கிறிஸ்மஸ் ஸ்பெஷல்

This  article was nominated for penmai e-magazine December 2014

மத பாகுபாடின்றி மக்கள் மனங்களில் குதூகலத்தையும் உற்சாகத்தையும் அள்ளித்தெளிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சிறிய அறிமுகம் இது!

இது மழையின் ஆதிக்கமும் குளிர்காற்றுமாய் தென்னாசியாவிலும், மேலைத்தேய நாடுகளில் உறைபனிக்காலமுமாய் மக்களை கம்பளிகளை தேடவைக்கும் மார்கழி மாதம்! வர்ண ஒளிவிளக்குகளும் சவுக்கு மரங்களும் அதில் வர்ண அலங்காரங்களும் எங்கு பார்த்தாலும் பசசையும் சிவப்புமாய் எம் ஊரே மாறிவிட கடைகளும் தங்கள் பங்கிற்கு விலைத்தள்ளுபடி, சேல் என மக்களை தம்பக்கம் இழுக்க அநத ஆண்டு முழுவதும் சேர்த்து வைத்த பணத்தை உண்டியல் உடைத்தெடுத்த சிறுவர்கள் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் வாங்குவதும் நண்பர்களுக்கு பரிசுகளை தயார் செய்தலென துள்ளலும் சிரிப்புமாய் அங்குமிங்கும் ஓட காற்றில்கூட கிறிஸ்துமஸ் வாசம்!

கிறீஸ்து பிறந்தநாளை நினைவுகூறுமுகமாக உலகம் முழுதும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். அந்த பண்டிகையின் இயல்பும் அழகும் அனைத்து வித மக்களையும் ஈர்ப்பதால் பெரும்பாலானோர் மதவேறுபாடின்றி தம்மையும் அதில் ஈடுபடுத்தி பரிசுகளைப் பரிமாறி இனிப்புக்களை உண்டு மகிழ்கின்றனர்


கிறீஸ்து பிறப்பைப் பற்றி திருவிவிலியம் என்ன சொல்கிறது தெரியுமா? குடித்தொகை கணக்கெடுப்புக்காக பெத்லகேம் செல்லும் வழியில் மரியாளுக்கு பிரசவவலி எடுக்க மாட்டுத்தொழுவம் ஒன்றே அவர்களுக்கு கிடைத்தது. யாருமில்லா இடத்தில் ஆடுமாடுகளையும், கணவரையும் மட்டுமே துணையெனக் கொண்டு மரியாள் அங்கே ஆண் குழந்தை இயேசுவைப் பெற்றுக்கொள்கிறாள். முன்னணையில் துணிகளால் சுற்றி குழந்தை வைக்கப்பட்டிருக்க பிரகாசமான நட்சத்திரம் ஒன்று மேயப்பர்களையும், மூன்று ஞானிகளையும் வழிகாட்டி குழந்தை இருக்குமிடத்துக்கு அழைத்து வந்தது. அந்த ஞானிகள் குழந்தைக்குப் பொன், வெள்ளி, தூபவர்க்கம் முதலானவற்றைப் பரிசாகக் கொண்டு வந்தார்கள். இந்தச் சம்பவமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பரிசுகள் மூலமும் பாலன் பிறப்பு குடில் அமைத்தல் மூலமும் நினைவு கூறப்படுகிறது!

உலகின் முதலாவது கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் திகதி ரோம் நாட்டில் கிபி 354 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் விண்டர் ஃபெஸ்டிவல் (winter festival) என்றொரு விழா ஐரோப்பிய நாடுகளில் மக்களால் மார்கழி மாத இறுதியில் கொண்டாடப்பட்டிருக்கிறது. உறைபனி உருகி மரங்கள் இளைதுளிர்க்கும் இளவேனில் காலத்தை வரவேற்பது போல பச்சை மரங்களை வைத்துக் கொண்டாடுவார்களாம் அப்போது. அந்த பாரம்பரியமே கிறிஸ்துமஸ் விழாவோடு கலந்து சவுக்கு மரத்தை அலங்கரித்து கண்ணைப்பறிக்கும் வர்ணவிளக்குகள் மாட்டி கிறிஸ்துமஸ் மரமாக வீடுகளில் அலங்கரிக்கும் பழக்கமாக மாறியிருக்கலாம்! நன்றாக அலங்கரிக்கப்பட்ட மரத்தின் கீழே குடும்பத்திலுள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரிசுப்பொருட்களை வர்ணக்கடிதாசிகள் கொண்டு சுற்றி வைத்துவிடுவார்கள். மறுநாள் அவற்றையெல்லாம் பெருமகிழ்வுடன் பிரித்துப் பார்ப்பதற்காக சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பர்! அந்தப் பரிசுப்பொருட்கள் அநேகமாக உணவுகள், உடை, பொம்மைகள் என்று மகிழ்ச்சியோடு உபயோகிக்ககூடியனவாகவும், வீண் ஆடம்பரங்களை தவிர்ப்பனவாகவும் அமைந்திருக்கும்.பரிசுகள் வழங்குவதில் சீக்ரெட் சன்டா (secret Santa) எனப்படும் இன்னுமொரு முறையும் உண்டு. ஒரு குழு அல்லது குடும்பத்தில் நிகழ்த்தப்படும் இதில் முதலில் அனைவரது பெயர்களையும் சீட்டுக்குலுக்கி ஒவ்வொருவரும் ஒன்றை எடுத்துக்கொள்வார்கள். அவரே தெரிவு செய்தவரின் சீக்ரெட் சன்டா! தங்களுடைய சீக்ரட் சண்டாவுக்கு பரிசளிக்கும் பொறுப்பு இவர்களைச் சாரும். பரிசுகொடுக்கும் நிமிடம் வரை தனக்கான பரிசு என்ன? யாரிடமிருந்து வரப்போகிறது என்பது யாருக்குமே தெரியாது என்பதே சிறப்பான விடயம். குழந்தைகள் இருக்கும் பல குடும்பங்களில் பரிசுகளுக்கு பணம் செலவழிக்க முடியாது என்று நிபந்தனை போட்டுவிடுவார்கள். ஆகவே குழந்தைகள் தம் பிஞ்சுக்கைகளால் வாழ்த்து அட்டைகள், நினைவுப் பொருட்கள் இப்படி பணம் தயாரிக்காமல் வழங்குவர். பெயர் தெரிவு செய்ததிலிருந்து என்ன பரிசு கொடுக்கப்போகிறோம், அதன் தயாரிப்பு சகலமும் இரகசியமாக வைத்திருப்பார்கள். குழந்தைகளுக்கு மிகப்பிடித்ததும், காலம் காலமாக நினைவு இருப்பதும், குடும்ப உறவுகளை ஒருபடி மேலும் இறுக்குவதுமான அழகிய நடை முறை இது!

கிறிஸ்மஸ் என்றதுமே இன்னொருவரும் நினைவுக்கு வந்துவிடுவார். அவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப்பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண்தாடி கிறிஸ்துமஸ் தாத்தா! 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா உருவாக்கப்பட்டார். புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு – வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. காலப்போக்கில் கெடுதல் செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையும், நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளும் அளிக்கும் தாத்தாவாக அவர் உருவகப் படுத்தப்பட்டுவிட்டார். கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி வைத்துள்ள சாக்ஸில் இந்தத் தாத்தா பரிசுகளை போடுவதாக குழந்தைகள் நம்ப, அவர்கள் தூங்கிய பின் சண்டாவிடம் அவர்கள் கேட்ட பரிசுகளை பெற்றோரே போட்டுவிடுவதும் நடக்கும்!

கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடலை பாடிக்கொண்டு வீடுகளுக்கு இயேசு பிறப்புச் செய்தியை அறிவித்து பாடல்களைப் பாடும் குழுவோடு கிறிஸ்துமஸ் தாத்தாவும் வந்து ஆடிப்பாடி இனிப்புகளை குழந்தைகளுக்கு வழங்கி அனைவருக்கும் உற்சாகமும் சந்தோஷமும் ஊட்டி அடுத்த கிறிஸ்மஸ் பண்டிகையை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வைத்துவிடுகிறார்.

பாலன் குடிலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயேசு பிறப்பு நிகழ்ந்த மாட்டுத்தொழுவம், அவரின் பெற்றோர், இடையர், ஞானிகள் என்று பொம்மைகள் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் அந்தக் காட்சியை உருவாக்குவது வழக்கம். அன்பு, அமைதி, சமாதானம் என்று ஒவ்வொருவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் இயேசு பிறக்கிறார் என்ற செய்தியை அந்த பாலன் பிறப்பு குறித்து நிற்கிறது.

அனைத்தையும் குறித்து பேசியாயிற்று. உணவைக் குறித்து பேசாமல் இருக்கமுடியுமா? கிறிஸ்மஸ் பண்டிகைக்கென்றே விஷேட அடையாள உணவாக கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக் தயாரிக்கப்படுகிறது. நாடுகளுக்கேற்றபடி சின்னச் சின்ன மாறுதல்களுடன் கேக் உருவானாலும் அந்தப் பண்டிகை கேக் இன்றி முற்றுப்பெறாதென்றே சொல்ல வேண்டும். புத்தாடை அணிந்து, பரிசுகளைப் பகிர்ந்து கொண்டு, அக்கம் பக்கத்தாருக்கு கேக் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி மகிழும் உற்சாகத்துக்கு இணையே இல்லை!

இறுதியாக அன்பும், பகிர்வும், மகிழ்ச்சியும் என்ற கருப்பொருளில் ஒரு பிறந்தநாள் விழாவின் உற்சாகத்தை அள்ளித்தரும் கிறிஸ்துமஸ் நாளில், அதற்கான கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருக்கும் வேளையில் எம்மைச் சூழ்ந்திருக்கும் உலகையும் கவனிக்கவேண்டும் தோழிகளே! எங்கள் குடும்பத்தின், நண்பர்களின் மகிழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் செலவுசெய்யும் நாம், அன்றாட உடை, உணவுகளுக்குக்கூட அல்லல்படும் குழந்தைகளின் முகங்களையும் கொஞ்சம் நினைத்து பார்க்கலாமே. இயேசு ஆடம்பர மாளிகையில் பிறக்கவில்லை. மாட்டுத் தொழுவத்தில் ஏழைகளின் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த நன்னாளில் ஒரு ஏழைக்குழந்தையின் முகத்திலேனும் சிரிப்பை ஏற்றி வைக்க நாம் முயன்றால் என்ன? நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு பரிசு தயார் செய்யச் சொல்லும் போது உங்கள் குழந்தைகளிடம் ஒரு வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு குழந்தைக்கும் பரிசுப்பொருளொன்றை தயார் செய்ய குழந்தையிலிருந்தே பழக்குங்கள். கிறிஸ்துமஸ் நன்னாளில் குடும்பமாய்ச் சென்று அந்தக் குழந்தைகளுக்கு பரிசுகளையும், உணவுகளையும் வழங்குங்கள், பகிர்தலின் உன்னதத்தை உங்கள் குழந்தைகளும் புரிந்துகொள்வார்கள்! குறைந்தபட்சம் அந்த ஒருநாளிலேனும் நம்மால் ஒரு ஏழைக்குழந்தை சிரிக்கட்டுமே!

உங்கள் வீடுகளிலும் கிறிஸ்மஸ் வாசமாய் ஆனந்தமாய் மணக்கட்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

ஜிங்கிள்பெல்…
ஜிங்கிள்பெல்….