நான் நானாக..

images# Age poguthu
waves and vibrations தெரியுமல்லவா? அதில் வரும் அலைவடிவம் ஞாபகம் இருக்கிறதா? ஆனால் wave, wavelength பற்றியெல்லாம் அறிந்திராத சின்ன வயதில் நாட்கள் நகர்வது கடலை ஒன்றின் அசைவு போல எனக்குத்தோன்றும். கடலலை ஒன்றின் மீது பள்ளிச்சீருடையோடு நான் மிதந்து அலைவடிவமாய் உயர்ந்து கரைமணலை அடைந்தால் பாடசாலை செல்லும் காலைவேளை. சன்னமாய் மண்ணின் குறுகுறுப்பு வேறு கையில் படும். பிறகு திரும்ப அதே அலையில் கடல் நோக்கிபோய் கடலுக்குள் மூழ்குவேன். ஆழமான நீலக்கடல் தான் இரவின் குறியீடு போலும். ஒரு செக்கனில் தோன்றிமறையும் காட்சி இது. பிறகு பூமியின் சகல செயல்பாடுகளிலும் இதே லயத்தை பௌதிகவியல் கற்றுத்தந்தபோது வியப்பாக இருந்தது. எல்லோர்க்கும் இந்த எண்ணம் வருமா என்று இதுவரை யாரிடமும் கேட்டுப்பார்த்ததில்லை. சிறுபிள்ளைத்தனமாக இருக்காதா என்ற தயக்கம் என்னை விழுங்கிவிடும். கேட்கவேண்டும்..இப்போதெல்லாம் நாட்கள் நகர்வது முன்னை விட கணநேர காட்சியாகிவிட்டது. அதோடு நான் பள்ளிச்சீருடையிலும் வருவது இல்லை!

#ennamma ippad sudureengalema?

சூரியன் தீ வைத்துக்கொண்டிருக்கிறான். வெய்யில் தகிக்கிறது. போனவாரம் அருமையாய் மாலையில் மழைவேறு. அதுவும் சூட்டை தணிப்பதற்குப்பதிலாக வெம்மையைத்தான் கிளப்பிப்போகிறது. நேற்று வேலை முடிந்து வந்து வீட்டுப்படிக்கட்டுகளில் தாவியபோது பக்கத்துப்பல்கனியில் லண்டன் அக்கா நின்று என்னைக்கண்டதும் சிரித்தார். எப்படி இங்கே இருக்கிறீர்கள்? சுடவில்லையா? எனக்கு ஆமையாய் மாறி தண்ணீருக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது என்றேன். உங்களால் சொல்ல முடிகிறது நான் சொன்னால் வெளிநாட்டில் இருந்து வந்து சீன் போடிங் என்று விடுவார்கள் என்பதால் வாயை மூடிக்கொண்டிருக்கிறேன் என்று பாவமாய் சொன்னார். ஹ்ம்ம் அவரவர் பிரச்சனை அவர்களுக்கு !! ஆமாம். முன்னர் இப்படிப்பட்ட வெயிலை உணர்ந்ததே இல்லை. பாடசாலைக்காலத்திலெல்லாம் இவ்வளவு வெயில் எரிக்கவில்லையே என்பது கடந்தகாலம் எப்போதுமே இனிமையான ஞாபகத்தை தான் கொண்டிருக்கும் என்பதனால் தானா? சிறுவயதில் சாப்பிட்ட அம்மா சமையலுக்கும் அதே அம்மாவின் இப்போதைய சமையலும் கொஞ்சமே கொஞ்சம் வித்யாசம் இருக்கும். முன்னது கொஞ்சம் ருசியில் அதிகம். #சிந்திக்கிங்… global warmingகுக்கு இப்படியொரு மறுபக்கம் இருந்திருக்கும் என்று பூமிக்கே தெரிந்திருக்காது அட லியானார்டோ கூட ஆஸ்கார் மேடையில் இதைப்பற்றித்தான் பேசினார். முன்னரே தயார்ப்படுத்திக்கொண்டு வந்திருக்கவேண்டும். மீதி நான்கு பேரும் என்ன ப்ரிப்பேர் பண்ணிக்கொண்டு வந்திருப்பார்கள்? விருது கொடுக்கலைன்னாலும் அவங்க ஸ்பீச்சை எழுதி வாங்கிருக்கணும்!!!

#nonthupoyify

மிக மிக ஆதங்கமான ஒரு விஷயம். ஒரு விடயத்தை தமிழில் புதிதாக முயற்சிப்பதாலேயே அது விமர்சனத்துக்கு அப்பால்பட்டதாய் ஆகிவிடுமா? என்ன கொடுமை சரவணா இது? மிருதனை விட உருவன் நன்றாக இருந்தது. அறிமுகப்படுத்திய pfool க்கு ஒரு நன்றி.  இந்த மாதிரி நல்லவிங்க வாழணும்! 😉 இந்த அபத்தத்துக்கு சற்றும் குறையாத இன்னொரு அபத்தம் நான் ஈழத்தமிழன் என்று சொல்லி ஆதரவு கேட்பது. திறமையை முன்னிறுத்தாமல் நிவாரணம் கேட்கும் இந்தப்பண்பு மறத்தமிழன் பரம்பரைக்கு எப்போது வந்தது? உங்களுக்காகத்தான் பண்றேன்னு ஒரு கொசுறு வேற. உங்க திறமை, உங்க முயற்சி நீங்க பார்ட்டிசிபேட் பண்றீங்க. உங்களை பிடிச்சிருந்தா எல்லாருமே சப்போர்ட் பண்ணுவாங்க. அதை விட்டு நீங்க யார்னு சொல்லிக்கேட்கறது ஒருவகை உணர்வு ரீதியான நிர்ப்பந்தம்னு எனக்கு தோணுதே.

#ராஜா ஆயிரம்.

அவர் திறமையான இசையமைப்பாளர்தான் ஆனால் கடவுள் , இசையில் முதல் என்று விஜய் டிவி தொடர்ந்து உருகிய உருகலில் புரிந்து விட்டது. விழாவை சொதப்பிபை என்று. எனக்கு ஸ்ரீநிவாசை பிடிக்கும். இசையை ரசிக்கையில் ஒரு குழந்தையாய் மாறிவிடும் இயல்பு பிடிக்கும். ஆனா அவர் கூட ரெண்டு மூன்று வாரமாக அவ்வ்வ்வ் வேணாம் ஸ்ரீனிஜி. விஜெய் டிவி காரன் சொல்றதை கேக்காதீங்க. ஒகே விழா எப்படி நடந்துது? வச்சு செஞ்சுட்டாங்களாம். நொந்து போன மக்கள் போஸ்ட் மேல போஸ்ட்களாக போட்டுத்தாக்கிட்டு இருக்காங்க. நாம தான் அப்போவே நினைச்சோமே மொமென்ட்! அப்புறம் கமல் சார்.. ஹி ஹி இந்த கமல் நடிப்பதை மட்டும் பார்த்துக்கொண்டாலே போதும் என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா?   இன்னொரு நியூஸ் ARR கொழும்புக்கு வர்றாராமே! அப்படியே நரம்பெல்லாம் என்னவளே இண்டர்லூட் இப்போவே கேட்க ஆரம்பிச்சாச்சு!

# கார்த்தி பஞ்ச் : வம்பை மணி கொடுத்து வாங்கிபைன்னு முடிவு பண்ணிட்டா ஆடி காராவே வாங்கிடணும். சும்மா டொயோட்டா கொரொல்லாக்கெல்லாம் காம்ப்ரமைஸ் ஆகக்கூடாது

ஐ ஹேட் யூ….

Picture1


இற்றைக்கு இரண்டு வருடங்களின் முன் உனக்கான என் முதல் காதல் கடிதத்தை இதே காதலர் தினப்போட்டியில் தான் எழுதியிருந்தேன். அதை உன்னைத்தவிர உலகமே படித்திருந்தது. அப்படியே இந்தக்கடிதத்தையும் நீ படிக்க மாட்டாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்!

போன காதலர் தினம் உனக்கு நினைவிருக்கிறதா?

கும்மிருட்டு, நமக்கே நமக்கான தனிமை, ஒற்றை மெழுகுதிரியில் கீற்றாய் வெளிச்சத்தை ஏற்றி வைத்துகொண்டு சண்டையிட்டு, கண்களை வீங்க வைத்த ஜோடி நாமாய்த்தான் இருக்கமுடியும்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுமாமே.. சத்தியமாய் சொல்கிறேன். நம்மிருவர் திருமணத்தையும் நிச்சயித்த போது சொர்க்கத்தில் மின்சாரத்தடை அமுலில் இருந்திருக்க வேண்டும்!

இரண்டே வருடத்தில் இப்படி வாழ்க்கை வெறுத்து விட்டதா? என்று முகத்தை சுருக்காதே! உனக்கும் அப்படித்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

திருமணத்துக்கு முன்னான நீ, நானுக்கும், திருமணத்துக்குப்பின்னான நீ, நானுக்கும் உள்ள முரண்களின் பட்டியல் வளர வளர, எவ்வழியும் போகவியலா முட்டுச்சந்தொன்றில் போய் முட்டிக்கொண்டு மறுகுகிறது மனது.

மாயா மாயா மாயா எல்லாம் மாயா என்று ஒரு மாயானந்தா சுவாமிகளாக காதலை மறுக்கும் பப்பாசி மரமெனும் ஞான நிலையில் ஏறி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது என் அறிவு!

நேற்றும் கூட ஹேய் காதலர் தினத்துக்கு இம்முறை ஏதேனும் கைவினை செய்யவில்லையா என்று கேட்ட நண்பிக்கு காதல் என்பதே ஒரு வினை என்று இடக்காய் பதில் சொல்லிப்போனவள் இன்று சுவற்றில் அடித்த பந்தாய் அதே திரிக்கு திரும்பி வந்திருக்கிறேன். காதல் ஒரு பொல்லா வினை!!!

இரவுகளில் உன்னோடு படம் பார்க்கப்போவது ரொம்பவும் பிடிக்கும் எனக்கு. வேண்டுமென்றே கொஞ்சம் தூரமான திரையரங்கில் இருந்து இரவு பத்தரை மணிக்கு நடந்தே நாம் வருவோம். ஆனால் நிலவின் ஒளியில் நாம் நடக்கும் போது “இனிமேல் உன்னை நான் படம் பார்க்க அழைத்து வரவே மாட்டேன்” என்று நீயும் “இனி உன்னோடு வந்தால் என்பேரை மாற்றிக்கொள்கிறேன்” என்று நானும் வீர சபதங்களை செய்தபடி பரஸ்பரம் குரல்வளையைக்கடிக்காத குறையாக திரும்பிவருவோம். மாதம் ஒருமுறை படங்கள் மாறினாலும் எம் சபதங்கள் மட்டும் வரி கூடப்பிசகாமல் அப்படியே தொடர்கிறது. காரணம் மட்டும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்று! அப்படிச் சண்டையிட்டு வீடு வந்தாலும் மறுநாள் “ ஏய் புதுப்படம் வருகுதாமே?” என்ற வசனம் மட்டும் இருவருக்கும் பொதுவானது. அதிலும் ஒருவர் சொல்லும் போது மற்றவர் முதல் நாள் நடந்ததை எப்படி மறந்து போகிறோம் என்ற கேள்விக்கு என்ன யோசித்தாலும் இந்த வினையைத்தவிர வேறேதும் பதில் தெரியவில்லை.

நான் தல ரசிகையாய் இருப்பதாலேயே நீ தளபதியை வெறித்தனமாக ரசிக்க ஆரம்பித்தாய், நீ தளபதி ரசிகன் என்பதாலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே பார்த்தாலும் தலக்கு வெறித்தனமான ரசிகையாக நான் மாறிப்போனேன். அவர்களை வைத்து உன்னை சீண்டுவதில் எனக்கும், என்னை சீண்டுவதில் உனக்கும் அலாதிப்பிரியம். அப்போதெல்லாம் உன் முடியைப்பிடித்து நாலு வைக்க வேண்டும் என்று கடுப்பானாலும் நீ இல்லாத வாரத்தில் என்னை நினைத்து நினைத்து சிரிக்க வைத்து உயிர்ப்போடு வைப்பவை உன் அந்த மொழிகளே! உனக்கும் அப்படித்தானா எனக்குத்தெரியவில்லை. அப்படியிருந்தாலும் அதை நீ சொல்லவே போவதில்லை என்றும் எனக்கு நிச்சயமே.

நாம் பேசிச்சிரித்த நாட்களை விட சண்டையிட்டுக்கொண்ட நாட்கள் தான் அதிகம். ஆனால் ஒரு சண்டையின் பிறகான மாலையில் நீ திரும்பி வரும் போது இருவருக்கும் பரஸ்பரம் பீரிட்டு வரும் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து விட்டு சமாதானம் ஆகிக்கொள்ளும் அழகுக்காகவே நாம் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

ஒத்த ரசனைகள் இருந்தால் காதல் வரும் என்பார்கள். நம்மிடையே கீழ்வீட்டு நாய்க்குட்டியைத்தவிர வேறேதும் பொருந்துவதில்லை. இருந்தும் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உன் குரல் கேட்காவிட்டால் சார்ஜ் இழக்கும் மொபைலாக என் உற்சாகம் வடிந்து போவதும் , ஹை டெசிபலில் சண்டையிட்டுக்கொண்டாலும் மௌனத்தை சகிக்க முடியாமல் உன்னை திட்டியபடியே பேசிக்கொண்டிருப்பதும் எனக்குள் இருக்கும் உன் மீதான வினை தான்.

எனக்குள் வளர்ந்துகொண்டிருக்கும் மாயானந்தா சுவாமிகள் இப்போதெல்லாம் நிறையப்போதிக்கிறார். எப்படி நீ எதிர்பார்ப்பதைப்போல நான் இருக்க முடியாதோ நான் நினைப்பதைப்போல உன்னையும் மாற்ற நினைக்ககூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொள்கிறேன். நீ உன் தனித்தன்மையோடு இரு. நான் என் தனித்தன்மையோடு இருக்கிறேன். அதற்காக உன்னை, நீ செய்வதெல்லாவற்றையும் நான் சகித்தே போவேனென்று அர்த்தமில்லை. நிச்சயம் சண்டை போடவே செய்வேன். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது

நீயும் அப்படியொரு முடிவுக்குத்தான் வந்திருக்க வேண்டும். உன் செயல்பாடுகளிலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தடவை காதலர் தினத்தன்று நாம் சண்டை போட ஒரு டாப்பிக் எடுத்துவை. நான் மெழுகுவர்த்தி வாங்கி வருகிறேன் என்று சிரித்த படி சொன்னாய், நீ அன்றைக்கு வீட்டுக்கு வரப்போகிறாய் என்று சிரிப்பும் அழுகையுமாய் ஈஈஈஈஈஈ என்று உட்கார்ந்திருக்கிறேன் நான். நீ சொல்லமாட்டாய் என்று தெரியும் இருந்தாலும் சொல்கிறேன், தயவு செய்து ஐ லவ் யூவெல்லாம் சொல்லிவிடாதே. எங்கள் வீட்டுச்சுவரே நம்மைக் கல்லெடுத்து அடிக்கக்கூடும்!

அது சரி.. உனக்கு எப்படி இந்த ஞானம் பிறந்தது? உன் மண்டைக்குள்ளெல்லாம் மாயானந்தாக்கள் நுழைய முடியாதே. நித்யானந்தாக்கள் வசிக்கும் தவபூமியல்லவா அது? விட்டுத்தள்ளலாம்…ரெசிப்பி என்னவாக இருந்தாலும் பிரியாணி வந்தால் போதாதா?

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மாயானந்தா சுவாமிகள் மண்டைக்குள் ஒரு விஷயத்தைக்கேட்டார். எனக்கும் சரி, உனக்கும் சரி ஒத்த ரசனை உள்ள துணை கிடைத்து நாம் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்! ஒருவர் வைத்தியசாலைக்கும் ஒருவர் ஜெயிலுக்கும் போயிருப்போம், நிச்சயமாக! நல்லவேளை எனக்கு நீ கிடைத்து விட்டாய்! எப்போதாவது நீ இப்படி எண்ணியிருப்பாயா? நீ எங்கே இதையெல்லாம் எண்ணப்போகிறாய்?

போனால் போகிறது காதலர் தின வாழ்த்துக்கள் உனக்கு உரித்தாகட்டும்

இப்போது இவ்வளவு எழுதுகிறாயே நீ மட்டும் இதையெல்லாம் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கிறாயா? என்று கேட்கிறாயா? அட நான் உன்னைப்பற்றி எழுதியிருப்பதாகவா நினைத்துக்கொண்டாய்? அஸ்கு புஸ்கு! நினைப்புத்தான் பிழைப்பைக்கெடுக்குமாம்! நானே ஒரு எழுத்தாணியாக்கும்..கற்பனை சும்மா பறந்து பறந்து வரும். நான் தங்களைப்பற்றி எழுதுவதாக யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். நான் போட்டிக்காக மட்டுமே,,,, மட்டுமே,,,, மட்டுமே எழுதியிருக்கிறேன்.

வெவ்வெவ்வே

நன்றாகக் கேட்டுக்கொள் ஐ ஹேட் யூ….

இப்படிக்கு
உன் எதிரி
டிஷ்யூம்!

Read more: http://www.penmai.com/forums/special-contest/108095-creative-writing-contest-valentines-day-penmais-valentines-day-special-contest.html#ixzz40p7CskC2

வில்லனை எப்படி ப்ரண்ட் பிடிக்கறது??

இந்த கதை கொஞ்ச நாளாவே ஓடிட்டு இருக்கு! எங்க வீட்ல இருந்து மெயின் ரோடுக்கு போறதுக்கு ஒரு நூறு மீட்டர் நடக்கணும். அதுல ஒரு டேர்ன். அந்த டேர்ன்ல ஒரு மாடி வீடு! அதுக்கு ஒரு பல்கனி. இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள் நான் நடந்து வர வள்னு ரொம்ப சாப்டா ஒருத்தர் குரைச்சார். மேலே பார்த்தேன். அவர் ஒண்ணும் ஹை கிளாஸ் நாய் கிடையாது! மிக்ஸா இருக்கலாம். பார்த்தவுடனேயே பல்ப் எரிய நான் ஹாய்னு டாட்டா காட்டிட்டு போயிட்டேன். அந்த நாளில் இருந்து சார் என் டைம் டேபிளை போலோ பண்ண ஆரம்பிச்சிட்டார். நான் வரும்போது பால்கனி கிரில் வழியா மூக்கை நீட்டி வச்சிட்டு என்னை கண்டதும் ஒளிஞ்சிடுவார். சரியா நான் வீட்டை பாஸ் பண்ணும் போது எட்டிப்பார்ப்பார். நான் திரும்பி பார்த்து கைகாட்டிட்டு ப்ளையிங் கிஸ் கொடுப்பேன்.அவருக்கு ரொம்ப வெக்கமாயிடும். கிரில் பின்னே ஒளிச்சிடுவார்.

G அந்த வீட்டுக்கு வச்சிருக்கற பேர் “அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்!”

ஆனா ஒருநாள் நான் கை காட்டும் போது ஒரு பாட்டி எட்டிப்பார்க்கவும் எனக்கு ரொம்ப வெக்கமாயிடிச்சு! அவங்க எங்க காதல் நாடகத்தை பார்த்திருப்பாங்க போல! ஹாய்னு எனக்கு கை காமிச்சு “what’s your name thuva (மகள்)?” னு கேட்டாங்க. அப்படியே நானும் பாட்டியும் பிரன்ட் ஆயிட்டோம். அன்னிக்கு தான் சார் பேர் ரோஜர்னும் தெரிஞ்சது! ஒருநாள் இந்த பாட்டி மேல இருந்து என்கூட பேசிட்டிருக்கும் போது வீட்டுக்கு பக்கத்துல இருக்கற ஆண்ட்டி அந்த பக்கம் போகவும் இன்றோடியூஸ் பண்ணி வச்சாங்க! இப்படியே நான் ரோஜரால அந்த தெரு முழுவதும் குதூகலமா உறவை வளர்த்துக்கிட்டேன்!

இந்த அருமை பெருமையெல்லாம் நான் G கிட்ட சொல்லி பெருமையடிக்க அவர் சொல்றார். “அவளவு ஏன் கார்னர் வீட்டு குழந்தைக்கே உன்னை காட்டி தான் சாப்பாடு ஊட்டறாய்ங்க!” கிரர்ர்ர்ர் பொறாமை பிடிச்சவங்களை விட்ருவோம்!

ஏன் நான் இந்த போஸ்ட் எழுதினேன்னா கொஞ்ச நாளா மழை பெய்ஞ்சதால ரோஜரை ரெண்டு வாரமா காணோம். ரொம்ப வெறுமையா இருக்கும். அந்த பாதையால போகும் போது! நான் மேலே பார்க்கறதும் இல்லை இப்பல்லாம். இன்னிக்கு காலைல நான் அந்த வழியா வர்றேன், வக்… னு ரொம்ப சாப்டா ஒரு சத்தம். மேலே பார்த்தா சார் கிரில் பின்னாடி சார் ஒளிஞ்சிட்டு இருக்கார். வழக்கம் போல என்னை போக விட்டு கிரில் வழியா மூக்கை நீட்டி பார்க்கவும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு ப்ளையிங் கிஸ் கொடுத்தேன்.. மறுபடியும் வெக்கப்பட்டு ஒளிஞ்சுக்கிட்டார். நான் சிரிசிட்டே திரும்ப கிரௌண்ட் ப்ளோர்ல இருந்து லொள் லொள்னு பயங்கர சத்தம்! பயந்தே போனேன். அந்த வீட்டுக்கு வேலை செய்ய வந்தவர் பயப்படாதீங்க நாய் கட்டி இருக்குன்றார்.. எந்த நாய்னு பார்த்தா கீழே வெள்ளையா, குட்டியா ஒரு பாமரேனியன் என்னை கடிக்கறேன்னு முறைக்கிது!! கிழிஞ்சது !!! இவ்ளோ நாளும் எங்க லவ்வுல ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் இருந்தோம்..இப்போ வில்லனும் என்ட்ரி ஆயிட்டான்! இப்போ இந்த வில்லனை எப்படி பிரன்ட் பிடிக்கறது???

Making of romance novels

ஆங்கில ரொமான்ஸ் நாவல்களின் உருவாக்கம் பற்றி ஜாலியா ஒரு அலசல் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு தமிழ்ல எப்படி ரொமான்ஸ் எழுதறோம்னு uchu கண்டுபிடிக்கலைன்னா எப்படி?

மக்களே நல்லா கவனிங்க எழுதறோம்னு தான் போட்ருக்கேன். ஆகவே என்னை யாரும் அடிக்க உருட்டுக்கட்டையோட வரக்கூடாது!!!!

நமக்கு அனேகமா பெஞ்ச் மார்க் புத்தகங்கள் இல்லை என்று நினைக்கிறேன்!! தமிழ் சினிமா தான் நமக்கு மைண்ட்ல இருக்கு! அதிலும் எனக்கு இந்த படங்கள் சட்டுன்னு ஞாபகம் வந்திச்சு!

1. மௌன ராகம்

2. ரோஜா – அந்த கியூட் லவ் சீன்சுக்காக!

3. பூவே பூச்சூடவா? பாட்டி-பேத்தி

4. பிரியாத வரம் வேண்டும்

5. அலைபாயுதே

6. அமர்க்களம் – ஹீரோயின் குடும்பம் ஓவர் பாசமழை

7. கூட்டுக்குடும்பத்துல செல்லமா வளர்ற நாயகன் நாயகி அங்கங்கே வர்ற படங்கள்

8.பூவெல்லாம் உன் வாசம்- ரெண்டு பிரெண்ட்ஸ் குடும்பங்கள் , ரொம்ப குளோசா இருப்பாங்க.


இது நாம வேணும்னே பண்றதில்ல மக்கா..இந்த படங்கள் மனசுல இருக்கறதால நம்மை அறியாமலே பண்ணுவோம். எதை எப்படி கொடுக்கறோம். நரேஷன் ஸ்டைல், ரீடரை எப்படி பீல் பண்ண வைக்கறோம் எடுக்கற களங்கள், கதாப்பாத்திரங்கள் இதுல தான் எங்க வெற்றி இருக்குன்னு நினைக்கிறேன். காதல் கதைன்னா ரெண்டு பேர் அவங்க எங்கே போனாலும் திரும்பி வந்து சேரத்தானே வேணும்? இதுல ரொம்ப அதிகமா போக முடியாது.

இப்போ எப்படி ரொமான்ஸ் நாவல்களை செய்யறோம்னு பார்க்கலாமா?

எப்பவும் கதாசிரியர் மனசுல ஒரு கரு இருக்கும். அதுதான் மெயின் இன்க்ரீடியன்ட்!

கல்யாணத்துக்கு அப்புறமான காதல் தான் தீம் என்றால் நமக்கு எப்பவும் அலைபாயுதே தான். எப்படியும் பிரிஞ்சவங்க சண்டை போட்டு சேரத்தானே வேணும்! சோ அதை ஒரு கப் எடுத்து மெயின் இங்க்ரீடியன்ட் கூட சேருங்க. அப்புறம் மீதி காரக்டர்கள் ஸ்கெட்ச் போட்டுக்கங்க!

இப்போ நாம இன்சிடென்ட்ஸ் மூலமா நகர்த்தணும் கதையை.

இப்போ நாம பண்ணி வச்சிருக்கற பட்டரை எடுங்க.
இப்போ இருக்கற துரு துரு ஹீரோக்களுக்கு பெஞ்ச் மார்க் மௌன ராகம் கார்த்திக் தானே. மீதிப்பெர்லாம் அவருக்கு பிறகு வந்தவங்க. சோ ஹீரோ அந்த மாதிரி இருந்தா இன்னும் கலக்கலா இருக்கும். யங்ஸ்டர்ஸ்க்கு ரொம்ப புடிக்கும்! இந்த ஹீரோவை கௌதம் மேனன் டைப்ல பிரெஷா அழகா கியூட் லவ் பீலோட சொல்லறீங்களா? கையை கொடுங்க! நீங்க தான் இப்போ ட்ரெண்டு!!!!!

சோ மெயின் பாட்டர் தான் முக்கியம்! இப்போ இன்னொரு தீம் வச்சு பாட்டர் ரெடி பண்ணி வச்சிருக்கீங்க.

1. அந்த பாட்டருக்கு விக்ரமன் ஸ்டைல்ல செண்டிமெண்ட் ப்ளேவர் add பண்ணி சில ரைட்டர்ஸ் சொல்லுவாங்க.

2. GVM ப்ளேவர் – urban setting, cute love

3. பிரபு சாலமன் மைனா கயல் போல விலேஜ் காதல் ப்ளேவர்

4.KV ஆனந்த் ஸ்டைல்ல புது, பிரெஷ் ப்ளேவர்- இவருடைய கதைக்களங்களை சொன்னேன். பத்திரிகை, கடத்தல், மெடிகல் இப்படி பிரெஷா எடுக்கறது.

5. மணிரத்னம் ஸ்டைல்ல ஸ்டோரி ஸ்டைல் லீனியர், நான் லீனியர்னு அது ஒரு எக்ஸ்ட்ரா கோட்!!!

6. சிலர் பாலா ப்ளேவர் கூட add பண்ணுவாங்க மக்கா..அதுதான் அடித்தல் கடித்தல் கொல்லுதல்
இங்கே சில சமயம் அந்த ப்ளேவர் ரீடருக்கு தொற்றி நம்மை கொலை வெறியுடன் தொரத்தவும் கூடும்!

எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம் சொல்லிட்டேன். இன்னும் இருக்கலாம்! நீங்க மீதியை கண்டு புடிங்க!

மக்களே மேலே படிச்சதை பார்த்து விட்டு ஜாலியாக நான் போட்ட அலசல் தான் இது! யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை. காதல் என்ற எல்லையில் எதை எடுத்தாலும் ஏதோ ஒன்றின் சாயலை பொருத்திப்பார்க்க இயலும் என்ற எண்ணத்தில் தான் பகிர்ந்து கொண்டேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.

அழகழகான தீம்களில் அங்காங்கே நல்ல மெசேஜ்களோடு ரசிக்கத்தக்கதாக தரும் ஜாம்பவான்களும் இளைய எழுத்தாளர்களும் நிறைய உண்டு. ஏன் இங்கேயும் உண்டு! அவர்களின் கற்பனைக்கு நிச்சயம் நான் தலை வணங்குகிறேன்.

நானும் சமையலும் :p

chef-icon-creative-design-34937384
திருமணமாகி ஒருவருஷ நிறைவு நாள் அன்று என் தலையில் உதித்த ஒப்பற்ற பதிவு இது! 😀 இந்த ஒரு வருஷத்துல நான் என்னத்தை சாதிச்சேன்னா ஒரு மண்ணுமே இல்லன்னு என் மனசாட்சி சொன்னாலும் நம்பாம ஞாபகங்களை உருட்டினதுல யூரேக்கா!!! சமையல் தாங்க அது!

என்னையும் சமையலையும் கனெக்ட் பண்ண முடியலையா? சில விஷயங்கள் அப்படித்தாங்க.. எதிர்த்துருவங்கள் ஈர்க்கும்னு சொல்வாங்களே! அப்படி நானும் சிக்கிட்டேன் கிச்சன்ல!

நான் படிக்கும் போது பரபரப்பா ஓடித்திரிஞ்சதுல அம்மாக்கு ஹெல்ப்லாம் பெருசா பண்ணறது இல்லை. தேங்காய் பால் எடுத்து தர்றது, அப்புறம் பட்டீஸ்கு கறி வச்சு மூடுறது. ரோல்ஸ்க்கு ரஸ்க் போடுறது இதுலாம் தான் சமையல்னு நெனச்சு வச்சிருந்தேன்.. பிறகு காம்பஸ், வேலைன்னு போர்டிங்க்ல இருந்ததால அங்கயும் எனக்கு சமையல்னா என்னனு தெரிஞ்சுக்க முடியல.

ஆனா பாருங்க எனக்கு கல்யாணம் முடிவானதும் G கேட்டார். சமைக்க தெரியுமா? oh..நல்லாத்தெரியுமே, எங்க வீட்ல அம்மாக்கே டிப்ஸ் கொடுக்கற ஆளு நான்னு சொல்லிட்டேன்!

பொய் சொல்லணும்னு இல்லைங்க. எவ்ளோ பண்ணிட்டோம். ஒரு சமையல் என்ன அவ்ளோ பெரிய மாட்டாரான்ற கான்பிடன்ஸ் தான்!

என் மாமியார் இருக்காங்களே, அவங்க பெரிய கிச்சன் குவீன்! அப்பவும் நான் தயங்கலையே! அவர் மறுபடியும் கேட்டார் ஆர் யூ சுவர்? நான் எஸ்னு அசராம அடிச்சு விட்டேன். அங்க எங்களுக்குள்ள ஒரு ஆக்ரீமென்ட் வந்திச்சு. இங்க நான் உங்களுக்கு ஒரு FB ஐ ஒட்டியே ஆகணும்!

எங்க ரெண்டுகுடும்பத்துக்கும் பொதுவான ஒரு ஆண்ட்டி இருக்காங்க. அவங்களுக்கு நிறைய வரைட்டியா சமைக்கணும் எல்லாரையும் சாப்பிட வைக்கணும்னு ஆசை..எல்லா ஆசையும் நடக்குதா என்ன? அவங்க நினைக்கறது ஒண்ணு. வர்றது இன்னொண்ணு. வாயில வச்சுட்டு முழிச்சிட்டு உக்காந்திருப்போம். ஒரு தடவை நானும் தம்பியும் போனப்போ குலாப்ஜாமூன்னு சொல்லிட்டு ஒண்ணை கொடுத்தாங்க. சிப்பி சோகி தெரியும்ல அது போல பொரிச்ச உருண்டைக்கு வெளியே பாகு கல்லுபோல வெளியே இருக்கு..தம்பி போன் வருதுன்னு ஓடிட்டான்..இவங்க நான் நல்லா இருக்குன்னு சொல்றதுக்காக என் வாயையே பார்த்துட்டு இருக்காங்க! வேற வழி? நான் சாப்பிட்டதுமில்லாம, நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டு வந்தேன். வாழ்க்கைல நான் சொன்ன மோசமான பொய் அதுவா தான் இருக்கும்! என்னை போல G யும் அவங்களோட ஆப்பிள் ஸ்வீட்டால பாதிக்கப்பாட்டாராம். ஹாஹா

அக்ரீமென்ட் என்னன்னா கல்யாணத்துக்கப்புறம் நான் பண்ணதை சாப்பிடும்போது அது எப்படி இருக்குன்னு நான் பார்க்கறேன். அது மட்டும் மோசமா இருந்திச்சு, அந்த ஆண்ட்டி பேரை சொல்லிடுவேன்னு சொல்லிட்டார். எனக்கு பக்குன்னு ஆயிருச்சு! அவர் வாயில இருந்து அந்த பேரை வாங்காம விடணுமே. பரவால்ல விடாமுயற்சி விஸ்வரூப வெற்றின்னு என்னையே தேத்திகிட்டேன்! விதி என்னை சோதிச்சது. கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி தான் நான் எங்க வீட்டுக்கே போக முடிஞ்சது. அதாவது நான் சமையல் கத்துக்கவே இல்ல.

கல்யாணம் ஆச்சு.

மாமியார் வீட்ல அவங்களுக்கு ஒரு சிஸ்டர் உண்டு. என் சின்ன மாமியார்.மகா கலாய்ப்பு பேர்வழி. ரெண்டு பெரும் தான் சமையல் பண்ணுவாங்க. G கிட்ட உதார் விட்டாலும் எனக்குள்ள உதறல். ஹெல்ப்னா சமாளிச்சிடுவேன். சோலோ பர்போர்மான்ஸ் பண்ணனும்னா என்ன பண்றதுன்னு! கிச்சனுக்குள்ள போனேன். என்ன ஹெல்ப் பண்ணறதுன்னு கேக்க என் சின்ன மாமியார் ஒரு சட்டியை காட்டி இதை வெட்டி கிளீன் பண்ணிட்டு வான்னாங்க. நான் அவ்ளோ தானே பண்ணிடலாம்னு சட்டியை பார்த்தா சட்டிக்குள்ள சில பல நண்டுகள் உயிரோட இருக்கு. எனக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சுங்க. என் ரியாக்ஷனை பார்த்து அவங்க ரெண்டு பெரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஹப்பாடா நம்ம கலாய்ச்சிருக்காங்கனு அப்போ தான் எனக்கு உயிர் வந்தது. ஒரு வழியா அரட்டையடிச்சிட்டு வெஜிடபிள் கட் பண்ணி கொடுக்கறதோட மாமியார்வீட்ல அந்த வீக் நான் தப்பிச்சிட்டேன்.

அப்புறம் இங்கே வந்துட்டோம். வீடு எடுத்து எனக்கு கிட்சன் சாமானெல்லாம் வாங்கணும்னு சொல்ல என் மாமியார் அப்போவும் சந்தேகமாவே கேக்கறாங்க.என் முகத்துல அப்படியொரு தெய்வீக களை தெரிஞ்சிருக்கு. நான் தான் இல்ல சமைப்பேன்னு சொன்னேன். தேவையான சாமான்லாம் வாங்கும் போது பொம்மை வீடுக்கு சமையல் சாமான் வாங்கற போலவே எல்லாம் மினியேச்சரா இருக்கு! ரொம்ப சந்தோஷமாவும் இருந்திச்சு. மாமியார் போய்ட்டாங்க. எனக்கு யார்கிட்டயும் கேட்டு அவங்க சொல்றதை எந்த விஷயத்துலயும் பண்ண முடியாது. நானா கத்துக்கணும்.

வீக் எண்டு தான் சமையல் பண்ண முடியும் எனக்கு. அந்த வகைல நான் பண்ண முதல் சாப்பாடு முட்டை ரொட்டி. அடைன்னு சொல்வாங்களோ தெரியல. அது அம்மா செய்யும் ஞாபகத்துல பண்ணேன். நல்லாவே வந்திச்சு. G அந்த ஆண்ட்டி பேரை சொல்லல. பாவம்னு சொல்லாம விட்டாரோ தெரியல. அப்புறம் உப்புமா பண்ணேன். அது கண்சிஸ்டன்சி சரியா வராம கொஞ்சம் கொழ கொழன்னு வந்துருச்சு. ரவை போட்டு அட்ஜஸ்ட் பண்ணினாலும் எனக்கு அம்மா செய்ற போல வரல. ஒரு ஐடியா பண்ணேன். தொட்டுக்க நெட் பார்த்து செஞ்ச குழம்பை உப்புமா மேல ஊத்தி விட்டுட்டேன். G சாப்பிடும்போது குழம்பு சேர்ந்த உப்புமாவை தானே சாப்பிடணும்! தனியா அதை சாப்பிட்டா தானே டெஸ்ட் தெரியும்! என் டெக்னிக் புரியாம இனிமேல் எனக்கு கறி தனியா கொடுங்க, நான் வேணும்னா சேர்த்து சாப்டறேன்னுசொன்னார். ஐயய்யோ சாரி. இனிமேல் தனியா கொடுக்கறேன்னு சொல்லிட்டேன். மனசுக்குள்ள ஒரே சிரிப்பு. ஆனா அந்த வீக்கே உப்புமாவை பண்ணி பண்ணி எக்ஸ்பேர்ட் ஆயிட்டேன்.

அப்புறம் சோறு கறிகள்ல நான் சொதப்பல. எல்லாம் முதல் தடவையே நல்லா வந்திச்சு! G வாயில இருந்து பாராட்டும் வாங்கிட்டேன். பிட்டு இடியாப்பம்லாம் செய்ய ஆரம்பிச்சாலும் தோசைக்கு ரெடிமேட் மிக்ஸ் அவ்ளோ நல்லா வரல. ஒருநாள் சரின்னு உழுந்து வாங்கிட்டு வந்து ஊறவச்சு தோசை சுட்டா ஸ்கூல் போக அடம்பிடிக்கற குழந்தை போல கல்லுலையே இருக்கு! என்னடா பண்றதுன்னு முழிச்சேன். அம்மாக்கு ஒரு போன் போட்ருந்தா முடிஞ்சிருக்கும். ஆனா பண்ணல. என்கிட்டே இட்லி குக்கர் இல்லை அப்போ. என்ன பண்ணேன்னா ரைஸ் குக்கர் ஸ்டீமர்ல ஒரு பொலுத்தீன் ஸ்ப்ரெட் பண்ணிட்டு அந்த தோசை மாவை ஊத்தி ஸ்டீம் பண்ணேன். அது பெரிய இட்லி போல வந்திச்சு. என்ன இது? ன்னு கேட்ட G கு நெட்ல ஒரு ரெசிபி பார்த்தேன். இது ஸ்டீம்ட் தோசான்னு அடிச்சு விட எதைஎதையோ கிண்டிட்டு தர்றாளே பாவின்னு அந்த மனுஷன் புலம்ப ஆரம்பிச்சிட்டார். அப்புறம் அதை உதிர்த்தா சூப்பர் டேஸ்ட்ல உப்புமா பண்ணேன்!

இப்போ அழகான தோசை பண்ண கத்துகிட்டாச்சு. தோசை மேல வர்ற ஹோல்ஸ் மேல லவ்வே வந்தாச்சு. ரசிச்சு ரசிச்சு சுடுவேன்

எனக்கு பொறுமை ரொம்ப கம்மி! எக்சைட் ஆயிட்டேன்னா எதையும் ஒழுங்கா கவனிக்க மாட்டேன். அன்னிக்கு ஒருநாள் கொழுக்கட்டை பண்ண ஆசை வந்தது. அம்மாட்ட என்னென்ன தேவைன்னு கேட்டேன், எவ்வளவு தேவைன்னு கேக்கல. ஒரு குத்துமதிப்பா கொழுக்கட்டை பண்ணா வீட்ல இருக்கறது ரெண்டு பேர் ஆனா முப்பது கொழுக்கட்டை வந்திச்சு. G சொன்னார். ஒரு பாயை ரோட்ல விரிச்சுட்டு உக்காந்து வித்துடுன்னு! கர்ர்ர்ர். ஒருவழியா கீழ வீட்டு ஆண்ட்டி, அவங்க வீட்ட வேலை செய்யற கார்பெண்டர்மார் எல்லார்க்கும் அன்னிக்கு கொடுத்தேன். என்ன விஷேஷம்னாங்க, G கு பல்லு முளைச்சிடிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

காலிபிளவர் கறின்னா நான் தான் வரணும்னு எங்க வீட்டு கிச்சன் குவீன் சொல்ற அளவுக்கு நான் முன்னேறிட்டேன். பிட்சா, ஸ்வீட் கார பன், எல்லாமே பண்ண ஆரம்பிச்சாச்சு. பேகிங் ரொம்ப புடிக்குது. நெட்ல பார்த்து பார்த்து முன்னேறிட்டே போறேன். அம்மா நம்பவே இல்ல, இது நானான்னு! பட் ஆனானப்பட்ட என் தம்பியே எனக்கு சர்டிபிகேட் கொடுத்துல எதோ நானும் ஒரு அளவுக்கு சமைக்க ஆரமிசிட்டேன்னு ஒரு நம்பிக்கை!

ஆனா என்கிட்டே யாரும் ரிசிப்பி அண்ட் ப்ரோசீடியர் கேட்டாங்கன்னா முழிப்பேன். பிகாஸ் என் மனசுக்கு என்ன தோணுதோ அப்படியெல்லாம் பண்ணுவேன். ஒரே ப்ரோசீடியர் போலோ பண்ணது கிடையாது. இப்படித்தான் சில பல கிட்சன் ஹக்ஸ் கத்துட்டு இருக்கேன். அம்மா மட்டும் நான் சமையல் பண்ணும் போது இதுவரை பார்க்கல. பார்த்தா கண்டிப்பா டென்ஷன் ஆயிடுவாங்க.

பிட்டு பண்ணும் போது தண்ணி கொதிக்கணும். இடியாப்பத்துக்கு வார்ம் வாட்டர் வேணும்னு சொல்வாங்க. எனக்கு கொதிக்க வச்ச தண்ணி ஆறும் வரை பொறுமை கிடையாது. பாதி கொதிக்கற வாட்டரை மாவுல விட்டுட்டு கிளறிட்டு மீதிக்கு பச்சை தண்ணியை விட்டேனா எனக்கு மாவை பிசையும் போது கையும் சுடல, இடியாப்பமும் அழகா வந்திச்சு. இப்படியொரு முறை இருக்கோ இல்லியோ எனக்கு தெரியாது. ஆனா இதை நான் கையை சுட்டு கண்டு பிடிச்சேன்.

ஆனாலும் கிச்சன்ல UCHU காமடி குறையவே இல்லங்க! அன்னிக்கு பர்ஸ்ட் டைம் பூரி பண்ண ஆரம்பிச்சேன்/ எண்ணெய் குடிக்காத பூரிக்கு மாவை டைட்டா குழைக்கணும்னு நெட் சொல்லுச்சு. அப்படியே நானும் பண்ணேன். பூரி போடும் பொது மூணு லேயர்ல வரவும் என்னடா இதுன்னு குழம்பிட்டேன். நடுல தடிப்பா ஒரு லேயர் மாவு இருக்க ரெண்டு பக்கமும் உப்பிருக்கு. ரெண்டாவது பூரி, ரொட்டியே தான். இந்த மனுஷன் கண்ணுல பட்டா கலாய்ச்சிருமேன்னு எடுத்து ஒளிக்க ட்ரை பண்ண முன்னே அவர் பார்த்துட்டார். fb மெசேஜ்ல எனக்கு பூரி படமா வந்துச்சு. பூரின்னா இப்படித்தான் இருக்கும்னு. முடியல.. அப்புறம் ஒரு வழியா அடுத்த நாள் பண்ணிட்டேன்.

லாஸ்ட் வீக்னு நினைக்கறேன். எதுக்கோ கோகனட் மில்க் பௌடரை வார்ம் வாட்டர்ல போட்டு ஹீட் பண்ணினேன். கொஞ்ச நேரத்துல அது க்ரீம் போல வருது. அழகா வெள்ளையா..கோகனட் பௌடர் இப்படி வராதே ஏன் இப்படி வருதுன்னு நினைச்சாலும் அதை ரசிச்சேன். பளீர்னு மண்டைக்குள்ள பல்பு. uchu நீ எதை போட்டேன்னு! அப்புறம் தான் புரிஞ்சது. மைதா மாவை போட்ருக்கேன்!.. ரெண்டுமே ரெட் மூடி பாட்டிலா, பாவம் பாசே கன்பியூஸ் ஆயிட்டார். எல்லாத்தையும் கொட்டிட்டு சிரிச்சுட்டே இருந்தேன்.

இப்படி பல சொதப்பல்களை சந்திச்சாலும் இன்னும் எனக்கு கிச்சன் போரடிக்கல, முக்கியமான விஷயம் இன்னும் அந்த ஆண்ட்டி பேரை இன்னும் G சொல்லல அந்த வகைல சாதனை தானே மக்களே!

முகப்புத்தகத்தின் முகங்கள்- A fun analisis

eeee

பணம் , மகிழ்ச்சி, பொன், பெண் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு மனிதனின் உள்ளார்ந்த தேடலில் முதலிடத்தில் இருக்கிறது அடையாளம்! ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த கூட்டத்தில் somebody ஆக அறியப்பட விரும்புகிறான். அவனை அறியாமலே உழைக்கிறான். அந்த கூட்டத்தில் அவனது நகர்வுகள் எல்லாமே அதை நோக்கித்தான் இருக்கும்!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ராணித்தேனீ இருக்கிறது. அவன் சார்ந்த வட்டத்தில் அவன் ராணித்தேனீயாகவே இருக்கிறான். அந்த கூட்டத்தில் அவனுக்கு ஒரு தொழிலாளி, நண்பன் புகழ்பாடி எதிரி இப்படி பலவகைகள் இருக்கும். இப்படிச்சொல்வது பொருத்தமாய் இருக்கும். நான் ஒரு ராணித்தேனீ! எனக்கு தொழிலாளி, நண்பி, எதிரி தேனீக்கள் இருக்கின்றன. அதே சமயம் நான் வேறு சில தேனிகளுக்கு தொழிலாளி, நண்பன், எதிரியாகவும் இருக்கிறேன்.. இது மிகச்சிக்கலான வலையமைப்பு! இங்கே பாத்திரங்கள் சரியாக வரையறுக்கப்படவில்லை! என் பாத்திரத்தை சூழலே தீர்மானிக்கிறது!

ஆனாலும்
பாத்திரத்தாவல் நியாயமாக இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் இரு எதிரி ராணித்தேனிகளுக்கு நண்பனாய் இருப்பது சாத்தியம் இல்லை பொதுவில்!. ஆனால் இருக்கிறாய் என்றால் இருவரையும் திருப்திப்படுத்துகிறாய் என்று அர்த்தம்! அதாவது நீ நடித்துக்கொண்டிருக்கிறாய்!

இந்த சமூக வலைத்தளங்கள் இந்த ராணித்தேனீ மனநிலைக்கு ஆதரவாய் இருப்பதாலேயே கொண்டாடப்படுகின்றன!

அங்கே ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு தளம் இருக்கும். அங்கே அவன் தான் ராணி! அவனுக்கென்று அங்கே நண்பன் எதிரி, நடுநிலை என்று பல வட்டங்கள் உலாவும். அவற்றை தக்க வைக்க அவன் மிகக் கடுமையாய் உழைப்பான்!

முகப்புத்தகத்தில் உலவும் மனிதர்களை கவனித்து பார்த்தீர்களானால் சில வகைகளுக்குள் அடக்கி விடலாம்!

ஒரு வகை இருக்கும்…

யார் என்ன எண்ணுகிறார்கள் என்றே கவலைப்படாது! தான் படிப்பது, நினைப்பதையெல்லாம் ஸ்டேடஸ் ஆக போட்டுத்தள்ளும்… அவனுக்கு யார் தன்னை பின் தொடர்வது, இமேஜ் மெயின்டைன் பண்ணுவது பற்றியெல்லாம் கவலை கிடையாது. பெரும்பாலும் பொது விடயங்கள் தொழில் நுட்பம் பற்றி தான் இவன் பகிர்வான். இவனை நாம் அறிவாளி என்று புள்ளடி போட்டு அவன் ஸ்டேடஸ் ஐ சும்மா ஒரு லுக் விடுவோம்..முழுசா படிக்க மாட்டோம். ஆனால் ப்ளாக் பண்ணவும் மாட்டோம்! அவனுக்கு அரிதாக கமண்டுவது ரெண்டே வகை மக்கள் தான், ஒருவகை அவனை கடுப்பாகி கலாய்க்கும் மக்கள்.. இன்னொரு வகை அவனுடைய சிஷ்யப்பிள்ளைகள்! அவன் என்ன பேசுகிறானோ அது தொடர்பான மீதி விஷயங்களை தேடி இதையும் பார் என லிங்கை வாரி வழங்கி அவனுக்கு எண்ணையாய் நிற்பார்கள். சில சமயம் நாம் கலாய்ப்பு கமன்ட்களை லைக்கி சிஷ்யப்பிள்ளைகளுக்கு விழிகளை உருட்டுவோம்!

அடுத்த வகை 

உலக விடயங்களில் ஆர்வமுள்ள தீர்கமான சிந்தனையாளர்கள். அதே நேரம் கலாய்தத்தலிலும் வல்லவர்கள். எப்போதும் கலகலப்பான ஸ்டேடஸ் உடன் வாழ்வார்கள் அப்பப்போ கிளம்பும் சீரியசான பேச்சிலேயே இவர்களின் அறிவாளித்தனம் தெரியும்! நாம் மிரள்வோம். கலாய்த்தல், பொது அறிவு என்ற இரண்டு குழுவும் இவர்களுக்கு பின்னே திரளும். நமக்கு இவர்கள் தளத்தில் பொழுது சூப்பராக போகும். ஒருவேளை நாம் இவர்களுக்கு அவ்வளவாக அறிமுகம் ஆகாதவர்கள் எனிலும் அவர்களை போலோவுவோம்! லைக்குவோம். கண்டிப்பாக கமண்ட மாட்டோம். அவர்களின் ஆளுமையில் நமக்கு லேசான பயம் இருக்கும். இவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பது நம் அன்றாட வேலையாக இருக்கும்.

அடுத்த வகை

ஒரு விடயம் நடக்கும் போது அதை இன்னொருவன் ஸ்டேடஸ் இல் பார்த்து தான் அப்படியொரு விடயம் இருக்கிறது என்றே இவனுக்கு தெரியும். உடனே பார்ட்டி ஓடிப்போய் அந்த விடயத்தை தேடி ஏதோ அதைப்பற்றி முன் பின் சகலமும் தெரிந்ததை போல ஸ்டேடஸ் போட்டு விடும்! உதாரணமாய் யாரோ ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து வைரல் ஆனால் பயபுள்ளை அந்த மனுஷனை முன்னே பின்னே பார்த்திருக்காது. ஆனால் ஓடிப்போய் உருகி உருகி வாழ்த்து சொல்லும்! ஆனால் பாருங்கள் இந்த வகைக்கு கொஞ்சம் பின்தொடர்வோர் இருப்பார்கள். இரண்டு காரணம் ஒன்று அவனது வாய் ஜாலத்தில் மயங்குவது, இன்னொன்று அவனை பயன்படுத்தி தாங்கள் பிரபலமாக எண்ணும் மகா கேடிகள்!
இந்த வகை பொதுவாக சில விடயங்களை கைவசம் வைத்திருப்பார்கள். உதாரணம் சுஜாதா, கல்கி, டாவின்சி போன்ற கொஞ்சம் பிரபலமான கேடயங்களை அவைகள் என்றால் தங்களுக்கு உயிர் போல காட்டிக்கொண்டு நானும் ரவுடி தான் என்று நிரூபிப்பார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கும் மேலே சொன்ன வகைக்கும் வித்யாசம் புரியாது. ஆனால் போகப்போக இவர்கள் நான் பேசிய ட்ரெண்டில் போவது தெளிவாக புரியும். இவர்களை நாம் ப்ளாக் மட்டும் தான் செய்வோம். ஏனெனில் இவர்களின் உண்மை முகம் புரிந்தால் இவர்களை சகித்துக்கொள்வது மிகக்கடினம்.

இன்னொரு வகை இருக்கும்…

இவர்கள் உண்மையில் மேற்சொன்ன மூன்று வகையிலும் வர மாட்டார்கள். அவர்கள் தங்களை பெரிதென்று காட்டிக்கொள்ள எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். தங்களுக்கு தெரிந்ததை மட்டுமே வைத்து ஒட்டிக்கொண்டிருப்பார்கள், தங்கள் அளவில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அவர்களை தக்கவைக்க தங்களால் ஆன முயற்சியை செய்வார்கள். கிட்டத்தட்ட அவர்கள் தளம் கட்டப்பஞ்சாயத்து தளம் போலவே இருக்கும். இவர்கள் பொதுவாக நம் இயல்புக்கும் எல்லைக்கும் அப்பாற்பட்டவர்கள். இவர்களோடு நாம் நட்பாகவும் மாட்டோம் லைக்கவும் மாட்டோம், கமண்டவும் மாட்டோம் ஆனால் தடயமே இன்றி அவர்கள் தளத்தை தவறாமல் பார்த்து நமக்குள் கலாய்த்துக்கொள்வோம். நமக்கு போர் அடிச்சா அவங்க எதுவும் ஸ்டேடஸ் போடலையா என்று தேடும் அளவுக்கு நமக்கு சிறந்த ஊறுகாயாக விளங்குவார்கள்!

அடுத்த வகை 

நம்மை போலோவும்.. நாம் என்ன செய்கிறோமோ அதையே காப்பி பண்ணி தானும் செய்யும்..சில சமயத்தில் நம்மை காப்பி பண்ணுமளவுக்கு நம்மை பெரியவர்களாக நினைக்கிறார்களா என்று நாம் மகிழ்ந்து போனாலும் போகப்போக கடுப்பாகி இவர்களும் ப்ளாக் தான்!

அடுத்த வகை

fake ID வைத்து ஆள் பிடிப்பவர்கள். நம்மில் பலர் மணந்து பிடித்து விடுவோம்..ஆகவே இவர்களை பற்றி அவ்வளவாக பயம் இல்லை. சகலரும் அவதானமாக இருக்க வேண்டிய வகை இது..

அடுத்த வகை

காலையில் எழுவது முதல் பாத்ரூம் போவது வரை கல்வெட்டில் பொறிப்பது போல டைம் லைனில் பதிக்கும்! காலை வணக்கம் இரவு வணக்கம் என்று வணக்கம் சொல்லியே காலத்தை ஓட்டி விடுவார்கள்! இவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை டைம் லைனிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம்..அந்தளவுக்கு அதை ஒரு டயரி போல மெயின்டெயின் செய்வார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு தோற்றமளிப்பவது சதா தொணதொணக்கும் ரேடியோ போலத்தான். அப்பப்போ நல்ல பாடல் வந்தாலும் தொணதொணப்பு காரணமாக நாம் சேனல் மாற்றி விடுவதால் அது கேளாமலே போகும்! இவர்கள் அநேகம் acquaintance லிஸ்டில் தான் இருப்பார்கள்!

அடுத்த வகை 

முகப்புத்தகம் ஆரம்பித்தது மட்டும் தான் வேறு எந்த வேலையும் செய்ய மாட்டான். எந்த போஸ்டும் வராது..அப்பபோ அவன் பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்தி போயிருப்பார்கள். சும்மா பெயருக்கு அவனுக்கும் ஒரு தளம் இருக்கும். ஒரு தேவைக்கு மெசேஜ் போட்டாலும் ஆறு மாசம் கழித்தே ரிப்ளை வருவதால் கடுப்பாகி பொது ஜனங்கள் இவர்களை தங்கள் லிஸ்டில் சைலென்ட் ஆக ஏதாவது லிஸ்ட்டுக்கு மாற்றி விடுவார்கள்.

அடுத்த வகை ரொம்ப ஆபத்து மக்களே 

ஸ்லீப்பர் செல்ஸ்! இவர்கள்.. கலகலப்பாக இருப்பார்கள், இவர்களுக்கென்று டேஸ்ட் இருக்கும். மேற்குறிப்பிட்ட அத்தனை வகையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை எடுத்த வண்ணம் திரை மறைவில் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் உள் பெட்டியில் சகல கலாய்த்தல்களையும் நிகழ்த்துவார்கள். இவர்கள் கமண்ட்ஸ் பொதுவாக சூப்பர் ஒரு ஸ்மைலி அல்லது பட்டுக்கொள்ளாமல் ஒரு சிரிக்க வைக்கும் ரிப்ளை இப்படித்தான் இருக்கும். இவர்களை நம்பி மற்ற வகையறாக்கள் பேசி வைக்கும் போது அதை அழகாக கேட்ச் பண்ணி தங்களுக்குள் ஓபன் செய்து சிரித்து மகிழ்வார்கள். மிக தந்திரமானவர்களும் புத்திசாலித்தனமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நட்பு வட்டம் மிக அதிகமாய் இருக்கும்! அதற்கு காரணம் உங்களை நன்றாக புரிந்து கொண்டு ஊறுகாயாக அவர்கள் பொழுதை போக்குவதற்காக கூட இருக்கலாம்! உஷார் மக்களே! ஆனால் ஒரே ஒரு விடயம் நம்மில் பலர் இந்த வகையறாவில் தான் வருவோம். அனைவரையும் மிகச்சரியாக எடைபோட்டு அந்தந்த இடத்தில் வைத்து தங்களுக்கு மிக நெருங்கியவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் செய்வதை நாம் தவரென்று கூறி விட முடியாது. எந்த விடயம் பொது வெளிக்கு வருகிறதோ அதை பிறர் பேசுவது சகஜம் தானே!

 

மனோதைரியம் யாருக்கு அதிகம்?ஆணுக்கா பெண்ணுக்கா?

பெண்மையின் நீயா நானா Talk show வில் இடம் பெற்ற என் வாதம்.

th.jpg

முதலில் மனோ தைரியம் என்பது என்ன? ஒரு நேர்மையான செயலை செய்து முடிப்பதற்கான உறுதி, வெற்றி அடையும் வரை தொடர்ச்சியான முயற்சியை செய்யக்கூடிய பொறுமை, அந்த செயலின் விளைவை அது நல்லதோ கெட்டதோ, தானே ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வு இத்தனையையும் இணைத்த கூட்டு இயல்பே மனோ தைரியம்! கெட்ட அழிவுக்குரிய செயலை செய்பவனை/ளை மனோதைரியம் மிகுந்தவனாக /ளாக நாம் குறிப்பிடுவதில்லை.

அடுத்ததாக ஆண் பெண் மனோ தைரியத்தை விஞ்ஞானம் எப்படி பார்க்கிறது? சமீபத்திய விஞ்ஞான ஆய்வு முடிவுகள் ஆண் பெண் இருவருக்கும் விஞ்ஞான ரீதியில் உளவியல் சக்தி சரி சமம் அதாவது மிகக்குறைந்த வேறுபாடுகளே உள்ளன என்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றன. அதை யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள் யாருக்கு அந்த தேவை அதிகம் எழுகிறது என்பதை பொறுத்து அங்கே மனோ தைரியம் வெளிப்படுத்தப்படுகிறது! ஆண்களா பெண்களா அப்படி அந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்று கேட்டால் நான் பெண்கள் பக்கமே! பெண்கள் தான் ஆண்களை விட மனோ தைரியத்தை கற்பனைக்கெட்டாத அளவில் வெளிப்படுத்துகிறார்கள். காரணம் அவர்களே இந்த உலகில் அதிகம் ஒடுக்கப்படுபவர்கள். ஆண்களுக்கு பொதுவாக இந்த உலகம் சாதகமானதே, ஆகவே அவர்கள் மனோ தைரியத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை பெண்களை போல எழுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லேனா எழுதுகிறார் “அவசியமே ஒரு மனிதனுக்கு ஆற்றலை தருகிறது! அகத்தியர் கடலைகுடித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவரால் குடிக்க முடிந்தது. நமக்கும் அந்த அவசியம் ஏற்பட்டால் நாமும் குடித்தே தீருவோம்.” அவசியம் இல்லாத இடத்தில் நம்மிடம் ஆற்றலோ சக்தியோ வெளிப்படாது. ஆண்களும் அப்படியே!

சமுதாயக்கட்டமைப்பு பெண்களை நிறைய கட்டுப்பாடுகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு சிறிய சிறிய செயல்களுக்கும் அவள் போராட வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களை பாருங்கள்! கல்விக்கு கூட உயிர் கொடுக்கும் நிலை பெண்களுக்கு! அங்கிருந்தும் ஒரு மலாலாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

சில குடும்பங்களில் தான் நினைத்ததை சமைப்பதற்கு கூட சில பெண்களுக்கு மனோ தைரியம் தேவைப்படுகிறது காரணம் அவர்களது குடும்ப அமைப்பு அவர்களுக்கு அவ்வளவு சுதந்திரம் தருவதில்லை. ஆண்கள் அப்படியல்ல மக்களே..இந்த சமுதாய அமைப்பு காலம் காலமாக அவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கிறது. ஆண்கள் உயிரைக்கொடுத்து என்ன தான் செய்தாலும் சமூகம் அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும் அவர்களின் இடத்தில் ஒரு பெண்ணோடு ஒப்பிடும் போது!

லியாண்டர் பயஸ் உம் கஷ்டப்பட்டார். சானியா மிர்சா வும் உழைத்தார். இருவருக்கும் கிடைத்த விமர்சனங்கள் ஒன்றா மக்களே?அவரின் திறமை அடையாளம் காணப்படும் வரை தான் ஒரு ஆண் இற்கு கஷ்டம் இருக்கும். அதன் பின் உலகம் கொண்டாடும். பெண்ணோ திறமையை நிரூபித்த பின்னும் கூட தீக்குளிக்க வேண்டும்!சானியா அணியும் உடை கூட கலாசாரக்காவலர்களால் கிண்டல் செய்யப்பட்டது!எத்தனை கல்வீச்சுக்கள்! குணத்தை பற்றிய தவறான பரப்புரைகள், இத்தனையும் தாண்டி சாதிப்பதற்கு அந்த பெண் எவ்வளவு மனத்தைரியம் கொண்டவளாயிருக்க வேண்டும்?

ஆனாலும் இத்தனை விடயங்களும் சாதகமாக இந்த பூமியில் ஆண்களுக்கு இருக்கும் போது ஆண்களின் தற்கொலை விகிதம் பெண்களோடு ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் பிட்டு வைக்கின்றன. பழைய காலம் என்றால் ஆண்களின் அதிகமான பொறுப்பு அழுத்தம் என்று சொல்லலாம். இந்த வருடம் அமெரிக்காவில் இது இருபது மடங்கு என்கிறது உறுதிப்படுத்த படாத புள்ளி விபரம்! ஆகவே ஆண்களின் பொறுப்பு வாதம் இங்கே அடிப்பட்டு போகிறது! தங்களுக்கு அவ்வளவு தூரம் சாதகமற்ற உலகிலும் பெண்கள் மனோதைரியத்தொடு போராடுகிறார்கள் ஆண்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவிலேயே வாழ்வை முடித்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் எதுவுமே இருக்க முடியாது.

நமது காவியங்களிலும் கூட தமயந்தியை விட்டு ஓடிப்போன நளன் இருக்கிறான். அதே நேரம் மனோ தைரியத்தோடு தீக்குளித்த சீதையும் இருக்கிறாள்.

ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு அதிகம்.பாரத்தை தூக்கி தோளில் சுமக்கிறார்கள். அழாமல் உணர்ச்சிகளை அடக்கி தைரியமாக இருக்கிறார்கள் என்றெல்லாம் வாதிட முடியும்.

குடும்பத்தலைவன் என்று தன்னை வடிவமைத்தது ஆண், அவன் போய் மூட்டை தூக்கினாலும் அந்த சமுதாயம் எதுவும் சொல்லாது. ஒரு பெண் அதை நினைத்து பார்க்க முடியுமா? உடலியல் மனவியல் என்று அந்த பெண்ணுக்கு எத்தனை கஷ்டம் வரும்? அதையும் தாண்டி சில பெண்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

விதவை தாய் குழந்தையோடு தனியே இருக்கிறாள் என்று வையுங்கள். அதே போல ஒரு தந்தை. இருவரும் குழந்தையை ஊர் மெச்ச வளர்கிறார்கள். இதில் யாருக்கு மனோ தைரியம் அதிகம்? அந்த தாய்க்குத்தானே? எத்தனை கழுகுகள் உடல்பசியில் அவளை சுற்றி வட்டமிட்டிருக்கும்? அவளது ஒவ்வொரு நடத்தையும் ஊரால் அலசப்பட்டிருக்கும்? அத்தனையையும் தாண்டி தான் அவள் அந்த குழந்தையை வளர்க்கிறாள். சந்தர்ப்பங்கள் சாதகமாக இருக்கும் போது அங்கே மனோ தைரியத்துக்கு அவசியம் இல்லை மக்களே. இப்போதைய இந்த உலகில் ஆண்களுக்கான சந்தர்ப்பங்களே சாதகமாக இருக்கிறது. அதனாலேயே ஆயிரம் விண்வெளி வீரர்களில் அரிதாக வரும் கல்பனா சாவ்லாக்கள் கொண்டாடப்படுகிறார்கள்!

குடியை பற்றி பலர் விவாதம் செய்தார்கள், அது இந்த விவாதத்தில் நிச்சயம் கருத்தில் எடுக்கப்படவே முடியாதது. குடி என்பது ஒரு போதை. ஆல்கஹோல் மனிதனின் உடலில் நுழைந்தால் அது அவனை அடிமைப்படுத்தி சுயநினைவை மழுங்க வைத்து சகல நாசங்களுக்கும் உட்படுத்தும். அதற்கு ஆண் பெண் பாகுபாடு கிடையாது.

எம் நாட்டில் ஆண்கள் அதிகம் வெளியே செல்பவர்கள், அத்தோடு சமூக கட்டுப்பாடுகள் என்பவற்றால் பெண்களுக்கு அது அடையப்படாத பொருளாக இருக்கிறது, ஆண்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தும் சந்தர்ப்பம் அமைவதால் அடிமையாகிறார்கள். அவ்வளவே. சில மேல் நாடுகளில் ஆண் பெண் இருவருமே சரி சமமாக குடிப்பார்கள். மது எப்போதுமே சமத்துவமாய் தனது வேலையை பெண் உடலிலும் காட்டும்! இங்கே பெண் ஆணை திருத்துவது என்பதெல்லாம் படு முட்டாள் தனமான வாதம். ஏனெனில் மது ஒரு சமூக பிரச்சனை..ஒரு அடிமைத்தனம், மனோ தைரியத்துக்கும் அதற்கும் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.

கணவன் மதுவின் அடிமை என்றால் அங்கே மனைவி முதலில் அதை நிறுத்த முயல்வாள். அது முடியாவிட்டால் மேல் நாடுகளில் சுலபமாக பிரிந்து போய் விடுவார்கள். நம் நாடுகளில் என்றால் அந்த பெண்ணை வேலியில்லா பயிராக பல எருமைகள் மேய வரும், அதை தவிர எத்தனை பிரச்சனைகள்? அதற்கு அந்த மது அடிமையின் தொல்லையே பரவாயில்லை என்று குடும்பத்திற்காக தாங்கிக்கொள்ள முயல்வார்கள். அது மனோ தைரியத்தின் உச்சம். அங்கே குழந்தைகளின் கல்வி, குடும்ப பாரம், தன் குடும்பத்தின் பாதுகாப்பு பிறகு கணவனின் துன்புறுத்தல்கள் இத்தனையும் ஒருத்தியாய் அவள் தலையில் விழுகிறது. அத்தனையையும் தாங்கிக்கொள்கிறாள். தன்னால் முடிந்தவரை பிள்ளைகளை ஆளாக்குகிறாள். தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள் என்று நாம் கேள்விப்பட்டதில்லை! இந்த பெண் எந்த வகையில் கல்பனா சாவ்லாவை விட குறைந்து போய் விட்டாள்? அப்பாக்கள் தற்கொலை செய்யலாம். அம்மா தற்கொலை செய்வது மிகக்குறைவு!

மாறாக தன் விருப்பத்திற்கு மாறாக குழந்தைகள் திருமணம் செய்தாலோ, மனைவி ஓடிப்போனாலோ கடன் அதிகரித்தாலோ அனைவரையும் நடுரோட்டில் விட்டு தான் மட்டும் பிரச்சனையில் இருந்து உயிரை விட்டு தப்பித்துக்கொள்ளும் தந்தைமாரை நாம் கண்டிருக்கிறோம். பெரும்பாலான ஆண்களுக்கு தூணாக ஒரு தாயோ, மனைவியோ, தோழியோ தேவை. தன்னந்தனியாக ஜெயித்த ஆண்கள் இருக்கிறார்கள் ஆனால் மிகக்குறைவு.அப்படி தன்னந்தனியாக போராடும் தந்தையர்கள் இல்லைஎன்று சொல்லவில்லை. சந்தர்ப்பங்களும் அவசியமும் கூட அவர்களுக்கு குறைவே. ஆனால் தன்னந்தனியாக போராடி ஜெயித்த பெண்களை ஒவ்வொரு தசாப்தத்திலும் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

சின்ன விஷயத்தையும் பெரிது படுத்துகிறார்கள். புரணி பேசுகிறார்கள் என்று குற்றம் சுமத்தாதீர்கள்! நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? நானுமப்படி இல்லை. இருக்கிறார்கள் தான் ஆனாலும் அதையும் மீறி அவர்கள் சாதனை அதிகமாக இருக்கிறது. கூனி ராமாயணத்தில் என்றால் சகுனி மகா பாரதத்தில்!

அழுகிறார்கள் என்பது அவர்கள் குற்றமல்ல, உணர்வுகள் லிம்பிக் பிரைன்( limbic brain) ஆல் ஆளப்படுவது! அதை பெண்களுக்கு பெரிதாகவும் அடிக்கடி அவர்களின் சிந்தனை பகுதியோடு அதை இடையிடுமாறும் படைத்த கடவுளின் குற்றம்!!!ஆண்கள் ஏன் அந்த அளவுக்கு அழவில்லை அடக்கி கொள்கிறார்கள் என்றால் அவர்களால் நினைவுகள் உணர்வுகளைபெண்கள் அளவுக்கு உணர முடியாது. இது ஒரு சாதனை குணமா மக்களே? சமமாக இருந்து தைரியத்தோடு அடக்கிகொள்கிறார்கள் என்றால் சரி நீ தைரியம் மிக்கவன் என்று நான் ஒத்துக்கொள்வேன். அவர்களால் அந்த அளவுக்கு உணரவும் முடியாது ஆனால் அதிகம் உணர்ந்தவர்கள் போல தற்கொலையையும் அதிகம் செய்கிறார்கள். இது ஒன்றே போதும் ஆண்களின் மனதைரியத்தை சொல்ல!

ஆகவே இறுதியாக விஞ்ஞானம் ஆண் பெண் இருவருக்கும் மனோ சக்தி சமம் என்று சொன்னாலும் ஆண்களுக்கு மனோதைரியத்தின் உச்ச அளவை வெளிப்படுத்த அவசியம் இல்லை எனவும் அப்படியே ஏற்பட்டாலும் அவர்களின் தற்கொலை வீதங்கள் ஏனோ அதை அவர்கள் உச்ச அளவுக்கு பயன் படுத்துவது இல்லை எனவும் தான் காட்டுகின்றன.

ஆனால் பெண்ணுக்கோ இப்போதைய சூழல் சின்ன சின்ன சாதனைகளுக்கு கூட ஏகப்பட்ட மனோ தைரியம் தேவை என விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெண்களின் சாதனை வீதம் தேங்கி நிற்கவில்லை. பல்வேறு துறைகளிலும் அவர்கள் சாதித்து கொண்டே செல்கிறார்கள்! மனோ தைரியத்தை ஒப்பிடும் சூழலையும் சமூக கட்டுக்களையும் கவனத்தில் கொள்ளுமாறு தயையுடன் கேட்டுக்கொண்டு மனோதைரியம் பெண்ணாலேயே அதிகம் வெளிக்காட்டப்படுகிறது என்று அடித்து கூறி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்!

நானும் தமிழும்

பெண்மையின் தமிழ் புத்தாண்டு போட்டிக்காக!….

தமிழ்2

நான் தமிழன்/ தமிழச்சி என்றெண்ணி பெருமை கொள்ளும் தருணங்கள் வீதியில் வரும் திருப்பங்கள் போல! வந்து கொண்டே இருக்கும்!

நான் புரிந்து கொள்ளும் வயதுக்கு வந்தபோது அப்பா தமிழைப்பற்றி தந்த அறிமுகத்தில் ஆரம்பித்தது அது! இத்தனை ஆண்டுகள் பழமையான மொழி, என் அப்பா எனக்கு தந்ததை நான் உனக்கு தருகிறேன் என்று சொன்னபோது நான் என்னப்பா செய்யவேண்டும்? என்று கேட்டேன், எதுவுமே செய்யாமல் ஒப்படைக்க வேண்டியவர்களிடம் அப்படியே கொடுத்தாலே போதும் என்று சொன்னார் அப்பா!

உலகப்பொதுமறையென திருக்குறள் கற்கும் போது, தமிழ்த்தாயின் ஐந்து ஆபரணங்களாம் ஐம்பெரும் காப்பியங்களையும் அறிந்த போது, ஒளவையின் பாடல்களை கற்ற போது பழைய மன்னர்கள் வரலாறுகளை கேட்டபோது விஞ்ஞானம் காலம் கடந்து அறிந்தவைகளை நம் முனிவர்கள், பழந்தமிழ் அறிஞர்களின் பாடல்களில் கண்ட போது, தமிழின் சாதனையாளர்களை பற்றி கேள்விப்படும்பொழுது அந்த தமிழன்னைக்கு நானும் மகளென பிறந்தேன் என்று புல்லரித்து போயிருக்கிறேன். இன்னும் போய்க்கொண்டே இருக்கிறேன்.
சிறுமியென நான் வளரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் கலை கலாச்சார, கட்டுமான சிறப்புக்களை அறியக்கிடைத்தபொழுதுகளை சிறப்பாக சொல்லலாம்.

கொஞ்சம் வளர்ந்ததும் தற்கால இலக்கிய ஆசிரியர்கள் கதாசிரியர்கள் வர்ணனையில் கொஞ்சும் குமரியாக அவளை கண்டு ரசித்து காதலிக்க ஆரம்பித்தேன். சாண்டில்யன் வர்ணனைகளில் தமிழன் வீரத்தோடு இணைந்து, மன்னர்களின் கனவுக்கன்னி போல், கல்கியின் மொழிகளில் சேலை கட்டி என்னை கிறங்கடித்தவள் பின்னாளில் சுஜாதா கைகளில் நாகரிக மங்கையாக என் மனம் மயக்கினாள். பெயர் சொல்ல ஆரம்பித்தால் நீண்டு கொண்டே போகும், அத்தனை ஆசிரியர்கள் அத்தனை வேடங்களை அந்த சிங்காரிக்கு வழங்கி என்னை கனவுலகில் சிதறடிக்க வைத்தனர். ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் என் தமிழ் என்ற அந்த உரிமை உணர்வும் பாரதியின் மொழிகளும் என்றும் என்னிடம் துளிர்க்கும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!

என் பதினான்காவது வயதில் என் மனம் மயக்கிய மங்கைக்கு முதலாவது காதல் கடிதத்தை எழுதினேன்! அதாங்க கவிதை! என் கவிதைக்கு முதல் ரசிகை எப்போதுமே நான் தான். மனதில் படும் எண்ணங்களை வார்த்தைகளை கோர்த்து தட்டி செதுக்கி மாலையாக்கி மீண்டும் சரி பார்க்கும் போது உண்மையை விட பலமடங்கு அழகாய் அந்த மாலை ஜொலிக்குமே! அந்த உணர்வை அனுபவித்து பார்த்திருக்கிறீர்களா? பேரானந்தம் என்பது அதுதாங்க! என் செல்லத்தமிழ் ஒன்றினால் மட்டுமே அது முடியும்! உலகின் எந்த மொழியாலும் இத்தனை சுவையை கொடுக்கவே முடியாது! தமிழச்சிடா! ஹ!! என்ற பெருமித தருணங்கள் அவை!

இன்னும் கொஞ்சம் வளர்ந்த போது உற்ற நண்பன் என்ற நிலைக்கு என் தமிழ் மாறியது! இன்னொரு மொழியோடு விரும்பியோ விரும்பாமலோ போட்டியிட நிர்பந்திக்கப்பட்டோம். ஒற்றை தமிழன் எதிலேனும் ஜெயித்தாலும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டாடும் மனநிலைக்கு மாறினோம். ஒற்றை தமிழனின் வேதனைக்கு மொத்த தமிழர்களும் கண்ணீர் விட்டோம்!

“தமிழனாய் பிறந்தது குற்றமா?” தமிழன் என்ற பெயருக்காக எம் தமிழுக்காக இத்தனை வேதனைகளையும் அனுபவித்தோம் உற்ற நண்பனுக்காய் உயிரை கொடுப்பது போல், தமிழின் மேல் அதிக உரிமை கொண்டது போல், துன்பத்தின் போது விலகி ஓடாத நண்பனின் மேல் நட்பு அதிகமாகும் அல்லவா? தமிழ் இன்னும் என் மனதோடு இறுகிப்போனது! போகட்டும் அதை விடுங்கள்

நண்பன் என்பது துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் துணை அல்லவா? நான் கற்றது இன்னுமொரு மொழி பேசும் பிரதேசத்தில். அவர்களை கோபமூட்டவும் சிரித்துக்கொண்டே அவர்களை திட்டவும் விரிவுரை மண்டபத்தில் துண்டுசீட்டாகவும் வேண்டுமென்றே தவறாக கற்றுக்கொடுக்கவும் நாங்கள் உபயோகிப்பது தமிழே! அங்கெல்லாம் எங்கள் சிரிப்புக்களில் நண்பனாய் கலந்து நின்றிருக்கிறது தமிழ்!

வெறும் காகிதத்திலேயே இவ்வளவு சுவை இருந்தால் இசையோடு சேரும்போது என்ன ஆகும்! ரஹ்மானில் ஆரம்பித்துத்தான் நான் இளையராஜாவுக்கு சென்றேன். இரவுகளில் என்னோடு இருப்பதால் என் மனைவி என்று சொல்லலாமா? முக்கியமான தருணம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். மற்ற மொழி பிரதேசம் ஒன்றில் பஸ் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். கசமுசா என்ற பைலா சத்தங்களுக்கு இடையில் திடீரென்று காதல் ரோஜாவே ஹம்மிங் வந்தது. அவ்வளவு அமைதியாகிவிட்டது பஸ்! இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து வேண்டுமென்றே வரிகளை முணுமுணுத்து தமிழிச்சிடா என்று காட்டிக்கொண்டது பசுமையாய் நினைவிருக்கிறது! ஹா ஹா இசைப்புயல் ஆஸ்கார் மேடையில் “ எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று சொன்னபோது புல்லரிக்காத தமிழன் ஒருவன் இருக்க முடியுமா? தமிழிசை என்ற மனைவியை இறக்கும் போதும் பிரிவேனோ என்னவோ?

வளர்ந்து முடித்து இருபதுகளின் பிற்பகுதியை தொட்டிருக்கிறேன். பேசத்தொடங்கும் குழந்தைகளின் வாயில் தமிழை திருத்திக்களைத்து என் வருங்கால சந்ததியிடம் தமிழை அவர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்காத வகையில் எவ்வாறு வளர்த்தெடுக்க போகிறேன் என்று வருத்தமாய் எண்ணிய இந்த வருடத்தின் ஒரு நாளில்தான் புரிந்து கொண்டேன், அம்மா, காதலி, நண்பி , மனைவியாய் தமிழ் எனக்கு இருந்தது போய் இப்போது நான் தமிழுக்கு அன்னையாகி இருக்கிறேன் என்று! நினைக்கவே இனிக்கிறது! என் மழலை முதல் சொல்லை பேசும் போது ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களிலும் தமிழுக்கு அன்னையாகி பின் கண்டிப்பான பாட்டியாகி அப்படியே ஒருநாளில் இறந்தும் போவேன்.
எப்படி எங்கே பெருமைப்பட்டேன் என்ற வரையறைகள் என்னிடம் இல்லை. என்னோடு உணர்வாய் இருப்பதை சுவாசம் போல இயல்பாய் நடப்பதை என் தமிழைக்குறித்த என் பெருமையை எப்படி சொல்வேன் நான். இப்போதும் கூட எழுதியதை திரும்பத்திரும்ப நானே படித்து தமிழேண்டா சொல்லிக்கொண்டு அடுத்த வேலைக்கு செல்லப்போகிறேன்!

தமிழை தமிழின் கலை கலாச்சாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது?

நாம் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில பயன்பாட்டை நிறுத்துதல் என்பது எங்கள் தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமானது. தமிழ் மொழி மிக இறுக்கமான கட்டமைப்பை கொண்டது. வரும் காலம் கணனி மற்றும் விண்வெளி யுகமாக இருக்கப்போகிறது. விஞ்ஞான சொற்கள் தமிழ் மொழியில் இல்லை. புதிதாக நாம் கண்டு பிடிப்பது கர்ண கொடூரமாக இருக்கிறது, நமக்கே புரிவதில்லை, கணனியின் கட்டளைகளை முற்று முழுதாக தமிழில் மாற்றும் போது நமக்கே ஒன்றும் புரியாமல் சிரித்து மகிழ்கிறோம்! காரணம் எம் தமிழ் கட்டமைப்பில் மிக கடினமானது. அதிகம் வேண்டாம் ஐஸ்கிறீமின் தமிழ்ச்சொல் குளிர் களி! எனக்கு ஒரு கோப்பை குளிர்களி கொடுங்கள் என்று எம்மாலேயே சொல்லிக்கொள்ள முடியாது! இது தமிழுக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. பண்டைய மொழிகள் அனைத்தும் இதே பிரச்னையை எதிர் நோக்குகின்றன. அதற்கு முற்று முழுதாக ஆங்கில மோகம் மட்டுமே காரணம் அல்ல மக்களே! தமிழின் நெகிழ்வுத்தன்மைகுறைவும் காரணம்! எம் சமுதாயத்திடம் தமிழை திணிப்பதற்கு முன் தமிழ் இந்த மாற்றங்களுக்கு உட்பட வேண்டும்! தமிழ் இப்படி ஆங்கில சொற்களை அரவணைக்க முயன்றால் தமிழ் தன் தனித்தன்மையை இழக்கும். நானே அதற்கு ஆதரவளிக்க போவதில்லை. அப்படியானால் தமிழை சாகவிட சொல்கிறாயா என்று கேட்கிறீர்களா?

அப்படியில்லை.

சமூகமே ஆங்கில மயம் ஆகும் போது என் குழந்தையை மட்டும் தமிழில் கல் என்று திணிப்பது அந்த குழந்தையின் வளர்ச்சியில் மனநிலையில் கல்வியில் பலவித தாக்கங்களை. தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். ஆகவே விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை படிகளையும் எவ்வழியிலாவது எம்மொழியிலாவது எம் சமுதாயம் கற்கட்டும்! அத்தனை மொழிகளிலும் விற்பன்னர்கள் ஆகட்டும். நாம் செய்யவேண்டியது இவைதான்.

முதலாவது குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்களை வைப்பதை மறக்கக்கூடாது.எட்டும் திக்குகளில் எல்லாம் நம் குழந்தைகள் எட்டித்தொடட்டும். விட்டு விடுங்கள். நம் தமிழன்னை பெயரால் அவர்களை எப்போதும் தடை செய்யாதீர்கள். உலக அரங்குகளில் அந்த குழந்தையின் தமிழ்ப்பெயர் ஒலிக்கும் போது தலை நிமிரப்போவது அவள் தான் நீங்களல்ல. இல்லையேல் நம் தமிழ் மேடைகளோடு அவர்கள் நின்று போவார்கள்.

தமிழை கல்வியாக கொடுக்காதீர்கள். உணர்வு பூர்வமாக அவர்களது பெருமையான அடையாளமாக சுவாசம் போல நம் குழந்தைகளே உணர்ந்து செயல்படும் வண்ணம் பிறப்புரிமை என கற்றுக்கொடுங்கள். யூதர்கள் எப்படி யூதன் என்ற அடையாளத்தை கடத்துகிறார்களோ அதே போல ஆங்கிலம் பேசுவது இயல்பு ஆனால் தமிழ் தெரியாதிருப்பது அவமானம் என்று வெட்கப்படும் உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்.

வீட்டில் முடிந்தவரை தமிழில் பேசலாம் தமிழனை சந்தித்தால் தமிழில் பேசலாம். காலத்துகேற்றபடி எம் இலக்கியமும் கூடவே வளரவேண்டும். என்னை கேட்டால் அங்கேதான் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. என் கால இலக்கியங்களையும் படைப்புக்களையும் என் சந்ததி ரசித்து ஈடுபட வேண்டும் என்பது அடக்குமுறை. வாசிப்பு பழக்கம் அற்றுப்போய் விட்டது என்று கூச்சல் போடுகிறோம். காதல் கதைகளையும் வாழ்வியல் மற்றும் கிராமிய பெண்ணிய எழுத்துக்களை மட்டுமே கொடுத்த படி! அவைகளும் வேண்டியது தான். ஆனால் வீடியோ விளையாட்டுக்களின் வேகமும் மற்றும் புதிய தொழினுட்பங்களினுடைய அறிவும் கொண்டு மயக்கும் தமிழில் இன்றைய இளைஞர்களை கவர தமிழ் எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா? இப்போது? அப்படியே இருந்தாலும் இன்றைய தேதிக்கு இன்னும் புகழ் பெறவில்லை. காலமாற்றத்தோடு தமிழன் போட்டியிட வேண்டுமே தவிர தமிழ் மாறமுடியாது.
ஆகவே இலக்கியத்தில் இளைய தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் எழுத்துக்களின் பிரயோகம் காலப்போக்கில் மறைந்து விடும்.

ஆடைத்துறை எம் அடையாளத்தை காப்பதில் கொஞ்சம் முன்னே நிற்கிறது என்றே சொல்வேன். எங்கள் பாரம்பரிய உடைகளை இளைய தலைமுறையை கவரும் வகையில் புதிதாக தந்து கொண்டே இருக்கிறார்கள். சேலையை உடுத்திக்கொள்ள இலகுவாக இரண்டாக, ஒரு நிமிட சேலை என்று வித வித வடிவங்களில் அறிமுகப்படுத்தியதில் இப்போது விழாக்களில் பிற இனத்தோரை அவற்றோடு காண முடிகிறது. தமிழன் முன்னேற ஆரம்பித்தால் ஆங்கிலேயனை பின்பற்றுவது அடிபட்டு போய் விடும், உதாரனமாக இந்தியா வல்லரசானால் இந்திய கலாசாரம் உலக அரங்கில் பிரபலமாகும். விழா, வைபவம் எதுவாயினும் எந்த உலக அரங்காயினும் மேடை ஏற்றப்படும்போது கண்டிப்பாக தமிழ் உடை வேண்டும். அதை பெருமையாக அணியும் மனோ பாவம் வேண்டும். அலுவலக(formal) உடை என்றால் ஒரு தமிழனுக்கு வேஷ்டி, சேலை ஆக மட்டுமே இருக்கவேண்டும். சாதாரண உடை(casual) எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டுமே!

இங்கே ஒரு தமிழ் பிரதேசத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பார்த்து வியந்த இன்னொரு விடயம். ஒருதடவை அமெரிக்க பிரதிநிதியை அழைத்துபோன போது கூட்டத்தின் நடுவில் சிற்றுண்டி இடைவேளையில் அவர்கள் பரிமாறியது மோதகம் மற்றும் வடை! அந்த பிரதிநிதி மோதகத்தை ரசித்து உண்டுவிட்டு அதைபற்றிய விளக்கம் என்னிடம் கேட்க விநாயகர் முதற்கொண்டு அளந்து விட்டேன்! 😀 திரும்பி வந்தும் மோத்காம் என்று கேட்டு கொண்டிருந்தார்! விருந்தினர்களுக்கு நம் பாரம்பரிய உணவு மட்டுமே என்று நாமும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்! புதிய வடிவங்களில் பழைய உணவு வகைகளை மாற்ற முடியுமே! தமிழன் கண்டு பிடிக்காத சுவையும் ஒன்று இருக்கிறதா என்ன?

இறுதியாக கலைகள்! தமிழனை அடையாளப்படுத்தும் இவற்றுக்கு சாகாவரம் வழங்கப்படவேண்டும். ஆசிரியர்கள், மற்றும் இசை நடனம் நாடகம் கூத்து, வாத்தியங்கள் போன்ற கலைகளை அருங்காட்சியகத்தை பராமரிப்பது போல அரசாங்கம் தமிழ்த்துறை மூலம் போஷிக்க வேண்டும். வருமானம் பிற துறைகளுக்கு சமமாக வழங்கப்பட வேண்டும். திரைப்படங்கள் மற்றும் வானொலி ஊடகங்கள் தார்மீக பொறுப்புடன் செயல்படவேண்டும். உங்கள் தனித்தன்மையை பிரதிபலியுங்கள். ஹாலிவூட்டில் செய்வதை காரண காரியம் புரியாமல் அப்படியே செய்வதுதான் முன்னேற்றமா?

ஆங்கிலேயர்கள் சகல துறைகளிலும் முன்னேறிய ஒரே காரணம் தான் ஆங்கிலம் இவ்வளவு தூரம் ஊடுருவியமைக்கு காரணம். மக்களின் வாழ்வியலே மொழி. மொழி வாழவேண்டும் எனில் வாழ்வியல் மாற்றங்களை அரவணைக்கும் அதே வேளை தனித்தன்மையை இழக்ககூடாது. அந்த மக்கள் தலை நிமிர்ந்தால் மொழி தானாகவே தளைக்கும். தமிழ் சாகிறது என்றால் தமிழன் சுயமாய் செயல்படும் திறனை இழக்கிறான் என்று அர்த்தம் ஆகிறது. அது கண்டிப்பாக நடக்கபோவதில்லை. இந்த தலைமுறை மிக புத்திக்கூர்மையுடையதாய் இருக்கிறது. தமிழ் அவர்களது உரிமை, அடையாளம் என எம்மைப்போல் தமிழை நேசிக்கவும் காதலிக்கவும் கற்றுக்கொடுங்கள். சகல துறைகளிலும் அவர்கள் வல்லவர்கள் ஆக்குங்கள். தமிழன் என்ற பெயரால் உலக அரங்கில் அவர்கள் அறியப்படட்டும். தமிழ் எங்கள் பெருமை என்ற மனப்பாங்கை வளருங்கள். .
ஆங்கிலத்தை களை எடுப்பதை இப்போதைக்கு நிறுத்தி முட்டாள் துவேசிகளையும் தமிழனை துண்டு போடும் சாதீய சமய புல்லுருவிகளையும் களையெடுப்போம். தமிழ் தானாகவே முடி சூடிக்கொள்ளும்.

ஆற்றோட்டத்தில் ஆலமரங்கள் கூட கவிழ்ந்ததுண்டு நாணல்கள் மடிவதில்லை. அதற்காக அவை மீன்களாக மாறுவதும் இல்லை.

தமிழை நேசிப்போம், காதலிப்போம், கொண்டாடுவோம்.

தமிழ் என்றென்றும் வாழும்.

நன்றி!