ஆழி- அர்ஜூனா 18

Alia-Bhatt-sad-looking-in-dear-zindgi-movie

ஆர்ணவியின் கூடைக்கதிரை இப்போது எதிர் பால்கனிக்கு பயப்படாமல் நட்டநடுவில் தொங்கிக்கொண்டிருந்தது. காலைக்காபியை கையில் வைத்துக்கொண்டு எதிர்ப்புறம் பல்துலக்கிக்கொண்டிருந்த யாழினிக்கு சைகை செய்து கொண்டிருந்தாள் ஆர்ணவி.

ஒரு வாரமாக இதுவே வழக்கமாகி விட்டிருந்தது. ஆனால் அர்ஜூனாவோ அவள் முகத்தில் பட்டு விடுவதே பாவம் என்பது போல அவளை நேரில் பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டிருந்தார்

“ஹேய் நீ ஸ்கூலுக்கு போகலையா?” யாழினி உரத்த குரலில் கேட்க “இன்றைக்கு நான் லீவ்” என்று இந்தப்பக்கம் இருந்து வாயசைத்தாள் ஆர்ணவி

ஏன்..உடம்பு சரியில்லையா?

“இல்லையில்லை..ஒரு வேலை இருக்கிறது..:

யாழினி!!!!! ஸ்கூலுக்கு போக வேண்டாமா? அர்ஜூனாவின் குரல் உள்ளிருந்து கேட்க சிரிப்பு வந்துவிட்டது ஆர்ணவிக்கு

“சார்.. அதை உள்ளே இருந்து சொன்னால் யாழினிக்கு எப்படிக்கேட்கும்? நான் சொல்ல மாட்டேன்..தேவையென்றால் நீங்களே வெளியே வந்து அவளிடம் சொல்லிக்கொள்ளுங்கள்” சிரிப்பை அடக்கிக்கொண்டு குரல் கொடுத்தாள் அவள்

அவசரமாய் கதவை திறந்து கொண்டு வந்தவர் அவளை முறைத்து விட்டு யாழினியின் தோளில் தட்டி அழைத்துக்கொண்டு திரும்பினார்

“ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்..காத்திருந்தேன்..” அப ஸ்வரத்தில் மீண்டும் அவள் குரல் கொடுக்க

“நல்ல விதமாய் சொன்னால் சிலருக்கு புரிவதே இல்லை. என்னை தேவையில்லாமல் பேச வைக்காதே!!!” அவர் மறுபடியும் முறைத்து விட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டு விட்டார் அர்ஜூனா

ஆக்சுவலி இதையெல்லாம் நான் தான் செய்திருக்க வேண்டும்!!! இங்கு தலைகீழாய் நடக்கிறது..கர்மம்!!!! எண்ணம் விளைவித்த புன்னகை முகத்தில் உறைந்திருக்க அன்றைய இன்டர்வியூவுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்தாள் அவள்..

அவளைப்பொறுத்தவரை மனதில் இருந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டாயிற்று. அவர் மனதிலும் தனக்கான நேசம் இருக்கிறது என்றும் அவளுக்கு தெரியும். அதற்கு மேல் எதையுமே அவள் அப்போதைக்கு யோசித்திருக்கவில்லை.

அவளின் மனம் முழுக்க இன்றைக்கு அவள் அட்டென்ட் செய்யப்போகும் இண்டர்வியூவிலேயே இருந்தது.

ஒன்பது மணிக்கு இன்டர்வியூ, எட்டுமணிக்கே தயாராகிவிட்டவள் பஸ்ஸில் போய் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் டாக்சியிலேயே கிளம்பிப்போனாள்

அங்கே பானலில் இருந்தவர்களில் இருவர் ஏற்கனவே அவளுக்கு பரிச்சயமானவர்களாகவும் இருந்து விட அதை ஒரு வெற்றிகரமான இன்டர்வியூ என்றே சொல்லி விடலாம்! அவளுக்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை.

இந்த மனுஷன் வேறு பேசவே மாட்டேன் என்கிறார். எவ்வளவு முக்கியமான விஷயம் நடந்திருக்கிறது..அவரிடம் பகிர்ந்து கொள்ளவே முடியவில்லையே.. சமீப காலமாக சண்டையோடு சண்டையாக சகலத்தையும் அவரோடு பகிர்ந்து கொள்ளும் வழக்கம் முக்கியமான தருணத்தில் இல்லாமல் போனது அவளுக்கு கவலையை கொடுத்தது..

வழியில் ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் மெலோன் ஐஸ்க்ரீம் புது வகையறா ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்க அதை யாழினிக்காய் வாங்கிக்கொண்டு வந்தவள் பதினோரு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தாள்

வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அர்ஜூனா மனதில் வந்து விட்டிருந்தார். தன் மேல் அவருக்கும் ஈர்ப்பு இருக்கிறது என்று உறுதியாய் நம்பினாள் அவள். இல்லையேல் எதையும் முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் மனிதர் தடுமாறுவதும் அவளைக்காணாமல் ஒளிவதும் எதற்காக? ஏதோ ஒரு காரணத்துக்காய் தன்னை அவர் மறுக்கிறார். அது வயதாக இருக்கும் என்று அவள் நம்பவில்லை. அர்ஜூனாவின் சிந்தனைகள் பரந்து பட்டவை..சமூகத்தின் கருத்தியல்களுக்குள் அவர் என்றுமே சிக்கமாட்டார்.

வேறு என்னவாக இருக்கும்? அவள் யோசித்துக்கொண்டே இருந்த வேளையில் தான் அவளது வீட்டு ஹாலிங் பெல் இடைவிடாமல் அலற ஆரம்பித்தது.

யார் இது? இப்படி விடாமல் அழுத்துவது? யோசனையாக எழுந்து வந்தவள் வெளியே ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்த அர்ஜூனாவை கண்டு திகைத்தாள்

ஒற்றைக்கையால் அவளை பிடித்து விலக்கிக்கொண்டு வேகமாய் உள்ளே வந்தவர் கதவை அறைந்து சாத்தினார்.

அவரது உடல்மொழியே உள்ளுக்குள் குளிரெடுக்க வைக்க மெல்ல மெல்ல பின்னடைந்தாள் ஆர்ணவி

“உனக்கு நல்லவிதமாத்தானே சொன்னேன்.. இதெல்லாம் சரிப்பட்டு வராது..விட்டு விடு என்று! உன் அப்பாவிடம் என்ன சொல்லி வைத்தாய்? அவர் ஸ்கூலுக்கு வந்து தேவையில்லாமல் என் மீது பழி சுமத்துகிறார்!!! அவரை போலீசில் பிடித்து கொடுத்திருப்பேன்.. பழகிய முகத்துக்காக பார்த்து விட்டு விட்டு வந்தேன்..”

என்னது அப்பா ஸ்கூலுக்கு போனாரா? ஐயோ அவசரப்பட்டு வீட்டில் உளறியது தவறாகிப்போய்விட்டதே.. மனதுக்குள் பதை பதைத்த படி அர்ஜூனாவையே பார்த்தாள் அவள். விழிகள் அவமானத்தில் கலங்கிச்சிவந்து கொண்டிருந்தன

நான் தான் இப்போதெல்லாம் உன் கண்ணிலேயே படுவதில்லையே. எப்படித்தான் விலகிப்போனாலும்  புரிந்து கொள்ளவே மாட்டாயா நீ? அவரின் ஆவேசம் குறைவதாக இல்லை

சார்…

பேசாதே.. எல்லாமே உனக்கு விளையாட்டாக போய்விட்டதில்லையா? நான் தான் உன்னை தூண்டி விட்டு உன் மனதை கெடுக்கிறேனாம்! உன் அப்பா எனக்கு சொல்கிறார்.

சாரி சார்..நான் அவர்களுக்கு இப்போதைக்கு சொல்லியிருக்க கூடாது.. அப்பாவிடம் நான் பேசுகிறேன்..சாரி”. இவ்வளவு நாளும் இருந்த தைரியமெல்லாம் குலைந்து பொல பொலவென கண்ணீர் கண்ணைவிட்டு உருள ஆரம்பித்தது ஆர்ணவிக்கு

அவருக்கும் அவளில் இரக்கம் தோன்றியிருக்க வேண்டும்.

“இங்கே வா” என்று அவளது தோளைப்பிடித்து சோபாவில் அமர வைத்து விட்டு எதிரில் தானும் அமர்ந்து கொண்டார் அர்ஜூனா.

“இன்றைக்கு கடைசித்தடவையாக இதை பேசித்தீர்த்து விடலாம். உனக்கு என்னிடமிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ கேள். நான் உணமையான பதில்களை சொல்கிறேன்..”

கண்களை துடைத்துகொண்டவள் நிமிர்ந்து அமர்ந்தாள்

“சார். நீங்கள் ஏன் என்னை வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்பதற்கு எனக்கு நேர்மையான காரணம் வேண்டும். உண்மையிலேயே அர்ஜூனா தன்னை நிராகரித்து விடப்போகிறார் என்ற பயம் மனதைகவ்விக்கொள்ள துடிக்கும் உதடுகளோடு கேட்டாள் அவள்

அவளையே சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தவர் “உண்மைகள் உன்னை காயப்படுத்தும் ஆர்ணவி. ஆனால் இந்த சிக்கலை கடக்க உன்னோடு உண்மையாய் இருத்தலே ஒரே வழி என்று எனக்கு தோன்றுகிறது.” என்று மெல்ல ஆரம்பித்தார்

“உன்னை மறுக்க முதலாவது காரணம்.. நானே தான். நான் ஒரு தனித்த மனிதன் ஆர்ணவி. பிறந்ததில் இருந்து எனக்கென்று யாரும் இருந்தது இல்லை. கொஞ்சம் வளர்ந்ததும் அப்படி ஒருவர் உருவாகிவிடாதிருக்க நானாகத்தான் பாடுபட்டேன்!  சமூக கட்டுப்பாடுகள் என்னை பாதிக்க விட்டதும் இல்லை. என்னால் ஒரு ரொமாண்டிக் குடும்பத்தலைவனாக என்றைக்குமே இருக்க முடியாது! நான் வாழ்க்கை போகும் பாதையில் போய்க்கொண்டு இருப்பவன்..இனிமேல் என்னை மாற்றிக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாதது.”

“இரண்டாவது நீ நான் சொன்னவைகளை காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. காதல் என்று தோன்றியதில் இருந்து உற்சாகத்துடன் விளையாடித்திரிகிறாய்.. நான் சொன்னேனே..என் வாழ்க்கையில் பெண்கள் வந்து போயிருக்கிறார்கள் என்று..அதைக்கூட நீ சீரியஸாக எடுக்கவே இல்லையே..உனக்கு வாழ்க்கையைப்பற்றி புரியவில்லை ஆர்ணவி..”

இந்த ரீதியில் அவர் வாதிடுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவளா அதை சீரியஸாக எடுக்கவில்லை? இவர் கண்டாரா?

“சார்….அது ஏனென்றால்..”

“விளக்கம் சொல்லாதே ஆர்ணவி!”

தன்னை பேச விடாமல் அவரே ஒரு முடிவுடன் பேசுவதை காண அவளுக்குள் கோபம் தான் மூண்டது. “சரி நான் சீரியசாய் எடுக்காததை விடுங்கள்.அதனால் எனக்கு என்ன குறை வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்

எப்படி சொல்வது.. நான் பழகிய பெண்கள் அநேகம் என் நட்புவட்டாரத்தில் தான் இருப்பார்கள். ஏதோ ஓர் நாளில் அல்லது நாட்களில் நாம் நட்பை விட ஒரு படி தாண்டிச்சென்றிருந்தோம் என்பதை சுத்தமாக மறந்து எல்லோருமே அவர்களின்  தனித்தனி  வாழ்க்கைகளில் மும்முரமாகிவிட்டோம். ஆனால் எனக்கு வரும் மனைவிக்கு அதை குறித்த தெளிவு இல்லாமல் நான் போகும் இடங்கள் பேசும் மனிதர்கள் வரை அவள் சந்தேகப்பட ஆரம்பித்தால் என்னாகும்? நான் ஒரு எழுத்தாளன் எனக்கு அமைதியான மனநிலை தான் எல்லாவற்றையும் விட முக்கியம்!”

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் இவர் அவளைப்பற்றி!!! நேருக்கு நேரே நேர்மையான வாதங்களை பளிச்சென முன் வைக்கும் அர்ஜூனா எங்கே போனார்? தாம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று இவருக்கு புரிகிறதா இல்லையா? சகலத்திற்கும் இலகுவாக பதில் சொல்லிவிடலாம் தான் ஆனால் அவளுக்கு ஒரு விஷயம் தெரிந்தே ஆக வேண்டுமே!

சார்…. என்று இடைமறித்தாள் ஆர்ணவி

ஷ்.. மூன்றாவதையும் சொல்லி விடுகிறேன். உன் வயதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த வருடம் இருபத்தாறு நிறைந்து விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். யோசிக்கத் தெரியாமல் காதல் என்று போய்விழும் டீனேஜ் பெண்ணில்லை நீ. ஆகவே அதற்காக மறுக்கிறேன் என்று தவறாக நினைக்காதே… என் வரையில் உறுதியான காரணம் உண்டு ஆர்ணவி. எனக்கு கொஞ்சம் என் சாதனைகளின் மேல் கர்வம் உண்டு. நான் இப்படிப்பட்டவன் என்ற பெருமை நிறைய இருக்கிறது. எனக்கு வாழ்க்கைத்துணையை தேடும்போது அவளை எனக்கு பிடித்திருக்க வேண்டும். என் துணைவி தெளிவான தீர்க்கமான சிந்தனை கொண்டவளாய் இருக்க வேண்டும். பல சமயங்களில் எனக்கு உன்னை விட யாழினி முதிர்ச்சியாய் தோன்றுவதுண்டு. நீ சில விஷயங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறாய் தான். ஆனாலும் ஒட்டுமொத்தமாய் ஆர்ணவி என்று சொன்னால் நீ யார் என்று இருபத்தாறு வயதிலும் உன்னாலேயே கூற முடியாதிருக்கும் போது உன்னை நான் எப்படிப்பார்ப்பேன்?

அவர் கடைசியாய் பேசியது அவளின் நெஞ்சில் நன்றாகவே தாக்கி விட்டிருந்தது. கண்ணில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று வர ஆரம்பித்திருந்தது. அழுகிறோமே..என்பதை விட அவரின் முன்னிலையில் அழுகிறோமே என்ற எண்ணம் தான் அவளை இன்னும் தாக்கியது.

இழுத்துப்பிடித்து புன்னகைத்தாள் அவள்

“இதற்குப்பிறகு என்னுடைய பக்க விளக்கங்களை சொல்வதில் அர்த்தமில்லை சார்” என்ற படி மீண்டும்  கஷ்டப்பட்டு புன்னகை செய்தவள் “ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு மட்டும் உண்மையாய் பதில் சொல்லுங்கள். ஒரே ஒரு தடவையாவது என் மேல் உங்களுக்கு ஈர்ப்பு வரவில்லையா? இனிமேல் நான் உங்களை காதலிக்க சொல்லிவிட மாட்டேன்..பயப்படாமல் சொல்லலாம்” என்று கேட்டாள்

“அது தான் வெளிப்படையாகவே இருந்ததே.. ஆனால் அது முற்றிலும் உடலியல் ரீதியானது!”

“சார்!!!!!!!!!! கொச்சைபடுத்தாதீர்கள் என்னை!”

இது தான் எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம். ஆணினால் பெண் ஈர்க்கப்படுவதும் பெண்ணினால் ஆண் ஈர்க்கப்படுவதும் இயற்கை..ஆனால் நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு வஸ்து இருக்கிறது. எது நமக்கு நல்லது எது கெட்டது என்று நமக்கு புரிந்து கொள்ள தெரியவேண்டும். ஆசைப்படுவதைஎல்லாம் வாங்கி சாப்பிட்டு விட முடியாது ஆர்ணவி.. எனக்கு உன் மேல் நேசம் இருக்கிறது. உன் நலன் விரும்பி நான். என் சுயநலத்துக்காக உன்னை உபயோகித்துக்கொள்ள என்னால் முடியாது

போதும் சார்..இதை கேட்டு நான் அப்படியே மகிழ்ந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இதற்கு மேல் தயவு செய்து எதுவும் பேசாதீர்கள்.

அப்படி எடுத்துக்கொள்ளாதே ஆர்ணவி. எதையும் பலகோணங்களில் உடைத்து ஆராய்வது நமக்கு பிரச்சனையை விட்டு வெளியில் நின்று பார்க்கும் வாய்ப்பை தரும். எப்போதும் இறுதி வார்த்தை உன்னுடையதாகவே முடித்து பழகியவளுக்கு நான் ஓர் சவாலாகவே அறிமுகமானேன். நீ என்னை சவாலாக எடுத்துக்கொண்டதால் தான் விளையாட்டுக்குக்கூட என்னை ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலை பின் விளைவுகளை பகுத்தறியும் உன் வல்லமையை விழுங்கி விட்டது. நன்றாக யோசித்துப்பார்,,

வாசலை நோக்கி கை காண்பித்தாள் ஆணைவி. “கிளம்புங்கள் சார். ஒருவேளை தவறு என்மேலே தானோ என்னவோ.. இன்றிலிருந்து உங்களை நான் டிஸ்டர்ப் செய்யப்போவதில்லை,” உறுதியாய் சொன்னவள் கைகளை மடித்து குறுக்காக கட்டியபடி கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

யோசி. என்று மட்டும் சொல்லி விடு கதவை தாண்டி நடந்தவரை “சார்” என்று அழைத்தாள் ஆர்ணவி.

உங்களிடம் சொல்ல எனக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. பின்னால் மெதுவாக உங்களிடம் பகிர வேண்டும் என்று நினைத்தேன்..இனிமேல் நாம் பேசும் வாய்ப்பு குறைவு என்பதால் இப்போதே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

“உங்களுக்கு மக்களோடு சேர்ந்து பழக பயம் சார், உங்களை சுற்றி நீங்களே ஒரு வட்டம் போட்டு வைத்திருக்கிறீர்கள். உங்கள் புத்திசாலித்தனம், முரட்டு உண்மைகளை, பிறரை காயப்படுத்தும் நிஜங்களை பேசுவது, சமூக கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு வாழ்வது இவைகள் மூலம் மூர்க்கமாய் உங்களை நீங்கள் சமூகத்திடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பயம் சார்!”

யாழினி மட்டும் தான் உங்கள் வட்டத்துக்குள் இருக்க முடியும். இருக்க அனுமதிப்பீர்கள். அதற்காக அவளது சுய விருப்பத்தை மறுக்கக் கூட செய்வீர்கள். என்னிடமே அவள் நேரடியாக சொல்லியிருக்கிறாள். உங்களுக்காகத்தான் இங்கே இருப்பதாகவும் மற்றபடிக்கு தந்தையோடு இருக்கத்தான் விருப்பம் என்று! கண்ணாலேயே பார்த்திருக்கிறேன் சார்.  அவளுக்கு அப்பா மேல் அவ்வளவு பாசம்.. சரி அவளுடைய அப்பாவுக்கு பிசினஸ் ஆரம்ப நிலை சமநிலை பிரச்சனை..இருக்கட்டுமே.. அது அவர்களின் குடும்பத்து கஷ்டம்..குடும்பத்தினராக அவர்கள் இருவருமல்லவா அதை கடந்தாக வேண்டும்? அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களே இல்லை. என்னாலேயே அவளை புரிந்து கொள்ள முடியும் போது அவளோடே வாழும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதை உங்கள் மூளையை எட்ட விடாமல் தடுத்து வைத்திருக்கிறது உங்கள் பொசசிவ்நெஸ்! நீங்களும் போய் நன்றாக யோசியுங்கள்!

போதும் என்று கையை தூக்கி காண்பித்தவர் வேகமாய் வீட்டுக் கதவை திறந்து கொண்டு செல்ல சற்று நேரம் உணர்வே இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஆர்ணவி  ஆர்ணவி.

6 thoughts on “ஆழி- அர்ஜூனா 18

  1. Super Ud ushu,ranagalamala irunthathu,inthe Arjuna voda background than enna,ethuku ipidi behave panraru?analum konjoondu pavam than ,aravoda appa enna panni vacharo schoola?ara than remba pavam pilaya ipidi aluga viduriye neeyum inthe thimiru pidicha Arjuna voda sernthukittu,ithu sari ila parthuko.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: