மனிதனும் மர்மங்களும்_ மதன்

11545124

இன்னிக்கு நான் படிச்சிட்டு வந்தது குமுதம் ரிப்போர்டர்ல தொடரா வந்த மனிதனும் மர்மங்களும் என்ற எழுத்தாளர் மதனோட புத்தகம்.

ஒரு வரில சொல்லணும்னா செம்மையான அனுபவம் இந்த புத்தகம். மர்மங்கள் எனும்போது பேய் இல்லாமலா..ஆனால் அதை விட சுவாரஷ்யமான விஷயங்கள் நிறைய இருக்கு!

நூற்று தொண்ணூறு பக்கத்துல இருக்கற புத்தகத்துல பர்ஸ்ட் குவார்ட்டர்ல தான் பேய்ஸ் வர்றாங்க. அதுவும் உண்மைச்சம்பவங்களை வச்சு அவங்களோட ஹிஸ்டரியையே துவைச்சு புழிஞ்சு காயப்போட்டு அயனும் பண்ணி மடிச்சு வச்சுர்றார் மதன் சார். எனக்கு என்ன பிடிச்சதுன்னா உண்மை சம்பவங்களை சொல்லிட்டு அதுக்கு விஞ்ஞான விளக்கம், கோட்பாடுகள் மூலமா அது எப்படி சாத்தியம் என்று சொல்லிருக்கறதால பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யமா இருந்துது!

உங்களுக்கு பேய்ஸ் புடிக்காதுன்னா தயவு பண்ணி முதல் ஐம்பது பக்கங்களை ஸ்கிப் பண்ணிடுங்க. அதுக்காக புக்கை படிக்காம மட்டும் விட்றாதீங்க. ஐம்பது பக்கங்களுக்கு அப்புறம் வர்ற எக்ஸ்பீரியன்ஸ் மிஸ் பண்ணவே கூடாதது! தமிழில் இப்படி புத்தகங்கள் ரொம்ப ரேர்! ஒரு கவர் போல படிச்ச விஷயங்களை நான் ஷேர் பண்றேன்.

நேத்து பின்னேரம் நான் படிக்க ஆரம்பிச்சப்போ மழை இருட்டு, குளிர் வேறயா… பேய் வரும்போது டெம்பரேச்சர் குறையும்னு சொல்லவும் எனக்கு பின்கழுத்து முடில்லாம் ஒரே பைலா டான்ஸ் தாங்க. அதுவும் பேய்களை கடகரைஸ் பண்றார், சாதா பேய், chilli பேய், காமேடிப்பெய், ஹெல்பிங் பேய், விளையாட்டா ராக்கிங் பண்ற பேய்னு, ஒருத்தர் உயிரோட இருக்கறப்பவே அவரோட பேய்னு, அதுவும் அத்தனையும் உண்மை சம்பவங்களை வச்சு! அதை பல விஞ்ஞானிகள் சோதனை பண்ணி நிரூபிச்சதை அழகா கதை போல சொல்றார். இன்னொரு திடுக் தகவல் இதுவரை ஆவிகளோட நடந்த இன்டராக்ஷன்ஸ் பெண்களோட தான் அதிகமாம். அதாவது பெண் மீடியம்களை தொடர்பு கொள்வது தான் அதிகமாம்.

ஆவி எப்படி வருதுன்றதுக்கான விஞ்ஞான விளக்கம் நான் இன்னிக்கு தான் படிச்சேன் மக்களே. Society for Psychical Research இது தொடர்பான ஆராய்ச்சிகளை பண்றாங்களாம். நமக்கு வேலை கொடுப்பாங்களா?

மனித உடலின் மிக எளிய கட்டமைப்பு செல்னு நாம படிச்சிருக்கோம்.கோடிக்கணக்கான cell சேர்ந்து உடம்பை உருவாக்கறது போல மனதுக்கும் செல் உண்டாம். மூளைக்கு தகவல் சொல்ற Neuron செல்களை போல எண்ணங்களுக்கான அடிப்படை அலகாக psychon இருக்கிறதாம். பல psychon கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட எண்ணம் உருவாகும் என்பதாக வைத்துக்கொள்ளலாம்.

இப்போ நம்ம ராஜ்கிரண் சார் டவுன்ல இருந்துட்டு “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள்” னு கிராமத்து வீட்டையும் அவர் குடும்பத்தையும் நினைச்சு ரொம்ப பீலாயிடறார். ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா அவர் பீல் பண்ணும்போது இந்த psychons ங்கற அக்கியூஸ்ட்கள் சேர்ந்து அந்த கிராமத்துக்கு போய்டும். சில வேலைகள்ல அந்த கிராமத்துல இருக்கறவங்க கண்ணனுக்கு புகை போல அங்கே ராஜ்கிரண் நடந்துட்டு இருக்கறது தெரியக்கூடும். எஸ் உயிரோட இருக்கறவங்களோட எண்ணங்கள் ஸ்ட்ராங்கா இருந்தா அவங்களோட ஆவி கூட தோன்றும். அஜித் சார் கோர்ட்ல பீலிங்கா பேசும்போதே அத்திப்பட்டில மிதந்திட்டு இருக்கற சாத்தியங்களும் உண்டு!

இது தான் இறந்த பின்னரும் அவங்களுக்கு பிடிச்ச இடத்தில சிலர் அவங்களை பார்க்க முடியறதுக்கும் காரணம்.இது எல்லாம் காலப்போக்குல அந்த psychonகள் சக்தியை இழந்து மறைஞ்சு போறதால நமக்கும் ஆவி தெரியிறது குறைஞ்சு மறைஞ்சு போய்டும்.

ஆனா ஒருத்தர் சாகற அதே நேரம் எங்கயோ இருக்கற இன்னொருத்தருக்கு அவர் தெரிஞ்ச சம்பவங்கள் நிறைய நடந்துது. அது எப்படி சாத்தியம்?இங்கே தான் மையர்ஸ் தன்னோட டெலிபதி தியரி ஓட வர்றார்.

சாகற நேரம் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து அவங்களை பிடிச்சவங்க கிட்ட என்னை காப்பாத்து, நான் இறந்துட்டு இருக்கேன், உன்னை பாக்கணும்னு எண்ண அலை உருவாகி ஒளி வேகத்தில் பயணிக்குது
அந்த ரிசீவரோட மூளை டெலிபதிக் ஆக தட்டி எழுப்பப்பட அவர் கண்முன்னே அந்த இறந்தவரோட உருவம் தெரியுது!

எல்லாம் சரி அந்த ஆவிக்கு சம்பந்தமே இல்லாதவங்க பலர் சில சமயங்கள்ல அந்த ஆவியை பார்க்க முடியுதே, இது எப்படி?
இங்கேதான் காஸ்டாப் யூங் என்ற சிக்மன்ட் பிராய்டின் பிரதான சீடர் என்ட்ரி கொடுக்கறார். அவர் சொல்வது என்னவெனில்
நம்ம ஆழ்மனத்துக்குள் பொதுவான மனம் என்று ஒன்று உண்டாம். ஒட்டுமொத்த உலகையும் சேர்த்தது போல, அனைவரையும் ஒரு சேர ஒன்று போல சிந்திக்க வைக்கும் மனம் அது! சில நாடுகளின் மாபெரும் புரட்சிப்போராட்டங்கள் மூலம் மக்கள் சக்தி ஒன்று சேர்வது இந்த மனத்தின் செயல் தானாம்.

சோ ஆவிக்கு நெருங்கியர் டெலிப்பதி மூலம் அந்த ஆவிக்கு வடிவம் கொடுக்க இந்த பொதுவான மனம் மூலம் பலருக்கு படிப்படியாக அந்த உருவத்தோடு டெலிபதி நிகழ்கிறது. அவ்வளவு தான். புத்தகத்தில் படியுங்கள் மக்களே மிக எளிதாக புரியும்படி மதன் சார் சூப்பராக சொல்வார்.

அடுத்து psychic பற்றி சொல்கிறார். பெரியவர்களை விட சிறுவர்களுக்கு இந்த சக்தி அதிகமாம். இன்னொரு சுவாரஷ்யமான சம்பவம் சொல்லிருந்தார். டைட்டானிக் மூழ்க கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாவல் பாரிய கப்பலொன்று 77000 பேரோடு முதல் பயணத்தில் பனியில் மோதி கவிழ்த்தது என்று வந்ததாம். டைட்டானிக் மூழ்கியபிறகு சேதங்கள், எண்ணிக்கைகள் அனைத்துமே அந்த நாவலோடு ஒத்துப்போனதாம். அதிசயம் என்னவெனில் அந்த நாவலில் வரும் கப்பலுக்கு பேர் டைட்டன்.

ஒரு பத்திரிகையாளர் இந்த நாவலை போல நடக்க சந்தர்ப்பம் உண்டு. ஏனெனில் பாரிய கப்பல்கள் இப்போது கட்டப்படுகின்றன என்று விபத்துக்கு சில நாட்களின் முன் சொல்லிஇருக்கிறார். ஆச்சர்யம் தானே அதை நம்பாமல் டைட்டானிக்கில் பயணித்து இறந்து போயிருக்கிறார்! psychic எண்ணங்களை நாம் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.

பிறகு கனவுகள், நாஸ்டர்டாம், சக்தி கொண்ட மனிதர்கள், மீன் மழை, தவளை மழை, திடீரென்று நெருப்பு பற்றி சாம்பலாகும் மனிதர்கள், aura, வேற்றுக்கிரக வாசிகள் என்று புத்தகம் பர பரவென்று பறக்கிறது.
வேற்றுக்கிரக வாசிகள் பற்றி படிக்கும் போது மண்டைல ஒரு விஷயம் தோணிச்சு. அதுதான் நீல நிறம். என்னை கேட்டால் உலகில் மர்மமான நிறம் நீலம் என்பேன். வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்களில் இருந்து நீல ஒளி வருவது, நீலக்கண்கள், ஏன் fantasy என்று சொல்லும் போதே நாம் நீல நிறத்தை தான் தெரிவு செய்வோம். இதை பற்றி இன்னும் படிக்க வேண்டும்!

ஆதலினால் காதல் செய்வீர்

கிட்டா, ஜோமோ, அரிஸ், மாமா நால்வரும் ஒரே பிளாட்டில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள். ஒரே சமயத்தில் அவர்கள் வாழ்வில் பெண்களால் ஏற்படும் குழப்பங்களை வயிற்றைபிடித்துக்கொண்டு சிரிக்கும் படி தன் புத்திசாலித்தனமான கதை நகர்த்தலின் மூலம் தள்ளிச்செல்கிறார் ஆசிரியர்.

அபிலாஷாவை பார்த்து மனதில் ஜொள் விடும் ஜோமோ தடாலடியாக வரும் திருமணவாய்ப்பில் தன்னிலை மறந்து சம்மதம் சொல்கிறான். தான் சம்மதம் சொன்னது அவன் முரட்டு வேலைக்காரி என்று நினைத்த அபிலாஷாவின் அக்கா என்பது அவனுக்கு வெகுதாமதமாக தெரியவர விழிக்கிறான்.

அதே நேரம் கிட்டாவுக்கு போலீஸ் காரியும் கலப்படத்தமிழ் பேசும் கஸ்தூரியிடம் காதல் ஏற்படும் விதமும் கஸ்தூரி இவர்களோடு வசிக்க வருவதும் அதற்கு மற்றவர்களின் பேச்சும் குபீர் சிரிப்பு ரகம்! வெளிப்படையாக அத்தனையையும் பேசிவிடும் prof ஆரிஸ் வீட்டு ஓனரம்மா பேச்சை தட்ட முடியாமல் அவரின் பதினேழு வயதுப்பெண்ணான லின்னிக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் மாட்டிக்கொள்வதும் அவன் கணக்கை தவிர வெள்ளந்தியாக சகலதையும் கற்றுக்கொடுப்பதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்! அரிஸ் பேசும் பேச்சுக்கள் சான்சே இல்லை.

ஊருக்கு போயிருக்கும் மாமா மனைவி நீலா வரும் சமயத்தில் இந்த கஸ்தூரி வந்து தங்கியிருக்கிறாளே என்று அவதிப்படுவதும் சரியாக நீலா வரும் சமயம் கஸ்தூரியுடன் மாட்டிக்கொள்வதும் இப்போது நினைக்கும் போதும் சிரிப்பை வரவழைக்கிறது. தமிழாசிரியை நீலாவுக்கும் சரியான தமிழ் பேசாத கஸ்தூரிக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்! ஹா ஹா ஹா

அக்கா கல்யாணம் நிற்க வேண்டுமானால் அவளுக்கு இன்னொரு மாப்பிள்ளை தேடுங்கள் என்று அபிலாஷா சொல்லி விடுகிறாள். நண்பர்கள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். கடைசியில் மாட்ரிமோனியல் விளம்பரத்தில் பார்த்து ஒருவரனை தேடிப்போகிறார்கள். அவன் ஜோமொவிடம் ஒரு சீட்டை கொடுத்து ஏர்போர்ட் போக சொல்கிறான். அங்கே பிடித்துக்கொள்கிறது சனியன்!

கொஞ்சம் ஊகிக்கக்கூடிய கதை தான் இருந்தாலும் அதையெல்லாம் மறக்கடிக்கக்கூடிய ஆசிரியரின் நடையும் கதை சொல்லலும் பரபர அனுபவத்தை தருகிறது.

அரிஸ் லின்னியின் காதலில் இருந்து எப்படி தப்பித்தான்?

ஜோமோ அந்த திருமணத்தில் இருந்து எப்படி தப்பித்தான்?

மாமா நீலாவுடன் சேர்ந்தானா?

கிட்டாவும் கஸ்தூரியும் என்னவானார்கள் அத்தனைக்கும் விடை சொல்லிப்போகிறது நாவல். சுஜாதாவின் நாவலை எப்போது எடுத்தாலும் இந்த மனுஷனுக்கு இருக்கற குசும்பு இருக்கே என்ற செல்லச்சலிப்பு இங்கேயும் ஏற்பட்டது நிஜம்!

தீண்டும் இன்பம்_ சுஜாதா


ஒரு இதயம் உடையாமல் நிறுத்த முயன்றால் 
நான் வாழ்வது வீணல்ல 
ஒரு உயிரின் தவிப்பையோ
ஒரு வலியையோ குறைக்க முடிந்தால் 
ஏன் சோர்ந்து விழும் ராபின் பறவையை 
கூட்டுக்கு மீட்க உதவினாலே 
நான் வாழ்வது வீணல்ல 

எமிலி டிக்கின்சனின் கவிதையோடு ஆரம்பிக்கிறது கதை. பிரிந்து தனித்தனியாக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெற்றோரின் பதினேழு வயதுபெண் அஹல்யா. சகலகலாவல்லவி ஆனால் சற்றே முதிர்ச்சியற்ற மாணவி. அவளுக்கு பாடசாலையில் ஒரு நண்பன் உண்டு பிரமோத். அவனுக்கும் இவளுக்குமான இழை காதலா நட்பா என்று அங்கு மிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்தது. சக மாணவன் ரகுவுக்கும் அஹல்யா மேல் ஒரு கண் உண்டு, ஆனால் அவன் பிரமோத் போலல்ல, மனம் போன போக்கில் வாழ்பவன். நதிரா, பிரமோத்தின் இன்னொரு நண்பி, பார்வைக்கு அதிநாகரிகவாதியாகவும் ஆண்களோடு தொற்றிகொள்பவள் போல இருந்தாலும் தன் எல்லையை அறிந்தவள், தீர்மானமுள்ளவள்.

ஒரு போட்டியின் வெற்றியை கொண்டாட பிரமோத்துடன் அவனது வீட்டுக்கு செல்லும் அஹல்யா அங்கே பிரமோத் குடித்து விட்டு சற்றே எல்லை மீற முயல அங்கிருந்த இன்னொரு பள்ளி மாணவனுடன் ஹாஸ்டல் திரும்புகிறாள். காவலாளி இல்லாததால் அவளுக்கு அந்த மாணவனுடன தங்க நேரிடுகிறது. பிரமோத் நதிராவுடன் இருக்கிறான் என்ற எண்ணத்திலேயே ஒரு வகை குழப்பமாய் இருந்தவள் அந்த மாணவனான ஸ்ரீதரிடம் தன்னை இழந்து விடுகிறாள். சிறிது நாட்களில் அவள் கர்ப்பம் என தெரிய வருகிறது. ஸ்ரீதர் அதை அறிந்து தன் அமெரிக்க பாஸ்போர்ட்டை கிழித்து அவளோடு உடனிருப்பேன் என சபதம் செய்கிறான். தங்கள் நண்பியை இந்நிலைக்கு ஆளாக்கியவன் என்ற கோபத்தில் ரகுவும் பிரமோத்தும் அடித்ததில் எதிர்பாராமல் அந்த ஸ்ரீதர் இறந்து விடுகிறான். அஹல்யா திகைக்கிறாள்.

அஹல்யா அந்த குழந்தையை பெற்றெடுத்தாளா?

ரகுவுக்கு என்ன ஆனது?

இதையெல்லாம் கதையில் ஆசிரியர் சுவையாக சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீதருக்கும் அஹல்யாவுக்கும் காதலே இல்லை. ஆனால் குழந்தை இருக்கிறது. பிரமோத் அஹல்யா, ரகு அஹல்யா, இப்படி விசித்திர உறவுகளும் தாறுமாறான இழைகளுமாய் கதை நகர்கிறது. இந்த கதையில் எல்லோரும் நல்லவர்கள். காலம் தான் வில்லன் வேடமிட்டு சந்தர்ப்பங்கள் மூலம் காய் நகர்த்துகிறது.

இளவயது கர்ப்பங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும், அபார்ஷன் சரியா தவறா என்ற விவாதங்கள், அப்படியே குழந்தையை பெற்றாலும் அந்த இளம் தாயால் குழந்தையை வளர்க்க முடியுமா? தத்தெடுத்தல் எப்படிப்பட்டது? அப்போது தாயின் மனநிலை எப்படியிருக்கும்? இவை பற்றியெல்லாம் ஆணித்தரமான கருத்துக்களை ஆசிரியர் விதைத்திருக்கிறார்.

தலைப்பு என்னவோ தீண்டும் இன்பம் தான் ஆனால் காதலில்லாத தீண்டலினால் அஹல்யா, ஸ்ரீதர், ரகு அனுபவிக்கும் துனபங்கள் தான் நம் கண்ணில் விரிகின்றன. 

தன் தலை முடியை வெட்டி அசிந்தியா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு மேடையேறி எமிலி டிக்கின்சனின் அதே வரிகளை பாடும் அஹல்யாவுடன் கதை முடிவடைகிறது. கவலையின்றி படித்துக்கொண்டிருந்த மென்மையான குழந்தைப்பெண்ணை வலுக்கட்டாயமாய் முதிர்ச்சி அடையச்செய்து இறுகச்செய்த காலத்தின் கோலத்தை எண்ணி நமக்கும் பெருமூச்சு வருகிறது.