காதல் என்னை காதலிக்கவில்லை!

woman-3379654_960_720

என் ஆன்மா, என்னுள்ளே எங்கிருந்தோ தூரமாய்க் கேட்கும் அந்த மெல்லிசையை துரத்திக்கொண்டு என் சிந்தனைகள் சிறகு வளர்த்தக் காலம் தொட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. சமயங்களில், தாளகதி என் இதயத்துடிப்போடு ஒத்திசையும்; இதோ தொட்டு விடுவேன் தொட்டு விடுவேன் என்று விழி மூடி கை நீளும்; அப்படியே எல்லாமே நிசப்தமாகிவிடும்.

நீண்ட கை மீண்டும் திசையறியாமல் தட்டுத்தடவி திரும்பி வரும். வலி! ஏமாற்றம்! ஏக்கம்!

காதல் என்னை காதலிக்கவில்லை! என் காதல் மெல்லிசை! என் உயிரின் நீட்டிப்பு விசை! உயிரோடு உறவாக எனக்கே தெரியாமல் என்னை பின் தொடர வைக்கும் மாயவிசை!

அது என் கை சேராமல் இருக்கும் வரை தான் என் உயிரின் ஓட்டம் இருக்கும் போலிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மழைக்கேங்கும் சாதகப்பட்சியாய் என்னிசை வரும் திசை தேடி ஓடிக்கொண்டிருப்பவளுக்குத் தவிப்பும் கண்ணீரும், தனிமையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இசையைத்தேடி ஓடும் என் ஆன்மாவுக்கு அது கை சேர்வதை விட அந்த ஓட்டத்தைத் தான் பிடித்திருக்கிறது போலும். அது ஏனோ எந்தப் புலம்பல் பத்திரங்களும் வாசிப்பதே இல்லை. வலிகளும் வேதனைகளும் இன்று போய் நாளை வருவது போல என் நாட்களில் சாதாரணங்களாய் கடந்து போக, என் ஓட்டத்தில் பின்னே ஓடும் மரங்களாய் பிறரின் மகிழ்வும், காதலும் என் கண்ணிலேயே பதிந்திருக்கின்றன.

அட நான் வருந்தவில்லை, வருந்தியதே இல்லை!

காதல் எல்லோரையும் காதலித்து விடுவதில்லை. என் கண்ணில் புகைப்படலக்காட்சிகளாய் கடக்கும் கனவுகளை கலைத்து முத்தமிடும் மேலிமைகளை கீழிமைகள் மிரட்டிப்பிரிப்பதில் இருந்தே என் பிரிவுகள் ஆரம்பித்து விடுகின்றன.

காதலை தழுவிக்கொள்ளத் துடிக்கும் நீராய் முனையும் என்னை, அது, துவாலை கொண்டு ஒற்றித்துடைக்க, அங்கும் இங்கும் எட்டிப்பார்க்கும் துணி முட்களுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் என் ஆன்மா.

அன்றொருநாள் காலில் மண்ணாய் ஒட்டிக்கொண்ட என்னை வாசலில் கிடக்கும் சாக்கில் அது உதறிச்சென்ற போது, ‘உனக்குக் கோபமே வராதா?’ என்று சாக்கின் இழைகள் என்னைப் பிடித்து உலுப்பின. வராது! தேடலே என் ஆயுளின் நீட்டிப்பு விசை. அது அந்த இழைகளுக்குப் புரியவில்லை.

சரி காதல் உன் கை சேர்ந்தால் உன் தேடல் முடிந்து போய்விடுமல்லவா என்று கேட்கின்றன. ஹா ஹா தேடலே என் காதல் என்று அவைகளுக்கு எப்படிப் புரியவைப்பேன்?

உயிரின் கடைசிச் சொட்டு மிச்சம் இருக்கும் வரை எனக்குத் தேடிச்செல்வதற்கு ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தானே இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன், காதல் எல்லோரையும் காதலிப்பதில்லை. காதலையும் எல்லோரும் காதலிப்பதில்லை. இசையைத் தேடிச்சென்றால் அது இசைப்பவனிலோ கருவியிலோ தான் சென்று முடியும். இசையைக் காதலிப்பவன் வீணையை வாங்கிப் பூட்டிக்கொண்டால் இசை வந்து விடுமா?

தேடல் ஒரு செயல். அதே போல இசைத்தலும் ஓர் செயல். காதலும் ஓர் செயல். காதலைத் தேடிச்சென்று காதலியையோ காதலனையோ கண்டு கொள்ளுதல் இசையை விரும்பி இசைப்பவனை எடுத்துக்கொள்ளுதல் ஆகாதா?

ஹா ஹா சாக்கின் இழைகளுக்கு ஏதும் புரியவில்லை போலும்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அவைகளை யாரோ எடுத்து உதறத் தூரமாய் துள்ளி விழுகிறேன் நான். அதோ, மீண்டும் என் இசை கேட்கின்றது. என் ஆதி அந்தம் எல்லாமே அது வியாபித்து நிறைய, என் சுயம் மறந்து நான் மீண்டும் ஒட ஆரம்பிக்கிறேன்.

அவளாகியவள்

fantasy-art-artwork-girl-light-1080P-wallpaper

ஒளியாகிய பெரியவருக்கு ஒரு மகள் இருந்தாள்.

தாமிரா.

தாமிரா போல ஒருத்தியை நீங்கள் கண்டிருக்க முடியாது. கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும் காற்றின் அசைவுகளில் கூட அவளுக்கு புன்னகைக்க காரணம் இருக்கும். அவளின் முடிவுகள் செயலாவதை எந்த காரணியும் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆண், பெண் வேறுபாடுகளை அவள் மனம் அறியாது. அவளுக்கு தெரிந்ததெல்லாம் செயலாற்றல் ஒன்று தான். பிரபஞ்சத்திலேயே அழகி அவள் தான் என்று அவளுக்கு தெரியும். அல்ல அள்ளக்குறையாத அன்புள்ளவள். பிறரை பற்றிய பிரக்ஞைகள் எல்லாம் அவளுக்கு கிடையாது. சரியானதை செய்ய எனக்கு யாருடைய அனுமதி வேண்டும் என்று திருப்பிக்கேட்பாள் அவள். தானே அந்த உலகில் சிறந்தவள் என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது,

ஒருநாள் ஒளியாகிய பெரியவர் அவளை அழைத்தார்.

நீ இன்னும் முழுமைபெற பிறவிக்கடலில் ஜென்மங்கள் எடுத்தாக வேண்டும் நீ போ என்று ஒரு திரையை கை கைகாண்பித்தார்.

எதற்காக என்றெல்லாம் அவரை கேட்டுவிட தாமிராவால் கூட முடியாது. அதெல்லாம் காலம் காலமாக நடந்து வரும் ஒன்று, அந்த வட்டம் தாமிராவால் உடைந்து விடக்கூடாதாம். அவளைப்பொறுத்தவரை இதற்கு மேல் என்ன முழுமை தேவை என்று புரியவில்லை. ஒருவேளை முழுமையாக இருந்தாலுமே கூட அவர் தாமிராவும் பிறரை போலவே அந்த வட்டத்தின் வழி வந்தாக வேண்டும் என்று நினைக்கிறாரோ? அவருக்கு தாமிராவும் பிற ஒளிப்புள்ளிகளை போலவே வெறும் ஒளிப்புள்ளி மட்டுமே. அன்பு பாசம் என்பவற்றை வளர்த்துக்கொண்டால் நியாயம் அவை வளருமளவாய் குறைந்து போகும் என்பது அவரது கொள்கை.

அவளது சோகம் புரிந்தோ என்னமோ அவர் லேசாய் கண்சிமிட்டினார்.

“நான் உன்னை வெறுமனே அனுப்பி வைக்கவில்லை. ஒரு சவாலோடு தான் அனுப்பி வைக்கிறேன். அதை உன்னால் நிறைவேற்ற முடிந்தால் நீ அடுத்த பிறவிக்கு செல்ல வேண்டியதில்லை”

“என்னால் முடியாது என்று என்ன இருக்கிறது?” அவள் ஆர்வமாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இதோ நிரந்தர அமரத்துவத்தை இந்த பிறவியிலேயே அவள் வென்றெடுக்கப்போகிறாள். அவளுக்குள் அதற்குள் கனவுகள்!

“உன் உடலும் நீயும் ஒன்றாக வேண்டும்”

“இது என்ன சவாலா? நான் தான் உயிர் என்னும் போது அந்த உடல் என் சொல்லைக்கேட்காதா என்ன?”

“என்னையே குறைவாக எடை போடுகிறாய் தாமிரா. நான் படைத்த சதையானது மிக மிக சிக்கலானது. அவற்றுக்கு புறவுலகில் ஏராளம் சவால்களும் கவனக்கலைப்பான்களும் உண்டு. ஒருநாள் ஒரு நொடிகூட தங்கள் உடலோடு தொடர்பு கொள்ள முடியாத ஆன்மாக்கள் உனக்கு முன்னே ஓராயிரம் பேர் என் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள்”

“என்னால் முடியும்” தாமிரா அவசரமாய் இடையிட பெரியவர் சிரித்தார். பிறகு கைகளால் என்னவோ வட்டங்கள் செய்து அவளை மறைய வைத்தார். அவள் மறைந்தே போனாள் பூமியை நோக்கி..

பத்து வருடங்கள் குழந்தை இல்லாத வினிக்குள் இருந்து அவளது ஒளியை குட்டியாய் ஒரு சதைத்துண்டு உள்ளிளுத்துக்கொண்டது.

“நான் பேசுவது கேட்கிறதா?” என்று முதல் கேள்வி கேட்டாள் அவள்

மென் குரலில் ஆம் என்றது அது. தாமிராவுக்கு வெகு திருப்தி

ஒன்பது மாதங்கள் அந்த சதைத்துண்டு வளர வளர தான் யார்? அந்த சதைத்துண்டு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மென்குரலில் சொல்லிக்கொண்டே இருப்பாள். அந்த சதைத்துண்டுக்கும் இப்போதெல்லாம் புரியும் போலிருக்கிறது. உற்சாகமாய் கைகாலசைக்கும் என்னவோ அவளது வார்த்தைகளில் உத்வேகம் கொண்டதை  போல. பிறகு அவள் சிரி என்றால் அது சிரித்தது. அவள் கையசை என்றால் அசைத்தது. வெளியே என்னாகும் என்ற பயம் கொஞ்சம் கொஞ்சமாய் தாமிராவுக்குள் மறைந்து நம்பிக்கை பிறந்தது.

நீண்ட நெடிய ஒன்பது மாதங்களின் பின் அவள் கண்ணைத்திறந்த போது வினியை சுற்றி இரண்டு வைத்தியர்களோடு அவள் கணவனாய் இருக்கவேண்டும், கண்பனிக்க நின்றிருந்தான்.

பிடிமானமற்ற கயிறு போல அந்தக்குழந்தை புது உலகில் திமிறி துடித்தது.

அதற்கு பசித்தது

வினியின் தொடுகையில் பேராறுதல் கண்டது.

அந்த மனிதரை பார்த்து சிரித்தது.

முடியாது. ஒளியாக பெரியவரை தவிர வேறு யாரும் உனக்கு தாய் தந்தையாய் ஆக முடியாது. தாமிரா அலறினாள்.

இப்போது தாமிராவின் குரல் வெகு தூரமாய் போய் விட்டதோ என்னமோ, அதற்கு கேட்பதாக இல்லை

எல்லோரும் அதை ஆதிரா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்

குழந்தை வளர ஆரம்பித்தது. அது நிறைவாய் செய்து முடிக்க கூடிய விஷயங்களுக்கெல்லாம் தயங்கித்துயரமடைய தாமிரா உள்ளே சலித்துப்போவாள். திரும்ப திரும்ப உத்வேக மொழிகளை அதன் காதில் சொல்லிக்கொண்டே இருப்பாள். காலம் தவறி அது ஒரு வழியாய் செய்து முடிக்கும்.

அதற்கு வயதாக ஆக தாமிராவின் நிலை போத்தலில் அடைத்த பூதத்தின் நிலையாகிப்போனது. ஒரே ஒரு வித்யாசம் இந்த உடலென்னும் போத்தலுக்கு சிந்திக்க தெரிகிறது தப்பும் தவறுமாக! வெறுத்தே போனாள் அவள். அவளின் குரல் ஆதிராவை எட்டினால் அல்லவா அவளுக்கு புரியும்! இரண்டு சுவர்களின் இருபக்கம் இருந்து கொண்டு பேசும் நிலையை எப்படி மாற்றுவது?

மறுபக்கம் இருப்பவளுக்கு நான் தேவை! அவளும் நானும் உடன்பாட்டில் இருந்தால் மட்டுமல்லவா நான் வந்த காரணத்தை நிறைவேற்ற முடியும்? வெளியில் இருக்கும் என் உடலுடனேயே என்னால் பேச இயலவில்லை. ஒளியாகிய பெரியவரின் சிரிப்பின் காரணம் புரிந்தது. ஆன்மாக்கள் திரும்பத்திரும்ப முடியாத பிறவிக்கடலில் விழும் காரணமும் புரிந்தது. ஆனாலும் தாமிரா முயற்சியை கைவிடவே இல்லை.

விடிகாலை நேரங்களில் விழித்ததும் ஆதிரா புரிந்தும் புரியா நிலையில் இருக்கும் போது அந்த நாளை குறித்து உத்வேகப்படுத்தி தன்னம்பிக்கை ஊட்டுவாள்

கண்ணாடி எனும் ரசாயனத்தை நம்பி அவள் தன்னம்பிக்கை தளரும் போது நீ பிரபஞ்ச பேரழகி என்று தெரியாத அறியாமையில் இருக்கிறாயே பெண்ணே என்று தலையில் அடித்துக்கொள்வாள் அவள். அவளோடு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்? உடலே விரும்பாமல் அவள் மட்டும் விரும்பி எந்த பலனும் இல்லை என்று நன்றாக புரிந்தது. இந்த நாசமாய் போன ஆதிரா என்று திட்டிக்கொண்டே போனவள் சட்டென்று நிறுத்தினாள்.

இந்த உடல் பொல்லாதது. அளவற்ற அன்பை மட்டும் அறிந்த தாமிராவுக்கு சலிப்பும் கோபமும் உண்டாக்க வைக்கிறது தன்னை போலவே.. ஒளியாகிய பெரியவர் சிரிப்பதை போலிருந்தது. தாமிராவை யாராலும் மாற்ற முடியாது. ஆயிரம் தவங்களை தாண்டி புடமிட்ட அவளது ஒளியை இந்த சாதாரண மனித உடல் மாசுபடுத்துமா? ஆனால் கொஞ்சமே கொஞ்சம் தன் ஒளி மங்கலாய் போனதை அவள் அறிந்தே இருந்தாள்.

எப்படி உடலோடு தொடர்பு கொள்வது? ஆதிரா தூங்கும் சமயம் புறஉலகத்தின் கவனக்கலைப்பான்கள் ஏதும் இல்லாத சமயம் ஒளியின் வடிவில் செய்திகளை அவளுக்கு கடத்த முயன்றாள். கண்ணாடி என்னும் ரசாயனத்தை பார்த்து தன்னம்பிக்கை குறைந்திருப்பவளை நீயே பிரபஞ்ச அழகி என்று நிரூபிக்க கனவுகளில் அவளை கதாநாயகி ஆக்கினாள். ஆனால் ஒளியாகிய பெரியவர் அதற்கும் ஒரு பொறி வைத்திருந்தார்.

விழித்ததும் மங்கலாகவே நினைவிருக்கும் கனவுகள் சற்று நேரத்தில் ஆதிராவுக்கு மறந்து போவிட ஆரம்பித்தன, ஆனாலும் கனவுகளின் பாதிப்பு அவளிடம் கொஞ்சம் இருந்தது. கனவுகளின் பொருள் தேட ஆரம்பித்தாள். சிந்திக்க ஆரம்பித்தாள்.    ஆனாலும் தாமிராவின் குரல் அவளுக்கு கேட்கவில்லை.

ஆதிராவின் தோல்விகளை தாமிரா வெறுத்தாள். வெறுப்பு தன் இயல்பல்ல என்று புரிந்து அந்த இயல்பை தனக்கு உண்டாக்கியதற்காகவும் அவள் ஆதிராவை இன்னும் வெறுத்தாள்.

ஒருநாள் ஆதிரா கோவிலுக்கு போயிருந்தாள். அங்கே எதிர்காலத்தை கணிக்கும் ஒரு சுவாமி வந்திருக்கிறாராம். நண்பியின் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவுக்கு அவரின் சொற்கள் மனதுக்குள் பெரும் நம்பிக்கையை விதைப்பதை தாமிரா ஆச்சர்யமாக உணர்ந்தாள். அவரது கண்களையும் சதா சிரித்த முகத்தையும் அவள் யோசனையோடு பார்த்துக்கொண்டே இருக்க சட்டென நிமிர்ந்தார் அவர்.

“உன் அலைபாய்தலை கைவிடு” என்றார்

என்ன? என்னை இந்த சாமியாரால் பார்க்க முடிகிறதா என்ன?

இல்லையே இன்னும் ஆதிரா அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க அவர் என்னமோ ஒரு சுவடியை அவளுக்கு படித்துக்கொண்டிருந்தார்.

பிரமையா என்ன?

சுவடியை பார்த்த நிலையிலேயே அவர் இருக்க கண்கள் மட்டும் அவளை நிமிர்ந்து பார்த்தால் போலிருந்தது.

“பிரமையல்ல பெண்ணே உன்னுடன் தான் பேசுகிறேன்”

“என்னை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” தாமிரா அதிசயத்தோடு அவரையே பார்த்தாள்

“உன்னை அனுப்பியவனுக்கு உன்னை தெரியாதா?”

“ஒளியாகிய பெரியவரா?”

“உங்களை மட்டும் அனுப்பி வைக்கவில்லை பெண்ணே..நானும் இங்கே தான் இருக்கிறேன்”

மடிந்து முதல் தடவையாய் அழுதாள் தாமிரா. “நான் தோற்கபோகிறேன் பெரியவரே”

“தோல்வியை ஒத்துகொள்ளும் மனம் வந்ததே நீ வெற்றியை நெருங்குகிறாய்  என்று தான் அர்த்தம் பெண்ணே”

“என்னால்..என்னால் அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லையே”

“ஆதிரா உன் மனித வடிவம். உன் கைப்பொம்மையல்ல. அவளை வெறுப்பாய் பார்க்காதே”

“வெறுக்காமல் எப்படி இருக்க முடியும்?”

“தேவதை நீதான் தாமிரா. அவள் வெறும் மனுஷி. அவளை வெறுத்தால் நீங்கள் ஒன்றாக ஆக முடியாது”

தாமிராவுக்குள் சிந்தனைகள் தறிகெட்டோடின

“என் சவாலை மீண்டும் எண்ணிப்பார். ஒருவேளை நீ அதை தவறாக அணுகியிருக்கலாம். இன்னும் உனக்கு காலம் இருக்கிறது “ திருத்திக்கொள்ள அவர் குறும்பாக சிரித்தார்.

பெரியவரே..

அவரை காணோம், ஆதிராவோடு பேசிக்கொண்டிருந்தவர் அவளுக்கு விடை கொடுத்துக்கொண்டிருந்தார். அவளும் எழுந்து இப்போது பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தாள்.

யோசி யோசி..என் சவாலை மீண்டும் எண்ணிப்பார் தாமிரா யோசனையில் உடலுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தாள்.

உடலும் நீயும் ஒன்றாக வேண்டும் என்பது தானே..அதாவது தாமிராவும் ஆதிராவும் ஒரே சிந்தனை செயலாக மாற வேண்டும்.

“நீ சவாலை தவறாக அணுகிக்கொண்டிருக்கிறாய்!”

எப்படி எப்படி எப்படி…

எதிரே இரண்டு கடவுள் பொம்மைகள் சுவரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்ன குழந்தை ஒன்று அதை கீழே தட்டி விட்டு மீண்டும் அதன் அம்மா காண முன்னே எடுத்து வைக்க முனைந்தது.

நீலம் இடப்பக்கம், சிவப்பு இடப்பக்கம். தாமிரா அவள் போக்கில் புன்னகையோடு நினைத்துக்கொள்ள குழந்தையோ சிவப்பு பொம்மையை இடப்பக்கம் வைத்து நீலத்தை வலப்பக்கம் வைத்தான்.

ஐயோ மனிதக்குழந்தையே இந்த சின்ன விஷயத்தை உன்னால் ஞாபகம் வைத்திருக்க இயலாதா என்று அங்கலாய்த்தவள் இப்போது அந்த குழந்தை பொம்மைகளின் கைகளை இணைத்து அணைத்தாற்போல வைத்து விட்டு சிரிப்பதை கண்டு சிந்தனை சங்கிலி அறுந்தது.

இந்த அழகு அப்போது இருக்கவில்லை நிச்சயமாக!

தாமிராவாக ஆதிரா ஆக முடியாவிட்டால் என்ன? தாமிரா ஆதிரா அளவுக்கு இறங்கி வர முடியுமே. ஆதிராவாக வாழ்க்கையை எதிர்கொண்டு செல்ல முடியுமே..

ஒளியின் பெரியவர் மனதில் மீண்டும் புன்னகைப்பது போலிருந்தது அவளுக்கு

இப்போது அந்த குழந்தை மீண்டும் பொம்மைகளை இடம் மாற்றியது. தாமிரா பொங்கிச்சிரித்தாள். ஆதிராவை உற்று கவனிக்க ஆரம்பித்தாள்.

இம்முறை எந்த முன் முடிவும், எதிர்பார்ப்பும், அவளது செயல்கள் மீது சலிப்பும் இல்லாமல்!

அந்த குழந்தையை நோக்கி ஆதிரா முஷ்டியை மடக்க அவனும் திரும்ப மடக்கி காண்பித்தான். சிரித்தபடி அவள் அவன் தலை கலைத்தபடி நகர தாமிராவுக்கும் புன்னகை முளைத்தது.

புன்னகையோடு அன்பாய் இப்போது ஆதிராவை பார்க்க முடிந்தது தாமிராவுக்கு. அவளும் காரணம் இன்றியே பூவொன்றை பறித்து கூந்தலில் வைத்துக்கொண்டு புன்னகையோடு நகர்ந்து கொண்டிருந்தாள்.

பூவின் வாசத்தை நுகர முயன்றவள் எதிரே படிகளை கண்டு படி கவனம் என்று எண்ண கவனமாய் படிகளில் கால்வைத்து இறங்க ஆரம்பித்தாள் ஆதிரா.

அவர்கள் இறங்க வேண்டிய படிகள் இன்னும் நிறைய தூரம் நீண்டிருந்தன.