ஆழி -அர்ஜூனா 22

Removed from the site due to publication purpose. Sorry for the inconvenience caused!

Advertisements

ஆழி- அர்ஜூனா 21

Beautiful-Alia-Bhatt-HD-Images

“பை பை அஜூ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்…” யாழினியின் பறக்கும் முத்தத்துடன் அந்த ஸ்கைப் கால் கட் ஆக லாப்டாப்பை மூடி வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தார் அர்ஜூனா.

பெண்குழந்தைகள் வீட்டில் இருந்தால் அந்த களையே தனி தான். யாழினி போனபிறகு வீடு வெறுமையாக இருக்கிறது என்ற எண்ணத்தை என்ன செய்தும் தடுக்கமுடியவில்லை அவருக்கு.

சாப்பிட்டபடியே கற்றையாக அள்ளிக்கொண்டுவந்த கடிதங்களை ஒவ்வொன்றாக பிரித்துப்பார்க்க ஆரம்பித்தார் அர்ஜூனா.

விவிதா வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் வாசகர் கடிதங்கள் வருவது நின்றபாடில்லை.

வாசகர்கள் மத்தியிலும் உள்ளூர் அரசாங்கத்திலும் அது ஏற்படுத்திய அதிர்வலைகளும் இன்னும் அடங்கிவிடவில்லை. மேலோட்டமாக கடிதங்களை படித்தபடியே சாப்பிட்டு முடித்தவர் கடிதங்களை ஒன்றாக அடுக்கி பஞ்ச் செய்து அதற்குரிய பைலில் போட்டு கிளிப் செய்தார்.

எப்போது அந்த பைலை திறந்தாலும் நடப்பதைப்போல இன்றைக்கும் அந்த பைலின் ஒருபக்க போல்டரில் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த மயில் நீல கடித உறை என்னை இன்னொரு முறை படியேன் என்றது!

இத்தோடு எத்தனை முறைகளோ அவர் அறியார். ஆனாலும் மனதின் வேண்டுகொளைத்தட்டாமல் அந்த கடிதத்தை எடுத்து வந்தவர் சோபாவில் சாய்ந்த படி பிரித்து படிக்க ஆரம்பித்தார்..

அன்பின் ருத்ரா..

ஒவ்வொரு நாவலைப்படித்ததும் நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த முறை ரொம்ப ஸ்பெஷல் என நீங்கள் எண்ண வைத்திருக்கிறீர்கள். ஆனால் விவிதா உண்மையிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தான்.

நீங்கள் எடுத்த களம். அதை அதிரடியாக காட்சிப்படுத்திய விதம், மயிர்க்கூச்செறியும் பரபர த்ரில்லர் என்பதைத்தாண்டி ஒரே ஒருத்தி என் மனதில் நின்று கொண்டிருக்கிறாள். அவள் ஆழி! எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது ருத்ரா. இப்போது என் வருங்கால மனைவியில் ஆழியை தேடப்போகிறேன் போங்கள்!

உண்மையை சொல்லப்போனால் உங்கள் ஆரம்பம் முதற்கொண்டு இப்போது வரை எல்லா நாவல்களிலும் ஆழி வந்திருக்கிறாள், வேறு வேறு பெயர்களில், வேறு வேறு உறவுகளில்! நிமிர்ந்து நிற்கும், அழுத்தமான. மனதில் நினைத்ததை பிறர் மூக்குடைக்கும் நேர்மையுடன் பேசுபவள் அவள். ஒரு சில நிமிடங்களே வந்து போகும் ரோலாக இருந்தாலும் ஆழி வராமல் போக மாட்டாள்!

அவளது துரதிர்ஷ்டம் சார்.. அந்த அந்த கதைகளில் வரும் சராசரி பெண் கதாபாத்திரங்களுக்காக பெண்ணியவாதிகள் பொங்கிவிடுவதில் அந்த ஆழிகள் கவனிக்கப்பட்டதில்லை. ப்பா என்ன பொண்ணுடா..என்று உங்களின் தீவிர ரசிகர்கள் நாங்கள் மட்டும் ஆழியை எடுத்துக்கொள்வோம். ஆனாலும் அவளுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய கவனத்தை கிடைக்காமல் செய்து அவளுக்கு  நீங்கள் அநியாயம் செய்துவிட்டதாய் எப்போதுமே ஒரு சின்னப்பொருமல் இருக்கும்.

எல்லாவற்றுக்கும் சேர்த்து விவிதத்தில் நீங்கள் நியாயம் செய்துவிட்டீர்கள் சார். கதையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட கதாநாயகியாக ஆழி வந்தாள். அவள் உடையணியும் அழகில் ஆரம்பித்து எங்களை சகலத்தாலும் கொள்ளை கொண்டாள்.   தனாவிடம் இறுக்கமாக பேசிவிட்டு திரும்பும் போது ஒரு கள்ளச்சிரிப்பு சிரிப்பாளே.. அவளுடைய அந்த மானரிசம்… நாடியில் விரலால் தேய்த்து விடுவாளே….இப்படி ஒரு பெண் காரக்டரை நீங்கள் அனுபவித்து படைத்தது விவிதத்தில் தான் முதன் முறை சார்.

கொஞ்சம் இலகுத்தன்மையாய், இளக்கமாய் கொஞ்சமே கொஞ்சம் குறும்போடு இருப்பதால் மற்றைய ஆழிகளை இவள் தூக்கி சாப்பிட்டு நெஞ்சில் நிற்கிறாள். என்னடா இது? ட்ராக் மாபியா பற்றிய கதையில் பெண்ணுக்கு மட்டும் விமர்சனமா? சுத்த ஜொள்ளனாக இருப்பான் போலிருக்கிறதே என்று சிரிக்காதீர்கள் சார். உங்கள் த்ரில்லர் நன்றாக இருந்தது என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போலத்தான் என்பது உங்களுக்கே தெரியும்.

ஒரே ஒரு விண்ணப்பம்..இந்த இளக்கமான ஆழியை ஒரே ஒரு தடவை கதை முழுவதும் உலவ விடுங்கள் சார்.

உங்கள் அடுத்த நாவலை எதிர்நோக்கி காத்திருக்கும்

இலக்கியன்

ஏதேதோ நினைவுகள் வந்து போக அப்படியே சற்றுநேரம் அமர்ந்திருந்தார் அர்ஜூனா. இந்த இலக்கியன் எப்போதுமே இப்படித்தான். எப்படியோ அவரது மனதில் இருந்து முக்கியமான புள்ளிகளை உருவிக்கொண்டு விடுவான்.

உண்மையில் எழுதும் போதும், கதையை மீண்டும் மீண்டும் படித்து செப்பனிட்ட போதும் அது அவருக்கு மனதில் படவேயில்லை. ஆனால் எல்லா பாராட்டுமழைகளிலும் நனைந்து முடித்த பிறகு எல்லாருமே ஆழியை பற்றிக்குறிப்பிட்டதை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார்!

அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி..

நீண்ட இடைவேளையின் பின்பு படித்ததாலோ என்னவோ இப்போது தெளிவாக புரிந்தது எல்லாமே.. தன் கனவுப்பெண்ணை பிடிக்கப்போய் பக்கத்து வீட்டு ஐஸ்க்ரீமை பிடித்த கதை! திலீபன் அப்போதே படித்து விட்டு சொன்னான் தான் ஆனால் அவன் சொன்னதை அவர் மனதில் போட்டுக்கொள்ளவே இல்லையே..

எப்போதுமே தான் சந்திக்கும் மனிதர்களைத்தான் கதையில் பாத்திரமாக்கி உலாவவிடுவார் அவர். இவர் தான் அந்தப்பாத்திரம் என்று ஒரு வடிவம் கொடுக்க வசதியாக இருப்பதால் அவர் அப்படிச்செய்வதுண்டு. அப்படி எண்ணிக்கொண்டு தான் ஆழியையும் அவர் கதையில் கொண்டு வந்தார். ஆனால் என்னதான் அவர்களுடைய பெயரையும் உருவங்களையும் அவர் பயன்படுத்தினாலும் அவர்கள் முழுக்க முழுக்க அர்ஜூனாவின் படைப்புக்களாகவே வருவார்கள். ஆனால் இன்னொரு  கதையில் வந்த யாழினியை விட,,முன்பொருமுறை கதையில் ஹீரோவாகவே வந்த திலீபனை விட இவளுடைய நிஜ வடிவம் தான் ஆழியில் துருத்திக்கொண்டு தெரிந்தது.

அந்த அளவுக்கு அவள் அவருடைய மனதுக்குள் ஊடுருவி இருந்தாளா என்ன? அவள் தான் கடிதத்தில் ஒரே போடாக போட்டிருந்தாளே..நீ நினைப்பது போல எல்லாம் தெரிந்தவன் நீ இல்லை என்று! ஹா ஹா இந்த விஷயத்தில் தன்னையே புரிந்து கொள்ளத்தெரியாதவராய் தான் அவர் இருந்திருக்கிறார்.

அவள் விஷயத்தில் அவரது மேலுமொரு கணிப்பு தவறாய்ப்போயிருந்ததது. அவள் போகிறேன் என்று சொல்லி விட்டுபோனது நிரந்தரமானது என்று அவர் நினைக்கவில்லை. அவளின் இயல்பு அப்படிப்பட்டதல்லவா.. ருத்ராவை வெளிப்படுத்திய போது கூட அவள் திரும்ப வந்து தன் சட்டையை பிடிப்பாள் என்று உள்ளூர ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் அதுவும் முற்றாக பொய்த்துப்போனது. இந்த ஒரு வருடத்தில் அவளிடம் இருந்து ஒரு சின்ன சமிக்கை கூட அவரை நோக்கி செய்யப்படவில்லை. அந்த விஷயத்தில் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னதான் இருந்தாலும் அவளை தேடிப்போய் கண்டுபிடித்து பேசுமளவுக்கெல்லாம் எந்த விசையும் அவரை இழுக்கவில்லை. இல்லையேல் அவரது ஈகோ இடம் தரவில்லை என்று சொல்ல வேண்டுமோ. தன்னை சூழவிருந்த கலகலப்பான சூழல் ஒன்று ஜீவனற்று போனது போல சின்னதாய் ஒரு வெறுமை மனதில் இருப்பது உண்மை. யாழினியும் கூட இல்லை அல்லவா?

விவிதாவுக்கு பிறகு அடுத்த நாவலுக்காக எந்த உந்துசக்தியும் தோன்றவும் இல்லை. ஆகவே அவர் நாவல் எழுதியே மாதக்கணக்காகிறது. தன்னைத்தானே ஆராய்ந்து கொண்டு தானும் தன் மாணவர்களும் என்று உலவிக்கொண்டிருக்கிறார் அவர்.

அன்றிரவு சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் தேசிய மாநாடு ஒன்று ஹோட்டல் தாமிராவில்  நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் அழைப்பிதழ் அவருக்கும் வந்திருந்தது. அங்கே நிறைய பிரச்சனைகள் அலசப்படும். தொழிநுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்த காலந்தொட்டு அவர் அப்படியான மாநாடுகளில் பேச்சாளராகவோ பார்வையாளராகவோ கலந்து கொள்வதிலும் தன்னால் முடிந்த பங்களிப்பை செய்வதிலும் அங்கே வரும் பெருந்தலைகளை சந்திப்பதிலும் ஆர்வமுள்ளவர்.

இந்த தடவை   தன் அடுத்த கதைக்கொரு கரு அங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தோடு தயாராக ஆரம்பித்தார் அர்ஜூனா.

இப்போதுதான் எல்லோருக்கும் முகம் தெரிந்தாயிற்றே, போகும் வழியில் அன்புத்தொல்லைகளை தவிர்ப்பதற்காக தன்னுடைய காரையே போக்குவரத்தில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார் அவர். காரில் பயணித்தாலும் மாநாடு நடக்கும் ஹோட்டல் தாமிரா  மூன்று மணிநேர பயணத்தில் தான் வரும். இப்போதே புறப்பட்டால் தான் உண்டு என்ற எண்ணத்தில் தயாரானவர் மீண்டும் ஒரு தடவை கார்டை சரிபார்த்துக்கொண்டு புறப்பட்டார்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் போக்குவரத்து நெரிசலும் அவ்வளவு இல்லாதிருக்க நினைத்த நேரத்திற்கு போய் சேர்ந்துவிட்டவர் அங்கு வந்திருந்த பெரியவர்களோடு பேசிக்கொண்டிருதார்.

சிறுவர் விவகார அமைச்சர் தான் நிகழ்வை தொடக்கி வைப்பதாகவும் அவரைத்தொடர்ந்து ஐந்து பேச்சாளர்களுடன் நிகழ்வு ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. சிறுவர் விவகார அமைச்சின் செயலர் அர்ஜூனாவுக்கு நன்று பரிச்சயமானவர் ஆதலால் அவர் கை கொடுத்து வர வேற்று சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்க அன்றைய விழாவின் ஒழுங்கமைப்பாளர் நிலையில் இருப்பவரின் கவனத்தை தாம் மட்டும் ஈர்த்துக்கொண்டிருப்பது நன்றாக இருக்காது என்பதனால் விடைபெற்று வந்தவர் VIP பிரிவில் மூன்றாவது வரிசையில் இடம்பிடித்து அமர்ந்தார். சுற்றிலும் இருந்த தெரிந்தவர்களின் குசலத்தை தொடர்ந்து தன்னுடைய இருக்கையில் வைக்கப்பட்டிருந்த பைலை கையில் எடுத்தார் அவர். அதில் ஏற்கனவே அன்றைய  நிகழ்ச்சி நிரல் உட்பட மற்றைய கையேடுகள் வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சி நிரலில் பார்வையை ஓட்டியவர் வரிசைப்படுத்தப்பட்ட மாநாட்டுப்பேச்சாளர்களின் பெயர்களில் மூன்றாவது பெயரில் அப்படியே விழிகளை அசைக்காது பார்த்துக்கொண்டே இருந்தார்.

ஆர்ணவி ஆரமுதன், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் ஜூனியர் லீகல் ஆபீசர்

ஒருநாள் என்னை நீங்கள் பார்ப்பீர்கள் சார். அப்போது உங்களுக்கு ஆர்ணவி யார் என்று புரியும்!!! அந்த கடித வரிகள் எழுத்துமாறாமல் இப்போது நினைவுக்கு வந்தன அவருக்கு. தாம் என்ன உணர்கிறார் என்றே அவருக்கு தெரியவில்லை. மாநாடு ஆரம்பிப்பதற்காக ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தார் அவர்.

இது அவளுக்கு மிகப்பொருத்தமான இடம் தான்…. மனது அவளை காணமுன்னரே சிலாகிக்க ஆரம்பித்து விட்டது.

ஒரே வருடத்தில் நான் மேடையில் பேசுகிறேன் நீ கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிரு என்று நிலைமையை தலைகீழாக ஆக்கிவிட்டாளே!!!! அவர் தன்னுடைய கீழுதட்டு சிரிப்போடு அடிக்கடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மாநாட்டுப்பேச்சாளர்கள் ஐவருக்கும் மேடையில் இருக்கைகள் போட்டிருக்க இருவர் ஏற்கனவே அமர்ந்திருந்தனர், தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவகத்தை சார்ந்த  பழைய நண்பர்  ஒருவர் அர்ஜூனாவை தேடி வந்து குசலம் விசாரிக்க மரியாதைக்காய் எழுந்து நின்று கை கொடுத்தவர் ஏதோ உள்ளுணர்வில் வாசலைத்திரும்பிப்பார்த்தார்.

அவரையே விழிகளுக்குள் முழுமையாய் நிரப்பியபடி ஆர்ணவி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

நிறைய மாறி விட்டிருந்தாள்!

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கட்டுக்கு சிவப்பும் கறுப்பும் கட்டங்கள் வரைந்த சில்க் காட்டன் சேலை formal அலுவலக ஸ்டைலில் கொஞ்சம் கூட நேர்த்தி கலையாமல் உடுத்திக்கொண்டிருந்தாள். கூந்தல் ஒரு மெஸ்ஸி கொண்டையில் அடங்கியிருந்தது. அந்த கண்களைப் பார்த்ததுமே அவருக்குள் ஏதோ புரண்டது. தன்னையே அதிர்வுடன் பார்த்துக்கொண்டு வந்தவளை பார்த்து பட்டென்று குறும்பாய் கண்சிமிட்டினார் அர்ஜூனா.

சட்டென சுயநினைவுக்கு வந்தவளோ முகத்தில் ஒரு முறைப்பை தத்தெடுத்துக்கொண்டு மேடையில் ஏறி தன்னிடத்தில் அமர்ந்தாள்.

மேடையில் இருந்து சக பேச்சாளர்களுடன் அவள் பேசிக்கொண்டிருக்க நிகழ்வு ஆரம்பிக்கும் வரை அவளையே விழிகளால் தொடர்ந்து கொண்டிருந்தார் அர்ஜூனா.

மாநாட்டில் சிறுவர் பிரச்சனைகளை கையாளும் போது சட்டத்தின் பங்கு, தன் வேலையில் தான் சந்தித்த வித்யாசமான சிறுவர் பிரச்சனைகள், அதை கையாளும்போது தாங்கள் கையாண்ட சட்டச்சிக்கல்கள் எவை? எப்படியான மாற்றம் ஏற்படவேண்டும் என்பன பற்றித்தான் அவள் பேசினாள்.

பிற பேச்சாளர்கள் தன்னுடைய துறையை பற்றி பேசும்போது லாவகமாக இடையிட்டு ஆனால் ஆணித்தரமாக அவள் பேசிய பேச்சு மைக் வழியே கணீரென வந்து காதுகளை தாக்கியது. அவர் விடாமல் விழிகளால் தொடர்ந்ததால் அசௌகர்யமாக உணர்கிறாள் என்று அவளது உடல் மொழி சொன்னாலும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவரால். அப்படியே அவர் பார்வையை விலக்கிக்கொண்டாலும் அவள் அவரை பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தாள்!

ஒரு வழியாக மாநாடு முடிந்து கேள்வி நேரம் ஆரம்பிக்க வளைத்து வளைத்து அவளது பகுதியிலேயே கேளிவி கேட்க ஆரம்பித்தார் அர்ஜூனா.

கொஞ்சம் கூட பதறாமல் குரல் உயர்த்தாமல் லாவகமாக அவள் சமாளித்ததை கண்டு அவரது ஒற்றைப்புருவம் உயர கீழுதடு தானாகவே புன்னகைத்தது.

விடாமல் அவளை எதிர்த்து அவர் வாதம் செய்து கொண்டே இருக்க “அர்ஜூன் பாவம் அந்தப்பெண்! விட்டுவிடு” என்று சக தோழர் ஒருவர் ரகசியமாய் தடுத்து நிறுத்தும் வரை அவரால் நிறுத்தவே முடியவில்லை..

பிறகு தன்னைக்குறித்தே சிரிப்பாய் வந்தது அவருக்கு.. எல்லாம் அவளது விழிகள் கொடுத்த தைரியம் தானே!

அன்றிரவு அவளைச்சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் விலக புபேயில் இரவுணவுக்கான வரிசையில் சேர்ந்துகொண்டவளை கவனித்துக்கொண்டே இருந்தவர் அவள் பரிமாறிக்கொண்டு ஒரு டேபிளை நோக்கி போக அடுத்தவர் வருமுன் அவளின் அருகில் போய் அமர்ந்தார் “ஹாய் பேபி” என்றபடி!

வெட்டும் விழிகள் முறைப்புடன் படக்கென அவர் பக்கம் திரும்பிகொண்டன

 

 

ஆழி- அர்ஜூனா 20

alia-bhatt-cute-wallpaper-10-12x9

மலர்ந்தும் மலரத மொட்டுக்களை அதிகம் சுமந்திருந்த ரோஜாமரங்களை பார்த்தபடியே சுற்றியோடிககொண்டிருந்தாள் ஆர்ணவி. எத்தனை வண்ணங்கள், நடு நடுவில் பூக்களை நாடி வரும் வண்டுகள், அந்த வளைவைக்கடக்கும் சில நிமிடங்களுக்குள் எத்தனையை கவனித்துவிட்டாள் அவள்.

ஆக வாழும் வாழ்க்கையில் திருப்தி ஏற்படும் போது, செய்யும் வேலையை லயித்து செய்யும்போது நம் கண்களுக்கும் உலகம் அழகாக தெரியுமா? நாமும் போகிற போக்கில் ரசிக்க ஆரம்பித்து விடுவோமா?

அவள் புன்னகையை உதட்டில் பூட்டிக்கொண்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்

அர்ஜூனா இப்போது இருந்திருந்தால் இதற்கு என்ன சொல்லியிருப்பார்?

சட்டென்று தன்னைத்தானே குட்டவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள் ஆர்ணவி. அவரைப்பிரிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிப்போயும் சாதாரணமாக அவள் செய்யும் நாளாந்தக்கடமைகளில் கூட அவரை தவிர்க்க முடியவில்லை அவளுக்கு..

கேட்டை திறந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டு மீண்டும் சாத்தினாள் அவள்

எனக்கு ஏன் இப்படி செய்தீர்கள் சார்? தினமும் இரவுகளில் அவளால் கேட்காமல் இருக்க முடிந்ததில்லை. கண்ணீர் எல்லாம் வருவதில்லை ஆனால் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் நிராகரிப்பு தரும் வலியை ஒதுக்கி விட முடியுமா என்ன?

“என்னடா..இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டியா? உட்கார் காபி சாப்பிட்டுவிட்டு குளிக்கலாம்.” அம்மா சோபாவை கைகாட்டிவிட்டு கிச்சனுக்குள் மறைந்தார்.

அப்படியே உடலை சோபாவில் தளர்த்தினாள் அவளும்.

திரும்ப வீட்டுக்கே வந்ததில் இருந்து வீட்டில் யாருமே அர்ஜூனா பேச்சையோ பழைய பிளாட் பற்றியோ பேசுவதேயில்லை. புதிய வேலை, நேரம் தவறாமல் ஓட்டப்பயிற்சி. வீட்டிலும் பூந்தோட்டம் அமைக்கிறேன் என்று அவள் உழைக்கும் விதம் எல்லாமே அவளது வாழ்க்கை குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்திருக்க வேண்டும். அவர்களும் இயல்பாகவே அவளை கையாள முயன்றார்கள்.

“ஸ்ரீ இன்றைக்கு உனக்காக புட்டிங் பேக் செய்தாள்” என்றபடி குட்டி கப்பில் காபியோடு அதையும் எடுத்து வந்தவர் மகளிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

நான் கஷ்டப்பட்டு ஓடிக்கலோரியை குறைத்து விட்டு வந்தால், கையில் இப்படி எதையாவது கொடுத்து ஏற்றி விடு ஸ்ரீக்கா”..பொய்க்கோபமாய் சொன்னாலும் அவள் வேகமாய் சாப்பிட ஆரம்பித்திருந்தாள்

“ஆரு..நான் சீனி சேர்க்கவேயில்லை. டேட்ஸ் தான் சேர்த்தேன்..அதனால் ஒன்றும் ஆகாது..” உள்ளிருந்து ஸ்ரீயின் மறுப்புக்கு சிரித்தபடி “நீ சீனி சேர்த்திருந்தால் கூட நான் சாப்பிடாமல் கீழே வைத்திருப்பேன் என்றா நினைக்கிறாய்?” என்று பழிப்புக்காட்டினாள் அவள்

ஆரு.. போன் ரிங்காகிறது பார். வைஷ்ணவி உள்ளிருந்து குரல் கொடுத்தார்

ப்ளீஸ்மா..எடுத்துக்கொடேன்!!!

வீட்டிற்குள் அசையாமல் இருந்துவிட்டு கிரவுண்டில் போய் ஓடு! என்று கிண்டலாய் சொல்லியபடி சார்ஜரில் இருந்த போனை கழற்றிக்கொண்டு வந்து ஆருவின் கையில் கொடுத்துவிட்டுப்போனார் வைஷ்ணவி

ராகவி அழைத்துக்கொண்டிருந்தாள்!

ஹலோ ராக்கி! வாட்சப்?

ஏய் வீட்லையா இருக்க? ராகவியின் குரலில் ஏகப்பரபரப்பு

ஆமாம். ஏன்?

தமிழ் மாருதம் சானல் வந்தா போடுடி சீக்கிரம்..சீக்கிரம்..அவள் அவசரப்படுத்தினாள்

ஏன்னு சொல்லித்தொலையேன் மாடு!!!

“என்னால முடில..சீக்கிரம் போட்டுட்டு எனக்கு கால் பண்ணு.” அவள் கட் செய்துவிட்டாள்

என்ன இப்படி டெண்ஷனாகுறா? என்று குழம்பியவள் சானல் லிஸ்டில் தமிழ் மாருதத்தை ஒருவழியாய் கண்டு பிடித்து வைக்க கண்ணில் பட்ட முதல் விஷயமே அர்ஜூனா தான்.

அவளின் பரபரப்பை பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்த வைஷ்ணவியும் எதுவும் பேசாமல் மௌனமாய் திரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

விவிதா என்ற சொல்லோடு ஒரு பெரிய டிஜிட்டல் பிரிண்ட் மேடையின் பின்னணியில் இருக்க நடுநாயகமாய் அமர்ந்து கொண்டிருந்தார் அர்ஜூனா.

அவரது நூல் வெளியீட்டு விழா போலும். பல நாட்களுக்கு பின் அவரை கண்டதில் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவள் டிஜிட்டல் பிரிண்டில் எழுத்தாளர் பெயரில் அர்ஜூனா என்று இருக்க வேண்டிய இடத்தில் “ருத்ரா” என்று இருந்ததை சில கணங்கள் கழித்துத்தான் கவனித்தாள்

ருத்ரா… அவள் அதிர்ச்சியோடு தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக்கொள்ள மேடையில் பதிப்பாளர் பேசிக்கொண்டிருந்தது தன்னிச்சையாய் செவிகள் வழியே இதயத்தில் நேரடியாய் இறங்கியது

“இத்தனை நாட்களாய் முகமே காண்பிக்காதிருந்த ருத்ரா இந்த நாவலுக்காய் வெளியே வந்து வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சி. அவருடைய ரசிகர்கள் எல்லாம் இந்த ஒரு தருணத்துக்காகத்தானே இத்தனை காலம் காத்திருந்தனர்! நன்றி ருத்ரா சார்!”

“இந்த நாவலின் முதலாவது பிரதியை படிக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது என்று நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். ட்ரக் மாபியா பற்றி நேரில் சென்று பார்த்துவந்தது போன்ற எண்ணத்தை உருவாக்கும் பரபர நாவல்! அன்றே மனதில் தோன்றி விட்டது இந்த நாவல் உருவாக்கப்போகும் அதிர்வுகள் பற்றி..அதை விட இதில் அவரது ரசிகர்கள் எல்லாம் மகிழ்ந்துபோகும் இன்னொரு விடயமும் இருக்கிறது. அதை நீங்கள் புத்தகத்தை வாங்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.”

அவள் புத்தகங்கள் படிக்கும் வழக்கமில்லாதவள் தான். ஆனால் ருத்ரா என்ற பெயர் அவளுக்கு மிக மிக பரிச்சயமானது. சில திரைப்படங்களுக்கு கூட அவர் வசனம் எழுதியிருப்பார்.

சுராஜ் அவரது புதிய புத்தகம் வெளிவந்த தினத்தன்றே வாங்கி விடுவதை பெருமையாய் நினைப்பவன். வாத்தியார் என்று கொண்டாடுபவன். அவளுடைய தோழி ஒருத்தி அவருடைய புத்தகங்களுக்கு என்று ஒரு  லைப்ரரியே வைத்திருப்பாள்! ருத்ரா எப்படி இருப்பார், அவர் எப்படி இப்படி எழுதலாம்? இதெல்லாம் அவளது கல்லூரிக்கால ஒன்றுகூடல்களில் விவாதிக்கப்படாமல் இருந்ததே இல்லை.. அப்போதும் எப்போப்பார் அந்த ஆள் பேச்சுத்தானா..ஸ்டாப் த மியூசிக் என்று என்ட் கார்ட் போடுபவளாக அவளே தான் இருந்தாள்.

திலீபன் எழுந்து மேடைக்குப்போவதை இடுங்கிய கண்களோடு கவனித்தாள் அவள்

அவன் கூட சொல்லவில்லையே என்று வருந்த முடியுமா என்ன? இவ்வளவு பெரிய விஷயத்தை கூட அவளோடு அர்ஜூனாவே பகிர்ந்து கொள்ளவில்லையே..அந்தளவுக்கு அவளை அவர் ஒரு முக்கியமான ஜீவனாக நினைத்தும் பார்க்கவில்லை என்று தானே அர்த்தமாகிறது. அப்போ அன்றைக்கு அவளை நிராகரித்து அவர் சொன்னதெல்லாம் மனதார சொன்னவைதானா? அவளின் காயங்களை மிக ஆழமாய் ஒரு வாள் ஒன்று ஊடுருவி ரணம் செய்ய, கண்களில் மீண்டும் கண்ணீர் முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்தன

“ருத்ரா கிட்டத்தட்ட ஒரு அண்டர்கவர் அலுவலர் போல விவிதநகரில் சுற்றித்திரிந்து எழுதியது தான் இந்த நாவல். அந்தளவு உழைப்பை அவர் இந்த நாவலில் கொட்டியிருக்கிறார். நூற்றுக்கு எண்பது வீதம் நிஜம் பேசும் இந்த நாவல் பெரிய வரவேற்பை பெறவேண்டும். மிகப்பெரும் தேவையை தன்னுள் தாங்கி பல பக்க உதவிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விவிதத்தை நோக்கி சரியான உதவிக்கரங்கள் இதன் மூலம் நீளுமாயின் ஒரு வாசகனாக எனக்கு அதைவிட வேறு சந்தோஷம் இல்லை!!!”

திலீபன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க அவளது கவனம் அவனது பேச்சில் இருந்து கலைந்து அர்ஜூனாவில் நிலைத்தது.

கருநீல ஷர்ட் அணிந்திருந்தார். ஜெல் பளபளக்கும் தலைமுடி, முழுக்க முழுக்க டிப்டாப்பான தோரணையில் ஒரு வித ஆளுமையை அந்த மேடை முழுதும் வழங்கியபடி கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார் அவர்.

இவர் ருத்ரா..அர்ஜூனா அல்ல..

மேலே அவளுக்கு எதையும் பார்க்க இயலவில்லை

டிவியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு,  அருகில் வந்து அமர்ந்து கொண்டு செய்வதறியாமல் அவளையே பார்த்திருந்த வைஷ்ணவியின் மடியில் சுருண்டு விழுந்து கண்ணீர் பெருக்க ஆரம்பித்தாள் ஆரா.

இத்தனை பெரிய மனிதருக்கு அவள் எல்லாம் ஒரு பொருட்டாய் இருந்திருக்க முடியாது தான்.

அதுதான் வெளிப்படையாகவே சொன்னாரே..எனக்கு நீ தகுதியில்லை என்று..

வைராக்கியமாய் பிரிந்து வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் தடவையாய் அழுதாள் ஆர்ணவி

ராகவி தொலைபேசியில் அழைத்ததை கட் செய்துவிட்டு வெகுநேரம் தாயின் மடியிலேயே படுத்திருந்தாள் அவள். என்ன கேட்பதென்று புரியாமல் மகளின் தலையை நீவிவிட்டபடி அமர்ந்திருந்தார் வைஷ்ணவி.

மறுநாள் அலுவலகம் சென்று விட்டு திரும்பும் வழியில் புத்தகக்கடை ஒன்றில் ருத்ராவின் புதிய வெளியீடான விவிதம் இங்கே கிடைக்கும் என்று போர்ட் வைத்திருந்தார்கள்.

லேசான விரக்திப்புன்னகையோடு கடந்து சென்றவள் இரண்டாவது நாள் புத்தகக்கடையில் காரை நிறுத்தி ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்

அவளுக்கு நீளமான புத்தகங்களை படிப்பதே அலர்ஜி தான் இருந்தாலும், விவிதத்தில் அவளும் வாழ்ந்திருக்கிறாள் அல்லவா… அவர் என்ன தான் சொல்லியிருப்பார் என்ற ஆவலில் தன் கவலைகளை தூக்கிப்போட்டுவிட்டு அன்றைக்கிரவே படிக்க ஆரம்பித்தாள்

விவிதத்தில் கடலோர பல்கலைக்கழக ஹாஸ்டல் ஒன்றில் தான் அந்த கதை ஆரம்பிக்கிறது. அவர் ஏன் கடற்கரைக்கு அடிக்கடி போனார் என்று படிக்கும் போது அவளுக்கு நன்றாகபுரிந்தது. அந்த கடற்கரையின் ஒவ்வொரு அங்கமும் கதையில் வந்தது. மாலை ஆறுமணியின் பின் வரும் மர்மப்படகுகள், அவர்களோடு தொடர்பு கொள்ளும் அதே ஊரைச்சேர்ந்த மனிதர்கள்

கடற்கரையையே இசையினால் தாலாட்டும் சுண்டல் விற்கும் பெண்மணியான செல்லம்மா!!! அவரின் வறுவல் சுண்டல்!!!

ரங்கம்மா கடையை மனதில் அசைபோட்டபடி அவள் மேலே படிக்க ஆரம்பித்தாள்.

இன்னொரு பக்கம் அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருத்தி கைது செய்யப்படுகிறாள்.

அதைப்பற்றி விசாரிக்க வருகிறான் தனஞ்சயன் என்ற இளம் போலீஸ் அதிகாரி.

ஹாஸ்டல் ஹாரிடோரில் நின்று அவன் மாணவிகளை விசாரித்திக்கொண்டிருக்க அவனுக்கு வலப்பக்க படிக்கட்டில் இருந்து இறங்கி வருகிறாள் ஒரு பெண்.

“வெண்ணிறக்குடையென அவள் அணிந்திருந்த ஸ்கர்ட் அவ்வப்போது அவள் நடக்கையில் விலக ஒரு முயலில் நளினத்துடன் பாதங்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. கழுத்தை சுற்றி ரோஜாக்களால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த சிக்கென்ற சிவப்பு மேலாடை தன்னை அணிந்திருந்தவளையும் ஒரு பெரிய ரோஜா போலத்தான் காண்பித்து கொண்டிருந்தது

பட்டென்று நிறுத்தி விட்டாள் ஆர்ணவி.

கழுத்தில் ரோஜா வேலைப்பாடு செய்த சிவப்பு டாப் அவளுடையதல்லவா!!! அட ஆமாம்!!! அன்றைக்கு முதல் தடவை அவள் அந்த கூடை நாற்காலியோடு வீட்டுக்கு போன போது வெண்ணிற லாங் ஸ்கர்ட் தான் அணிந்திருந்தாள்! நாற்காலிக்குள் போய் மாட்டுகிறதே என்று அதை திட்டியபடியே தூக்கி மேலே பின் செய்தது இன்னும் ஞாபகம் இருந்தது.

அடப்பாவி அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறீர்களா சார்? இந்த காரக்டர் மட்டும் மொக்கையாக இருக்கட்டும்..சொன்னதையெல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மொத்துவேன்!!!! மேலே படிக்க அவளுக்கு வேறு உத்வேகம் வேண்டியிருக்கவில்லை!

“சாரி சார், அனுமதி பெறாமல் மாணவிகளை நீங்கள் பார்க்க இயலாது. வார்டனின் அறைக்கு முன்னே காத்திருந்து அனுமதி பெறவேண்டும்.” பேருக்கு ஓர் புன்னகையை பூத்தபடி அவள் சொல்ல அவளை ஏற இறங்க பார்த்தான் தனஞ்சயன்

சாரி. நான் தனஞ்சயன். அங்கே வார்டன் இல்லை. நான் ஒரு பத்துநிமிடம் காத்திருந்து பார்த்தேன். அதனால் தான்…. நீங்கள்??

வணக்கம் என்பதாய் தலையசைத்தவள் “என் பெயர் ஆழி. உதவி விரிவுரையாளினி. தற்போது இந்த ஹாஸ்டல் வார்டனும் நான் தான்!” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு “அங்கே காத்திருங்கள்” என்று வார்டனின் அறைப்பகுதியை கைகாட்டிவிட்டு திரும்பி நடந்தாள் ஆழி

தனாவுக்குள் சினம் மூண்டது. “மிஸ் ஆழி!!! நீங்கள் திரும்பி வர எவ்வளவு நேரமாகும்?”

“சாரி சார். என்னுடைய அலுவலக நேரம் இன்னும் அரைமணிநேரத்தின் பின் தான் ஆரம்பிக்கும். சோ.. “ என்று தோளைக்குலுக்கியபடி திரும்பி நடந்தவளை அடக்கிய சினத்துடன் உறுத்து விழித்தான் தனா..

அடப்பாவி! ரொமான்ஸ் எழுதுவதில்லை என்றாரே…இந்தக்கதை ஆரம்பமே தூள்பறக்கிறதே.. ஆனால் அவளுடைய பெயரை வைத்து அவளது உடையையும் ஒரு காரக்டருக்கு மாட்டிவிட்டு கதையில் உலவ விட்டிருப்பதை படிக்கும் போது  அவளுக்கு என்ன எண்ணுவது என்றே புரியவில்லை

சட்டென ஒரு எண்ணம் தோன்றியது.

ஸ்ரீக்கா… தனஞ்சயன் என்ற பெயருக்கு அர்த்தம்  என்ன? என்று கத்தினாள் ஆர்ணவி.

தனஞ்சயா நம்ம அர்ஜூனன் பேர்மா…பூமராங் போல ஹாலில் இருந்து பதில் வந்தது

உதடுகளை கடித்தபடி சற்றுநேரம் அப்படியே இருந்தாள் அவள்.. என்னதான் அவர் தான் நேரில் சந்திப்பவர்களை கதையில் உலவ விடும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும்……..

என்ன சார் மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

ஆனால் அதற்கு மேல் அவளை எதையும் செய்யவிடாமல் கதை அவளை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டது.

புதுப்பழக்கம் ஆதலால் அந்த புத்தகத்தை நிறைவு செய்ய நான்கு மணிநேரங்கள் ஆகியிருந்தன. மனமெல்லாம் கேள்விகள் மட்டும் தான்

போதை வஸ்து கடத்தல், விநியோகம்..அந்த ஊரில் எங்கே எப்படி நடைபெறுகிறது? அதை ஆதரிக்கும் உள்ளூர் பிரமுகர்கள், அதன் ஆதரவு நெட்வர்க், எல்லாமே சுவாரஸ்யமாக பர பர திருப்பங்களுடன் கதை பறந்தது. ஆழி அதிகம் கதையில் குறுக்கிடவில்லை. ஆனாலும் அவளுக்கு கதையில் முக்கியத்துவம் இருந்தது.

அவளது சுபாங்கன் கதை போலவே அந்த ஆழிக்கும் மாணவி ஒருத்தி சம்பந்தப்பட்ட கதை இருந்தது, அதற்காக தனாவை தேடிப்போகிறாள் அவள்

இதுதான் அவள் படிக்கும் முதல் நாவல் ஆனால் முதலாவதிலேயே அவரது ரசிகையாகிவிட்டேன் என்று தான் தோன்றியது அவளுக்கு, ஆங்காங்கே அவரே நேரில் நின்று அந்த கீழுதட்டு சிரிப்போடு பேசுவது போல பிரமை தட்டியதும் கூட அதற்கான ஓராயிரம் காரணங்களில் ஒன்றாக  இருந்திருக்கலாம்

அன்றைக்கு வெகு சீக்கிரமே விவிதத்துக்கு கவனம் கிடைக்கும் என்று மர்மமாக சிரித்தாரே..உண்மைதான். ரத்தமும் சதையுமாய் இந்த நாவல் விவரிக்கும் விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் புறக்கணித்துவிட முடியாது!

எப்படி இத்தனை தகவல்களை கோர்த்து பரபரவென கதையை அமைத்தாரோ தெரியவில்லை. நிறைய கதாப்பாத்திரங்கள், பொறுப்பற்ற ஆண்கள், பெண்கள். மிகப்புத்திக்கூர்மையான ஒரு போலீஸ் கதாநாயகன்! ஆனால் ஆர்ணவிக்கோ ஆழி என்ற கதாப்பாத்திரம் மட்டும் தான் அவள் மனதில் நின்றது. பிறர் மனதில் தோன்ற சாத்தியமே இல்லாத கேள்விகள் எல்லாம் ஆர்ணவிக்கு அவளைக்குறித்து எழுந்திருந்தன. அவை அவளுக்கு மட்டும் தானே வர முடியும்?

அந்த ஆழி முற்றிலும் வேறாக இருந்தாள். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆர்ணவியை விட அர்ஜூனா தான் ஆழியில் அதிகம் தெரிந்தார்.

அவள் தைரியமானவளாக இருந்தாள்

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்தாள்

தனக்கு வேண்டியது என்ன என்பதில் மிகத் தெளிவாய் இருந்தாள்

தனாவுக்கு ஆழியின் மேல் லேசான ஈர்ப்பு இருப்பதாக கதையில் காண்பித்தாலும் ஆழியின் மர்மச்சிரிப்புக்கள் மொழிபெயர்க்கப்படவேயில்லை.

இருக்கிறது ஆனால் இல்லை என்ற ஒரு மிதக்கும் இனிய மனநிலையிலேயே அவர்களை தனித்தனி பாதைகளில் அனுப்பி கதையை முடித்து விடுகிறார் ஆசிரியர்.

இந்த ஆழி அர்ஜூனாவின் கனவுப்பெண்ணா? பல இடங்களில் ஆழி ஆர்ணவியை நினைவூட்டுவது போல இருந்தாலும் அவள் உணர்வுகளை வெளிப்படுத்தாத அழுத்தமான பெண் என்பதில் ஆர்ணவியிடம் இருந்து நிறைய வேறுபட்டாள்.

ஆனால் லேசாக தலைசாய்த்து விரலை நாடியில் தேய்த்துக்கொள்ளும் ஆர்ணவியின்’ மேனரிசம் வரை ஆழி செய்து தொலைத்திருந்தாள்

இதை எப்படி எடுத்துக்கொள்வது?

அர்ஜூனாவே தன்னுடைய உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையில் குழம்பி நின்றதைத்தான் இது காண்பிக்கிறதா? அவரின் கனவுப்பெண்ணை ஆர்ணவி என்ற நிஜம் ஜெயித்ததாக கொள்ளலாமா?

ஏன் சார், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற எளிய கணித்தலை இத்தனை குழப்பமாக்கி வைத்திருகிறீர்கள்?

அவர் தெளிவாக இருந்தால் கூட என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? மனதின் கேள்விக்கு தன்னைசுற்றி கவிந்த சோகம் தான் அவளுக்கு ஒரே பதிலானது

 

ஆழி- அர்ஜூனா 19

alia bhatt 3

ஒரு மேசையின் மீது மாவுத்துகள்கள் சிந்திக்கிடக்கின்றன. அதன் நடுவில் யாரோ ஊதியதைப்போல நடுவில் அவை கலைந்து கிடக்க பிய்ந்த ரோஜா இதழ்களை ஓரமாய் கொண்டு அவற்றின் சாயத்தை கொண்டு யாரோ எழுதியது போல ‘விவிதம்’ என்ற தலைப்பு எழுதப்பட்டிருந்தது. மீண்டும் அந்த அட்டைப்படத்தை பார்த்தார் அர்ஜூனா. எழுத்தாளனுக்கு நாவலின் அட்டைப்படம் மிகவும் முக்கியம் தானே.. நாவலின் உள்ளடக்கத்தை சொல்லும் குறியீடாக ஒவ்வொரு நாவலுக்கும் அட்டைப்படம் அமைந்து விடுவதில் அவர் எப்போதுமே அதிர்ஷ்டசாலி தான்.

பிரபு! இந்த படத்தையே ஒகே செய்து விடுங்கள்.

ஒகே சார்! என்று பவ்யமாய் சொன்ன பிரபு “சார் நிஜமாகவே நாவலின் தலைப்பாக இந்த மாவட்டத்தின் பெயரை போட்டிருப்பது சிக்கலை உண்டாக்காதா? என்று கேட்டார்.

“நான் சொல்கிறேன் பாருங்கள். விவித நகர் குறித்து நான் எழுதியிருக்கிறேன் என்றதுமே ஆர்வத்தில் நாவல் அதிகம் வாங்கப்படும் பிரபு” என்று சிரித்தவர்… “ப்ரோமொஷனுக்காக என்று மட்டும் இல்லை இந்த நாவலுக்கு இதைத்தவிர வேறு தலைப்பை என்னால் யோசித்தும் பார்க்க முடியவில்லை இதுவே இருக்கட்டும்” என்றவர் பிரபு அரைமனதாய் தலையசைக்க, நூல் வெளியீட்டைக்குறித்த ஆயத்தங்களை பற்றி பேசிவிட்டு விடைபெற்றார் அர்ஜூனா.

சார்..

என்ன பிரபு?

இந்த தடவையாவது நீங்கள் வெளியீட்டு விழாவுக்கு வாருங்களேன் சார்.. அதுவும் இந்த நாவல் கொஞ்சம் சர்ச்சைக்குரியது என்று ஏற்கனவே மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவும் போது நீங்களும் நேரில் வந்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்…

யோசிக்கிறேன் என்று புன்னகைத்தவர் பஸ்ஸில் தொற்றிக்கொண்டு நேராக கடற்கரைக்கு சென்றார். மனதில் கதைக்கரு ஏதும் இல்லாமல் சுற்றுப்புற சூழலை கவனிக்க முடிவதே அவருக்கு அபூர்வம் தான். இன்றைக்கு அப்படியானதொரு நாள்! தினம் வந்து போன இடங்களெல்லாம் புதிதானதொரு அமைதியுடன் இருப்பதாகப்பட்டது.

இளங்காற்று வீசுதே..

ரங்கம்மா ஒளிபரப்புச்சேவை மெலிதாய் இசைத்துக்கொண்டிருக்க புன்னகையோடு அவளை நோக்கி நடந்தார் அர்ஜூனா

வாங்க சார்… வழக்கம் போல உற்சாகமாக அவரை வரவேற்றாள் ரங்கம்மா..

என்ன சார்..ரெண்டு நாளா உங்களை இந்தப்பக்கமே காணோமே..சூடாக வடை போட ஆரம்பித்திருக்கிறேன். சாப்பிட்டுப்பார்க்கிறீர்களா?

சரி கொடுங்கள்..வேலை பிசியில் வரமுடியவில்லை  என்றவர் எங்கே குழந்தைகளை காணோம்? என்று தொடர்ந்து கேட்டார்.

இன்றைக்கு ஸ்கூலில் நாடகப்பயிற்சியாம் சார்.. என்றபடி சுத்தமான பிளாஸ்டிக் தட்டொன்றில் சூடான குட்டியான இரண்டு வடைகளையும் சட்னியையும் வைத்துக்கொடுத்தாள் ரங்கம்மா..

வடையை பிட்டு வாயிலிட்டு பார்த்தவர் அதன் சுவையில் சப்புக்கொட்டியபடி நன்றாக இருக்கிறது ரங்கம்மா.. ஆனால் வடை விற்க ஆரம்பித்தால் காபியும் கொடுக்க வேண்டியிருக்குமே. பேசாமல் ஒரு காபி மெஷினை வாங்கி வைத்து விடுங்கள் என்று இலவசமாய் ஒரு அறிவுரை சொன்னார்.

காசு சேர்க்கறேன் சார்..கொஞ்சம் சேர்ந்ததும் கடையை கொஞ்சம் பெருசாக்கலாம்னு யோசிக்கிறேன்..அப்புறம் கண்டிப்பா வாங்கிடுவேன் என்றால் அவள் நம்பிக்கையாக

ஹ்ம்ம்…அவர்  வடைகளை மெல்ல ஆரம்பித்தார்.

சார்..நம்ம அனு மிஸ் ஊருக்கு போறாங்களாம்ல.. இப்போ கொஞ்சம் முன்னே தான் வந்துட்டு போனாங்க. நல்ல பொண்ணு சார்..வேணாம் வேணாம்னு சொல்லியும் கேட்காமல் எனக்கொரு சேலை, பசங்களுக்கு கொஞ்சம் புத்தகங்கள் கொடுத்துட்டு போனாங்க!

தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டிருந்தவரின் கை அந்தரத்தில் உறைந்தது. இதற்காகத்தானே வீட்டுக்கு போகாமல் நேரே கடற்கரைக்கு வந்தார் அவர்!

“அந்தப்பொண்ணு டெம்பரரியா தானே இங்கே வந்தா..போக வேண்டியது தானே..” விட்டேற்றியாக சொல்லிக்கொண்டு கடற்கரையில் கொஞ்சம் தூரம் நடந்தவர் பிறகு யாழினியை பெரியம்மா வீட்டில் இருந்து அழைப்பதற்காக கிளம்பிச்சென்றார்.

ரெண்டு நாட்களுக்கு முன்னரே அவள் கிளம்பப்போகிறாள் என்று அவருக்கு தகவல் வந்து விட்டது அதிபர் மூலமாக..

இவள் இந்த விடயத்தை இவ்வளவு சீரியஸாக எடுப்பாள் என்று அவர் நினைக்கவே இல்லை..தன்னுடைய அவசர நடவடிக்கைகள் மூலமாக ஒவ்வொரு தடவையும் அவள் அவருடைய முடிவை சரியென நிரூபிப்பதாகவே அவர் நினைத்தார். அவர்கள் காரமாய் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. இதுவரை அவள் அவரோடு பேச முயற்சிக்கவில்லை. ஆனாலும் இறுதி நாள் பேச முயற்சிப்பாள் என்ற எண்ணத்தில் தான் அவளை சந்திக்காமல் தவிர்த்தார் அவர்.

ஆர்ணவி கிளம்பி போயிருப்பாள்ல? யாழினியின் சோகம் சுமந்த கேள்விக்கு இறுக்கமான தலையசைப்பை பதிலாக கொடுத்தவர் அவள் வழக்கம் போல போஸ்ட் பாக்சை செக் செய்ய எதிர் வீட்டின் பூட்டிய கதவை ஒருகணம் பார்த்துவிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.

அஜூ..எனக்கும் உங்களுக்கும் லெட்டர்!!!!

யாரும்மா போட்ருக்கறது? கேள்வியே அபத்தம் தான்..

ஆர்ணவி தான்!!!

அவருடையதை கையில் திணித்து விட்டு தன்னுடையதை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் யாழினி.

அன்றைக்கு சாப்பிட்டு முடித்து யாழினி தூங்கப்போன பிறகு தான் அறைக்குப்போய் தாளிட்டுக்கொண்டு அதை ஒப்பன் செய்தார் அர்ஜூனா.

ஹல்லோ சார்…

என்னடா கடிதம் எழுதியிருக்கிறாளே என்று உதட்டுக்குள் சிரிக்கிறீர்கள் தானே.. எனக்கு சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டியிருந்தது சார். இதை படித்துவிட்டு நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்கள் என்றோ நாம் சேருவோம் என்றோ நான் நினைக்கவில்லை. என் வரையில் விட்டுப்போன சில விளக்கங்களை சொல்லி முடிக்கா விடில் என்னமோ பாதியில் விட்ட வழக்கு போல என் மனதை நெருடிக்கொண்டே இருக்கும் அதனால் தான் எழுதுகிறேன்.

  • எங்களுக்கு வந்தது உடலியல் ரீதியான ஈர்ப்பு என்ற உங்களின் வாதம்

இது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லையா சார்? நீங்கள் குறிப்பிட்டு சொன்னது போல நான் குழந்தை இல்லை. இருபத்து ஆறு வயது நிறைந்தவள். ஆண்களோடு நிறையவே பழகியிருக்கிறேன். ஆண் நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எவருடனுமே எனக்கு உங்களுடன் ஏற்பட்ட விஷயம் வந்ததே இல்லை சார்.. ஆக்சுவலி எனக்கு அவர்கள் ஆண்கள் என்ற வேறுபாடே தெரிவது இல்லை. முதல் தடவையாக உங்களைத்தான் ஒரு ஆணாக நான் பார்த்தேன்.

சரி அவ்வளவு தெளிவாக சொன்னீர்களே..நீங்களும் நீங்கள் குறிப்பிட்ட ரீதியில் என்பால் ஈர்க்கப்பட்டதாகவும் என் நலன் விரும்பியதால் அதற்கு மேல் போகாததாகவும்! நான் கேட்கிறேன்..காதல் இல்லை..என்னோடு நேரம் செலவழிக்க பிடிக்கவில்லை என்றால் எரிந்து விழுவது போல விழுந்தாலும் மணிக்கணக்கில் என்னோடு பேசியது எதற்கு? அன்றைக்கு கூட மாடியில் வந்து ஒரு மணிநேரம் என்னருகில் தனிமையாய் இருந்தீர்கள். நான் புரிந்து கொள்ளத்தெரியாதவள் குழந்தை என்றெல்லாம் குற்றம் சாட்டிணீர்களே..அப்படிப்பட்ட என்னை இப்படியெல்லாம் தூண்டியது ஏன்?  நான் இன்னுமின்னும் உங்கள் பால் ஈர்க்கப்பட்டு திரும்பி வரவே முடியாத எல்லை வரை என்னை கொண்டு போய் விட்டு விட்டு மனசை உடைக்கவா? நான் அறிந்த அர்ஜூனா அவர் இல்லை சார். அவர் இப்படியெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்.

உண்மை என்னவெனில் நீங்களும் என்னை காதலிக்கிறீர்கள், என்ன முயன்றாலும் உங்களால் என்னை விட்டு விலகியிருக்க முடியவில்லை. உங்கள் ஈகோ அதை ஏற்க மறுக்கிறது. அவ்வளவு தான். மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண இனிமேல் நீங்க என்னை லவ் பண்ணினாத்தான் எனக்கென்ன? :p

ஒன்று சொல்லவா சார். உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் லயித்துப்போன ஒரே ஆளுமை நீங்கள் தான். எந்த சமயத்தில் எப்படி பேசுவீர்கள்..எந்த தருணத்தில் எழுந்து போவீர்கள், எங்கே சீரியஸாக பேசுவீர்கள், யாரின் மூக்கை உடைப்பீர்கள் எந்த இடத்தில் உங்கள் சாத்தானிச சிரிப்பை சிரிப்பீர்கள், முறைப்பீர்கள் சகலமுமே எனக்கு அத்துப்படியாகிவிட்டது. காதலை உணர கொஞ்சம் முன்னர்  நான் தனியாக நடக்கும் போது கூட உங்களை மனத்தால் அருகில் வைத்து எதற்கு நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள் என்று மனக்கண்ணில் காண ஆரம்பித்து விட்டேன். எந்நேரமும் உங்கள் அருகில் இருக்க வேண்டும். உங்கள் குரலை கேட்கவேண்டும்..புதிது புதிதாக நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனை ஆசை சார்.. எனக்கு வந்தது உடலியல் ஈர்ப்பா? போடா டாஷ்! உனக்கெல்லாம் எவளாவது அரைக்கிழவி வருவா..போய் சேர்ந்து கொள். நான்லாம் செட் ஆகவே மாட்டேன் ..கர்ர்ரர்ர்ர்

  • நீங்கள் உங்கள் பெண்களோடான பழக்கம் பற்றி சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற உங்களின் குற்றச்சாட்டு

நீங்கள் கண்டீர்களா? என்னைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? நீங்கள் இதை சொல்வது முதல் தடவையா என்ன? முன்பொரு தடவை என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு பஞ்சமே இல்லை என்று சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா? அப்போது நான் முடிவு செய்தேன்..இந்த மனிதரின் வாழ்க்கை முறை வேறு என்னுடையது வேறு.. விலகியிருக்க வேண்டும் என்று! ஆனால் தட் இஸ் லவ் இல்லையா? என்னால் விலக முடியவில்லை. ஆனால் கோபம் வரும் அப்போதெல்லாம் இது காதல் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் மேல் கோபம் கொள்ள அதை ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்தினேன்.

உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது சார். அன்றைக்கு பார்ட்டி முடித்த பிறகு திலீப் எங்களிருவரையும் பார்த்த பார்வையை வைத்துத்தான் நான் எங்களைக்குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் நான் உங்களை காதலிப்பதை புரிந்து கொண்டேன். புரிந்ததும் நான் சந்தொஷப்படவில்லை சார்..இத்தனை சிக்கலுள்ள ஒருவரை எப்படி என்று பயம் தான் வந்தது..நீங்கள் மொட்டை மாடிக்கு வர முன் நான் திலீப்புடன் பேசினேன். எதைப்பற்றி என்று நினைக்கிறீர்கள்? உங்கள் ரொமான்சுக்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கை பற்றித்தான்!

அவன் என்னிடம் இருந்து இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை என்றும் நீங்கள் தான் முதலில் சொல்வீர்கள் என்றும் எதிர்பார்த்ததாக சொன்னான். வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்! அவனிடம் ஒளிவு மறைவின்றி உங்களைப்பற்றி சொல்ல சொல்லிக்கேட்டேன்.

42 வயதுள்ள இவ்வளவு சுதந்திரமும் சமூக கட்டுப்பாடுகளை தூக்கியெறியும் தைரியமுள்ள  மனிதர் ரிஷ்ய சிருங்கராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நிறைவேறாத காதல் இருக்கலாம். அந்த காதலியோடு ஒருவேளை நீங்கள் எல்லை தாண்டியிருக்கலாம் என்பது தான் என்னால் முடிந்த ஆகக்கூடிய கற்பனையாக இருந்தது! ஆனால் திலீப் சொன்னது முற்றிலும் வேறு.. நீங்கள் காதலில் நம்பிக்கையே இல்லாத ஒருவர், உங்களுடைய தோழிகள் எல்லாருமே பெண் அர்ஜூனாக்கள் தான் என்றும் அவன் சொன்னான். எந்த பெண்ணோடும் செலவழிப்பதற்கு அர்ஜூனுக்கு நேரம் இருந்ததில்லை. அப்படியே ஓரிருவரோடு ஓரிருமுறை எல்லை தாண்டியிருக்க கூடும், மற்றபடிக்கு அவனை நான் நன்கு அறிவேன்..அவன் வீடு வரை  சென்ற முதல் பெண்ணும் அவன்  அதிகம் நேரம் செலவிட்ட ஒரே பெண்ணும் நீதான் என்று திலீப் சொன்னான்.

என்னிடம் மட்டும் தான் நீங்கள் குறும்பாக சண்டையிட்டு இவ்வளவு ஓப்பனாக பேசிப்பழகுவீர்களாம். ஆனாலும் அவன் கூட  என்னை நன்றாக யோசித்த பிறகு தான் முடிவு செய்ய சொன்னான்.

நான் நிறைய யோசித்தேன். உங்களை விட்டு விலகலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் முடியவில்லை. ஏனெனில் உங்கள் கமிட்மென்டை நான் பார்த்திருக்கிறேன் சார். 9D வகுப்பு மாணவர்களில் ஆரம்பித்து யாழினி வரை நீங்கள் ஒரு விஷயத்தில் கமிட் ஆனால் எப்படி அரக்கத்தனமான நேர்மையுடன் இருப்பீர்கள் என்பதை நான் பல தடவைகள் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அது போதும் என்று தான் என் மனது சொன்னது சார். அர்ஜூனா காதலிக்கும் முதலும் கடைசியுமான பெண் நானாகத்தானே இருக்க முடியும்? மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. நான் உங்கள் வாழ்க்கையில் வந்த பிறகான உங்கள் வாழ்க்கை குறித்துத்தான் எனக்கு அக்கறை. இந்த விஷயத்தில் ஆர்ணவி பாலிசி இது தான்.

காதலை சொல்லும்போது இந்த முடிவுடன் தான் சொன்னேன். பிறகு நீங்கள் என்னிடம் மனம் திறந்து பேசியது ஒரு வார கால தலைமறைவின்  பின்னர் தான்! அதுவரை அதைக்குறித்து ரகம் ரகமாய் அலசி ஆராய்ந்து மனதில் இதுதான் என்று முடிவெடுத்த பின் நீங்கள் சொல்லும் போது நான் ஆவென்று அதிர்ச்சியாகி கண்ணீர் விடுவேனா சார்?

பெண்களை பற்றி உங்களுக்கு தெரியாது..எனக்கும் ஈகோ உண்டு சார்,, நீங்கள் அந்த விஷயத்தை சொல்ல என்னால் அதை ஆற அமர கேட்டிருக்க முடியும் என்று எப்படி நினைத்தீர்கள்? உள்ளுக்குள் பல்லைக்கடித்தபடி இதெல்லாம் எனக்கு முன்னரே தெரியும்..ஒருவழியாக நான் முடிவெடுத்த பிறகு மறுபடி என்னை குழப்பாமல் அடுத்த விஷயத்துக்கு போ..இப்படித்தான் மனது அலறியது. உங்கள் முன்னிலையில் நீங்கள் எனக்கு முன்னே பெண்களோடு பழகியதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று உங்களிடம் காண்பித்து கொள்ள என்னுடைய ஈகோ இடம் தரவில்லை.

எனக்கு ஒரு காதல் கூட இருந்ததில்லை சார். எனக்கு அந்த பேச்சை காதால் கேட்கவே எரிச்சலாக இருந்தது ஏனெனில் நீங்கள் அதைப்பற்றி பேசியபோது எனக்கு ஒருவாரத்துக்கும் மேலாக தலைக்குள்ளேயே இருந்து புளித்துப்போன விஷயமாக மாறிப்போயிருந்தது அது!

ஒரு பெண்ணாக இருந்தால் புரியும்..கணவரின் பழைய காதலை கணவரே போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது யாருமே ஆறுதலாக கேட்க மாட்டார்கள்..எங்காவது இதற்கு பாஸ்ட் பார்வர்ட் பட்டன் இருக்காதா என்று எரிச்சலாகத்தான் இருப்பார்கள். எனக்கு வாய்த்தவர் இப்படி… என்ன செய்வது மனது வைத்துவிட்டேன் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்ற அதே எரிச்சல் மனநிலை தான் எனக்கு..உங்கள் முன்னிலையில் அதனால் நான் ஒரு சதவீதம் கூட பாதிக்கப்படவில்லை என்று காண்பிக்கத்தான் என் எரிச்சலைக்கூட வெளிப்படுத்திக்கொள்ளாமல் சிரிப்புடன் கடந்து போனேன்..

நீங்கள் எனக்கென்று ஆகி உங்களின் அன்பை அனுபவிக்கும் போது உங்கள் பழைய வாழ்க்கையை நினைத்தெல்லாம் உங்கள் நிம்மதியை கெடுக்கும் பக்குவமற்ற பெண் நான் கிடையாது.. அப்படி எனில் ஆளை விடு சாமி என்று என்றோ கிளம்பி போயிருப்பேன்..

  1. இருபத்து ஆறு வயது வரை நீ யார் என்று எனக்கே தெரியாது பிறகெப்படி உங்களுக்கு என் மேல் நல்ல எண்ணம் வரும் என்று கேட்டீர்களே ஒரு கேள்வி..

இது தான் சார் என்னை மிக மிக கொடுமையாய் காயப்படுத்தியது. மற்றக்கேள்விக்கெல்லாம் விளக்கம் கொடுத்திருப்பேன். நீங்கள் என்னை உங்களுக்கு தகுதியில்லை என்று சொன்னீர்களே இதன் பிறகு என்ன விளக்கம் கொடுத்து என்ன?

சார்.. ஆரம்பத்தில் இருந்து உங்களை நான் எனக்கு சமமாகத்தான் பார்த்தேன். ராகவியும் சஞ்சனாவும் பயந்து ஒதுங்கினாலும் நான் உங்களை விடவில்லை. நீங்கள் தப்பாக பேசினாலும் இவர் எப்படி இப்படிப் பேசலாம் என்று சண்டைக்கு வந்தேன்..மனதில் உங்களை அப்போதிலிருந்தே எனக்கு நெருக்கமாக உணர்ந்தேன். எனக்கு வயது வித்யாசம் எல்லாம் தெரியவே இல்லை. அப்போது இது காதல் என்று எனக்கு புரிந்து கொள்ள தெரியவில்லை. அது தவறில்லை ஏனெனில் இன்று வரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே :p

எங்கே விட்டேன்?

ஆர்ணவி குழப்பவாதி தான் சார்.. ஆனால் என்ன செய்ய? நான் வாழ்ந்த சூழல் அப்படிப்பட்டது. என் அப்பா, அம்மா இருவருமே பொறியிலலாளர்கள். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் இருந்தது. ஒரு விஷய்த்தோடான அறிமுகம் இல்லாமல் எனக்கு அது பிடிக்கும் என்று எப்படி கண்டுபிடிப்பது? அதனால் தான் சட்டத்துடனான அறிமுகம் கிடைத்ததும் நான் அதை ரசித்து கற்க ஆரம்பித்தேன். அந்த வகையில் எது எனக்கு வேண்டும் எது வேண்டாம் என்று நான் மிகத்தெளிவாய் இருப்பேன் சார். வேலையில்  கூட மனதை மறைத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களை எனக்குத்தெரியும். ஆனால் நேரம் காலத்தை வீணாக்கினாலும் எனக்குப்பிடித்ததை தேடி கண்டுபிடிக்கும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது. அதனால் தான் நான் இங்கே வந்தேன். இதை நீங்கள் குழப்ப மனம் என்று சொன்னால் சொல்லிவிட்டு போங்கள். நான் உங்களை எனக்கு வேண்டும் என்று சொன்னது கூட அப்படித்தான்.

என் வாழ்க்கையை நான் ரசித்து வாழ ஆசைப்படுகிறேன் சார். கடமைக்காக எதையும் சுமக்க தயாரில்லை. சமூகத்தின் கண்களில் அது முட்டாள்தனம் என்றால் நான் முட்டாளாக இருந்து விட்டுப்போகிறேன். யார் என்னை புரிந்து கொள்ளாவிடினும் நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன் சார். நீங்கள் கேட்ட கேள்வியில் நொறுங்கிப்போனேன் போங்கள்.

உங்களை பொறுத்தவரை மன முதிர்ச்சி என்றால் சின்ன புன்னகை கூட செய்யாமல் கிளாசி லுக் கொஞ்சமும் கலையாமல் அப்படியே பொம்மை போல வந்து போவார்கள் என்று எனக்கு அன்றைக்கு தான் தெரிந்தது. உண்மையில் நீங்கள் வளர வேண்டும் சார். நீங்களும் அப்படியான மனமுதிர்ச்சி உடையவர் என்றால் நீங்கள் சொன்ன தத்துவங்கள் உலகைப்பார்க்கும் கோணங்கள் எல்லாமே வெறும் வாய்ப்பேச்சு தான். உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

என்னை பொறுத்தவரை நானும் சந்தோஷமாக இருந்து என்னை சுற்றியிருப்பவரையும் சந்தோஷமாக இருக்க வைப்பது தான் வாழ்க்கை.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொன்னதை நான் நம்பவில்லை. உங்களுக்கு என்னை மறுக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அதனால் இதைக்கண்டுபிடித்து சொன்னீர்கள் நான் காயப்பட்டேன். உண்மை. ஆனால் அர்ஜூனாவை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். அவர் உலகை எப்படிப்பார்ப்பார் என்றது கூட எனக்கு அத்துப்படியாகி விட்டிருக்கிறது. அர்ஜூனாவின் கண்ணில் உண்மையில் நான் எப்படித்தெரிவேன் என்பதும் எனக்கு தெரியும். நான் ஏமாற வில்லை. ஆனால் இத்தனை தூரம் நீங்கள் இறங்கி என்னை மறுத்த பிறகு உங்கள் வாழ்க்கையில் என்னை வற்புறுத்தி சேர எனக்கு விருப்பமில்லை. ஆர்ணவி அந்தளவிற்கு டெஸ்பரேட் இல்லை.

அந்த வரை நீங்கள் ஜெயித்து விட்டிருக்கிறீர்கள்

ஆமாம். நீங்கள் எனக்கு சவாலாக அறிமுகமானீர்கள். எனக்கு முற்றிலும் புதிய உலகை காட்டினீர்கள். என்னை நானே விரிவு படுத்திக்கொள்ள நீங்கள் தான் உதவினீர்கள். ஒவ்வொரு சிக்கல் வந்தாலும் இதை அர்ஜூனா எப்படிப்பார்ப்பார் என்று எண்ணித்தான் நான் எதிர்கொள்கிறேன். ஒருவகையில் நான் உங்களின் ஏகலைவி தான். சொன்னீர்களே ஆர்ணவி யார் என்று எனக்கே தெரியவில்லை என்று! ஆர்ணவி யார் என்று தெரிந்து விட்டது சார். ஆனால் அதை உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது. சொன்னால் கூட அந்த கீழுதட்டு சிரிப்போடு இது எத்தனை நாளுக்கு என்று தான் எண்ணுவீர்கள். அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள். ஒருநாள் என்னை நீங்கள் சந்திப்பீர்கள். அன்றைக்கு நான் யாரென்று நீங்களே பார்ப்பீர்கள்.

பிற்குறிப்பு: இப்போது கூட நீங்கள் என்னை மறுத்த பொறாமையில் நான் யாழினியைப்பற்றி சொன்னதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் தானே? 😉 தாராளமாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களைக்குறித்து நினைத்துக்கொள்வது போல அர்ஜூனா சகலமும் அறிந்த தீர்க்கமாய் சிந்திக்கும் முதிர்ச்சியான மனிதன் இல்லை என்பதையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள். அர்ஜூனாவுக்கும் ஒரு vulnerable side இருக்கிறது. அதை நான் மட்டுமே அறிவேன் என்ற பெருமையோடு கடிதத்தை முடிக்கிறேன்.

ஆர்ணவி.

 

ஆழி- அர்ஜூனா 18

Alia-Bhatt-sad-looking-in-dear-zindgi-movie

ஆர்ணவியின் கூடைக்கதிரை இப்போது எதிர் பால்கனிக்கு பயப்படாமல் நட்டநடுவில் தொங்கிக்கொண்டிருந்தது. காலைக்காபியை கையில் வைத்துக்கொண்டு எதிர்ப்புறம் பல்துலக்கிக்கொண்டிருந்த யாழினிக்கு சைகை செய்து கொண்டிருந்தாள் ஆர்ணவி.

ஒரு வாரமாக இதுவே வழக்கமாகி விட்டிருந்தது. ஆனால் அர்ஜூனாவோ அவள் முகத்தில் பட்டு விடுவதே பாவம் என்பது போல அவளை நேரில் பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டிருந்தார்

“ஹேய் நீ ஸ்கூலுக்கு போகலையா?” யாழினி உரத்த குரலில் கேட்க “இன்றைக்கு நான் லீவ்” என்று இந்தப்பக்கம் இருந்து வாயசைத்தாள் ஆர்ணவி

ஏன்..உடம்பு சரியில்லையா?

“இல்லையில்லை..ஒரு வேலை இருக்கிறது..:

யாழினி!!!!! ஸ்கூலுக்கு போக வேண்டாமா? அர்ஜூனாவின் குரல் உள்ளிருந்து கேட்க சிரிப்பு வந்துவிட்டது ஆர்ணவிக்கு

“சார்.. அதை உள்ளே இருந்து சொன்னால் யாழினிக்கு எப்படிக்கேட்கும்? நான் சொல்ல மாட்டேன்..தேவையென்றால் நீங்களே வெளியே வந்து அவளிடம் சொல்லிக்கொள்ளுங்கள்” சிரிப்பை அடக்கிக்கொண்டு குரல் கொடுத்தாள் அவள்

அவசரமாய் கதவை திறந்து கொண்டு வந்தவர் அவளை முறைத்து விட்டு யாழினியின் தோளில் தட்டி அழைத்துக்கொண்டு திரும்பினார்

“ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்..காத்திருந்தேன்..” அப ஸ்வரத்தில் மீண்டும் அவள் குரல் கொடுக்க

“நல்ல விதமாய் சொன்னால் சிலருக்கு புரிவதே இல்லை. என்னை தேவையில்லாமல் பேச வைக்காதே!!!” அவர் மறுபடியும் முறைத்து விட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டு விட்டார் அர்ஜூனா

ஆக்சுவலி இதையெல்லாம் நான் தான் செய்திருக்க வேண்டும்!!! இங்கு தலைகீழாய் நடக்கிறது..கர்மம்!!!! எண்ணம் விளைவித்த புன்னகை முகத்தில் உறைந்திருக்க அன்றைய இன்டர்வியூவுக்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்தாள் அவள்..

அவளைப்பொறுத்தவரை மனதில் இருந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டாயிற்று. அவர் மனதிலும் தனக்கான நேசம் இருக்கிறது என்றும் அவளுக்கு தெரியும். அதற்கு மேல் எதையுமே அவள் அப்போதைக்கு யோசித்திருக்கவில்லை.

அவளின் மனம் முழுக்க இன்றைக்கு அவள் அட்டென்ட் செய்யப்போகும் இண்டர்வியூவிலேயே இருந்தது.

ஒன்பது மணிக்கு இன்டர்வியூ, எட்டுமணிக்கே தயாராகிவிட்டவள் பஸ்ஸில் போய் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் டாக்சியிலேயே கிளம்பிப்போனாள்

அங்கே பானலில் இருந்தவர்களில் இருவர் ஏற்கனவே அவளுக்கு பரிச்சயமானவர்களாகவும் இருந்து விட அதை ஒரு வெற்றிகரமான இன்டர்வியூ என்றே சொல்லி விடலாம்! அவளுக்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை.

இந்த மனுஷன் வேறு பேசவே மாட்டேன் என்கிறார். எவ்வளவு முக்கியமான விஷயம் நடந்திருக்கிறது..அவரிடம் பகிர்ந்து கொள்ளவே முடியவில்லையே.. சமீப காலமாக சண்டையோடு சண்டையாக சகலத்தையும் அவரோடு பகிர்ந்து கொள்ளும் வழக்கம் முக்கியமான தருணத்தில் இல்லாமல் போனது அவளுக்கு கவலையை கொடுத்தது..

வழியில் ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் மெலோன் ஐஸ்க்ரீம் புது வகையறா ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்க அதை யாழினிக்காய் வாங்கிக்கொண்டு வந்தவள் பதினோரு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தாள்

வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அர்ஜூனா மனதில் வந்து விட்டிருந்தார். தன் மேல் அவருக்கும் ஈர்ப்பு இருக்கிறது என்று உறுதியாய் நம்பினாள் அவள். இல்லையேல் எதையும் முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் மனிதர் தடுமாறுவதும் அவளைக்காணாமல் ஒளிவதும் எதற்காக? ஏதோ ஒரு காரணத்துக்காய் தன்னை அவர் மறுக்கிறார். அது வயதாக இருக்கும் என்று அவள் நம்பவில்லை. அர்ஜூனாவின் சிந்தனைகள் பரந்து பட்டவை..சமூகத்தின் கருத்தியல்களுக்குள் அவர் என்றுமே சிக்கமாட்டார்.

வேறு என்னவாக இருக்கும்? அவள் யோசித்துக்கொண்டே இருந்த வேளையில் தான் அவளது வீட்டு ஹாலிங் பெல் இடைவிடாமல் அலற ஆரம்பித்தது.

யார் இது? இப்படி விடாமல் அழுத்துவது? யோசனையாக எழுந்து வந்தவள் வெளியே ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்த அர்ஜூனாவை கண்டு திகைத்தாள்

ஒற்றைக்கையால் அவளை பிடித்து விலக்கிக்கொண்டு வேகமாய் உள்ளே வந்தவர் கதவை அறைந்து சாத்தினார்.

அவரது உடல்மொழியே உள்ளுக்குள் குளிரெடுக்க வைக்க மெல்ல மெல்ல பின்னடைந்தாள் ஆர்ணவி

“உனக்கு நல்லவிதமாத்தானே சொன்னேன்.. இதெல்லாம் சரிப்பட்டு வராது..விட்டு விடு என்று! உன் அப்பாவிடம் என்ன சொல்லி வைத்தாய்? அவர் ஸ்கூலுக்கு வந்து தேவையில்லாமல் என் மீது பழி சுமத்துகிறார்!!! அவரை போலீசில் பிடித்து கொடுத்திருப்பேன்.. பழகிய முகத்துக்காக பார்த்து விட்டு விட்டு வந்தேன்..”

என்னது அப்பா ஸ்கூலுக்கு போனாரா? ஐயோ அவசரப்பட்டு வீட்டில் உளறியது தவறாகிப்போய்விட்டதே.. மனதுக்குள் பதை பதைத்த படி அர்ஜூனாவையே பார்த்தாள் அவள். விழிகள் அவமானத்தில் கலங்கிச்சிவந்து கொண்டிருந்தன

நான் தான் இப்போதெல்லாம் உன் கண்ணிலேயே படுவதில்லையே. எப்படித்தான் விலகிப்போனாலும்  புரிந்து கொள்ளவே மாட்டாயா நீ? அவரின் ஆவேசம் குறைவதாக இல்லை

சார்…

பேசாதே.. எல்லாமே உனக்கு விளையாட்டாக போய்விட்டதில்லையா? நான் தான் உன்னை தூண்டி விட்டு உன் மனதை கெடுக்கிறேனாம்! உன் அப்பா எனக்கு சொல்கிறார்.

சாரி சார்..நான் அவர்களுக்கு இப்போதைக்கு சொல்லியிருக்க கூடாது.. அப்பாவிடம் நான் பேசுகிறேன்..சாரி”. இவ்வளவு நாளும் இருந்த தைரியமெல்லாம் குலைந்து பொல பொலவென கண்ணீர் கண்ணைவிட்டு உருள ஆரம்பித்தது ஆர்ணவிக்கு

அவருக்கும் அவளில் இரக்கம் தோன்றியிருக்க வேண்டும்.

“இங்கே வா” என்று அவளது தோளைப்பிடித்து சோபாவில் அமர வைத்து விட்டு எதிரில் தானும் அமர்ந்து கொண்டார் அர்ஜூனா.

“இன்றைக்கு கடைசித்தடவையாக இதை பேசித்தீர்த்து விடலாம். உனக்கு என்னிடமிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ கேள். நான் உணமையான பதில்களை சொல்கிறேன்..”

கண்களை துடைத்துகொண்டவள் நிமிர்ந்து அமர்ந்தாள்

“சார். நீங்கள் ஏன் என்னை வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்பதற்கு எனக்கு நேர்மையான காரணம் வேண்டும். உண்மையிலேயே அர்ஜூனா தன்னை நிராகரித்து விடப்போகிறார் என்ற பயம் மனதைகவ்விக்கொள்ள துடிக்கும் உதடுகளோடு கேட்டாள் அவள்

அவளையே சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தவர் “உண்மைகள் உன்னை காயப்படுத்தும் ஆர்ணவி. ஆனால் இந்த சிக்கலை கடக்க உன்னோடு உண்மையாய் இருத்தலே ஒரே வழி என்று எனக்கு தோன்றுகிறது.” என்று மெல்ல ஆரம்பித்தார்

“உன்னை மறுக்க முதலாவது காரணம்.. நானே தான். நான் ஒரு தனித்த மனிதன் ஆர்ணவி. பிறந்ததில் இருந்து எனக்கென்று யாரும் இருந்தது இல்லை. கொஞ்சம் வளர்ந்ததும் அப்படி ஒருவர் உருவாகிவிடாதிருக்க நானாகத்தான் பாடுபட்டேன்!  சமூக கட்டுப்பாடுகள் என்னை பாதிக்க விட்டதும் இல்லை. என்னால் ஒரு ரொமாண்டிக் குடும்பத்தலைவனாக என்றைக்குமே இருக்க முடியாது! நான் வாழ்க்கை போகும் பாதையில் போய்க்கொண்டு இருப்பவன்..இனிமேல் என்னை மாற்றிக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாதது.”

“இரண்டாவது நீ நான் சொன்னவைகளை காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. காதல் என்று தோன்றியதில் இருந்து உற்சாகத்துடன் விளையாடித்திரிகிறாய்.. நான் சொன்னேனே..என் வாழ்க்கையில் பெண்கள் வந்து போயிருக்கிறார்கள் என்று..அதைக்கூட நீ சீரியஸாக எடுக்கவே இல்லையே..உனக்கு வாழ்க்கையைப்பற்றி புரியவில்லை ஆர்ணவி..”

இந்த ரீதியில் அவர் வாதிடுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவளா அதை சீரியஸாக எடுக்கவில்லை? இவர் கண்டாரா?

“சார்….அது ஏனென்றால்..”

“விளக்கம் சொல்லாதே ஆர்ணவி!”

தன்னை பேச விடாமல் அவரே ஒரு முடிவுடன் பேசுவதை காண அவளுக்குள் கோபம் தான் மூண்டது. “சரி நான் சீரியசாய் எடுக்காததை விடுங்கள்.அதனால் எனக்கு என்ன குறை வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்

எப்படி சொல்வது.. நான் பழகிய பெண்கள் அநேகம் என் நட்புவட்டாரத்தில் தான் இருப்பார்கள். ஏதோ ஓர் நாளில் அல்லது நாட்களில் நாம் நட்பை விட ஒரு படி தாண்டிச்சென்றிருந்தோம் என்பதை சுத்தமாக மறந்து எல்லோருமே அவர்களின்  தனித்தனி  வாழ்க்கைகளில் மும்முரமாகிவிட்டோம். ஆனால் எனக்கு வரும் மனைவிக்கு அதை குறித்த தெளிவு இல்லாமல் நான் போகும் இடங்கள் பேசும் மனிதர்கள் வரை அவள் சந்தேகப்பட ஆரம்பித்தால் என்னாகும்? நான் ஒரு எழுத்தாளன் எனக்கு அமைதியான மனநிலை தான் எல்லாவற்றையும் விட முக்கியம்!”

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் இவர் அவளைப்பற்றி!!! நேருக்கு நேரே நேர்மையான வாதங்களை பளிச்சென முன் வைக்கும் அர்ஜூனா எங்கே போனார்? தாம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று இவருக்கு புரிகிறதா இல்லையா? சகலத்திற்கும் இலகுவாக பதில் சொல்லிவிடலாம் தான் ஆனால் அவளுக்கு ஒரு விஷயம் தெரிந்தே ஆக வேண்டுமே!

சார்…. என்று இடைமறித்தாள் ஆர்ணவி

ஷ்.. மூன்றாவதையும் சொல்லி விடுகிறேன். உன் வயதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த வருடம் இருபத்தாறு நிறைந்து விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். யோசிக்கத் தெரியாமல் காதல் என்று போய்விழும் டீனேஜ் பெண்ணில்லை நீ. ஆகவே அதற்காக மறுக்கிறேன் என்று தவறாக நினைக்காதே… என் வரையில் உறுதியான காரணம் உண்டு ஆர்ணவி. எனக்கு கொஞ்சம் என் சாதனைகளின் மேல் கர்வம் உண்டு. நான் இப்படிப்பட்டவன் என்ற பெருமை நிறைய இருக்கிறது. எனக்கு வாழ்க்கைத்துணையை தேடும்போது அவளை எனக்கு பிடித்திருக்க வேண்டும். என் துணைவி தெளிவான தீர்க்கமான சிந்தனை கொண்டவளாய் இருக்க வேண்டும். பல சமயங்களில் எனக்கு உன்னை விட யாழினி முதிர்ச்சியாய் தோன்றுவதுண்டு. நீ சில விஷயங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறாய் தான். ஆனாலும் ஒட்டுமொத்தமாய் ஆர்ணவி என்று சொன்னால் நீ யார் என்று இருபத்தாறு வயதிலும் உன்னாலேயே கூற முடியாதிருக்கும் போது உன்னை நான் எப்படிப்பார்ப்பேன்?

அவர் கடைசியாய் பேசியது அவளின் நெஞ்சில் நன்றாகவே தாக்கி விட்டிருந்தது. கண்ணில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று வர ஆரம்பித்திருந்தது. அழுகிறோமே..என்பதை விட அவரின் முன்னிலையில் அழுகிறோமே என்ற எண்ணம் தான் அவளை இன்னும் தாக்கியது.

இழுத்துப்பிடித்து புன்னகைத்தாள் அவள்

“இதற்குப்பிறகு என்னுடைய பக்க விளக்கங்களை சொல்வதில் அர்த்தமில்லை சார்” என்ற படி மீண்டும்  கஷ்டப்பட்டு புன்னகை செய்தவள் “ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு மட்டும் உண்மையாய் பதில் சொல்லுங்கள். ஒரே ஒரு தடவையாவது என் மேல் உங்களுக்கு ஈர்ப்பு வரவில்லையா? இனிமேல் நான் உங்களை காதலிக்க சொல்லிவிட மாட்டேன்..பயப்படாமல் சொல்லலாம்” என்று கேட்டாள்

“அது தான் வெளிப்படையாகவே இருந்ததே.. ஆனால் அது முற்றிலும் உடலியல் ரீதியானது!”

“சார்!!!!!!!!!! கொச்சைபடுத்தாதீர்கள் என்னை!”

இது தான் எனக்கும் உனக்கும் உள்ள வித்தியாசம். ஆணினால் பெண் ஈர்க்கப்படுவதும் பெண்ணினால் ஆண் ஈர்க்கப்படுவதும் இயற்கை..ஆனால் நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு வஸ்து இருக்கிறது. எது நமக்கு நல்லது எது கெட்டது என்று நமக்கு புரிந்து கொள்ள தெரியவேண்டும். ஆசைப்படுவதைஎல்லாம் வாங்கி சாப்பிட்டு விட முடியாது ஆர்ணவி.. எனக்கு உன் மேல் நேசம் இருக்கிறது. உன் நலன் விரும்பி நான். என் சுயநலத்துக்காக உன்னை உபயோகித்துக்கொள்ள என்னால் முடியாது

போதும் சார்..இதை கேட்டு நான் அப்படியே மகிழ்ந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இதற்கு மேல் தயவு செய்து எதுவும் பேசாதீர்கள்.

அப்படி எடுத்துக்கொள்ளாதே ஆர்ணவி. எதையும் பலகோணங்களில் உடைத்து ஆராய்வது நமக்கு பிரச்சனையை விட்டு வெளியில் நின்று பார்க்கும் வாய்ப்பை தரும். எப்போதும் இறுதி வார்த்தை உன்னுடையதாகவே முடித்து பழகியவளுக்கு நான் ஓர் சவாலாகவே அறிமுகமானேன். நீ என்னை சவாலாக எடுத்துக்கொண்டதால் தான் விளையாட்டுக்குக்கூட என்னை ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலை பின் விளைவுகளை பகுத்தறியும் உன் வல்லமையை விழுங்கி விட்டது. நன்றாக யோசித்துப்பார்,,

வாசலை நோக்கி கை காண்பித்தாள் ஆணைவி. “கிளம்புங்கள் சார். ஒருவேளை தவறு என்மேலே தானோ என்னவோ.. இன்றிலிருந்து உங்களை நான் டிஸ்டர்ப் செய்யப்போவதில்லை,” உறுதியாய் சொன்னவள் கைகளை மடித்து குறுக்காக கட்டியபடி கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

யோசி. என்று மட்டும் சொல்லி விடு கதவை தாண்டி நடந்தவரை “சார்” என்று அழைத்தாள் ஆர்ணவி.

உங்களிடம் சொல்ல எனக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. பின்னால் மெதுவாக உங்களிடம் பகிர வேண்டும் என்று நினைத்தேன்..இனிமேல் நாம் பேசும் வாய்ப்பு குறைவு என்பதால் இப்போதே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

“உங்களுக்கு மக்களோடு சேர்ந்து பழக பயம் சார், உங்களை சுற்றி நீங்களே ஒரு வட்டம் போட்டு வைத்திருக்கிறீர்கள். உங்கள் புத்திசாலித்தனம், முரட்டு உண்மைகளை, பிறரை காயப்படுத்தும் நிஜங்களை பேசுவது, சமூக கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு வாழ்வது இவைகள் மூலம் மூர்க்கமாய் உங்களை நீங்கள் சமூகத்திடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பயம் சார்!”

யாழினி மட்டும் தான் உங்கள் வட்டத்துக்குள் இருக்க முடியும். இருக்க அனுமதிப்பீர்கள். அதற்காக அவளது சுய விருப்பத்தை மறுக்கக் கூட செய்வீர்கள். என்னிடமே அவள் நேரடியாக சொல்லியிருக்கிறாள். உங்களுக்காகத்தான் இங்கே இருப்பதாகவும் மற்றபடிக்கு தந்தையோடு இருக்கத்தான் விருப்பம் என்று! கண்ணாலேயே பார்த்திருக்கிறேன் சார்.  அவளுக்கு அப்பா மேல் அவ்வளவு பாசம்.. சரி அவளுடைய அப்பாவுக்கு பிசினஸ் ஆரம்ப நிலை சமநிலை பிரச்சனை..இருக்கட்டுமே.. அது அவர்களின் குடும்பத்து கஷ்டம்..குடும்பத்தினராக அவர்கள் இருவருமல்லவா அதை கடந்தாக வேண்டும்? அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களே இல்லை. என்னாலேயே அவளை புரிந்து கொள்ள முடியும் போது அவளோடே வாழும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதை உங்கள் மூளையை எட்ட விடாமல் தடுத்து வைத்திருக்கிறது உங்கள் பொசசிவ்நெஸ்! நீங்களும் போய் நன்றாக யோசியுங்கள்!

போதும் என்று கையை தூக்கி காண்பித்தவர் வேகமாய் வீட்டுக் கதவை திறந்து கொண்டு செல்ல சற்று நேரம் உணர்வே இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஆர்ணவி  ஆர்ணவி.

ஆழி – அர்ஜூனா 17

alia_27

 “ஆழி!” தனஞ்சயன் சத்தமாய் அழைத்தான்

நின்றாள்

“என்ன பிரச்சனையாக இருந்தாலும் தயங்காமல் என்னை அழைக்கலாம்”

தலையை மட்டும் திருப்பிப்பார்த்தவளின் கண்ணில் ஒரு வகை குறும்பு ஒளி தெரிந்ததோ..

அவள் நன்றி சொல்லிவிட்டு நீள நடந்து தெரு வளைவில் மறைந்தாள்

வாழ்க்கைப்பயணத்தில் வெவ்வேறு நிறுத்தங்களில் ஏறி சக பயணியாய் கொஞ்சக்காலம் ஒன்றாக பயணித்தவர்கள் ஒன்றாகவே இறங்கிச்செல்வதெல்லாம் எப்போதாவது தான் நடக்கும்.. மற்றபடி அவரவர் நிறுத்தங்களில் இறங்கி போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.

அப்படியே கழுத்தைபிடித்துக்கொண்டு சாய்ந்தார் அர்ஜூனா..முக்கியமான கிளைமாக்ஸ் முடிந்து விட்டது. இனி கதையை முடிக்க வேண்டியது தான்!

வலித்த கழுத்தை லேசாக வருடி விட்டுக்கொண்டவருக்கு திடும்மென சற்று முன்னர் தன் கழுத்தை தழுவிக்கொண்டிருந்த மென் விரல்கள் நினைவுக்கு வந்தன.

சரியான ஒரு ராங்கி ரங்கம்மா!!! ஆர்ணவியின் நினைவில் உதட்டில் தானாகவே புன்னகை வந்தது அவருக்கு.

அவ்வளவு நேரமும் எழுதியதை ஸ்கான் செய்து தன்னுடைய டைப்பிஸ்ட்டுக்கு அனுப்பி விட்டு கணனியை ஷட் டவுன் செய்தார் அர்ஜூனா.

கொஞ்சநேரம் காற்றுப்பட வெளியில் நடந்தால் நன்றாக இருக்கும் போலிருக்க நேரத்தை பார்த்தார். மணி பன்னிரண்டு முப்பது என்றது கடிகாரம். இன்றைக்கு மொட்டைமாடி பார்ட்டியில் குதித்தாடிய அலுப்போ என்னவோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் யாழினி. அவளை திருப்தியுடன் இன்னொருமுறை  நோட்டமிட்டவர் வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டு எளியே வந்தார். ஹாரிடோர் இருளில் மூழ்கிக்கிடக்க விளக்கைப்போடாமலே மெல்ல  பால்கனிப்பக்கம் நடந்தவர் லேசான குளிர் காற்று முகத்தில் பட பால்கனி கம்பிகளை பற்றிக்கொண்டு சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார். தற்செயலாக மொட்டை மாடிப்பக்கம் கண்களை திருப்பியபோது தான் அதிர்ந்து  போனார்.

ஒரு பெண்ணின் கால்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன!

கருநீல உடலில் வெள்ளைகீற்றுக்கள் தெறித்த அந்த பைஜாமா ஆர்ணவி அணிந்திருந்தது தானே..

இந்த நேரம் மாடியில் என்ன செய்கிறாள்? தன்னிச்சையாக படியேற ஆரம்பித்து விட்டவர் வேகமாய் மொட்டை மாடியைத்தொட்டார்.

நாலுபக்கமும் மொட்டைமாடியில் அரைச்சுவர் கட்டப்பட்டிருக்க அதற்கு வெளியே அரையடி நீளத்துக்கு பிளேட் நீட்டிக்கொண்டிருக்கும். இவள் அந்த அரைச்சுவரை ஏறிக்குதித்து அந்த பிளேட்டின் விளிம்பில் கால்களை தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்!

அவள் இருந்த இடத்தை நெருங்கியவர் அரைச்சுவரின் பின்னே வந்து நின்றதை அவள் உணரவில்லை. தலையை சுவரில் சாய்த்தபடி கால்களை ஆட்டிக்கொண்டிருந்தவளின்  உதட்டில் புன்னகை உறைந்து கிடந்தது..

இந்த நேரம் இங்கே என்ன செய்கிறாய்?

அவரின் குரலில் தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு திரும்பியவள் அவரைக்கண்டு ஆசுவாசமாகி “சார்.இப்படியா சத்தமே இல்லாம வந்து நிப்பீங்க..பயத்தில் கீழே விழுந்திருந்தேன் என்றால் என் உயிருக்கு நீங்களா பொறுப்பு?” என்று  அவரிடமே எகிறினாள்!

“ஆமாம்..சுவரேறிக்குதித்து விளிம்பில் உட்காரும்வரை ஒன்றுமேயில்லை. நான் சத்தமில்லாமல் வந்தது தான் உன் பிரச்சனையா? உன் காலை மட்டும் கீழிருந்து பார்த்து பேய்ப்பயத்தில்  கீழ்வீட்டுக்காரன் மயக்கமாகிவிட்டான் தெரியுமா?” என்று  அவர் சிரித்தார்

“ஹா ஹா ஹா….தூக்கம் வரவில்லை. அதுதான் மாடிக்கு வந்தேன்.. ஆனால் இங்கிருந்து பார்க்கும் போது வியூ செமையாய் இருக்கிறது தெரியுமா? இங்கே வந்து பாருங்களேன் ”  சிரித்தபடி அவரையும் துணைக்கழைத்தாள் அவள்.

செமையாய் தான் இருக்கும்..நல்ல நிலா..நடு இரவு ..உலகமே உறங்குகிறது. மொட்டைமாடியின் விளிம்பில் இருந்து கொண்டு கீழே பார்த்தால் அப்படித்தானே இருக்கும்!

அவர் “நீயே பார்..” என்றார் விட்டேற்றியாக

“அட சும்மா வாங்க சார்..நான் ஒன்றும் உங்களை கடித்து தின்று விட மாட்டேன்..” அவளின் குரலில் இருந்த சிரிப்பு அவரை சீண்டியது.

நீயா என்னய்யா? என்று சிரித்தபடி ஒரே எம்பில் மறுபக்கம் குதித்தவர் அவளின் அருகில் அமர்ந்து கொண்டார்..

உண்மைதான்..கால்கள் அந்தரத்தில் ஆட அங்கே அமர்ந்திருப்பது மிதப்பது போலத்தான் இருந்தது.

ஏன் தூக்கம் வரல உனக்கு?..யாழினி செம தூக்கத்தில் இருக்கிறாள்.

ஏன் .. நானும் யாழினியும் ஒன்றா.. அவள் குழந்தை சார்!

அவளின் உடனடியான ஆட்சேபனைக்கு அவர் பதில் பேச வில்லை. தூரத்தில்  மின்னி மின்னி எரிந்த விளக்குகளையே  பார்த்துக்கொண்டிருந்தார்.

கனாக்களில் வரும் பெண் விம்பம் திகைக்கிறேன் யார் என்று

முகத்திரை அதை தள்ளிப்பார்த்தால் முறைக்கிறாய் நீ நின்று..

நன்றாக சுவரில் சாய்ந்தபடி மெல்லிய குரலில் பாடிக்கொண்டு இருந்தவள் திடும்மென “இனிமேல் இந்த ஊரின்  போதைப்பொருள்  பிரச்சனைக்கு என்ன சார் ஆகும்?  இத்தோடு முடிந்து விட்டது என்றால் நம்பமுடியவில்லை” என்று கேட்டாள்

“முடியாது… நன்றாக ஊடுருவி பாடசாலை மாணவர்கள் வரைக்கும் வந்துவிட்ட வியாதி வெறுமனே நாற்பது பேரை கைது செய்தால் அடங்கி விடுமா?” என்று கேட்டார் அவர்..விழிகளை அவள் புறம் திருப்பாமலே

“தொடர்ச்சியாக மக்கள், பாடசாலைகள், அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இது தொடர்பில் வேலை பார்க்க வேண்டும். போலீஸ் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இதில் பாதி சாத்தியப்பட்டாலே நல்ல முன்னேற்றம் வரும்.”

“சார்..ஆனால் இத்தனை நடந்தும் மினிஸ்டர் அப்படியெல்லாம் பெரியளவில் நடக்கவில்லை என்று மறைத்து பேட்டி கொடுக்கிறாரே..இவர்கள் இப்படி இருந்தால் எப்படி இந்த ஊருக்கு கவனம் கிடைக்கும்?” அவள் வருத்தமாய் கேட்க

“கிடைக்கும்.. வெகு சீக்கிரமே கிடைக்கும்!” என்று சொன்ன அர்ஜூனாவின்  இதழ்களில்  மர்மப்புன்னகை பூத்தது.

ஐ நோ… தெரியும் ஆனா சொல்லமாட்டீங்க.. விடுங்க எனக்கு தெரியவே தேவையில்லை..அவள் பிணங்கிக்கொள்ள அவருக்கு இன்னும் சிரிப்புத்தான் வந்தது ஆனால் பிடி கொடுக்கவில்லை.

அவள் கடைக்கண்ணால் தன்னை முறைப்பது புரிந்தாலும் வேண்டுமென்றே நேரே பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

கனகாம்பர இதழை விரித்து

குறும்பாயொரு சிரிப்பை உதிர்த்து

திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்?

அவள் மீண்டும் ஹம் பண்ண ஆரம்பித்து விட என்ன இன்றைக்கு பாட்டெல்லாம் பலமாயிருக்கு? என்று மட்டும் விசாரித்தார் அவர்

கல்யாணம் பண்ணிக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன் சார்..பளீரென்று பதில் வந்தது

ஒருத்தனை பலி போடலாம்னு டிசைட் பண்ணிட்ட போலிருக்கு.. என்றார் அர்ஜூனா மிகக்கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியபடி.

என் மேல் கொண்ட நல்லெண்ணத்துக்கு நன்றி!! என்று முறைப்பாய் சொன்னாள் அவள்

அவர் சிரிப்பு முகம் மாறாமலே இருக்க கொஞ்ச நேரம் முறைத்துக்கொண்டே இருந்தவள் பிறகு

“சார்.. கல்யாணத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இந்த லவ்ல எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? நீங்க ஏன் இவ்ளோ நாளும் கல்யாணம் பண்ணிக்கல..இனிமே பண்ணிப்பீங்களா?” பேசும்போதே அடுத்த ஆராய்ச்சிக்கு போய் விடுவாள் போல..அவளிடம் இருந்து கேள்விகள் மழையென வந்து விழுந்தன

இப்போ திடீரென்று ஏன் இந்த ஆராய்ச்சி உனக்கு?

சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்..

ஒண்ணும் தேவையில்ல.. எரிச்சலாய் சொல்வது போல சொல்லி பேச்சை மாற்ற முனைந்தார் அவர்.

அட சொல்லுங்க சார்.. நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல? அவள் விடுவதாக இல்லை.

எனக்கு கல்யாணம் கமிட்மென்ட்டில் எல்லாம் இண்டரஸ்ட் கிடையாது

இதுவரை எந்த பொண்ணுமே உங்களை இம்ப்ரெஸ் பண்ணலையா?

பண்ணியிருக்காங்களே!

அவர்களில் யாருக்காவது ப்ரொபோஸ்  பண்ணீங்களா?

எதுக்கு? எனக்குத்தான் இந்த கமிட்மென்ட்லலாம் இன்டரஸ்டே கிடையாதே..

ஐயோ குழப்பறீங்களே சார்.. இம்ப்ரெஸ் ஆகியிருந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க? ப்ரோபோசும் பண்ண மாட்டேன்னு சொல்றீங்க? சும்மா அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்பதோடு போய்விடுவீர்களா? நம்ப முடியவில்லையே..

ஹா ஹா ஹா.. இதுவரை பலர் இம்ப்ரெஸ் பண்ணியிருக்காங்க தான்.. ஆனால் ஒரு சிலருக்கு தான் ரிலேஷன்ஷிப் தொடர்பில் என்னைப்போலவே ஒத்த மனம் இருந்தது. அவர்களோடு சிறிது காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததுண்டு..

அவ்வ்வவ்வ் ரொம்ப மோசம் சார் நீங்க..

சரி அதை விடுங்க..என் அடுத்த கேள்வி  இப்போ நீங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தால் உங்க மனைவி எப்படியிருக்கணும்?

நான் தான் எனக்கு மனைவியே வேண்டாம் என்று சொன்னேனே..என் வாழ்க்கைக்கு இப்படியிருப்பது தான் பொருந்தும்!

சும்மா ஒரு கற்பனை பண்ணுங்களேன்..எப்படியான மனைவி உங்களுக்கு வரணும்?

ஹ்ம்ம்..முதலாவது  ஒருவரை ஒருவர் பிடித்துப்போக வேண்டும்.  நான் அவளை சமமாக நடத்த வேண்டும் என்று என்னை எதிர்பாராமல் தானாகவே தன் உரிமையை எடுத்துக்கொள்ளும் தைரியசாலி என்றால் எனக்கு பிடிக்கும். அவளால் தான் எல்லா விதத்திலும் என்னை புரிந்து கொண்டு வாழ முடியும் என்று நம்புகிறேன்.

அப்போ வயது, தோற்றம் எல்லாம் உங்களுக்கு பிரச்சனை இல்லையா?

லேசாக மண்டைக்குள் அலாரம் அடித்தது அவருக்கு..இவள் இன்றைக்கு நடந்து கொள்ளும் முறையே சரியில்லையே..

“ஒருவரை ஒருவர் பிடிக்க வேண்டும் என்பதற்குள்ளேயே அதுவும் வந்துவிடும். ஆளை விடுகிறாயா? நான் போய் தூங்கப்போகிறேன்.”

ஒகே ஒகே..நான் இந்த டாபிக் பற்றியே பேசவில்லை. உட்காருங்கள் சார்.

பேச்சு அபாயகரமாய் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதைக்கெல்லாம்  நீ எழுந்து போயிருக்க வேண்டும் அர்ஜூனா என்று மனம் சொன்னாலும் அவர் அந்த சூழ்நிலையின் இனிமையை இழக்க விரும்பாமல் அவளுக்கு கட்டுப்பட்டது போல அங்கேயே அமர்ந்திருந்தார்

காற்று தலைமுடியை மொத்தமாய் கலைத்துப்போட முகமெல்லாம் பறந்த முடியை ஒதுக்கியபடி கால்களை ஆட்டிக்கொண்டிருந்தவள் அவரையே பார்த்துக்கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.

என்ன தான் உன் பிரச்சனை? தலையை அவள் புறம் திருப்பாமலே வினவினார் அர்ஜூனா

சார்.. நான் சொல்வதை பொறுமையாக கேட்பீர்களா?

மறுபடி என்ன சொல்லப்போகிறாய்? அவர் சந்தேகமாய் கேட்டார்

கோபப்படக்கூடாது. யாழினி அவளுடைய அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாள் என்று எனக்கு தோன்றுகிறது சார்..

அவ்வளவு தான் எழுந்தே விட்டார் அவர்! “ உனக்கு முன்னமும் எச்சரித்திருக்கிறேன். என்னுடைய குடும்ப விஷயத்தில் நீ தலையிடாதே என்று! இன்னொரு தடவை இதை பற்றி நீ பேசினாயால் என் இன்னொரு முகத்தை நீபார்க்க வேண்டியிருக்கும்!”

அவர் அரைச்சுவரை கடந்து மொட்டைமாடியில் இறங்க தானும் எழுந்து அரைச்சுவரில் கைகளை ஊன்றி அதில் கன்னத்தை வைத்தபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தவள் “ சார்” என்று அழைத்தாள்

அவரது நடை நின்றது

“ஐ தின்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ” அவள் சிரித்துக்கொண்டே சொல்ல அவர் அதிர்ந்து தான் போனார்.

கொஞ்சம் மோப்பம் பிடித்தார் தான் ஆனால் இப்படி நேராகவே சொல்வாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

“உண்மை சார்.. இது வரை எனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசையே வரவில்லை..எந்த ஆணும்எ ன்னை சலனப்படுத்தியதும் இல்லை..உங்க கிட்ட மட்டும் ரொம்ப வித்யாசமா உணர்ந்தேன் சார். என்னமோ உங்க கிட்ட மட்டும் எனக்கு நிறைய உரிமை இருக்கறதா தோணுது. உங்க கிட்ட மட்டும் தான் நான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறேன். இவ்வளவு நேரமும் தூங்காமல் அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்”

அவர் அவளை பார்த்துக்கொண்டே நின்றார்

“என்னை யாரும் கோபமாக பேசினால் தப்பு என் மேல் என்றால் கூட ஜென்மத்துக்கும் அவர்களோடு பழைய படி என்னால் பேச முடியாது..அப்படிப்பட்ட நான் உங்களிடம் மட்டும் நீங்கள் என்னதான்  திட்டினாலும் நாய்க்குட்டி போல ஏன்  திரும்ப திரும்ப வந்து சேர்ந்து கொள்கிறேன்?”

“உங்கள் குணம், முகத்துக்கு நேரே பேசும் நேர்மை , உங்கள் திமிர் உங்கள் அரகன்ஸ், நீங்கள் சிந்திக்கும்  விதம் , உங்களுக்கு முக்கியமானவர்களோடு நீங்கள் பழகும் விதம் எல்லாமே… எனக்கு பிடித்திருக்கிறது. என்னிடம் இருக்கும் அறிவெல்லாம் அழித்து விட்டு உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் போல ஒரு பீலிங்!உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா?”

“உங்களிடம் கூட என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கு தெளிவில்லை ஆனால் ஐ லவ் யூ சார்.. அதுதான் நீங்கள் தவறு செய்யும் போது என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.  திரும்ப திரும்ப யாழினி விஷயத்தை பற்றி உங்களிடம் பேசுவதற்கும் அது தான் காரணம்.”

“ஆர்ணவி!!! உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? விளையாடுவதற்கும் ஒரு அளவு வேண்டும்!!!!” அவர் கிட்டதட்ட உறுமினார்

ஹா ஹா நான் விளையாடவில்லை மனதிலிருந்து தான் பேசுகிறேன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் தடுமாறி நிற்கும் நிலையே அதை எனக்கு சொல்லி விட்டது! இன்றைக்கு உங்களுக்கு இந்த அதிர்ச்சி போதும் சார்..போய் தூங்குங்கள்.. நன்றாக யோசித்து எப்போது பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது சொல்லுங்கள்” கன்னங்குழிய சிரித்தாள் அவள்

“உளறாதே..  நீ உண்மையத்தான் பேசுகிறாய் என்றால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இது நடக்கவே நடக்காது. புரிந்ததா உனக்கு!!!”

ஏன் நடக்காது? உங்களுக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும்!

ஒருத்தியை பிடிப்பதும் அவளை காதலிப்பதும் ஒன்றா?  என்ன மடத்தனமாக பேசுகிறாய்! உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.

உண்மையை சொல்லுங்கள் சார், நீங்கள் எதிர்பார்க்கவில்லையா? எங்களிருவருக்கும் இடையில் ஒரு வித டென்ஷன் அந்த மழை நாளில் இருந்து இருந்து கொண்டே இருந்தது. உண்மையில் எனக்கு அன்று தான் புரிய ஆரம்பித்தது. என் ஊகம் சரியென்றால் உங்களுக்கு அதற்கு முன்பிருந்தே தெரிந்திருக்கும். போய் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்!!!

அவருக்கு அதற்கு மேல் கேட்க பொறுமையில்லை.

ஜஸ்ட் ஷட் அப்! கடித்த பற்களுக்கிடையில் உறுமி விட்டு அவர் படிகளில் இறங்க ஆரம்பிக்க அவள் அந்த அரைச்சுவரை தாண்டிக்குதிக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அவரது படியிறங்கும்  வேகம் குறையவே இல்லை.

 

 

 

ஆழி – அர்ஜூனா 16

 

alia-bhatt-latest-2015-hd-wallpapers

நிலவுக்கு பிறந்த நாள் வருவதற்கு இன்னும் மூன்றோ நான்கு தினங்கள் தான் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட முழுநிலவாய் மொட்டைமாடி எங்கும் வெண்ணொளி வீசிக்கொண்டிருந்தது அது. மேஜைக்கு மட்டும் டேபிள் லாம்ப்பை எடுத்துக்கொண்டு வந்து போட்டிருந்தாள் ஆர்ணவி. மெனு ஆர்டர் செய்யும் போது கொஞ்சம் யோசித்து சைனீஸ் வகையறாவில் sea food சூப் ஒன்றும் ஆர்டர் செய்திருந்தாள் அவள்.

காலையில் அர்ஜூனா சொன்ன தாய் ஐட்டமும் sea food சூப் தான் என்பது தான் காரணம்! நேராக அதையே ஆர்டர் செய்து கொடுத்திருக்கலாம். அவர் சொல்லி நான் என்ன செய்வது என்று அவளுக்கும் ஒரு ஈகோ.. நேராக மேலே வந்த மனிதர் எல்லாவற்றையும் திறந்து பார்த்துவிட்டு அந்த சூப்பை தனக்காக எடுத்துக்கொண்டப்போது இருவர் உதடுகளிலும் ரகசியப்புன்னகை மலர்ந்து மறைந்த அந்தக்கணம் ஏனோ அவளுக்கு பிடித்திருந்தது.

ஹேய் ஆர்ணவி!!!! கான்சன்ரேட்!!! யாழினியின் மழலைக்குரலில் சற்றே எரிச்சல்!!!

தன் இரண்டு கைகளையும் இறுகப்பிடித்தபடி டான்ஸ் என்ற போர்வையில் குதித்துக்கொண்டிருந்த யாழினியை பரிதாபமாகப்பார்த்தாள் அவள்

சாப்பிட்டு முடித்து ஆண்கள் இருவரும் கொஞ்சம் விலகிச்சென்றுவிட அவளிடம் வந்த யாழினி அவளை தன்னோடு ஆட வருமாறு அழைத்தாள்

அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது போலும் என்று எண்ணியவள் உடனே யோசிக்காமல் தலையாட்டி விட்டாள். ஆனால் தாளமே அற்ற நடனத்தை யாழினியோடு இணைந்து ஆடுவதென்பது அவ்வளவு சுலபமானதல்ல என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை!

டான்சை விட்டு குதித்தல் பக்கம் சென்றுவிட்டவளை அடக்கும் வழி தெரியவில்லை. அவளின் கைகள் வேறு யாழினியால் இறுகப்பற்றப்பட்டு இருக்க விழித்தாள் ஆரா.

இந்த அர்ஜூனா வேறு தூரத்தில் மொட்டைமாடியின் அரைச்சுவரில் உட்புறமாக திரும்பி சாய்ந்த படி கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க அவளுக்கு ஏனோ அடிக்கடி தாளந்தப்பியது

அதற்குள் திலீபன் அவர்களை கண்டு விட்டான்!

மொபைல் காமராவை ஆன் செய்த படியே அவர்களை நெருங்கியவன் தாரா நடனம் பார்த்திருப்பீர்கள், மயில் நடனம் பார்த்திருப்பீர்கள், மங்கி நடனம் பார்த்திருக்கிறீர்களா? என்று பின்னணியில் குரல் கொடுத்தபடி சிரிப்புடன் அவர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்தான்

வேண்டாம் திலீப்!!!

இந்த மாதிரி காட்சிகள் எப்போதும் சிக்காதும்மா அவன் சிரிப்புடன் தன் வேலையை தொடர்ந்தான்

ஆர்ணவிக்கு இன்னுமே ஆச்சர்யம் விலகவில்லை. இவ்வளவு பெரிய போஸ்ட்டில் இருக்கும் ஒருவன் இப்படி பிரான்ட்லியாக கொஞ்சம் கூட பால் பேதம் காண்பிக்காமல் நட்பாக பழக முடியுமா என்ன? ஆனால் கொஞ்ச நேரமே பழகியிருந்தாலும் நிறைய நாட்கள் பழகிய நண்பனைப்போல வெகு பரிச்சயமாய் அவனை உணர்ந்தாள் ஆர்ணவி

பாவம் யாழி பேபி அவளுக்கு கிடைத்த பார்ட்னர் சரியே இல்லை .. நீ எங்களில் ஒருவரை கூப்பிட்டிருந்திருக்க வேண்டும் பேபி! அவன் சிரிக்க

நீங்க வேணும்னா வந்து தாராளமா அவகூட பார்ட்னர்ஷிப் போட்டுபாருங்களேன்..என்று திலீபனை சவாலுக்கழைத்தாள் ஆரா.

நிதானமாய் அவர்களை நெருங்கினார் ஆர்ஜூனா..

“டேய்.. யாழி தன்னுடைய உயரத்துக்கு செட்டாபவளைத்தான் பார்த்து பிடித்திருக்கிறாள்!!! ஹா ஹா”

“சார் என்னை பார்த்தா உங்களுக்கு குள்ளமாவா தெரியுது?நான் 5 6’ என்று பல்லைக்கடித்தாள் ஆரா

என்ன செய்வது நாங்கள் இருவரும் 6 ஆச்சே.. எங்களோடு ஒப்பிடும்போது நீ ஷார்ட் தானே..

இங்க பார்ரா…சார் சைக்கிள் காப்ல நீங்களும் ஆறடி ஆணழகர்ன்னு சொல்லிக்காட்டுறீங்களா? அவள் கிண்டலாய் அவரை வார

அவரோ “நான் ஆறடியை மட்டும் தான் சொன்னேன்..நீ தான் ஆணழகர் என்கிறாய்! பரவாயில்லை நன்றி” என்றார் நமுட்டுச்சிரிப்புடன்..

krrrrrrrrr அசிங்கப்பட்டுட்டியே ஆட்டோக்காரி!!

இவர்கள் வழக்கடிக்க ஆரம்பித்துவிட அத்தோடு தன்னுடைய டான்ஸ் செஷனுக்கு மூடு விழா தான் என்று எண்ணினாளோ என்னவோ திலீப்பிடம் மொபைலை வாங்கி அவன் ஷூட் செய்த வீடியோவை பார்க்க ஆரம்பித்ததாள் யாழினி

சண்டையை அம்போ என விட்டு விட்டு தானும் போய் சேர்ந்து சேர்ந்து கொண்டாள் ஆர்ணவி.

யாழினி ஏற்கனவே அழகு. இதில் அவள் அதி உற்சாகமாய் திசையோ லயமோ இன்றி குதித்ததால் ஒரு அழகிய நாய்க்குட்டியின் உற்சாகம் போலவே தோன்றியது அவளுக்கு,

ஹா ஹா யாழ் பேபி செம கியூட்டா இருக்கா..பக்கத்துல இருக்கிற சங்கி மங்கி தான் காமெடி பண்ணிட்டிருக்கு! திலீபன் அவளை கலாய்க்க அவளுக்கு முகம் சிவந்து விட்டது. பின்னே நிஜமாகவே அந்த வீடியோ அவ்வளவு கேவலமாகத்தான் அவளை காண்பித்தது!

இதெல்லாம் என்ன மொக்கை வீடியோ..இப்போ நான் ஒரு வீடியோ இன்டர்வியூ பண்றேன்..அதை வீடியோ எடுங்க பார்க்கலாம்!!! அவள் சவால் விட்டுவிட்டு மேசையில் இருந்த பேப்பர் ஒன்றை சுருட்டி மைக் ஆக்கியவண்ணம் யாழினியை நெருங்கினாள் அவள்

இரு இரு நான் காமரா ரெடி பண்றேன் என்றபடி திலீபன் மறுபடி காமராவை உயிர்ப்பிக்க

மார்ஷல் ஆர்ட் என்றால் உன் வரையில் என்ன அர்த்தம்? ஏன் அதை உனக்கு அவ்வளவு பிடிக்கிறது என்று ஒரு தொகுப்பாளினியின் பாணியில் யாழினியிடம் கேள்வி கேட்டாள் ஆர்ணவி

உடனே கண்ணும் முகமும் மலர்ந்து போக கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் பேசி முடித்து விட்டு ஓடிப்போய் வீடியோவை வாங்கி பார்த்தாள் யாழினி

“இதுல என்னை பார்த்தால் நார்மல் கிட் போலவே இருக்கு!!!” முகம் மலர அப்படி வெளிப்படையாகவே சொல்வாள் என்று பெரியவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை! எல்லோரும் செய்வதறியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க ஆரம்பித்தனர்

Of course you are normal.. திலீபன் அவசரமாய் சொல்ல

கைகளில் ஒரு கராத்தே மூவ்மென்ட் செய்தபடியே “நோ..ஐ ஆம் நாட். என்று அழுத்தமாய் சொன்னாள் யாழினி.

நார்மல் கிட் என்றால் காதும் கேட்கணும். அதனால் நான் நார்மல் கிட் இல்லை.. ஆனால் நான் கொஞ்ச நாளில் நார்மலாகி விடுவேன்..ஆனால் எல்லோரும் எனக்கு தேவையே இல்லாமல் சிம்பதி கொடுத்து ஹெல்ப் பண்ண வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கல!!!!

ஒஹ் காட்..இவ பர்ஸ்ட் டைம் இப்படி ஓப்பனா பேசி இப்போதான் பார்க்கிறேன்..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. ப்ளீஸ் ஏதாவது பண்ணேன்..என்று ஆர்ணவியின் காதில் திலீபன் முணுமுணுக்க யாழினியின் பேச்சில் ரியாக்ட் செய்யத்தெரியாமல் உறைந்து  போய் நின்றிருந்தவளுக்கு சுரணை கொஞ்சமாய் வந்தது

அதற்குள் யாழினியின் தோளை தட்டிய அர்ஜூனா அவள் தன்னை நோக்கியதும் “ நீ பெரிய ப்ரூஸ்லீ..எப்படி எப்படி எல்லாரும் விழுந்து விழுந்து உதவி செய்கிறார்களா?” என்று சிரிக்க ஆரம்பித்தார்.

அஜூ..ஐ ஆம் சீரியஸ்! என்று யாழினி கத்த

அஜூ ஐ ஆம் சீரியஸ் என்று குரலே இல்லாமல் உதடுகளை மட்டும் அசைத்து அவர் அவளை மிமிக் செய்ய

அவரை கோபமாக துரத்த ஆரம்பித்தவள் சில நிமிடங்களிலேயே முகம் முழுக்க சிரிப்பாக மாறிவிட்டாள். அந்தக்கணம்  அவளை சட்டென பிடித்து தூக்கி மாடியின் அறைச்சுவரில் தன்னை பார்க்குமாறு அமர வைத்தார் அர்ஜூனா.

“நீ தொடர்ந்து உறுதியாக எல்லாத்துறைகளிலும் திறமையை வளர்த்துக்கொண்டால் மற்றவர்கள் உனக்கு தங்கள் உதவி தேவையில்லை என்று அவர்களாகவே நிறுத்தி விடுவார்கள். வெகு சீக்கிரமே அது நடக்கப்போகிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது” என்று

நிஜமாகவா?

கண்டிப்பாக! அவர் உறுதி கொடுத்தபடி கைகளை மடக்க  இருவரும் ஒரு கிரிப் சாலஞ்சில் இறங்கி விட்டார்கள்

ஸ்வீட்ல? திலீபன் ரசனையாய் கேட்க

ஆமா கவிதை போல இருக்கு..பட்டென்று மனதில் தோன்றியதை வாய்விட்டு சொல்லிவிட்டவள் அதன் பிறகு தான் திடுக்கிட்டு உதட்டைக்கடித்தாள்

கவிதையா அண்ணாவா? திலீபன் சிரித்துக்கொண்டே அவள் முகம் பார்க்க இவள் இன்னும் சிவந்து விட்டாள்.

லூசா நீங்க? நான் யாழினியை தான் சொன்னேன்!!! என்று உடனடியாய் சமாளித்தாலும் அவள் யாழினியை பற்றி சொல்லவில்லை என்ற உண்மை அவளுக்கே பேரதிர்ச்சியை கொடுத்தது.

சிறிது நேரத்துக்கெல்லாம் யாழினி திலீபனின் மொபைலில் ஏதோ படம் பார்க்கிறேன் என்று ஓடிப்போய் ஒரு மூலையில் அமர்ந்து கொள்ள பெரியவர்கள் மூவரும் அறைச்சுவரில் கையூன்றியபடி நின்று கொண்டிருந்தார்கள்

நிலவு அவர்கள் மேல் வெளிச்சம் வீசி விளையாடிக்கொண்டிருக்க ஆர்ணவிக்கு மட்டும் இதயத்துடிப்பு படபடவென ஏறிக்கொண்டே போவதாகப்பட்டது!

அண்ணா..உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம டீச்சர் மேடம்,,ஒரு பெரிய செலிப்ரிட்டி!!! திலீபன் தான் மௌனத்தை கலைத்தான்

ஓஹோ…அவர் இழுத்தது நிச்சயம் நக்கலே!

நம்பலையா? என்னாலயும் நம்ப முடியல..திலீபன் வெடித்து சிரிக்க கோபமாய் அவனை முறைத்தாள் ஆர்ணவி.

மேடம் ஒரு vlogger ஆம்! ஆயிரம் பாலோவர்ஸ் வேற இருக்காங்களாம்! திலீபன் சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்

பதிலுக்கு “எல்லாம் மறை கழன்ற கூட்டம்!!!!” என்று அர்ஜூனா விட்டேற்றியாக சொல்ல அவ்வளவு நேரம் இருந்த மனநிலை மாறி அவள் ரௌத்ரமாகிவிட்டாள்

உங்களுக்கு பிடிக்கலைன்னா நாங்கள் மறை கழன்றவர்களா?

அண்ணா நீ சோஷல் மீடியாவில் இல்லை என்பதற்காக மற்றவர்களை குறை சொல்ல கூடாது! என்று குரல் கொடுத்தபடி மேஜைக்கு போய் ஜாரில் இருந்து தனக்கு தண்ணீர் வார்க்க ஆரம்பித்தான் திலீபன்

ப்ச்…அவர் இகழ்ச்சியாய் உதட்டை பிதுக்கினார்..

சார் நீங்க தான் ரைட்டராச்சே.. முடிஞ்சா ஒரு பேஜ் ஆரம்பிச்சு..பேமஸ் ஆகி காட்டுங்களேன்.. அவள் அர்ஜூனாவை சவாலுக்கு அழைத்தாள்

அடுத்த கணம் திலீபன் குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் புரையேறி விட அவன் முதுகில் ஒரு அறை வைத்து வைத்தியம் பார்த்தார் அர்ஜூனா..

“ஒரு சோஷல் மீடியா ஸ்டாரா இருக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மெயின்டெயின் பண்ணணும்.. அப்பப்போ நடக்கற அரசியல் சண்டைல கலந்துக்கணும்..சம்பந்தமே இல்லாம அடிக்கடி பொங்கணும்… அப்பபோ நமக்கு எதிரா யாரோ சதி செஞ்சுட்டே இருக்காங்கன்ற போல பேசணும். எல்லா பொங்கல் போஸ்ட்லயும் யாராவது ஒருத்தர் வந்து இதுவும் கடந்து போகும் டோழின்னு கமன்ட் போடுவாங்க.. உணர்ச்சி கொதிக்க அதுக்கு பதில் போடணும்..எவ்ளோ வொர்க் தெரியுமா? சும்மா வந்துட்டார் பேசறதுக்கு”

ஹா ஹா நீயே ஒத்துக்கற தானே..

சார் நான் விளையாட்டுக்கு சொன்னேன்..உண்மையில் சோஷல் மீடியா நன்றாக பயன்படுத்தினால் நன்மை தான் சார். எவ்வளவு கனக்ஷன்ஸ் தெரியுமா? நெட்வொர்க் மெயின்டெயின் பண்றது எவ்வளவு ஈசி.. ஏன் நீங்க நல்லதையே பார்க்க மாட்டேன்றீங்க?

என்னை பொறுத்தவரை அது ஒரு தேவையே இல்லாத விஷயம்..சோஷல் மீடியா என்ற பெயரில் ஒவ்வொருத்தனும் சொந்தமாய் ஒரு டிவி சானல் வைத்து தன்னை பற்றியும் தான் நினைப்பது பற்றியும் உலகத்துக்கு சொல்ல்க்கொண்டே இருக்கிறான்..இந்த கூத்தில் என்னையும் கலந்து கொள்ள சொல்கிறாயா? உண்மையில் இது கூட ஒரு போதைதான்..

சார்..இப்படி பாருங்களேன்..என் கூட காலேஜ்ல படிச்சவங்க இருநூறு பேர், அப்புறம் லா படிச்சவங்க நூறு பேர் அப்புறம் ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாருமே என் பிரன்ட் லிஸ்ட்ல காண்டாக்ட்ல இருக்காங்க..உங்க கிட்ட அவ்ளோ பேர் இருக்காங்களா?

எதுக்குங்கறேன்.. நட்புன்னா  நம்மேல் ஒரு இம்பாக்ட் க்ரியேட் செய்பவர்களோடு மட்டுமெ வருவது..ஞாபகமே வராதவர்கள்நண்பர்கள் லிஸ்டிலேயே வரமாட்டார்கள்!  அப்படியானவர்களை எதற்காக வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டு நம் டீவிசானலை கடைபரப்ப வேண்டும்..ஒவ்வொருத்தனும் மத்தவனை பார்த்து வயிரெரிந்தே வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறான். சோஷல் மீடியா தேவையே இல்லாத ஒன்று..இதில் இந்த மேடம் vlogger வேறு!!! காமராவோடு வாழ்ந்தபடி  தூக்கத்தில் இருந்து எழுவது முதல் நம் வாழ்க்கையை  மற்றவர் பார்வைக்கு வைத்து நம்மை நாமே பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு நாம் செய்வதையெல்லாம் மற்றவர்கள் ஆவென்று பார்ப்பார்கள் என்று போஸ்ட் செய்வதெல்லாம் ஒரு வகை மனவியாதி!!!

சார்….அவளுக்கு தான் என்ன செய்தோம் என்பதே கொஞ்ச நேரத்தின் பின் தான் தெரிந்தது. அருகே நின்றவரை எட்டிப்பிடித்து அவரின் கழுத்தை நெறித்திருந்தாள் அவள்.

இருவரும் சிலகணங்கள் உறைந்து நின்று விட்டிருந்தார்கள். அவளுக்கு நாம் என்ன செய்தோம் என்ற சுய உணர்வு வர திலீபன் தண்ணீர் கிளாசை மேஜையில் வைத்துக்கொண்டிருந்தான். அர்ஜூனா அவளது இரண்டு கைகளையும் பற்றி தன் கழுத்தில் இருந்து பிரித்து விலக்கியவர் ஆபத்தான விளையாட்டை என்னோடு விளையாட நினைக்காதே என்று அடிக்குரலில் எச்சரித்து விட்டு விலகிப்போக அசையும் எண்ணமின்றி அப்படியே நின்றிருந்தாள் அவள்.

அன்றிரவு எல்லோரும் மாடிக்கு கொண்டுவந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே போன பிறகு திலீபன் விடை பெற்றுக்கொண்டு போக கட்டிலில் படுத்து தலையணையில் முகத்தை அழுத்திக்கொண்டு வெகு நேரம் குப்புறக்கிடந்தாள் ஆர்ணவி..

இங்கே உண்மையில் என்ன நடக்கிறது?

அவள் மனம் இந்த முரட்டு மனிதரை நினைக்க ஆரம்பித்து விட்டதா? நினைக்கவே தன் மேல் கோபமாக வந்தது அவளுக்கு..

நோ நோ இருக்கவே இருக்காது!!!!

ஆர்ணவி அவ்வளவு பலவீனமானவள் அல்ல!!

ஆழி-அர்ஜூனா 15

alia-story_647_060315033653

 

“தெரு வளைவில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி இடப்புறம் வந்த தனஞ்சயன் புன்னை மர நிழலில் நின்றபடி மொபைலில் பேசிக்கொண்டிருந்தான்.

அவனது கண்களோ கூலரின் மறைவில் அந்த போலீஸ் வண்டியின் பக்கப்புறக்கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருந்தன.

ஆழி நடந்து வந்துகொண்டிருந்தாள்.

நெடு நெடுவென்ற உயரத்தில் இருந்தவளின்  பிடியிடையை ஸ்கர்ட்டுமில்லாமல் பான்டுக்கும் இடையில் ஒன்று தழுவிக்கொண்டிருக்க முன்னுச்சி முடிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. வண்டியின் பக்கப்புறக்கண்ணாடியில் அவளது உயரம் சற்றே வளைந்து தெரிந்தாலும் அது அவன் மேல் ஏற்படுத்தும் பாதிப்பு சற்றும் குறைந்து விடவில்லை!

அவனை நெருங்கியிருந்தாள்

“ஹல்லோ சார்..” மெல்ல அவனை நோக்கி கை நீண்டது.

ஆச்சர்யத்தை முகத்தில் ஓட்டவைத்தபடி சரேலென திரும்பினான் தனஞ்சயன்.

ஆழி அபாயகரமானது. ஆழி என்ற பெயர் கொண்ட பெண்களும்!”

அத்தோடு பேனாவை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டார் அர்ஜுனா.

அன்றைக்கு திங்கட்கிழமை.

காலை ஆறு மணியாகியும் யாழ் இன்னும் எழுந்திருக்கவில்லையே.

கதை முடிவுப்பகுதியை எழுத ஆரம்பித்து விட்டிருக்கும் காரணத்தால் இப்போதெல்லாம் காலையிலேயே முத்துவை வர சொல்லியிருப்பதால் அவருக்கு சமையல் வேலையுமில்லை.  ஆனால் இவளுக்கு என்னாயிற்று?

அவளது அறைக்கதவை தட்டப்போனவர் அறைக்கதவில் ஒட்டப்பட்டிருந்த பேப்பரை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அதில் I have some important things to do.  I DON’T WANT TO BE DISTURBED until 7.30 am என்று சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது!

உள்ளே அவள் எழுந்து விட்டாள் என்பதற்கு அடையாளமாய் அவளது யோகா வீடியோ சத்தம் கேட்டது.

கதவைத்தட்ட கையெடுத்தவர் பிறகு குழந்தையின் ப்ரைவசியை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விட்டு விட்டு தன்னுடைய அறைக்குள் புகுந்து தானும் பாடசாலைக்கு தயாராக ஆரம்பித்தார்.

ஆனால் மனமெல்லாம் அப்படி என்ன முக்கியமான வேலை இவளுக்கு என்றே எண்ணிக்கொண்டிருந்தது.

பொதுவாக இருவருக்கும் ரகசியங்கள் இருப்பதில்லை. அவர் எழுதும் இடத்தில் வந்திருந்து தன்னுடைய யோகா முதற்கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய அவளுக்கும் பிடிக்கும். இன்றைக்கு மட்டும் அப்படியென்ன ரகசிய வேலை?

7.30 வரை அவள் வெளியே வரவில்லை.

உணவு ஒரு வாயும் இவளின் அறை வாசலில் ஒரு கண்ணுமாய் அவர் இருந்த போது ஓடி வந்தவள் குட் மார்னிங் அஜூ . குட்மோர்னிங் முத்து அங்கிள் இன்றைக்கு கொஞ்சம் லேட்டாகி  விட்டேன் என்று பொதுவாக சொல்லியபடி தன்னுடைய நூடில்சை எடுத்து மளமளவென  சாப்பிட ஆரம்பித்தாள். பிறகு அதை கையில் எடுத்து உண்டபடியே போய் தன்னுடைய ஸ்கூல் பாக் இத்யாதிகளை எடுத்துக்கொண்டு வந்து வைத்தாள்.

அவள் தன் முகம் பார்ப்பாள் பேசுவோம் என்று காத்திருந்த அர்ஜூனா ஏமாந்து தான் போனார் அவள் அவரை பார்த்தால் தானே பேசுவதற்கு!

என்னமோ விஷயம் இருக்கிறது என்று எண்ணியபடி முத்துவை அனுப்பி விட்டு கதவைப்பூட்டிக்கொண்டு இருவரும் புறப்பட வழக்கமாய் அருகில் நடந்து வருபவள் இன்றைக்கு அவருக்கு முன்னே குதித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

உதடுகளை கடித்தபடி பின் தொடர்ந்த அர்ஜூனா  ஒரு கட்டத்தில் அவளைப்பிடித்து தன் முகம் பார்க்க வைத்து “என்னாயிற்று யாழ்?” என்று கேட்டார்!

அவள் ஒன்றுமில்லையே என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்

“பொய் சொல்லாதே..நீ இன்றைக்கு என்னுடன் பேசவே இல்லை. என்னமோ நடந்திருக்க வேண்டும்! ஏன் கோபம் உனக்கு?” அவளது கண்களுக்குள் காரணம் தேடினார் அவர்.

“கோபமானால் தான் பேசாமல் இருக்க வேண்டுமா? I don’t feel like talking today!” நாடி நிமிர்த்தி சொல்லிவிட்டு தொடர்ந்து நடந்தாள் யாழினி

ஓஹோ…

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. நேற்று இதே பதிலை அவர் ஒருத்திக்கு சொல்லியிருந்தார். பல்லை கடித்தார் அர்ஜூனா.

நேற்றுமாலை வழக்கமான கடற்கரை விசிட்டை முடித்து நடந்து வந்துகொண்டிருந்தவரை துரத்திக்கொண்டு வந்து மூச்சிரைக்க அவர் முன் நின்றுகொண்டிருந்தாள் ஆர்ணவி. அவளோடு டான்ஸ் ஏதோ எக்ஷிபிஷனுக்கு போயிருந்த யாழினியும் அவளது கால்களைத்தொடர்ந்து கொண்டு வந்து நின்றாள்.

“சார். யாழியும் நானும் இன்றைக்கு திலீப் சாரை பார்த்தோம். நாளை வெள்ளிக்கிழமை தானே.. நாங்கள் நாளைக்கு மொட்டை மாடியில் சைனிஸ் ஆர்டர் பண்ணலாமா? நீங்களும் வருகிறீர்களா? நீங்கள் வந்தால் அவரும் வருவதாக திலீப் சார் சொன்னார்.”

“நான் வரவில்லை.” சொல்லியபடியே யாழினியின் கையில் இருந்த பாக்கை வாங்கிக்கொண்டார் அவர்.

அவருக்கு அடிக்கடி யாழினியோடு விளையாடுகிறேன் பேர்வழி என்று இவள்  வந்து தொணதொணத்ததில் தன்னுடைய அத்தியாயங்கள் பிந்திப்போன கடுப்பு! எப்போதுமே நாவலின் இறுதிப்பகுதி நெருங்கும் போது அவரது  முழுக்கவனமும் அதில் தான் இருக்கும். அனேகமாக யாழினி அவளாகவே புரிந்து கொண்டு உதவுவாள்..

“ஏன் சார்..நீங்கள் கூப்பிட்டபோது நான் வந்தேன் தானே..இப்போது நான் அழைத்து நீங்கள் வருவது தானே முறை!” அவள் அவரை சம்மதிக்க வைக்க முயன்றாள்

“இது என்ன கல்யாணப்பேச்சு வார்த்தையா மாறி மாறி கைநனைக்க? அப்படிப்பார்த்தால் நீ ஒரு தடவை பீட்சா கொடுத்தாய். யாழி ஒரு தடவை கொடுத்துவிட்டாள் அவ்வளவுதான் முடிந்து விட்டது.” என்று வெடுக்கென்று சொன்னவர் விலகி நடந்தார்

“சார்..நீங்கள் என் மேல் என்னமோ கோபத்தில் இருக்கிறீர்கள்!” அவள் குழப்பமாய் கேட்டதை பார்க்க பாவமாய்த்தான் இருந்தது. ஆனாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை

“கோபமாக இருந்தால் தான் மறுக்க வேண்டுமா? I don’t feel like partying tomorrow.  You guys carry on!”

இப்படித்தான் அவர் பதில் சொல்லி விட்டு விலகிச் சென்றிருந்தார்!

இந்த யாழுக்கு எவ்வளவு அழுத்தமிருந்தால் இப்படி மௌன விரதம் இருப்பாள்? தனக்குப்போகப்பிடித்திருப்பதை ஓப்பனாக சொல்லவும் இல்லை. இது பிடிவாதம் இல்லையா? இதை வளர விடக்கூடாது,

வேண்டுமென்றே யாழினியின் பஸ்புறப்படும் போது தானும் நிமிர்ந்து பார்க்காமல் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தவர் பஸ் தன்னை கடந்ததும் வருத்தமாக உணர்ந்தார்

“நான் நேற்று என்னுடைய டென்ஷனில் ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன். அவளுக்கு திலீப்பையும் ரொம்ப பிடிக்கும். இவளையும் அப்படியே,.,இருவரோடும் டைம் ஸ்பென்ட் பண்ண ஆசைப் பட்டிருப்பாள்! நான் அவளிடம் கேட்டிருக்க வேண்டும்! குழந்தை தானே..” மனம் அவளுக்கு பரிந்து கொண்டு வர மொபைலில் யாழினியின் நம்பரை எடுத்தார் அவர்

செவிப்புலனற்ற மாணவி ஆதலால் அவளது பாதுகாப்புக்காக அவளுக்கு மட்டும் ஸ்பெஷலாக குறிப்பிட்ட இரண்டு நம்பர்களை தவிர வேறு யாரும் அவளை தொடர்பு கொள்ளாத வகையில் செட்டிங் செய்யப்பட்டு உபயோகிக்கும் அனுமதியை பெற்றுக்கொடுத்திருந்தார் அர்ஜூனா. பள்ளி நேரங்களில் தொடக்கூடாது என்ற நிபந்தனையோடு நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது,

“நாங்கள் இரவுக்கு மொட்டை மாடிக்கு போகிறோம்” என்று மட்டும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருந்தார் அவர்

“லவ் யூ அஜூ” என்று குறுஞ்செய்தி அடுத்த செக்கனே அவளிடமிருந்து பறந்து வர அப்போதுதான் அதுவரை இருந்த இறுக்கம் தளர பெருத்த  நிம்மதியை உணர்ந்தார் அவர்.

புன்னகையோடு அவர் நிமிர எதிரே தன் வழக்கமான புன்னகை முகத்தோடு ஆர்ணவி வந்துகொண்டிருந்தாள். அவருக்கு சிரிப்பும் எரிச்சலும் ஒருங்கே கிளம்பியது,

இவள் தான் அவருடைய அமைதியான பாத்திரக்கடையில் யானையாய் புகுந்து கொண்டு அவரை நொந்து போக வைப்பவள்! ஆனால் யானையை அடித்துத்துரத்தவும் முடியாமல் அவருக்கும் அவளைப்பிடித்திருந்தது உண்மையே..

நேற்றைய கோபத்தில் அவரைக்கண்டதும் சுவிட்ச் போட்டால் போல முகத்தை மாற்றிக்கொண்டு கடந்து போய் அந்தப்புறமாக நின்று கொண்டவள் பஸ் வந்ததும் திரும்பியும் பாராமல் ஏறி அமர்ந்து விட்டாள். மெல்ல அவளைத்தொடர்ந்து போய் அவளின் அருகில் அமர்ந்தார் அர்ஜூனா

வேண்டுமென்றே பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள் என்று அவளது உடல்மொழி சொன்னது!

“இன்றைக்கு மாலை எனக்கு  Tom Yam Poh Taek  லார்ஜ் போர்ஷன் ஆர்டர் செய்து விடு. யாழ் இஸ் பைன் வித் சைனீஸ்” என்று அவர் அமர்த்தலாய் சொல்ல சட்டென திரும்பி அவரை முறைத்தாள் அவள்

“பார்ட்டி கான்சல்ட்!” கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகள் துப்பப்பட்டன

பைன் தென்.. நாங்கள் அதே இடத்தில் அரேஞ்ஜ் பண்ணிக்கொள்கிறோம். அவர் சிரிக்காமல் சொன்னார்

“கொழுப்பா சார் உங்களுக்கு? நான் நேற்று வந்து கேட்ட போது பெரிய இவர் போல தூக்கிஎறிந்து பேசிவிட்டு இன்றைக்கு வந்து இது தான் வேண்டுமென்று மெனுவும் சொல்கிறீர்கள்!!! அதெல்லாம் வாங்கி கொடுக்க முடியாது.  அந்த Tom yam வாட்டெவர் வாட்டெவர் எல்லாம் என் பைனான்சுக்கு கட்டுப்படியாகாது. நான் சொல்வது தான் மெனு!”

அப்போ இன்றைக்கு டின்னர் உண்டு?

நான் தான் ஏற்கனவே திலீப் சாரை இன்வைட் பண்ணிவிட்டேனே..வைத்து தானே ஆகவேண்டும்! அவள் அலுத்துக்கொண்டாள்

ஹா ஹா அவளது முகபாவனையை கண்டு அவர் வாய்விட்டு சிரித்தாலும், ஆக இவளுக்கு உதவத்தான் யாழினி தன்னோடு முறுக்கியிருக்கிறாள் என்று எண்ணாமலும் இல்லை.

சிரிக்காதீர்கள் சார். உங்களைப்போன்ற ஒரு திமிர் பிடித்த மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவள் எரிந்து விழுந்தாள்

பதில் சொல்லாமல் புன்னகையோடு மறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தவர் பிறகு அவள் பக்கமாக மீண்டும் திரும்பினார்

“பேபி. on a serious note…சுபாங்கன் இன்றைக்குத்தானே திரும்பி வருகிறான்? நீ இன்றைக்கு அந்தப்பக்கம் போகாதிருப்பது நல்லது!”

“எதற்கு?”

அவளது எதிர்க்கேள்வியே அவளது மனநிலையை சொல்லிவிட்டது அவருக்கு.

“ப்ச்..நீ ஓவர் கேர் எடுத்து அவனை இயல்பாக இருக்க முடியாமல்  செய்வாய். இன்றைக்கு அவன் சர்வசாதாரணமாக வகுப்பை ஆரம்பிக்கட்டும்” மெதுவாய் புரியவைக்க முயன்றார்.

“உங்கள் முடிவுகளை என் மீது திணிக்காதீர்கள் சார். நான் அவர்களுடைய கிளாஸ் டீச்சர். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.” எதிர்வினை கடுமையாக வந்தது

“நல்லதிற்கு சொன்னால் கூட உன்னால் காது கொடுத்து கேட்க முடியாதா?”

சட்டென பையோடு எழுந்தவள் அவரை நோக்கி குனிந்து “என்னுடைய பொறுப்பில் இருக்கும் விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை நான் விரும்ப மாட்டேன்! இஸ் தட் க்ளியர்லி அண்டர்ஸ்டுட்?” என்று கேட்டுவிட்டு புட்போர்டை நோக்கி நடக்க பல்லைக்கடித்தபடி அவளைத்தொடர்ந்தார் அர்ஜூனா.

அன்றைக்கு வேண்டுமென்றே 9D க்கு போனவர் அங்கே முதல் நான்கு பாடங்களுமே அவர்களுக்கு ஆங்கிலமும் கணிதமும் என டைம் டேபிள் காட்டியதை பார்த்து வைத்துக்கொண்டு இரண்டாம் பாட வேளையில் கிடைத்த இடைவேளையில் மீண்டும் அந்த வகுப்புக்கு விஜயம் செய்தார் அவர். வகுப்பறை வெறிச்சோடிக்கிடக்க ஆசிரியர் மேசையில் இருந்த கண்ணாடிப்பெட்டியில் கிரவுண்ட் என்ற அட்டை எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

அட.. பரவாயில்லையே..சின்னதாய் ஒரு சிலாகிப்பு சிரிப்புடன் கிரவுண்டை நோக்கி நடந்தார் அவர்.

இடப்பக்கம் இருந்த வாகை மரத்துக்குக்கீழே கதிரை ஒன்றை போட்டுக்கொண்டு இவள் அமர்ந்திருக்க அவளைச்சுற்றி மாணவர்கள் குழுக்களாய் அமர்ந்திருந்தனர். ஒரு குழுவில் சுபாங்கனும் தென்பட்டான்!

“அடேய்!!! நான் என்னடா சொல்லிட்டிருக்கேன், நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க. இதே போல பண்ணிட்டு இருந்தீங்கன்னா மூணு பாடமும் மாத்ஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவேன்!” அவள் மிரட்டிக்கொண்டிருக்க மாணவர்களின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு திருப்தியுடன் திரும்பி நடந்தார் அவர்.

சுபாங்கனுக்கு நண்பர்களை திரும்ப பார்க்கும் போது இருக்ககூடிய தயக்கத்தை போலவே மற்றவர்களுக்கும் அவனை சேர்த்துக்கொள்வதில் தயக்கம் இருந்திருக்கும். ஆனால் சகலத்தையும் மறந்து அவர்கள் குழுவாக சேர்ந்து கொள்வதற்கு குழு விளையாட்டுக்களில் அவர்களை ஒன்றாக ஈடுபடுத்துவது ஸ்மார்ட் மூவ் தான்.

பரவாயில்லையே. ஐஸ்க்ரீம் கூட அவ்வப்போது ஹெல்தி வடிவங்களை எடுக்கத்தான் செய்கிறது!

யாரும் காணாமல் மெதுவாக அவ்விடம் விட்டு மறைந்தார் அர்ஜூனா

 

 

 

 

 

 

ஆழி – அர்ஜூனா 14

2b2fcfb02cf387d0b0ca6ce4ff788db8

மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்க ஆரம்பித்திருக்க இறுக மூடப்பட்டிருந்த பஸ்ஸின் கண்ணாடி வழியே நீர்த்துளிகள் கோலமிட்டுக்கொண்டிருந்தன. இறங்கும் இடம் நெருங்கி விட்டிருந்ததால் பஸ்ஸின் முன் புற வாசல் படி நோக்கி மெல்ல மெல்ல முன்னே சென்றாள் ஆர்ணவி.

மழை இவ்வளவு பெரிதாகப்பெய்கிறது என்பதே பஸ் கதவு திறந்ததும் தான் தெரிகிறது என்று நினைத்தபடியே புட் போர்டில் நின்றபடியே தன்னுடைய பூக்குடையை விரித்தபடி இறங்கினாள் அவள்

பஸ் ஸ்டாண்டின் கூரைக்குக்கீழே நின்று கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் அர்ஜுனா!

குடை கொண்டு வரவில்லை போலும்!

ஏனோ கூட்டத்திற்கு பிறகு அவரை பார்க்க கூச்சமாக இருந்தது அவளுக்கு, பேசாமல் அவரைக்கடந்து ஒரு மூன்றடி எடுத்து வைத்தவள் ஏதோ யோசனையில் அப்படி அம்மூன்று அடிகளையும் ரிவர்சில் வைத்து அர்ஜூனாவை நெருங்கி நின்றாள்

“மழை இப்போதைக்கு விடாது. விரும்பினால் குடைக்குள் வரலாம். டிக்கட் எல்லாம் கேட்க மாட்டேன்”

ஓரக்கண்ணால் அவரைப்பார்த்தாலும் அவள் விழிகள் பாதையில் தான் பதிந்திருந்தன.

“குடை புறப்படத்தயாராகிறது. ஒன்று, இரண்டு, மூன்று” அவளின் குரல் அதுவாகவே சிரிப்பை சுமந்து அவளைக்காட்டிக்கொடுத்தது.

“நீ கொஞ்சம் திரும்பி நின்றாலல்லவா நான் வர முடியும்?” அர்ஜூனாவின் குரலிலும் சிரிப்பு இருந்தது.

சட்டென்று புன்னகையுடன் நேராக அவரை நோக்கியவள் குடையை கொஞ்சமாய் அவர் புறம் நீட்டினாள்

ஒரே எட்டில் தூரத்தை கடந்து அவர் குடைக்குள் வந்து சேர திடீர் அருகாமையினால் சட்டென்று தொற்றிக்கொண்ட அசௌகரிய உணர்வுடன் இருவருமே பேசாமலே சிறிது தூரம் நடந்து வந்தனர்.

மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. வழியில் இருந்த மரங்களின் நோயாளி இலைகளும் மழையோடு சேர்ந்து குடைமேல் விழுந்து வழிந்து நிலம் நோக்கி போய்க்கொண்டிருந்தன.

ரொம்ப சொதப்பிட்டேனோ நேற்று? திடும்மென அவரைக்கேட்டாள் ஆர்ணவி

“கொஞ்சம்! ஆனாலும் நீ கொடுத்த அதிர்ச்சியால் தான் நான் சொன்னதை காது கொடுத்து கேட்கவே செய்தார்கள்” அவர் சிரித்தபடியே பதில் சொன்னார்

அதுவும் சரிதான். மனதுக்குள் ஆமோதித்தாள் அவள்

“சார்.. உங்க உயரத்துக்கு குடை பிடிக்க நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன். குடையை வாங்கிக்கொள்ளாமல் பார்த்தும் பார்க்காதது போல ஜாலியாக வருகிறீர்களே”

“வாங்கியிருப்பேன் பேபி. பிறகு ஏன் ஆண்கள் தான் குடை பிடிக்க வேண்டுமா ஏன் பெண்களால் முடியாதா  என்று நீ வசனம் பேச ஆரம்பித்து விடுவாய் என்ற பயத்தில் தான் பேசாமல் வருகிறேன்!!! என்று கிண்டல் உரலில் சொன்னவர் குடையை லாவகமாக தன் கையில் எடுத்துக்கொள்ள ஆசுவாசமாய் கைகளை ஒரு முறை நீட்டிக்கொண்டவள் அவர் சொன்னதை கேட்டு மீண்டும் கர்ர்ர்ர் மோடுக்கு போனாள்.

சார். நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்..நீங்கள் தான் மறுபடி சண்டையை ஆரம்பிக்கிறீர்கள்.

ஹா ஹா ஹா

உங்களை மழைக்கு பாதுகாப்பாக குடைக்குள் அழைத்து வந்தேனல்லவா..எனக்கு இது தேவை தான்!

பதில் பேசாமல் அவர் புன்னகைக்க மௌனமாய் நடந்தவர்கள் இப்போது  அப்பார்ட்மென்ட் வளாகத்துக்குள் நுழைந்திருந்தார்கள்.

சார், ஒன்று கேட்பேன் உண்மையை சொல்வீர்களா? யோசனையாய் மௌனம் கலைத்தாள் ஆர்ணவி

ஹ்ம்ம்..கேள். அவரும் சீரியசாகவே பதில் சொன்னார்

அன்றைக்கு எனக்கு டீச்சிங்கும் செட் ஆகாது கூடிய சீக்கிரம் கிளம்பி விடுவேன் என்று ஏன் சொன்னீர்கள்?

நான் தான் அன்றைக்கே சொன்னேனே.. நான் உண்மையை சொன்னால் நீ என்னோடு சண்டைக்குத்தான் வருவாய். உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!

அவர் குடையை மடக்கி ஒருதடவை உதறி அவள் கையில் திணித்து விட்டு படிகளில் ஏற ஆரம்பித்தார்.

நான் இந்த தடவை கேட்பேன் என்று நினைக்கிறேன்.. மெல்லிய குரலில் சொன்னாள் அவள்

சட்டென்று நின்று திரும்பியவர் “ அதற்குள்ளே ஆசிரியர் வேலை உனக்கானதல்ல என்று முடிவு செய்து விட்டாயா?” என்று கேட்டார்!

முதலில் நீங்கள் அன்றைக்கு சொன்னதன் காரணத்தை சொல்லுங்கள். நான் இதற்கு பதில் சொல்கிறேன் என்றாள் ஆர்ணவி.

இப்போது கூட ஆசிரியத்தொழில் உன் தகுதிக்கு கீழே அல்லது உனக்கு பொருந்தாது என்ற எண்ணம் உனக்கிருக்கிறது.

சார்!!!!!! எப்படி நீங்கள் அப்படி….

அவளை இடைவெட்டினார் அர்ஜூனா

முதலில் நான் சொல்லி முடித்து விடுகிறேன்.. ஸ்கூலுக்கு வந்த முதல் நாள் நீ உன்னை அறிமுகம் செய்ததை நான் கவனித்தேன். எல்லோரிடமும் நீ ஒரு லாயர் என்றும் வெறும் ஆறுமாதங்களுக்கே ஆசிரியராக வந்திருப்பதாய்த்தான் சொன்னாய். அதாவது யாருமே உன்னை முழுநேர ஆசிரியராக எண்ணிக்கொள்வதை நீ விரும்பவில்லை. இது தற்காலிகம் என்பதை நீ அழுத்தமாய் சொல்லிக்கொண்டிருந்தாய். ஆமா இல்லையா?

ஆ…ஆமாம். யோசனையாக தலையசைத்தாள் அவள்

“மற்ற ஆசிரியர்களும் உன்னை தங்கள் சக ஆசிரியையாக எண்ணி உன்னோடு பழகவில்லை. நீயும் அந்த ராகவி தவிர யாரிடமும் ஒட்டிக்கொள்ளவில்லை. நான் சொல்வது தவறு என்று நினைத்தாயானால் இனி உனக்கு HSM வேலை கிடையாது. வேறெதெற்கும் போகவும் முடியாது. வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் வேலை தான் செய்யவேண்டும் என்று மனதுக்குள் சொல்லிப்பார்..உன் மனத்தால் கடைசி வரை அதை ஏற்றுக்கொள்ள முடியாது! “

சார்.. இதை எப்படி ரீசனாக சொல்ல முடியும்? நீங்கள் கூட சயன்டிஸ்ட் என்று எல்லாருக்கும் தெரியுமே…அவள் விடாமல் வாதாடினாள்

“அதை நானே என் வாயால் ஆசிரியர்களிடம் சொன்னேனா என்று நீ யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார். அதிபருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக தான் மற்றவர்களுக்கு கசிந்தது. “ என்று மடக்கிவிட்டார் அவர்.

ஆரம்பத்தில்  உன்னைக்குறித்து லேசாக எடை போட்ட விஷயம் உன்னோடு பழகிப்பார்த்த பின் எனக்கு நன்றாகவே உறுதிப்பட்டது. உன்னால் கடைசிவரை சட்டத்தை உன்னிடம் இருந்து விலக்கி வைக்க முடியாது. ஒரு நாளில் ஒரு தடவையாவது அதைக்குறித்து பேசாமல் உன்னால் இருக்க முடியாது. இரண்டாவது உனக்கு எப்போதும் யாருக்காவது கார்டியன் ஏஞ்சல் வேலை பார்ப்பது, ஆபத்பாந்தவியாய் ஓடிப்போய் உதவுவது ரிஸ்க் எடுப்பது இந்த மாதிரி பரபரப்பான வாழ்க்கை தான் பிடிக்கும். உன்னால் நிச்சயம் தெளிந்த நீரோடை போன்ற ஆசிரியப்பணியை ஒருமனதுடன் செய்ய முடியாது!

அவளுக்கு இப்போது கோபம் வரவில்லை. உதட்டை கடித்துக்கொண்டிருந்தாள்

அவருக்கு அவளது அமைதி ஆச்சர்யம் அளித்திருக்க வேண்டும். என்ன பதிலே காணோம்? என்று கேட்டார்

இல்லை சார்.. ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரி தான். நானும் கிட்டத்தட்ட அந்த முடிவுக்கு வந்துவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும்!சுபாங்கன் விஷயம் எனக்கு ஆழ்மனதில் என்ன ஆசை என்று ஓரளவு  புரிய வைத்தது சார். ஆத்மதிருப்தி என்றால் என்னவென்று முதன்முறை உணர்ந்து கொண்டதாய் நினைக்கிறேன். இப்போதைக்கு நான் எதுவும் சொல்லபோவதில்லை. இந்த தடவை நிறைய நேரமெடுத்து நன்றாக யோசித்துத்தான் என் முடிவை எடுக்கப்போகிறேன்.

வாழ்த்துக்கள் என்றவர் கதவில் கீயை போட்டு திறக்க ஆரம்பித்தார். தானும் விடைபெற்று வீட்டுக்குள் வந்தவள் உடைமாற்றி தலை துவட்டிக்கொண்டு கணனி முன்னே அமர்ந்து மாலையாகும் வரை தன்னுடைய சமீபத்திய தேடலை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் இனிய அதிர்ச்சியாக இரவு யாழினி அவளுக்கு போன் செய்தாள்!

பீட்சா சாப்பிடுவதற்காக அவளை அர்ஜூனா வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட பிறகு டக்கென போன் வைக்கப்பட்டது!

ரிசீவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆரா. யாழினிக்கு இவள் என்ன பதில் சொன்னாலும் கேட்காது தான்.           என்றாலும் வருகிறாயா என்ற கேள்வி இல்லாமல் வா என்று மழலைக்குரலில் வந்த ஆர்டர் அவளுக்கு சின்ன சிரிப்பை கொடுத்தது. குட்டி டான் ராக்ஸ்!!!

தான் அங்கே செல்வதை அர்ஜூனா விரும்புவாரா என்று சில கணம் தயங்கியவள் பிறகு எப்படியும் அவரிடம் கேட்காமல் இவள் தன்னை அழைத்திருக்க மாட்டாள் என்ற எண்ணத்துடன் குளித்து பைஜாமாவுக்கு மேல் கருப்பு லாங் டீஷர்ட் ஒன்றை போட்டுக்கொண்டவள் கதவைப்பூட்டிக்கொண்டு யாழினியை தேடி சென்றாள்

அங்கே அவளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

முத்துவை உதவிக்கு வைத்துக்கொண்டு தானே பீட்சா பேக் செய்து கொண்டிருந்தவர் அர்ஜூன்!

சுடச்சுட அவர் தனக்காக தயாரித்த கார்லிக் பிரட்டும் அருகே இவளை தலை சுற்ற வைத்துக்கொண்டிருந்தது.

சமையல் தெரியும் என்பதற்கும் இப்படி செப் லெவலில் சமைப்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா? அவளால் நம்பவே முடியவில்லை. உணவின் சுவை வேறு தன் பங்குக்கு பாயின்ட் எடுத்து கொடுத்துக்கொண்டிருந்ததை வெகுவாக ரசித்து உண்டாள் அவள்

இரவு எட்டுமணி வரை அர்ஜூனா வீட்டில் இருப்பாய் என்று நேற்று யாரும் சொல்லியிருந்தால் கூட மயக்கம் போட்டு விழுந்திருப்பாள்! இன்றைக்கு நேரம் போனதே தெரியவில்லை.

சாப்பிட்டு முடித்து இவள் ஹாலில் இருந்து யாழினியோடு செஸ் ஆடிக்கொண்டு இருக்க அவர்களுக்கெதிரே மேசையில் பேப்பர்களோடு உட்கார்ந்திருந்தார் அர்ஜூனா..

எப்படி சார் என்னை டின்னருக்கு அழைத்தீர்கள்? விளையாடிக்கொண்டே குரல் கொடுத்தாள் ஆர்ணவி

யாழினிக்கு தனியாக பீட்சா செய்து சாப்பிட போரடித்தது. அதனால் தான் எதிர் வீட்டில் ஒரு அடிமை இருக்கிறதே என்று… இழுத்தவரின் கண்கள் சிரிப்பில் இடுங்கின

சும்மா பீலா விடாம ஒத்துக்கங்க சார்.. யூ லைக் மீ!!! இல்லையா ஆமா? அவளும் விடாமல் வம்பிழுத்தாள்

ஹ!!! நீயே சொல்லிக்கொள்..

அவள் பதில் சொல்ல வாயெடுக்க “ஹையோ!!!! இது உன் டர்ன்!!!!” என்றபடி யாழினி நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தாள்

oh.. சாரி சாரி.. என்றபடி தன் அடுத்த மூவை செய்தாள் ஆர்ணவி. வாய் பாட்டுக்கு கேள்விக்கணையை நிறுத்தாமல் பொழிந்து கொண்டிருந்தது

ஏன் சார்… எப்ப பார் எதையாவது உட்கார்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறீர்களே..போரடிக்கவில்லை? அவளின் சீண்டலுக்கு

நீயும் தான் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறாய்..உனக்கு போரடிக்கவில்லை? அவர் அசராமல் திருப்பியடித்தார் அர்ஜூனா

கர்ர்ர்ர்.. என்ன டைப் ஸ்டோரி எழுதுவீங்க நீங்க? என்று ஆர்ணவி கேட்க

நீ என்ன டைப் படிப்பாய்? அதே வேகத்தில் பதில் கேள்வி வந்தது அர்ஜூனாவிடம் இருந்து

சாரி..எனக்கு புக் படிக்கற பழக்கமே கிடையாது..இவள் சின்ன சிரிப்போடு ஒத்துக்கொண்டாள்

அப்போ உன்னோட எக்ஸாம் எல்லாம் உன் டீச்சரா எழுதினாங்க? இதை கேட்டது அர்ஜுனா அல்ல! யாழினி

“ஹா ஹா ஹைபை யாழ்”

“ஹைபை ஹி ஹி”

இதப்பார் இந்த மொக்கை புக் எழுதுற உன் அஜூவுக்காக என்னை பகைத்துக்கொள்வது நல்லதல்ல!! விளையாட்டாய் யாழினியை மிரட்டினாள் அவள்

இன்னும் சலுகையாய் அவளோடு ஒட்டிக்கொண்ட சின்னவள் “அஜூவோட த்ரில்லர் செமையா இருக்கும். எனக்கு சம் டைம்ஸ் கதை சொல்வாங்க.. ஆனா நான் அதை படிக்கணும்னா கிரேட் எய்ட் வரை வளரணுமாம்!” என்று சோகமாய் சொன்னாள்.

ஆஹா சிக்க வைத்துவிட்டாளே!! எப்படி கவனிக்காமல் விட்டோம்… வேறு வழியின்றி அவள் தன்னுடைய கடைசி மூவை செய்ய “ஹேய்!!! செக்மேட்!!!!” என்று கத்திய யாழினி எழுந்து ஒரு குட்டி ஸ்டெப் போட்டாள்

அவளின் சிரிப்பை பார்த்துக்கொண்டே புன்னகையோடு எழுந்த ஆர்ணவி “ நான் கிளம்பறேன் குட்டி டான், ரொம்ப லேட் ஆயிடுச்சு..” என்று விடைபெற முயன்றாள்

“இரு இரு..நான் ஒரு டிராயிங் காட்டறேன்.. அஞ்சே நிமிஷம்” என்றபடி அவளின் பதிலை எதிர்பாராமல் யாழினி அறைக்குள் மறைந்து விட வேறுவழியின்றி சில நிமிடம் நின்று கொண்டிருந்தவள் அர்ஜூனா கவனம் கலையாமல் எழுதிக்கொண்டே இருப்பதை பார்த்துவிட்டு மெல்ல அருகே சென்று அருகில் அடுக்கி வைக்கப்பட்ட பேப்பர் ஒன்றை எடுத்துப்பார்த்தாள்.

ஆர்டரை குழப்பி விடாதே..நிமிராமலே குரல் மட்டும் எச்சரித்தது.

ஹ்ம்ம் என்றபடி மேலோட்டமாய் கண்களை ஓட்டினாள். ஏதோ ஒருபக்க குறுங்கதை போலும்..அவளுக்கு மேலே படிக்க பொறுமையில்லை.. வைத்து விட்டாள்

சார்..நீங்க ரொமான்ஸ் ஸ்டோரீஸ் எழுத மாட்டீங்களா?

என் ரொமான்ஸ் வாழ்க்கை பிரகாசமாகவே இருக்கிறது  பேபி..பிறகேன் கற்பனையிலும் அதை கொண்டு வர வேண்டும்?

சார்!!! கிட்டத்தட்ட கத்தி விட்டாள் அவள். முகம் லைட்டாக சிவந்து போனதை அவளாலேயே உணர முடிந்தது.

உங்க வாயிலேயே ஒரு சென்சார் வாங்கி மாட்டுங்க.. ஒரு பொண்ணு கிட்ட இப்படியா பேசறது?

அதில் என்ன தவறைக்கண்டாய்..இப்படியே பண்டாரா பாக்சாக எல்லாவற்றையும் மூடி ரகசியமாய் அடைத்து வையுங்கள். எதிர்காலம் நன்றாக இருக்கும்..அவர் விட்டேற்றியாய் சொல்லி விட்டு எழுதி முடித்த பேப்பரை எடுத்து வைத்தார்.

“ஓஹோ.. அப்போ நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க.. நீங்க தான் கல்யாணமே பண்ணலையே..அப்புறம்…. எப்படி?” சவாலாய் ஆரம்பித்தவளுக்கு அதை சர்வ சாதாரணமாய் கேட்க இயலவில்லை..திக்கினாள்

எது எப்படி? அவரின் குரலிலோ சிரிப்பான சிரிப்பு

பல்லைக்கடித்தவள் “அதான் ரொமான்ஸ் பிரகாசம்…” என்று இழுத்தாள்

“நீ பேபி தான் என்பதை நொடிக்கொருமுறை நிரூபிக்கிறாய்” அவர் சிரிக்க ஆரம்பிக்க நல்ல வேளையாக அதற்குள் படத்தோடு திரும்பி வந்துவிட்டாள் யாழினி.

படத்தில் ஒரு மலை மீதிருக்கும் பெரிய மரக்கிளையில் அப்பா குருவி, அங்கிள் குருவி, குட்டிக்குருவி அமர்ந்து தூரத்தே பார்த்துக்கொண்டிருந்தன. சின்ன சின்ன நுணுக்கங்களுடன் தத்ரூபமாய் வரைந்திருந்தாள் யாழினி. தானும் நன்றாக வரைபவள் என்பதால் பாராட்டி சில ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு மெல்ல குட் நைட் சொல்லிக்கொண்டு நழுவினாள் ஆர்ணவி.

இந்த மனிதரோடு சர்வ ஜாக்கிரதையாக பழக வேண்டும்!!!! அவளது உலகம் வேறு..இவரது உலகம் வேறு.. அவ்வ்வ்

 

 

 

 

 

 

ஆழி- அர்ஜூனா 13

images

சில்லென்ற குளிர் காற்று பூட்டிய யன்னல்களைத்தாண்டியும் வீசுவது போலிருந்தது. மழை வரப்போகிறது. இங்கே வந்ததன் பிறகு அவள் காணப்போகும் முதல் மழையல்லவா? ஓடிப்போய் யன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்தவள் குளிர்காற்று நேராக மேனியில் படுவதை உணர்ந்து அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

சில கணங்கள் தான்… எங்கிருந்தோ சுழன்று கொண்டு வருவதைப்போல மழை நாற்பத்தைந்து பாகையில் சீறியடிக்க தொடங்கியது. இனியும் திறந்து வைத்திருந்தால் வீட்டுக்குள் சாரலடித்து திரைச்சீலைகள் நாசமாகும் அபாயத்தை உணர்ந்தவள் மீண்டும் அவசரமாக  யன்னல்களை சாத்த ஆரம்பித்தாள்

காலையில் ஸ்கூலில் இருந்து மீட்டிங்குக்கு அழைப்பு வந்த நேரத்தில் இருந்து ஒரே பதற்றமாகவும் யோசனையாகவுமே சுற்றிக்கொண்டிருந்தாள் அவள்.

என்ன ஆகப்போகிறதோ? அவனை நீக்கிவிடுவார்களா?

எப்பாடு பட்டேனும் புது ஸ்கூலில் இடம் வாங்கிக்கொடுப்பாள் தான்..ஆனால் மொத்தமாக ஒடுங்கிப்போய் விடுவானே.. பட்ட பாடுகள் அனைத்தும் வீணாகி விடுமே

ராகவி வேறு கூட்டத்துக்கு வரமாட்டாள். ஆகவே தனியாக அன்றைக்கு அவள் தான் சமாளிக்க வேண்டும். யோசனை மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்க கடைசி யன்னலை சாத்த மனமற்று யன்னல் கம்பிகளில் முகம் வைத்து வெளியே பார்த்துக்கொண்டு நின்றாள் ஆர்ணவி.

ரங்கம்மாவின் ஸ்கூட்டி அப்பார்ட்மென்ட் வளாகத்துக்குள் புகுவதையும் முழுக்க தன்னை மழைக்கோட்டினால் மூடிக்கொண்டு ஒரு பளபளக்கும் சில்வர் பெட்டியோன்றுடன் அவள் படியேறுவதையும் கவனித்தாள் ஆர்ணவி.

ஷா..மழை நாள் என்றாலும் ஏதாவது ஒரு வகையில் துடிப்பாக தன்னுடைய வேலையை முடித்து லாபம் பார்த்துவிடும் அந்தப்பெண்மணிக்கு மனதாலேயே ஒரு சலூட் வைத்தவள் யன்னல் வழி அவளையே பார்த்து நின்றாள் அவளது வீட்டைத்தாண்டியே படியேறப்போகும் ரங்கம்மாவுக்கு ஒரு ஹாய் சொல்வதற்காக!

“அட..ஸ்கூல் லீவ் விட்டதும் ஜாலியா இருக்கீங்கல்ல?” என்று கேட்டபடி அவளை நெருங்கினாள் ரங்கம்மா

இன்றைக்குத்தான் கடைசிநாள் என்று நானே வருத்தத்தில் இருக்கிறேன் என்று சிரித்தவள் உள்ளே வாங்களேன் என்று அழைத்தாள்

இருங்க.. இதை கொடுத்துட்டு வந்துடறேன் என்றவள் பதிலுக்கு காத்திராமல் மேலே ஏறிச்சென்று விட்டு சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள். கதவை திறந்து வைத்து விட்டு டீக்காக கெட்டிலில் நீரை கொதிக்க வைத்து விட்டு  காத்திருந்தாள் ஆர்ணவி.

உள்ளே வாங்க ரங்கம். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு போகலாம். காலடிச்சத்ததை கணக்கிட்டபடியே கிச்சனில் இருந்து ஆர்ணவி அழைக்க தயக்கமே இல்லாமல் உள்ளே வந்தாள் ரங்கம்மா

சீராக திருத்தப்பட்ட தோற்றம். அதே நேரம் தாமரையிலைத்தண்ணீராக மட்டுமே பழகும் நிமிர்வு. இந்தப்பெண்மணியிடம் எல்லாமே அவளை ஈர்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் ஆர்ணவி.

அவள் நீட்டிய டீ கோப்பையை எடுத்துக்கொண்டவள் ”மேல் வீட்டம்மா. இரவுச்சாப்பாடு நான்கு பேருக்கு கேட்டிருந்தார்கள் அதைத்தான் கொடுத்து விட்டு வந்தேன். என்று புன்னகைத்தாள்

சாப்பாடு டெலிவரியும் பண்ணுவீர்களா/

எல்லாருக்கும் இல்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் செய்வதுண்டு என்றவள் “இப்போ எல்லா பிரச்சனையும் சரியாகிவிட்டதா? என்று பரிவாக விசாரித்தாள்

செய்திகளை ரகசியமாக வைக்க முடியுமா என்ன? ஊரே இதைப்பற்றித்தானே பேசுகிறது!,,

“சின்னப்பையனை காப்பாற்றமுடிந்தது. பெரியவர்களை மீட்பு நிலையத்துக்கு அனுப்பிவிட்டார்கள்” என்று சுருக்கமாக பதில் சொன்னாள் ஆர்ணவி.

பச்… சிலர் வாழ்க்கையில் கடவுள் அப்படி எழுதி வைத்து விடுகிறான். இனியாவது அந்தப்பையனுக்கு வாழ்க்கை நல்லா இருக்கவேணும். ஆனால் அது சுலபமில்லைம்மா. நம்ம ஊரை பற்றி தெரியாதா என்ன? அதை விடுங்க. நான் இப்போ வந்ததே உங்களுக்கு சொல்லணும்னு தான். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் கொஞ்சநாள். எந்தபுற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ? நீங்கள் தான் உதவி செய்ததாக எல்லோரும்  உங்களின் அடையாளம் சொல்லி பேசிக்கொள்கிறார்கள்.

ஹ்ம்ம் என்று யோசனையாக தலையசைத்தவள் “நீங்கள் சொன்னது பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்கூலுக்கு விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்வோம் என்று தான் நினைத்தோம் ஆனால் இன்றைக்கு மாலை அவசர பெற்றோர் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். என்ன ஆகப்போகிறதோ என்று அதுவேறு பதட்டமாக இருக்கிறது” என்று சொன்னாள்

“இது கொடுமைங்க. அவனாக திருந்தி வந்தாலும் அவன் மேல் முத்திரை குத்தி தள்ளிவைத்து விட்டால் எதிர்காலம் இல்லாதவன் திரும்ப எங்கே போவான்?”

ஹ்ம்ம்..என்னால் முடிந்தளவு  அப்படியேதும் ஆகாமல் பார்ப்பேன். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்று தான் யோசனையாக இருக்கிறது.

தள்ளிவைத்தால் வைத்து விட்டு போகட்டும்ங்க..என்னை பாருங்கள் என்ன கெட்டுப்போய்விட்டேன். என் கணவர் இறந்து போனதும் நான் வெளியில் கடைபோட போனதில் இருந்து எத்தனை ஏச்சையும் பேச்சையும் தாங்கியிருப்பேன். கண்டுகொள்ளாமல் கடந்து போக கற்றுக்கொண்ட பிறகு இது எதுவும் என்னை பாதிப்பதில்லை. அந்த பையனும் சமாளித்துக்கொள்வான். நீங்க கவலைப்படாதீங்க. நான் கிளம்பறேன்..

ரங்கம்மா சொல்லிக்கொண்டு கிளம்பிப்போக ஆயிரம் யானை பலம் கிடைத்தவள் போல உணர்ந்தாள் ஆர்ணவி,

அதுதானே. இன்னும் மீட்டிங்கில் என்ன செய்யபோகிறார்கள் என்று தெரியாது! அப்படியிருக்க அதையே நினைத்துக்கொண்டிருப்பானேன். அப்படித்தான் அவனுக்கு டீசி கொடுத்தாலும் இந்த ஸ்கூலை நம்பித்தான் அவன் படைக்கப்பட்டானா என்ன?

முடிந்தவரை போராடுவோம். இல்லையோ ப்ரீயா விடு ஆரா.

தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் தன்னுடைய கூடை நாற்காலியை கழற்றிகொண்டு பல்கனிக்குப்போய் மழை படாத மூலையில் கொழுவி வைத்தவள் காதில் ஹெட் செட்டுடன் அதற்குள் சுருண்டு கொண்டாள்.

இளைய ராஜாவும் மழையுமாய் அவள் நேரம் பறக்க ஆரம்பிக்க இடையில் குறுக்கிட்ட குத்துப்பாடலால் ப்ளே லிஸ்டை அட்ஜஸ்ட் செய்ய முனைந்தவள் யாழினியின் சிரிப்பு சத்தத்தில் கவனம் கலைந்து எதிரே பார்த்தாள். மூலையில் இருந்ததால் இவளை அவர்கள் கண்டிருக்க முடியாது. ஆனால் இவளுக்கு நன்றாகவே அந்தப்பக்கத்தை பார்க்க முடிந்தது.

அவளைப்போலவே மழையைக்கண்டதும் வட்ட மேசை ஒன்றை இழுத்து வெளியில் போட்டிருக்க வேண்டும். மேசைக்குமேலே முழங்காலை மடக்கிக்கொண்டு யாழினி அமர்ந்திருக்க அவளுக்கு எதிரே விட்டேற்றியாய் சேரில் சாய்ந்திருந்தார் அர்ஜூனா. யாழினியுடன் என்னமோ பேசிக்கொண்டிருந்தார். என்னமோ நீண்ட காலத்தோழர்கள் கதை பேசுவதைப்போலத்தான் அவர்களுடைய தோற்றம் இருந்தது.

வெகு அரிதாக யாழினி காண்பிக்கும் குழந்தை முகத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியபடி அன்றொருநாள் தந்தை வெளியூர் புறப்பட்ட அன்று மொட்டைமாடியில் அவற்றின் கழுத்தைக்கட்டிக்கொண்டிருந்த யாழினி ஆர்ணவியின் நினைவில் வந்துபோனாள்.

இதில் எந்த யாழினி நிஜமானவள்?

அவளை சிந்திக்க விடாமல் எதிரே காட்சி மாறியது. அவர் என்னமோ சொல்லி கண்சிமிட்டியதும் இருவரும் ஹை பை கொடுத்துக்கொண்ட அந்தக்காட்சி ஒரு புகையோவியம் போல தன் மனதில் படிவதை உணர்ந்தாள் ஆர்ணவி.

சத்தமில்லாமல் எழுந்து உள்ளே சென்றவள் மதியத்துக்கு சிம்பிளாக ஒரு சிக்கன் சாலட் செய்து  வேகமாக உண்டு விட்டு பாடசாலைக்கு தயாராக ஆரம்பித்தாள். இரண்டு மணிக்கெல்லாம் ஸ்கூலில் இருந்தாக வேண்டுமே.

இவள் பஸ் ஸ்டாண்டுக்கு போன போது அங்கே அர்ஜூனாவும் தயாராகி காத்துக்கொண்டிருந்தார். இன்றைக்கு அதிசயமாய் பான்ட் ஷர்ட் அணிந்து பார்மலில் இருந்தவரை ஆச்சரியமாய் பார்த்தாலும் புன்னகைக்கவில்லை அவள். அவரை பார்க்காத பாவனையில் மறுபக்கமாக நின்றுகொண்டாள்

அவரும் அப்படியே அவளை தெரியாதவர் போலத்தான் நின்றுகொண்டிருந்தார். ஸ்கூல் வந்து சேரும் வரை! பிறகும் தனித்தனியாகத்தான் மீட்டிங் நடந்த ஹாலுக்கு சென்று சேர்ந்தனர் இருவரும். அவள் உள்ளே நுழைந்ததுமே பரிமாறப்பட்ட பார்வைகளை பார்த்ததுமே இது நிச்சயம் அவர்களுக்கு சோதனையாகவே அமையப்போகிறதென புரிந்து போனது ஆர்ணவிக்கு!

நேராகச்சென்று தனியாக இருந்த சேர் ஓன்றில் அமர்ந்து கொண்டவள் எத்தையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.

டென்ஷன் வேண்டாம் ஆரா…

மீட்டிங் தொடங்கியது.

முதலாவது வாக்கியமே ஐம்பது வருடங்களாக பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் கட்டிக்காத்த பள்ளி இது. இந்தப்பள்ளியில் இன்றைக்கு கறுப்பு சம்பவம் நடைபெற்று விட்டது என்பது தான்.

ஞானி போல அமர்ந்துகொண்டிருந்தாள் ஆர்ணவி

நடந்ததை சுருக்கமாக சொல்லிவிட்டு பெயர் குறிப்பிட முடியாத பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் மேலிடத்தை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நடந்துகொண்டதற்கு கடும் மனவருத்தத்தை  தெரிவித்தார் அதிபர்.

மாணவர்கள் தவறு செய்தால் தண்டனை ஒன்று தான் என்றும் தேவையில்லாமல் சிஹ்யா பாடசாலை ஆசிரியர்கள் என்ற பெயருடன் பிரச்சனையில் மூக்கை நுழைத்து பாடசாலைப்பெயர் கெடுவதற்கு காரணமாக இருந்தார்கள் என்று தான் பேசியவர்கள் அனைவரும் சாராமல் பெயரை குறிப்பிடாமல் ஆர்னவியையும் அர்ஜூனாவையும் குரிப்பிட்டுப்பேச இத்தனை நேரமும் கட்டிக்காப்பாற்றிய பொறுமையும் நம்பிக்கையும் பறந்து அவளுக்கு லேசாய் உதடு துடிக்க ஆரம்பித்தது.

மெல்ல எழுந்து நின்றாள் அவள். ஒட்டுமொத்த ஹாலும் ஊசி போட்டால் கேட்குமளவுக்கு நிசப்தமாகி விழிகளை அவள் மேல் பதித்தது.

நான் தான் ஆர்ணவி. நீங்கள் பெயர் குறிப்பிடாமல் பேசிய ஆசிரியர்களில் ஒருத்தி. என்று மென்மையாக ஆனால் அழுத்தமாக சொன்னவள் “நான் இதில் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்? என்று அழுத்தந்திருந்தமாக கேட்டாள்

இது என்ன கேள்வி? நீங்கள் விஹயம் தெரிந்ததும் மானேஜ்மேன்ட்டிடம் விஷயத்தை சொல்லிவிட்டு பேசாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியே போலீசுக்கு போகவேண்டுமானாலும் சிஷ்யா மாணவர்கள் எல்லோர் பெயரையும் தவிர்த்திருக்க வேணும்!!! பொறுப்பில்லாமல் செய்து விட்டு கேள்வி வேறு கேட்கிறீர்களா? என்று வெகு சூடாக கேட்டார் ஒரு பழைய மாணவர் சங்க உறுப்பினர்

ஓஹோ.. நான் மானேஜ்மேன்ட்டிடம் சொல்லியிருந்தால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருப்பீர்கள். அவள் திருப்பிக்கேட்டாள்

TC தான்!!! எங்கள் பாடசாலையில் ஒழுக்கக்கேட்டுக்கு இடமே கிடையாது. பெருமையாய் சொன்னார் அந்த மனிதர்

ஓஹோ.. சாரி சார் நான் உங்களைப்போல கௌரவத்தை கட்டிக்காக்கும் பெரிய ஆசிரியை கிடையாது. நாட்டின் பொறுப்புள்ள ஒரு சாதாரண குடிமகள். உங்களைப்போன்று இந்த பெரிய சொற்களுக்கு அர்த்தம் தெரியாது எனக்கு. ஒரு ஆசிரியையாய் மாணவர்களுக்கு சரி தவறு என்று எது எனக்குத்தோன்றியதோ அதை நான் செய்தேன். என்று நக்கல் தெறிக்க சொன்னவள் சரி. எல்லாம் முடிந்தது. இப்போது எதற்காக இங்கே பிரேத பரிசோதனை நடக்கிறது என்று கேட்டாள்.

மிஸ் ஆர்ணவி. கொஞ்சம் பொறுப்பான ஆசிரியையாக பேசுங்கள். ஒருவர் எகிற

பொறுப்பை பற்றி நீங்கள் பேசாதீர்கள் சார். கடமைகளின்று கைகழுவிக்கொள்ளும் நீங்களெல்லாம் மாணவர்களுக்கு கற்பிக்க என்ன தகுதி வைத்திருக்கிறீர்கள்? பதிலுக்கு கேள்வி கேட்டாள் ஆர்ணவி.

சூடான கேள்வி பதில்கள் அங்கும் இங்கும் பறந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியைகளில் ஒருத்தி  அவளைப்பிடித்து இழுத்து அமர வைக்க கோபமாக அமர்ந்து கொண்டவள் பல்லைக்கடித்தபடி நடப்பதை கவனித்தாள்.

இப்போது இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது? பெற்றோரின் விருப்பம் என்ன? யாரோ பெற்றோரிடம் கேட்டார்கள்.

ஆங்காங்கே குரல்கள் ஸ்கூலை விட்டு அனுப்புங்க, எங்கள் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து படிப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது. அவர்கள் திருந்தி விட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தன.

பொறுமையை கைவிட்டு  மீண்டும் எழுந்தாள் அவள்

மற்ற இருவர் மறுபடி ஸ்கூலுக்கு இப்போதைக்கு திரும்பி வரப்போவதில்லை. சின்னப்பையன் சுபாங்கன் தெரியாமல் செய்துவிட்டான் என்ற அடிப்படையில் அவனை மன்னித்து போலீசே அவனுடைய  எதிர்காலம் கருதி உதவும் போது மாதா பிதா குரு தெய்வம் என்று பெருமையடித்துக்கொள்ளும் நீங்கள் அவனை சேர்த்துக்கொள்ள கூடாது என்பீர்களா?

நடப்பதை பேசுங்கள்? எல்லா மாணவர்களுக்கும் ஒரே நியாயம் தான்

நியாயம் பற்றி நீங்கள் பேசக்கூடாது சார். சுபாங்கனை அழைத்து பேசுங்கள். அவனுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுங்கள், அவதானியுங்கள். அதன் மேலும் அவன் திருந்தாமல் இருந்தால் தண்டனை கொடுங்கள். ஆரம்பத்திலேயே அவனுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்பை பறிப்பது நியாயமாக இல்லை!

அதுவரை எங்கள் பிள்ளைகள் வாழ்க்கையினை ரிஸ்க் எடுப்பதா?

இது என்ன பிளேக்கா சார்? தொற்றிக்கொள்ள..நம் மாணவர்களுக்கு இப்போதைய உடனடித்தேவை விழிப்புணர்வு! அதை செய்யாமல் கிணற்றுத்தவளை போல பேசிக்கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் சுபாங்கனை ஸ்கூலை விட்டு வெளியே அனுப்பினால் அது மிகத்தெளிவான மனித உரிமை மீறல்!

என்ன சட்டம் பேசுகிறாயா? ஒரு ஆசிரியர் ஏக வசனத்தில் தடிப்பாக கேட்டார்

ஆமாம் சார்!!! சட்டம் தான் பேசுகிறேன்! பேசுவது மட்டுமல்ல செய்தும் காட்டுவேன்..அவளுக்கு கோபத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை.

நீங்கள் எங்கே நின்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் தெரிகிறதா ஆர்ணவி?

நன்றாகவே தெரிகிறது. தங்கள் கடமையை மறந்த மனிதர்களிடம் பேசுகிறேன்… நீங்கள் செய்வது பச்சை மனித உரிமை மீறல்..அதை மறுக்க நினைக்காதீர்கள்!

மிஸ். ஆர்ணவி நாங்கள் ஒரு தனியார் நிறுவனம் எங்கள் code of ethics படி நாங்கள் அவனை நிறுத்துவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.

உங்கள் code of ethics ஐ நானும் படித்து விட்டுத்தான் வந்தேன்! எங்குமே முதன் முறையாக  தவறு செய்த மாணவனை கேள்வியே இல்லாமல் நீக்க முடியும் என்று இல்லை. குற்றம் இழைத்தவனாக இருந்தால் தெளிவான ஆதாரங்கள் அடிப்படையிலேயே நீக்க முடியும். அப்படிப்பார்த்தால் போலீஸ் தரப்பில் அவர்கள் கைது செய்யப்பட்ட அடையாளங்களே இல்லை.

நீங்கள் எங்களுக்கு கட்டுப்பட்ட ஆசிரியை ஆர்ணவி

அப்படியா? நான் உங்களுடன் காண்ட்ராக்ட் எதுவும் போட்ட ஞாபகம் எனக்கில்லை. ஒன்று மட்டும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் அவனை நீக்கினால் இதை விட பிரமாதமான எதிர்காலத்தை எங்களால் அவனுக்கு கொடுக்க முடியும். ஆனால் உங்கள் பாடசாலைக்கு மேல் நானே வழக்கு தொடர்வேன் என்று  உணர்ச்சி வசப்பட்டு கத்தியவள் அனைவரும் அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருக்க விடு விடுவென்று எழுந்து வெளியே நடந்தாள்.

நான் கொஞ்சம் பேசலாமா? தனக்குப்பின்னே கேட்ட அர்ஜூனாவின் குரலில் அப்படியே பிறேக்கிட்டு நின்றாள் ஆர்ணவி. அவளுக்கு அவரின் இந்தக் குரல் புதிது.. இப்போதுதான் அர்ஜூனாவின் ஆவி புகுந்து விட்டவளைப்போல அவள் ஒரு வெறியாட்டம் ஆடி முடித்திருக்க இந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரா? அவர் தன்னையறியாமலே திரும்பிப்பார்த்தாள்

யாரும் பதிலளிக்கவில்லை.

ஆனாலும் சந்தர்ப்பத்தை எடுத்துக்கொண்டு முன்னே வந்தவர் மைக்கின் முன்னே போய் நின்றார்.

மிஸ் ஆர்ணவி. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டார்கள். என்று புன்னகைத்தவர் நேராக விஷயத்துக்கு வந்தார். அமைதியான குரலில் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அதற்கு அழுத்தம் கொடுத்து அவர் பேசியதை மலைப்பாக பார்த்த வண்ணம் வாசலை விட்டு கொஞ்சமும் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள் அவள்

என்னுடைய சகோதரன் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிகாரியாதலால் எனக்குத்தெரிந்த விடயங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள்.

இந்த மாவட்டத்தில் 40 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தமாக வழித்து துடைத்து கைது செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?

இல்லை..

அப்படியானால் ஆபத்து இன்னும் விலகவில்லை. இந்த நோய்க்கு மருந்து தேவையே தவிர தொற்று ஏற்பட்ட பகுதியை வெட்டியெறிய ஆரம்பித்தால் நாளை வெட்ட நமக்கு எதுவும் மீதமிருக்காது. இன்றைக்கு நாங்கள் பேசியிருக்க வேண்டியது இதைப்பற்றித்தான். எப்படி ஆசிரியர்களாக சேர்ந்து பாடசாலை மட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நாங்கள் இன்றைக்கு கூட்டம் நடாத்தியிருக்க வேண்டும்! அதை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவனை துரத்தி விட்டு நாங்கள் கௌரவமானவர்கள் என்று காட்டுவது அல்ல நாம் செய்ய வேண்டியது.

இன்னொரு விஷயம் சொல்கிறேன். இதில் யாரெல்லாம் பீச்சிற்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச்சென்று ஒருநாளாவது ஐஸ்க்ரீம் வாங்கித்தந்திருப்பீர்கள்?

கிட்டத்தட்ட எல்லா கரங்களுமே உயர்ந்தன.

அங்கே ஐஸ்க்ரீம் விற்கும் விக்டர் எனப்படும் சுருள்முடிக்காரனும் போலீசாரால் போதை மருந்து விநியோகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறான் என்று உங்களுக்கு தெரியுமா? ஐஸ்க்ரீமில் கலந்து விற்பதே அவன் செய்த வேலை! அப்படியானால் தெரிந்தோ தெரியாமலே இங்கிருக்கும் எல்லா பெற்றோரும் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தந்திருக்கிறீர்கள்! உடைத்து சொல்வதானால் நீங்களே அதை உங்கள் கையால் பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள், சரியான விழிப்புணர்வே இல்லாமல் மூன்று நாட்கள் ஏமாந்து போன குட்டிப்பையனில் அத்தனை தவறையும் தூக்கிப்போட்டு அவனை துரத்துவது சரியா? மற்றவர்களை பற்றி நாம் பேசவேண்டாம். அவர்கள் நீண்ட கால பாவனையாளர்கள் அவர்கள் பாடசாலைக்கு ஆபத்து என்று பாடசாலை கருதுமிடத்து அவர்களை நீக்குதல் நியாயமே..ஆனால் இந்த சின்னப்பையனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது தான் நியாயம் என்று எனக்குத்தோன்றுகிறது.

அவனுக்கு நான் கியாரண்டி கொடுக்கிறேன். இந்த ஒரு முறை அவனுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள். போலீஸ் காட்டிய கருணையை நம் மாணவன் மேல் நாம் காட்டாதிருப்பதா? முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். நிறுத்தி விட்டு ஒரு நிமிஷம் மௌனமாய் மக்களையே பார்த்தார் அவர்.

படபடவென்று கை தட்ட வேண்டும் போலிருந்தது ஆர்ணவிக்கு. அவரின் பார்வை தன் பக்கம் திரும்பும் வரை காத்திருந்தவள் திரும்பியதும் உள்ளங்கையை பொத்திக்கொண்டு நெஞ்சில் வைத்து வட்டமாய் அசைத்து காண்பித்தாள். கண்ணும் முகமும் சிரிப்பில் மலர அவள் சைகை பாஷையில் வேண்டிய அந்த மன்னிப்பு அவரது முகத்திலும் சட்டென்று தொற்றிக்கொண்டு வழக்கமான குறும்புப்புன்னகையை அவரிடம் தோற்றுவித்தது.

“உணர்ச்சி வசப்பட்டு அதிகம் பேசிவிட்டேன். எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று தாமதிக்காமல் சொல்லிவிட்டு ஓடிப்போய் தன்னிடத்தில் அமர்ந்தாள் ஆர்ணவி. அன்றைக்கு அவள் வேண்டியது போலவே சுபான்கனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது!!!