களுக்கு கற்பிக்க என்ன தகுதி வைத்திருக்கிறீர்கள்? பதிலுக்கு கேள்வி கேட்டாள் ஆர்ணவி.

சூடான கேள்வி பதில்கள் அங்கும் இங்கும் பறந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியைகளில் ஒருத்தி  அவளைப்பிடித்து இழுத்து அமர வைக்க கோபமாக அமர்ந்து கொண்டவள் பல்லைக்கடித்தபடி நடப்பதை கவனித்தாள்.

இப்போது இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது? பெற்றோரின் விருப்பம் என்ன? யாரோ பெற்றோரிடம் கேட்டார்கள்.

ஆங்காங்கே குரல்கள் ஸ்கூலை விட்டு அனுப்புங்க, எங்கள் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து படிப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது. அவர்கள் திருந்தி விட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தன.

பொறுமையை கைவிட்டு  மீண்டும் எழுந்தாள் அவள்

மற்ற இருவர் மறுபடி ஸ்கூலுக்கு இப்போதைக்கு திரும்பி வரப்போவதில்லை. சின்னப்பையன் சுபாங்கன் தெரியாமல் செய்துவிட்டான் என்ற அடிப்படையில் அவனை மன்னித்து போலீசே அவனுடைய  எதிர்காலம் கருதி உதவும் போது மாதா பிதா குரு தெய்வம் என்று பெருமையடித்துக்கொள்ளும் நீங்கள் அவனை சேர்த்துக்கொள்ள கூடாது என்பீர்களா?

நடப்பதை பேசுங்கள்? எல்லா மாணவர்களுக்கும் ஒரே நியாயம் தான்

நியாயம் பற்றி நீங்கள் பேசக்கூடாது சார். சுபாங்கனை அழைத்து பேசுங்கள். அவனுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுங்கள், அவதானியுங்கள். அதன் மேலும் அவன் திருந்தாமல் இருந்தால் தண்டனை கொடுங்கள். ஆரம்பத்திலேயே அவனுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்பை பறிப்பது நியாயமாக இல்லை!

அதுவரை எங்கள் பிள்ளைகள் வாழ்க்கையினை ரிஸ்க் எடுப்பதா?

இது என்ன பிளேக்கா சார்? தொற்றிக்கொள்ள..நம் மாணவர்களுக்கு இப்போதைய உடனடித்தேவை விழிப்புணர்வு! அதை செய்யாமல் கிணற்றுத்தவளை போல பேசிக்கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் சுபாங்கனை ஸ்கூலை விட்டு வெளியே அனுப்பினால் அது மிகத்தெளிவான மனித உரிமை மீறல்!

என்ன சட்டம் பேசுகிறாயா? ஒரு ஆசிரியர் ஏக வசனத்தில் தடிப்பாக கேட்டார்

ஆமாம் சார்!!! சட்டம் தான் பேசுகிறேன்! பேசுவது மட்டுமல்ல செய்தும் காட்டுவேன்..அவளுக்கு கோபத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை.

நீங்கள் எங்கே நின்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் தெரிகிறதா ஆர்ணவி?

நன்றாகவே தெரிகிறது. தங்கள் கடமையை மறந்த மனிதர்களிடம் பேசுகிறேன்… நீங்கள் செய்வது பச்சை மனித உரிமை மீறல்..அதை மறுக்க நினைக்காதீர்கள்!

மிஸ். ஆர்ணவி நாங்கள் ஒரு தனியார் நிறுவனம் எங்கள் code of ethics படி நாங்கள் அவனை நிறுத்துவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.

உங்கள் code of ethics ஐ நானும் படித்து விட்டுத்தான் வந்தேன்! எங்குமே முதன் முறையாக  தவறு செய்த மாணவனை கேள்வியே இல்லாமல் நீக்க முடியும் என்று இல்லை. குற்றம் இழைத்தவனாக இருந்தால் தெளிவான ஆதாரங்கள் அடிப்படையிலேயே நீக்க முடியும். அப்படிப்பார்த்தால் போலீஸ் தரப்பில் அவர்கள் கைது செய்யப்பட்ட அடையாளங்களே இல்லை.

நீங்கள் எங்களுக்கு கட்டுப்பட்ட ஆசிரியை ஆர்ணவி

அப்படியா? நான் உங்களுடன் காண்ட்ராக்ட் எதுவும் போட்ட ஞாபகம் எனக்கில்லை. ஒன்று மட்டும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் அவனை நீக்கினால் இதை விட பிரமாதமான எதிர்காலத்தை எங்களால் அவனுக்கு கொடுக்க முடியும். ஆனால் உங்கள் பாடசாலைக்கு மேல் நானே வழக்கு தொடர்வேன் என்று  உணர்ச்சி வசப்பட்டு கத்தியவள் அனைவரும் அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருக்க விடு விடுவென்று எழுந்து வெளியே நடந்தாள்.

நான் கொஞ்சம் பேசலாமா? தனக்குப்பின்னே கேட்ட அர்ஜூனாவின் குரலில் அப்படியே பிறேக்கிட்டு நின்றாள் ஆர்ணவி. அவளுக்கு அவரின் இந்தக் குரல் புதிது.. இப்போதுதான் அர்ஜூனாவின் ஆவி புகுந்து விட்டவளைப்போல அவள் ஒரு வெறியாட்டம் ஆடி முடித்திருக்க இந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரா? அவர் தன்னையறியாமலே திரும்பிப்பார்த்தாள்

யாரும் பதிலளிக்கவில்லை.

ஆனாலும் சந்தர்ப்பத்தை எடுத்துக்கொண்டு முன்னே வந்தவர் மைக்கின் முன்னே போய் நின்றார்.

மிஸ் ஆர்ணவி. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டார்கள். என்று புன்னகைத்தவர் நேராக விஷயத்துக்கு வந்தார். அமைதியான குரலில் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அதற்கு அழுத்தம் கொடுத்து அவர் பேசியதை மலைப்பாக பார்த்த வண்ணம் வாசலை விட்டு கொஞ்சமும் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள் அவள்

என்னுடைய சகோதரன் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிகாரியாதலால் எனக்குத்தெரிந்த விடயங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள்.

இந்த மாவட்டத்தில் 40 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தமாக வழித்து துடைத்து கைது செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

இல்லை..

அப்படியானால் ஆபத்து இன்னும் விலகவில்லை. இந்த நோய்க்கு மருந்து தேவையே தவிர தொற்று ஏற்பட்ட பகுதியை வெட்டியெறிய ஆரம்பித்தால் நாளை வெட்ட நமக்கு எதுவும் மீதமிருக்காது. இன்றைக்கு நாங்கள் பேசியிருக்க வேண்டியது இதைப்பற்றித்தான். எப்படி ஆசிரியர்களாக சேர்ந்து பாடசாலை மட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நாங்கள் இன்றைக்கு கூட்டம் நடாத்தியிருக்க வேண்டும்! அதை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவனை துரத்தி விட்டு நாங்கள் கௌரவமானவர்கள் என்று காட்டுவது அல்ல நாம் செய்ய வேண்டியது.

இன்னொரு விஷயம் சொல்கிறேன். இதில் யாரெல்லாம் பீச்சிற்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச்சென்று ஒருநாளாவது ஐஸ்க்ரீம் வாங்கித்தந்திருப்பீர்கள்?

கிட்டத்தட்ட எல்லா கரங்களுமே உயர்ந்தன.

அங்கே ஐஸ்க்ரீம் விற்கும் விக்டர் எனப்படும் சுருள்முடிக்காரனும் போலீசாரால் போதை மருந்து விநியோகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறான் என்று உங்களுக்கு தெரியுமா? ஐஸ்க்ரீமில் கலந்து விற்பதே அவன் செய்த வேலை! அப்படியானால் தெரிந்தோ தெரியாமலே இங்கிருக்கும் எல்லா பெற்றோரும் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தந்திருக்கிறீர்கள்! உடைத்து சொல்வதானால் நீங்களே அதை உங்கள் கையால் பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள், சரியான விழிப்புணர்வே இல்லாமல் மூன்று நாட்கள் ஏமாந்து போன குட்டிப்பையனில் அத்தனை தவறையும் தூக்கிப்போட்டு அவனை துரத்துவது சரியா? மற்றவர்களை பற்றி நாம் பேசவேண்டாம். அவர்கள் நீண்ட கால பாவனையாளர்கள் அவர்கள் பாடசாலைக்கு ஆபத்து என்று பாடசாலை கருதுமிடத்து அவர்களை நீக்குதல் நியாயமே..ஆனால் இந்த சின்னப்பையனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது தான் நியாயம் என்று எனக்குத்தோன்றுகிறது.

அவனுக்கு நான் கியாரண்டி கொடுக்கிறேன். இந்த ஒரு முறை அவனுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள். போலீஸ் காட்டிய கருணையை நம் மாணவன் மேல் நாம் காட்டாதிருப்பதா? முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். நிறுத்தி விட்டு ஒரு நிமிஷம் மௌனமாய் மக்களையே பார்த்தார் அவர்.

படபடவென்று கை தட்ட வேண்டும் போலிருந்தது ஆர்ணவிக்கு. அவரின் பார்வை தன் பக்கம் திரும்பும் வரை காத்திருந்தவள் திரும்பியதும் உள்ளங்கையை பொத்திக்கொண்டு நெஞ்சில் வைத்து வட்டமாய் அசைத்து காண்பித்தாள். கண்ணும் முகமும் சிரிப்பில் மலர அவள் சைகை பாஷையில் வேண்டிய அந்த மன்னிப்பு அவரது முகத்திலும் சட்டென்று தொற்றிக்கொண்டு வழக்கமான குறும்புப்புன்னகையை அவரிடம் தோற்றுவித்தது.

“உணர்ச்சி வசப்பட்டு அதிகம் பேசிவிட்டேன். எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று தாமதிக்காமல் சொல்லிவிட்டு ஓடிப்போய் தன்னிடத்தில் அமர்ந்தாள் ஆர்ணவி. அன்றைக்கு அவள் வேண்டியது போலவே சுபான்கனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது!!!

 

 

12 thoughts on “ஆழி- அர்ஜூனா 13

  1. ஹாய் உஷா அருமையான பதிவுகள் ….இன்று தான் படிக்க நேரம் கிடைத்தது …..இன்று இளைய சமுதாயத்தை அடிமையாக்கும் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று இந்த போதை மருந்து …..பலர் தெரிந்தும் சிலர் அறியாமலும் இதில் விழுவது தான் கொடுமை …..பல இடங்களில் அழுத்தமான வசனங்கள் ……அழகான விளக்கங்கள் …..மிகவும் அழகாக கதையை கொண்டு போறீங்க …..நன்றி பதிவுகளுக்கு .

    Liked by 1 person

  2. Ayyo ushu enaku visiladikanum pola irunthathu,pch ana theriyathe!super Ud Ara ponginathum super arjun oda aluthamana speech um super,kalakite po.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: