மீண்டும் நான்….

எங்கோ ஓர் தாய்க்குருவி இரை தேடிப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறது …

கீச்சிடும் குஞ்சுகளுக்கு  உணவோடு தாயும் திரும்பும் புள்ளி வரை

எதிர்பார்ப்பொன்றிலேயே இனிமேல் காலம் நகரப்போகிறது!

எனக்கு?

மறையும் ஆதவன் விடியலில் மீளெழும் போது

அர்த்தமேயின்றி நாட்கள் விடிகின்றன. ‘

சத்தமிடும் உங்கள் பேச்சுக்களின் நடுவில் என் இருப்பும் கலந்து விட

தனிமையில் மட்டும் பேரோசையுடன் மொழிபெயர்க்கப்படுகின்றன

என் மௌனங்கள்!

என் இருப்பின் அர்த்தமே புரியாத நிலையில்…

என் மீதான உங்கள் பார்வைகளின் அர்த்தங்களை மொழிபெயர்க்க முயல்கிறேன் !!!!

வேதனையின் அடுக்குகள் தான் அதிகமாகின்றன

உதவிகள் சுயபச்சத்தாபத்தில் வெறுக்கப்பட

சுயநலங்களையும் பொறாமைகளையும் பார்க்கக்கிடைத்திருக்கிறது

ஒரு ஞானியாய்!

கனக்கும் உடலுக்குள் பூட்டி வைத்த உயிர் மட்டும்

இன்றாவது எனக்கு அர்த்தம் வருமா என்று

விழிவாசல் வழி எட்டிப்பார்க்கிறது!

வெறுமை!

அது தனிமையிலும் கொடுமை!

ஆனால் சுற்றியிருக்கும் மனித முகங்களை முகமூடி கிழித்து

சுய ரூபம் காண்பது அப்போது தான் சாத்தியமாகிறது!

என்னையுமறியாமல் இருளான வெறுமையில்

ஒளியான அர்த்தம் தேடி

கடுந்தவத்தின் காத்திருப்புடன்

இதோ மீண்டும் நான்!